அரூ போட்டி முடிவுகள், ஓவியம்: டிராட்ஸ்கி மருது

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

10 நிமிட வாசிப்பு

அறிவியல் புனைவு தனது தொலைநோக்குக் கதையாடல்களாலும், துணிச்சலான கருத்துகளாலும், எல்லையற்ற கற்பனையாலும் நெடுங்காலமாக வாசகர்களைக் கவர்ந்து வருவது மட்டுமல்லாமல், இலக்கியத்தில் ஒரு நிலையான இடத்தையும் பிடித்திருக்கிறது. அபாரமான வாசிப்பனுவம் தருவதோடு மட்டுமன்றி, கலையின் அதிகபட்ச சாத்தியங்களைத் தொட்டுச் செல்லும் தீவிரத்தன்மையும் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். மரபுகளின் வேர் பிடித்து அசைத்துப் பார்க்கும் துடுக்குத்தனமும், எதிர்காலத்தை விதவிதமாக வடிவமைக்க முயலும் கற்பனையும், காலத்தையே கலைத்துப்போட்டுப் பார்க்கும் விளையாட்டுத்தனமும், அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் தர்க்க மனநிலையும் கொண்டிருக்கிறது அறிவியல் புனைவு. நமக்குத் தொடர்பில்லாத முற்றிலும் அந்நிய நிலத்தில் நிகழும் அந்நியர்களின் கதை போலத் தோன்றினாலும், அறிவியல் புனைவு உண்மையில் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பாகத்தான் அவற்றை முன்வைக்கிறது. அதன் வழி அறிவியல் புனைவு சென்றடைய முனையும் புள்ளி, மானுட உணர்வுகளும் சமூகத்தின் மீதான விமர்சனமும்தான்.

அந்த வகையில், தமிழில் அறிவியல் புனைவு எழுதுவதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியை நான்கு ஆண்டுகளாகத் தொடர முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறோம். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வந்திருந்த கதைகளிலிருந்து ஓர் இறுதி பட்டியலை உருவாக்கப் பின்பற்றிய சில அளவுகோல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேஜையின் ஓரத்தில் ஜியாமெட்ரி டப்பாவினுள் வைத்துக்கொள்ளத்தக்க தனிப்பட்ட அளவுகோல்கள்தான் இவை. பாறைகளில் செதுக்கிவிடத் தேவையில்லை.

  1. கதையம்சம்: அறிவியல் புனைவு அடிப்படையில் ஒரு நல்ல கதையாக இருக்க வேண்டும். நல்ல வாசிப்பனுவத்தைத் தருகிறதா என்பதுவே முதல் கேள்வி.
  2. புத்தாக்கக் கற்பனை: உலகத்தைப் பற்றிய நமது புரிதலைக் கேள்விக்குள்ளாக்கும் புதிய கற்பனைமிக்க கருத்தொன்றை அறிவியல் புனைவு அறிமுகப்படுத்துகிறதா? அது எந்தவிதமான அறிவியல் முன்னேற்றமாகவும் இருக்கலாம். ஆனால், அந்த முன்னேற்றத்தின் பாதிப்புகளை ஆராய்கிறதா, வாசிக்கும் நமக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறதா, நம் அறிதலின் எல்லையை விரிவுப்படுத்துகிறதா என்பது முக்கியம். தான் உருவாக்கிய விஞ்ஞானத்தால் தானே அழிந்தான், இயற்கைக்குப் புறம்பாக மனிதன் செயல்பட்டதால் இயற்கை மனிதனைத் தண்டித்தது போன்ற தேய்வழக்கான கருப்பொருள்கள் இல்லாமல், சிறிதளவேனும் புதுமையான கருக்களுடைய கதைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
  3. சிந்தனையைத் தூண்டும் கருப்பொருள்: அறிவியல் புனைவின் பலம், ஆழமான கருப்பொருளை ஆராயும் அம்சமும், அதன் மூலம் முன்வைக்கும் சமூகப் பார்வையும் விமர்சனமும். சிந்தனையைத் தூண்டும் ஒரு சிறுகதை மனிதநேயம், அறவியல், அறிவியல், இருப்பின் தன்மை போன்றவற்றைக் கேள்விகளின் மூலம் ஆராய்கிறது. இப்படியான தேடல்களின் மூலம், நமது அன்றாட முடிவுகளிலும், விஞ்ஞான முன்னேற்றத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தி, நமக்காகக் காத்திருக்கும் நமது எதிர்காலத்தைப் பற்றி நம்மைச் சிந்திக்க அழைக்கிறதா என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட்டது.
  4. வலுவான கதாப்பாத்திரங்களும் உணர்ச்சிகளும்: கற்பனை முக்கியம் எனினும் நினைவுக்கூரத்தக்க கதாப்பாத்திரங்களும் முக்கியம். உயிர்ப்புடைய கதாப்பாத்திரங்கள் வாசகரைக் கதையுடன் உணர்ச்சிரீதியாக ஒன்றச் செய்யும். அது மனிதர்களோ, இயந்திரங்களோ, ஏலியன்களோ அல்லது உடலற்ற செயற்கை நுண்ணறிவுகளோ எதுவாக இருந்தாலும் சரி.
  5. தெளிவும் நேர்மையும்: எடுத்துக்கொண்ட கருப்பொருள் தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்லப்பட்டிருக்கிறதா? எந்தவிதமான பகட்டுமில்லாமல் கதையின் போக்கும் சொல்முறையும் இருக்கிறதா?

இந்த அடிப்படையில், 15 கதைகளைக் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்தோம். அவை அகரவரிசைப்படி:

எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கவிட்டு, இக்கதைகளை இந்த வருட நடுவர் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜூக்கு அனுப்பிவைத்தோம். இவற்றிலிருந்து சிறந்த ஒரு கதையைப் பரிசுக்குத் தேர்வு செய்வதே அவரின் பணி. அறிவியல் புனைவு குறித்தும் இக்கதைகள் குறித்தும் அவர் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

இந்த 15 கதைகள் மட்டுமல்லாமல், இன்னும் இரண்டு கதைகளையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

‘நீலத்தழல்’ நேர்த்தியாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள கதை. ஆனால், இக்கதையில் நிதர்சனமான அறிவியல் இருக்கின்றதே தவிர, அறிவியல் ஊகம் இல்லை, புதிய அறிவியல் கற்பனை இல்லை. ஆகவே அறிவியல் புனைவு என்கிற வகைமைக்குள் வராது. ஆனாலும் இக்கதையை குறிப்பிடத்தகுந்த கதையாக வெளியிடுவதற்குக் காரணம் அறிவியலை வெறும் கோட்பாடுகளாகவும் கருதுகோள்களாகவும் பட்டியலிடாமல், ஒரு வாழ்வனுபவமாக சித்தரித்துள்ளார் ஜெகதீஷ் குமார். உயிரொளி உமிழ்வு (bioluminescence) எனும் அறிவியல் கருதுகோளை ஒரு கட்டுரையாகப் படிக்கலாம், ஆவணப்படமாகப் பார்க்கலாம். ஆனால் இப்படி ஒரு புனைவாகப் படிக்கும்போது அது நமது உடலுக்குள் இறங்கிச்சென்று, ஏதோ ஒரு தசைமடிப்பிற்குள் அமர்ந்துகொள்கிறது. தமிழில் நிறைய கதைகள் இப்படி எழுதப்பட வேண்டுமென நினைக்கிறோம். ‘நுண்வலை’ அதன் விளையாட்டுத்தனமான கதையோட்டத்திற்காகக் குறிப்பிடத்தகுந்த கதையாகத் தேர்வாகியுள்ளது.

இந்த 17 கதைகளில் 12 கதைகளை எழுதியவர்களுக்கு இதுவே அரூவில் வெளியாகும் முதல் படைப்பு. ஒவ்வோர் ஆண்டும் இப்படிப் புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வாவதில் கூடுதல் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உண்டாகிறது. இவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

தேர்வான இந்தக் கதைகளின் பட்டியலைப் பார்க்கும்போது நிறைவளிக்கும் மற்றுமொரு அம்சம் — எல்லா வகையான அறிவியல் புனைவுகளுக்கும் இங்கே இடம் இருக்கிறது. சில அறிவியல் புனைவுகள் விரிவான அறிவியல் விளக்கங்களையும் தர்க்கங்களையும் முன்வைக்கும். Hard science fiction என்பார்கள். சிறந்த உதாரணம்: தப்பிச்செல்லும் கிரகங்கள். ஆனால் சில புனைவுகளோ ஊகத்தை அடித்தளமாக வைத்துக்கொண்டு, விளக்கமேதும் இல்லாமல் அதையொட்டிய மனித வாழ்வைக் கூறிச்செல்லும். உதாரணம்: பறத்தல். சில அறிவியல் புனைவுகளின் மையத்தில் மர்மமான முடிச்சொன்று இருக்கும். அதை மாயம் என்றும் சொல்லலாம், தர்க்கத்தினாலும் விளக்க முயலலாம். சிறப்பான உதாரணம்: காலவெளியிடைக் கண்ணம்மா. சமூகத்தின் மீது ஒரு பார்வையையோ விமர்சனத்தையோ முன்வைப்பதற்காகச் சில கதைகள் அறிவியல் புனைவு யுக்தியைக் கையாள்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம்: மாடுகளும் ராக்கர்ஸும். இப்படி எந்த வகை ஆனாலும் — அவை அறிவியல் புனைவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தாலும் — அரூ இவற்றை ஒன்றாகத் தொகுப்பதன் மூலம், இவை அனைத்தும் அறிவியல் புனைவுகளே எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ChatGPTஇன் தாக்கத்தினாலோ என்னவோ, செயற்கை நுண்ணறிவு இம்முறை பல கதைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது. டைனோசர், இறைவர்க்கோர் பச்சிலை, இணை, அம்மா, அகம் அல்காரிதம், ஏழ்கடல் இப்படிப் பல கதைகள். செயற்கை நுண்ணறிவு தத்துவ விவாதத்திலும் ஈடுபட்டால் எப்படி இருக்கும்? ‘அகம் அல்காரிதம்’ கதையில் அது நடக்கிறது. அந்த விவாதத்தின் நீட்சியே கதையை முன்னகர்த்திச் செல்கிறது. இக்கதையில் நிகழும் விளையாட்டுத்தனமான உரையாடல்கள் இதன் மற்றுமொரு பலம். ‘ஏழ்கடல்’ அடுத்தடுத்த டிராய்ட் வெர்ஷன்களின் வருகையால் மனிதனுக்கு ஏற்படும் கையறு நிலையைக் காட்டுகிறது. ஒரு சூரியனை உருவாக்கும் வியப்புமிகு அறிவியல் முயற்சியைச் சித்தரிக்கிறது. ‘ஏழ்கடல்’ புறத்தில் பயணித்தால், ‘அம்மா’ சிறுகதை அகத்திற்குள் சென்று, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஒரு மொழியை உருவாக்க முனைகிறது. ‘மோகினி’ சிறுகதையில் கருந்துளையின் ஓரத்தில் இருக்கும் உலகில் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். இக்கதையில் வரும் ஆடியும் ஆடியைப் பார்த்து அலரும் பெண்ணின் ஓவியமும் வலுவான ஒரு படிமமாக உள்ளது. ‘கர்ப்பகிரகம்’ கதையிலும் மாமரத்தடியில் குந்தி அமர்ந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்ணின் பிம்பம் வலுவானது. பல காலங்கள் கடந்து செல்லும் இக்கதை, எவ்வளவு காலமாயினும் மாறாமல் இருக்கும் ஒன்றைத் தொட்டுப் பேசுகிறது. காலம் செல்ல செல்ல சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் தொன்மம் உருவாகும் விதத்தையும் விரிவாக சித்தரிக்கிறது ‘மாடுகளும் ராக்கர்ஸும்’. வேற்று கிரகவாசிகளெல்லாம் வந்தாலும்கூட இக்கதையின் விமர்சனம் நமது தற்காலச் சமூகத்தின் மீதும் அதன் கட்டமைப்புகளின் மீதும்தான். ‘வெண்புறா’ மிக எளிமையாக ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாபெரும் மாற்றத்தைக் காட்டுகிறது. காலப் பயணம் செய்து ஒரு விஷயத்தை மாற்ற முடிந்தால் என்கிற வழமையான கதைக்கரு என்றாலும், இக்கதாப்பாத்திரத்திற்கு அந்த உந்துதலை அளிக்கும் அந்த வெண்புறா தருணத்திற்காக இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்வான கதைகளை மீண்டும் அலசிப் பார்க்கையில், இவற்றுள் சில கதைகள் சிறப்புமிக்கதாக மேலெழும்பி வந்தன.

கே.பாலமுருகன் எழுதிய ‘பறத்தல்’ கதையில் வரும் அப்புச்சி மாமா ஓர் அழுத்தமான கதாப்பாத்திரச் சித்தரிப்பு. மிகச் சில வரிகளுக்குள் இவர் நமது மனத்தில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறார். அப்புச்சி மாமாவின் இறுதி விடுதலைக் காட்சி இக்கதையின் உச்சம். கவித்துவமான பல வரிகள் கதையின் போக்கில் வருகின்றன. ஒரு மையக் கருவை எடுத்துக்கொண்டு அதன் மீது வெவ்வேறு கோணங்களிலிருந்து வெளிச்சம் பாய்ச்சுகிறது இக்கதை. இறுதி வரை கதையின் மர்மம் விளக்கப்படாமல் இருப்பது கூடுதல் சிறப்பு.

தருணாதித்தன் எழுதிய ‘இணை’ சிறுகதையில் மக்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது எனும் வினாவுடன் ஒரு சர்வதேசக் குழு ஆராய்ச்சியில் இறங்குகிறது. இக்கேள்வி அவர்களைப் பல திசைகளில் இட்டுச்சென்று இறுதியாக ஒருவர்க்குச் சரியான இணை அமைந்தால் மகிழ்ச்சி தானாகக் கிட்டும் எனும் முடிவுக்கு வந்து, அடுத்து சரியான இணையைத் தேர்வு செய்வது எப்படியென்கிற கேள்விக்குள் செல்கிறது. இப்படி ஒரு கேள்வி இன்னொரு கேள்விக்கு இட்டுச்செல்வது அறிவியலில் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. இணையைக் கண்டறிவதற்கு இக்கதையில் வரும் வழிமுறையும், காதலிலிருந்து electron spinக்குத் தாவும் கதையோட்டமும் இக்கதைக்குப் பலம்.

ராகவேந்திரன் எழுதிய ‘மெட்டா’ என்கிற கதையும் துகள்களை ஆராய்கிறது. இவர் ‘அடையாளம்’ கதைக்காக அரூ நடத்திய இரண்டாவது அறிவியல் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றவர். இவர் கதைகளில் இழையோடும் அங்கதம் வாசிப்பை இலகுவாக்குகிறது. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், ஏன் போசானிலும் இருப்பார் என்ற கற்பனைக்காகவே இக்கதைக்கு ஓர் இனிப்பைக் கொடுத்து இறுதிப் பட்டியலில் அமர்த்திவிட்டோம்.

நகுல்வசன் எழுதிய ‘இறைவர்க்கோர் பச்சிலை’ சிறுகதை செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை அன்றாட வாழ்க்கை யதார்த்தத்தின் பின்னணியில் வைத்துப் பார்க்கிறது. இந்தக் கோணம் முக்கியமானது. கர்நாடக சங்கீதம் கற்கும் ஓர் இளைஞன், இசை மீது செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் பாதிப்பைக் குறித்து தனது குருவுடன் விவாதிக்கிறான். ஒரு மனிதன் தனது அனுபவங்களிலிருந்து உருவாக்கும் ஒன்றும் செயற்கை நுண்ணறிவு தனது சேகரங்களிலிருந்து உண்டாக்கும் ஒன்றும் சமமாக இருக்க முடியுமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்குக் கதை சுட்டியிருக்கும் முடிவு புதுமையானது, வரவேற்கவேண்டியது என்றும் தோன்றுகிறது. வளரும் ஒரு மரத்தின் பாதையில் ஒரு கல் இருப்பின், அதையும் உள்ளிழுத்தபடி எப்படிச் சுற்றி வளருமோ அப்படியான ஒரு முடிவு. அதுமட்டுமல்லாமல், முதல் அரூ போட்டியில் பரிசு வென்ற ‘கடவுளும் கேண்டியும்’ சிறுகதையில் தான் வெளிப்படுத்திய பளிச்சிடும் குறும்புத்தனத்தை இக்கதையின் வடிவத்திலும் செய்திருக்கிறார் நகுல்வசன். ஒரு நுண்ணறிவு செயலியிடம் கொடுக்கப்பட்ட கேள்விக்கு அது எழுதிக்கொடுத்த கதை என்கிற வடிவத்தில் முழுக்கதையையுமே எழுதியுள்ளார். அறிவியல் புனைவு போட்டியில் ChatGPT போன்றதொரு நுண்ணறிவு எழுதிய கதையைத் தேர்வு செய்யாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்?

இதுவரை அரூவில் வெளியான கதைகளிலேயே சிறப்பான வேற்றுக்கிரக உயிரினச் சித்தரிப்பு கொண்ட கதை ரகு ராமன் எழுதிய ‘காலவெளியிடைக் கண்ணம்மா’. ஒரு சிறு பெட்டிக்கடையில் நடக்கும் அன்றாட சின்னதொரு செய்கையைக்கூட யதார்த்தமாக சொல்கிறது கதையின் முதல் பாகம். இரண்டாம் பாதியில் நாம் கேள்வியுற்றிராத தூரத்தில் இருக்கும் ஏதோவொரு பிரபஞ்சத்திற்குக் கிளம்பிவிடுகிறது. ஆனால் அப்பிரபஞ்சத்தையும் அசத்தலான அதே யதார்த்த விவரணைகளுடன் சித்தரிக்கிறது. இப்படியான ஒரு தாவலைச் சிறுகதைக்குள் நேர்த்தியாக செய்வது அசாத்தியமானது. கண்களின் வெள்ளையில் ரேகையிட்டிருக்கும் ரத்த நுண்குழாய்கள் வழி பிரபஞ்சத்தையே ஊடுருவியிருக்கும் புலனாகாத வேர்களைச் சுட்டி உச்சத்தைத் தொட்டிருக்கிறது இக்கதை.

வெகு தூரங்களையும் காலங்களையும் சட்டென்று கடந்துசெல்வது மனத்தின் இயல்பாக இருப்பதாலோ என்னவோ, விண்வெளிப் பயணம் அறிவியல் புனைவின் இணைபிரியா ஓர் அம்சமாகிவிட்டது. ராம்பிரசாத்தின் ‘தழுவுக் கருவி’ சிறுகதை சிறையிலிருந்து தப்பிய ஒருவர் விண்வெளியில் பயணிப்பதைக் காட்டினாலும்கூட, அவர் உண்மையில் பயணித்துக் கொண்டிருப்பது தனது மனத்தின் அடுக்குகளுக்குள், நினைவின் ஆழங்களுக்குள். அவரின் எண்ணங்கள் அவரை இட்டுச்செல்லும் திசைக்காகவும், தழுவுக் கருவி என்கிற அழகிய கற்பனைக்காகவும் இக்கதை எங்களுக்குப் பிடித்துப்போனது. இக்கதை இறுதியில் சுயம் சார்ந்து எழுப்பும் கேள்வியும், இசையும் பிரபஞ்ச வெளியும் இணையும் இடங்களும் அபாரமானவை.

பெரு.விஷ்ணுகுமார் எழுதிய ‘தப்பிச்செல்லும் கிரகங்கள்’ சிறப்பானதொரு hard science fiction கதை. அறிவியலின் முறைமை, கதையின் வடிவத்திலும் வெளிப்பட்டுள்ளது. ஒரு விஞ்ஞானி இயல்பான ஒரு விஷயத்தில் சிறிய முரண் ஒன்றைக் கவனிக்கிறார். குழம்புகிறார். சில ஊகங்களை உருவாக்குகிறார். அது குறித்து முன்னவர்கள் சொல்லியிருப்பதை ஆராய்கிறார். பொது ஏற்புக்கு வெளியே நிற்கும் ஒருவரின் கருத்துடன் இயைந்து சிந்திக்கிறார். சக ஆய்வாளருடன் வாதிடுகிறார். ஒரு பரிசோதனை செய்து பார்க்க முடிவாகிறது. ஆயத்தங்கள் நடக்கின்றன. காத்திருப்பு. பின்பு பரபரப்பு, இறுதியில் ஒரு வெளிச்சம்! இக்கதையில் விவரிக்கப்படும் திறன்மாற்றுத் துளைகள் நிஜம்தான் என்பது போலக் கதை சித்தரிக்கிறது. போர்ஹேஸ் செய்வது போல இல்லாத ஒரு புத்தகம் இருப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இக்கதையில் வரும் திறன் மாற்றுத் துளை, மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கு நல்லதொரு படிமம். தனக்குள் சேகரிக்கும் ஆற்றலையெல்லாம் குவித்து இன்னும் பாய்ச்சலுடன் வெளியேற்றுகின்றன இத்துளைகள். ஓர் அசலான சிந்தனையாளரும் இப்படித்தான். இப்படிப் பலவிதங்களில் பிடித்துபோன இக்கதைக்கு அரூ குழு பரிசளிக்கலாம் என்று நினைக்கையில், நடுவர் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் பரிசுக்குரிய கதையாகத் இதைத் தேர்வு செய்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

ஆக, வேறொரு கதையை அரூ குழு பரிசுக்குத் தேர்வு செய்ய வேண்டும். அரூவின் தேர்வு என்ன? மாயா எழுதிய டைனோசர். மிக எளிமையான, ஆனால் முக்கியமான மூன்று காரணங்களுக்காக. 500 ஆண்டுகளுக்கு ஓர் எழுத்தாளரின் உடல் பதப்படுத்திவைக்கப்படுகிறது. அதற்குப் பின் அவர் விழிக்கையில் உலகம் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கும் என்பது அவரின் கனவு. அவரும் விழிக்கிறார். உலகமும் சர்வ வளங்களும் பெற்று சொர்க்கம் போலவே இருக்கிறது. இதற்கு மேல் நாம் என்ன விரும்ப முடியும்? எல்லாமே இருக்கிறது போன்றதொரு utopia. ஆனால் அதற்கும் மேல் ஒன்று இருக்கிறது என்கிறது கதை. முறைமை, மதம், சமூக அமைப்பு ஆகியவை ஓர் இறுதி நன்னிலையை எய்துவதற்குச் சில வழிகளை முன்வைக்கும். ஆனால் அந்த இறுதி நிலையை எய்திய பின், சொல்லப்பட்டதுபோல் மகிழ்ச்சியாக இல்லையே என்கிற உணர்வுடன் இதைப் பொருத்திப் பார்க்கலாம். அது முதல் காரணம். செயற்கை நுண்ணறிவு மனிதனை விழுங்கிடுமாவென்கிற கேள்விக்கு இக்கதை அளித்திருக்கும் முடிவு இரண்டாவது காரணம். மூன்றாவது முக்கியமான காரணம் இக்கதையில் இழையோடும் சுயபகடி. கதையில் வரும் எழுத்தாளர் கடவுள் நிலைக்கும் பரிசோதனை எலியின் நிலைக்கும் இடையில் ஊசலாடும் அந்த நிலை. இம்மூன்று காரணங்களுக்காகவும் எழுத்தாளர் மாயா எழுதிய டைனோசர் கதையை அரூ குழு பரிசுக்குரிய கதையாகத் தேர்வு செய்கிறது. நடுவர் தேர்விலும் இரண்டாம் இடத்தில் டைனோசர் கதையே இடம்பெற்றிருந்தது என்பது கூடுதல் தகவல். அரூவில் ‘தூமை’, ‘அழிபசி’, ‘ஈறிலி’ போன்ற பல சிறப்பான அறிவியல் புனைவுகளை எழுதியவர் மாயா என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போட்டிக்குப் பரிசு தொகையை அளிக்க முன்வந்த நண்பர்கள் சரவணன் விவேகானந்தன் மற்றும் சிவானந்தம் நீலகண்டன் ஆகியோருக்கு அரூவின் அன்பும் நன்றியும். பரிசு பெறும் எழுத்தாளர்கள் பெரு.விஷ்ணுகுமார், மாயா மற்றும் இப்போட்டிக்குக் கதை எழுதி அனுப்பிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் அரூவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் பதினேழு அறிவியல் புனைவுகளை செயற்கை நுண்ணறிவு எப்படிக் காட்சியாக்குகிறது என்று பார்க்கும் ஆவல் எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் அரூ குழு கொடுத்த சில அடிப்படை வாக்கியங்களை வைத்து, தனது தேர்ந்த ரசனையைக் கொண்டு செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைச் சொடுக்கிவிட்டு அழகான படங்களை உருவாக்கியுள்ளார் நண்பர் சுரேஷ் செல்லப்பன். குறுகிய காலகட்டத்திற்குள் இதைச் சாத்தியப்படுத்திய அவருக்கு அரூவின் மனமார்ந்த நன்றி.

“எல்லா கதைகளுமே சின்ஸியர் முயற்சிகள்,” என்று தொலைபேசியில் பேசுகையில் நடுவர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் சொன்னார். அப்படித்தான் எங்களுக்கும் தோன்றுகிறது. பல சிறப்பம்சங்கள் இருப்பினும் நிறைய கதைகளில் ஏதாவதொரு இடறலும் இருக்கவே செய்கிறது. ஆனால் தொடர்ச்சியான எழுத்தின் மூலமும் தொடர் விமர்சனங்களின் மூலமும் களையப்படக்கூடிய இடறல்களே இவை.

முன்பு சில அளவுகோல்களை முன்வைத்தோம். அவற்றையெல்லாம்விட முக்கியமானது ஒன்று இருக்கிறது. அது அறிவியல் புனைவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகப் புனைவிற்கும் கலைக்கும் பொருந்தக்கூடிய ஒரு தன்மை. தன்னைத்தானே கேள்விக்கு உட்படுத்திகொள்ளுதல். ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது சில முன்முடிவுகளையேனும் உதிர்த்திருக்கிறதா?

ஆர்தர் சி. கிளார்க் எழுதிய ‘தி ஸ்டார்’ (The Star, 1955) என்றொரு கதை. ஒரு வானியற்பியல் விஞ்ஞானி சிறு குழுவுடன் சேர்ந்து தொலைதூர நட்சத்திரக் கூட்டம் ஒன்றை ஆராய்ந்துவிட்டு பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார். அவர் கிறிஸ்துவப் பாதிரியும்கூட. தனது ஆராய்ச்சியின் முடிவுகள் அவரை அலைக்கழிக்கின்றன. அவரது குழு ஆராய்ந்த Phoenix Nebulaவின் ஒரு கிரகத்தில் மனிதர்கள் போலவே முன்னேற்றம் அடைந்த ஒரு சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்திருக்கிறது என்பதற்கான வலுவான தடயங்கள் கிடைக்கின்றன. ஆனால் ஏதோவொரு நிகழ்வால் அந்தச் சமூகமே மொத்தமாக அழிந்துள்ளது. என்ன நடந்ததென்று ஆராயும்போது, அந்த மண்டலத்தின் நட்சத்திரம், அதாவது அக்கிரகத்தின் சூரியன் வெடித்துள்ளது. அதன் வெப்பத்தில் கிரகமே கருகியுள்ளது.

இதில் இவரின் மனம் ஏன் அலைக்கழிய வேண்டும்? வெடித்த அந்த நட்சத்திரம் வானில் அதீத வெளிச்சத்துடன் தென்பட்டிருக்கும். தனக்குக் கிடைத்த தடயங்களை வைத்து அது எப்போது நிகழ்ந்திருக்கலாம் என்று கணக்கிட்டுப் பார்க்கையில், அந்த நட்சத்திரம்தான் பைபிளில் வரும் பெத்லஹேமின் நட்சத்திரம், கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் நட்சத்திரம், கிறிஸ்தவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஒளியாக விளங்கும் நட்சத்திரம். இக்கதை கிறிஸ்தவத்தை மையமாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், இதன் கரு எல்லா மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருந்தக்கூடியது. இக்கதை எழுப்பும் கேள்வி: நமது வாழ்வில் நம்பிக்கை அளிக்கும் ஆதாரமாக இருக்கும் ஒன்று, செழிப்பாக இருந்த வேறொன்றை அழித்துவிட்டுத்தான் தோன்றியதா? இக்கேள்வி உங்களை ஊடுறுவித் துளைக்கவல்லது. உங்களின் அனைத்துப் பிடிமானங்களையும் ஆட்டம் காண வைக்கக்கூடியது. இதுபோன்ற தன்னைத்தானே கேள்விக்கு உட்படுத்திக்கொள்ளும் பயமிகுந்த பிராந்தியங்களுக்கு அறிவியல் புனைவு நம்மை இட்டுச்செல்லட்டும்.

இக்கேள்வியின் உலுக்கலுக்கு மருந்தாக இன்னொரு நட்சத்திரம் இருக்கிறது. கிளார்க் எழுதியதற்கு 50 ஆண்டுகள் முன்பு, ஹெச்.ஜி.வெல்ஸ் அதே தலைப்பில் எழுதிய ‘தி ஸ்டார்’ (The Star, 1897) கதையின் ஒரு வரி. இக்கதையில் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாகத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் காலம் செல்லச் செல்லப் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. மக்கள் பெரும்பாலும் அதைக் கண்டுகொள்ளாமல் அன்றாடத்தில் வாழ்ந்தாலும், சில விஞ்ஞானிகளுக்கு அதன் தீவிரம் புரிகிறது. பூமியை நோக்கி வரும் ஒரு விண்கல்லோ என்று சந்தேகிக்கின்றனர். ஒரு கணிதவியலாளர் நாள்தோறும் தூங்காமல் கணக்குகள் போட்டு அந்த விண்கல்லின் பாதையைக் கணிக்க முயல்கிறார். இறுதியில் அவருக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியவருகிறது, இந்த நட்சத்திரம் பூமியை மோதப் போகிறது, பூமி அழியப்போகிறது. அப்போது கதையில் வரும் பகுதி…

கணிதவியல் மேதை தனது தனி அறையில் அமர்ந்திருந்தார். தன் முன் கிடந்த காகிதங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளினார். அவரது கணக்கீடுகள் முடிவுக்கு வந்துவிட்டன. ஒரு சிறு வெள்ளைக் குப்பியில் கடந்த நான்கு நீண்ட இரவுகளாக அவரை விழிப்புடன் வைத்திருந்த மருந்து இன்னும் கொஞ்சம் மீதம் இருந்தது. ஒவ்வொரு நாளும், சாந்தமாகவும் அமைதியாகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்திவிட்டு, பின்னர் உடனேயே அவரது முக்கியமான கணக்கீடுக்குத் திரும்பிவிடுவார். அவரது முகம் வாட்டமாகவும், கொஞ்சம் இறுக்கமாகவும், போதை மருந்து தந்த படபடப்புடனும் இருந்தது. சிறுது நேரம் அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர், அவர் ஜன்னலுக்கருகே சென்றார். கிளிக்கென்ற சத்தத்துடன் மறைதிரை விலகியது. திரளான கூரைகள், புகைபோக்கிகள், நகரத்தின் கோபுரங்களின் மேல் நடுவானில் தொங்கிக் கொண்டிருந்தது அந்த நட்சத்திரம்.

ஒரு துணிச்சலான எதிரியின் கண்களைப் பார்ப்பது போல் அவர் அதைப் பார்த்தார். சிறிது மெளனத்திற்குப் பின் சொன்னார், “நீ என்னைக் கொன்றுவிடலாம்… ஆனால் நான் உன்னை… ஏன் இந்த பிரபஞ்சம் முழுவதையுமே கைப்பற்றி வைத்துக்கொள்ள முடியும்… இந்தச் சிறுமூளையின் பிடியில்.”

ஆம்… எஜ்.ஜி.வெல்ஸ் எழுதியது சரிதான். இந்தப் பிரபஞ்சம் முழுவதையுமே கைப்பற்றி வைத்துக்கொள்ள முடியும், இந்த அறிபுனைவின் பிடியில்.

அன்புடன்,
அரூ நண்பர்கள்


ஓவியம்: டிராட்ஸ்கி மருது

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான கதைகள்

1 thought on “அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்”

  1. என் சிறுகதையான “வெண்புறா” வில் காலத்தை கடந்து நிகழ்வை மாற்றுவதை மட்டுமல்ல தன்னைத் தானே கொன்ற பிறகும் உயிரோடு இருக்கும் நாயகனின் காலவரிசை மாறிவிடும் என்ற அறிவியல் கோட்பாட்டை மறைமுகமாக சொல்லியிருக்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்