சிங்கப்பூரிலிருந்து ‘அரூ’ என்ற கனவுருப்புனைவுக் காலாண்டிதழ் (quarterly magazine for speculative fiction and experimental works) அக்டோபர் 2018இலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகி வருகின்றது. இந்த மாதம் (ஏப்ரல் 2020) அரூவின் 7ஆம் இதழ் வெளியாகியுள்ளது.
அரூவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒவ்வோர் இதழிலும் முந்தைய இதழைக்காட்டிலும் சிறப்பாக ஆகவேண்டும் என்ற துடிப்பையும் அதற்கான உழைப்பையும் காணமுடிகிறது. அரூ இதழின் தேவையையும் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி அந்த இதழுக்கான தமிழிலக்கிய அறிவுச்சமூகத்தின் கவனத்தையும் ஆதரவையும் அதிகரிக்க வேண்டும் என்பது வெகுநாட்களாகவே என் உள்ளக்கிடக்கை.
சிங்கப்பூரில் இன்னும் ஒரு மாதத்திற்கு வீடடங்கி இருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது. அரூ இதழ்களைப் புரட்டுவதற்குத் தோதான காலம். இலக்கிய அன்பர்கள் பலருக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் ஆசுவாசப்படுத்துவதாகவும்கூட அமையலாம்.
அரூ தன்னைக் ‘கனவுருப்புனைவு’க் காலாண்டிதழ் என்று அடையாளப்படுத்திக்கொண்டுள்ளதால் அதன் பிரதானமான முயற்சி கனவுருப்புனைவுச் சிறுகதைகளை உருவாக்குவதிலும் ஊக்குவிப்பதிலும் அமைந்துள்ளது.
கனவுருப்புனைவு என்று தற்போது பேசப்படும் இப்புனைவுகளுக்கும் பழைய தொன்மங்கள், அமானுஷ்யங்கள் நிறைந்த கதைகளுக்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் யோசிக்கலாம். முக்கியமான வேறுபாடு கனவுருப்புனைவிலுள்ள ‘அறிவியல்’ அம்சம்தான். கனவுருப்புனைவுகள் எல்லையில்லாக் கற்பனைகளாக விரிவதாகத் தோன்றினாலும் அவற்றில் அறிவியல் அபத்தங்களுக்கு இடமில்லை. ஆனால் இதுவரை அறிவியல் சாதிக்கவியலாத, எதிர்காலத்தில் சாத்தியமாக இடமுள்ளக் கற்பனைகளுக்கு இடமுண்டு. ஆகவே இக்கதைகளை எழுதுவோருக்குப் புனைவுகளின் நுணுக்கங்கள் தெரிந்திருப்பதோடு அறிவியல் செயல்படும் அடிப்படைகளைக் குறித்த குறைந்தபட்ச அறிவும் அவசியமாகிறது.
காலகாலமாகத் தான் கற்ற பாடங்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் செல்லும் சாதனமாக மனிதனுக்கு யதார்த்தக் கதைகள் இருந்திருக்கவேண்டும். அன்றாடங்களின் ஆபத்துகளிலிருந்தும் சலிப்பிலிருந்தும் தற்காலிகமாகவாவது தப்பித்துக்கொள்வதற்காகப் புனைவு மானுட குலத்திற்குத் தேவைப்பட்டிருக்கவேண்டும். புனைவுலகம் ஒரு கடிகாரப் பெண்டுலம் போல யதார்த்தம், கற்பனை ஆகிய இரு புள்ளிகளுக்கும் இடையே ஆடிக்கொண்டே இருக்கிறது. உள்ளதை உள்ளபடியே பேசும் படைப்புகள் மிகுந்துகொண்டே செல்லும்போது ஒரு கட்டத்தில் நின்று அதே வேகத்தில் கற்பனைப் படைப்புகள் எழுந்துவர ஆரம்பிக்கின்றன. கனவுருப்புனைவு என்பது அக்கற்பனைகளின் சாத்தியமான எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போகிறது எனலாம், அறிவியல் சாத்தியங்களுக்கு உட்பட்டு.
அரூ இதழின் கட்டுரைகள், நேர்காணல்கள் முதலியவற்றை முதலில் வாசித்துவிட்டுப் பிறகு புனைவுகளுக்குள் செல்வது இதுவரை கனவுருப்புனைவுகள் வாசிக்காதோருக்கு உதவியாக அமையும் என்று நம்புகிறேன். அனைத்தும் இயலாவிட்டால் ராம்சந்தரின் இந்த ஒரு கட்டுரையை மட்டுமாவது வாசிக்கலாம். அறிவியல் மட்டுமல்லாமல் மொழி எவ்வாறு கனவுருப்புனைவைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் அறிவியல்புனைவு அறிவுரைப்புனைவாக ஆகிவிடக்கூடிய அபாயம் குறித்தும் ராம்சந்தரின் இந்தக் கட்டுரையில் வாசிக்கலாம். இதுவரை இரண்டே கட்டுரைகளைத்தான் ராம் எழுதியிருக்கிறார். இரண்டும் அற்புதமாக அமைந்துள்ளன. அவர் இத்தளத்தில் ஒளிபாய்ச்சும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும்.
ஒவ்வோராண்டும் அரூ அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்குப் பரிசு வழங்குகிறது. கடந்த ஆண்டு (2019) நடந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கதைகள் தொகுக்கப்பட்டு இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த ஆண்டுக்கான (2020) போட்டியும் முடிந்து, நடப்பு ஏழாம் இதழில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் வெளியாகியுள்ளன.
இந்தப் போட்டிகளிலும் அரூவின் முக்கியமான முன்னெடுப்பு ஒன்றை அவதானித்தேன். கடந்த ஆண்டுப் போட்டியில் ஜெயமோகனும் இவ்வாண்டுப் போட்டியில் சாருநிவேதிதாவும் கதைத்தெரிவில் பங்களித்துள்ளனர். அதோடு அரூ குழுவினரும் தாங்கள் தேர்ந்தெடுத்த கதையை வெளியிட்டுள்ளனர். அரூ குழுவின் தேர்வு நட்சத்திர எழுத்தாளர்களின் தேர்விலிருந்து இரண்டு முறையுமே மாறுபட்டிருந்தது. இதைப் போன்ற இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் அரூவின் அணுகுமுறை எடுத்துக்காட்டியுள்ளது. முக்கியமான முன்னகர்வு இது.
நேர்காணல்களை அரூவின் முத்திரைப் படைப்புகள் எனலாம். வெகு விரிவாகவும் நேர்த்தியாகவும் இவை அமைந்திருக்கின்றன. விகடன் ‘தடம்’ இதழில் இத்தகைய விரிவான நேர்காணல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இதுவரை அரூவில் வெளிவந்துள்ள எரிக் லுண்ட்பர்க், சிரில் வாங், ஜெயமோகன், கோணங்கி, ஆனந்தகண்ணன், டிராட்ஸ்கி மருது, க்வீ லீ சுவி, வெய்யில், இசை, அய்யனார் விஸ்வநாத், இராம கண்ணபிரான் ஆகிய அனைத்து நேர்காணல்களுமே இலக்கிய, கலை ஆர்வலர்களின் வாசிப்புக்கு உகந்தவை.
ஆங்கிலத்தில் செய்யப்பட்ட நேர்காணலாக இருந்தால் ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் அரூவில் கொடுக்கப்படுகின்றன. இந்த மொழிபெயர்ப்புகள் பெரும் உழைப்பைக் கோருபவை. ஆயினும் எந்த அனுகூலமும் பிரதிபலனும் இன்றிச் செய்யப்படுபவை. ஆகவே கலைச்செல்வங்களைக் கொணர்ந்து சேர்ப்பதற்காகத் தமிழிலக்கியச் சமூகத்தால் வணங்கி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.
சிறுகதை, கவிதை, நேர்காணல், கட்டுரை என்ற வழக்கமான இலக்கிய இதழுக்கான பகுதிகளுடன் காமிக்ஸ், ஓவியம், புகைப்படம், இசை ஆகிய புதிய பிரிவுகளிலும் அவ்வப்போது படைப்புகள் வெளியாகின்றன. சோதனை முயற்சிகள் தன்னளவிலேயே ஒரு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியவை என்பதோடு இத்தலைப்புகளில் வெளியாகியுள்ள படைப்புகளும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று சொல்லவேண்டும். அவை நம் பார்வைக்கும் சிந்தனைக்கும் உரியவை.
அரூ குழுவினர் என்று மட்டும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இத்தகைய அபாரமான முயற்சிகளை அடக்கமாகச் செய்துவரும் இக்குழு ராம்சந்தர், சுஜா, பாலா ஆகியோரை உள்ளடக்கியதாக அறிகிறேன். அரூ குழுவினர் தம்முடைய விவரங்களையும் இதழின் இணையப் பக்கத்தில் சேர்க்கவேண்டும் என்பது என் வேண்டுகோள். சிறப்பான பணியை முன்னெடுத்துள்ளோர் அரூபமாக இருக்கவேண்டியதில்லை.
அரூவின் முயற்சிகள் குறித்து நான் மதிக்கும் சிங்கை அறிவுஜீவி ஒருவரிடம் விதந்தோதியபோது, அவர் அரூவைத் தான் தொடர்ந்து வாசித்து வருவதாகவும் சிங்கப்பூரின் எந்தப் பத்திரிகையையும்விட நன்றாக இருப்பதாகவும் கூறினார். ஆனால் பொதுவாக அரூவை வாசிப்பதற்கு ஆழமான அறிவுழைப்பு தேவைப்படுகிறது என்பதால் பரவலாக்கம் குறைவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். அரூவைக் குறித்த இந்த பிம்பம் எவ்வாறு உருவாகிறது என்பதை அரூ குழுவினர் கவனிக்கவேண்டும். சீரியஸான விஷயம் சுவையாக, இலகுவாக இருக்கக்கூடாது என்ற கட்டாயமில்லை. அரூவில் வெளியான கவிஞர் இசையின் நேர்காணல் அதற்கொரு நல்லுதாரணம். ஆகவே அரூ ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை இலக்கிய ஆர்வமுள்ள சில அறிவுஜீவி வாசகர்களுக்கு மட்டுமானது என்று உருவாகத் தொடங்கியிருக்கும் பிம்பத்தைத் தொடர்ந்து உடைத்துப் போட்டுக்கொண்டே வளரவேண்டும். ஓர் இதழை வெளியாக்கும் முன் அதன் ஒட்டுமொத்த ‘அப்பீல்’ என்னவாக இருக்கும் என்பதை மனக்கண்னில் கண்டு சில சிறு மாற்றங்களைச் செய்தாலே இந்தப் பிம்பம் அடிபட்டுவிடும் என்று நம்புகிறேன். இதுகுறித்து ஆசிரியர் குழுவினர் யோசிக்கவேண்டும்.
நம்முடைய பாராட்டுக்கும் ஆதரவுக்கும் முற்றிலும் தகுதியான ஓர் இலக்கிய முயற்சி அரூ என்பதில் எனக்கு எள்முனையளவும் ஐயமில்லை!
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…