அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்

6 நிமிட வாசிப்பு

அரூவை நிறுத்திவிடலாமா எனக் கடந்த வருடத்தில் பலமுறை விவாதித்திருக்கிறோம். இத்தனைக்கும், 2019 சிறுகதைப் போட்டி அளித்த அடையாளமும், இதழுக்குத் தொடர்ந்து கிடைக்கிற வெளிச்சமும், எங்கள் தகுதிக்கு மீறியதாகத் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது. எதுவானாலும் இந்த வருடப் போட்டிக்குப் பின் தீர்மானிக்கலாமெனத் தற்காலிகமாக ஒத்திப் போட்டோம்.

க்ளிஷேவாகவே இருந்தாலும் இதைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. சென்ற வருடக் கதைகளின் எண்ணிக்கையான 66-இல், பாதியாவது இம்முறை வருமாவென்கிற சந்தேகம் இருந்தது. என்றுமே முதல் முயற்சி எழுப்பும் உத்வேகம் நாளடைவில் நீர்த்துப் போவது ஒரு காரணம். இரண்டாவது, ஒவ்வொரு அரூ இதழுக்கும் அறிவியல் புனைவு சிறுகதைகளுக்காக அல்லாட வேண்டியிருந்தது. அதனாலேயே, 98 கதைகள் என்பது பெரிய ஆச்சரியம். கடந்த முறை எழுதிய பலரும் ஆர்வத்துடன் போட்டியில் பங்கெடுத்திருந்தது மகிழ்வான விஷயம்.

“நடுவராக இருக்கவியலுமா?” எனக் கேட்ட உடனேயே எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒப்புக்கொண்டார். அது மட்டுமின்றி, இரண்டே நாட்களில் தேர்ந்தெடுத்த 15 கதைகளையும் படித்து, அவரது முடிவையும், அறிவியல் புனைவு சிறுகதைகள் குறித்த அவரது பார்வையையும் அனுப்பினார். சாருவிற்கு எங்களது மனமார்ந்த நன்றி. அவரது கட்டுரையை இங்கே படிக்கலாம்.

அவருக்கு நாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய 15 கதைகள் இதோ. (இவை தரவரிசை அல்ல)

போட்டிக்கு வந்த கதைகளைக் குறித்த, எங்களுடைய பொதுவான சில கருத்துகளைப் பகிர்கிறோம். சென்ற வருடத்தின் எண்ணங்களுடன் பெரிய மாறுதல்கள் கிடையாதுதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதன் அவசியம் இருக்கிறது. ஏனென்றால் தமிழில் அறிவியல் புனைவு எழுதும் ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கிறது. நல்ல கதைக்கருக்களும் இருக்கின்றன. கதைசொல்லும் முறையிலுள்ள குறைபாடுகளினாலேயே அவை தீவிரமிழக்கின்றன.

செவ்வாய்க் கிரகமும் தேய்வழக்குகளும்

பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், உலகம் மதிக்காத ஜீனியஸ்கள், குன்றில் வாழும் சாமியார்கள் என யாராவது பத்தி பத்தியாக அறிவியலை விளக்கும் பாணி என்றோ வழக்கொழிந்துவிட்டது.

செவ்வாய்க் கிரகத்திற்கு லாக்டவுன் போட்டால் புண்ணியமாகப் போகும் எனத் தோன்றுமளவிற்கு நிறைய கதைகள். பாவம் அவர்கள்; சிறிது நாட்கள் அவர்களுக்கு லீவு விடுவோம். அல்லது, புதிய கருப்பொருளில் புதிய பாணியில் எழுதி, செவ்வாய்க்கிரகத்திற்குப் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்யலாம்.

பிழைகள்

கதைகளில் காணப்பட்ட பிழைகளைப் பற்றி நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். சென்ற வருடமும் சரி, இந்த வருடமும் சரி, போட்டிக்கு வந்த கதைகளில் பிழைகள் அதிகம் இருந்தன. கிட்டத்தட்ட அனைத்துக் கதைகளும் ஒற்றுப் பிழைகளுடன் இருந்தன. ஒற்றுப்பிழைகளாவது பரவாயில்லை, இலக்கணப்பிழைகள், தவறான வார்த்தைப் பிரயோகங்கள் எனப் படிக்கும்போதே நெருட வைத்தன. அகராதியைப் புரட்டினால் நிமிடங்களில் சரிசெய்துவிடக் கூடியவைதான். அதே போல வாக்கியச் சிடுக்குகளும் மறுவாசிப்பில் எளிதாக அடையாளம் காணக் கூடியவை. எழுத்துப்பிழைகள் தவிர்க்கவியலாதவைதான். அதே நேரத்தில், அவை நல்ல கதைகளின் தரத்தைப் பாதிப்பது துரதிருஷ்டவசமானது. இம்முறை பிழை திருத்தம் செய்துவிட்டே நடுவருக்கு அனுப்பினோம். அடுத்த முறை பிழைகளையும் கருத்தில்கொண்டுதான் கதைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியதாகிவிட்டது.

நேர்மறையான அறிவியல் புனைவு

உயிர்க்கொல்லி வைரஸ், டாய்லெட் பேப்பர் சண்டைகள் என்கிற வினோத காலகட்டத்தில், வீட்டுக்குள் அடைந்து கொண்டு எண்ணற்ற பிறழ் உலகுக் கதைகளை (dystopia) ஒரே நேரத்தில் படிப்பது திகிலாக இருந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட அறிவியல் புனைவுகள் காட்டும் 2020 நிஜத்தில் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறது? வடிவேலு மீம்ஸ், டிக்டாக், ட்ரம்ப் பிரஸ்மீட் — என எதற்காகவாவது இன்னும் சிரித்துக்கொண்டுதானே இருக்கிறோம். நேர்மறையான அறிவியல் புனைவுகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன என்பது எங்கள் வலுவான நம்பிக்கை.

அறிவியல் புனைவு வாசித்தல்

போட்டிக்கு வந்த பல கதைகளின் கட்டமைப்பைப் பார்க்கும்போது, பரவலான அறிவியல் புனைவு வாசிப்பின் தேவை புலனாகிறது. “மேலை உலகில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால பகுதியிலேயே ராபர்ட் லூயி ஸ்டீவன்சன், ஜூல்ஸ் வெர்ன், எச்.ஜி.வெல்ஸ் போன்ற முன்னோடி அறிவியல் புனையாளர்கள் உதித்துவிட்டனர். இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் SF அதாவது science fiction என்று ஒரு தனிவகை genre உருவாகிவிட்டது. இந்தப் பரிணாமம் தமிழில் இல்லை,” என எழுத்தாளர் இராம. கண்ணபிரான் தனது அரூ நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அரூ அறிவியல் கதைகள் 2019 தொகுப்பிற்கு சுனில் கிருஷ்ணன் எழுதிய கண்டடைதலின் பேருவகை கட்டுரையில் இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதியுள்ளார். மேலை உலகில் அறிவியல் புனைவின் நூறாண்டுக்கால வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்பதற்கல்ல. என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள், அவற்றை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என ஆராய்ந்து, அறிவியல் புனைவின் வழி நமது நிலப்பரப்பில் நாம் சொல்ல நினைக்கும் கதைகளைச் சொல்வதற்கான வழியைக் கண்டறிவதற்கு.

இரண்டு தொகுப்புகளை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். ஒன்று — Ann மற்றும் Jeff Vandermeer தொகுத்த The Big Book of Science Fiction. 1897-இல் எச்.ஜி.வெல்ஸ் எழுதிய The Star சிறுகதையில் தொடங்கி 2002-இல் Johanna Sinisalo எழுதிய Baby Doll கதை வரை தொகுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறாண்டுகளின் முக்கியமான அறிவியல் புனைவெழுத்தாளர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் பட்டியலை இங்கே காணலாம்.

இரண்டு — The Science Fiction Hall of Fame, Volume One. 1929–1964 காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறந்த அறிவியல் சிறுகதைகள் என Science Fiction Writers of America என்கிற அமைப்பிலிருந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்த கதைகளின் தொகுப்பு.

***

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளுக்கு வருவோம். இவற்றில் ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஓர் அம்சம் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அறிவியல் தர்க்கம் நன்கு பொருந்தி வந்த கதைகளாக அடையாளம், மின்னணு புத்துயிர்ப்பு, மின்னு, மலரினும் மெல்லிது காமம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எழுத்து நேர்த்தி மற்றும் சிறந்த கதைசொல்லும் பாணிக்கு விற்பனைப் பிரதிநிதியின் காலாவதிக்காலம் நல்ல உதாரணம். கதையின் இறுதியில் ஒரு புழுவை வைத்து வரும் விஷுவலுக்காக மட்டுமேகூட இக்கதையை வாசிக்கலாம். கச்சிதமான வடிவத்தில், புனைவின் உலகைப் பூடகமாக விளக்கும் வகையில் அமைந்திருந்தது — வான் நகும். எடுத்துக்கொண்ட கதைக்கருவிற்கான உணர்வுகளைக் கடத்தியிருக்கும் விதத்திற்காக தட்டான்களற்ற வானம், ஈறிலி மற்றும் ஒளிந்திருக்கும் வானம் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். குறைந்தபட்சம் 500 ஆண்டுகளுக்கு பிறகே அறிவியல் புனைவு துவங்க வேண்டியதில்லை, நிகழ்காலத்திலும் ஓர் அறிவியல் கேள்வியை அடித்தளமாக வைத்துக் கதை சொல்லலாம் என்கிறது சசம் உடனிருத்தல். மனிதனுக்கும் ரோபாட்டுக்குமான உறவுச்சிக்கலை, குறிப்பாக, ஆண்-பெண் காமத்தை முன்முடிவுகளின்றி அணுகியது மேய்ப்பன்.

வெறும் அறிவியல் விளக்கங்களாக இல்லாமல் கதைப் போக்கிலேயே, கட்டமைக்கப்பட்ட உலகத்தின் நுணுக்கங்களைக் காட்டியிருக்கும் விதம், வடிவ நேர்த்தி, அறிவியல் தர்க்கம் ஆகியவை பொருந்தி வந்த கதையாக அமைந்தது ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி. Dystopia-வாக வழிந்தோடிய கதைகளுக்கு மத்தியில், ஓரளவேனும் நேர்மறை அறிவியல் புனைவின் பக்கம் வந்த கதை பூச்சி. “அய்யகோ! எல்லா உயிரினங்களும் அழிந்துவிட்டனவே, மனிதன் செத்தொழிந்தான்!” என்று dystopia-வாக எழுதக்கூடிய அனைத்து சாத்தியங்கள் இருந்தும், “எது அழிஞ்சா என்ன, இந்த மனுசப்பய இருக்கானே பூச்சிய தின்னாச்சும் பொழச்சுப்பான்!” என்று நாற்காலியில் சாய்ந்தபடி நக்கலாகச் சிரிக்கும் கதை பூச்சி.

சில கதைகள் மிகைபுனைவுக்கும், அறிவியல் புனைவுக்குமான எல்லையில் இருந்தன (உ.தா: கடைசி ஆப்பிள், அநாமதேய சயனம்). அறிவியல் புனைவுக்கென கெடுபிடியான வரையறைகளை ஏற்படுத்திவிடக் கூடாதென நினைக்கிறோம். அறிவியல் புனைவென்றால் என்ன என்கிற அடிதடிப் பஞ்சாயத்து மேற்குலகில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. (மேலும் விவரங்களுக்கு Definitions of Science Fiction என்கிற பக்கத்தைப் பார்க்கவும்.) இந்நிலையில் இவ்வகைமையைத் திறந்த மனதுடன் அணுகுவதே எங்கள் எண்ணம். உதாரணத்திற்கு, அநாமதேய சயனம் என்கிற கதையை எடுத்துக்கொள்வோம். தூக்கம் வராமல் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லிச்செல்வது எப்படி அறிவியல் புனைவாகும் என்ற கேள்வி எழலாம். ஒரு நோய் உண்டாக்கக் கூடிய பாதிப்பை வாசகர் கதை படிக்கும்போது உணரும் அளவிற்கு எழுதிய விதத்தில் — அதாவது அறிவியல் பூர்வமாக புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றை இலக்கியப் பூர்வமாக அணுகியதற்காக — அதை அறிவியல் புனைவுக்குள் சேர்க்கலாம் என்பது எங்கள் கருத்து. (2019-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கதைகளில் ஒன்றான கோதார்டின் குறிப்பேடு என்கிற கதையும் இவ்வகையில் அமைந்திருந்தது.)

இவற்றில் எந்த கதையை பரிசுக்கு தேர்வு செய்வது? ஏதேனும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு அளிப்பதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், ஓர் இளம் வாசகர், “போன முறை பரிசு பெற்ற கதைகள் பல பக்கங்கள் இருக்கின்றன. கதையின் நீளம் முக்கிய அளவுகோலா?” எனக் கேட்டிருந்தார். அறிவியல் புனைவின் மீது ஆர்வம் கொண்ட, ஆனால் இலக்கியப் பரிச்சயம் அல்லாத புது வாசகர்கள் இப்போட்டிகளை அணுகும்போது சில தவறான புரிதல்கள் ஏற்பட்டு விடுகின்றன. அது மட்டுமின்றி, ஒரு கதையை மட்டும் தேர்ந்தெடுப்பதற்குத் தடையாக இந்த 15 கதைகளிலுமே சில கண்கூடான குறைகள் இருந்தன. அதனாலேயே, இம்முறை இரு கதைகளைப் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அறிவியல் புனைவுலகம், தத்துவ விசாரணை, கதைசொல்லும் நேர்த்தி ஆகிய காரணங்களுக்காக மின்னணு புத்துயிர்ப்பு என்கிற கதையையும், மிகைபுனைவின் தாக்கத்துடன் இருந்தாலும் தனித்துவம், அதன் மொழி கடத்துகிற பித்துநிலை ஆகியவற்றுக்காக கடைசி ஆப்பிள் கதையையும் முதல் பரிசுக் கதைகளாகத் தெரிவு செய்கிறோம். இவை எங்களது தனிப்பட்ட ரசனை சார்ந்த தேர்வுகள் மட்டுமே. எழுத்தாளர் சாரு நிவேதிதா பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்தவை — ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி மற்றும் அடையாளம்.

சிறந்த இரண்டு கதைகளுக்குத் தலா ரூ 10,000/- என அறிவித்திருந்தோம். நான்கு கதைகள் பரிசுக்குத் தேர்வானதால், இவற்றுக்குத் தலா ரூ 5000/- வழங்கப்படும். இரு கதைகளுக்கு அரூ குழுவினரும், இரு கதைகளுக்கு சிங்கப்பூர் ஆர்யா கிரியேசன்ஸும் பரிசுத் தொகையை வழங்குவார்கள். ஆரியா கிரியேசன்ஸ் உரிமையாளர் திருமதி பிரேமா மகாலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் அரூ நண்பர்களின் அன்பும் நன்றியும்.

***

இறுதியாக ஒரு குறிப்பு. 2017-இல் இலக்கிய நோபல் பரிசு வென்றவர் Kazuo Ishiguro. அவர் முதன் முதலில் எழுதிய அறிவியல் புனைவு நாவல் 2005-இல் வெளியான Never Let Me Go. அதற்கு முன் 20 ஆண்டுக் காலம் எழுதிக்கொண்டிருந்தவர், அறிவியல் புனைவின் பக்கம் வந்ததே இல்லை. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று ஒரு நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்டபோது, இஷிகுரோ அந்த நாவலை 90-களில் இரு முறை எதார்த்தக் கதையாக எழுத முயற்சித்துத் திண்டாடியதாகக் குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு முதுமையின் அனுபவம் ஏற்படுவதாகக் கதையில் எழுத விரும்பினார். இதை எதார்த்தக் கதையாக எழுத, எல்லா இளைஞர்களுக்கும் ஏதோவொரு வினோத நோய் வந்துவிடுவதாக அல்லது அணுக்கதிர் தாக்கத்தினால் பாதிப்பு ஏற்படுவதாக எழுதிப்பார்த்தார். சரிவரவில்லை. 2001-இல் மூன்றாவது முறையாக முயற்சிக்கும்போது அந்நாவலை அறிவியல் புனைவாக்கும் யோசனை உதித்தது. உறுப்பு தானத்திற்காக வளர்த்தெடுக்கப்படும் செயற்கை உயிரிகளாக அக்கதாபாத்திரங்களை எழுதிப்பார்த்ததும் கதை சரியானதாக அவருக்குத் தோன்றியது. இந்த யோசனை தோன்றுவதற்கு காரணம் 90-களில் ஏற்பட்ட அறிவியல் புனைவுப் பரிச்சயம் என்கிறார்.

1990-களில் இலக்கிய மைய நீரோட்டத்தில் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். நான் மிகவும் மதிக்கும் பல இளைய எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கிய காலகட்டம். 90-களிலிலுருந்து அறிவியல் புனைவை முற்றிலும் வேறு கோணத்திலிருந்து அணுகும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வருவதை என்னால் உணரமுடிந்தது. இவர்களால் புதிய பாய்ச்சலும் உந்துசக்தியும் ஏற்பட்டிருந்தன. முன்முடிவுகளுடன் இருந்த “அந்தக் கால” எழுத்தாளராகிய நான், இந்த இளம் எழுத்தாளர்களால் ஒரு கட்டுக்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டதாக உணர்ந்தேன். எவ்வகை எழுத்தையும் எழுதிப்பார்க்க நான் இப்போது தயாராக இருக்கிறேன்.

5 thoughts on “அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்”

 1. பரிசுக் கதை எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

 2. என் முதல் முயற்சி அறிவியல் புனைவு சிறுகதை எழுதியது. இன்னும் அனுபவத்தோடு அடுத்து பங்கேற்கிறேன்.நன்றி.
  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

 3. வெற்றி பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.

  புதுப் புது விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் அரூவின் இந்த முயற்சிக்கு நன்றிகள்.

 4. சிறந்த தொகுப்புகளை உருவாக்குகிறீர்கள், 2019தொகுப்பை பிப்ரவரியில்நடைபெற்ற நெல்லைபுத்தக விழாவில் வாங்கினேன்

 5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  என் முதல் முயற்சியில் இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே தீருவேன்.
  குறைந் த பட்சம் 98 கதாசிரியரின் பெயர்களையாவது வெளியிட்டிருக்கலாம். இதழில் எனது பெயர் வந்த திருப்தி கிடைத் திருக்கும். யார் யார் எந்த ஊரில் இருந்து பங்கு பெற்றவர் என்ற விபரம் அறியலாம். செய்வீர்களா? நன்றி.
  கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்