பூச்சி

6 நிமிட வாசிப்பு

உண்ணத் தகுந்த பூச்சிகள் பற்றிய குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்த உயிரியல் ஆய்வாளர் மாசானம் ராமசாமிக்கு இரவு உணவாக நான்கு கறுத்த காட்டு வண்டுகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றும் உடைத்த கருஞ்சல்லியைப்போல் பெருத்து வலுவாக இருந்தன. தென்னையின் பாளைகளைத் தீண்டி உதிர வைத்துவிடும் அந்த வண்டுகளை ஒருவார காலமாக ராப்பகலாகத் தூங்காமல் காத்திருந்து பிடித்துச் சேகரித்திருந்தான் சமையலர் காலிங்கன். தென்னை மரங்கள் அழிந்துவிட்டதால் சார்ந்து வாழும் சூழல் பறிபோன வண்டுகள் மணலில் புதைந்துக் கிடந்தன. ஆய்வாளர் தன் சமையலரிடம் கேட்டார்:

“எவ்வளவு கொதிநிலையில் வேக வைத்தாய் காலிங்கா?”

காலிங்கன் சொன்னான்:

“பன்னிக்கறிக்குத் தேவைப்படும் கொதிநிலையைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாகத்தான் வேக வைத்திருக்கிறேன் எசமானே”

காலிங்கன் சொன்ன பதிலைக் கேட்டதும் மாசானம் ஒருநொடி ஏக்கப் பெருமூச்சு விட்டார். அவருக்குப் பிடித்த உணவுகளில் மிக முக்கியமானது பன்றிக்கறி. ஆனால், அது இனிமேல் தன் வாழ்நாளில் ஒருபோதும் கிடைக்கப் போவதுமில்லை நாம் உண்ணப் போவதுமில்லை என்பதை நினைத்தாலே கொடும் துயரமாக இருந்தது. வெள்ளரிப் பழங்களைப் பிளந்து வைத்ததுபோல் இருக்கும் அதன் வடிவமும் நிறமும் சுவையும் நினைவில் வந்து வாயூறத் தொடங்கிவிட்டது. பன்றிக்கு மட்டும் முட்டையிடும் வழக்கம் இருந்தால் எப்படியிருக்கும்! இந்த நாட்டில் எங்காவது புதைந்துக் கிடந்து நல்ல மழை பெய்யும் ஒருநாள் உடைத்துக்கொண்டு வெளியேறி வந்துவிடுமே என்று நினைத்தார். பன்றி என்ன மீன் வம்சமா? அந்த உண்மை அறிவைக் கிளறவும், அவர் தன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே அந்தக் கறுத்த வண்டுகளை மனசே இல்லாமல் எடுத்துக் கடித்தார். நறநறவென்று இருந்த அவற்றை, நண்டை உண்பதாய்ப் பாவித்து உண்டு பார்த்தார். ஆனாலும் அதன் உடலைப் பற்களால் அரைத்தபோது எழுந்த சத்தமும், அதன் சுவையும் குமட்டலைத் தருவதாகவே இருந்தன. வேறு வழியில்லை. உயிர் பிழைத்திருக்க வேண்டும் எனில் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு நாடே இதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு பூச்சியினமாகச் சாப்பிட்டுப் பார்த்து அதன் சுவை, சத்து முதலியவற்றைக் குறிப்பெடுக்க வேண்டிய வேலையையே அரசாங்கம் அவருக்கு வழங்கியிருந்தது.

நாட்டில் இருந்த விலங்குகளை எல்லாம் ஒன்றும் மிச்சமில்லாமல் – இனவிருத்திக்காகக்கூட விட்டு வைக்காமல் – சாப்பிட்டு முடித்துவிட்ட பிறகே அரசர் இந்த ஆராய்ச்சியில் மாசானத்தை இறக்கினார். விலங்குகள் தீர்ந்தால் என்ன? தாவரங்கள், பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் இருக்குமே அதையெல்லாம் தின்று உயிர் வாழலாமே என்றால், போரில் காடு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. நாட்டில் மிஞ்சியிருந்த தாவரங்களும்கூட அழிக்கப்பட்டன. போர் முடிந்து சில மாதங்கள் ஆன பிறகும்கூட எரியூட்டப்பட்ட பகுதிகளிலிருந்து நெருப்பு இன்னும் கனிந்து கொண்டுதான் இருக்கிறது.

உணவு மேசையில் இருந்த நான்கு வண்டுகளில் இரண்டைக் காலிங்கனுக்கு ஒதுக்கிவிட்டு, முசுடு எறும்புகளைப் போட்டுக் கொதிக்க வைத்துத் தயாரித்த சூப்பை வரவழைத்துக் குடித்தார். எலுமிச்சையின் மணம் இல்லை என்றாலும் அதன் புளிப்புச் சுவை கூடியிருந்த அந்த சூப்புக்காகக் காலிங்கனைக் கிட்ட அழைத்து முதுகில் தட்டிக்கொடுத்து, “உன் கையில் ஏதோ மந்திரம் இருக்குடா காலிங்கா…” என்று பாராட்டினார். அவன் உடல் சிலிர்த்துப்போய் மாசானம் மிச்சம் வைத்த இரண்டு வண்டுகளையும் ரொம்ப உற்சாகமாகக் கடித்துத் தின்றான். அவனது இரண்டு பக்கக் கடைவாயிலிருந்தும் பால் போன்ற திரவம் வழிந்தபோது தன் நாக்கினை நீட்டிச் சுழலவிட்டு வழித்து வாயினுள் தள்ளிச் சப்புக்கொட்டிச் சுவைத்தான். அவன் சாப்பிடுவதை வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த மாசானம் அவனைப் பார்த்துச் சொன்னார்:

‘‘நீ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் பொழைச்சிக் கெடப்படா காலிங்கா.”

காலிங்கன் தன் உதடுகளைச் சுவைத்துக்கொண்டே நெளிந்தபடிச் சிரித்தான்.

பூச்சிகளை உண்ண ஆரம்பித்ததிலிருந்து காலிங்கன் நன்கு பெருத்துவிட்டான் என்று நினைத்தார் மாசானம். அவன் சமையல்காரன் என்பதால் ருசி பார்த்து, ருசி பார்த்துப் பூச்சிகளை உண்பது அவனுக்குப் பழகிவிட்டது. அதனால்தான் அவன் அப்படியிருக்கிறான் என்று தனக்குள் சமாதானமும் சொல்லிக்கொண்டார். தான் முன்னை விடவும் கொஞ்சம் இளைத்துவிட்டிருக்கிறோம் என்றாலும் உடலுக்குக் கூடுதல் தெம்பு வந்திருப்பதாகவும் நினைத்தார். திடீரென ஒரு யோசனை வந்தவராய்க் காலிங்கனை அழைத்தார்-

‘’காலிங்கா… அந்த கர்லா கட்டையைக் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வா. ஒரு ரவுண்டு சுழற்றிப் பார்ப்போம்”

காலிங்கன் சட்டென உற்சாகம் தொற்றிக் கொண்டவனைப்போல் உள்ளே ஓடி ஒரு பத்து கிலோ எடையுள்ள இரும்பாலான கர்லா கட்டையை எடுத்துக்கொண்டு வந்தான்.

மாசானம் சளைக்காமல், சோர்வு தட்டாமல் இடது தோள்பட்டையில் இறக்கி வலது தோள்பட்டை வழியாக எடுத்துத் தன் நெஞ்சுக்கு நேராய்க் கர்லா கட்டையை நிமிர்த்திக் காட்டுவதைக் காலிங்கன் எண்ணிக் கொண்டேயிருந்தான். அவனால் ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை. எப்போதும் இருபது வரை மட்டுமே எடுத்துவிட்டுச் சோர்ந்துபோய் வைத்துவிடும் மாசானம் இப்போது ஐம்பதைத் தாண்டி கர்லா கட்டையைச் சுழற்றியும்கூடச் கொஞ்சமும் சோர்ந்து போகாமல் இருந்தார். லேசாய்க் கை தட்ட ஆரம்பித்து ஒரு கட்டத்தில் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டான் காலிங்கன். கர்லா கட்டையைக் கீழே வைத்துவிட்டுக் காலிங்கனைப் பார்த்தவருக்கு கண்கள் சிரிப்பில் விரிந்தன.

‘‘டேய் காலிங்கா… பூச்சிக்கு வேல்யூ அதிகம்தாண்டா…” என்றார்.

காலிங்கன் சர்வசாதாரணமாக ஒரு தெர்மாகூலரை எடுப்பதுபோல் அந்த இரும்புக் கர்லா கட்டைகளை எடுத்துச் சென்றான். இன்னும் ஒரு கப் எறும்பு சூப்பு எடுத்துவரச் சொல்லிக் குடித்த மாசானம், அந்த இரவில் இதுவரை தன் ஆராய்ச்சியில் கண்டறிந்த குறிப்புகளையெல்லாம் வைத்து அரசருக்கு ஒரு கடிதம் எழுதினார்.-

மாமன்னருக்கு வணக்கம். போரின் காரணமாக அழிந்த உலகில் மனிதன் உண்ணத்தக்க அனைத்தும் தீர்ந்துபோய் மனிதன் மட்டுமே பசியோடு எஞ்சியிருக்கும் சூழலில் தங்களது ஆட்சிக்குட்பட்ட தேசத்தின் மக்களும் வீரர்களும் உயிர் பிழைக்கும் வழியைத் தேடிய நல் உள்ளம் உங்களுடையது. உங்கள் கட்டளையை ஏற்று நான் நடத்திய ஆராய்ச்சியில் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். நம் மக்களும் வீரர்களும் இனி பசியால் மடிய வேண்டியதில்லை. எலும்பும் தோலுமாக அலைய வேண்டியதில்லை. முன்பை விடவும் பலசாலிகளாக வாழ வழி கிடைத்துவிட்டது.

மனிதன் உண்ணும் தகுதியுடைய விலங்குகள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் தீர்ந்து கையறுநிலை மட்டுமே மிஞ்சியிருந்த சூழலில், உண்பதற்கு இனி என்ன கிடைக்கும் என்று தவித்திருந்த வேளையில் நீங்கள் பூச்சிகளில் ஏதாவது உண்ணத் தகுந்தவையாக இருக்குமா என்று ஆய்வு செய்யச் சொல்லி என்னைப் பணித்தீர்கள். மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஆயிரக்கணக்கான பூச்சிகளை ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்னைப் பிரமிக்க வைக்கிறது.

நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அனைத்துப் பூச்சிகளுமே மனிதன் உண்ணத் தகுந்தவையாகவே இருக்கின்றன. அத்தனை பூச்சிகளும் சத்திலும் சரி, ருசியிலும் சரி இதுவரை நாம் உண்ட பெரிய உணவுகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கின்றன. ஒரு சிறு பூச்சிக்கு யானை பலத்தைத் தரக்கூடிய திரவம் உடலில் ஓடுகிறது. ஒரு பெரிய காட்டெருமையை வெட்டி முழுமையாகச் சாப்பிட்டால் வரக்கூடிய தெம்பை ஒரு கைப்பிடியளவு பூச்சிகள் தந்துவிடுகின்றன.

பலப்பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் ருசிகளிலும் கிடைக்கும் இந்தப் பூச்சிகள் பச்சையாகவும் சமைத்தும் சுட்டுப் பொசுக்கியும் சூப்பாகவும் நம் விருப்பத்துக்கு ஏற்ப உண்ணும் நிலையில் இருக்கின்றன. நாம் ஏற்கெனவே விரும்பி உண்ட பழங்கள், காய்கறிகள் போன்றவைகளின் சுவைகளில் நிறைய பூச்சிகள் கிடைத்திருக்கின்றன.

போரில் வெகுவாக மக்களை இழந்திருக்கும் நம் தேசத்தின் மக்கள் தொகையைக் கடகடவென உயர்த்தும் வீரியமிக்க பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இனி, ஒரே பிரசவத்தில் இரண்டு மூன்று குழந்தைகளை ஈனக் கூடியவர்களாக நம் நாட்டின் பெண்கள் இருப்பார்கள். வலிமை மிக்க அக்குழந்தைகள் எந்தவொரு செயலையும் வண்டைப்போல் வேகமாகப் பறந்து செய்து முடிப்பார்கள். அதனால், இழந்த வளத்தை நாம் மீண்டும் துரிதக் காலத்தில் மீட்க முடியும்.

பூச்சிகளை உண்ணப்பழகிய பிறகு அளவில் பெரிய உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பூச்சிகளையே நம் தேசிய உணவாகத் தாங்கள் அறிவிக்கலாம் என்பது அடியேனின் மேலான யோசனை. குறைவாக உண்டு அதிகமாக ஆற்றல் பெறக்கூடிய உணவை நான் கண்டுபிடித்துவிட்டேன். ஒவ்வொரு பூச்சியும் ஓர் ஊக்க மருந்து என்று சொன்னால் மிகையாகாது. அறுபது வயதான என்னால்கூட ஓர் இளவட்டக் கல்லை அலேக்காகத் தூக்கி அசால்டாகப் போட முடியும் என்பதைப் பூச்சிகளை உண்டு பரிசோதித்தவன் என்ற முறையில் உறுதியாகச் சொல்ல முடியும். போரில் துணையிழந்த நான் மறு திருமணம் செய்து நம் நாட்டுக்குப் புதிய வீரர்களைப் பெற்றுத்தருவேன் என இந்தச் சந்தர்ப்பத்தில் வாக்குறுதி தருகிறேன். இனி, நம் படைகளில் ஐம்பது அறுபது வயதுடையவர்களையும் வீரர்களாக நீங்கள் துணிந்து களமிறக்கலாம். அவர்களால் கைகள் சோராமல் வாள்களைச் சுழற்ற முடியும், அம்புகளை எவ்வளவு தூரத்திலிருக்கும் எதிரியின் மீதும் எறிய முடியும்.

தொற்று நோயிலிருந்தும், சுற்றுச்சூழல் கேட்டிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற நமக்குப் பூச்சிகளே ஆதாரமாக மிஞ்சியிருக்கின்றன. போரில் மடிந்த யானைகள், குதிரைகள் மற்றும் வீரர்களின் சடலங்கள் அங்கெங்கும் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. நுண் பூச்சிகள் அவற்றையெல்லாம் உண்டு தூய்மை செய்கின்றன. நம்மைப் போலவே பூச்சிகளும் அனைத்தையும் உண்ணக் கூடியவையாக இருக்கின்றன. குறிப்பாக மனிதர்களை உண்ண பூச்சிகளால் மட்டுமே முடியும். ஒரு வேட்டை விலங்கால்கூடச் சிறு சதைத் துணுக்கைக்கூட மிச்சம் வைக்காமல் உண்ண முடியாது. ஆனால், பூச்சிகள் தின்று ஏப்பம் விட்டுவிடுகின்றன.

பூச்சிகளை ஆய்வு செய்யும் காலத்தில் எனக்கு உதவியாக இருப்பதற்காகத் தாங்கள் அனுப்பிய காலிங்கன் இப்போது ஒரே ஆளாக நூறு பேரை அடித்து வீழ்த்தும் வல்லமையோடு இருப்பதை நான் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம் வீரர்கள் இன்னும் ஓரிரு நாளில் ஒரு பெரிய எதிரிப் படையை நேரில் சந்திக்கும் ஆற்றல் பெறுமளவுக்கு மாறப் போகிறார்கள்.

மாற்றுக் கருத்து ஏதுமில்லை. நாம் உடனே கண்ணில் படும் எந்தப் பூச்சியையும் துணிந்து உண்ணலாம் என்பதை அரசர் அறிவிக்கலாம். சில விஷப் பூச்சியினங்களை மட்டும் தலையைக் கொய்துவிட்டுச் சாப்பிடுமாறு அறிவுறுத்துங்கள். மற்றபடி, நாம் மீண்டும் எழுந்துவிட்டோம் என்றே சொல்வேன். நன்றி.

இப்படிக்கு

தங்களின் நம்பிக்கைக்குரிய ஆய்வாளன்

மாசானம் ராமசாமி.

பூச்சிகளைப் பற்றித் தான் கண்டறிந்த ஆய்வு முடிவை அரசருக்குக் கடிதமாக எழுதி முடித்த மாசானம், காலிங்கனைக் அழைத்தார்.

‘‘காலிங்கா… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?”

‘‘உடைந்த மரத்துண்டின் பட்டைகளை நீக்கிப் பார்த்தபோது நிறைய கம்பளிப் பூச்சிகள் கிடைத்தன. இளகிய தீயில் வறுத்து வைத்திருக்கிறேன். எடுத்து வரட்டுமா எசமானே”

‘‘கொண்டு வா, அது எப்படி இருக்கிறதென்று சாப்பிட்டுப் பார்ப்போம்”

‘‘ரொம்பவே ருசியாய் இருக்கின்றன எசமானே”

மாசானம் காலிங்கனைப் பார்த்தார். பதில் சொல்லிவிட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்த அவனைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மகிழ்ச்சியும் குதூகலமும் ஒரே நேரத்தில் சேர்ந்து கொண்டதால் மலர்ந்த முகத்தோடு அவனிடம் சொன்னார்:

‘‘உன் நாக்கை நான் நம்புகிறேன் காலிங்கா. போய் ஒரு பிளேட் அந்த ருசியான பூச்சியை எடுத்து வா. ஒரு கை பார்த்துவிடுவோம்.”

ஓர் அற்புதமான நாடோடிப் பாடலைப் பாடிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தான் காலிங்கன். அவனது நடையில் ஒரு மயில் சிலந்தியின் நடன அசைவுகள் இருந்தன.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்