ஓவியம்: டிராட்ஸ்கி மருது

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

8 நிமிட வாசிப்பு

1

யாரோ ஒருவர் சொன்னார், எல்லா உலோகங்களும் மின்சாரத்தைக் கடத்துமென்று. உடனடியாக எல்லா உலோகங்களும் தங்களாலும் மின்சாரத்தைக் கடத்த முடியுமென்று நிரூபிக்க அறிவியலின் வீட்டு வாசலில் வரிசையில் நின்றன. மென்மேலும் கணிதமயமாகும் மானுட அறிவின் பல துறைகளும் தங்ளது பெயரோடு அறிவியல் என்ற பின்னொட்டைச் சேர்த்துக் கொள்கின்றன. அவ்வாறு ஆக முடியாத வரலாறு போன்ற துறைகள் குறைந்தபட்சம் தங்களது முறைமைகள், கருத்துகள், போதனைகள், பயன்கள் ஆகியவை அறிவியல் பூர்வமானவை என்று அழைக்கின்றன. மெய்யியல் நூல்களும் உரைநடைத்தன்மையில் இருந்து விடுபட்டு நிரல்களைப் போல ஆகியிருக்கின்றன. இலக்கியம் தப்பித்திருக்கிறது.

மெய்யியல் இறந்துவிட்டதாகச் சொல்கிறார், இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்:

‘Philosophy is dead, it has not kept up with modern developments in science, particulary in physics’

– The Grand Design

பதிலுக்குப் பல மெய்யியலாளர்களும் அறிவியல்வாதத்தின் (Scientism) கிளர்ச்சியுற்ற மனநிலையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் இங்கே, இலக்கியத்தின் பசுமைக் குடிலில் பல்வேறு தாவரங்களின் நடுவே அறிவியல் புனைவும் வளர்ந்திருக்கிறது. நாம் அதற்கும் நீர் ஊற்றுபவர்களாக ஆகியிருக்கிறோம்.

2

அறிவியல் புனைவை நாம் வரலாற்று ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் அணுகக் கூடிய அளவிற்கு, வாழ்நாள் நீண்டு அதன் முகத்தில் காலத்தின் சுருக்கம் வயோதிகத்தையும் தோற்றுவித்திருக்கிறது. இலக்கிய வரலாற்றாளர்கள் கிரேக்க இலக்கியத்தில் அறிவியல் புனைவின் ஆதிக்காலடித் தடங்களைத் தேடுகிறார்கள். நானறிந்த வரையில் இலக்கியல் உலகு அல்லது இன்ப உலகின் (Utopia) ஆரம்ப நிலைக் கற்பனை ஏதேன் தோட்டதில் இருந்து தொடங்குகிறது. பல்வேறு கலாச்சாரங்களின் சொர்க்க நரகக் கற்பனைகளும் துன்ப உலகு, இன்ப உலகக் கற்பனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறோஒம்.

மேரி ஷெல்லி (1797-1851) அவளுடைய பதின்பருவத்தின் கடைசி ஆண்டில் ‘ஃப்ரங்கன்ஸ்டைன்’ எனும் நாவலைப் படைத்து நவீன அறிவியல் புனைவின் பயணத்தைத் தொடங்கி வைத்து, அதன் மூதாயாகவும் ஆனாள். அவளுக்கு நூறாண்டுகளுக்கு முன்பாக வால்டேர் (1694-1778) ‘மைக்ரோமெகாஸ்’ எனும் படைப்பின் வழியாக நமது கோளுக்கு வேற்றுலகவாசிகளை அழைத்து வந்தார். என்றாலும் பின்னாட்களைப் போல நம்மைத் துன்பத்திற்கு ஆளாக்காமல் அந்த வேற்றுலகவாசி அமைதியாகத் சிரியஸிற்குத் திரும்பிவிட்டான். முதல் துப்பறிவாளனைப் படைத்த எட்கர் ஆலன் போ அறிவியல் புனைவுக் கதைகளையும் எழுதினார். திகில், மர்மம், துப்பறியும் புனைவு, அறிவியல் புனைவு என்று நாம் அவரில் காண முடியாதவற்றின் எண்ணிக்கை மிகச் சொற்பமே.

ஒரு பெண் யார் கண்ணிலும் படாமல் கடத்தப்பட வேண்டிய சிக்கலுக்குப் புட்பக விமானத்தைக் கற்பனை செய்த கதை நம்மிடையே உண்டு எனினும் தமிழின் அறிவியல் சிறுகதைகளின் முன்னோடியாக நாம் சுஜாதாவையே குறிப்பிட முடிகிறது. என்றாலும் ஜி. நாகராஜனின் முதல் சிறுகதையை நம்மால் அறிவியல் புனைவென்று சொல்லிவிட முடியும். அதைப் போலவே மா. அரங்கநாதனின் ‘மைலாப்பூர்’, லா.ச.ராவின் ‘சுயம்பு’ ஆகிய உடனடியாக நினைவுக்கு வருகிற கதைகளையும்.

3

ஆனால் நாம் அறிவியல் மயமான மேற்கத்திய நாடுகளைப் போல இயங்குகின்றோமா? இதற்கான பதில் சிக்கலானது.

‘In other parts of the world these ideas (scientific) would be confronted with the religious and philosophical foundations of the native culture. Since it is true that the resuls of modern physics do touch such fundamental concepts as reality, space and time….’

– Werner Heisenberg in Physics and Philosopy

செயற்கைக்கோள் ஏவும் இராக்கெட்டுகளை நாம் தலைக்கு மேலே பார்த்தாலும் இடி இடிக்கும் போது அர்ஜூனா என்று சொல்பவர்களிடத்தில் நம்மால் எந்த விளக்கத்தினாலும் அவர்களை அமைதிப்படுத்த முடிவதில்லை. நெடுங்காலம் பயன்படுத்திய எண்ணெய் விளக்கின் பிசுக்கைப் போல நம்மீது நமது நம்பிக்கைகள் படிந்திருக்கின்றன. தமிழ் அறிவியல் புனைவு இந்தப் புள்ளியில் நெடுநேரம் நின்று செல்கிறது.

4

வாசிப்பவரை அச்சமடையச் செய்யும் புனைவுகளாகப் பேய்க்கதைகளும், அறிவியல் புனைவுகளும் உள்ளன. குறிப்பாகத் துன்ப உலகுக் கதைகள். இலக்கியத்தின் மற்ற அம்சங்களும் அறிவியல் புனைவில் நிறைந்திருக்கின்றன. அறிவியல் கவிதைகள் எழுதும் இளங்கலை மாணவர்கள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு இலக்கியத்தில் இடமில்லாதபோது அறிவியல் புனைவு கைகளை அகல விரித்து நம்மை அணைக்கிறது.

ஆனால் பின்நவீனத்துவ எழுத்து அறிவியல் புனைவிற்கும் அதுவல்லாத இலக்கியத்திற்குமான இடைவெளியைக் குறைத்திருக்கிறது. கர்ட் வான்னகட்டின் இரண்டாம் உலகப் போர் நாவலான ‘ஸ்லட்டர்ஹவுஸ் 5’ஐ, நம்மால் ஓர் அறிவியல் புனைவாகவும் வாசிக்க முடியும். அதைப் போலவே டான் டெலிலோவின் ‘ஜீரோ கே’, ‘அமைதி’ நாவல்களும். டோரிஸ் லெஸ்ஸிங் மூன்று பாகங்களாக அறிவியல் புனைவு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். எனினும் அதற்காக அவருக்கு நோபல் வழங்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்வோமாக. தமிழில் ஒரு ஸ்டானிஸ்லா லெம் உருவாகி வருவார் என்றால் நாம் அப்போது நிச்சயமாக பெருமை கொள்ளலாம்.

நான் வாசித்தவரையில் மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாக்கிய துன்ப உலகு நாவல் 1984. அதை அரசியல் நாவல் என்றும் அழைக்கலாம். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் யெவ்ஜெனி ஜம்யாட்டினின் ‘நாம்’ நாவலையும் குறிப்பிடலாம். ஃபிராங்க் ஹெர்பெர்ட்டின் ‘மணற்குன்று’ நாவல் வரிசை நிச்சயமாக ஒரு நல்ல திறப்பாக இருக்கும். ஆங்கிலோ-அமெரிக்க மயப்பட்ட அறிவியல் புனைவை ஏறக்குறைய கீழைத்தேய மயமாக்கியவர் ஹெர்பெர்ட். அந்நாவலில் வழங்கப்படும் பெயர்கள், கருதுகோள்கள் மத்திய கிழக்கில் வழங்கப்படுவதை ஒத்திருக்கும். ஊர்சுல லெ குவினின் ‘இருளின் இடதுகை’ பால் அடையாளங்களின் நெகிழ்வை அறிவியல் புனைவின் வழியாக முன் வைக்கிறது. இவ்வகைமையின் விரிவைச் சொல்லவே இந்தப் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

5

மனித விழிப்புணர்வின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது, மாற்றியமைத்திருக்கிறது. நாம் இவ்வுலகோடு பிணைந்திருப்பதால் விழிப்புணர்வின் திறப்புகளின் வழியாக நுழையும் வெளிச்சத்திலிருந்து தப்புவது அவ்வளவு எளிதானதல்ல. நெடுங்காலம் நாம் ஊறியிருந்த கலவையை விட்டு நீங்கி வேறொரு அறிவுச் சேற்றில் ஊன்றி மலர்ந்துவிட முடியாமல் இருக்கிறோம்.

நவீன அறிவியல் கீழைத்தேய சமூகங்களில் உருவாக்கும் பதட்டத்தைச் சிறு அளவில் விவரிக்கும் படைப்பாக, ஜூனிசிரோ டானிசகியின் ‘நிழல்களைப் புகழ்ந்து’ கட்டுரையைக் குறிப்பிட விரும்புகிறேன். ஜப்பானியக் கட்டிடக்கலையின் உட்சபட்சப் பங்களிப்பு அதன் கழிவறை அமைப்பே என்று சொல்லும் டானிசகி, நவீன இயற்பியல் இங்கேயிருந்து தோன்றி வளர்ந்திருந்தால் மேற்கின் அறிவியலில் இருந்து அது எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்றும் எழுதுகிறார். இப்படியான சிக்கல் நமது கதைகளுக்குக் கருப்பொருளாக அமைவது இயல்பானதே.

6

வேற்றுலகவாசிகள், இயந்திர மனிதர்கள், தொழில்நுட்பத்தின் வழியாக நம்மை ஆளும் அரசுகள், எதிர்க்குழுக்கள், கோள்களுக்கு இடையேயான பயணம், இல்லாத அறிவியல் கோட்பாடுகள், மாற்று எதார்த்தம், கனவுநிலை எதார்த்தம், காலப்பயணம், சூழல் அழிவு, இடப்பெயர்வுகள் என அறிவியல் புனைவுகளின் சாத்தியங்களை ஒரு சிறு பட்டியலில் அடைத்துவிட முடியும் என்றாலும், அதை எழுதுகிறவர்களின் கற்பனையும், புதுமையும் இன்றளவும் இவ்வகைமை நீர்த்துப் போகாமல் வைத்திருந்தாலும் பெரும்பாலான படைப்புகள் கிளிஷேவுக்குள் சிக்கிவிடுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு அனுமதித்தால் மட்டுமே அறிவியல் புனைவு வாசிப்பது சாத்தியம்.

7

இப்போது நாம் தமிழில் எழுதப்படும் அறிவியல் புனைவுகளுக்கு வருவோம். நம்மால் மறுக்க இயலாத ஒரு பெயர் சுஜாதா. அவர் அளவிற்குப் பல்வேறு விதமான புனைவுகளில் ஈடுபட்ட அதுவும் அறிவியல் புனைகதைகளை இடதுகையால் எழுதித்தள்ளிவிடக் கூடிய ஒருவரை நம்மால் குறிப்பிட முடியாவிட்டாலும் அவர் அளவிற்குத் தான் எழுதியவற்றில் தீவிரத்தன்மை குறைந்தவரையும் பார்க்க முடியாது. இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அவர் சில நல்ல அறிவியல் புனைவுகளைத் தீவிரத்தன்மையோடும், அதன் ஆரம்பகால இலக்கணங்களுக்கு உட்பட்டும் எழுதியிருக்கிறார் என்பதையும் சேர்த்தே சொல்கிறேன்.

ஆனால் தமிழில் அறிவியல் புனைகதைகள் எழுத விரும்புகிறவர்கள் முதலில் சுஜாதாவை இலட்சியமாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். ஆங்கிலம் அறிந்த தற்போதைய வாசகர்கள் அவருடைய காலத்தைப் போன்றவர்கள் அல்ல. எதிலும் ஒரு லோக்கல் நகைச்சுவை, காமம் இவற்றைக் கலக்கும் சுஜாதாதன்மையில் இருந்து விடுபடுவது ஓர் உடனடித் தேவை. ஆனால் இறுதிப்பட்டியலாக அனுப்பப்பட்ட பதினைந்து கதைகளில் ஒன்றிரண்டைத் தவிர மீதியிருப்பவை அவரது பாணியில் அமைந்திராததோடு, அறிவியலை எளிதாகக் கையாள்வதைப் போன்ற பாவனையும் பெரும்பாலான கதைகளில் இல்லாதிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பரிசுக்காக ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில் சுஜாதா பாணியில் அக்கதை எழுதப்பட்டிருக்கக் கூடாது என்பதை ஓர் அளவீடாகவே வைத்திருந்தேன். அதே சமயம் சமகாலத்தில் அறிவியல் புனைவு நாவல்களே இல்லாதிருப்பது திரும்பவும் அவரிடமே நம்மை அழைத்துச் செல்கிறது.

8

அறிவியல் புனைவும், துப்பறியும் புனைவும் சகோதரர்கள் மட்டுமல்ல பல பண்புக்கூறுகளிலும் பிணைந்திருப்பவையும் கூட. அறிவியலின் மீதான நம்பிக்கையை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்ததில் பருவ இதழ்களுக்கு இருந்த பங்கின் அளவிற்குத் துப்பறியும் புனைவிற்கும் உண்டு.

முன்னதில் பின்னதின் கூறுகளையும், பின்னதில் முன்னதின் முறைமைகளையும், பயன்பாட்டையும் பார்க்கலாம்.

தமிழில் அறிவியலை மையமாகக் கொண்டு ஒரு துப்பறியும் புனைவு எழுதப்படவில்லை. இது ஒரு வாய்ப்பு.

9

சோதிடம், சித்தர்கள், வேதங்களில் சொல்லப்பட்டவையும் அறிவியல் கோட்பாடுகளும் ஒன்றே என்பதை விளக்கும் கதைகளை நிறுத்துவது நல்லது. ஒரு வளர்ந்த பெண் ஒருகாலத்தில் குழந்தையாக இருந்தாள் என்பதற்காக அவளும் குழந்தையும் ஒன்றுதான் என்பதைப் போல நாம் பேசக் கூடாது. சிந்தனை ஒப்புடைமையின் அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஆனால் இவை இரண்டையும் இணை வைத்துப் பேசும் படைப்புகள் நம்மால் படைக்கப்படுவதை நிறுத்தவும் முடியாத அளவிற்கு நம்முடைய மரபான சிந்தனை, நவீன அறிவியல் கோட்பாடு இரண்டிற்கும் இடையே ஒப்புடைமை இருப்பதற்கும் மறுப்பதிற்கில்லை. எனினும் ஒரு கையோடு மற்றொரு பக்கத்தில் கையை வைக்கலாமே ஒழிய காலை வைத்து ஓர் உடலைத் தைக்கக் கூடாது. இப்படி ஒரு சிக்கலைக் கையாள்வதைத் தவிர்க்க முடியாதபோது, அறிவியலின் தனித்திறம் (Qualitative) மற்றும் அதன் அளவு சார்ந்த (Quantitative) பங்களிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கோட்பாடுகளை நடைமுறை எதார்த்தமாக மாற்றுவதில் அறிவியல் கண்ட வெற்றியே அதனை அனைத்துத் துறைகளைக் காட்டிலும் நம்பகமானதாக மாற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக நிர்வாணா என்கிற பெளத்தக் கோட்பாடு மனித சமூகத்தை ஒட்டு மொத்தமாக விடுவித்து விடவில்லை. கோள்களின் இடங்களை அளவிடும் பண்டைய கிரேக்கக் கோட்பாடு நமக்கு ஜிபிஎஸ்ஐத் தந்திருக்கிறது. மதம், மெய்யியல், இலக்கியம், கலை, இசை இவற்றின் பங்களிப்பை மட்டம் தட்டுவதல்ல நான் சொல்வது.

எல்லாத் துறைகளிலும் அடிப்படைவாதிகள், உறுதிக் கோட்பாட்டாளர்கள் இருப்பதைப் போலவே அறிவியலிலும் உண்டு. அறிவியல் என்றால் உண்மை என்கிற புரிதல் ஓரளவிற்கு மட்டுமே சரியானது. அறிவியல் உண்மையை நம்பகமான முறையில், பயனிலைத்தன்மையோடு (objective) விளக்குவதால் சார்பின் குறைபாடுகளில் இருந்து விடுபட்டது என்கிற எண்ணமும் நம்மிடையே உண்டு.

நாம் உண்மைகளால் மட்டுமே இயங்குபவர்கள் அல்ல. அறிவியலும் உண்மைகளால் மட்டுமே இயங்கக் கூடியதல்ல. அதுவும் நம்மைப் போலவே விதிதருமுறைத் தர்க்கம் (deductive logic), விதிவருநிலைத் தர்க்கம் (inductive logic) மற்றும் நிகழ்தகவு இவற்றினாலும் இயங்கக் கூடியதே. நாம் பெரும்பாலும் விதிவருநிலைத் தர்க்கத்தால் இயங்கக் கூடியவர்கள். அதனோடு அறிவியலே கூடத் தற்போது உண்மையின் நெருங்கிய அளவீடு மட்டுமே சாத்தியம் (Approximation of truth) என்று சொல்லத் துவங்கியிருக்கிறது.

நம்முடைய நிலத்தின் பின்புலத்தில் கதைகள் சொல்லப்படும் போதும், ‘காரைக்கால் சந்தையில்கூட கம்ப்யூட்டர் விக்கிறான்’ என்பதைப் போல எழுதக் கூடாது. அறிவியலின் மீதான் அதீத வியப்பு நம்முடைய கதைகளில் இருந்து நீங்கி, அது இயல்பான நிலையில் வெளிப்படுவதாக இருக்க வேண்டும். மேலும் சில அடிப்படைகளை நம்மால் விரித்துக்கொண்டே செல்ல முடியும்.

10

நாம் இப்போது போட்டிக் கதைகளுக்கு வருவோம். எனக்கு அனுப்பப்பட்ட பதினைந்து கதைகளும் பொருட்படுத்ததக்கவை என்று சொன்னால் அது வெறும் ஆறுதல் அல்ல என்று நண்பர்கள் நம்ப வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். உண்மையில் ஒருவித நம்பிக்கையின்மையோடுதான் வாசிக்கத் துவங்கினேன். அவ்வாறு துவங்கினாலும் அசிரத்தையாக வாசிக்கவில்லை. வாசித்து முடித்ததும் குறும்பட்டியலில் வழங்கப்பட்ட கதைகளில் பேசப்படும் விசயங்களின் சமகாலத்தன்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது. எடுத்துக்காட்டாக ‘மெட்டா’ எனும் கதையில் வரும் Adiabatic நிலை வெப்ப ஆற்றலைப் பேசக் கூடியது. அதைப் போலவே, ‘அம்மா’ எனும் கதையில் வரும் புள்ளியியலாளர் தாமஸ் பெயெசின் அறிமுகம். இவ்வளவு நுட்பமான தகவல்களை அறிந்திருப்பவர்கள் தமிழில் அறிவியல் புனைவு எழுதக் கூடியவர்கள். வெறுமனே வேற்றுலகவாசிகள், காலப்பயணக் கதைகள் எழுதக் கூடியவர்களாக இல்லை என்பதே முக்கியமான வளர்ச்சி.

போட்டியில் பரிசுக்குத் தேர்வான படைப்பாக நான் ‘தப்பிச் செல்லும் கிரகங்கள்’ கதையைத் தேர்ந்தெடுக்கிறேன். அறிவியல் கோட்பாட்டின் நம்பகத்தன்மை, புதிய கருதுகோள் ஒன்றை முன்வைப்பது, விசாரணையின் தீவிரம் இவற்றிற்காகவும், துணைக்கதையாக சோதிடத்தின் நம்பகத்தன்மையை அறிவியலுக்கு அருகே வைத்து எழும் விவாதத்தில் சோதிடத்தின் பக்கம் சாயாமல் இருந்தது. மேலும் ஒரு வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதும் காரணம்.

1846ஆம் ஆண்டு, கோள்களின் சுற்றுவட்டப் பாதையைப் பற்றிய நியூட்டனின் கோட்பாடுகளுக்குச் சற்றே பொருந்தாமல் இருந்த யுரேனஸ் கோளின் இயக்கத்தை ஆராய்ந்த ஆடம்ஸ் மற்றும் லெவெர்ரியர் அதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு கோள் யுரேனஸின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசையால்தான் அது அவ்வாறு பிறழ்வாக இயங்குகிறது என்கிற கருதுகோளை முற்றிலும் கணித அடிப்படையில் முன்வைத்தார்கள். அவர்கள் கணித அடிப்படையில் முன்வைத்த அதே ஆண்டில் ஒரு புதிய கோள் பருண்மையாகவும் கண்டறியப்பட்டுப் புலப்படாதிருந்த அந்தக் கோளிற்கு நெப்டியூன் என்ற பெயரும் வைக்கப்பட்டது.

தப்பிச் செல்லும் கிரகங்கள் கதை இந்நிகழ்வை வேறோரு வகையில் பேசியிருப்பதின் மூலம் அறிவியல் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை மையமாகக் கொண்டு, பருண்மையாக ஒன்று அறியப்படும் முன்பாக யூகம் மற்றும் ஒரு கருதுகோள் அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு நிகழ்விற்கு விளக்கம் சொல்ல முனைவதை விவரிக்கிறது. அறிவியலின் அறிதல் முறைகளுக்குப் பொருந்திப் போகக் கூடிய பார்வையை இக்கதை கொண்டிருப்பதோடு, ஒரு கோட்பாட்டின் சாத்தியத்தையும் தீவிரமாகவும் அணுகுகிறது.


11

மேலும் சீரிய முறையில் எழுதப்பட்ட சில கதைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘இறைவர்க்கோர் பச்சிலை’ மற்றும் ‘டைனோசர்’ ஆகிய கதைகள் நம் சமகாலத்தைய பதட்டமான செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கத்தை இரு தளங்களில் பேசுகின்றன. ஒன்று நம்முடைய அன்றாட வாழ்வோடும், மற்றொன்று கற்பனைத் தளம் ஒன்றிலும் நிகழ்கிறது எனினும் பிந்தைய கதை நினைவு, கடந்து சென்ற காலத்தின் இழப்பு, மனிதர்களின் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் ஓயா முனைப்பு இவற்றைப் பேசுகின்றன என்பதோடு ஒரு பெண்ணை மையக்கதாபாத்திரமாகக் கொண்டிருப்பது சிறப்பு. பெரும்பாலான கதைகளில் பெண்கள் மையக்கதாபாத்திரங்களாக இல்லாத குறையை இக்கதை நீக்குகிறது.

‘இணை’ ஓர் இன்ப உலகக் கற்பனை நிறைவேறாமல் போவதை விவரிக்கிறது. ‘கால வெளியிடைக் கண்ணம்மா’வின் இரண்டாம் பகுதி அபாரமான மொழிநடையில் எழுதப்பட்டு, தமிழில் ஒரு நல்ல அதிபுனைவு நாவல் சாத்தியம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. ‘மாடுகளும் ராக்கர்ஸும்’ தொன்ம உருவாக்கம், நிலவும் சமூகப் படிநிலை இவற்றை விரிவாகப் பேசுகிறது.

போட்டிக்கான கதைகளை எழுதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அறிவியல் புனைவெழுத்தில் நல்ல முன்னேற்றம் நிகழ்ந்திருப்பதை அறிவதற்கான வாய்ப்பை அளித்தவர்கள் அரூ குழுவினர். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.


ஓவியம்: டிராட்ஸ்கி மருது

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்