கதை

பொம்மையூர்

5 நிமிட வாசிப்பு

அந்த ஊரில் யாரும் முகங்களை அணிவதில்லை. சாம்பல் பூத்த அம்மண்ணில் பெரும்பாலும் முகங்கள் விலைபோவதில்லை. ஆனால் நினைவுகளின் ஆழத்தில் எல்லாருக்கும் ஒரு முகமிருந்தது.

அந்த எண்ணம் வரும்போதெல்லாம் உடல் நடுக்கமெடுக்கும். கனவிலிருந்து விழித்துக் கொள்வான். ஆகாசத்தையும் வானத்தையும் வெறித்துப் பார்ப்பான். இயற்கையும் தான் எங்கோ தொலைத்த முகத்தைத் தேடிக்கொண்டு இருப்பதாகத் தோன்றும். பாதரசம் மங்கிப்போன கீறல்விட்ட கண்ணாடித் துண்டொன்றில் தன் முகத்தைப் பார்த்தான். அந்த மங்கலான முகம் அவனுடையதைப் போல் தோன்றவில்லை. எதுக்கும் உதவாத தனக்குப் பரிச்சயமற்ற இந்த முகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினான். சாலைப் புழுதிக்குள் கால்கள் புதைந்து போயின. உயிராற்றல் வியர்வையாய் வடிந்து கொண்டிருந்தது. நூற்றாண்டு கடந்த ஆலமர விழுதுகளாய் வெற்றுக் கால்கள் பூமியில் படர ஒற்றை மூட்டையில் தன் வாழ்நாள் உடமைகளைச் சுமந்து போகும் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டான்.

அவனிடம் துருபிடித்த தகரப்பெட்டி ஒன்றிருந்தது. தேவையற்ற ஒரு சொல்லும் பேசாத பொம்மைகள் நிறைந்த பெட்டி அது. மனிதர்களைப் போல் இல்லாமல் கட்டிட இடிபாடுகளிலும் எந்தச் சிரமுமின்றி அவைகளால் பறக்க முடியும்… குதித்தோட முடியும்… தயக்கப்படாமல் சந்தோஷமாகச் சிரிக்க முடியும்… நினைவுகளைக் கட்டிபிடித்து உறங்க முடியும்… கனவுகள் அச்சுறுத்தாத உறக்கம் பொம்மைகளுக்கு வாய்த்திருந்தது.

உறக்கம் துளைக்காத இரவு கனவுகளில் பொம்மைகள் சொன்ன கதைகளைக் கேட்டபடி படுத்துறங்கும் மகள் சொன்னது நினைவு வந்தது…

“பொம்மைகள் சொல்லும் கதைகளின் கடவுள்கள் அவதரிப்பதில்லை. அது மனிதக் கால்தடம் பதிந்திராத பூமிக்காடு…” என்பாள் கையில் இருக்கும் பஞ்சு புதைந்த பொம்மைத் தலையை நீவியபடி…

பசுமை மாறாத அடர்ந்த கானகம்தான் அவள் சொன்ன பொம்மைகளின் உலகம். அங்கு எப்போதும் இரவுப்பூச்சிகளின் சத்தம் கேட்டபடி இருக்கும். ஓநாய்க் கூட்டங்கள் சத்தமாக ஊளையிடும். வனப்பட்சிகள் சுதந்திரமாய்ச் சிறகடிக்கும். தனக்கும் அந்தக் கானகத்தில் அழகிய வெள்ளை முயலாகத் திரிய வேண்டும் என மகள் சொன்னபோது பொம்மைகள் கூட்டாக அவளைப் பார்த்துச் சிரித்ததாகச் சொல்வாள்.

“மகளே! பொம்மைகளின் கைபிடித்து அலைந்து திரியாதே! பொம்மைகளுக்கு போர் நிலத்தின் ஆபத்துகள் தெரியாது. கன்னிகளில் அதன் கால்கள் சிக்காது.. குண்டு வீசும் இரும்புப் பறவைகளைக்கூடப் பொருட்படுத்தாது. இரையைத் தவற விடா அதன் வேட்டையிலிருந்து தப்பிக்கப் பதுங்குக் குழிகளைத் தேடியலைந்த அனுபவமும் பொம்மைகளுக்குக் கிடையாது…” எனப் பலமுறை எச்சரித்திருக்கிறான்.

ஆனால் என்றுமே அவள் பொருட்படுத்தியதில்லை.

வெடித்துச் சிதைந்த கட்டிடங்களின் குண்டு பாய்ந்த துளைகளினூடே இருண்ட வானில் சிவப்பு விளக்குகள் மின்னுவது தெரிந்ததும் கையில் பொம்மையோடு வீதியில் இறங்கி ஓடத் தொடங்கிவிடுவாள். சாம்பல்நிற வானில் இரும்புப் பறவை வட்டமடித்தபடி இருக்கும். இரும்புப் பறவை எங்கு எப்போது முட்டையிடும் என யாருக்குத் தெரியும்? எதிர்பாரா இடத்தில்தான் எப்போதும் உணவுப் பொட்டலங்கள் விழும்.

அதே வீதியில் கால்பந்து விளையாடிப் பழகிய சிறுவனோடு இவளும் இடிபாடுகளுக்கிடையே விழுந்தெழுந்து ஓடுவாள். பசித்த உடல்களுக்கு எப்போதும் இளைப்பதில்லை.

“உனக்கு எதுக்கு இத்தனை உணவுப் பொட்டலங்கள்?” மூச்சிரைக்க ஓடியபடியே கேட்டான் சிறுவன்

“என் பொம்மைகளும் பசியோடு இருக்கின்றன…” என்பாள்.

அன்றைய இரவு வயிறு நிறைந்த சந்தோஷத்தில் சிறகுகள் முளைத்த பாறைகள் பற்றியும் நீண்ட வால் கொண்ட ஆதிமனிதர்கள் பற்றியும் பொம்மைகள் அவளுக்கு ஏராளமான கதைகள் சொல்லின. மனிதர்கள் அப்போது ஒருவருக்கொருவர் வாலை வைத்துதான் தாக்கிக்கொண்டனராம். இருந்த இடத்திலேயே நின்றபடி வாலைச் சுற்றி வீசியும் இல்லை மரத்தில் தலை கீழாக வாலில் தொங்கியபடியும் சண்டை போட்டுக்கொண்டனர்.

“அப்பா! வால் மறைந்துபோன பின்தான் மனிதனுக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது…” என பொம்மைகள் சொன்ன கதைகளை அப்பாவிடம் கூறினாள்.

இரண்டு பக்கமும் இடிந்து சிதறிக் கிடக்கும் காரைச் சுவர்களும் செங்கல் குவியல்களும் வீதியின் பாதையை அடைத்திருந்தது. தூரத்தில் விழும் எரிநட்சத்திரத்தைப் பார்த்தபடி அவனும் தலையசைத்தான்.

உருக்குலைந்து கிடக்கும் சிமெண்ட் குவியலுக்குள் கையில் சிதைந்த பொம்மையோடு மகளின் உடல் கிடந்ததைப் பார்த்த அன்று அவளும் ஒரு பொம்மையாகவே தெரிந்தாள். அதுவே உண்மையாக இருக்கவும் வேண்டிக்கொண்டான். ஏனென்றால் பொம்மைகள் மரணிப்பதில்லை.

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

அப்படியான சாகாவரம் பெற்ற மகளின் பொம்மைகளைத்தான் தொலைத்துவிட்டான். அவனைப் போல் பொம்மைகளைத் தேடியலையும் பலரோடு அவனும் சேர்ந்துகொண்டான். ஆனால் பிரச்சனையே ஒரேபோன்ற முகமாக இருக்கும் இவர்களை எப்படி பொம்மைகள் அடையாளம் கண்டுகொள்ளும்? சிறு வட்ட துளைகளின் பின்னால் அலையும் கருமணிகளில் எது தன் உரிமையாளரின் முகம் எனப் பிரித்தறிய பொம்மைகள் இன்னும் பழக்கப்பட்டிருக்கவில்லை.

இழந்த முகத்தைக் கண்டடையாமல் என்றைக்கும் பொம்மைகள் வாய்க்கப்பெறாது. அப்போது மறுமையில் கதைசொல்லி உறங்க வைக்க பொம்மைகள் இல்லாமல் போய்விடும். இதற்காகவே தன் முகத்தை மீட்க நீண்ட வரிசையில் அவனும் போய்க் காத்திருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவ்வரிசையில் நிற்கும் அத்தனை பேருக்கும் ஒரேமாதிரியான முகங்கள், வரிசையாக நடப்பட்ட கல்லறைத் தோட்டத்து நடுகற்களைப் போல்… விலங்குகளும் வனப்பட்சிகளும் ஏன் வன தேவதைகளும் கூட அந்த வரிசையில் உண்டு. ஒவ்வொன்றும் தன்னுடைய ஆதி முகத்தைப் பற்றிய பழங்கதைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொற்கள் தீர்ந்துபோகும் வரை…

தன்னைச் சுற்றித் தென்படும் ஒரே மாதிரியான முகங்களைப் பார்க்க அவனுக்கு உள்ளூர நகைப்பாக இருந்தது.

“முட்டாள்களே! என் முகம் உங்களுடையதைப் போல் நகல் செய்ததல்ல… தனித்துவமானது!” என்று உரக்கக் கத்தினான்.

கூட்டம் அவனை உற்றுப் பார்த்துச் சிரித்தது.

சப்தம் கேட்டு எட்டிப் பார்த்த கடவுள் அவனை வரிசையிலிருந்து விலகி முன்னே வரச் சொன்னார். தன் வரைப்பலகையின் எதிரே இருக்கும் மரநாற்காலியில் அவனை அமரச் செய்தார். நூறு ரூபாய்க்குக் கறுப்பு வெள்ளை ஓவியமாய்ப் பத்து நிமிடத்திற்குள் எதிரே அமரும் உருவத்தை வரைந்து கொடுக்கும் கடவுளுக்கு, முகங்கள் அத்தனையும் சுருங்கியும் நீளும் கணக்கில்லா கோடுகள் மட்டும்தான்.

அவரைப் பொறுத்தவரை முகமென்பது குறுக்கும் நெடுக்குமாய்க் கிறுக்கப்பட்ட பல கோடுகள். உதடு விரியச் சிரிக்கும் போதும் ஒரு புள்ளியாய் குழைத்தும் மேலும் கீழும் அசைத்துப் பேசும் போதும் புருவத்தை உயர்த்தி வெறிக்கும் போதும் சோகத்தில் நெற்றி சுருக்கும் போதும் கண்கள் கோபத்தில் சிறுக்கும் போதும் எல்லாமே வெறும் கோடுகள்! அவ்வளவே!

தான் தொலைத்துவிட்ட முகத்தை வரைந்து மீட்டுத் தரும்படி கடவுளிடம் கேட்டான். அவர் வரைந்து கொடுக்கப் போகும் தன் முகத்தின் சுருக்கங்களை ஆசைதீர எண்ணிப் பார்க்க வேண்டும். தன்னை மீண்டும் அடையாளம் காண உதவுவதில் கடவுளுக்கு அத்தனை சிரமம் இருக்காது என்றே நம்பினான்.

அழியா காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த நரியின் முகம்தான் தன்னுடையது என்றான். பசித்தால் மட்டுமே வேட்டையாடும் அம்முகத்தைத் திருப்பித் தரும்படி கடவுளிடம் கெஞ்சினான். கூரிய நகங்களும் மினுங்கும் கண்களுக்காக மன்றாடுபவனைக் கடவுள் அலட்சியமாகப் பார்த்தார்.

அமைதியாக அமர்ந்திருக்கும்படி செய்கை செய்தார். தன் முகத்தின் பிடித்த பிம்பத்தை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து முதுகை நிமிர்த்தி முடிந்தமட்டும் சிரித்தபடி அமர்ந்துகொண்டான். பல நிமிட யோசனைக்குப் பிறகு குட்டையும் நெட்டையுமான பல கறுப்பு பென்சில்களில் ஒல்லியானதொன்றைத் தேர்ந்தேடுத்துக் கடவுளும் அவனை வரையத் தொடங்கினார். எப்போதும் போல் புருவத்திலிருந்தே தொடங்க நினைத்தார். சரிந்து இறங்கும் மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்து பென்சிலின் பின்புறத்தால் கன்னத்தில் இரண்டு மூன்று முறை தட்டியபடி அவனை உற்றுப் பார்த்தபடியே இருந்தார். அப்படியே பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். எதிரே பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளைத் தாளில் அவரால் முகத்தின் ஒரு கோடைகூட வரைய முடியவில்லை…

அவன் பொறுமை இழக்கத் தொடங்கினான்.

கடவுள் தயங்கி தயங்கி மெல்ல சொன்னார்…

“உண்மையைச் சொல்லப்போனால் இங்கு யாரும் முகங்களோடு பிறப்பதில்லை!”

தன் தகரப்பெட்டியைத் திறந்து கோரமான பற்கள் கொண்ட முகமூடியை அவனிடம் நீட்டினார்.

கூட்டம் சலசலத்தது. கூக்குரல்களும் முணுமுணுப்புகளும் வலுத்தன.

“அவனை நம்பாதே.. அவன் ஒரு போலி. அவன் அணிந்திருக்கும் கடவுள் முகமூடியும் களவாடப்பட்டதே…”

கடவுள் தன் தகரப் பெட்டியில் இருக்கும் முகமூடிகள் அத்தனையும் கூட்டத்தை நோக்கி வீசி எறிந்துவிட்டு மாயமானார். கூட்டம் ஆர்பரித்தது. வசைபாடியது… கால்கள் நிலைகொள்ளாமல் அங்குமிங்குமாகத் திரிந்தன. சுருங்கிக்கொண்டே வரும் பூமிப்பந்தின் மறு எல்லையை நோக்கிக் கூட்டமாக ஓடுங்கள்… அங்குதான் நாம் தொலைத்த பொம்மைகள் அத்தனையும் பத்திரமாகக் குவிந்து கிடக்கின்றன என்றான் கூட்டத்தில் ஒருவன்.

சிலுவைகள் உழுது தீர்த்த பாலை நிலத்தைக் கடந்து எல்லோரும் ஓடினர். நிலம் உழும் கலப்பையின் உறுதியோடும் ஏவுகணைகளின் கூர்மையோடும் இருக்கும் அடிப்பகுதி கொண்ட சிலுவைகள் இடிந்த சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. கைரேகைகளைப் போல் குறுக்கும் நெடுக்குமாக எல்லைக் கோடுகள் பாயும் தேசங்களைக் கடந்து நிற்காமல் ஓடிய கால்களில் பல துவண்டு விழுந்தன. ஆனால் அவனைப் போல் சிலர் ஓயவில்லை.

பொம்மைகள் கதைகளில் வரும் ஒளிபுகா கானகம் இதோ இங்குதான் இருக்கிறது. அங்கு முகமூடிகள் தேவைப்படாது என்றாள் கதைகளைச் சேலையாக உடுத்திய கிழவி ஒருத்தி.

அப்படியானால் என் மகளும் தன் பொம்மையோடு அங்குதான் சின்னஞ்சிறு முயலாக அலைந்து கொண்டிருப்பாள்… என்றான்.

இதைச் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் கால்கள் குள்ளமாயின. உடல் வளைந்து நான்கு கால்களையும் நிலத்தில் ஊன்றி நின்றான். நினைவுகளின் நீட்சியில் வளர்ந்து நீண்ட தன் வாலை அசைத்து ஊளையிட்டபடி நான்குகால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டே கேட்டான்.

“பொம்மைகளின் கனவுலகில் கிழவி நீ என்னவாக மாறப்போகிறாய்?”

அடிவயிற்றில் உறைந்துபோன உயிர்சக்தி முழுதும் மூச்சுக்காற்றாய்க் கரையும்வரை உரக்கச் சிரித்தபடி கிழவி சொன்னாள்…

சுருங்கித் தொங்கும் என் முலைகள் இரண்டையும் சிறகுகளாக்கி மனுசப் பயல்களுக்கு எட்டாத உயரத்தில் ஒரு காகமாய்ப் பறப்பேன்… எல்லா சாமிகளும் அண்ணாந்து பார்க்கும்படி…


ஓவியம்: டிராட்ஸ்கி மருது

இதழ் 13 பிற படைப்புகள்

விஜய ராவணன் and டிராட்ஸ்கி மருது

சொந்த ஊர் திருநெல்வேலி. 2018 லிருந்து சென்னையில் இயந்திரவியல் பொறியாளராகத் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இவரது ‘காகிதக் கப்பல்’ இடம்பெற்றிருந்தது. சிறுவாணி வாசகர் மையம், குமுதம் கொன்றை, கலை இலக்கியப் பெருமன்றம், காக்கைச் சிறகினிலே, யாவரும் நடத்திய போட்டிகளில் இவரது படைப்புகள் தேர்வாகியிருக்கின்றன. ‘சால்ட்’ வெளியீடாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘நிழற்காடு’ இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பு.

Share
Published by
விஜய ராவணன் and டிராட்ஸ்கி மருது

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago