பகுதாரி

11 நிமிட வாசிப்பு

கோரமங்களாவின் ஒரு பிரசித்தி பெற்ற ப்ரூவரியில் அன்று மதியம் நான் மட்டும்தான் இருந்தேன். அதன் உரிமையாளர் மஞ்சுநாத் எனக்கு நன்றாகப் பழக்கம். அந்த வருடக் கோடை காலத்தில் அவர் அறிமுகம் செய்த மாம்பழச் சுவை கலந்த பியர் மிகப்பிரபலம் பெற்றிருந்தது. நான் அங்கு சென்றதும் என் மேக்புக்கைத் திறந்து முந்தைய நாள் இரவு எழுதிய மென்பொருளில் பிழை நீக்கம் செய்யத் தொடங்கினேன். மஞ்சுநாத் வந்து நலம் விசாரித்தார். ஒரு பைண்ட் மாம்பழ பியர் கொண்டு வந்து தந்தார்.

“என்ன சார் நான் கேள்விப்பட்டது நிஜம்தானா. ஊர் முழுக்க உங்க செய்திதான். ஒரு பெரிய இன்வெஸ்டர் உங்க கம்பெனிக்கு முதலீடு பண்ணப் போறார்ன்னு கேள்விப்பட்டோம். வாழ்த்துகள்,” என்றார்.

“தேங்க்ஸ் மஞ்சு. இன்னும் நிறைய வேலை இருக்கு. நீங்க வேற”

“எல்லாம் நல்லா வரும். யு கேரி ஆன். ஐ டிட் நாட் மீன் டு பாதர் யு”

“நோ ப்ராப்ளம். சீர்ஸ்”

பியர் அன்று காலைதான் வடித்து இருந்தார்கள் போல. குளுமையாக ஒரு மிடறு உள்ளே சென்றதும் உடல் கதகதப்பானது. அடி நாக்கில் தசேரி மாம்பழத்தின் சுவை இஞ்சியது. மனது இதமானது

ரஜத் அகர்வால் அங்கு வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். அவன் வரும் வரை வேலையை முடிக்கலாம் என்று மூழ்கினேன். மஞ்சு ஒரு இசைப் பிரியர். அச்சமயம் ஓர் இசைக் குழு கர்நாடிக் ப்ராக்ரெசிவ் ராக் என்று ஒரு புது பாணியை உருவாக்கி இரண்டு ஆல்பங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில் ஒரு நளினகாந்தி பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் பாணியில் மிகச் சிறந்ததாகத் தோன்றியது. மென்பொருள் பிழை நீக்கும் வேலையை நிறுத்திவிட்டு அந்தப் பாடலை இணையத்தில் தேடித் தரவிறக்கி ‘பகுதாரி’யின் டேட்டா லேக்கில் ஏற்றினேன். அப்பாடலை ரசித்துக்கொண்டே இரண்டு மிடறு குடித்தேன். அழகிய பாடல். வெறும் ஒலிதான், அதுவே குறிப்பிட்ட ஸ்வரத்தில், ஏற்ற இறக்கக் கணக்குகளில் சில அழகியல் விதிகளில் பூட்டினால் ஓர் உணர்வாகிறது. ஒலியை வைத்துப் போடும் கணக்குதான் இது. கணக்குகளின் உச்சம் அதே உணர்வு உணர்வெழுச்சி ஆகி ஒரு மனிதனை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அந்த மாயக் கணக்கைத் தேடித்தான் என் வாழ்க்கையின் பாதியைச் செலவிட்டிருக்கிறேன். செயற்கை நுண்ணறிவு கொண்டு அதன் உச்சபட்சப் பாய்ச்சலை எட்டிவிட முடியுமா என்று நொடிக்கு நொடி அதே சிந்தனையுடன் உலவிக்கொண்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் பகுதாரி – ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் திறன் கொண்டு அந்தக் கணக்கை என் மென்பொருள் இடைவிடாது போட்டுக்கொண்டிருக்கும்.

ரஜத் தாமதமாக வந்து சேர்ந்தான். அவன் வந்ததும் மஞ்சுநாத் அதே பியர் ஒரு பைண்ட் கொண்டு வந்து தந்தார். ரஜத் வந்தவுடனே தன் லேப்டாப்பைத் திறந்தான்

‘ஒரே நிமிஷம். இந்த மெயில் மட்டும் அனுப்பிடறேன்’ என்று கூறிவிட்டு விசைப் பலகையில் வேக வேகமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதும் நீளத்தைப் பார்த்தால் யாரையோ திட்டி எழுதுகிறான் போல இருந்தது.

‘அமேசான்காரனுக்குத்தான் எழுதறேன். கிளவுட் சர்வர் பில் கட்ட இரண்டு நாள் தாமதம் ஆனதுக்காக டிஆக்டேவேட் பண்ணிட்டான். ப்ளடி ப்ரிக்.’

ரஜத் என் பள்ளி நண்பன். சென்னை கேந்திரிய வித்யாலயத்தில் ஒன்றாகப் படித்தோம். IISCல் நான் இளங்கலை முடித்து மேற்படிப்புக்குத் தயார் செய்துகொண்டிருந்தபோது அவனுக்கு ஜாம்ஷெட்பூரில் எம்பிஏ சீட் கிடைத்தது. சில வருடங்கள் தொடர்பில் இல்லை. மீண்டும் இங்கிலாந்தில் இருந்தபோது பார்த்துக்கொண்டோம். கேனரி வார்ஃப் சதுக்கத்தில் ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருந்தான். நான் கேம்பிரிட்ஜ்ல் இருந்து ரயில் பிடித்து லண்டன் சென்று அவனைப் பார்ப்பேன். பணத்தைப் பற்றியே பெரும்பாலும் பேசிக்கொண்டிருப்பான். அதை விட்டால் உணவு. எண்களும் கணக்குகளும் நிறைந்த அந்த நாட்களில் மனித ரூபத்தில் நான் சந்தித்த, பேசிய சிலரில் அவன் ஒருவன். பகுதாரியின் வேலைகளை அப்போதே ஆரம்பித்து இருந்தேன். ஒரு நாள் அவனிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் பொறுமையாகக் கேட்டுவிட்டு “இதை ஏன் ஒரு பிராடக்ட்டாக மாற்றக் கூடாது? ஏ.ஐ மற்றும் மியூசிக் இது ரெண்டும் சேர்ந்து இருக்கற அப்ளிகேஷன்கள் மிகக் குறைவு. யோசிச்சுப் பார். யூசர் பயன்பாட்டுக்குத் தகுந்த மாதிரி சில ஃபீச்சர்கள் சேர்த்து விட்டுட்டா போதும்”. நான் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. என் புரொபெசர் சிபாரிசு செய்து கேம்ப்ரிட்ஜ் கல்லூரி என் ஆராய்ச்சிக்கும் இந்த ப்ராஜெக்ட்க்கும் பணம் அளித்து ஊக்குவித்தது. கல்லூரியில் ஒரு சிறிய ஒளிக்கீற்றாக ஆரம்பித்த ப்ராஜெக்ட்தான் பகுதாரி.

“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். நம்ம இன்வெஸ்டரைப் பார்த்துப் பேசிட்டுதான் வர்றேன். இன்னும் ஆறு மாசத்துல பீட்டா வெர்ஷன் கேக்கறார். ஒன்பது மாசத்துல ரிலீஸ். யூசர் பேஸ் சேர எப்படியும் குறைந்தது ஆறு மாசமாவது ஆகலாம். அது நடந்தாதான் நாம சந்தா வசூல் பண்ணி பணம் சம்பாதிக்க முடியும். இன்னும் எவ்வளவு நாள்தான் உன் அல்காரிதத்தைத் திருத்தி எழுதிகிட்டே இருக்கப் போற?”

நான் பேசாமல் இருந்தேன்.

“இது உன் யுனிவர்சிட்டி ஃபண்டிங்ல ஓடற ஏதோ ப்ராஜெக்ட் இல்ல. நம்மளோட இன்வெஸ்ட்டர் ஒரு புகழ் பெற்ற பாப் பாடகர். பகுதாரியைப் பற்றி அவரே கேள்விப்பட்டு நம்மை அப்ரோச் பண்ணி இருக்கார். சும்மா எவனாவது ரெண்டு மில்லியன் தருவானா? நீ தயவுசெஞ்சு ப்ராடெக்ட் டெவலப்மெண்ட்ல இறங்கு. ஒரு பத்து டெவலப்பர்களை வேலைக்குச் சேர்த்தா சீக்கிரம் முடிக்கலாம். என்ன சொல்ற?”

“ரஜத் இன்னிக்குத் தேதிக்கு இசைல ஏ.ஐ எந்த உச்சத்தைத் தொட்டிருக்கு தெரியுமா? நீ சில ஸ்வரங்களோட ஒரு பாட்டைப் பாடினா அதே ராகத்தை அடித்தளமா எடுத்துக்கிட்டு அந்த ராகத்தோட பிரயோகத்துல சில மாற்றங்களைச் செய்து அந்த சாப்ட்வேர் திரும்பப் பாடும். அது இசையா இல்லையா, கேக்க நல்லா இருக்கா இல்லையான்னு எல்லாம் அதுக்குத் தெரியாது.”

“ஆமா”

“ஏன் தெரியாதுன்னா ஓர் இசையைக் கேக்கற மனிதன் என்ன உணர்றான்னு அதால புரிஞ்சுக்க முடியாது. அதைத் தெரிஞ்சுக்க இசை மனிதனுக்குள்ள என்ன பண்ணுதுன்னு அதுக்குத் தெரியணும். ஒவ்வொரு மனிதனுக்கும் பரந்துபட்ட இசை அறிவு இருந்தாலும், இசை மனிதனுக்குள்ள உண்டு பண்ற உணர்வுகள் உண்மை. அவனோட புரிதலுக்குத் தகுந்த உணர்வையோ உணர்வெழுச்சியோ அது தரும். இது எல்லாத்துக்கும் ஆதியான விஷயம் என்னன்னா சப்தங்கள்ல எது இசை ஆகும் எது இசை ஆகாதுன்னு தெரிஞ்சுகிட்டு, ஓர் இசை எப்படி உணர்வாகும், எப்படி வெவ்வேறு இசை வெவ்வேறு உணர்வை உண்டு பண்ணுதுன்னு புரிய ராகங்களோட ஸ்வரங்களோட விதிகளை மட்டும் ஒரு மென்பொருள் தெரிஞ்சுகிட்டா போதாது. அதையும் தாண்டி மனிதர்களையும் தெரிஞ்சுக்கணும். அதை இணைக்கிற ஒரு சரடைத்தான் நான் தேடிட்டு இருக்கேன்.”

“நீ தேடு வேண்டாம்னு சொல்லலை. ஆனால் இதுக்கெல்லாம் பணம் வேணும்ங்கறத மறக்காதே. பகுதாரியோட ஏ.ஐ என்ஜின் ஓட கிளவுட்ல இடம் வேணும். அது எப்படி சும்மா வரும்? அது போக நீ பண்ற ரிசர்ச் செலவு எல்லாம் நம்ம ஃபண்டிங்ல இருந்துதான் எடுக்கறோம் தெரியும்ல. போன வாரம் ஸ்ரீரங்கம் போனே ஏகாந்த சேவை இசையைப் பதிவேற்றம் பண்ணனும்ன்னு. போன மாசம் ராஜஸ்தான் போய் பன்வாரிதேவியோட நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு பண்ணிட்டு வந்தே. யு ஆர் பர்னிங் கேஷ். டு யு நோ தட் காட் டேம்இட்? நான் கேக்கறது ஒன்னுதான், இருக்கற அல்காரிதம் வச்சு ஒரு ப்ரோடோடைப் பண்ணிக் குடு. நான் எஞ்சினியர்களை வேலைக்கு வெச்சு ஆப்ஸ் டெவெலப் பண்ணிக்கறேன். பகுதாரி இப்போ இருக்கற வெர்ஷன்லையே புதுப் பாடல்கள் கம்போஸ் பண்ற அளவுக்கு இருக்குதானே. இப்போ மார்கெட்ல இது கிட்டகூட எதுவும் வர முடியாது. நேரம்தான் பிராதானம் இங்க. நாம தாமதம் பண்ணப் பண்ண வேற யாராவது பகுதாரில உள்ள பாதித் திறன்களை வைத்தே ஒரு ஆப் இறக்கினாலும் ஜெயிச்சுடுவான். அப்பறம் நாம ஒன்னும் பண்ண முடியாது.” என்று படபடப்போடு பேசி முடித்தான் ரஜத்.

“ரஜத் நான் கிட்டத்தட்ட நெருங்கிட்டேன். எனக்கு இன்னும் டெஸ்ட் டேட்டா வேணும். அதுக்குத்தான் நான் மாங்கு மாங்குன்னு அலையறேன். பகுதாரி திறம்பட இயங்க எனக்கு ஒரு நாளைக்குப் பல நூறு கிகாபைட்ஸ் மெமரி அளவு உதாரணங்கள் வேணும். ஒவ்வொரு நொடியும் அது கத்துகிட்டு இருக்கு. இசையைக் கேட்டதும் ஒரு மனிதன் மனதில் எப்போ டோபமைன் சுரக்கும், அது ஓர் உணர்வா எப்படி வெளிப்படும்ங்கிறதை நோக்கித்தான் என் தேடல் இருக்கு. ஒரு சில சமன்பாடுகளுக்கு மட்டும் டேட்டா பதில் சொல்லிட்டா இது மென்பொருள் நுண்ணறிவுத் துறைல கண்டிப்பா ஒரு மைல்கல் ஆகும். இந்நேரத்துல நீ சொல்ற ப்ராடெக்ட் டெவலப்மென்ட்ல நான் வேலை செஞ்சா என்னால இதை முடிக்க முடியாது. நான் ஒழுங்கா தூங்கி மாசக்கணக்கு ஆச்சு. கனவுகள்ல கூட ஒலி இருக்கற மாதிரி இருக்கு. சில சமயம் புத்தி பேதலிச்சவனாட்டம் சுத்திகிட்டு இருக்கேன். ஆனா ஏதோ ஓர் உள்ளுணர்வு சொல்லுது நான் நெருங்கிட்டேன்னு.”

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு யு சிக் பாஸ்டர்ட். ஒரு வருஷம் முன்னாடி நான் ஒரு இன்வெஸ்ட்மென்ட் பேங்க்கர். சென்ட்றல் லண்டன்ல ஒரு அப்பார்ட்மென்ட், பையனுக்கு ப்ரைவேட் ஸ்கூல்ன்னு எல்லாத்தையும் விட்டுட்டு உன்னோட இதுல குதிச்சிருக்கேன். என்னோட காண்டேக்ட்ஸ் வச்சு உனக்கு ஃபண்டிங் வாங்கினேன். உனக்கு பிராடெக்ட் ஹெட்டா, சேல்ஸ்மேனா மாங்கு மாங்குன்னு உழைக்குறதுக்கு நீ காட்டுற நன்றியா இது? ஃபைன், உனக்கு நாற்பது நாள் டைம். என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ. அதுக்கு அப்புறமும் இதே கதையைச் சொன்னா நான் திரும்ப லண்டனுக்கே போறேன். என்னை மறந்துடு” என்று கூறிவிட்டு ஒரே மிடறில் பியரை அருந்திவிட்டு அங்கிருந்து எழுந்தான் ரஜத்.

அந்தச் சந்திப்பு முடிந்து மூன்று வாரங்களாக நான் பித்து பிடித்தவன்போல் மென்பொருள் எழுதிக்கொண்டிருந்தேன். களைத்த போதெல்லாம் மனித மூளையைப் பற்றிப் படிப்பேன். பல்கலைக்கழகங்களில் மட்டும் கிடைக்கும் சில மருத்துவ, விஞ்ஞான இதழ்கள்களின் தொகுப்புகள் எனக்கு நண்பர்கள் மூலம் கிடைத்தன. ஒரு நாள் இரவு ஓர் யோசனை வந்தது. பகுதாரியின் நியூரல் நெட்வர்க் கோட் பேசில் சில மாற்றங்களைச் செய்தேன். அதைப் பரிசோதிக்க விரும்பினேன். அப்போது உடனே ரஜத்துக்கு போன் செய்தேன்

“ரஜத் எனக்கு ஒரு சின்ன பரிசோதனை செய்யணும். பகுதாரியை ஓர் இசைக் கலைஞருடன் சரிசமமாகக் கச்சேரி செய்ய வைக்க வேண்டும். அதுக்கு சரியான ஃபோகஸ் க்ரூப் வேணும். அதனால பெருநகரங்கள் வேண்டாம். நாம சத்தியமங்கலம் போகணும்.”

“உனக்கு வெவஸ்தையே இல்லையா. நடு ராத்திரி மூணு மணிக்கு போன் செய்து சத்தியமங்கலம் போகணும்ன்னு சொல்ற. அந்த ஊர் எங்க இருக்குன்னே தெரியாது. ஃபோகஸ் க்ரூப் வேணும்னா ஒரு நல்ல மார்கெடிங் கன்சல்டன்சி கிட்ட சொல்லி பண்ணிக்கலாமே. எதுக்கு அந்த ஊர்?”

“எனக்கு ஒரு லைவ் ஆடியன்ஸ் வேணும். இயற்கையான கூட்டம். சங்கீதம் தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு இரண்டு தரப்பும் வேணும். எனக்குத் தெரிஞ்சு ஒரு பாகவதர் இருக்கார். அவர் கிட்ட நாளைக்குப் பேசி நான் எல்லா ஏற்பாடையும் பண்ணிடறேன். இந்தப் பரிசோதனை வெற்றி அடையலாம், படுதோல்வியும் அடையலாம். தோல்வி அடைஞ்சால் அந்தச் செய்தி பெங்களூர் வரைக்கும் வரக்கூடாது.”

“சரி. இதுல நான் என்ன பண்ணனும்?”

“என் கூட இரு போதும்.’

நானும் ரஜத்தும் பாகவதரைச் சந்திக்கச் சென்றோம். ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு தோட்டமும் அதை ஒட்டியே வீடும் அமைந்த ஒரு ரம்மியமான இடம். சர்வீசில் இருந்தபோது இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே வர வேண்டும் என்று சத்தியமங்கலத்துக்குக் குடிபெயர்ந்தார். ஏகாதசி பஜனை, சீதா கல்யாணம் எல்லாவற்றுக்கும் ஆஸ்தான வித்வான் ஆகி இருந்தார்.விமானப்படையில் வானியல் துறையில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்தார். வானிலையைக் கணிக்க அவர் எழுதிய கணக்குகள் இன்றும் இயங்குகிறது என்று கூறுவார். அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தோம்.

“சார் போனில் பேசிய விஷயத்தப் பற்றிப் பேசலாம்னு வந்தோம். நாங்க ஏ.ஐ திறன் கொண்ட ஓர் இசை மென்பொருளை உருவாக்கி இருக்கிறோம். அதன் பெயர் பகுதாரி. நீங்களும் பகுதாரியும் சேர்ந்து ஒரு கச்சேரி பண்ணினா நல்லா இருக்கும்ன்னு நினைக்கறேன்.”

“என்னப்பா விந்தையா இருக்கு. இது எப்படி கச்சேரி பண்ணும்? ஏற்கனவே ரெக்கார்ட் பண்ண பாடலைத் திரும்ப பாடுமா?”

“இல்லை சார். ராகத்தை ஆலாபனை பண்ணும். நீங்க பாடற பாடலை அதுவே சங்கதி அமைச்சு மெருகேத்தும். ஒரு ஜுகல்பந்தி மாதிரின்னு வெச்சிக்கோங்களேன்”

“சரி இதுக்குக் குரல் இருக்கா?”

“இல்லை, இசைக்கருவிகள்தான் ப்ரோக்ராம் பண்ணி இருக்கோம்”

“ஒரு முன்னோட்டம் பார்க்கலாமா. எங்க காமிங்க?”

என் மேக்புக்கைத் திறந்து, பகுதாரியை இயக்கினேன். யூசர் இன்டர்பேசில் எதுவும் இல்லாததால் ஸ்க்ரீன் முழுக்க புரியாத எழுதுகளைப் பார்த்தார்.

“பாடுங்க சார்” என்றேன்

தொண்டையைக் கனைத்துவிட்டு. கல்யாணியில் ஒரு சிறிய ஆலாபனை செய்தார். அவர் பாடியதை அப்படியே திரும்பி வயலினில் இசைத்தது. அவர் இன்னும் சில நிமிடங்கள் ஆலாபனை செய்ய, பகுதாரியும் அவர் பிரயோகத்தையே வாசித்தது. அவர் மூன்றாவது முறை பாடுவதற்கு முன்பு அதுவே ஓர் அழகிய கல்யாணியை இசைக்க ஆரம்பித்து இருந்தது. அவர் பாடிய அதே சஞ்சாரங்களை அடிநாதமாகக் கொண்டு புதிய மாற்றத்துடன் ராகதேவதையின் இலக்கணத்துக்கு உட்பட்டு மென்மேலும் இசைத்துக்கொண்டே சென்றது. பாகவதர் வியந்து போனார். கல்யாணியை நிறுத்திவிட்டு நாட்டக்குறிஞ்சி பாடினார். பகுதாரியும் அவர் பாடியதை எடுத்துக்கொண்டு மென்மேலும் விரிவாக்கியது. அவரும் மேலும் ஆர்வம் கொண்டு மிஸ்ரம் திஸ்ரம் என்று தாளக்கட்டை மாற்றினார். இதுவும் அந்தத் தாளக்கட்டை புரிந்துகொண்டு லய வின்யசத்தில் இறங்கியது.

பாகவதர் மகிழ்ச்சியில் “என்னால நம்பவே முடியலை. எப்படி இது சாத்தியம். இது போடற சங்கதிக்கெல்லாம் கற்பனா சக்தி எது?”

“நீங்கள் பாடினதுதான் சார். அதுவும் மற்ற எல்லா இசைக் கலைஞர்களோட கற்பனையின் கூட்டுத் தொகை. அந்தந்தச் சூழ்நிலைக்குத் தகுத்த பிரயோகங்கள் சரியா இல்லையான்னு இது முடிவு எடுக்கும். மனிதர்களுக்கு என்ன உணர்வை அது கடத்தி இருக்குன்னு கவனிக்கும். இது எல்லாமே நொடிப்பொழுதுல நடந்து முடியும்.”

“அன்பெலீவபிள். அப்போ அபஸ்வரமே வராதா?”

“மனிதத் தன்மையைக் கூட்ட தானாகவே அபஸ்வரத்தைச் சேர்த்துக்கும். அது எப்போன்னு முடிவு எடுக்கறதும் அது கைலதான் இருக்கு.”

“எனக்கு பயமா இருக்கு பா. ஓர் ஆகச்சிறந்த இசை மூளையை எவ்வளவு சாதரணமா உருவாக்கி வச்சு இருக்கீங்க. சரி ஓர் இசையை உருவாக்க இதுக்கு என்ன தேவை?”

“சூழல். மனிதர்கள். அவர்களின் உணர்வு. இது மூன்றும் உணவா உண்டு கிரகிச்சு இசையை உருவாக்கும். இப்போதைக்குக் கர்நாடக சங்கீதம் அடிப்படை. ஆனால் இதை வைத்தே மற்ற இசை பாணிகளையும் பயிற்றுவிக்கலாம். உங்க கச்சேரிதான் இதுக்கு Turing test”

கச்சேரியை அந்த வாரத்தில் வந்த ஏகாதசியில் வைக்க முடிவு செய்தோம். கச்சேரியைக் கோவில் அருகமையில் ஒரு மேடை கட்டித் தெருவில் வைக்கலாம் என்று முடிவு. ஒரே ஒரு சுவரொட்டியை மட்டும் கோவில் சுவற்றில் ஓட்டினோம். ‘பாகவதரும் பகுதாரியும்’ என்றும் மட்டும் சுவரொட்டியில் போட்டிருந்தது. அது போக இடம் நாள் மட்டும். சவுண்ட் சர்வீஸ்க்கு பெங்களூரில் இருந்து ஓர் இன்ஜினியரைக் கூட்டி வந்தோம். ஒரு விலை உயர்ந்த நாய்ஸ்கேன்சலிங் மைக்ரபோன் பாகவதர் அருகில், மற்றும் அவட்புட் ஸ்பீக்கருக்கு மேக்புக்கில் இருந்து ஒரு வையர். அது போக மேடையின் இருபக்கத்தில்லும் HD வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் இணைப்பு பகுதாரியின் இன்புட்டுக்குச் சென்றது. கச்சேரி அன்று பாகவதர் ஒரு மணி நேரம் முன்னமே வந்தார். என்ன பாடப் போகிறோம் என்று நாங்கள் அதுவரை கேட்காதது அவருக்கும் மிருதங்க வித்வானுக்கும் ஒரு வித அங்கலாய்ப்பை ஏற்படுத்தியது. நீங்கள் எது வேண்டுமானாலும் பாடுங்கள் என்று சொல்லி இருந்தோம். அவர்கள் இருவரும் என்ன பாடப் போகிறோம் என்று பேசி வைத்திருந்தார்கள். நல்ல கூட்டம் கூடிக்கொண்டு இருந்தது. வேடிக்கை பார்க்க பலர் வந்திருந்தனர். முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்த சிலருக்கு நன்றாகச் சங்கீதம் தெரியும் என்று பாகவதர் செய்கை காட்டினார். பாகவதர் தன் இடத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்கு அருகில் ஒரு லேப்டாப்புடன் என் இருக்கை. நான் மைக்கைப் பிடித்து முதலில் மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கு என்ன நடக்கப் போகிறது என்று சொன்னேன். உயிருள்ள ஓர் ஆள் லேப்டாப் வழியாக பாகவதருடன் வீணை வாசிப்பதாய் நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த லேப்டாப் ஒரு சக்திவாய்ந்த டேப் ரெக்கார்டர் அல்ல என்று சொன்னேன். மக்களிடையே ஓர் பேரமைதி நிலவியது.

விநாயகர் துதியுடன் பாகவதர் ஆரமித்தார். ஆரம்பத்தில் சில பாட்டுகளுடன் ஆரம்பித்தவர் போகப் போக ராக ஆலாபனையில் இறங்கினார். பகுதாரியும் அவருடன் இணைந்தும் பிரிந்தும் ஒரு ராகத்தில் சஞ்சரித்தது. அவர் பூபாளம் பாடியபோது பகுதாரியின் ஏஐ இஞ்சினின் செயல்திறன் பன்மடங்கு விரிவடைந்தது. சர்வர்களின் பயன்பாடு கிட்டத்தட்ட முழுமை நோக்கி ஓடியது. பேக்கப்புக்காக இருந்த சர்வர்களின் மெமரியையும் விழுங்கி இயங்கியது. பாகவதர் திடீரென்று பாடுவதை நிறுத்தி பகுதாரியை மெய் மறந்து ரசித்துக்கொண்டிருந்தார். மேடைக்குக் கீழ் இருந்த மக்கள் யாவரும் அசையவும் இல்லை. கேமராக்கள் மூலம் மக்களின் முக பாவனைகள், அசைவுகள், கண் இமைத்துடிப்பு இவை யாவும் பகுதாரிக்கு உள்ளீடாகச் சென்றன. பகுதாரி இயக்கத்தின் அடிநாதம்தான் எடுக்கும் ஒவ்வொரு படிக்கும் அங்கீகாரம் எவ்வளவு என்று பார்த்து அக்கணத்தின் உச்சபட்ச அங்கீகாரம் கிடைக்கும் முடிவையே எடுக்கும். அப்போது வரை புன்முறுவலாக, ஆச்சர்யமாக, சொக்கவைப்பதாக இருந்த முக பாவனைகள் மாறத் தொடங்கி இருந்தன. நடவு வேலைக்குச் சென்று திரும்பிய மக்களில் சிலர் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைக் கண்ட பகுதாரி தன் இயக்கத்தின் உச்சவரம்பைக் கண்டுகொண்டதும் அப்போதுதான். அரை மணிநேரமாக அந்த இயக்கம் நடந்துகொண்டிருந்தது. மிருதங்க வித்வானும் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் நிறுத்திவிட்டார். நான் சர்வர் பயன்பாட்டையே கவனித்துக்கொண்டிருந்தேன். இப்படியே இன்னும் பத்து நிமிடத்துக்கு மேல் சென்றால் ஒரு மாயச் சுழற்ச்சியில் சிக்கிக்கொண்டு டேடாபேஸ் எல்லாம் லாக் ஆகிவிடும் அபாயமும் இருந்தது.. அது போக வேறு என்ன நடக்கும் என்று என்னாலும் கணிக்க முடியவில்லை. தீரப் பசிகொண்டு பார்த்ததை எல்லாம் புசிக்கும் அரக்கன் போல மெமரியை பகுதாரியின் மென்பொருள் தின்றுகொண்டு இருந்தது. மக்கள் கொடுக்கும் ஊக்கத்தினால் நிறுத்தாமல் மென்மேலும் பாடிக்கொண்டே இருக்கும் இசைக் கலைஞன் போல ஆகிக்கொண்டு இருந்தது பகுதாரி. எனக்கு அப்போது பகுதாரியின் மென்பொருளை மேலும் செயல்படவிடாமல் நிறுத்துவது தவிர வேறு வழி தெரியவில்லை. வெடுக்கென்று பகுதாரி ப்ரோக்ராமை கில் செய்து சர்வர் கனெக்ஷனைத் துண்டித்தேன். வெடுக்கென்று ஒரு நிசப்தம். நான் என்ன செய்வது என்று தெரியாமல் மேடையில் முட்டாளைப் போல முழித்தேன். பாகவதர் சுதாரித்துக்கொண்டார். மைக்கை ஒரு கையால் மூடி என்ன ஆயிற்று என்று கேட்டார். நான் விளக்கம் கொடுத்ததும் புரிந்துகொண்டார்.

மைக்கில் ” ஒரு சிறிய பிழை ஆனதால் கச்சேரியை இத்துடன் முடிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு பேரனுபவத்தை தந்த இவர்களுக்கு நாம் நம் பாராட்டை தெரிவிக்க வேண்டும்.” பாகவதர் எழுந்து நின்று கை தட்டினார். மக்கள் எல்லோரும் கை தட்டினர். சிறிது நேரத்தில் சலசலப்பு சத்தம் கேட்டது. எனக்கும் ரஜத்துக்கும் பொன்னாடை போர்த்தித் தேங்காய் மூடியும் பழமும் தந்தார்கள்.

லேப்டாப்பை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டிருக்கும்போது பாகவதர் வந்தார்.

“தம்பி. எனக்கு சொல்ல வார்த்தையே வரலை. என்ன ஒரு ஸ்ருஷ்டி இது. இன்னுமே எனக்கு ஆச்சர்யம் அடங்கலை. ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன். நீங்க கவனிச்சீங்களான்னு தெரியாது, பகுதாரி சில இடங்கள்ல விதிமீறல்கள் பண்ணிச்சு. சாஸ்திரப்படி அது சரின்னாலும் நிறைய பாணிகள் பிரயோகத்துல இல்லை. உதாரணத்துக்கு அந்த பூபாளம் நாம பாடறதே இல்லை. அது ஸ்ரீரங்கத்துல ரங்கநாதருக்கு வாசிக்கிறது. ரொம்பத் தொன்மையான பண்ணிசை. அந்தப் பிரயோகத்தை ஏன் தேர்ந்தெடுத்துசுன்னு நீ கண்டுபிடிச்சு சொல்லு. மக்களோட தினசரி வாழ்வில கிடைக்கிற ஒலிதான் இசை ஆகுது. அது ஓர் உணர்வா மாறும்போது பூரணம் அடையுது. இன்னிக்கு நடந்தது அப்படி ஒரு பூரணமான அனுபவம். இசையோட குறிக்கோள் மனித மனத்தை ஒரு தீவிரத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும். ராகத்தோட கணக்கு வழக்குல மேதாவித்தனம் காட்டறதுலயே மனிதர்கள் குறியா இருக்காங்க. ஒரு மிஷின், இசையைப் பற்றிச் சரியாய்ப் புரிஞ்சுக்க ஆரமிச்சுடுச்சு. சந்தோஷம்”

ரஜத் இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். பகுதாரியின் முழுமையான திறனை அவன் பார்த்ததும் அன்றுதான். இன்வெஸ்டருக்கு அனுப்ப சில புகைப்படங்களை செல்போனில் எடுத்துக்கொண்டிருந்தான். அப்போது அவனை ஒருவர் கூப்பிட்டார். வயல் வேலை முடிந்து கச்சேரி கேக்க வந்திருந்தார் என்று தோளில் மாட்டியிருந்த மண்வெட்டி சொல்லியது.

“தம்பி நீங்க கொண்டாந்த கம்பீட்டரு அளகாப் பாடிச்சு. ஒரு செல்ப்போனுக்குள்ள இதை ஏத்திக் குடுத்தீங்கன்னா வயக்காட்டுல பாடசொல்லிக் கேப்போமுல்லா?”

“நானும் அதையேதான் சொல்லுறேன் ஐயா. அப்படியே போயி மேடையில இருக்கிற தம்பிகிட்ட இதையே சொல்றீங்களா?” என்று என்னிடம் அனுப்பி வைத்தான்.


மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்