எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்

4 நிமிட வாசிப்பு

நாம் ஏன் வரலாற்றைப் படிக்க வேண்டும்? அதைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம்? யாரோ ஒருவர் எழுதியதை வரலாறாக எடுத்துக்கொள்வது சரியா? என்று கேள்வி கேட்கும் பலரும் வரலாற்றை ஆராய்ந்து படித்தது கிடையாது என்றே நினைக்கிறேன். சமைக்கத் தெரிந்த ஒருவரிடம் நீங்கள் சாப்பிட்ட உணவில் என்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வினவினால் அவரால் சற்றேறக்குறைய அனைத்துப் பொருட்களின் பெயரையும் சொல்லமுடியும். அதே கேள்வியைச் சமைக்கத் தெரியாத நபரிடம் கேட்கும்போது அவரால் பொதுவானவற்றை ஒழிய வேறு பொருட்களைப் பற்றிச் சொல்லவியலாது.

நாம் வரலாறைப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கென்று ஒரு முழுமையான வரலாற்றுத் தொகுப்பு உள்ளதா என்றால், எதுவும் இல்லை. பின் எவ்வாறு தெரிந்துகொள்வது என்றால், தேடித் தேடி வாசிக்க வேண்டும், ஒன்றைப் பற்றிய பலருடைய கருத்துகளையும் ஆய்வுகளையும் படித்து ஒப்பிட்டு அறிந்துகொள்வதே சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வரலாறு என்று சொன்னாலே நாம் பள்ளியில் படித்த பாடங்கள்தான் நினைவில் வரும். அதில் வரும் காலக்குறிப்புகளை மனனம் செய்வதென்பது மிகவும் அலுப்பு தரும் செயல். அதனாலோ என்னவோ இந்த வரலாறு என்ற சொல்லாடல் மீது ஒருவித வெறுப்பு தொற்றிக்கொள்கிறது. இயல்பாகவே நாம் கதைகள் கேட்பதில் நாட்டம் கொண்டவர்கள், அதுவும் நமது நெருங்கிய அல்லது நமக்கு எதிரானவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதிலும் கேட்பதிலும் அதீத ஆர்வம் கொண்டவர்கள். வரலாறும் அப்படிப்பட்ட ஒன்றுதான், நாம் அதைப் படிக்கப் படிக்க நமது தேடுதலும் ஆர்வமும் நீண்டுகொண்டே இருக்கும்.

சுவைப்பட உரைத்தல் என்பது ஒரு கலை. அதுவும் வரலாற்றைச் சுவையாய்க் கூறுவது எல்லோராலும் முடியாது. ஆனால் எஸ்.ரா-வுக்கு அது ஒரு தனித் திறன்.

உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒரு வரலாறு உண்டு. எல்லாவற்றையும் நம்மால் அறிந்துகொள்ள முடியுமா என்றால் அதற்கு இந்த ஒரு பிறப்பு போதாது. இந்தியா என்று கூறப்படும் இந்த நிலப்பரப்பிற்கும் இங்குள்ள மக்களுக்கென்றும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. ஒருவரால் மொத்தமாக அனைத்தையும் தொகுத்து வழங்க முடியாது. அதற்கான சாத்தியப்பாடுகள் மிக குறைவு. தனது அளப்பரிய முயற்சியால் தன்னால் இயன்றவற்றை ஆராய்ந்து ‘எனது இந்தியா’ என்னும் தலைப்பின் கீழ் 100 கட்டுரைகளாய் நமக்கு அளித்துள்ளார் எஸ்.ரா.

‘எனது இந்தியா’ கட்டுரைத் தொகுப்பு நமக்கு ஒரு விரிவான வரலாற்றுப் பார்வையை அளிக்கிறது. ஒரு சிறந்த படைப்பு என்பது நமது தேடுதலையோ எண்ணத்தையோ விரிவுபடுத்துவதாக அமைய வேண்டும். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமது தேடுதலையும் அறிவையும் விரிவடையச் செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. தனது ஆழ்ந்த வாசிப்பினாலும் ஒரு தேசாந்திரியாகப் பல இடங்களுக்குச் சென்று அங்குள்ள மனிதர்களிடம் பழகி நமக்கு அறிய பல வரலாற்றுத் தகவல்களை இந்த நூலின் மூலம் அளித்துள்ளார்.

வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும் என்று கூறும் எஸ்.ரா தனது கட்டுரைகள் மூலம் அதற்கான பயிற்சியை நமக்குக் கொடுக்கிறார். ஒரு கட்டுரையைப் படிக்கும் வாசகன் அதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளப் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்த மண்ணின் வளங்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது, அவர்கள் நிர்வாகம் எப்படி இருந்தது, அவர்களால் இந்த மண்ணில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன, இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டது எவ்வாறு என்று வரலாற்றின் பக்கங்களை நமக்குச் சுருக்கி வரைந்து காட்டியிருக்கிறார்.

ஆங்கிலேயர்களின் கொடுஞ்செயல்களைக் குறிப்பிடும் அதே வேளையில் ஆர்தர் காட்டன், தாமஸ் மன்றோ, வில்லியம் லாம்டன் போன்றவர்களின் மகத்தான பணியைப் பற்றியும் கூறியுள்ளார். வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றும் மறந்துவிட்ட நிகழ்வுகள், மனிதர்கள் என்று ஏதோ ஒரு வகையில் புதையலைக் கண்டடையும் மனநிலையோடு நம்மை இந்தப் பக்கங்களில் ஆர்வத்தோடு எதையோ தேடிக்கொண்டிருக்கச் செய்கிறார்.

வரலாற்றை அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்றால் அதன் துணை கொண்டுதான் நாம் நமது வருங்காலப் பாதையை உருவாக்க முடியும். இந்தத் தொகுப்பில் ‘பெண்களுக்கு நடந்த வன்கொடுமைகள்’ என்னும் தலைப்பில் உள்ள கட்டுரையில் குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்ற கொடுமைகளுக்கு எதிரான போராட்டமும் அதனை ஒழிக்கச் சட்டம் இயற்றிய வரலாற்றையும் விளக்கியிருக்கிறார். இந்த மூன்றும் நம் கலாச்சாரம், பழக்கவழக்கம், மத நம்பிக்கை என்று கூறிதான் நிகழ்த்தப்பட்டன. இன்றும் சில மூடநம்பிக்கைகளால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவற்றை வரலாற்றின் துணை கொண்டுதான் நம்மால் எதிர்க்க முடியும். “அக்பர் தன் மகன் சலீமின் காதலியான அனார்கலியை உயிரோடு வைத்து சமாதி கட்டினார்”, “புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டு ஜீரணமாகாமல் இறந்துபோனார்,” போன்ற தகவல்களுக்குப் பின்னால் உள்ள சரித்திர ஆதாரங்கள் என்ன என்பதைப் பற்றிய ஒரு கட்டுரையில் வரலாற்றின் மீது படிந்துள்ள புனைவுகளைத் தூசுதட்டியுள்ளார்.

நம் கைகளில் உள்ள தொழில்நுட்பங்களின் உதவியோடு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான வரைபடத்தை நொடியில் பெற்றுவிடக்கூடிய சூழலில் இந்தியாவின் வரைபடத்தை முதலில் வரைந்தது யார் என்று கேள்வி கேட்டுக்கொண்டு அதன் வரலாற்றைத் தொகுத்து இரு கட்டுரைகளாக அளித்துள்ளார். நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல வரலாறு, இந்தியாவின் வரைபடத்தைத் தயாரித்து வெளியிடுவதில் 60-ஆண்டுக் காலக் கடும் உழைப்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் மறக்காமல் ரமணன் எழுதிய ‘கடைசிக் கோடு’ என்னும் நூலையும் படித்தால் மிகவும் பயனுள்ளதாய் அமையும்.

நாட்டில் எத்தனையோ கொடுமைகள் நடந்து கொண்டிருக்கையில் காந்தி ஏன் உப்புச் சத்தியாகிரகம் நடத்தினார் என்ற கேள்வியோடு தொடங்கும் ஒரு கட்டுரையில் உப்பின் வரலாற்றையும் காலம்காலமாக உப்பின் மீதான வரிவிதிப்பையும் ஆங்கிலேயர்கள் உப்பிற்காக 4000 கி.மீ நீளமுடைய பெரும் வேலியைக் கட்டியதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாய் இந்திய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து மறைக்கப்பட்ட இந்த வேலியைப் பற்றித் தேடி ஆராய்ந்து அதன் எச்சத்தைக் கண்டுபிடித்த ராய் மாக்ஸம் (Roy Moxham) எழுதிய ‘உப்பு வேலி’ என்னும் நூலைப் படிக்கும்போது அதன் பிரம்மாண்டத்தை என்னால் காணமுடிந்தது.

இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் அதைப் பற்றி விரிவாய் அறிந்துகொள்ள அதன் தொடர்பு நூல்களைப் பற்றிய விவரங்களையும் இணைத்திருப்பது, “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,” என்பதைப் போல் நீங்களும் அதன் முழு வரலாற்றையும் அறிந்து பயன்பெறுங்கள் என்பதைப் போல் அமைந்துள்ளது.

வரலாற்றிலிருந்து புனைவுகளைப் பிரிப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் இங்குப் பல வரலாறுகள் புனைவுகளால் பின்னப்பட்டவை. வரலாற்றை எழுதும்போது ஓர் ஆய்வாளன் அதனைத் திறனாய்வு செய்து ஒரு குழு சார்பற்றவனாக நேர்மையுடன் எழுதவேண்டும். இந்தத் தொகுப்பில் அறுதியிட்டு இதுதான் உண்மையான வரலாறு என்று முடிக்காமல், பல கோணங்களில் கிடைக்கும் தகவல்களைச் சேகரித்து அவைகளைத் தொகுத்து அளித்துள்ளார் எஸ்.ரா. நம்மிடம் உலவும் வரலாறுகளில் உண்மை எது? புனைவு எது? என்று அறிய நம்மைத் தூண்டவும் இந்தக் கட்டுரைகள் வழிவகுக்கின்றன.


மேலும் படிக்க

3 thoughts on “எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்”

  1. உங்கள் பதிவு இந்த புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்