கட்டுரை

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

5 நிமிட வாசிப்பு

போட்டி முடிவுகளைத் தேர்வான கதைகளுடன் தமிழ்ப் புத்தாண்டன்றே வெளியிட நினைத்தோம். ஆனால் நாம் ஒன்று நினைக்க, இந்த கோவிட்…

இவ்வாண்டு வந்த கதைகள் மொத்தம் 94 (சென்ற ஆண்டின் அதே கதைகளை மறுபடியும் அனுப்பிவைத்த நம்பிக்கை மிகுந்தவர்களுடையதைச் சேர்க்காமல்!)

இவற்றிலிருந்து வலுவான கருவும் கதை சொல்லல் முறையும் கொண்ட 12 கதைகளைத் தேர்வு செய்திருக்கிறோம். இந்த 12 கதைகளும் ‘அரூ அறிவியல் சிறுகதைகள் 2021’ என்கிற தலைப்பில் அச்சுப் பிரதியாகவும் வெளியாகும்.

அவை அகரவரிசைப்படி:

இவற்றைத் தவிர, 6 குறிப்பிடத்தகுந்த கதைகளை வெளியிடலாம் என்று தோன்றியது. மேலே குறிப்பிட்ட 12 கதைகளின் வீச்சு இவற்றில் இல்லாவிட்டாலும் ஏதோவொரு சிறப்பம்சம் இக்கதைகளில் இருக்கிறது. அவை இதோ…

இந்த 18 கதைகளில் 10 கதைகளை எழுதியவர்களுக்கு இதுவே அரூவில் வெளியாகும் முதல் படைப்பு. இவர்களில் சிலர் சென்ற ஆண்டு போட்டிகளுக்குக் கதைகள் அனுப்பித் தேர்வாகாவிட்டாலும் தொடர்ந்து எழுதியுள்ளனர் என்பதில் மகிழ்ச்சி. முதல் அரூ போட்டியில் பரிசு வென்ற சுசித்ராவின் இரண்டு கதைகள் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அறிவியலும், தொன்மமும், மெல்லுணர்வுகளும், கச்சிதமான கலைச்சொற்களும் கலந்து சரளமான மொழியில் இரு கதைகளையுமே எழுதியுள்ளார். தமிழில் அறிவியல் புனைவு எழுத விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதைகள் இவை.

போட்டிக்கு வந்த கதைகளைக் குறித்த எங்கள் சென்ற ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டு கருத்துகளில் பெரிய வேறுபாடில்லை. சுருக்கமாக எழுத அடுத்த முறை வார்த்தை வரம்பு வைக்கலாமா என யோசிக்கிறோம். சமயங்களில் இது சிறுகதைப் போட்டியா அல்லது குறுநாவல் போட்டியா என்கிற சந்தேகம் ஏற்படும் அளவிற்குச் சில கதைகள் இருந்தன (தேர்வான சில கதைகள் உட்பட!)

ஓர் அறிவியல் புனைவில் நாங்கள் எதிர்பார்ப்பது என்ன? ஒரு வலுவான அறிவியல் கரு. இதை ‘100 நலன்கள்’, ‘அ-சரீரி’, ‘சொல்லாழி வெண்சங்கே’, ‘வலசை’ போன்ற கதைகள் திறம்படச் செய்துள்ளன. பிறகு, அக்கருவை அறிவியல் தர்க்கத்தின் நுட்பமான சித்தரிப்பு மூலம் விரித்தெடுப்பது. இது ‘பாஞ்சஜன்யம்’, ‘பூர்ணகும்பம்’, ‘என்றூழ்’ மற்றும் ‘நோய் முதல் நாடி’ போன்ற கதைகளில் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

அறிவியல் புனைவு என்பதால் தர்க்கப்பூர்வமாக மட்டுமே கதை இருக்க வேண்டிய அவசியமில்லை, உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இடம் இருக்கலாம் என்பதை ‘இறுதி யாத்திரை’, ‘அ-சரீரி’, ‘என்றூழ்’ மற்றும் ‘பாஞ்சஜன்யம்’ காட்டுகின்றன. ‘உளதாய் இலதாய்’, ‘இறுதி யாத்திரை’, ‘என்றூழ்’, ‘கார்தூஸியர்களின் பச்சை மது’, ‘வலசை’ ஆகிய கதைகளை கதை சொல்லும் முறைக்காகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை உருவகிக்கும் எதிர்கால உலகும் யதார்த்தமாக நம்பும்படியான சித்தரிப்பாக இருக்க வேண்டும். ‘சக்கர வியூகம்’, ‘இறுதி யாத்திரை’, ‘என்றூழ்’ ஆகிய கதைகள் இதற்கு நல்ல உதாரணங்கள்.

அறிவியல் புனைவு எதிர்காலத்தில்தான் நிகழவேண்டுமா எனச் சென்றாண்டு கேட்டிருந்தோம். அதற்கு இல்லை என்று தெளிவாகப் பதில் அளித்துள்ள கதைகள் ‘வலசை’, ‘பகுதாரி’, ‘கார்தூஸியர்களின் பச்சை மது’ மற்றும் ‘உளதாய் இலதாய்’. அதிலும் குறிப்பாக ‘வலசை’ கதை நாம் அறிந்த ஓர் அன்றாட இயற்கை நிஜத்தில் ஒளிந்திருக்கும் மாயத்தன்மையைக் காட்டுகிறது. கலைக்கும் கவிதைக்கும் ‘முன்னத்தி’ கதை கொடுத்திருக்கும் சிறப்பான இடத்திற்கு அக்கதையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ‘அரூ அறிபுனைப் போட்டி #500’ கதை நிகழ்த்தும் காலத் தாவல்களுக்காகவும் தேர்ந்த அறிவியல் கலைச்சொற்கள் பயன்பாட்டிற்காகவும் (மற்றும் அரூ போட்டி இன்னும் 500 ஆண்டுகள் நடைபெறும் என்கிற பெருங்கனவிற்காகவும்!) குறிப்பிடத்தகுந்தது.

தமிழ்/இந்தியச் சூழல் அல்லாத பிற நாட்டுச் சூழலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் அறிவியல் புனைவு எழுதலாம் எனக் காட்டிய கதைகள் – ‘உளதாய் இலதாய்’, ‘வலசை’, ‘கார்தூஸியர்களின் பச்சை மது’. ஒருவித விளையாட்டுத்தனத்துடன் அறிவியல் கருவை அணுகி சுவாரஸ்யமாக எழுதப்பட்ட விதத்திற்காக ‘சனி பகவான்’ மற்றும் ‘அது’ கதைகள் கவனிக்கத்தக்கவை. அறிவியல் புனைவு மற்றும் மிகுபுனைவின் விளிம்பில் நிற்கும் கதைகளையும் அரூ ஏற்றுள்ளது. இதற்கு நல்லதொரு உதாரணம் ‘கார்தூஸியர்களின் பச்சை மது’. அறிவியல் புனைவை உருவகக் கதையாகவும் எழுதலாம் என்று ‘சொல்லாழி வெண்சங்கே’ மற்றும் ‘செம்புலப்பெயல்’ கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆக, பலவிதமான சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 18 கதைகளையும், எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, நடுவர் யுவன் சந்திரசேகருக்கு அனுப்பிவைத்தோம். கதைகளைப் பற்றி (பொதுவாகக் கட்டுரைகள் எழுதுவதில்லை என்று சொன்ன!) யுவன் எழுதிய கட்டுரையை இங்கே படிக்கலாம். கதைகளில் காணப்படும் பொதுவான சில குறைகளையும் அடுத்து அறிவியல் புனைவு எழுத அமருபவர்களிடம் நச்சென்று சில கேள்விகளும் கேட்டுள்ளார். அறிவியலாளரும் இலக்கிய ஆர்வலருமான சரவணனும் இந்த 18 கதைகள் குறித்து தனது கருத்துகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியுள்ளார். அறிவியல் புனைவு எழுதுவதற்கான சில அடிப்படைத் தயாரிப்பு முறைகளையும் விளக்கியிருக்கிறார்.

இந்த 18 கதைகளிலிருந்து சிறந்த கதையாக நடுவர் யுவன் சந்திரசேகர் தேர்வு செய்த கதை ‘நோய் முதல் நாடி’. இக்கதையைத் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தைத் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

அரூ குழுவிற்கு ‘பாஞ்சஜன்யம்‘ மற்றும் ‘என்றூழ்’ ஆகிய இரண்டு கதைகளுமே மிகவும் பிடித்துபோனதால், அவை இரண்டையுமே பரிசுக்குரிய கதைகளாகத் தேர்வு செய்கிறோம். இவ்விரண்டுமே தொன்மம், எழுத்து நேர்த்தி, அறிவியல் தர்க்கம், கதை நுட்பம் மற்றும் உணர்வுகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய கதைகள் என்பதற்காகப் பரிசு பெறுகின்றன.

சிறந்த இரண்டு கதைகளுக்குத் தலா ரூ 10,000/- என அறிவித்திருந்தோம். ஒரு கதைக்கு சிங்கப்பூர் ஆர்யா கிரியேசன்ஸும் இன்னொரு கதைக்கு எழுத்தாளர் திரு இராம கண்ணபிரானும் பரிசுத் தொகையை வழங்குகிறார்கள். பரிசுக்கு இப்போது மூன்றாவது கதையும் தேர்வாகியிருப்பதால், அதற்கான ரூ 10,000/- தொகையை அரூ குழுவும் சரவணனும் இணைந்து வழங்குவார்கள்.

ஆரியா கிரியேசன்ஸ் உரிமையாளர் திருமதி பிரேமா மகாலிங்கம் அவர்களுக்கும், பரிசு தொகையைத் தானாகவே கொடுக்க முன்வந்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் அவர்களுக்கும், சரவணனுக்கும் அரூவின் மனமார்ந்த நன்றி. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் அரூ நண்பர்களின் அன்பும் நன்றியும். போட்டியில் பங்குபெற்ற அனைவரும் தொடர்ந்து அறிவியல் புனைவு எழுத வேண்டும் என்பதே அரூவின் அவா.

போட்டிக்கு வந்த மொத்த கதைகளையும் பார்க்கும்போது, பெரும்பான்மையான கதைகள் ஓர் அறையின் கதவைத் திறந்து மறுமுனையில் இருக்கும் இன்னொரு கதவை நோக்கிச் செல்கின்றன. நடுவில் சற்று நின்று அறையை உன்னிப்பாகப் பார்த்தால், அது அறையல்ல பல லட்சக் கதவுகளைக் கொண்ட புதிர்ப்பாதை என்ற பிரமிப்பு ஏற்படும். அந்தப் பிரமிப்பைத் தானும் பெற்று வாசகருக்கும் கொடுக்கும், கற்பனையை இன்னும் விரிவடைய செய்யும் கதைகள் வரவேண்டுமென நினைக்கிறோம். மிகவும் சீரியஸாக லேப் கோட் அணிந்து உட்காராமல், The Endochronic Properties of Resublimated Thiotimoline எழுதிய ஐசாக் அசிமோவின் விளையாட்டுத்தனம் ததும்பும் கதைகள் வரவேண்டும். அப்படியான கதைகள் நம் கையில் ஒரு பட்டத்தைக் கொடுக்கும். அதன் வாலைப் பிடித்துக்கொண்டால் நம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வானில் பறந்து திரியும். Exhalation கதையில் வரும் ஆராய்ச்சியாளரைப் போல் தனது மூளையைத் தானே பகுப்பாய்வு செய்யும் கதைகள் வரவேண்டும். அணுவுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியும் என்றாலும், அதுவல்ல வேறு எனக் காட்டும் The Diamond Lens கதைகள் வரவேண்டும். முக்கியமாக, சுற்றி நிற்கும் உயரமான கண்ணாடிக் கட்டிடங்களில் தன் பிம்பத்தைத் தேடாமல், தனது காலுக்குக் கீழிருக்கும் விதைகளிலிருந்து முளைத்தெழ வேண்டும் அக்கதைகள். அப்படியான அறிவியல் புனைவிற்கு அரூ காத்திருக்கிறது.

அடுத்து அக்டோபரில் வெளியாகவிருக்கும் அரூவின் 12வது இதழ் அறிவியல் புனைவு சிறுகதைச் சிறப்பிதழாக இருக்கும். போட்டிக்கு எழுதியவர்களில் தொடர்ந்து அறிவியல் புனைவு எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் அரூவின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 15க்குள் தங்கள் கதைகளை அனுப்பலாம்.


புகைப்படம்: விஸ்வநாதன்

அரூ குழுவினர்

View Comments

  • அரூ புத்தகங்களைக் கிண்டிலில்/மின்னூலாக வெளியிடவும். புத்தகங்களை வைக்க வீட்டில் இடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் வாங்கிப் படிக்க உதவும்.

    • என்னுடைய கருத்தும் அதுவே.
      இது என் முதல் கடிதம். அரூவின் ஆக்கம் சிறுவயதில்
      குற்றாலத்தருவியோடு வாழ்ந்தமையால் ஒரு அருவி சடசடவெனக் கொட்டிடும் ஓர் வீச்சும் குளித்ததுபோதும் என எண்ணும் முன்னே மீண்டும் அந்த அடியைத் தேடி ஓடும் வெறியும் போலிருக்கிறது. மிக்க நன்றி.
      அன்புமிகு
      கோம்ஸ் பாரதி கணபதி
      865.850.1913
      envnmn@me.com

Share
Published by
அரூ குழுவினர்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago