கட்டுரை

கடவுளுடன் ஒரு சுற்றுலா

10 நிமிட வாசிப்பு

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020-க்குத் தேர்வான கதைகளைப் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பார்வை.


அறிவியல் கதைகள் தமிழில் கம்மி. கம்மி என்று சொல்வதுகூடத் தவறு. எதார்த்தவாதக் கதைகளும் இன்ன பிற கதைகளும் எழுதப்படும் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் அறிவியல் கதைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அறிவியல் சிறுகதை என்று சொன்னால் 30 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த ஆர்த்தர் ஸி. க்ளார்க் எழுதிய ஒரு கதையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. சிறிய கதைதான். 1953இல் எழுதப்பட்ட கதை. சுஜாதா அதைக் கடவுளின் அநேகக் கோடி நாமங்கள் (The Nine Billion Names of God) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார். இதை எழுதும்போது சுஜாதாவின் மொழிபெயர்ப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடினால் வேறொரு மோசமான மொழிபெயர்ப்பு கிடைத்தது. ஒரு வாக்கியத்தைக்கூடப் படிக்க முடியவில்லை.

ஒரு திபெத்திய லாமா அமெரிக்க மன்ஹாட்டனில் இருக்கும் ஒரு கணினி நிறுவனத்திடம் வந்து தங்கள் மடத்துக்கு ஒரு ஆட்டமேட்டிக் ஸீக்வென்ஸ் கம்ப்யூட்டர் வேண்டும் என்று கேட்கிறார். எண்களுக்குப் பதிலாக அந்தக் கணினி வார்த்தைகளில் செயல்பட வேண்டும். ஏன்? அந்த மடத்தைச் சேர்ந்த லாமாக்கள் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக — அதாவது மடம் செயல்படத் தொடங்கியதிலிருந்தே கடவுளின் எண்ணற்ற பெயர்களைத் தொகுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மொத்தம் தொள்ளாயிரம் கோடிப் பெயர்கள். அந்தப் பெயர்களை எப்படி உருவாக்குவது? அவர்கள் உருவாக்கியுள்ள அகரவரிசையின் ஒன்பது எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி அந்தப் பெயர்களை உருவாக்கித் தொகுக்க வேண்டும். அதிலும் சில நிபந்தனைகள் உண்டு. மூன்று முறைக்கு மேல் எந்த எழுத்தும் தொடர்ச்சியாக வரக் கூடாது. இதைச் செய்து முடிப்பதற்கு 15,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் கணினியின் உதவியால் நூறு நாட்களில் முடித்துவிடலாம். திபெத் ஒரு மூலை. மன்ஹாட்டன் ஒரு மூலை. கணினி நிறுவனத்தின் பொறுப்பாளர் யோசிக்கிறார். ஓர் ஆசிய முட்டாள் ஏதோ உளறுகிறான். ம்ஹும். அப்படி நினைக்கக் கூடாது. வாடிக்கையாளரே தெய்வம். இவர் என்ன உளறினாலும் நமக்குக் காசு கிடைக்கப் போகிறது. அதுதான் முக்கியம். கணினியை திபெத்தில் நிறுவுவதற்காக இரண்டு ஊழியர்கள் திபெத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

திபெத் போய்ச் சேர்ந்ததும் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரிய வருகிறது. கடவுளின் தொள்ளாயிரம் கோடிப் பெயர்களையும் உருவாக்கி முடித்தவுடன் — அதாவது, நூறு நாட்களில் — உலகம் அழிந்துவிடும். இருவரும் அந்தக் கட்டுக்கதையை நம்பத் தயாரில்லை. இப்படித்தான் பல பாதிரியார்கள் சொல்லிக்கொண்டு திரிவதை அமெரிக்காவிலும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பாதிரிகளின் பேச்சை நம்பி அவர்களின் நண்பர்கள் சிலர் தங்கள் வீட்டைக்கூட விற்ற கதை அவர்களுக்குத் தெரியும். மடையர்கள். அதனால் அவர்கள் இந்த முட்டாள் லாமாக்களின் பேச்சைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மட்டுமல்லாமல் கடவுளின் எல்லா பெயர்களையும் முன்கூட்டியே முடித்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். யாரால் இந்த ஆசியப் பைத்தியக்காரர்களுடன் மூன்று மாதம் மல்லுக்கு நிற்க முடியும்? கடவுளின் தொள்ளாயிரம் கோடிப் பெயர்களாம். எல்லாவற்றையும் எழுதிவிட்டால் உலகம் அழிந்துவிடுமாம். மூடர்கள். பைத்தியக்காரர்கள். இவர்களோடு இன்னும் ஒரு நாள் இருந்தால்கூட நமக்கும் பைத்தியம் பிடித்துவிடும். மலைகளுக்கு நடுவே தெரியும் மடாலயத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துக்கொள்கிறார்கள். இப்படி நாம் தப்பிவிட்டது தெரிந்தால் லாமாக்கள் கடுங்கோபம் கொள்வார்கள் இல்லையா? ஆனால் நாம் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுத்தானே வந்தோம்? நூறு நாளில் முடித்தால் என்ன, ஒரு வாரத்தில் முடித்தால் என்ன?

மலைகளின் அழகை ரசித்தபடியே பேசிக்கொண்டு குதிரையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் கடவுளின் கடைசிப் பெயர் கொண்ட தாள் கணினியிலிருந்து விழுந்திருக்கும். விமான நிலையம் இன்னும் கொஞ்ச தூரம்தான். அப்போது… அதற்கு மேல் கதையில் ஐந்து வார்த்தைகளைக் கொண்ட ஒரே ஒரு வாக்கியம் வருகிறது. அதை நீங்களேதான் படித்துப் பார்க்க வேண்டும். அந்த ஐந்து வார்த்தைகளைக் கொண்ட வாக்கியத்தினால்தான் அந்தக் கதை இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறக்காமல் நிற்கிறது.

இன்றைய வெப்சீரீஸ் உலகிலும் அறிவியல் புனைவுகள்தான் முன்னணியில் இருக்கின்றன. ப்ளாக் மிர்ரர் என்ற தொடரைப் பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அது பிரபலமாக விளங்குகிறது. நவீனத் தொழில்நுட்பத்தினால் மனித வாழ்வில் உண்டாகக் கூடிய சிடுக்குகளைப் பேசும் தொடர் அது. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலோ கலையின் அந்த அடுத்த கட்ட நகர்வைப் பிரதிபலிப்பதாக இல்லை. அறிவியல் புனைவில் இன்னும் ஆரம்பக் கட்டத்தையே தொடுவதற்கான தடயங்கள்கூட இல்லாத இன்றைய சூழலில், அரூ பத்திரிகையின் இந்த அறிவியல் சிறுகதைப் போட்டி மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடிய விஷயம்.

அதைவிட உற்சாகம் என்னவென்றால், இந்தச் சிறுகதைப் போட்டிக்கு 98 கதைகள் வந்தன என்பது. அவற்றில் அரூ குழுவினர் 15 கதைகளைத் தேர்ந்தெடுத்து எனக்கு அனுப்பினர். அந்த 15 கதைகளையும் படித்தபோது எனக்குள் எழுந்த முதல் உணர்வு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிதான்.

அதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். இந்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடந்த புத்தக விழாவில் என் அன்புக்குரிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். எப்போதும் நான் தி. ஜானகிராமன், அசோகமித்திரன், கு.ப. ராஜகோபாலன் என்று பழைய படைப்பாளிகளையே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சமகாலத்தில் எழுதுபவர்களைப் பற்றி எதுவுமே சொல்வதில்லை. அதைக் கேட்டவுடன், “நம் மீது இம்மாதிரி புகார்களே இருக்கக் கூடாது” என்று எண்ணி, சென்ற ஆண்டு வெளிவந்த நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு போனேன். என்ன ஒரு துரதிர்ஷ்டம்! ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைத் தவிர மற்ற எதுவுமே படிக்கும் தரத்தில் இல்லை. எல்லாமே இலக்கிய உலகில் பிரபலமான பதிப்பகங்கள்தான். எழுதுபவர்களும் நல்ல உலக இலக்கியப் பரிச்சயத்தோடுதான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பக்கத்தில் பத்து இலக்கணப் பிழைகள். ஒற்றுப் பிழைகளைச் சொல்லவில்லை. அது தனிக் கதை. நான் குறிப்பிடுவது, இலக்கணப் பிழைகள். தமிழ் செத்துவிட்டது என்றே துயரமடைந்தேன். “இனி வருங்காலத்தில் நல்ல தமிழ் எழுதுபவர்கள் யார் இருக்கப் போகிறார்கள்?” என்று எண்ணி மறுகினேன். அந்த வருத்தம் அரூ கதைகளைப் படித்தபோது நீங்கியது. அரூ குழுவினரை அழைத்துப் பேசினேன். அவர்கள் கதைகளில் தென்பட்ட பிழைகள் பற்றியும், அனைத்துக் கதைகளையும் பிழைதிருத்தம் செய்து அனுப்பியதாகவும் சொன்னார்கள். எழுதுபவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்று சொல்ல மாட்டேன். அஜாக்கிரதை. ஒரு போட்டிக்கு அனுப்பும்போது அகராதி, நிகண்டு போன்றவற்றையெல்லாம் வைத்துப் பார்த்து சோதிக்க வேண்டாமா? இனி வருங்காலத்தில் எழுத்தாளர்கள் இது போன்ற அஜாக்கிரதையுணர்வை விட்டுவிடுவார்கள் என்று நம்புவோம்.

எனக்குக் கொடுக்கப்பட்ட பிரதிகளில் எழுதியவர்களின் பெயர்கள் கிடையாது. எனவே எழுதியவர்களைப் பற்றிய விபரம் தெரியாமலேயே இதை எழுதுகிறேன். இந்தக் கதைகளின் பொதுத்தன்மையாக இவற்றின் மொழியைச் சொல்லலாம். இத்தனை கதைகளையும் ஒரு கையே எழுதியது போல் எல்லாக் கதைகளிலும் இறுக்கமான, அடர்த்தியான மொழி கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் அறிவியல் சிறுகதைகளுக்கு இத்தனை அடர்த்தியான, இறுக்கமான மொழி தேவையா என்பது கேள்விக்குறி.

ஆங்கிலம் ஓர் அந்நிய மொழி. அந்த மொழியில் வெளிவரும் அறிவியல் புனைவுகள் வெகு சுவாரசியமாக இருக்கின்றன. தமிழ் நம் தாய்மொழி. அதில் ஏன் மொழியைப் போட்டுத் திருக வேண்டும்? இந்தத் தொகுதியில் இல்லாத ஒருசில கதைகளின் உள்ளே செல்வதே பெரும் பிரச்சனையாக இருந்தது. தொகுதியில் இல்லாத கதை பற்றி ஏன் இங்கே பேச வேண்டும் என்றால், அந்தக் கதைகளில் இரண்டு அம்சங்கள் நன்றாக இருந்தன. கதையும் அறிவியல் கருவும். கதை சொல்லலில்தான் (narration) பிரச்சனை. நாற்பத்தைந்து ஆண்டுக் காலம் மொழியில் புழங்கியவன் என்ற முறையில் அவர்களுக்கெல்லாம் என் ஆலோசனை என்னவென்றால், எளிமை. எவ்வளவு கடினமான அறிவியல் உண்மைகளையும் கதையில் எளிமையாகச் சொல்ல முடிய வேண்டும்.

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக் கதைகளில் நாம் காணக்கூடிய மற்றொரு பொதுத்தன்மை, படைப்பாளிகள் தங்கள் கதையையும் அதில் வரக் கூடிய அறிவியல் உண்மைகளையும் விளக்க முற்படுகிறார்கள். கதையின் கதையைக் கதையேதான் சொல்ல வேண்டுமே ஒழிய, கதாசிரியர் சொல்லக் கூடாது. அது கதையின் நீரோட்டத்தையும் நமக்கும் கதைக்குமான உறவையும் கெடுக்கும். கதைக்குள்ளே நம் விருப்பப்படி உலவுவதற்குக் குறுக்கீடாக இருக்கும். நம் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டு, நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல. ஒரு கதை என்பது — அதிலும் அறிவியல் புனைவு என்பது நமக்குச் சவாலாக இருக்க வேண்டும். Virtual Reality headset-ஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறதோ அப்படியே அறிவியல் புனைவும் வார்த்தைகளின் வழியே வேறோர் உலகத்திற்கு நம்மைக் கொண்டுபோய் விட வேண்டும். இந்தக் கதைகள் சிலவற்றின் கருத்தாக்கங்கள் அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும் அவற்றின் மொழி ஃபாண்டஸி கதைகளுக்கானதாக இருந்தது. புராணங்களையும் இதிகாசங்களையும் மறு உருவாக்கம் செய்யும்போது வேண்டுமானால் அவ்வகை மொழி நமக்கு ஏதுவாக இருக்கலாம். ஆனால் அறிவியல் புனைவுக்கு அந்த மொழி ஏற்றதல்ல. ஆர்த்தர் ஸி. க்ளார்க்கின் மேற்கோள் ஒன்று இங்கே ஞாபகம் வருகிறது. Science fiction is something that could happen — but usually you wouldn’t want it to. Fantasy is something that couldn’t happen — though often you only wish that it could. தொகுப்பின் சில கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் நடக்கக் கூடியவைதான். அந்த வகையில் அவை வெற்றியடைந்த கதைகளே. ஆனால் மொழியைப் பொறுத்தவரை வாசகரைத் தூரத்தில் நிறுத்தி வைப்பதாக உள்ளன.

அறிவியல் புனைவின் அடிப்படை அம்சம், சுவாரசியம். எனவே அறிவியல் கதையின் மொழி வாளின் கூர்மை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் கற்பனாவெளியின் மேகத்திரள்களைக் கீறிக்கொண்டு போக வேண்டும். மொழியின் அடர்த்தியும் கனமும் தடுமாற்றத்துக்கு (turbulence) வழி கோலுவதாக இருக்கக் கூடாது. அறிவியல் புதினத்துக்கும் மற்ற புனைவுகளுக்கும் உள்ள வித்தியாசம், இந்தக் கூர்மைதான். இதில் குழப்பமே இருக்கக் கூடாது. இன்ஸெப்ஷன் படத்தின் கதை குழப்பமாகத்தானே உள்ளது எனக் கேட்கலாம். அது குழப்பம் அல்ல. அதன் கதை ஒரு maze அல்லது புதிர் வட்டப்பாதை போன்ற அமைப்பைக் கொண்டதே தவிர, கதை மொழி (narration) குழப்பமானது அல்ல.

உதாரணமாக, உலகின் பத்து முக்கியமான அறிவியல் புனைவுச் சிறுகதைகளில் ஒன்றான நைட்ஃபால் (Nightfall, ஐஸக் அஸிமோவ்) என்ற கதையை எடுத்துக்கொள்வோம். 1941இல் எழுதப்பட்ட இந்தக் கதையைப் படித்தால் நேற்று எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது. லாகாஷ் என்ற உலகத்தைக் காரிருள் சூழப் போகிறது. ஆனால் அந்த உலக மக்களுக்கோ இருள் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களின் உலகில் இரவு இல்லை; இருள் இல்லை. இருளை அறியாத அந்த லாகாஷ் உலக மனிதர்களில் சிலரைப் பரீட்சார்த்த ரீதியில் 15 நிமிடம் ஓர் இருட்டுச் சுரங்கத்தில் போட்டபோது அந்த 15 நிமிட இருள் அனுபவத்திலேயே அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. இப்படியாக 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த உலகின் சூரியனை நிலவு மறைத்துக் காரிருள் சூழும்போது லாகாஷ் உலக மாந்தர் அனைவரும் அழிந்து போகின்றனர். எப்படி? இருளில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுவதால் — வெளிச்சம் வேண்டித் தங்கள் கண்ணில் படுவதையெல்லாம் கொளுத்துகிறார்கள். அந்தத் தீயின் காரணமாக அந்த உலகம் முழுவதுமே பற்றியெரிந்து மனிதக் குலம் முடிவுக்கு வருகிறது. இப்படியாக 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த மனித நாகரீகம் முற்றுப் பெற்று மீண்டும் உருவாகிறது. இதைத் தடுப்பதற்காக ஒரு விஞ்ஞானிகள் குழு முயற்சி செய்கிறது. இங்கிருந்து தொடங்குகிறது கதை. என்ன ஒரு சுவாரசியம் பாருங்கள்.

எனக்குப் பிடித்த மற்றொரு அறிவியல் புதின எழுத்தாளர் ரே ப்ரேட்பரி. அவருடைய The Million Year Picnic என்ற கதையில் ஒரு அப்பா, அம்மா, மூன்று பையன்கள் பூமியிலிருந்து கிளம்பிச் செவ்வாய்க் கிரகத்துக்கு பிக்னிக் செல்கிறார்கள். அங்கே போன பிறகுதான் அப்பா பையன்களிடம் சொல்கிறார், நாம் பூமிக்குத் திரும்பிச் செல்லவே போவதில்லை என்று. அவர்கள் செவ்வாயைச் சென்று அடைந்ததுமே அவர் திட்டமிட்டிருந்தபடி அவர்கள் வந்த ராக்கெட்டும் வெடித்துவிடுகிறது. இனி அவர்கள் நினைத்தாலும் பூமிக்குத் திரும்ப முடியாது. மூத்த மகனைத் தவிர மற்ற பையன்கள் வருத்தமடைகிறார்கள். அப்போது தந்தை சொல்கிறார், “மனிதர்கள் பூமியை வாழ முடியாத இடமாக ஆக்கிவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் பூமி அழியப் போகிறது. மனிதர்களேதான் பூமியை அழிக்கப் போகிறார்கள். இந்த அழிவு அவர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. மனித இனம் தோன்றியதிலிருந்தே அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் கவலைப்படாதீர்கள், நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரும் தன் குடும்பத்தோடு செவ்வாய் வர இருக்கிறார். அவருக்கு மகள்களும் இருப்பதால் உங்களுக்குக் கவலை இல்லை. அதோடு, இங்கேயே சில செவ்வாய்க் கிரகத்து மனிதர்களும் இருக்கிறார்கள்.”

பிறகு அவர்கள் செவ்வாய்க் கிரகத்து மனிதர்களைத் தேடி ஒரு படகில் செல்கிறார்கள். கடைசியில் அந்த மனிதர்களைப் பார்க்கிறார்களா என்பதை நீங்களேதான் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்ல; அந்தக் கதையில் ஒரு பின்குறிப்பு உள்ளது. அதை நீங்கள் கண்ணால் காண முடியாது. அப்படி ஒரு பின்குறிப்பு உள்ளதையே பலரும் விட்டுவிடவும் கூடும். அப்படிக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பின்குறிப்பு உள்ளதைக் கதையின் உள்ளே வரும் ஒரு வாசகம்தான் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் ஒரு சுவாரசியம் என்னவென்றால், அந்தப் பின்குறிப்பை நாம்தான் எழுத வேண்டும்! இதை எழுதும் தருணத்தில் அந்தப் பின்குறிப்பை உங்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றும் அவாவை அடக்க முடியவில்லை. என்றாவது — அந்தக் கதையை நீங்கள் வாசித்த பிறகு — உங்களுக்கு அதைச் சொல்லுவேன். 1946இல் எழுதப்பட்ட அந்தக் கதையின் எளிமையும் தத்துவ தரிசனமும்தான் என்னை இன்னமும் வசீகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்போது எனக்கு அனுப்பப்பட்ட 15 கதைகள். இவற்றில் ஆறு கதைகளை அவற்றின் கட்டுரைத் தன்மைக்காக விலக்கிவிட்டேன். இன்னும் ஒரே ஒரு கதையைச் சேர்த்து இந்தத் தொகுப்பை பத்தாக ஆக்கிவிடலாம் என்று மீண்டும் மீண்டும் படித்தேன். ம்ஹும். பயனில்லை. கட்டுரைத்தன்மை தூக்கித் தூக்கி அடிக்கிறது. கதை சொல்ல வேண்டும் நண்பர்களே! அறிவியல் என்பதே அலுப்பூட்டும் சமாச்சாரம் என்று ஒரு கருத்து நிலவும் காலகட்டத்தில் அதை உண்மையாக்குவது போல் கதை எழுதலாமா? ஆனால் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். எல்லா இலக்கிய மதிப்பீடுமே ரசனை சார்ந்ததுதான். நான் விலக்கிவிட்ட அந்த ஆறு கதைகளை வேறோர் எழுத்தாளர் சிறந்த கதைகளாக எடுத்துக்கொள்ளக் கூடும்.

என்னைப் பொறுத்தவரை அறிவியல் புனைவுகளில் சில அடிப்படை அம்சங்களை எதிர்பார்க்கிறேன். அம்சங்கள் என்றுகூடத் தேவையில்லை. ஒரே ஓர் அம்சம்தான். அது, கதை. ஒரே ஒரு வாக்கியத்தில் அடக்கக் கூடியதாக இருந்தாலும் அதில் ஒரு கதை இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட மில்லியன் இயர் பிக்னிக்கின் கடைசி வரிதான் கதை. அந்த முடிவை நோக்கித்தான் ரே ப்ராட்பரி நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறார். நாமும் ஆர்வத்தோடு அவரைப் பின்தொடர்கிறோம். முடிவு மட்டும் அல்ல; அந்த முடிவு ஒரு பெரும் தத்துவ தரிசனத்தையே நமக்குத் தருவதாக இருக்கிறது. சமீபத்தில் வேறொரு தொகுப்பில் ஓர் அறிவியல் சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. நாற்பது பக்கக் கதையில் பத்து பக்கத்துக்கு மேல் நகர முடியவில்லை. பத்து பக்கங்களிலுமே இரண்டு பேர் தத்துவ விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை நான் ஒரு தத்துவக் கட்டுரையில் படித்தால் நிச்சயம் ரசிப்பேன். ஆனால் ஓர் அறிவியல் சிறுகதையில் எப்படி ரசிக்க முடியும்? Pleasure of the text இல்லாமல் ஒரு பிரதியை எப்படி உருவாக்க முடியும்? மேலும், கதையே இல்லாமல் எப்படி ஒரு கதையை எழுத முடியும்? இதை இங்கே குறிப்பிடுவதன் காரணம், எனக்குக் கொடுக்கப்பட்ட 15 கதைகளில் ஒரு சில கதைகளைத் தவிர மற்றவற்றில் இந்தப் பொதுத்தன்மையைக் கண்டேன். இந்த 15 கதைகளில் இரண்டைத் தவிர மற்ற கதைகள் அனைத்தையும் ஒருவரே எழுதியிருப்பாரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு, எழுதப்பட்ட பாணியும் கட்டமைப்பும் ஒன்றேபோல் — கட்டுரையைப் போல் அமைந்திருந்தன.

இந்தப் பின்னணியில் கடைசி ஆப்பிள், அடையாளம், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, தட்டான்களற்ற வானம், மின்னணு புத்துயிர்ப்பு ஆகிய ஐந்து கதைகளையும் எனக்குப் பிடித்த கதைகளாகத் தேர்வு செய்கிறேன். அதிலும் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி என்ற கதைதான் இந்த ஒன்பதிலும் எனக்கு ஆகப் பிடித்தது. இதில்தான் ஒரு கதைக்கு வேண்டிய சுவாரசியம், கதைத்தன்மை, இலகுவான மொழி நடை எல்லாமே கச்சிதமாக அமைந்திருந்தன. இருந்தாலும் இதன் முடிவில் ஒரு பழமைவாதக் கருத்து முந்திக் கொண்டிருப்பதால் இதையும் அடையாளம் என்ற கதையையும் ஒருசேர முதல் பரிசுக்குப் பரிந்துரைக்கிறேன்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி என்ற எனக்கு மிகப் பிடித்த கதையை எழுதியவருக்கு ஒரு தந்திரோபாயத்தையும் சொல்ல விழைகிறேன். என் கல்லூரிப் பருவத்தில் ஆங்கிலத்தில் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது. தலைப்பு: ஜனநாயகம் இந்தியாவுக்கு ஏற்புடையதா? இல்லையா? நான் இல்லை என்ற தலைப்பில் பேசினேன். நான்தான் மிக நன்றாகப் பேசினேன் என்பது அனைவரின் கருத்து. ஆனால் ஏற்புடையது என்று பேசிய பெண்ணுக்கே முதல் பரிசு கிடைத்தது. பின்னர் அந்தப் பெண் என்னிடம் சொன்ன தந்திரோபாயத்தைத்தான் நான் இப்போது சொல்கிறேன். அவள் சொன்னாள்: “நீங்கள்தான் பிரமாதமாகப் பேசினீர்கள். ஆனால் இது போன்ற போட்டிகளில் நீங்கள் நினைக்கும் கருத்தையெல்லாம் பேசிவிடக் கூடாது. Political correctness இருக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்கலாம்.” எனவே கதையின் முடிவில் ஆணாதிக்கக் கருத்து மேலோங்கி ஒலித்ததால் கதை பின்னுக்குப் போகிறது. இங்கே பெண்ணியவாதம் அந்த ஆணாதிக்கத் தன்மையைச் சமன் செய்திருக்க வேண்டும்! அந்த இடத்தில் கதை கோட்டை விட்டுவிட்டது.

அடுத்த வரிசையில், மேய்ப்பன், மின்னு, வான் நகும், பூச்சி என்ற நான்கு கதைகளும் வருகின்றன. மீண்டும் சொல்கிறேன், வேறோர் எழுத்தாளர் அல்லது வாசகர் இந்த வரிசையை மாற்றியும் போடலாம்…

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அத்தனை படைப்பாளிகளுக்கும் — குறிப்பாக இந்த ஒன்பது கதைகள் — அதிலும் குறிப்பாக அடையாளம் மற்றும் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி என்ற இரண்டு கதைகளின் கர்த்தாக்களுக்கும் என் வாழ்த்துகள்…

சாந்தோம்
1.4.2020
சாரு நிவேதிதா


மேலும் பார்க்க

எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு அரூ தேர்ந்தெடுத்து அனுப்பிய 15 கதைகள். (இவை தரவரிசை அல்ல)

சாரு நிவேதிதா

http://charuonline.com/blog/

Share
Published by
சாரு நிவேதிதா

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago