கண்டடைதலின் பேருவகை

13 நிமிட வாசிப்பு

‘அரூ அறிவியல் சிறுகதைகள் 2019’ தொகுப்பிற்கு முன்னுரையாக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை.


ஒருவன் ஒருத்தியை விரும்பினான். அவளை இழந்தான். பிறகு அவளை உருவாக்கினான் — உலகின் மிகச்சிறிய அறிவியல் புனைவு.

என் மூன்றரை வயது மகனுக்கு அண்மையில் நியூசிலாந்து எரிமலை நிகழ்வைச் செய்தியில் காட்டி எரிமலையையும் நெருப்புப் பிழம்பையும் விளக்கிக் கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டான். இப்போது விடுமுறைக்கு எங்குச் செல்ல வேண்டும் எனக் கேட்கையில் “வல்கனோவிற்கு” என்றான். அங்கே நெருப்பு சுடுமே என்ன செய்வாய் என்றேன். சில நொடிகள் யோசித்தான். பிறகு, “ஏ.சி ஷூ போட்டு இறங்குவேன். அப்ப கால் சுடாது,” என்றான். அறிவியல் புனைவு பற்றிய கட்டுரையை எழுதத் தொடங்கும்போது அவனுடனான இந்த உரையாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இது ஓர் அறிவியல் புனைவா என்றால் இல்லைதான் ஆனால் அவனளவில் அறிய முடியாததைத் தன்னறிவைக் கொண்டு அறிய முற்படும் குழந்தைத்தனமான கற்பனை. அறிவியல் புனைவின் அடிநாதமான உணர்வு இதுதான் எனத் தோன்றியது.

அறிவியல் புனைவு எனும் சொற்சேர்க்கையே சற்று விநோதமானதுதான். ஏனெனில் அறிவியலை நாம் எப்போதும் தர்க்கப்பூர்வமானது, புறவயமானது, நிரூபணத்திற்கு உட்பட்டது, கறாரானது என்றே வரையறை செய்து வருகிறோம். நேரெதிராகப் புனைவை உணர்வுப்பூர்வமானது, அகவயமானது, நெகிழ்வானது, கற்பனைக்கு முக்கிய இடம் அளிப்பது, உள்ளுணர்வு சார்ந்தது என்றே வரையறை செய்வது வழக்கம். அறிவியலில் புனைவிற்கு இடமில்லை, புனைவில் அறிவியலுக்கான இடம் இரண்டாம் பட்சம் என்பதே பொதுக்கருத்து. ஆனால் மகத்தான கண்டுபிடிப்புகள் அனைத்துமே உள்ளுணர்வின் எழுச்சியில் நிகழ்ந்தவை. புனைவுத் தருணத்தில் நிகழ்பவை. நமக்கு நன்கு தெரிந்த, ஆர்க்கிமிடீஸ் (Archimedes) குளியல் தொட்டியிலிருந்து யுரேகா எனக் கூவியபடி எழுவதாகட்டும், தலைமீது ஆப்பிள் விழுந்து புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டடைவதாகட்டும், விஞ்ஞானி கேக்யுள் (August Kekulé) கனவில் வால் பற்றும் பாம்பைக் கண்டு பென்சீனின் வடிவத்தைக் கண்டடைவதாகட்டும், டாவின்சியின் குறிப்பேடுகளில் உள்ள படங்கள் ஆகட்டும், இவை யாவும் மகத்தான புனைவுத் தருணங்கள்தான். புனைவும்கூடச் சில தர்க்க ஒழுங்குகள் சட்டகங்கள் சார்ந்தே இயங்க முடியும். மாய யதார்த்தம், மிகு புனைவு என்றாலும் அவற்றுக்கெனச் சில தர்க்கச் சட்டகங்கள் உள்ளன. புறவயத்தன்மை மற்றும் அகவயத்தன்மை ஆகிய இரண்டும் முயங்கும் வெளியே அறிவியல் புனைவின் களம் எனக் கொள்ளலாம்.

அறிவியல் புனைவின் தோற்றமும் வளர்ச்சியும் அறிவியலுடன் இணை வைக்கத்தக்கது. ஐரோப்பிய மத்திய காலகட்ட வரலாறு முடிவுக்கு வந்து மறுமலர்ச்சி காலகட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழத் தொடங்கின. நம் புலனறிவைப் பெருக்கும் கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ மானுட அறிவு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. நுண்நோக்கியும் தூரநோக்கியும் விழியின் எல்லையைக் கடக்கச் செய்தது. நுண்ணுயிர்களும் தொலைதூரக் கோள்களும் நம் அறிதல் வட்டத்திற்கு வந்து சேர்ந்து நம்மைத் திகைக்கச் செய்தன. இவை மானுட வரலாற்றையே மாற்றின. பின்னர் புத்தொளிக் காலகட்டத்தில் அறிவியல் மனிதர்களின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையான விடைகளை அளிக்கத் தொடங்கியது. பெரும் மக்கள் தொகையை அழித்தொழித்த அம்மை நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. கிருமி கொல்லி மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அறிவியலால் எல்லாவற்றையும் வெற்றிகொள்ள முடியும் எனும் நன்னம்பிக்கை எங்கும் நிலவியது. அறிவியல் வளர்ச்சி மதத்தின் இருப்பை வெகுவாகக் கேள்விக்குள்ளாக்கியது. மதம் எனும் கட்டுமானம் கதைகளாலும் நெறிகளாலும் கட்டப்பட்டது. பைபிள் கதைகளோ, ஜாதகக் கதைகளோ, புராணக் கதைகளோ பல அடுக்குகள் கொண்டவை. பெரும்பாலும் அவை சாகசத்தன்மை கொண்ட அற்புதக் கதைகள். சிங்கமும், புலியும், கரடியும், நரியும் மானுட வடிவங்களை ஏற்று, அவர்களின் குரலிலேயே அவர்களின் வாழ்வைப்பற்றிய நீதியை கதைகளாக எடுத்துரைத்தன. இன்னல்களில் வாடுவோருக்குத் தேவதைகள் உதவின. விசுவாசம் உள்ளவர்கள் எப்படியும் இறுதியில் மீட்கப்பட்டார்கள். மனிதனின் தலையாயச் சிக்கல்கள் அனைத்திற்கும் அறிவியலிடம் தீர்வு இருக்கும் என நம்பினார்கள். அறிவியல் மதத்தின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்கி, கடவுளின் பரப்பை மானுட உள்ளங்களில் இருந்து வெகுவாகச் சுருக்கியது. அறிவியல் மதத்திற்கு மாற்றாக மானுட உள்ளத்தில் நிலைகொள்ளத் தொடங்கியது. அறிவியல் நம்பிக்கை மீட்புக்கான சாதனமாகக் கருதப்பட்டது. மனிதகுலத்தின் அத்தனை நூற்றாண்டு கேள்வியான மரணமின்மையை அல்லது மரணத்திற்குப் பின்பான வாழ்வை மதம் உறுதி செய்தது போலவே அறிவியலும் பூடகமாக ஆசை காட்டியது. யோசித்துப்பார்த்தால் மனிதகுலத்தின் அத்தனை அறிவியல் முன்னெடுப்புகளும் மரணமின்மையை அடைவதற்கான முயற்சிகள்தான் எனத் தோன்றுகிறது. அறிவியல் மதத்தின் இடத்தை எடுத்துக்கொண்டபோது கடவுளர்களும் தேவதைகளும் கதைகளில் இருந்து மறையத் தொடங்கினர். அந்த பீடத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் அமர்ந்து ஆசி வழங்கின. அறிவியல் புனைவுகள் அப்படித்தான் உருவாயின. அறிவியல், கடவுளின் சர்வ வல்லமையைப் பிரகடனம் செய்வதை நோக்கமாக கொண்டன. அறிவியலை எளிதாகப் புரிய வைப்பதையே தொடக்கக்கால அறிவியல் கதைகள் இலக்காகக் கொண்டிருந்தன. அறிவியல் கதைகள் பலவகையிலும் முந்தையகாலத் தேவதை கதைகளின் நீட்சியே.

அறிவியல் வளர்ச்சி அறிவியல் மதத்தையும் அதற்குகந்த அறிவியல் கதைகளையும் உருவாக்கியது போலவே அறிவியல் மறுப்பையும் உருவாக்கியது. இயற்கை – மனித அறிவு எனும் எதிரீடை உருவாக்கியது. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என்பது மறைந்து மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான போராட்டமாக மானுட வரலாறு உருவகப்படுத்தப்பட்டது. இந்த இயற்கை – மனிதன் போட்டியில் இயற்கையே இறுதியில் வெல்லும். பகுத்தறிவு என்பது சாத்தானின் கனி என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கை எதிர் அறிவியல் புனைவை உருவாக்கியது. உலகின் முதல் அறிவியல் புனைவு எனப் பரவலாக அறியப்படும் மேரி ஷெல்லியின் ஃபிராங்கைன்ஸ்டீன் ஓர் எதிர் அறிவியல் புனைவு என்பது சுவாரசியமான முரண். ஒரு செயற்கை மனிதனை உருவாக்கி அவனுக்கு உயிரளித்து அவன் பேரழிவை உருவாக்குவதையே ஃப்ராங்கின்ஸ்டீன் சொல்கிறது. அன்று தொடங்கி இன்று வந்திருக்கும் எந்திரன் வரை பல அறிவியல் புனைவு திரைப்படங்களின், கதைகளின் பொதுச்சரடு இதுதான். மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பம் அவனுக்கு எதிராகவே திரும்புவது இறுதியில் இயற்கை வென்று சமநிலையை நிலைநிறுத்துவது. நெறி பிறழும் அசுரனை வதம் செய்ய அவதாரம் செய்யும் பரம்பொருள் மீண்டும் அறத்தை நிலைநாட்டுவது எனும் புராணக் கதையின் அதே வடிவம்தான். அறிவியல் புனைவுக்கும் எதிர் அறிவியல் புனைவுக்கும் இடையிலான வேறுபாடு என்பது அறிவியல் புனைவு அறிவியலின் மீது நன்னம்பிக்கை கொண்டது, அறிவியலால் தீர்க்க முடியாத சிக்கல் ஏதுமில்லை எனக் கருதுவது, எதிர் அறிவியல் புனைவு இதற்கு நேர்மாறான திசையைத் தேர்கிறது. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டு மிகுபுனைவு இலக்கியங்களில் விந்தையான இடங்களுக்குப் பயணிப்பது ஒரு பொதுவான கருப்பொருள். ஜூல்ஸ் வேர்ன்ஸ் பூமியின் மையத்திற்குப் பயணிப்பதை எழுதி இருப்பார். காலனியாதிக்க காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதும் பயணப் பித்து பீடித்தது. அறியா நிலங்களை, மனிதர்களை, புதிய கதைகளைத் தேடி அவர்கள் பயணித்தபடி இருந்தார்கள்.

அறிவியல் புனைவுகளுக்கு என சில இயல்புகளை அளிக்க முடியும். பொதுவாக புனைவிற்கு என விதிமுறை வகுக்கப்படுவதுண்டு. புனைவு ஒரு கருதுகோள் அல்லது கோட்பாடு அல்லது யோசனை சார்ந்து எழுதப்படக்கூடாது. ஆனால் அறிவியல் புனைவு எப்போதுமே ஓர் அற்புதமான யோசனையை முதலில் உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப கதைகளை உருவாக்கிக்கொள்கிறது. முதன்மையாக அது ‘இப்படி நடந்தால் என்ன ஆகும்?’ எனும் கேள்வியை எழுப்புகிறது. எல்லா காலத்து, எல்லா வகையான அறிவியல் புனைவுகளுக்குமான பொதுத்தன்மை என ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால் அது நம்மை வியப்புக்குள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனினும் ஒரு மேம்பட்ட அறிவியல் புனைவுக்குப் பிளந்த வாயைக் கடந்து உள்ளத்தில் ஊடுருவும் ஆற்றல் இருக்க வேண்டும். வெறும் வியப்புடன் நிற்காமல் மானுட வாழ்வின் ஆதாரக் கேள்விகளை நோக்கி அறிவியல் புனைவு பயணிக்கும்போது மகத்தான ஆக்கங்களை உருவாக்க முடியும். அறிவியல் புனைவு அறிவியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. நம்பகமான உலகத்தை உருவாக்கப் போதுமான அறிவியல் தகவல்களை எளிய மொழியில் கடத்தினால் போதும். அறிவியல் புனைவு வெற்றிபெற அதன் கதை மாந்தர்களோடு உணர்வுரீதியாக வாசகருக்குப் பிணைப்பு ஏற்பட வேண்டும். விமர்சகர்கள் அறிவியல் புனைவுக்கு இரண்டு இயல்புகளை வகுக்கிறார்கள். Cognitive estrangement – பரிச்சயமற்ற வினோத அந்நியத்தன்மையை அளிப்பது மற்றும் novum என்று சொல்லக்கூடிய பிறிதொன்றில்லாத புதுமை.

அறிவியல் புனைவில் கட்டற்ற புனைவுச் சுதந்திரம் உண்டுதான் ஆனால் வெறும் மிகு புனைவிலிருந்து அறிவியல் புனைவைப் பிரித்துகாட்டுவது ‘என்ன நிகழ்ந்தது என்பதையும் சொல்லி அது எப்படி நிகழ்ந்தது என்பதையும் அறிவியல்பூர்வமாகக் கோடிட்டுக் காண்பிக்க வேண்டும். அறிவியல் சாத்தியத்தை எடுத்துக்கொண்டு கற்பனையைப் பறக்கவிடலாம். மனிதனின் மரபணு தொடர்ந்து பரிணாமம் அடைந்தபடி இருக்கிறது. நாம் பிழைகள் என வகுக்கும் மியுடேஷன் வழியாக அவை நிகழ்கிறது. இந்த ஒற்றைவரி அறிவியல் செய்தியைக்கொண்டு பல்வேறு சாத்தியங்களை எக்ஸ்.மென் படக்கதைகள் உருவாக்கிக் காட்டுவதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

அறிவியல் புனைவு மைய இலக்கியத்துடன் தொடர்பற்ற தனித்த வகைமாதிரியாகத் தனித்த வாசகப் பரப்பைக் கொண்டதாகவே திகழ்ந்து வந்தது. தொடக்ககாலத்தில் அறிவியல் புனைவுக்கெனத் தனித்த இதழ்கள் வெளிவந்தன. ஹெச்.ஜி. வெல்ஸ் ‘கால இயந்திரத்தை’ 1895 ஆம் ஆண்டு எழுதுகிறார். இன்று அறிவியல் நூல்களில் அதுவொரு செவ்வியல் முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. அதாவது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உலகிற்குத் தெரிவதற்கு முன்பே. ஒரு முன்மாதிரி கால இயந்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அறிவியல் புனைவு வரலாற்றில் இது ஒரு பெரும் திறப்பு. அதுவரையில் புனைவில் காலத்தைக் கடக்க வேண்டும் என்றால் கனவின் வழி அதை நிகழ்த்திக் காட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். கனவு அகவயமானது. இதற்கு மாற்றாக புறவயமாக வரலாறை நோக்கும், வேறு காலத்தில் பயணிக்கும் இயந்திரத்தை வெல்ஸ் உருவாக்கிக் காட்டியுள்ளார். சார்பியல் கோட்பாடும் குவாண்டம் இயற்பியலும் அறிவியல் புனைவின் பொற்காலத்தைத் தோற்றுவித்தன. இரண்டாம் உலகப்போர், குறிப்பாக அணுகுண்டு நிகழ்த்திய சேதம் அறிவியல் மீதிருந்த கண்மூடித்தனமான பற்றைக் கேள்விக்குள்ளாக்கியது. ஹிட்லர், முசோலினி, ஸ்டாலினின் எழுச்சிகள் முற்றாதிகாரம் குறித்த அச்சங்களைப் படைப்பாளிகளில் விதைத்தது. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜியார்ஜ் ஆர்வேல் போன்ற தீவிர இலக்கியவாதிகள் கட்டமைப்பு உடைதல் (dystopian) படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்கள். மிகைல் புல்ககோவ் எழுதிய ‘Heart of a Dog’ ஒரு சுவாரசியமான கற்பனை. மனிதனின் பிட்யுடரி சுரபியை நாய்க்குப் பொருத்தும்போது ஏற்படும் அக மாற்றங்களைப் பேசுகிறது. எந்தத் தூய அறிவியல் புனைவைக் காட்டிலும் ஆர்வெல்லின் 1984 அபாரமான முன்னறிவிப்புகளைச் செய்திருக்கிறது என இன்று வாசிக்கும் ஒருவர் சிறிய துணுக்குறலுடன் அறிய முடியும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான அறிவியல் புனைவுகள் நவீனத்துவக் காலகட்டத்தை அடைகிறது எனச் சொல்லலாம். அறிவியலின் அழிக்கும் ஆற்றல் பல்வேறு வகைமாதிரி கதைகளை உருவாக்கியது. பிலிப் கே. டிக், ரே பிராட்பரி போன்றவர்கள் இலக்கியவாதிகளின் வரிசையிலேயே இன்று நினைவுகூரப்படுகிறார்கள். அதிமானுட சாகசக் கதைகள் பின்னுக்குச் சென்று சாமானியர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் அறிவியல் புனைவுகளில் பேசுபொருளாகின.

அறிவியல் புனைவுகளில் சில பொதுவான பேசுபொருட்களைக் காண முடியும். விந்தையான, அறிய முடியாதவற்றை நோக்கியே அறிவியல் புனைவு செயல்படும். காலம் அறிவியல் புனைவின் சாசுவதமான பேசுபொருட்களில் ஒன்று. காலத்தை வலைப்பது, அதை வெல்வது, அதில் பயணிப்பது என அறிவியல் புனைவு காலத்துடன் ஊடாடியபடி இருக்கிறது. பூமிக்கு மேலே, பூமிக்கு வெளியே என்பது ஒரு முக்கிய கற்பனை. சொர்க்க நரகங்களை மதம் கற்பனை செய்தது என்றால் அறிவியல் புனைவு வேற்றுக் கிரகங்களை நாகரீகத்தில் மனிதர்களை விடவும் கீழான வேற்றுகிரகவாசிகளை உருவாக்கி அவர்களை நாகரீகமற்ற முரடர்களாகச் சித்தரித்துக் காலனியாதிக்கக் கதையாடலின் நீட்சியைத் தொடக்க காலங்களில் உருவாக்கினார்கள். விநோதமானவை எல்லாம் ஆபத்தானவை ஆகவே அழித்தொழிக்கப்பட வேண்டியவை எனும் சிந்தனையோட்டம் புவியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூழல் சமநிலையை வெகுவாகக் குலைத்தது. பிற்கால வேற்றுகிரகவாசிகளின் கதைகள் மனிதர்களை பலவீனர்களாக பாவிகளாகச் சித்தரித்தது. வாளெடுத்து நீதிகோர வரும் கிறிஸ்துவின் பிம்பம் கதைகளில் ஊடுருவியது. மீட்பரிடம் மன்னிப்பைக் கோரி உலகை நாயகர்கள் மீட்டார்கள். எம்.ஐ.பி, ஈ.டி போன்ற திரைப்படங்களில் வேற்றுகிரகவாசிகளின் சித்தரிப்பு சிக்கலான தளங்களை நோக்கிப் பயணித்தது. அறிவியல் புனைவின் இந்தக் கிரகங்களுக்கு இடையேயான மோதல் என்பது காலனியக் காலங்களில் நிகழ்ந்த நாகரீகங்களுக்கு இடையேயான, பண்பாடுகளுக்கு இடையேயான மோதல்களின் நீட்சியாய் உருக்கொள்கிறது.

அறிவியல் புனைவு காலத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அடுத்த பேசுபொருள் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு. டெட் சியாங்கின் ‘The Lifecycle of Software Objects’ அவ்வகையில் அபாரமான பாய்ச்சல். கணினி விளையாட்டிற்குள் உருவாகிவரும் பாத்திரங்களைக் கொண்டு உயிர் என்றால் என்ன எனும் கேள்வியை நோக்கிச் சென்றிருப்பார். மேற்கத்திய அறிவியல் புனைவு ஆசிரியர்கள் ஒருவகை என்றால் கீழைத்திய புனைவாசிரியர்கள் இந்திய மனதிற்கு நெருக்கமானவர்கள். டெட் சியாங், கென் லியு, சிக்சின் லியு, சார்லஸ் யு போன்றவர்கள் அவ்வகையில் நாம் வாசிக்க வேண்டியவர்கள். அறிவியலையும் கீழைத்திய ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கும் புள்ளிகளைக் கதைகளாக்கியவர்கள். செயற்கை நுண்ணறிவு சார்ந்த கதைகளில் மானுட மேலாதிக்கம் மற்றும் விடுதலை பேசுபொருள் ஆகிறது. Cli-fi என்று சொல்லக்கூடிய சூழலியல் மாற்றங்கள், குறிப்பாக பருவநிலை மாற்றங்கள் கொண்டுவரும் சிக்கல்களைப் பேசும் புனைவுகள் இன்று வளர்ந்து வருகின்றன. வெறும் அச்சுறுத்தலைக் கடந்து வேறு தளங்களுக்கு இக்கதைகள் பயணிக்க வேண்டும். ராபின்சனின் நியுயார்க் 2140 நீரில் பாதி மூழ்கிய வாழ்வில் மனிதர்கள் வாழப் பழகுவதைக் கற்பனை செய்வதாக விமர்சகக் கட்டுரை குறிப்பிடுகிறது. அழிவிற்குப் பின்னர் எஞ்சியிருப்பவர்களின் வாழ்க்கை பற்றிய கற்பனை ‘பேரழிவுக்குப் பின்’ வகை அறிவியல் புனைவுகளை உருவாக்குகிறது. இதன் தொல்படிமம் நோவாவின் கப்பல்தான். மிகச் சிறிய குழுவிலிருந்து உலகை உருவாக்க முனைகிறார்கள். அங்கு நிலவும் அதிகாரப் போட்டிகள், வளங்களைப் பங்கிடுதலில் உள்ள அநீதியான முறைமைகள் என இவை பேசப்படுகின்றன. இது அணு ஆயுத அழிவு போன்ற மனிதன் உண்டாக்கிய அழிவிற்குப் பின்னரும் இருக்கலாம் அல்லது இயற்கையின் ஆற்றல் பெருகி அழித்ததாகவும் இருக்கலாம். மரபணு மாற்றம், உயிரிதொழில்நுட்பம், கிருமிகள் மற்றொரு பேசுபொருள். பரிணாமவியல் சார்ந்த அடிப்படைகளைக்கொண்டு படைப்புகளை உருவாக்க முடியும். வருங்கால மனிதன் பற்றிய கற்பனைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவனுடைய மூளை செயல்திறன், கூட்டு நனவிலி, டெலிபதி, பிரக்ஞையின் வெளி சார்ந்து கதைகள் எழுதப்படுகின்றன. சமூகவியல் நோக்கில் பால் அடையாளங்கள் அறிவியல் புனைவு அளவிற்கு வேறு எதிலும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. பல்வேறு சாத்தியங்கள் முயன்று பார்க்கப்பட்டுள்ளன.

தமிழில் என்னவிதமான அறிவியல் புனைவுகள் உருவாகியுள்ளன? கால சுப்பிரமணியம் மொழியாக்கம் செய்து தொகுத்திருக்கும் ‘காலமே வெளி’ ரே பிராட்பரி, ஆல்பர்ட் பெஸ்ட் போன்ற எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் மிகமுக்கிய தொகுப்பு. ந. பிச்சமூர்த்தி கூட ஒரு இயந்திர மனிதன் பற்றிய கதையை எழுதி இருக்கிறார். சுஜாதா ஒரு தொடக்கத்தை அளித்தார். அறிவியல் புனைவு அளிக்கும் வியப்பு அம்சத்தை அவருடைய என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்றவை நிச்சயமாக அளித்தன. ஆர்னிகா நாசர் போன்றோர் அறிவியல் புனைவுகளை எழுதி வருகிறார்கள். ஜெயமோகனின் விசும்பு தொகுதி தமிழில் குறிப்பிடத்தக்க அறிவியல் புனைவு தொகைநூல். ‘விசும்பை’ சூழலியல் அறி புனைவாக வகைப்படுத்தலாம். ‘உற்றுநோக்கும் பறவை’ உளவியல் மற்றும் பிரக்ஞை தளத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. டெட் சியாங் கீழை ஆன்மீக மரபை அறிவியலுடன் இணைத்து உருவாக்க முயன்ற வெளியின் முதல் வடிவம் ஜெயமோகனின் விசும்பு தொகுதியின் வழியாகவே தமிழில் சாத்தியமாகியது. ‘நாக்கு’ ‘ஐந்தாம் மருந்து’ போன்ற கதைகள் பரிணாமவியலை அடிப்படையாகக் கொண்டவை.

சுதாகர் கஸ்தூரி அறிவியல் புனைவு நாவல்களை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயண் அஞ்ஞானச் சிறுகதைகள் எனும் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். இவை தவிர்த்து சுனில் கிருஷ்ணனின் ‘திமிங்கிலம்’ ஜீவ கரிகாலனின் ‘கிளவுட் வார்’ பற்றிய கதை, சித்திரனின் ‘விசும்பின் மொழி’ சித்துராஜ் பொன்ராஜின் ‘மீன்முள் கட்டுமானம்’ அனோஜனின் ‘சிவப்பு மழை’ போன்ற கதைகளைக் குறிப்பிடத்தக்க முயற்சிகள் என அடையாளப்படுத்தலாம். இந்தப் பின்புலத்தில்தான் அரூவின் அறிவியல் புனைவுப் போட்டியையும் அதில் தேர்வான கதைகளின் முக்கியத்துவத்தையும் கவனிக்க வேண்டும்.

2

பரிசுக்குரிய கதைகள் மூன்றுமே மிகச்சிறப்பான கதைகள். ஆழமும் செறிவும் பலதள வாசிப்பும் அளிப்பவை. அவைத் தவிர்த்து ‘நிறமாலைமானி’, ‘அவன்’, ‘மூக்குத்துறவு’, ‘மின்னெச்சம்’ ஆகிய கதைகளும் மிக நல்ல கதைகள்தான். எல்லா கதைகளும் முழுமையானவையா என்றால், இல்லை என்றே சொல்வேன். முன்னரே கூறியதுபோல் ஆச்சரியத்திற்கு அப்பால் அறிவியல் புனைவு ஆழமான கேள்விகளையும் எழுப்ப வேண்டும் என்பது ஓர் எதிர்பார்ப்பு. மற்றொன்று ஒரு கதை தனக்கான விளக்கத்தை அதனுள்ளேயே கொண்டிருக்க வேண்டும். கதையை விளங்கிக்கொள்ள வெளித்தரவுகளை நாடக்கூடாது. மூன்றாவதாக, வாசகரின் மீதான அவநம்பிக்கையால் கோட்பாடைத் தேவைக்கு அதிகமாக விளக்க வேண்டியதில்லை. கோட்பாடு எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்குப் பேசப்பட்டால் போதும். அதன் விளைவுகளையும், அது சார்ந்த கேள்விகளையும்தான் அறிவியல் புனைவு எழுப்புகிறது.

‘பல்கலனும் யாம் அணிவோம்’, ‘யாமத்தும் யாமே உளேன்’, ‘ம்’, ‘மின்னெச்சம்’ ஆகிய கதைகளில் ஒரு பொதுச்சரடை கண்டுகொள்ள முடிகிறது. இவை யாவும் மானுட இருப்பை உடலைக் கடந்த ஒன்றாக ஆக்க முடியும் எனும் கருத்தை முன்வைக்கின்றன. உடலை கடப்பதும், மரணமற்ற பெருவாழ்வும் மனிதர்களுக்கு எப்போதுமிருக்கும் ஆர்வம்தான். எனினும் இக்காலக்கட்டத்தில் இந்தக் கேள்வியின் பெருக்கம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய ஒன்று. நவீன வாழ்வின் அர்த்தமின்மையின் உபவிளைவுதான் இந்த உடலைத் துறக்கும் விழைவா என்றொரு கேள்வி எழுகிறது. மற்றுமொரு பொதுச்சரடு இந்தக் கதைகள் யாவும் மானுட பிரக்ஞை, நனவிலி குறித்த தேடலைக் கொண்டுள்ளன. நரம்பியல், மூளை சார்ந்த சிந்தனைகளை முன்வைக்கின்றன. ஒருவகையில் யுங், ஆலிவர் சாக்ஸ் மற்றும் வி.எஸ்.ராமச்சந்திரனின் தாக்கத்தைத் தமிழ் அறிவியல் புனைவுலகில் திண்ணமாக உணர முடிகிறது என்றே தோன்றுகிறது.

இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ரா.கிரிதரனின் ‘பல்கலனும் யாம் அணிவோம்’ தமிழில் எழுதப்பட்டுள்ள மிகச்சிறந்த அறிவியல் புனைவுகளில் ஒன்று என தயங்காமல் சொல்வேன். அசலான இந்தியச் சிந்தனைகளை அறிவியலுடன் இணைத்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார். மனிதனின் ஒரு பகுதி இயந்திரமாக மாறுவது அறிவியல் புனைவில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றுதான். இத்தகைய உயிரிகளை ‘சைபார்க்’ என்றழைப்பார்கள். சைபார்க் ஓர் அதிமானுடன். மனிதனின் புலன் மற்றும் செயல் எல்லையை அவனுடன் இயைந்து பொருந்தும் இயந்திரத்தின் துணை கொண்டு கடப்பவன். சைபார்க் பற்றிய கதைக்குத் திருப்பாவையிலிருந்து ‘பலகலனும் யாம் அணிவோம்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார். பிரக்ஞை மற்றும் நனவிலி சார்ந்த விவாதத்தின்போது நம்மாழ்வாரின் கதை சொல்லப்படுகிறது. கதைக்களமே கடற்கோளில் இந்தியாவை விட்டுத் தனித்துண்டாக உருவாகி இருக்கும் புதிய மதுரையில்தான் நிகழ்கிறது. கதைசொல்லியான சைபோர்கின் பெயர் ஜனனி. அவள் அன்னையாகிறாள். தான் நேசிக்கும் தம்பி விநாசை தனது பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக்கொள்கிறாள். புதிய மதுரையில் இயந்திரம் – மனிதன் கூட்டுச் செயல்பாடு ஆய்வு நிறுவனத்திற்குத் தளையசிங்கத்தின் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மனித மனதை, பிரக்ஞையை அதன் நனவிலியை ஆல்பாக்கள் நகலெடுக்க முடியாமல் திணறுகிறது. மனிதனாக இருப்பது என்றால் என்ன எனும் ஆதாரக் கேள்வியை, மனிதனின் தனித்துவத்தை வரையறை செய்ய முயல்கிறது. மற்றொரு தளத்தில் இது எப்படித் தொழில்நுட்ப மேலாதிக்கத்தைக் கொணரும் பணிவான சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் என விரிகிறது. இது வெறும் கருத்துகளாக, கோட்பாடுகளாகச் சுருங்காமல் காப்பது ஜனனிக்கும் வளர்ச்சி குன்றிய அவளுடைய தம்பி வினாசுக்கும் இடையிலான உணர்வுரீதியான பிணைப்புதான். இந்தக் கதையே டெட் சியாங்கின் கதையுலகிற்கு மிக நெருக்கமாக இந்திய மெய்யியலையும் அறிவியலையும் இணைக்கும் வகையில் உருவாகியுள்ளது. பல தளங்களையும் அடுக்குகளையும் கொண்டிருக்கிறது.

சுசித்ராவின் ‘யாமத்தும் யானே உளேன்’ ஒரு திருக்குறள் வரி. கதைக்குக் கச்சிதமாகப் பொருந்திவருகிறது. ஒருவகையில் இதைப் பேரழிவுக்குப் பின்பான அறிபுனைவு என வகைப்படுத்தலாம். அழிந்து கொண்டிருக்கும் பூமியை விண்கலத்திலிருந்து பார்க்கிறார்கள். இக்கதையும் பல தளங்களைக் கொண்ட செறிவான கதைதான். இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு கொண்டு மனிதனாக இருப்பதன் சாத்தியத்தை, எல்லைகளை, இயல்புகளைப் பற்றி விசாரணை செய்கிறது. கௌதமனுக்கும் அன்னைக்கும் இடையிலான உணர்வுரீதியான பிணைப்பு கதையை வலுப்படுத்துகிறது. பதின்மத்தின் பெற்றோர் பிள்ளை உறவுச்சிக்கலையும் ஒரு சரடாக கொண்டிருக்கிறது. கதைக்குள் கர்ணனின் கதை சொல்லப்படுகிறது. கதைகளால் ஆன பிரபஞ்சம் உருவகிக்கப்படுகிறது. மேற்கத்தியத் தொன்மத்தில் ‘ஜீனியஸ்’ என்பது ஒரு சுவாரசியமான தொன்மம். படைபூக்கத்தை அளிப்பது ஜீனியஸ் எனும் இறக்கைகொண்ட புலனுக்கு அகப்படாத உயிர் என்றே நம்பப்படுகிறது. மனிதன் ஜீனியசின் கருவியாகக் கலையை வெளிப்படுத்துகிறான். உருவமற்ற கௌதமன் கதைகளை நமக்குக் கொண்டு சேர்க்கிறான்.

நகுல்வசனின் ‘கடவுளும் கேண்டியும்’ நரம்பியல்- பிரக்ஞை சார்ந்து செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் நிகழும் கதை. இந்தக் கதையின் படைப்பூக்கம் என்பது புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ கதையை அடித்தளமாகக் கொண்டு தற்காலத்தில் அதை மீள் நிகழ்த்தி ஒருவித காலாதீதத் தன்மையை அளிப்பது. அறிவியல் புனைவுகளில் இந்தக் கதையில் உள்ள ‘ஸ்மார்ட் மங்கியைப்’ போல அதிசெயல்திறன் கணினிகள் உலவுவது வழக்கம். எல்லாவற்றையும் கணினியால் வகுத்துவிட முடியாது, அப்படி முடிந்தால் மனிதனின் தனித்தன்மைக்கும் இருப்பிற்கும் என்ன பொருள் எனும் தரப்பிற்கும் வகுத்துவிட முடியும் என நம்பும் தரப்பிற்குமான உரையாடலும்கூட. கடவுள் படைத்தான் என்பதற்கும் கடவுளைப் படைத்தான் என்பதற்கும் இடையிலான முரணும்கூட கதையின் பேசுபொருள் ஆகிறது.

ரூபியா ரிஷியின் ‘மின்னெச்சம்’ சுவாரசியமான கற்பனை. உடலைத் துறந்து மரணத்திற்குப் பின் தேவையான நினைவுகளை மட்டும் கொண்ட அழிவற்ற வாழ்வு வாழ்வதைக் கற்பனை செய்கிறது. செயற்கை நுண்ணறிவு இதற்கு உதவுகிறது. சாகாவான் எனும் செயல்திட்டத்திற்காகத் தன்னையே பலிகொடுக்கிறான் பார்த்திபன். அவன் எதை விழைந்தானோ அது தலைகீழாகிறது. சாகாவரத்தை மறுக்கிறான். பலகுரல் தன்மை கொண்ட இக்கதையின் மொழி மிகவும் கவித்துவமானது. செறிவான வாசிப்பனுபவத்தை அளித்தது.

கிரிதரன் கவிராஜாவின் ‘ம்’ அறிவியல் புலத்தில் நிகழும், நெடிய தன்னுரையாடல் கொண்ட ஆன்மீகக் கதை என சொல்லலாம். இந்திய மரபில் உள்ள லய யோகம் பிரபஞ்சத்தின் மூல ஒலியாக ஓம்காரத்தை முன்வைக்கிறது. அதிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது எனும் நம்பிக்கை. இக்கதையில் அறிவியல் அம்சம் குறைவாகவும் ஆன்மீக அம்சம் கூடுதலாகவும் உள்ளது. பேருரு கொள்ளல் அணுவளவு குறைதல் போன்ற சித்தர் மரபில் உள்ள அட்டமா சித்திகளை ஒத்த அனுபவங்களைக் கதைசொல்லி அடைகிறான். உடலற்ற இருப்பு நிலையை அடைகிறான்.

தன்ராஜ் மணியின் ‘அவன்’ ஒரு நரம்பியல்- பிரக்ஞை தளம் சார்ந்த கதை. மிர்ரர் நியுரான் சார்ந்த கருத்தை அவரால் எளிதாகப் புரியும்படி விளக்க முடிகிறது. நம் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் நமக்குரிய தேடல்கள் சார்ந்த விளம்பரங்களைக் காண முடிகிறது. மனிதனை முழுமையாகக் கண்காணிக்கும்போது அவனுடைய நடத்தையை வரையறை செய்துவிட முடியும் எனும் நம்பிக்கையை இக்கதை பேசுகிறது. அண்மையில் பொருளாதாரத்தில் நோபல் கிடைத்தது ‘நடத்தையியல் பொருளியலுக்குத்’தான். மனித நடத்தையைக் குறிப்பிட்ட வகையில் தூண்டி அவனை விரும்பும் வகையில் வழிநடத்த முடியும் என்கிறது. இந்த சிந்தனைகளைத்தான் தன்ராஜ் மணி 2080 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுக்கு பயன்படும் ஆய்வு பின்புலக் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கதை இறுதியில் இலெனின் இலன் உளெனின் உளன் எனும் இடத்திற்குச் செல்வது சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது.

விஷ்ணுகுமாரின் ‘நிறமாலைமானி’ முற்றிலும் வேறுவகையான அறிவியல் புனைவு எனச் சொல்லலாம். புதிய கருவிகளோ, புதிய கோட்பாடுகளோ அற்ற, வருங்காலம் சார்ந்ததாக இல்லாமல் அறிவியல் புனைவு எழுதுவது சாத்தியமா எனும் கேள்விக்கு விஷ்ணுகுமாரின் கதை விடையளித்திருக்கிறது. நிறமாலைமானி என நாமறிந்த கருவியைக்கொண்டு நிகழ்காலத்தில் கதையை எழுதி இருக்கிறார். மாலீக்யுளர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி பற்றிய அடிப்படை அறிந்தவர்களுக்கு கதை மேலதிகமாகத் திறக்கக்கூடும். (இது குறித்து அவரிடம் நேரடியாக விளக்கம் கேட்டு அறிந்துகொண்டேன்.) பிரியத்தின் பித்துதான் நிறமாலைமானி. விஷ்ணுகுமாரின் கதை ஒருவகையில் அபத்தத்தை முன்வைக்கும் காஃப்காத்தனமான கதை எனச் சொல்லலாம்.

கமலகண்ணனின் ‘கோதார்த்தின் குறிப்பேடு’ உளவியல் கதை. கோதார்த் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உளவியல் ஆய்வாளர். உயிருடன் இருக்கும்போதே தான் உயிர்வாழ்கிறேன் என்பதை மறுக்கும் உளவியல் சிக்கலுக்கு கோதார்த்த் மனமயக்கு என்று பெயர். ராம்சேயின் கதையை நம்மால் இந்த விளக்கத்தை மனதில் கொண்டால் புரிந்துகொள்ள முடியும். ஓர் அசல் ஆளுமை அவருடைய கண்டடைதலை அறிந்த கணத்தைப் புனைவாக்க முயன்றுள்ளார் கமலக்கண்ணன். கோதார்த் யார் எனக் கதைக்கு வெளியே தேடி அறிந்துகொண்டால் இக்கதை சரியாக வாசகருடன் தொடர்புறும்.

பாலமுருகனின் மூக்குத் துறப்பு இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த டிஸ்டோபியக் கதை. பருவநிலை / சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்றுமாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக்கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சிற்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது. அந்தக் கூற்றையே நவீன முறையில் பாலமுருகன் இக்கதையில் கையாள்கிறார். சாகாக்கலை எனப் பலதளங்களைத் தொட்டுச் செல்கிறார். டிஸ்டோபியக் கதைகள் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை. அரசின்மைவாதத்தைப் பேசுபவை. இந்த இயல்புகள் பாலமுருகனின் கதைகளுக்கும் பொருந்தி வருகிறது.

அஜீக்கின் ‘தியானி – கிபி 2500’ வருங்காலத்தில் உலகம் முழுக்க டிஜிட்டல் மயமானதும் கையால் எழுதுவதே இல்லாத, தாள்களோ மையோ அல்லாத சூழலைக் கற்பனை செய்கிறது. இந்தச் சூழல் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. டிஜிட்டல் யுகத்தில் எழுதும் பயிற்சி என்பது தியானத்தில் சேர்ந்ததாகக் கருதப்படுவது சுவாரசியமான கற்பனை.

பல கதைகளிலும் மரபு ஒரு தளத்தில் கதையை ஊடறுப்பது சுவாரசியமான பொதுத்தன்மை. மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய / தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று. இத்தொகுதியின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணராமல் இருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை தமிழ் நவீன இலக்கிய வரலாறில் ஒரு மைல்கல் தொகுப்பாகவே இத்தொகுதி நினைவுக்கூரப்படும் என நம்புகிறேன். பரிசுபெற்ற, தேர்வான, எழுதிய அனைத்து சக எழுத்தாள நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். அரூ தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டுத் தமிழில் இவ்வகை எழுத்துகளுக்குத் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சுனில் கிருஷ்ணன்
26-12-2019

கதைகளுக்கான சுட்டிகள்


நன்றி: சரவணன் விவேகானந்தன்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்