நிறமாலைமானி

12 நிமிட வாசிப்பு

முப்பட்டகம் எப்போதும் நிறங்களைப் பிரித்துக்காட்டுவது என்று கூறுவதைவிடப் பகுத்துக்காட்டுவதெனக் கூறுதல் பொருந்தும். மேசையின்மீது காலப்பரிமாணத் திசையானது மூன்றெனக் காட்டி அமர்ந்திருக்கிறது. அதன் ஒவ்வொரு விளிம்பிலும் மனித இனம் தன் பரிணாமத்தின் முன்னெடுப்பைக் கடந்துசெல்ல முயல்கிறது, விளிம்பு வளைவில் ஈடுபட்ட ஓர் ஒளிக்கதிரென.

பரிதியின் மனைவிக்கு இரு கால்களும் வெவ்வேறு உயரம் கொண்டவை. அடியெடுத்துச் செல்கையில் அவளின் வலது கால் நீளமாக இரண்டு அடி தொலைவு உந்திச்சென்றால், அவளது இடது கால் ஓர் அடி அளவுக்கு மட்டுமே உந்த முடியும். பிறவிக் குறைபாடு என்று தெரிந்தேதான் தாரணியை மணந்துகொண்டான்.

அதிகாலை வழக்கம்போல் தான் பணிபுரியும் கல்லூரியின் ஆய்வகத்திற்குச் செல்கிறான். வைகறையின் வீசு பனியில் இருள் அணைவதற்கு முன்பாக, பகல் தன் அடர்த்தியைக் கூட்டிக் காட்டும் வல்லமை கொண்டது. அந்திமச் சாயலை எவ்வித உறுத்தலுமின்றிப் பார்த்துக்கொண்டிருப்பது இவனின் அநாமதேயக் கற்பனை. உண்டாகும் மனக்கிளர்ச்சியில் தவிர்க்க இயலாத உபகாட்சிகள் பறவைகளாய் மிதந்து கொண்டிருந்தது. அதிகாலை இருளில், அவன் தன் நிழலைத் தோளில் வைத்துத் தூக்கிப்போவதுபோல் தெரிகிறது. காற்றடி காலம் காற்றாடிகளின் காலம். தன் முகம் முழுவதும் சுழன்றும் வடிவம் மாறாது நின்றுகொண்டிருப்தைப்போலவே காற்றாடியின் வயது, சுழன்றும் இளமை மாறாது உறைந்துபோனது. காற்றாடியை எடுத்துக்கொண்டால் பருவ காலத்தைப் பொறுத்தும், காற்றின் மோதும் அளவு பொறுத்தும் மாறுவது இயல்பு. ஆனால் காற்றாடியின் மையம் மனித ஆன்மாவைப் போலானது. அதன் பொருண்மை மாறாதிருக்கும்வரையே தனது மையத்தைப் பற்றியவற்றை மாற்ற இயலும்.

மையம் > சுழலும் காலம் > விளைவுகள்

ஆன்மா > உடலின் இயக்கம் > செயல்

ஆய்வுப்படி ஒளியொன்றால் மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது. அதற்குப் பிறகு வரலாற்றில் பச்சோந்தியைக் கூறலாம். இனக்கலவரம் நடக்கும்போதெல்லாம் அதில் தப்பித்த விலங்கினங்களில் நிறத்தையே மாற்றிப் பிழைக்கும் பச்சோந்தியொன்றுதான் கொல்லப்படாதது. அதிகாலையின் இருளும் அவ்வாறே அவனிடம் தனது மூச்சடைப்பை வழியெங்கும் கூறிக்கொண்டே வர, ஆய்வகத்தின் கதவு பெரிய சப்தமோடு அறையைத் திறந்துகொண்டது. இருக்கும் எல்லாச் சோதனைக் கருவிகளையும் உயிரூட்டிப் பார்ப்பது அவனது வழக்கம். மிகவும் பிடித்தமான நிறமாலைமானி போர்த்தியிருந்த அதன் நிழலை விலக்கி தன் நிர்வாணத்தை அப்பட்டமாகக் காட்டியது.

உற்றுப்பார்க்கும் பார்வையோடு கண்ணுக்குள்ளே வந்து கூடடைந்துகொள்ளுமளவு செறிவு கூடியிருந்தது. எனக்கொன்றும் தெரியாது வேண்டுமென்றால் உள்ளே வந்து சோதனையிட்டுக்கொள் என்று உண்மையாகத் தாராள மனதுடன்தான் கூறுகிறது முன்பைவிடச் சற்று ஒளி கூடியிருந்த சோடியம் விளக்கு.

ஒளியொன்றால் மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக இந்தக் கருவிகளே கதியென்று கிடக்கும் பரிதி தனக்கு நேர்ந்த சோதனையான எண்ணத்தை வெளிக்கொணரும் நிகழ்வினால் இப்படியொரு விளைவைச் சந்திக்க நேரிடுமென அவனே எதிர்பார்த்திராதது. இதுவரையில் அவன் சந்தித்த சில தீவிரமான மன அழுத்தம் ஒருவேளை இப்படியொரு முடிவிற்கு தள்ளியிருக்கக்கூடும். இவ்வறையில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாகத் தெரியவில்லை. நிறமாலைமானி முன்பாகப் பல வருடங்களாய்ப் பயன்படுத்திவந்த அதே முப்பட்டகத்தில் மெல்லுருவாக மேசையின் முதல் அடுக்கிலிருந்து எடுத்த நிறமாலைமானியின் மேசைமீது வைத்தான். அது லக்னோ கதிரியக்க ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்டுப் பிற்பாடு குறைந்த விலைக்கு விடப்பட்ட ஏலத்தில் அதை வாங்க வற்புறுத்தியதும் இவன்தான். இந்த மேசையும் கிட்டத்தட்ட அதைப்போலத்தான், ஏதோவொரு பெரிய பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தி இரண்டாம் தரமாக ஏலத்தில் எடுக்கப்பட்டது. இப்போது பெரும்பாலான கல்லூரிகளில் ஏலத்தில் எடுத்த கருவிகளைக்கொண்டு ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதென்பது அதிகம் தெரியாத ரகசியம்.

யாரும் யூகிக்காத கணம் நிறமாலைமானியின் தொலைநோக்கிக் கண்ணாடியில் தூக்கிட்டுக்கொண்டது போல் முன்பின்னென அலைவுறுகிறது பெண்டுலம். அந்த பெண்டுலத்தைப் பார்க்கும்போதெல்லாம் தனது மனைவியின் நினைவு மேலெழும் அவனுக்கு, சுறுக்கிட்ட கழுத்து முழுவதும் அழுத்தாமல் துடிதுடித்தாவது பாதி உயிர் எஞ்சியிருந்ததுபோலத்தான் நினைத்துக்கொள்வான். ரணமுற்றடங்கிய அவள் உடலின் பெருவிரலுக்குத் தரை பல மணிநேரம் தொலைவிலிருந்தது. இன்று பரிதியோடு யாருக்கும் தெரியாமல், அவனது இந்த விபரீதச் சோதனைக்கு உடன்பட ஆய்வகத்துக்குள் நுழைத்திருக்கிறாள் தாரணி. சத்தமிட்டு நடந்து பழகிய அவளின் கால்கள் தெரியாமல் அருகிலிருந்த ஒளியியல் நீர்மத்தைத் தட்டிவிட (நிறமாலைமானியின் “அளவுகோலில்” குவிமையப்படுத்தப் பயன்படும் ஒருவிதத் திரவம்) ஒரு பெருங்கிணற்றின் அடர்த்தி குறும் குப்பியில் அமர்ந்திருந்து பின்பு சாய்ந்து விழுந்து தரையில் சிந்தியது.

நீர்மம் நிச்சயம் ஓசையிட்டிருக்காது. அத்தகைய இழிவான நாக்கு அதற்கில்லை. எதற்கெடுத்தாலும் கூச்சலிடுவது, அகக்குரலுக்கு ஒலியூட்டுவதென்று சித்த வெளியில் உலவும் மனிதர்களின் அதிகப்பிரசங்கித்தனம். அவர்களைப் போன்றவர்கள்தான் இதுபோன்ற நனவெளியில் பருப்பொருட்களின் ஓசைகளை அதிலும் நீர்மத்தின் ஓசையைக் கேட்க அதை ஒரு குப்பிக்குள்ளிட்டு நிரப்பி வைப்பர்.

தனது கடைசி நம்பகத்தன்மையென தூக்கிலிடப்பட்ட தம்பதியருள் தாரணி உதவிக்கு அழைத்தது என்னமோ உண்மைதான். கடையில் ஈயக் குண்டுகளை கயிற்றில் கட்டி அது ஊசலாடுவதைப்போலத் தொங்கிக்கொண்டிருந்தனர்.

தாரணியின் கால்கள் சரிசமமாக வளர்ந்ததல்ல. இடது காலைவிட வலது கால் ஒரு திருகளவு அதிகம். நொண்டி நொண்டியே நடக்கும் தனது மனவையின் உயர அளவைச் சரிசெய்யக் கோரி முயலாத மருத்துவக் குறிப்புகள் இல்லை. தற்போது அவளது உயரம் குறைந்த இடதுகாலின் எலும்பில் கிருமித் தொற்றுவேறு பரவ ஆரம்பித்திருக்கிறது. சரிசெய்வதற்கு லட்சக்கணக்கில் ஆகுமென்பதால் நிலைகுலைந்து போனான் பரிதி. இதுவரை அவளது கால்கள் ஊனமுற்றதென்ற எண்ணமேயில்லாது வாழ்ந்து வந்தவன், எப்போதும் அந்த ஆய்வகக் கருவிகளைப் பற்றியே சிந்தித்து வந்தவனுக்கு இம்மாதிரியான சிக்கல் பிரளயத்தை உண்டுபண்ணியது. உண்மையில் முப்பட்டகத்திலிருந்து வெளியேறும் மின்காந்த ஒளிக் கற்றைகளின் அலைநீளம் கூட ஒரே அளவில் இருப்பதில்லைதானே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டவன்தான் என்றாலும் கருவிகளோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கும் பரிதிக்கு வேறுவழியில்லை. அவனுக்கு அன்று தோன்றிய அந்த விநோதமான எண்ணம் யாதெனில், பிறவிக்குறைபாடான அவளது கால்களை நிறமாலைமானி கொண்டு சரிசெய்து விடலாமென்ற யோசனைதான். தாரணியின் உடல் எப்போதும் புவியச்சுக்கோட்டிலிருந்து 10° சாய்ந்திருப்பது சரியல்லவென்றும், அவளுக்காகப் போராடி ஆய்வகத்தில் பழையது என்று வீசப்பட்ட ரசமட்டத்தை எடுத்து சரிசெய்து எடுத்துவந்த பரிதி மேசையின்மீது தாரணியை நிற்க வைத்து அவள் கால்களை அளவெடுக்கத் துவங்கினான். ரசமட்டத்தால் அளவிட்டு உயர மாறுபாடு சரிசெய்யும்வரை அவளது கால்கள் அசையாமலிருக்க வேண்டும். நிச்சயம் அது ரணவேதனை.

தாரணிக்கு இதில் நம்பிக்கையே இல்லை. இது இயற்பியல் ஆய்வகத்திலேயே வேலை செய்தவொருவனின் வெற்றுப் பைத்தியக்காரத்தனமென்று கூறுவாள். அவள் கிட்டத்தட்ட தனது வாழ்வின் வெறுப்பு கணத்திற்கு அதிகமாகப் பழகியிருந்தாள். இதுவரை இரண்டு முறை அவள் தற்கொலைக்கு முயற்சித்ததும்கூட அவனை இதுபோலக் கிறுக்குத்தனங்களுக்குத் தூண்டியிருக்கலாம். ஆனால் ஒருவேளை இத்திட்டம் வெற்றியடைந்தால் கால் ஊனமான பலபேரை இம்முறை கொண்டு சரிசெய்யலாம்தானே. நிறமாலைமானிக்கு நேராக விட்டத்தில் கயிற்றைக்கொண்டு ஆதரவாக மானியின் மேசையில் தன்னிரு கால்களை நீட்டியபடி நின்றாள்.

மேலும் சலிப்புற்றவள் தன் கால்களை மேசையின் விளிம்பில் தொங்கவிட்டு தொலைவில் தெரிந்த பெண்டுலத்தை எட்டி உதைக்க பிரயச்சித்துக்கொண்டிருந்தாள்.

இது பெண்டுலம் தானே…

ஆமாம்…. நீ தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்ததிலிருந்து இதைப் பார்க்கையில் உன்நினைவுதான் வரும்…

அவள் சத்தம் அதிகம் கேட்காதபடிச் சிரித்தாள்.

அவன் எரிச்சலைடந்து ப்ப்ச்ச் என்றான்.

அறை அமைதியில் திளைத்தது.

அவனுக்கு அன்று தோன்றிய அந்த விநோதமான எண்ணம் யாதெனில், பிறவிக்குறைபாடான அவளது கால்களை நிறமாலைமானி கொண்டு சரிசெய்து விடலாமென்ற யோசனைதான்.

மறுநாள் ஒரே அறையில் அவர்கள் ஒரே மாதிரி தற்கொலையுண்ட அதிர்ச்சியைவிட அவர்கள் இங்கு எப்படி நுழைந்தனர் என்ற கேள்விதான் இங்கு அனைவரிடமும் இருந்தது. பரிதியை ஆய்வகத்தின் பொறுப்பாளர் வேலையிலிருந்து நீக்கி இரண்டு மாதங்கள் ஆகியும் அவன் இரண்டொரு முறை இங்கு வந்து, ‘அந்த விலையுயர்ந்த முப்பட்டகத்தைத் தான் தெரியாமல் உடைத்துவிட்டதாகவும் இனி இந்தத் தவறு நடக்காதென்றும்’ கெஞ்சிப்பார்த்தான். ஆனால் நிர்வாகம் மசியவில்லை.

பிறகு ஆய்வகத்தினை விட்டுப்பிரிய மனமின்றி கருவிகள் குறித்தே சிந்திக்கத் துவங்கினான். குறிப்பாகத் தனக்குப் பிடித்தமான நிறமாலைமானி குறித்து. நீள வெளியில் திரியும் ஒளியெனும் பேராற்றல் தனது விழுதுகளால் நிழல் பரப்பிப் பூமியை ஆட்கொள்ளும் அற்புதத்தை 30 கிலோ கருவியில் கண்டறியும் சூத்திரம் அதில் முக்கியமானது. அதைப் பிரித்து அல்லது பகுத்துக் காண்பிக்கும் முப்பட்டகம் சரியான உயரத்தில் அதாவது மேசையானது பூமியில் நிறுத்துவதைப்போலச் சமமட்டமாய் இருக்க வேண்டும். இன்றேல் ஒளி மறைந்து அதன் நிழலே பெருகுவது எஞ்சும். ஆக ரசமட்டம் கொண்டு மேசையைச் சம்படுத்துவதன் மூலம் அதன்மேல் நிற்க வைத்த தனது மனைவியின் கால்களின் உயரமும் சம உயரளவு சரிசெய்யப்படும் என்பதே அவனது எண்ணம்.

மேசையின்மீது தொங்கிய மனைவியின் கால்கள் அப்படியே உறைந்தது. மேலும் தாரணி சற்று எடை அதிகம் என்பதால் கயிறு அவிழ்ந்துகூடக் கீழே விழலாம்.

நிறமாலைமானி ஒவ்வொரு பௌதிக ஆய்வகத்திலும் வளர்க்கப்படும் செல்லப்பிராணி. அதன் கண்கள் மிக அருகில் உள்ளவற்றையும் தெளிவாக்கிக் காட்டுமளவு நுண்ணோக்குப் பிம்பக் கோளங்களாகும். அதன் முதுகில் வைத்து அளவிடும் முப்பட்டகத்தை, கொலை நடந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோப்ப நாயைப்போல நிறமாலைமானி தன் தொலைநோக்கியால் நின்ற இடத்திலிருந்தே நம்மைத் தேடி அழைத்துப்போகும். தொலைவு பெரும்பாலும் ஒரு பூதாகரமானவொன்றாக நம்ப வைத்தே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். தொலைவு என்பது ஏதுமற்ற வெளி. இன்னுமும் கூறினால் ஏதுமில்லாதிருப்பதே தொலைவுக்கான அடையாளமாகும். தற்போது கூர்மையப் புள்ளியில் தாரணி தொங்கும் மிக முக்கியமாக நுண்ணோக்கியின் வழித்தடம் தூர அளவுகளைப் பற்றிச் சொல்லும் ரகசியப் போக்கிடம்.

நின்று எரியும் சோடியம் விளக்கு அறையை மஞ்சளாகக் காட்ட தாரணி சாகும்போதும் மஞ்சள் பூசிக் குளித்திருந்தாள். அதைத் தன் கணவனின் முகத்திலும் பூசி விளையாடியிருக்கிறாள். இப்போது அறை முழுதும் தனிமை பேச்சற்றுக் கிடக்க எதையோ சொல்ல எத்தனித்த மின்விசிறியையும் அணைத்துவிட்டார்கள்.

யாருக்கும் தெரியாமல் ஆய்வகத்துக்குள் அழைத்துவந்து நிறமாலைமானியின் சிறிய மேசையில் கால்கட்டைவிரலால் நிற்க வைத்துவிட்டு மேலே விட்டத்தின் கம்பியில் கட்டப்பட்ட கயிற்றைப் பிடித்தபடி சோடியம் விளக்கின் ஒளியில் நிற்கிறாள் தாரணி.

இப்போது அவள் நிற்கும் இடத்திற்கு நட்டநடு நேராக நிறமாலைமானி மோம்பம் பிடிக்கிறது 0° -180° என்ற கோணத்தில். மிகவும் தேர்ந்தெடுத்த அளவுகளால் பரிதி நிறமாலைமானியின் தொலைநோக்கியை இயக்குகிறான். கயிறானது தாரணியின் கழுத்தை ஒட்டித் தெரிவதால் அவள் தூக்கிட்டுத் தொங்குவதுபோல் தெரிந்தது. சாளரத்தின்வழியே உள்ளேகும் பகல் வெளிச்சம் மேசையின் விளிம்பில் தாரணியைப்போல் நிற்கிறது ஆனால் மங்கலாக.

இங்குதான் தொலைநோக்கியின் யதார்த்தச் சிக்கல் வெளிப்படுகிறது. அதாவது தாரணியை நோக்கினால் பகல் மங்கலாகத் தெரிவதும் பகலை நோக்கினால் தாரணி மங்கலாவதும் விஞ்ஞானக் கவிதைக்குள் மொய்க்கும் புரிந்துவிடாத விவரணைகளாகும். இப்போது நிறமாலைமானி வலதுபக்கமாகத் திரும்புகிறது. விளக்குக்குள் கவனம்கொள்ளும் அதன் உடல் 312°4′ – 132°19′ கோணத்தில் நிற்கிறது. எதேர்ச்சையாய் அளவிடுகையில் அவள் பிடித்துக்கொண்டு நிற்கும் கயிற்றை நுண்ணோக்கிப்பார்க்க அவனுக்கோ பேரதிர்ச்சி.

சிதிலமுற்ற தொலைநோக்கியின் கண்ணாடியின் வழியே குவியப்படுத்துவதில் நேர்ந்த பிழையால் அக்கயிறானது “இரண்டாகத்” தெரிந்தது. அச்சுஅசலாக ஒரே மாதிரி இருப்பதோடு இரண்டு கயிறும் ஒரே முனையில் கட்டப்பட்டு 80 cm தூரத்தில் தொங்குவதாக நம்ப ஆரம்பித்தான். தனது தாரணியோடு உடன் மற்றொரு கயிற்றில் தொங்குவது யாரெனுவும் ஐய்யமுற்றான். யோசிப்பதற்கு நேரமில்லை. அது தான்தான் எனவும் பயந்துபோய்த் தன்னைக் காப்பாற்ற வேண்டுமெனில் அவ்விரண்டு கயிற்றை ஒன்றாக மாற்ற வேண்டி, தொலைநோக்கியின் அளவுருவைச் சரிசெய்யத் துவங்கினான். ஆனால் அவையாவும் அவன் அறியாத செய்முறை. தனது முழு ஆய்வும் முடியும்வரை அவளது விரலும் கழுத்தும் மேசையில் பளு தாங்குவது சிரமமானதென்று அறிந்தும்கூடத் தனது ஆய்வைத் தொடர்ந்தவன், தாரணியும் தன் கால்களைச் சரிசெய்ய உதவியதால் தன்னோடு சேர்த்து உண்டாகியிருக்கும் மற்றொரு கயிற்றைத் தனது கணவன் இறந்துபோவதை விரும்பாதவள் வலி மொத்தத்தையும் பொறுத்துக்கொண்டு அசையாது நின்றாள். எவ்வளவு முயன்றும் இரண்டாக மாறிய கயிற்றை மீண்டும் ஒன்றென மாற்ற இயலவில்லை. தொலைநோக்கியின் சிதிலமுற்ற கண்ணாடியால் உண்டாகியிருக்கும் மாயக் கயிற்றை அறுத்தெறியவும் இயலாதது என்பது கூடுதலான சிக்கல்.

பரிதி திகைத்து நிற்கிறான். குறித்துவந்த அளவுகளில் ஏதோவொரு பிழையிருக்கலாம். ஏனெனில் சம்பந்தமேயில்லாமல் இருவரும் ஒரே முனையில் கட்டப்பட்ட வெவ்வேறு கயிற்றில் ஆனால் ஒரே மேசையில் நிற்பது யாதார்த்தத்திற்கு மாறானது. அதாவது பரிதியும் தாரணியும் ஒரே முனையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இருவரின் கயிறும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும். எல்லாம் இந்தத் தொலைநோக்கியைத்தான் குறைகூற வேண்டும். கயிறு திரிப்பவர்களுக்குத் தெரியும். எப்படி ஒரு ரேகை போல மற்றொரு ரேகை உருவாக முடியாதோ, ஒரு ரேகை திரித்த கயிற்றின் முடிச்சைப்போலவே மற்றொரு கயிற்றையும் திரிக்க இயலாது. அவ்வாறே திரித்தாலும் பின்னல் வரிசையாவது மாறுமே தவிர அச்சு அசலாக இருப்பது அபூர்வம். ஒளித்துகளைச் சகட்டுமேனிக்கு உமிழ்ந்துகொண்டிருக்கும் சோடியம் விளக்கோ எதற்கும் அசையவதாயில்லை. வலிதாங்க இயலாது வேகமாக அசையும் அவளது கால்களுக்கு நேரே ஒளித்தம்பம் மிதந்துகொண்டிருக்கிறது.

பின்பு அவன் சற்றும் தாமதிக்காமல் நிறமாலைமானியின் கழுத்தைத் திருப்பி இடதுபக்கம் பார்த்தது 71°2′ – 254°30′ கோணத்தில். இந்த முறை அதைவிடச் சிக்கலுற்ற வினோதம் என்னவெனில் முன்பே கூறியது போல, நிறமாலைமானியில் குவியப்படுத்துவதில் நேர்ந்த பிழையினால் (focusing) அந்த ஒற்றைக் கயிறு இரண்டாக மாறியிருந்ததில், தாரணி தொங்கிய கயிற்றைப் போல் மற்றொரு கயிறானது உருவாக்கப்பட்டதால், அந்தப் புது கயிற்றில் தொங்கிய பரிதியும் தாரணியைப்போல மாற்றியிருந்ததைக் கண்டு அவன் நம்ப இயலாத அதிர்ச்சிக்கு ஆளானான். ஆம் அவனது மனைவியின் கால்களைச் சரிசெய்ய வந்தவன் கடைசியில் தனது கால்களும் அவளைப்போல் உயரம் மாறுபட்டிருக்கிறது. ஆனால் அவனுக்கு அப்படியே நேரெதிராக வலது காலைவிட இடதுகால் ஒரு திருகளவு உயரமாக மாறியிருந்தது. எல்லாம் அந்தச் சிதிலமுற்ற தொலைநோக்கியின் கண்ணாடியால் நேர்ந்த விளைவு. கண்ணாடி தோற்றுவிக்கும் பிம்பம் எப்போதும் நிஜத்திற்கு எதிரானதென்பதால் இந்த நிலை.

பரிதிக்குத் துக்கம் கலந்த பயம் நெஞ்சை அடைத்தது. அச்சு பிசகாமல் நின்றுகொண்டிருக்கும் தாரணியோ, நான் வேண்டுமானால் இறங்கிக்கொள்கிறேனே. எனது கால்கள் சரிசெய்யப்பட வேண்டாம். எனக்கு இந்தப் பிம்பமே போதுமானது என்கிறாள். இவன் ஆத்திரமுற்றுக் கத்தத் துவங்கினான் (சத்தம் அதிகமானால் யாரேனும் வந்துவிடக்கூடுமென்பதை உணர்ந்து கம்மிய குரலிலே திட்டினான்). நீ உபத்திரமுற்றவள். உன்னால் நானும் நொண்டியாகிவிட்டேன் என்க, அவள் நின்ற இடத்திலிருந்தே அழத் துவங்கினாள். பிறகு பொறுமையானவன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டபடி ஆய்வைத் தொடர்ந்தான்.

அவனுக்கு ஒன்று தோன்றியது. அவளுக்கு வலதுகால் நீளமாக இருந்ததும், இவனுக்கோ இடதுகால் நீளமாக மாறியதும் ஒருவகை எதேச்சையன்று. தாரணியும் பரிதியும் திருமணம் செய்துகொண்டதற்கான காரணம் இப்போதுதான் விளங்கியது.

அதாவது நிறமாலைமானியின் மேசையில் வைக்கப்பட்ட முப்பட்டகத்தை ரசமட்டம்கொண்டு சரிசெய்வதைப்போலத் தாரணின் கால்களைச் சரிசெய்வதாக தனது கால்களையும் சரிசெய்ய முயற்சித்திருக்கிறான். தற்போது தாரணியின் ஊனத்தைச் சரிசெய்வதென்பது இதுநாள்வரை மறைந்திருந்த இவனது ஊனத்தையே சரிசெய்வது போன்றதாகும். கோணலான அதாவது வளர்ச்சியற்ற கால்களைத் தான் நேசிக்கும் நிறமாலைமானியின் மூலம் சரிசெய்துவிடலாமென்று நினைத்திருந்த கணக்கு பிழைதப்பி எங்கெங்கோ இட்டுச் செல்கிறது. ஆனால் அவனது தவறு என்னவெனில் அவனுக்குக் கால்களைச் சரிசெயவதற்கு முன்பு சோடியம் விளக்கிலுள்ள ஒளித்தம்பத்தைக் கண்டறியவேண்டுமென்பதை மறந்திருந்தான். ஒளித்தம்பத்தை ஒருவேளை கண்டறிந்திருந்தால் நிறமாலைமானியின் முதுகை விரும்பம்போல் வளைத்து விளையாடியிருக்கலாம். ஆனால் அவ்வாறின்றி அந்தப் பிசங்கிய மனநிலையிலேயே அவன் நுண்ணோக்கியில் முப்பட்டகத்தை வைத்திருக்க வேண்டும்.

நின்றுகொண்டிருந்த தாரணியின் கால்களை சோடியம் விளக்கு படும்படி நீட்டச்சொன்னான். நிறமாலைமானியை இழுத்து இடதுபக்கம் கொண்டுபோனவன் 340°10′-160°20′ கோணத்தில் வைக்க இரு கால்களும் தெரிந்தது. தாரணியின் நீண்டு வளர்ந்த வலதுகாலை நிலையாக வைத்து உயரம் குறைந்த இடதுகாலை மெதுவாக முப்பட்டகத்தைச் சுற்றி நீளச்செய்தான். அது சோடியம் விளக்கொளிரும் நுண்ணோக்கியல் மட்டத்தில் மீள்தன்மை கொண்டதால் “வலதுகால் குறிப்பிட்ட cm வரை நீண்டு பின்பு மறுபடியும் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது”. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நீளும் காலானது ஒரு நொடி நின்று பின்பே பழைய நிலைக்குச்செல்வதை அறிந்துகொண்டவன் எவ்வளவு நீளம் வரை நீளுகிறதென குறித்துக்கொண்ட பின் அந்த அளவோடு நிறுத்திக்கொண்டு தன் மனைவியைப் பார்த்தான். தாரணிக்கும் தன் கால்கள் எப்படித் தன்னையறியாமல் அளவு மாறுகிறது என்று புரியாமல் திகைத்துக்கொண்டிருந்தாள். அவளை மேசையைவிட்டு இறங்கக் கூற, தாரணியால் நம்ப முடியவில்லை. தன்னிரு கால்களும் ஒரேயளவில் மாறியிருந்தது. களிப்பில் துள்ளிக்குதித்தாள்.

அவன் ஏதோ சொல்வதுபோலிருந்தது. அதெல்லாம் அவள் காதுகளில் நுழையவில்லை. இதுவரை தன்னை ஊனம் என்று ஏளனப்படுத்திய கண்களை இந்த நிறமாலைமானி வழியே பார்க்கச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் இதில் மிகமுக்கியமான விதிமுறையானது. கால்கள் நிலைபெறும்வரை நிறமாலைமானியின் கழுத்தை அதே கோணத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்திராத பரிதி தனது கால்களையும் கையோடு சரிசெய்துவிடலாமென, மீண்டும் கோணத்தை மாற்றி மானியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தான்.

தொலைவு என்பது ஏதுமற்ற வெளி. இன்னுமும் கூறினால் ஏதுமில்லாதிருப்பதே தொலைவுக்கான அடையாளமாகும்.

அந்நேரம் மனதால் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தவள் உண்மையாகவே துள்ளிக்குதிக்க முற்பட்டு மீண்டும் மாறிவிட்ட சமமற்ற கால்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் தரையிறங்க பொத்தென அவள் விழுந்ததும்தான் இருவருக்கும் தெரிந்தது, கால்கள் மாறிடாது அதே நிலையிலிருப்பதை. அந்த ஏமாற்றத்தை அவ்விருவராலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை மற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தாரணி வீறிட்டு அழத்தொடங்கினாள். சத்தமிட்டு அழுவதால் யாராவது ஆய்வகத்துக்குள் வந்துவிடலாமென்றும், அவ்வாறு நேரிட்டால் நாம் இருவரும் சட்ட விரோதமாக நுழைந்திருக்கிறோம் சப்தமிட்டு காட்டிவிடாதே எனத் தன் மனைவியைச் சமாதானப்படுத்தினான். இயலாமையிலிருந்து சிலநொடிகள் மீண்டெழுந்து கால்கள் புதிதாக உலகமே உவகையில் மிதந்தவள் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத அவளுக்கோ ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. சமாதானமாகிக் கண்ணைத் துடைத்தாளேயொழிய அவன் மேற்கொண்டு கூறியது எதையும் அவள் கேட்கவில்லை.

சரி இந்தமுறை எனது கால்களை வைத்துச் சோதித்துப் பார்ப்போம் என்று அவன் கூறியதும் எப்படி இந்த மானியை இயக்க வேண்டும் என்று அவன் சொல்லிக்கொடுத்ததையும் அரைகுறையாக கேட்டுக்கொண்டிருப்பவள் சித்தப் பிரமை பிடித்தவளாய்ச் சென்று நிறமாலைமானியின் முன்பு நின்றாள். இப்போது நிறமாலைமானியை இடது பக்கம் கொண்டு செல்ல வேண்டும் (ஏனெனில் பரிதிக்கு இடதுகாலே நீளமானது) ஆனால் தனது உயரம் குறைந்த வலது காலையே நினைத்துக்கொண்டிருந்தவள் வலது பக்கமாய்த் திருப்பினாலும் பரவாயில்லை. கோணத்தை மாற்றி 160°20′-340°10′ என்று வைப்பதற்கு பதிலாக 340°10′-160°20′ என்ற கோணத்தில் வைத்துத்தொலைத்தவள் அதேபோல அளவுருக்களைச் சரிசெய்ய முயலுகையில், தனது கால்களே அவள் கண்முன் தோன்றியது.

தன் வலதுகாலை எண்ணியபடி நீட்டிக்கச் செய்துவிட்டு ஆய்வை முடித்து அவரை மேசையைவிட்டு இறக்கும்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. தன் கணவனுக்கு ஏற்கனவே உயரமான வலதுகாலை மேலும் உயரமாக்கியிருந்ததை இருவரும் கவனித்தனர். அவ்வளவுதான்.

“கடவுளே உன்னைவைத்துக்கொண்டு…..”என்று அவன் அடிப்பதற்குக் கையோங்கினான். தன்னால் தன் கணவனின் கால்களை மேலும் ஊனமாக்கிவிட்டதை அறிந்து விம்மி அழ ஆரம்பித்தாள். அவளைத் திட்டவும் முடியாமல் முன்பைவிட ஊனமாகிவிட்ட தன் கால்களால் நிற்கவும் முடியாமல், இவ்வளவு தூரம் முயன்றும் தனது பரிசோதனை இப்படி ஒரு விளைவைச் சந்தித்ததாலும், அவனும் உணர்ச்சி விசும்ப அழத்தொடங்கினான்.

வெறியுற்றவாறு ஆய்வகத்திலிருந்த எல்லாக் கருவிகளையும் (நிறமாலைமானியைத் தவிர) அடித்து நொறுக்கினான். கிருமித் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வர, இனி உயிர் வாழ்வதற்குச் சாத்தியங்களே இல்லாத நிலையை எட்டியிருக்கும் தாரணியையும் அவளைக் காப்பாற்ற வேறு வழியேயில்லாத பரிதியும் பிரம்மை பிடித்தாற்போல் வெகுநேரம் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, செய்வதறியாது விழித்த இருவரும் காற்றில் ஆடிக்கொண்டிருந்த கயிறுகளை ஒருசேரப் பார்த்தனர். இருவரும் அழுது முடித்தபோது இருளாகியிருந்தது. பின்பு இருவராலும் கயிற்றில் எடை கூடியது.

நிறமாலைமானி எந்தவித மாற்றமுமின்றி அதேபோல் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

விசாரணையில் முதல் கட்டமாக இருவரின் மரணத்தைத் தாண்டி, தொங்கும் அவர்களின் பிணத்திற்கு நேர் கீழாக கிடக்கும் நிறமாலைமானியின் நுண்ணோக்கியினைச் சரிசெய்துகொண்டு தலைக்குமேல் உள்ள தாங்கியின் சின்ன அளவுருவைச் சோதனையிட்டனர். உடைந்து ஒட்டவைக்கப்பட்ட முப்பட்டகம் மானியின் மேசையில் அப்படியே யாரும் தொடாதபடி நிற்கிறது. நடந்த விளைவுகளை ஓரளவு யூகித்துவிட்ட அதிகாரியால் பரிதிக்கு இந்த யூகம் எப்படித் தோன்றியிருக்கக்கூடுமென வியந்துபோனார். மேற்கொண்டு கையுறையோடு ஆய்வைத் தொடர்ந்த அவர்கள், யாரும் செய்திடாத ஒரு புது சோதனையை எவ்வாறு அவன் எவ்வாறு செய்திருப்பான் என்று யூகிக்கத் தொடங்கினர்.

புலனாய்வு அதிகாரியின் விரலில் கீழே சிந்தியிருந்த அவ்வொளியியல் திராவகம் கண்ணைக் கூசச் செய்தது. இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்காத தடயங்களை எண்ணி, கணங்களை முறைத்ததற்குக் கடிகாரம் வெறியோடு அடுத்தடுத்த நொடிகளைத் தாண்டி போனதுதான் மிச்சம். விளக்கிற்குள்ளிருக்கும் ஒளித்தம்பத்தைக் கண்டறிவதுதான் ஒரே வழி என்றெண்ணியவர், பரிதியால் கடைசியாக வைக்கப்பட்ட கோணத்திலேயே இருந்த மானியின் தொலைநோக்கியின் வழியே நோக்கினார்.

சட்டென பொறிதட்டியதுபோல வேகமாகப் பரிதி வைத்திருந்த இரண்டு பக்கக் கோணங்களையும் கூட்டி அதை இரண்டால் வகுத்துப் பார்த்தார். 60°14′ என்று விடை வந்தது. எதையோ கண்டறிந்ததாய் அவர் முகத்தில் சோடியம் ஒளியில் பிரகாசம் கூடியது. இப்போது நிறமாலைமானி வழியே தெரிவது ஒளிதம்பமே. ஆனால் அவர் முகம் இவ்வளவு அதிர்ச்சியுறக் காரணம் அங்குத் தெரிவது இரண்டு ஒளித்தம்பம் என்பதால். ஒன்றுக்கொன்று அடர்த்தியாகச் சற்றிடைவெளியில் நிற்கும் அத்தம்பங்கள் எதன் அறிகுறி அல்லது எதற்கான குறியீடு என்று குழம்பினார். ஏனெனில் இதற்கு முன்பு பார்த்த அத்தம்பதியருக்கு ஒன்று மட்டுமே தெரிந்திருக்க இவனுக்கோ இரண்டு ஒளிக்கற்றை தெரிவது குறிப்பிடத்தக்கது. அதிகாரி பரபரப்புடன் மறுபடியும் அத்தம்பங்களைப் பார்த்தவர் கண்கள் விரிய நெஞ்சில் கைவைத்து அமர்ந்துவிட்டார். ஏனெனில் அவ்வொளித்தம்பங்களில் கீழ்ப்பகுதியில் ஒன்றில் ஒளி கூடியும் மற்றொன்றில் ஒளி மங்கியும் தெரிந்தது. பிறகுதான் இவருக்குப் புரிந்தது. சோடியம் விளக்கினால் உண்டாகும் ஒளித்தம்பங்கள் என்பவை மேசையில் முப்பட்டகத்தோடு ஏற்றி வைக்கப்படும் ஆன்மாவின் பிரதிபலிப்பு என்று.

அருகிலிருந்த சோதனையாளர் வினவினார்,

ஆக, பரிதி செய்த தவறு. யாதெனில் முப்பட்டகத்தின் விதி அறியாது, தொலைநோக்கியால் இரண்டு ஒளிக்கற்றையாக மாற்றியதுதானா..?

ஆம். ஒளிக்கற்றை எப்போதும் உடலில் உலவும் ஆன்மாவைப்போல் ஒன்றாக இருப்பதே விதி.

புரியவில்லை. விளக்கமாகக் கூறுங்கள்.

ஒரு விளக்கினுள்ளாக இரு திரிகளை ஒரே சமயத்தில் ஒளிரூட்ட முயன்றால், இறுதியில் அவ்விரண்டும் ஒரே அடர்த்தியாக மாறுவதைப்போலானது.

ஆக முன்னே தெரியும் அவ்விரண்டு ஒளித்தம்பங்களும் இறந்து தொங்கும் அவ்விரண்டு பேரைக் குறிப்பதாக அறிந்துகொண்டனர்..

அவனுக்குத் தோன்றியது, ஒருவேளை இவ்விரண்டு ஒளிக்கற்றையையும் ஒன்றாக இணைத்தால், ஒருவேளை தனித்தனியே இறந்துதொங்கும் இருவரும் ஒரே கயிற்றில் தொங்குமாறு கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டு வருகையில் ஒரு கயிற்றில் ஒருவர் தான் தூக்கிட்டுக்கொள்ள முடியுமென்ற உலக நியதிப்படி இறந்தது ஒருவர்தான் என்று நம்பவைக்கலாம். இதன் மூலம் யாரேனும் ஒருவரைக் காப்பாற்ற இயலுமல்லவா என்று கணக்கு போட்டு முடித்துமே படபடப்பில் இவர்களுக்கு வியர்க்கத் துவங்கியது. இது எத்தகு பெரும் கண்டறிதல் தெரியுமா. புலனாய்வு அதிகாரிகள் படபடப்பில் மும்முரமாகினர்.

உடனே சோதித்துப் பார்க்க தலைப்பட்ட அவர்கள், தொங்கும் இரண்டு உடல்களுக்குமிடையேயான இடைவெளியை அளந்துகொண்டனர். பின்பு இரண்டு ஒளித்தம்பங்களுக்கு இடையேயான தொலைவையும் அளந்துகொண்டனர். அளவுருக்களைக் குறித்துக்கொண்ட சோதனையாளர் நிறமாலைமானியின் தொலைநோக்கியால் தொங்குமிந்த இரு உடல்களையும் அதாவது அத்தம்பங்களை நோக்கினார். முப்பட்டக மேசையை சோடியம் ஒளியிலிருந்து விலகு திசையில் சற்று நகர்த்திவிட்டு நுண்ணோக்கியின் திருகுவைத் திருக்கிக்கொண்டே தொலைநோக்கியின் வில்லையை நகர்த்த இரண்டு தம்பங்களும் ஒன்றையொன்று நெருங்கியோடி வர, உடல்களும் ஒன்றுக்கொன்று அருகில் வந்தது. அவையிரண்டும் வர வர இவர்களின் உயிர் நாடி முதுகுத்தண்டில் ஏறியமர்ந்துகொண்டு குத்துகிறது. தனித்தனியாக இறந்துவிட்ட கணவனும் மனைவியும் தம் உடல்கள் ஒன்றையொன்று நெருங்கி தம்மில் ஒருவர் உயிர் பிழைக்கப்போவதை அறியாமல் பிணமென அசைவற்றுக்கிடந்தனர். இன்னும் கொஞ்சம்தான்.

யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது. ஆனால் அவர்களுக் கேட்கவில்லை. அதோ இணைத்துவிட்டனர். இரண்டு கீற்றுகளும் இணைந்துவிட்டன. மேசையில் இப்போது இரட்டை ஆன்மாவின் பிரதிபலிப்பை சோடியம் வெளிச்சத்துள் அவர்கள் காண்கின்றனர். இரண்டு தம்பங்களும் ஒன்றிணைந்து அடர்த்தியாக ஒன்றெனத் தெரிந்தன. முதுகில் அமர்ந்து குத்திய உயிர் நாடி இப்போது ஓங்கிக் குத்தக் குத்த, அத்தகு உணர்ச்சிப் பிரவாகத்தோடு திரும்பிப் பார்த்தான். எவ்வித மாற்றமுமின்றி பின்னால் இரு உடல்களும் ஒரே மாதிரியான கயிற்றில் தொங்கியவர்கள் இப்போது ஒரே கயிற்றில் தொங்குகின்றனர். ஒரு சுருக்கில் இரு கழுத்தும் இறுக்கப்பட்டு இரு உடல்களும் தொங்குகின்றன. அப்போதுதான் யோசித்தனர், இரு கயிற்றிலிருந்து ஒரு கயிறாகினாலும், அதற்கு இரு உடல்களைத் தாங்குமளவு பலம் இருக்குமா என்று யோசித்து முடிக்கும் முன்பே, இரு பிணங்களின் எடை ஊதித் தாங்க முடியாத கயிறு அறுந்தது. அந்நேரம் மற்றொரு முறை கதவு தட்டும் ஓசை கேட்டது. நடக்கும் அதிர்ச்சியான சம்பவத்தில் இந்த முறையும் அவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை. வெளியே தட்டிக்கொண்டிருந்த கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் சட்டென கதவை வேகமாக தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

அப்போது கதவையொட்டியிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒளித்திராவகங்கள் நிரப்பப்பட்ட இரு குப்பி தடுக்கி ஆய்வக அறையின் முழுதும் கீழே சிந்தி தரையில் கொட்டியபின் அவ்விரண்டும் ஒன்றாகக் கலந்துபோயினர். மேலும் அத்திராவகம் சோடியம் ஒளியில் பார்ப்பதற்குச் செந்நிறத்தில், குறுதியைப்போலிருந்தன.

1 thought on “நிறமாலைமானி”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்