மூக்குத் துறவு

10 நிமிட வாசிப்பு

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் அசௌகரிகமாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து பயிற்சியளிக்கும் தாதியின் பொறுமையும் அக்கறையும் ஓரளவிற்குத் தேற்றியிருந்தது. வீட்டில் இன்னும் ஓர் ‘ஆக்சிஜன்’ களன் மட்டுமே இருந்தது. நாளை நகரத்தில் இருக்கும் ‘உயிர்வளி விண்ணப்ப அலுவலகம்’ சென்று இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றைப் பெற்று வர வேண்டும். காற்றாடி இருந்து பிறகு பிடுங்கெறியப்பட்ட சுவரில் ஏதோ ஒன்றின் நிழல் அசைந்து பெருத்து மீண்டும் சுருங்கியபடியே இருந்தது. அது காற்றாடி சுழன்று நிற்கும் அசைவைப் போன்றும் தெரிந்தது. கண்களை மூடி மீண்டும் திறக்கையில் சுவர் மட்டுமே வெறுமையோடு விரிந்திருந்தது. மனம் எதிலும் ஊன்றி நிற்க முடியாமல் ஒரு வௌவாலைப் போலத் தலைகீழ் தொங்கியிருந்துவிட்டுச் சோர்வு தாளாமல் பிடிமானத்தை விட்டு எங்கோ விழுந்து கொண்டிருந்தது.

சன்னலை மூடி வைக்கக்கூடாது என்கிற விதிமுறை மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது என்று என்னோடு அறையில் தங்கியிருந்த முரளி சொன்னதுதான் எனக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. அவனுக்கும் கடந்த மாதம்தான் மூக்கு அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. என்னைவிட ஒரு மாதம் முன் அனுபவம் இருந்ததால் அவனால் இயல்பாக இருப்பதற்குரிய பயிற்சியையும் நிதானத்தையும் அடைய முடிந்தது. சென்ற வாரம் அவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வந்து ‘மூக்கடைப்பு விழாவைச்’ சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போனார்கள். இந்த அறுவை சிகிச்சை கட்டாயமாக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு சில குடும்பங்கள் அதைக் குலதெய்வ வழிபாட்டோடு பொருத்தி இயற்கையை வழிபட்டனர். அதில் ‘மூக்கடைப்பு விழா’ கட்டாயமாகப் பின்பற்றப்பட்டது. அடைக்கப்பட்ட மூக்குத் துவாரத்தின் சதையின் மீது மஞ்சள், குங்குமம், திர்நீர் பூசி வாயு தேவனை மனத்தில் வேண்டிக்கொண்டு அரைமணி நேரம் அமைதி காத்து அமர்ந்திருக்க வேண்டும். அதுதான் அவ்விழாவின் முதன்மையான சடங்கு. பத்து வாயுக்களில் சிலவற்றுக்கு மதரீதியிலும் தடைகள் உருவாக்கப்பட்டிருந்தன. மீறினால் அரசிடம் புகார் ஒப்படைக்கப்படும்.

வாயு விளக்கம் விதிமுறை தண்டனை
பிராணன் உயிருக்கு ஆதாரமான காற்று ஒரு துவாரத்தை அடைப்பது நாட்டின் துரோகி பட்டமும் மரணத் தண்டனையும்
அபானன் மலத்தில் தங்கும் மலக்காற்று ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் மலக்காற்றை வெளியேற்றக்கூடாது. ஆயுளில் நான்கு மாதங்கள் குறைக்கப்படும்
உதானன் குரல், பேச்சின் வழியாக வெளியேறுவது குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மேல் பேசக்கூடாது ஆயுளில் ஆறு மாதங்கள் குறைக்கப்படும்.
நாகன் தும்மல் காற்று துவாரத்தை அடைக்காதவர்கள் ஒரு நாளில் பத்து முறைக்கு மேல் தும்மக்கூடாது. உடனடி அவசர ஆலோசனைக்கு உள்ளாக்கப்படுவர்.
கிருகரன் கொட்டாவியினால் உருவாகும் காற்று ஒருவன் காலையும் இரவும் ஒருமுறை மட்டுமே கொட்டாவி விட வேண்டும். மூக்கடைப்பிறகு ஆலோசனைகள் இன்றி கொண்டு செல்லப்படுவர்.

‘கூடுதல் உயிர்வளிக் களனைப் பயன்படுத்தாமல் ஐந்தாண்டுகள் ஒரே துவாரத்தில் சுவாசித்து வெற்றிப் பெற்ற திரு.ப.மாணிக்கவாசகம் அவர்களுக்கு உலக மூக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது’ என்கிற செய்தியுடன் மேசையில் கிடந்த நாளிதழைக் கவனித்தேன். எதையும் வாய்விட்டு உரக்க வாசிக்க உரிமையில்லை. மௌன வாசிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஜெஞ்சாருங் அடுக்குமாடியில் இருந்த பெரும்பாலானோருக்கு மூக்கு அறுவை சிகிச்சை முடிந்து சகஜமான வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்கள். என்னால் என்னவோ சட்டென உடன்பட முடியாமல் தடுமாறி நான்கு முறை ஆலோசனைக்குச் சென்றும் வந்தேன். ஐந்தாவது முறைக்கு மேல் போனால் அரசால் வழக்கும் தொடுக்கப்படலாம் என்பதால் இறுதியில் கடைசியாக மூக்கைப் பல மணி நேரம் கண்ணாடியின் முன் நின்று தடவி; மூச்சை நிதானமாக இழுத்துவிட்டு ஒப்புக்கொண்டேன்.

“மூக்கில் இருக்கும் கூடுதலான ஒரு துவாரம்தான் நமக்கு எதிரி அன்பர்களே! மூக்கைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ‘மூக்குத் துறவு’ நம் நாட்டையும் குடிமக்களையும் இன்னும் நீண்ட காலம் வாழ வைக்கும்… ஒரு துவாரமே நாம் வாழ்க்கை முழுவதுமே… இரண்டு துவாரங்களோடு இன்னும் இருக்கிறீர்களா? உடனே எங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் ஒரு துவாரத்தை நாட்டிற்கு அர்ப்பணித்துவிடுங்கள்…காற்றைச் சேமிக்க முன் வாருங்கள்…”

வானொலியில் சதாகாலமும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த விளம்பரக் குரல் மனத்தின் ஆழத்தில் கசியும் இரகசியக் கண்ணீருக்குள் கல்லெறிந்து கொண்டிருந்தது. சட்டென காற்று இல்லை என்கிற ஒரு பிரமை ஏற்பட்டுக்கொள்கிறது. அப்பொழுதெல்லாம் மூச்சு திணறும். மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது நான்கு நாட்கள் சுவாசக் களனை மூக்கிலேயே பொறுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் மரணிக்கவும் வாய்ப்புண்டு. அருகில் இருந்த தாதி என்னை நிதானமாக இருக்கும்படி செய்கையில் காட்டினாள். ஒரு துவாரத்துடன் இருந்த மூக்கை மெல்ல நீவிவிட்டுக் கை விரல்களை அசைத்துக் காற்று உண்டு என்பதைப் போல என்னைச் சமாதானம் செய்தாள். மெதுவாகக் காற்றை உள்ளிழுத்தேன். மனத்தில் இருந்த அதிர்வு மெல்ல குறைவதாக நானே நினைத்துக்கொண்டேன். யதார்த்தத்தைவிட கற்பனை சக்தி வாய்ந்ததாகத் தெரிந்தது. காற்று உண்டு என்று வலிந்து கற்பனை செய்தேன். உடலெல்லாம் காற்று நிரம்பி பெருகுவதாக நினைத்துக்கொண்டேன்.

கொண்டு வந்திருந்த பைக்குள்ளிருந்து தாதி சிறிய கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை வெளியில் எடுத்தாள். பச்சை நிறத்தை வெகுநாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது கண்கள் குளிர்ந்தது. முன்பு இந்நிலத்தில் சர்வகாலமும் பூத்திருந்த செடியின் படம் என்றாள். இப்படம் மனத்திற்குள் சாந்தத்தை உண்டாக்கும் என்றும் கூறினாள். மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்கும் தரப்படும் சலுகைகளில் இதுவும் ஒன்றாகும் என்று புன்னகைத்துக்கொண்டே என்னிடம் நீட்டினாள். அவள் புன்னகை நிதானமான ஒரு குமிழி. அளவெடுத்து அசைந்து ஓயும்.

“இப்படத்திலிருந்து இது வெளியேறி வளருமா?” என்றேன். கையில் அதனைப் பிடிக்கும்போது பால்ய வயதில் அப்பா சேமித்து வைத்திருந்த செடிகள் சிறுகச் சிறுக வாடி வதங்கிக் கொட்டியதுதான் நினைவிற்குள் மீந்திருந்தன. ஏதோ வளர்ப்புப் பிராணி என்பதைப் போலத்தான் நானும் நினைத்திருந்தேன். அவையனைத்தும் ஒவ்வொன்றாகச் சாகும்போது அப்பா சிறு பிள்ளையைப் போலத் தேம்பி அழுதது குறுக்கு வெட்டாக நினைவை முட்டின.

அவள் சிரிப்பை அடக்க முயன்றவாறே, “இல்ல… இது படம் மட்டும்தான்…நீங்க பயப்படாம இருங்க. இதோட மில்லியன் கணக்குல ஆளுங்க மூக்கை அடைச்சிட்டாங்க… நீங்க இப்பலேந்து நாட்டோட தியாகி… இன்னும் பல லட்சம் உயிரைக் காப்பாத்திருக்கீங்க…” என்று தாதி சொல்லும்போது என் மீது உருவான பெருமிதத்தை அடக்க முயன்றேன். பெருமிதம் கொண்டு மகிழ்ச்சி பொங்கினால் மூச்சு அதிகமாக இரைக்கும். இதுபோன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

“ஏன்டா மூச்சு வாங்குதா? கவனத்த அறிவுல வை. நீ உயிரோட இருக்கறேனு நம்பு. ஒன்னும் ஆகாது…” என்று முரளி வலது கையை மார்பிலிருந்து தலைக்குக் கொண்டு சென்று காட்டிவிட்டு அவன் உதிர்த்த சொற்களை எண்ணிக்கொண்டான். அவன் முகம் கறுத்திருந்தது. கண்கள் இருளுக்குள் அடங்கியிருந்தன. அடுத்த வாரம் தொடங்கி மூச்சடக்குப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் கட்டாயம் அப்பயிற்சிக்குச் சென்றாக வேண்டும். அதன் பிறகு ஒரு துவாரத்தின் வழியாக மூச்சை விட்டுப் பழகும் பயிற்சி மூன்று வாரங்களுக்குத் தொடரும் எப்படியும் ஒரு மாதம் கடந்துதான் நான் இயல்பான நிலைக்குத் திரும்புவேன் என்று தோன்றியது.

மனம் மீண்டும் படப்படப்பிற்குள்ளானதைக் காட்டிக் கொள்ளவில்லை. அழக்கூடாது என்கிற உறுதி முகமெல்லாம் ஓர் இறுக்கத்தை உருவாக்கியிருந்தது. எங்கே அழ நேர்ந்தால் அப்பாவைப் போல உடைந்துவிடுவேன் என்கிற பயமும் தொற்றிக்கொண்டது. அப்பாவின் மூச்சுத் திணறல் அவருக்கு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்த அனைவருக்குமே மரண பயத்தை உருவாக்கியது. வீட்டில் அவர் வைத்திருந்த மரம் செடி அனைத்தும் மெல்ல சாக ஒரு நாள் அவரும் எங்களைவிட்டுப் போனார். அப்பா இறந்த மறுவருடமே நாட்டில் மரண எண்ணிக்கை இலட்சங்களை எட்டத் துவங்கின. உலகமே பரப்பரத்துப் போனது.

“சன்னல்கிட்ட போய் நில்லு. கொஞ்சம் ஓகேவா இருக்கும்,” என்று முரளி சொன்னதும் சோம்பல் நெளிந்து கொண்டிருந்த உடலை நிதானப்படுத்தி மெதுவாக எழுந்தேன். கறுமை பூத்த நகரத்தின் ஒரு பகுதியும் வெறிச்சோடியிருந்த வானம் சென்று முடியும் ஒரு புள்ளியும் மங்கலாய்த் தெரிந்தன. நூறு மீட்டருக்கு ஓர் இடத்தில் ‘பொது சுவாசக் களன்’ எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் வயதானவர்கள் வரிசையில் நின்று ‘பொது சுவாசக் களன்’ வழியாக ‘ஆக்சிஜனைச்’ சுவாசித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர். ஒருவர் ஐந்துமுறை இச்சேவையைப் பயன்படுத்தினால் அவருடைய ஆயுள் கணக்கில் இரண்டு மாதம் கழிக்கப்படும். நம் மூக்கினுள் இணைத்துத் தைக்கப்பட்ட ‘நுண்சில்லின்’ மூலம் ஒவ்வொருவரின் நகர்வும் கண்கானிக்கப்பட்டு வந்தன.

இன்று காலை ஆயுள் முடிந்த பதினாறாயிரம் பேரை அரசு சுட்டுக் கொன்றது. இப்பிரச்சனைக்குப் பிறகு மனிதனின் ஆயுள் ஐம்பது வயது மட்டுமே. அதற்குமேல் ஒருவன் உயிர் வாழ்ந்து காற்றை வீணடிக்க அனுமதி இல்லை. அறைக்குள்ளிருந்து ஜேம்ஸ் வெளியில் வந்தான். எனது இன்னொரு அறை நண்பன். நேற்றுடன் ஜேம்ஸ் முப்பத்தைந்துமுறை ‘பொது சுவாசக் களனைப்’ பயன்படுத்திவிட்டான். அவனுடைய ஆயுளில் ஒரு வருடம் இரண்டு மாதங்கள் கழிக்கப்பட்டதைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொண்டான். தைக்கப்பட்டிருந்த மூக்கின் ஒரு துவாரத்தைத் தடவினேன். சதையோடு சேர்த்து அடைத்துத் தைத்திருந்தார்கள். மூக்கைத் தைத்துக் கொண்டால் மாதம் ஐநூறு ரிங்கிட், வருடம் மூன்று முறை இலவச மருத்துவப் பரிசோதனை, ஒரு மாதத்திற்கு இலவசத் தாதி சேவை, விண்ணப்பித்தால் கிடைக்கும் உயிர்வளி களன், எல்லாச் சலுகைகளும் உட்பட மின்சாரம், நீர் போன்றவற்றுக்குக் கட்டணமும் தேவையில்லை.

“இந்தச் சின்னோண்டு ஓட்டைய அடைச்சா இவ்ள சலுகையா?” என்கிற கேள்விதான் அதுவரை பிடிவாதமாக இருந்த என்னைத் தியாகியாக்கியது. மூக்கை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அனைவருக்கும் புதிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. அவ்வட்டையை வைத்திருப்பவர்கள் பேருந்தில், இரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

“இனிமேல் என்னடா… நீதான் சிறந்த குடிமகன்…” என்று முரளி விளையாட்டாக முதுகில் தட்டினான். “இந்த ஒரு மூக்கும் அடைச்சிக்காதா?” என்கிற கேள்வி அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்த நாளிலிருந்தே உறுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டு வைத்தேன். அவன் கிண்டலாகச் சிரித்தான். பிறகு, சிரிப்பை அடக்கிக்கொண்டான். சத்தமாகச் சிரிப்பதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார்கள்.

“நமக்கு ஆபரேஷன் செய்யும்போதே அதுக்கான ஊசில்லாம் போட்டுட்டாங்க. மூக்கு அடைப்பு வராது. மருந்தும் இருக்கு. கவலைப்படாதடா,” என்று மீண்டும் முதுகை ஆறுதலாகத் தட்டினான். ஜேம்ஸ் ஏதோ இறுக்கத்துடனே நாங்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். தாதி கிளம்பும் நேரம் வந்ததும் எங்களிடம் சொல்லிவிட்டுப் படியில் இறங்கிச் செல்லும்போது அவளுடைய ஒற்றை மூக்குத் துவாரம் அழகாகத் தெரிந்ததைக் கவனித்தேன். மனம் கொஞ்சம் கூடுதலான ஆசுவாசம் பெற்றது. ஒரு துவாரத்தை அடைப்பது ஊனமல்ல என்று சொல்லப்பட்ட அத்தனை ஆலோசனைகளையும் தாண்டி தாதியின் அந்த அழகான மூக்கு எனக்குள் விழிப்பை உண்டாக்கியது. மீதி இருக்கும் இன்னொரு துவாரத்தை விரல் நுனியைவிட்டு விரிவாக்குவதுபோலச் செய்தேன். காற்று தாராளமாக உள்நுழையும் என்கிற நம்பிக்கை.

ஒரு துவாரத்தை அடைப்பது ஊனமல்ல என்று சொல்லப்பட்ட அத்தனை ஆலோசனைகளையும் தாண்டி தாதியின் அந்த அழகான மூக்கு எனக்குள் விழிப்பை உண்டாக்கியது.

சுவரில் இருந்த தவத்திரு குன்றகுடி அடிகளாரின் படம் மனத்தை உறுத்தியது. ‘மூச்சை அடக்கி வாழ்ந்தால் ஆயுள் நீளும்’ எனும் அவரின் கூற்றின்மீது வெறுப்பு தோன்றியது. சன்னல் வழியாக மீண்டும் நகரத்தைக் கவனித்தேன். பழுதாகி சாலையிலேயே நின்றுவிட்ட தன் மகிழுந்தை ஒரு நடுத்தர வயதை ஒத்திருந்தவன் உதைத்துக் கொண்டிருந்தான். பிறகு, அங்கிருந்த இரும்பை எடுத்துக் கண்ணாடிகளை நொறுக்கத் துவங்கினான். அவனுடைய செயலை யாருமே தடுக்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. சிலர் தள்ளி நடக்கத் துவங்கினார்கள். அவன் மூச்சிரைக்கக் கத்தினான். சிறிது நேரத்திலேயே கருப்பு மகிழுந்தில் அங்கு வந்தவர்கள் அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

“இப்படிக் காத்தை வீணாக்கனா உடனே பிடிச்சிட்டுப் போய் கட்டாய ஆப்ரேஷன் செஞ்சி மூக்கு ஓட்டைய அடைச்சிருவாங்களாம்… எந்தச் சலுகையும் இல்லயாம்… சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டு ஒத்துப்போறதுதானே சாமர்த்தியம்… நியாயம்…?” என்று முரளி சொன்னதும் நாமே விரும்பி அறுவை சிகிச்சை செய்து கொண்டது பரவாயில்லை என்று தோன்றியது.

“மாணிக்கம் செத்துட்டாராம்… செய்தி வந்துச்சி…” என்று எனக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் முரளி முணுமுணுத்தான். மேல்மாடியில் இருந்த மாணிக்கத்தின் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக இறந்து அவர் மட்டும் மேலும் சில மாதங்கள் தாக்கு பிடித்தார். முன்பு மல்யுத்த வீரரான அவர் எப்பொழுதும் திடமான உடலும் முரட்டுப் பாவனையும் கொண்டிருப்பார். நகரத்தில் ‘ஆக்சிஜென்’ சிக்கல் வந்த அடுத்த மாதமே மனைவியைப் பறிக்கொடுத்த பின் மெல்ல உடைந்து உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார்.

எப்பொழுதும் அச்சத்தில் வாழ்ந்து வீட்டை விட்டு வெளிவராமல் அனைவரையும் அறைக்குள்ளே பூட்டி வைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு. காற்று குறைவால் மூளை மெதுவாகப் பலவீனமாகி, நுரையீரல் செயலிழந்து ஒவ்வொருவராக இறந்தனர். கடைசியாக, அவரைப் ‘காற்று பாதுகாப்பு மையத்திற்குக்’ கொண்டு சென்று முடிந்தவரை உயிர்வளியைச் செலுத்தினர். உடலுக்கும் மூளைக்கும் தேவையான காற்று புகுந்தும் அவர் மனத்திற்குள் ஏற்பட்ட இடைவெளியில் தங்கியிருந்த உயிர் பயத்தை வெளியேற்றவே முடியவில்லை. மூச்சுத் திணறலுக்குள் தன்னை முற்றிலுமாகப் பூட்டிக்கொண்டார். கடைசிவரை யார் சொல்லியும் அவரால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. காற்று இருப்பதாக எவ்வளவோ அவரை நம்ப வைக்க முயன்றனர். காற்றில்லை என்கிற உயிர் பயம் பூதாகரமாய் அவரின் மூளைக்குள் ஓர் உயிரியாகப் புகுந்திருந்தது.

“நமக்கும் அப்படி ஒரு நிலை வருமாடா? இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது. வீட்டில் இருந்த பொருள்களில் எந்த அசைவும் இல்லை. அப்படியே கீழே குதிக்கும்போதாவது காற்று நம்மை உரசும் அல்லவா? சட்டென மனத்தைச் சாந்தப்படுத்தினேன். எண்ணங்களின் உறுமல் எப்பொழுது வேண்டுமென்றாலும் விகாரமாகிப் பாயலாம் என்பதைப் போல இருந்தது. இப்பொழுது மனத்தைக் கட்டுப்படுத்தி நம் வசத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

“இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

“இதுக்குலாம் என்ன காரணம்? நம்ம ஏன் இதை அனுபவிக்கறோம்?” என்று வெளியை நோக்கிக் கத்த முயன்று வார்த்தைகள் வாயைவிட்டு வெகுதூரம்கூடப் போக முடியாமல் தடுமாறி சிதறின. எதிரே இருந்த கட்டிடத்தின் உடைந்த கண்ணாடிகள் வழியாக இரத்தக் கறையுடன் ஒரு குரங்கு வெளியேறிச் சட்டென எங்கோ தாவிச் சென்றது.

முரளி அருகில் வந்து என் மூக்கை நீவிவிட்டான். மூக்கை அன்பாக நீவுவது ஒரு மிகப் பெரிய நன்னெறிப் பண்பாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்தவனுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டில் முதலிடம் காற்று இருப்பதாக நம்ப வைப்பது. அடுத்து, மூக்கை நீவி அடுத்தவரைச் சமாதானப்படுத்துவது. “அப்படில்லாம் நடக்காது நண்பா… அமைதி…அமைதி… நீயும் நானும் உயிரோட இருக்கோம்… நம்பு…” என்றான். மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் இப்படித்தான் தோன்றும் என்றும் விளக்கினான். மீண்டும் நகரத்தின் முடுக்குகளைக் கவனித்தேன். நீரோடையில் செத்து மிதந்து கொண்டிருந்த பூனை, நாய், எலிகளை ஒரு தொழிலாளி அகற்றிக் கொண்டிருந்தார். இலேசாக மூச்சிரைப்பதைப் போலத் தோன்றியதும் கவனத்தை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்தேன்.

தொலைகாட்சியில் வழக்கம்போல மரணச் செய்திகள். நடுக்கம் ஒரு சிலந்தியைப் போன்று. தனது எட்டுக் கால்களையும் அகலப் பரப்பிச் சட்டென அகத்திற்குள் பாய்ந்தோடுகிறது. இரு தொடைகளைக் குறுக்கி உட்கார்ந்து கொண்டேன். மூச்சிரைப்பில் ஏற்படும் இலேசான ஏற்றம்கூட ஆபத்தானது என்று மருத்துவர்கள் பலமுறை எச்சரித்தார்கள். “சுரேஸ்… உங்க மூக்குல ஒரு துவாரம்தான்… செத்துருவேனோனு பயப்படாதீங்க. ஒரு துவாரத்தோட இன்னும் பல வருசம் நீங்க வாழ முடியும். மூக்கை அந்த மாதிரிதான் வடிவமைச்சிருக்கோம். தும்மல் வராது… சளி பிடிக்காது… தூசி உள்ள போவாது… நீங்க கவலையே படக்கூடாது. மூச்சிரைப்பு வர்ற மாதிரி நீங்க எதையும் செய்யக்கூடாது… அது போதும்,” என்று கூறிவிட்டு ஒரு பட்டியலும் தரப்பட்டது. அதைப் படித்துவிட்டு நான் கையொப்பமும் இட வேண்டும். அதற்கு அப்பாற்பட்டு நான் அந்த நிபந்தனைகளை மீறினால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் உடனடியாக ஒரு தனியார் அமைப்பின் வழியாகக் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.

பட்டியலில் முதலில் இருந்தது ஒரு நாளில் என்னைப் போலப் பொது ஆட்கள் பேச வேண்டிய மொத்த சொற்கள் இருநூறு மட்டும்தான். ஆசிரியர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இன்னும் சில பொது சேவை துறையினருக்கும் ஐநூறு சொற்கள் வரை கூடுதல் சலுகை இருந்தது. அதற்கு மீறிப் பேசினால் தற்கொலைக்குச் சமம் என்றும் எச்சரித்துவிட்டார்கள். காற்றை ஒருபோதும் வீணடிக்கக்கூடாது என்பதே பிரதான விதிமுறை. மூச்சிரைக்கக்கூடிய நடவடிக்கைகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டன. மெதுவோட்டம், படி ஏறுதல், போட்டி விளையாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பொது இடங்களில் ‘ஓடாதீர், மூச்சு வாங்காதீர், மூச்சை இழுத்து விரையமாக்காதீர்’ என்கிற அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு நிறைந்திருந்தன. எதையுமே அடக்கியாள வேண்டும் என்பதே எல்லோருக்கும் போதிக்கப்பட்டது. கவலை, மகிழ்ச்சி, அதிர்ச்சி, சிரிப்பு, அன்பு என அனைத்துமே முடிந்தவரை நிராகரிக்கப் பழக வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டன.

பாடத்திட்டத்திலிருந்து அன்புடைமை, பரிவுடைமை, உயிரை நேசித்தல், மகிழ்ச்சி, உடற்பயிற்சி போன்ற அனைத்துமே நீக்கப்பட்டு, அமைதி, சாந்தம், தியானம், பொறுமை, நாட்டை நேசித்தல், தியாக மனப்பான்மை போன்றவையே பாடங்களாக நிலைநிறுத்தப்பட்டன. வீங்கியிருந்த கால் முட்டிகளை ஒருமுறை தடவினேன். அப்பாவுடன் உடும்பு வேட்டைக்காகக் கம்பத்தில் ஓடித்திரிந்த நாட்கள் நெஞ்சை அடைத்தன. அடியெடுத்துக் கவனமாக நடத்தல் என்பதே சில வருடங்கள் நான் செய்து கொண்டிருக்கும் ஆக வேகமான நடவடிக்கை.

அடுத்தவனுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டில் முதலிடம் காற்று இருப்பதாக நம்ப வைப்பது. அடுத்து, மூக்கை நீவி அடுத்தவரைச் சமாதானப்படுத்துவது.

“முரளி…” என்றதும் அவன் உடனே பேசக்கூடாது என்று ஆட்காட்டி விரலை உதட்டின் மையத்தில் குவித்திச் செய்கை காட்டினான். இன்றைய இறுநூறு சொற்கள் பேசித் தீர்ந்துவிட்டன. இனி வாயைத் திறந்தால் காற்று வீணடிக்கப்படும். வாயைத் திறந்து மூச்சு விட்டாலோ அல்லது கத்தினாலோ உடனே தகவல் காற்றுப் பாதுகாப்பு மையத்திற்குச் சென்றுவிடும். உடனே கைது ஆணையும் பிறப்பிக்கப்படலாம். மூச்சிரைப்பு அதிகமாகலாம் என்று பயம் உருவானதும் அமைதியானேன். சொற்களை மனத்திற்குள் வைத்துப் பூட்டுவதற்குரிய திறன் எனக்கில்லை. யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கும் இயல்புள்ள எனக்கு முதன்முதலாகச் சொல்லப்படாத எத்தனையோ சொற்களைக் கொல்லத் தெரிந்தது. இனி நாளையும் அதற்கு மறுநாளும்கூட மனத்தில் மீந்திருக்கும் சொற்களைப் பற்றி நினைவுகள் வந்துவிடக்கூடாது. எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் பயிற்சிக்குப் போனால் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. முரளி அப்படித்தான் மாறிக் கொண்டிருந்தான். என் மூக்கை நீவுவது பிறகு மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை ஒப்புவிப்பதாக மட்டுமே காணப்பட்டான். “காத்து இருக்கு நம்பு!” என்று மட்டுமே சொல்லிச் சொல்லித் தன் இருநூறு சொற்களையும் முடித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டான்.

இனி நாங்கள் பேசினாலும் செய்கை மொழிதான். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். தொலைக்காட்சியில் ‘அவசர செய்தி’ மீண்டும் ஒளிப்பரப்பாகின. பூமியில் காற்றளவு இன்று இன்னும் 15% குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக மனித ஆயுள் அளவு குறைக்கப்பட்டு மேலும் ஒரு இலட்சம் பேருக்கு மரணத் தண்டனை வழங்கப்படலாம் என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மெல்ல மூச்சிரைக்க வெற்றுச் சுவரைக் கவனித்தேன். அங்குக் காற்றாடியின் நிழல் சுழன்று அசைந்து மீண்டும் சுழல்வதாக ஒரு நினைப்பு. “காற்று இருக்கு, நம்பு!” என்று மேலெழ முயன்ற சொற்களை உள்ளுக்குள்ளே அடக்கினேன்.

“இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமூத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று படியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்” என்று பைபள் வசனத்தைக் கூறிவிட்டு ஜேம்ஸ் திடீரென முடிந்தவரை கத்தினான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் நாளை சுடப்படவிருக்கும் செய்தி அவனுடைய கைப்பேசியின் வாயிலாக மின்னஞ்சலில் வந்திருப்பதைப் படித்தேன். வந்த அழுகையையும் மூச்சிரப்பையும் ஒன்றுசேர அடக்கிவிட்டு எவ்வித உணர்வும் இல்லாமல் ஜேம்ஸ் சன்னல் வழியாக எகிறிக் கீழே குதிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனதறையில் இப்பொழுது மேலும் கொஞ்சம் காற்று மிச்சப்படுத்தப்படுகிறது.

9 thoughts on “மூக்குத் துறவு”

  1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மற்ற அறிவியல் சிறுகதைகளையும் வாசிக்கவும்.

  2. நகைச்சுவையும் சிந்திக்கவும் வைத்த படைப்பு. பாலமுருகனின் மொழியில் அபார வீச்சு. கேலி, விமர்சனப் பாங்கு. நையாண்டி எனக் கலந்து கொடுத்துள்ளார். வாழ்த்துகள்.

    1. அருமை.படிக்கும் போதே புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது. அறிவியல் புனைவுகளைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.முன்பேல்லாம் அறிவியல் கதைகள் படித்ததில்லை. இப்பொழுது அவற்றைப் படிக்க ஆர்வமூட்டிய ஆசிரியர் பாலா விற்கு நன்றி.

  3. அடுத்தவனுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு அவன் மூக்கை நீவிவிடுவது….:) பலே! வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனத்தில் ஆழப்பதிகிறது. அதெப்படி காற்று இல்லாமல் போகும்? கொஞ்சம் பயமாகவும் உள்ளது.

  4. Such a new experience reading. Easy to understand and gives a good introduction to science fiction stories. Can give to University students to make them understand about science fiction. Tq to Bala and aroo magazine.

  5. சமூக விமர்சனமும் புனைவும் இணையும் புள்ளி இதனை சிறந்த சிறுகதையாக மாற்றுகிறது. ஆக்சிஜன் குறைந்து விடுதல் என்பதைக் கொண்டு இப்படியொரு நகைச்சுவையும் விமர்சனமும் அடங்கிய கதை எழுத முடியுமா என்பதைக் கண்டு வியந்தேன். இந்திய மெய்ஞானத்தில் அதிகம் பேசப்பட்ட துறவு என்பதற்கொரு குறியீடு இக்கதையில் வலுவானதாக உள்ளது. இன்னமும் அறிவியல் புனைவுக்கான அம்சங்களை அதிகரித்திருக்கலாம் என்றும் தோன்றியது. தொடர்ந்து முயலவும். வாழ்த்துகள்

  6. எம்.எஸ்.ராஜேந்திரன். திருவண்ணாமலை. says:

    ஒரு திகிலோடு படிக்கவேண்டியிருந்தது. அதிலும் விவரணைகள் எல்லாம் அறிக்கைபோலவே இருந்ததால் திகில் இன்னும் அதிகமானது. ஒரு மூக்கை மூடி கொஞ்ச நேரம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

  7. Is it this story never won? Wondering… Very perfect social critical future value science fiction. Thanks to aroo.com for such wonderful story. Humorous very well.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்