சத்தியமாக, நாங்கள் எதிர்பார்த்தது இருபதிலிருந்து முப்பதுக்குள், அதுவும் எழுத்தாளர் ஜெயமோகனது அறிவிப்பினால். ஆனால், மொத்தம் வந்த கதைகள் – 66! சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பியிருந்தனர். தமிழ்ப் பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அறிவியல் புனைவு எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதே மகிழ்ச்சி. அனைத்துக் கதைகளையும் படித்தவுடன் எழுந்த உணர்வு கலவையானது. விதவிதமான நடைகளில் அடுத்தடுத்து அறிவியல் புனைவு கதைகளைத் தமிழில் வாசிப்பதே பெரும் உற்சாகத்தை அளித்தது.
எழுபது சதவிகிதத்திற்கும் மேலானவை சிறுகதைகளுக்கான அடிப்படை வடிவ அமைப்புகூட இல்லாதவையாக இருந்தன. சிலவற்றில், ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாவது இருந்தாலும், கதை சொல்லும் முறை, மேலோட்டமான முடிவை நோக்கி மட்டும் செல்லும் நடை, அறிவியல் தர்க்கம் போன்ற வழக்கமான குறைகளால் அவை முழுமை பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.
வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த பத்து சிறுகதைகள் இதோ, அகரவரிசையில்.
- அவன் – தன்ராஜ் மணி
- கடவுளும் கேண்டியும் – நகுல்வசன்
- கோதார்டின் குறிப்பேடு – கமலக்கண்ணன்
- தியானி – அஜீக்
- நிறமாலைமானி – பெரு.விஷ்ணுகுமார்
- பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன்
- ம் – கிரிதரன் கவிராஜா
- மின்னெச்சம் – ரூபியா ரிஷி
- மூக்குத் துறவு – கே.பாலமுருகன்
- யாமத்தும் யானே உளேன் – சுசித்ரா
இந்தப் பத்து சிறுகதைகளும் இவ்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சில குறிப்பிடத் தகுந்த கதைகள் — உமாரமணனின் ‘அன்னை’, அந்தியூர் மணியின் ‘மடலேறுதல்’, நவினின் ‘யாதுமாகியதன் விதி’, முரளி சேகரின் ‘பிரபஞ்ச யாத்திரை’ மற்றும் பாலமுருகனின் ‘ப்ரோதேஸ்’.
தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளையும் எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நண்பர் சரவணனுக்கும் அனுப்பினோம். இவற்றுள் பரிசுக்குரிய சிறுகதைகளாக அவர்கள் தேர்ந்தெடுத்தது ரா.கிரிதரனின் ‘பல்கலனும் யாம் அணிவோம்‘ மற்றும் நகுல்வசனின் ’கடவுளும் கேண்டியும்’.
பரிசுக்குரிய சிறுகதையாக அரூ குழு தேர்ந்தெடுத்தது சுசித்ராவின் ‘யாமத்தும் யானே உளேன்‘.
பரிசு பெற்ற எழுத்தாளர்கள் மூவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தக் கதைகளைப் பற்றிய தனது கருத்துகளை எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்துள்ளார். அதை இங்கே வாசிக்கலாம்.
போட்டிக்கு வந்திருந்த கதைகளைக் குறித்தான எங்களது சில பொதுவான எண்ணங்களை இங்கே பகிர்கிறோம்.
- அறிவியல் சிறுகதை என்றாலே தர்க்கங்களால் மட்டுமே கட்டமைக்கப்பட வேண்டும் என்றில்லை. உணர்வுகளுக்கும் இடம் தரலாம். கதையில் விவரிக்கும் கற்பனை உலகத்திற்குள் சென்று, அங்கு வசிக்கும் மனிதர்களின் உணர்வுகளை எழுதலாம், நமது உலகின் உணர்வுகளைக் கற்பனை உலகிற்குள் திணிக்காமல். உதாரணத்திற்கு ‘மூக்குத் துறவு’, ‘யாமத்தும் யானே உளேன்’, ‘கோதார்டின் குறிப்பேடு’. இம்மூன்று கதைகளிலும், கதையின் பின்புலத்தில்தான் அறிவியல் இருக்கிறது. மனித உணர்வுகளே முன் நிற்கின்றன.
- கேள்வியும் அவதானிப்பும் விஞ்ஞானத்தின் அடிப்படை. முன்முடிவுகளோடு ஆராய்ச்சியில் இறங்குவது ஆபத்து. அதே போலத்தான் முன்முடிவுகளுடன் அறிவியல் கதைகள் எழுதுவதும். பல கதைகள் எழுப்பும் மைய அறிவியல் கேள்வி சிறப்பாக இருந்தாலும், அக்கேள்வியின் பதிலைத் தேடி ஆழமாகப் பயணிக்காமல் பொதுக்கருத்தை முன்னிறுத்தியே முடிந்துவிடுகின்றன. தொழில்நுட்பத்தைப் பற்றிய முன்முடிவுகளற்று இருந்த ‘அவன்’ சிறுகதை இச்சிக்கலிலிருந்து தப்பித்ததற்கு உதாரணம்.
- பேராசிரியர் – மாணவர், விஞ்ஞானி – உதவியாளர், அப்பா – மகள், தாத்தா – பேரன், சீனியர் – ஜூனியர் — என்கிற கலவைகளில் இரண்டு பேர் கேள்வி பதில் பாணியில் பேசிக் கொண்டேயிருப்பது பெரும்பாலான கதைகளில் நிகழ்கிறது. உரையாடல்கள் வழி அறிவியல் சிறுகதை எழுதுவதற்கு சிறப்பான ஓர் உதாரணம் ஐசக் அசிமோவ் எழுதிய ‘Reason’ என்கிற சிறுகதை. அவரது ‘I, Robot’ தொகுப்பில் இடம்பெறும் கதை இது.
- “புரியும்படி சொல்லு!” என்றோ “நான் ரொம்ப குழப்பறேனா? சிம்பிளா சொல்றேன்…” என்றோ வசனங்கள் இருந்தாலே, கதை விஞ்ஞானத்தை விளக்க துவங்குகிறது என்று அர்த்தம். ஒரு கதாபாத்திரம் தன்னுரை விளக்கம் கொடுப்பதைவிட, கதையின் போக்கில் ஆங்காங்கே தகவல்கள் கொடுப்பது உகந்தது.
- அறிவியல் புனைவென்றால் குறைந்தபட்சம் ஐந்து நூற்றாண்டுகள் கழித்துதான் அமைய வேண்டுமென்கிற அவசியம் இல்லை. அப்படி அமைய வேண்டியிருக்கிற கதைகளில், ஐந்து நூற்றாண்டுகள் கழித்தான வாழ்வின் மீதான அறிவியல் பூர்வமான அனுமானம் அவசியம்.
- சில குறிப்பிட்ட கதைக்களங்கள் பலரால் பயன்படுத்தப்பட்டிருந்தன — விண்வெளிப் பயணம், எந்திரங்களும் மனிதர்களும், மரபணு மாற்றம், காலப் பயணம், மூளைப் பிரதி, செயற்கை நுண்ணறிவு. அறிவியல் புனைவு எழுத விரும்புகிறவர்கள் வழக்கமான அதே பாதைக்குள் சிக்காமல் இருப்பதற்காக அவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். இந்தக் களன்களிலேயே சொல்லப்படாத பல்லாயிரம் கதைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு ‘ம்’ ஓர் உதாரணம்.
இப்போட்டிக்கு வித்திட்டுத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நண்பர் சரவணனுக்கும் நன்றி. ஆர்வத்துடன் சிறுகதைகள் எழுதிய பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும் ஊக்கத்தை இப்போட்டி அளித்துள்ளது.
மேற்சொன்ன தர்க்கங்கள் ஒருபுறம் இருக்க, எந்தச் சட்டகத்திற்குள்ளும் அடைபடக்கூடியதல்ல கலையின் இயல்பு. தன் விரிவெல்லையை அந்தப் புனைவுகளே உருவாக்கிக்கொள்ளும் என்பதுவே நிதர்சனம்.
மூடிய அறை
ஒரு பொருட்டல்ல ஓவியனுக்கு.
ஒரு பறவையை வரைகிறான்
பறந்து அது
வானத்தை உண்டாக்கிவிடுகிறது
உடனடியாக.
— கல்யாண்ஜி
நன்றி! மீண்டும் முயற்சி செய்கிறேன்…
Best wishes to all the writers. Nice e magazine.
சிறப்பான பயிற்சி. படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
ஒரு யோசனை. பதிப்பிக்க தேர்ச்சி பெற்ற அனைத்து கதைகளையும் ஆன்லைனில் பதிவிடுங்களேன். புத்தகமாக வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கலாம். ஆன்லைனில் அவை இல்லையோ என தோன்றுகிறது.
வாழ்த்துக்கள். அனைவருக்கும். இந்த சிறப்பான முயற்சிக்கும்..