முடிவிலியின் இழை

2 நிமிட வாசிப்பு

லொந்தாரின் பத்தாவது இதழில் வெளியான Reading Infinity Inside the Pages of a Book குறுங்கதையின் மொழிபெயர்ப்பு இது. The Infinite Library and Other Stories (2017) தொகுப்புக்காக வரையப்பட்ட ‘விண்வெளி வீரர்’ ஓவியம் இக்கதைக்குத் தூண்டுதலாகவும் அமைந்தது.


பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, செபு, ரோம், சிங்கப்பூர் மற்றும் இன்னும் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு நகர அரசுகளின் அருங்காட்சியகங்களிலும் ஒரு காட்சிப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. ஒரே பொருள்தான், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கிறது.

உங்கள் ஆயுளிலிருந்து ஓர் ஆண்டைக் கட்டணமாகச் செலுத்தி, அந்தப் பிரத்யேகக் காட்சிப்பொருளின் வழியாக முடிவிலியின் ஓர் இழையைக் கண்கூடாகக் காணலாம்.

கால வெளியில் நுண்விரிசல் ஒன்று தென்படுகிறது. வெறும் கண்களுக்குச் சிக்காத அதைக் காண, ஒரு சிறப்பு இருட்பெட்டி (camera obscura) தேவையாயிருக்கிறது. இருட்பெட்டித் துவாரத்தின் இருளுக்கு அப்பால், அண்டத்தின் ஒரு துளை தெரிகிறது. அதில் ஆதியறியா விண்வெளி வீரர் ஒருவர் முடிவின்றி விழுந்து கொண்டிருப்பதுபோன்ற பிம்பம் ஒன்று காணக் கிடைக்கிறது.

ஓவியம்: சன்னி லியு

இந்த விண்வெளி வீரர் ஆணா, பெண்ணா அல்லது வேறேதுமா? இவர் முதியவரா? இளைஞரா? எங்கிருந்து வந்தார்? இதுவரை யாருக்கும் தெரியாது. இவ்விஷயத்தில் கற்றறிந்தவர்களும் நிபுணர்களும் உடன்படுவது இதில்தான்: காலம் விரிவடைந்துக்கொண்டே போகும் விண்வெளிப் பயணத்தில் இவ்வீரர் நிச்சயம் முன்பே இறந்திருக்க வேண்டும்.

ஆனால் கற்றறிந்தவர்கள் மற்றும் நிபுணர்களின் கணிப்பு தவறு. அந்தரத்திற்கு அப்பாற்பட்டு பல இடங்களில் ஒரே சமயத்தில் இருக்கும் இந்த இருட்பெட்டி, பற்பல சுவர்களில் புதிரான காட்சிகளை ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சுவரின் மீதும் வைக்கப்பட்டுள்ள ஒரு பழைய வெண்கலப் பலகை, “அண்டம் ஒரு புத்தகம். படிக்காதவர்களால் எல்லைகளின் வரம்புகளைக் கடந்து பயணிக்க முடியாது,” என அறிவிக்கிறது. அதன் மூலப்பிரதியை மணிலா அருங்காட்சியகத்தில் இப்போதும் காணலாம்.

உள்ளூர்ச் செவி வழிக்கதைகளின் படி, இந்தப் பலகை குயேப்போவைச் சேர்ந்த இழிவுக்குட்பட்டிருந்த வான்கணிப்பாளரால் (அவள் ஆவணக்காப்பாளரும்கூட) நன்கொடையாக அளிக்கப்பட்டது. ஒரு நாள், இருட்பெட்டி வழியாகப் பார்க்கும்போது, அருகாமை மண்டலத்திலிருந்த ஒரு நட்சத்திரம் ஒண்மீன் முகிலானது (Nova). பிம்பம் மாறிய கணநேரத்தில், விண்வெளி வீரர் கையில் ஒரு புத்தகத்தைப் பிடித்திருப்பதை அவள் கவனித்தாள். அதுமட்டுமல்ல, அவர் விண்வெளியில் விழுந்து கொண்டிருக்கவில்லை, சாத்தியமற்றதொரு முடிவிலி நூலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. மரண நிழல் நிரம்பிய பள்ளத்தாக்கிற்கு அப்பால், சட்டென்று, தேவகானம் ஒன்று ஒலித்தது. அந்த ஒரு கணப்பொழுதுக்குள், அவளின் ஆன்மா பாடத் துவங்கியிருந்தது.

ஆனால் பிம்பத்தைப் பதிவு செய்வதற்குள் சட்டென மாறிவிட்டது. அந்த ஆனந்த தேவகானமும் மறைந்துபோனது. வான்கணிப்பாளர் தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததும், அது போலி என முத்திரை குத்தப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்டாள். அவள் மணிலாவின் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்தாள். ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கையும் அவளுடன் அலைந்தது. இருமை சூழ்ந்த நகரின் உள்ளிருந்து எலாவின் ஸீனோ (Zeno of Elea) எழுதிய புத்தகத்தின் ஒரு பத்திக்காகத் தன் வாழ்க்கையைக் கைமாற்றிக்கொள்ள, கடந்து செல்லும் அனைவரிடமும் காலத்தின் சிறு நாணயத்தை வேண்டிக் கையேந்தி நின்றாள். இடைவிடாமல் இரந்து கொண்டிருந்த அவளுக்குப் பல வருடங்களுக்குப் பின், ஒளி வீசியது. எல்லா அருங்காட்சியகங்களிலும் தொங்கும் வெண்கலப் பலகைகளை வாங்கும் அளவிற்கு நிதி திரட்டிவிட்டாள்.

அவள் பார்த்தது இதுதான்:

அண்டத்தின் வழுமத்திற்குள் (singularity) அந்த விண்வெளி வீரர் இறக்கவில்லை; அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வின் கடைசி புத்தகத்தை அடைவதற்குள், இன்னொரு புத்தகம் படிக்க வேண்டியதாகிவிடுகிறது. இந்தக் கடைசிக்கு முந்தைய புத்தகத்திற்கும், தங்கள் கையிலிருக்கும் புத்தகத்திற்கும் நடுவே, அவர்கள் கவனத்தைக் கோரியபடி இன்னொரு புத்தகம் இருக்கிறது. உண்மையில், விண்வெளி வீரருக்கும் மரணத்திற்கும் இடையே முதலும் முடிவுமற்ற புத்தக வரிசை நீண்டு நிற்கிறது.

அண்டத்தில் யாரும் பார்த்திராத ஒன்று விண்வெளிவீரருக்கும், வான்கணிப்பாளருக்கும் தென்பட்டது – முடிவிலியின் இழையை பற்றியபடி காலவெளியின் பக்கங்களுக்குள் விழுந்துக்கொண்டேயிருத்தல்.


மொழிபெயர்ப்பு – அரூ குழுவினர்
ஓவியம் – சன்னி லியு

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்