அரூ அறிமுகம்: டிராகன்களைப் பழக்குதல்

3 நிமிட வாசிப்பு

“டிராகன்கள், ஹாபிட்டுகள், இந்தக் குட்டி விசித்திர பச்சைமனிதர்கள் – எதற்கு இவையெல்லாம்?

உண்மையான பதில் இதுதான்:

அவை களிப்புக்கும், மகிழ்ச்சிக்கும்! கனவுலகம் கண்டிப்பாக உண்மையானது. அது நிகழ்ந்ததல்லதான், ஆனால் நிஜம். குழந்தைகளுக்கு அது தெரியும். பெரியவர்களும் அதை அறிவார்கள், அதனாலேயே அவர்கள் அவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவ்வுலகம் பிரதிபலிக்கும் உண்மை, அவர்களது அற்ப வாழ்வின் அத்தனை அனாவசியங்களையும், பாசாங்குகளையும் கேலி செய்து அச்சுறுத்துவதால் அதைக் கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள் உண்மையைக் கண்டு அஞ்சுவதால், டிராகன்களைக் கண்டும் அஞ்சுகிறார்கள்!”

மிகைப் புனைவும் (fantasy fiction), அறிவியல் புனைவும் (science fiction) இலக்கியமாகக் கருதப்பட்டிராத காலகட்டத்தில் உர்சுலா லே க்வின் (Ursula Le Guin) சொன்னது (Why Americans are afraid of dragons?).

நாம் அங்கிருந்து வெகுதூரம் கடந்து வந்திருக்கிறோம். இன்று, ஐசக் அசிமோவையும் ஜே. கே.ரௌலிங்கையும், ஜே.ஆர்.ஆர்.டோக்கினையும் நாம் இரயில் பயணத்தின்போது தயக்கமின்றி படிக்கலாம். இலக்கிய விழாக்களில், நீல் கெய்மனிடம் கையெழுத்து வாங்க நீண்ட வரிசை காத்திருக்கிறது. மிகைப்புனைவு எழுதியதற்காக கஸுவோ இஷிகுரோவிற்கு நோபல் பரிசு அளிக்கப்படாமல் இல்லை.

மேற்குலகில், அறிவியல் புனைவையும் (science fiction) மிகைப்புனைவையும் (fantasy) ஒன்றாகச் சேர்த்து ஊகப்புனைவு (speculative fiction) என்றழைக்கிறார்கள். சமகாலப் புனைவின் கலந்தூடாடும் தன்மையின் காரணமாக, வகைமைகளின் இறுக்கம் மெல்லத் தளர்ந்து வருகிறது. கற்பனாவாதம் மிகுந்த அத்தனை புனைவுகளையுமே (அறிவியல் புனைவு உட்பட), கனவுருப்புனைவென அழைத்துக்கொள்வோம்.

தமிழில், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் தொடங்கி சமீபத்திய குள்ளச் சித்தன் சரித்திரம் வரை கனவுருப்புனைவின் வரலாறு நீண்டிருக்கிறது. அறிவியல் புனைகதைகள், இயற்கையை மீறிய, அதற்கு மேற்பட்ட அல்லது வினோதமான ‘காத்திக்’ (Gothic) வகை கதைகளிலிருந்து வந்தவை என்கிறார் அக்கதைகளின் முன்னோடியான சுஜாதா (‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பின் முன்னுரையில்). அவரது காலம் தொட்டு ஜெயமோகனின் ‘விசும்பு’ வரையான பரப்பு இருந்தாலும், தமிழில் அறிவியல் புனைவு பரவலாக எழுதப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. நேர்மாறாக, ஆங்கிலத்தில் அறிவியல் புனைவுகள், விண்வெளிப் பயணங்களையும், வேற்றுகிரக வாசிகளையும், ரோபாட்களையும் தாண்டி நுட்பமான எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நெட்ப்ளிக்ஸின் (Netflix) பிரபலமான ‘Black Mirror’ தொலைக்காட்சித் தொடரை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

மிகைப் புனைவு, அறிவியல் புனைவு என அத்தனை வகைமைகளின் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது – அறிவியலின், சித்தரிக்கப்பட்ட உலகின், ஊடாக மனிதனின் இருப்பையும், அகத்தையும் அறிய முயல்தல்.

அரூ – என்ன? எதற்கு?

அரூ என்பது ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான் அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது. தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த ‘அரூ’. முக்கியமாக, டிராகன்களுக்குப் பயப்படாத, டிராகன்களைப் பாதியில் விட்டுவிடாத, டிராகன்களுடன் தன் வாழ்நாள் முழுதும் பயணிக்கிற மனங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. ‘அரூ’ நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சிதான்.

‘அரூ’ கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகளை வெளியிடும் தமிழ் மின்னிதழாக இருக்கும். இது, சிறுகதைகள், குறுங்கதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், காமிக்ஸ், நடனம், இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களமாக இருக்கும். எவ்வகைமையிலும், வடிவிலும் அடங்காத பரீட்சார்த்த கலைப் படைப்புகளையும் அரூ வெளியிடும். அரூவை வாசிக்க, தமிழும், சிறிது கற்பனையும், தீராத தேடலும் போதும். காலாண்டுக்கு ஒரு முறை, உங்களைச் சந்திக்கவிருக்கிறோம்.


இந்த முதல் இதழில், மொத்தம் பதினேழு படைப்புகள், ‘அரூ’பத்தைத் தேடித் தம் பயணத்தைத் தொடங்குகின்றன. நித்தமும் புனைவுலகில் புழங்குகிற ‘லொந்தார்’ இதழின் ஆசிரியர் ஜேசனுடனான உரையாடல் சமகால கனவுருப்புனைவின் சூழலை அறிமுகம் செய்கிறது.

கணேஷ் பாபுவின் அந்தரத்தில் நிற்கும் வீடு சிறுகதையில், நெருக்கடி நிறைந்த நகரொன்றில் மனிதர்களுடன், வேதாளமும், விக்கிரமாதித்தனும், கூடவே கரப்பான் பூச்சிகளும் உலா வருகிறார்கள். நாங்களே எதிர்பார்க்காதவாறு, மூன்று வெவ்வேறு வகைமையில் அடங்கும் குறுங்கதைகள் இவ்விதழில் சேர்ந்துவிட்டன – விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு முடிவிலியின் இழை, வே.நி.சூர்யாவின் மிகைப் புனைவு நரம்பு மண்டலம், அனுஷாவின் மாய யதார்த்த க்ளிக்.

றியாஸ் குரானா, இளஞ்சேரன், ச. துரை, பாலா – எழுதியிருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான உணர்வுகளை அளிக்கின்றன. பிரதீப்பின் கட்டுரை ஒரே பிரதி புதினம், திரைப்படம் என்ற இரு வடிவங்களில் எப்படி உருமாறுகிறதென்பதை ஒரு தேர்ந்த ஆய்வாளரின் கண்களுடன் அலசுகிறது.

க்வீ லீ சுவி-யின் அட்டகாசமான அடாசு கவிதை, சிறார்களும் இளையர்களும் பகிர்ந்துகொள்ளும் எனக்குப் பிடித்த கனவுருப் புனைவு, எதிர்காலம் குறித்த ஓவியங்களைத் தாங்கி வரும் நாளையின் நிழல்கள் (இந்த இதழில் கார்லா வரைந்திருக்கிறார்) – இவை மூன்றும் ஒவ்வொரு இதழிலும் வெளிவரும். ஹேமாவின் ‘6174’ என்ற நாவல் குறித்தான தன்னனுபவக் கட்டுரை, அனிமேஷன் திரைப்படங்களுடனான தன் காதலைக் காட்டும் உனாகாவின் காமிக்ஸ், மருட்சியளிக்கும் விஸ்வாவின் புகைப்படங்கள், பிரசன்னாவும் பிரஷாந்த் டெக்னோவும் உருவாக்கிய அரூவின் இதயத்துடிப்பு இசை – இவற்றுடன் அரூப உலகினுள் முதல் படி எடுத்துவைக்கிறோம்.

இவ்விதழில், கவிதை, சிறுகதை, குறுங்கதை, ஓவியங்கள், காமிக்ஸ், கட்டுரைகள், நேர்காணல், புகைப்படங்கள், இசை என ஒன்பது விதமான கலைப்படைப்புகள் சேர்ந்திருக்கின்றன. உங்கள் எண்ணங்களையும், விமர்சனங்களையும், அறிவுரைகளையும் தெரிவித்தால் பேருதவியாக இருக்கும்.

‘அரூ’வின் முதல் இதழ் உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும், குறிப்பாக, ராகவன், மோகன்ராஜ், பாலமுருகன், இளையபாரத், முரசொலி, அதியன், ஷ்ரேயா, ஷ்ரிஹா ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்! அடுத்த இதழுடன், புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம்.

அரூ குழு


அரூவின் லோகோவை வடிவமைத்தவர்

இளையபாரத் (ஈபி) பயனர் அனுபவ வடிவமைப்பாளர் (UX Designer) மற்றும் முன்முனை மென்பொருள் உருவாக்குநர் (front-end programmer). புதிய மனிதர்களைச் சந்தித்து உற்சாகமூட்டும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள அவர் எப்போதும் தயாராக உள்ளார். அவருடன் ஒரு கோப்பை காபி பருக விரும்பினால் – https://www.facebook.com/elayabharath

1 thought on “அரூ அறிமுகம்: டிராகன்களைப் பழக்குதல்”

  1. ஆர்வத்தைத் தூண்டிய தொடக்க அறிமுகம் அந்த இணைய இதழ் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
    ,இதுபோன்ற எண்ணம் வந்த குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்……

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்