தமிழின் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா உள்ளிட்ட தளங்களில் நிகழ்ந்துவிட்ட தரவீழ்ச்சியோடு தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருப்பவர்.
செல்வேந்திரன்
22-08-1982-ல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் பிறந்தார். குடும்பச் சூழலால் பள்ளிப் படிப்பு பாதியில் தடைபட்டது. அப்பா நடத்திய தீப்பெட்டி ஆபீஸ்ஸில் வேலை பார்த்தார். தொலைதூரக் கல்வித் திட்டத்தில் அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றார். 2004 முதல் 2008 வரை ஆனந்தவிகடன் குழுமத்தின் சர்க்குலேசன் பிரிவில் பணியாற்றினார். 2009-லிருந்து தி ஹிண்டு குழுமத்தின் விற்பனை மற்றும் வினியோகப் பிரிவில் பணி.
தமிழில் வலைப்பூ எழுத்து ஓர் அலையாகக் கிளம்பியபோது தீவிரமாக இயங்கியவர்களுள் இவரும் ஒருவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘முடியலத்துவம்’ தொடர் பெருவாரியான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து தமிழின் முன்னணி அச்சு ஊடகங்களில் கட்டுரைகள், கதைகள் எழுதி வருகிறார். வாசிப்பின் அவசியம், தற்காலத் தமிழிலக்கியம் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
முடியலத்துவம், பாலை நிலப் பயணம், வாசிப்பது எப்படி?, நகுமோ லேய் பயலே, உறைப்புளி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். வாசிப்பது எப்படி நூல் ஆங்கிலத்தில் 'How to Read?' எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மனைவி திருக்குறளரசி. மகள்கள் இளவெயினி, இளம்பிறையுடன் கோவையில் வசித்து வருகிறார்.