கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், இசைக்கலைஞர் எனப் பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.
இவரின் கவிதைகளில் சில ஒன்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன. இவரது தேர்தெடுத்த கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.
இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், டி. என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இவர் இயக்கி உள்ளார். விஜய், ஜெயா போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிய இவர் அந்த நிறுவனங்களுக்காகப் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் 'ஏ' கிரேட் நாடகக் கலைஞராகப் பங்காற்றி வருகிறார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட டப்பிங் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராக உள்ள இவர் சமீபத்தில் வெளியான 'டு லெட்' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
சாகித்திய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக (2003 முதல் 2007 வரை) பணியாற்றி உள்ள இவர், நவீனக் கவிஞர்கள் பலரது கவிதைகளை மெட்டமைத்து இலக்கிய மேடைகளில் பாடி வருகிறார். சில இலக்கிய விருதுகள் வழங்கும் அமைப்புகளில் நடுவராகவும் உள்ளார்.
தமிழக அரசு பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, நீயூஜெர்சி தமிழ்சங்க விருது, சிற்பி இலக்கிய விருது, தி.க.சி. இயற்றமிழ் விருது, மா. அரங்கநாதன் வாழ்நாள் இலக்கிய விருது, தஞ்சைப் பிரகாஷ் கவிதை விருது, ஆனந்தாஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் கலை இலக்கியவிருது போன்ற விருதுகளைத் தனது இலக்கியப் பணிகளுக்காக இதுவரை பெற்றுள்ளார்.
விக்கி பீடியா லிங்க்:
https://ta.wikipedia.org/s/436u