மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.
நாஞ்சில் நாடன்
டிசம்பர் 31, 1947ஆம் ஆண்டு பிறந்த நாஞ்சில் நாடனின் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். நாஞ்சில் நாட்டில் வீரநாராயணமங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பல ஆண்டுகள் மும்பையில் பணி நிமித்தம் வசித்து, பின்னர் கோவைக்கு திரும்பியவர், தற்போது கோவை புதூரில் வசிக்கிறார். மனைவி, மகள், மருமகன் மற்றும் இரண்டு பேரன்கள் உடன் வசிக்கிறார்கள். மகன் மென்பொறியாளராக ஹைதராபாதில் பணியாற்றி வருகிறார். சூடிய பூ சூடற்க எனும் சிறுகதை தொகுதிக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கனடா இலக்கிய தோட்டம் விருது பெற்றவர். அவர் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு விருது நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் அளிக்கப்படுகிறது.
ஆறு நாவல்கள், 150 கதைகள், 400க்கும் மேற்பட்ட கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், நாற்பதிற்கும் மேற்பட்ட நேர்காணல்கள், பழந்தமிழ் இலக்கிய வாசிப்பு என நவீன தமிழ் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொய்வின்றிப் பங்காற்றி வருபவர் நாஞ்சில் நாடன்.
https://nanjilnadan.com/