புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.
கோணங்கி
எழுத்தாளர் கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. 1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர். 1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர் இவர். பாழி, பிதிரா, த என்ற இவருடைய மூன்று நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை.
நீர்வளரி: ஒரு முன்னோட்டம்
எரிந்த ஒரு நூலகத்தை மேகலா ரேகையில் நனைத்து நடிகர்கள் உலர்த்துகிறார்கள் பார்.