பிருந்தா சாரதி
பிருந்தா சாரதி எனும் புனைப்பெயரில் எழுதிவரும் நா.சுப்பிரமணியன் 1965-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர். இவருக்கு மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சண்முகநாதபுரம் கிராமம், பூர்வீகம். 1992-ஆம் ஆண்டு இவரது முதல் கவிதை நூலான ‘நடைவண்டி’ வெளியானது.
நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’, ‘தேவதை’ இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ மற்றும் கவிஞர் வைரமுத்து இயக்கிய ‘கவிதை பாருங்கள்’ என்ற கவிதைகளைக் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர் ஆகியவற்றில் உதவி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். 2003-ஆம் ஆண்டு ‘தித்திக்குதே’ என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆனந்தம்’, ‘பையா’, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, சண்டக்கோழி -2 ஆகிய திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘TAMIL POETRY TODAY’ எனும் புதுக்கவிதைத் தொகை நூலில் இவரது ‘ஊமை’ என்ற கவிதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு நாட்களில் இவர் எழுதிய கவிதை டாக்டர் கே. எஸ். சுப்ரமணியம் அவர்களின் Lockdown Poems நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது ‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்’ கவிதைத் தொகுதி 2016ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றது. தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் இவர் எழுதி வெளியிட்ட ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற ஹைக்கூ கவிதைத் தொகுதி 2017-ஆம் ஆண்டுக்கான அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான முதல் பரிசையும் பெற்றது. எண்களைத் தலைப்பாகக் கொண்டு எண்களின் பின் மறைந்திருக்கும் தத்துவத்தையும், புதிர்களையும், தர்க்கத்தையும், அன்றாட வாழ்வையும் கவிதைகளாக இவர் எழுதிய ‘எண்ணும் எழுத்தும்’ நூல் படைப்பு குழும விருது (2017) பெற்றது. இவரது பிற கவிதை நூல்கள் ‘பறவையின் நிழல்’ நூறு காதல் கவிதைகள் கொண்டது. 'இருளும் ஒளியும்' (2019) ஒளியையும் இருளைப் பற்றியுமான ஆலாபனைகள். இந்நூல் 2020க்கான சௌமா இலக்கிய விருது பெற்றிருக்கிறது. கல்லூரிப் பாட நூல்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 'பச்சையம் என்பது பச்சை இரத்தம்' இவரது புதிய கவிதை நூல் வெளிவர உள்ளது. சூழலியல் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த 125 ஹைக்கூ கவிதைகள் கொண்ட நூல் இது.