மற்ற மனித உயிரினங்கள் போல ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தார். பிறந்ததுமே எழுத்தாளர் என்று தெரிந்துவிட்டதால் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போதெல்லாம் ஆதார் கார்ட் இல்லாததால், வேறு வார்டுக்கு மாற்றும்போது குழந்தை மாறிவிட்டதாக இந்த எழுத்தாளர் குடும்பத்தில் ஒரு சந்தேகமும், உறவினர்கள் மத்தியில் கிசுகிசுவும் நிலவி வருகிறது. அதனால் இவர்தான் அந்த எழுத்தாளரா? அல்லது இந்த எழுத்தாளர் வேறு குடும்பத்தில் வளர்ந்து வேறு பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகிறாரா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.
ஹாவர்ட் யூனிவர்சிட்டியில் இவர் அட்மிஷனுக்கு விண்ணப்பிக்காததால் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதுதான் இன்றைய உலக யதார்த்தம் மற்றும் அபத்தம்.
இவருடைய புத்தகத்தை வேறு யாரும் ஆய்வு செய்யாமல், அடிக்கடி இவரையே சந்தேகங்கள் கேட்டு, இவரையே இவரது புத்தகங்களை ஆய்வு செய்யும் இழி நிலைக்குத் தள்ளுகின்றனர்.
இதுவரை எந்த அமெரிக்க ஆப்பிரிக்கப் பல்கலைகழகங்களும் இவரை உரை நிகழ்த்த அழைத்ததில்லை. எப்போதேனும் அழைப்பு வரும் என்று முன்கூட்டியே கணித்து, பதில் மெயில் தயாராக வைத்திருக்கிறார். அதில் 2 காரணங்களைப் பிராதானமாகக் குறிப்பிட்டு வர இயலாது என்று எழுதி வைத்து இருக்கிறார்.
1. எனக்கு ஆங்கிலத்தில் பேசினால் காதில் விழாது.
2. விசா எடுக்க என்னால் தெருவில் நிற்க முடியாது என்பதையும் தாண்டி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் இல்லை.
இவர் இதுவரை எந்த விருதையும் வாங்கியதில்லை. எப்போதேனும் யாரேனும் ஒரு இண்டர்நேஷனல் விருது கொடுத்துவிட்டால், அதற்குப் பிறகு ஆட்கள் போட்டு எழுதி பல்வேறு நாவல்கள் வெளியிடத் திட்டம் வைத்து இருக்கிறார்.
மெக்கா மதினா செல்வது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வது போன்றது சாருவுக்கு மற்ற கலைஞர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது.