கர்ப்பகிரகம்

12 நிமிட வாசிப்பு

“ராசாத்தி யாருன்னு சொல்லு தாயீ,” என முதுகுடும்பன் சங்கிலி அவளைக் கையெடுத்துக் கும்பிட்டு இறைஞ்சிக் கொண்டிருந்தான். அவள் அந்த மாமரத்தின் அடியில் தலைவிரி கோலமாக மூன்று மாதங்களாக அமர்ந்து கொண்டிருக்கிறாள். மூன்று மாதக் கர்ப்பத்தின் வீக்கம் அவளின் வயிற்றில் தெரிந்தது. அவள் கண்கள் சிமிட்டியிருக்கவில்லை. கன்னங்களில் காய்ந்த கண்ணீருடன் கண்மையின் கருஞ்சுவடுகள் இருந்தன.

“தப்பில்ல தாயீ. அவன் இருக்க எடத்துக்கேகூட ஒன்ன கூட்டிபோயி விட்டு வந்திடுவேன் எந்தாயீ,” என்றான். அவன் பேசியவைகளிலேயே அந்தச் சொல் மட்டும் அவள் காதில் நுழைந்தது போல மெய்ச்சிலிர்ப்பு கொண்டாள். அப்போதுதான் சங்கிலியை முதல் முறை பார்ப்பது போல குனிந்து, ஏக்கப்பட்டு, அவன் கண்களோடே அவள் பார்வையை நீக்காமல், தலையை ஆட்டியவாறு, முதுகைத் திருப்பாமல் கையை மட்டும் வளைத்து, பின்னாலிருந்த சஞ்சீவி மலையைக் காண்பித்தாள்.

சங்கிலி உணர்ந்து கொண்டவன் போல அவளை விட்டகன்று சஞ்சீவி மலையைப் பார்த்துக் கையெடுத்துத் தலைமேல் வைத்துக் கும்பிட்டு, “சித்தா.. அனுப்பி வைக்கேனடா.. என்ஞ்சித்தா… என் கொல தெய்வத்த… ஏழுமாசம் கழிஞ்சு தூம கழியும்போது அனுப்பி வைக்கேனடா சித்தா.. அனுப்பி வைக்கேனடா,” என்று கூறிக்கொண்டே மண்டியிட்டு அழுதான்.

ராசாத்தி அதன்பின்தான் நிமிர்ந்தெழுந்து அமர்ந்தாள். நித்தமும் செண்பகத்தோப்பு அருவிப்பாறைகளுக்குச் சென்று குளித்து, கறுப்புடை தரித்து சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டாள். ஒவ்வொரு நாளும் அதே மாமரத்தடியில் குத்தி உட்கார்ந்து ஒரு காலை மடக்கி ஒரு காலை மட்டும் நீட்டி கண்களை மூடி எப்போதும் ஏதோ சிந்தனைக்குள் ஆழ்ந்திருந்தாள். வெறிவந்தவள் போல சில சமயம் அவளுக்கு அருகிருந்த பெருங்கல்லைச் செதுக்கிக் கொண்டிருந்தாள். எஞ்சிய நேரங்களில் அவள் கைகள் அடிவயிற்றைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஒரு நேரம் அவள் பொங்கிப் பரவசமடைந்து அழுவது போல இருக்கும். சில நேரம் நெகிழ்ந்து மகிழ்வது போல இருக்கும். அவள் வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள் என்றே அவ்வழிச் சென்ற அவளைப் பார்ப்பவர் நினைத்தனர். ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் அவளுக்குப் படையலிட்டுக் கொண்டிருந்தனர். பெருந்தாயென அவள் உடலும் முலைகளும் வீங்கிக் கொண்டிருந்தது.

ஏழு மாத நிறைவில் அவள் பேற்றுக்காலம் வந்தது. ஊரே கூடியிருந்த ஒரு மாலையில் அவள் யோனியிலிருந்து ரத்தமும் சதையுமான அதை எடுத்துத் தொப்புள் கொடியைத் தானே அறுத்து முதுகுடும்பன் கைகளில் கொடுத்தாள். கைகள் நடுங்க அவன் வாங்கிக் கொண்டபின் அவள் ஓலமிட்டழுதாள்.

அவள் ஓலத்துடன் இணைந்து கொண்டது மூத்த மங்கள அன்னைகளின் குலவைச் சத்தம். காடு அதிர்ந்து மீண்டு கொண்டிருந்தது. நிணமும் ரத்தமுமென நனைந்த மண்ணை அள்ளி அள்ளி அவள் செய்து வைத்திருந்த கல்லில் ஆவேசமாகக் கொட்டினாள். அந்தக் கல் ஆண்குறியை ஒத்திருந்தது. அதன் கீழே யோனியின் நுழைவாயில் போன்ற அமைப்பு இருந்தது.

***

மூடியிருந்த மோகனாம்பாளின் கண்கள் எதையோ கண்டு கொண்டது போல இமைகளுக்குள் உருண்டு கொண்டிருந்தன. கருஞ்சீலை உடுத்தி, வெள்ளியாலான நாகமாலை அணியும், நெத்திச்சுட்டியும் அணிந்திருந்த அவளின் வலது கையிலிருந்த நாகவளையணி கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யக் காத்திருந்த கல்லின் மேல் இருந்தது. மெல்லிய அகல் ஒளியில் அவளைச் சுற்றி அமர்ந்திருந்த சில்பியும் அரசரும், மிகச்சில அமைச்சர்களும் கைகள் கூப்பியவாறு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அதுதான். அதுதான்.” எனப் பரவசத்தோடு மோகனாம்பாள் கண்களை விழித்துக்கொண்டு கத்தினாள். தலைமைச்சில்பியின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. பிரதிஷ்டைக் கல்லிலிருந்து தன் கைகளை அகற்றி, மை தீட்டப்பட்ட தன் அகண்ட விழிகளை விரித்து முதுசில்பியை வெறித்து நோக்கி “கர்ப்ப… கிரகம்” என்று மெல்லக் கூறி புன்னகைத்தாள். சில்பி கைகளை மேலும் இறுக்கமாக்கி கூப்பிக்கொண்டே தலையை மேலும் கீழும் அதை ஆமோதிப்பது போல ஆட்டினார்.

“குதம்பாய்…
மாளிகை எதுக்கடீ…
சித்தன் உறையும் கருவறை போதுமடீ
உனக்குக் கருவறை போதுமடீ
உனக்கு..”

எனக் கை நீட்டி பேயனை நோக்கி “உனக்கு” என வெறியாட்டெழுந்தவள் போல் கத்தினாள். மண்டியிட்டு அமர்ந்து கைகள் கூப்பியிருந்த பேயனும் அதை ஆமோதித்தான். அதைக் கண்ட மோகனாம்பாள் குலவையிட்டு அவர்கள் குழுமியிருந்த கரும்கற்பாறைகளை அதிரச்செய்தாள். மேலும் மேலும் எனத் தான் எழுப்பிய சத்தத்தால் தானே வெறியெழுந்து ஆடினாள். அவள் கைகளும் உடலும் இறகுபோலக் காற்றை அசைத்துக் கொண்டிருந்தன.

திடீரெனப் பிரதிஷ்டைக் கல்லை லகுவாகக் கட்டோடு தூக்கி தன் பெருமுலைகளுக்கு நடுவே அதை வைத்துக் கொஞ்சிக்கொண்டே, “குதம்பாய் கருவறை போதுமடி” என ஆடினாள். ஆடிக்கொண்டே அந்தக் கரும்பாறைக்குள்ளிருந்து வெளிவந்தவளைப் பூசாரிகளும் குடித்தலைவர்களும் கை எடுத்து கும்பிட்டனர். சில்பியும் பேயனும் அவள் பின்னாலேயே அவள் பிரதிஷ்டை செய்யக் காண்பிக்கப் போகும் இடம் நோக்கி அவள் பின்னால் சென்றனர்.

அவள் கல்லால் அமைக்கப்பட்ட வேலியைச் சுற்றி மூச்சிரைக்க அந்தப் பிரதிஷ்டைக் கல்லைத் தூக்கி ஓடிக்கொண்டே இருந்தாள். மூச்சிரைக்க ஓடியவள் அந்த மாமரத்தின் கீழே ஒரு சுழிப்பை நோக்கி ஈர்க்கப்பட்டவள் போல ஒரு கையைப் பக்கவாட்டில் நீட்டி ஆள்காட்டி விரலால் சுட்டி சில்பியைத் தன் உருட்டு விழிகளால் தேடிக் கண்டு “கர்ப்ப கிரகம்” என அழுத்தமாக உச்சரித்தாள். கையிலிருந்த கல்லை அவள் சுட்டிய இடத்தில் கீழே போட்டு அதன் மேல் ஓங்கி அமர்ந்து “குதம்பாய்” என அலறினாள். கால்களை மெல்ல விரித்தபோது அதன் நடுவிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

தன் பனையோலைக் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சில்பி திடுக்கிட்டு எழுந்து தொண்டைக் குழியைத் தன் இடது ஆள்காட்டிவிரலையும் கட்டை விரலையும் ஒரு சேரக் குவித்து பற்றிக்கொண்டு அமர்ந்தார். அவர் கால்களின் அருகில் அமர்ந்திருந்த இளம் சிஷ்யன் விஸ்வன் அந்தத் திடுக்கிடலை உணர்ந்தவன் போல அருகிலிருந்த ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து விரைந்து அவரிடம் நீட்டினான். சில்பி தான் கண்ட கனவை அதில் விரிவாக வரைந்து விஸ்வனிடம் மீண்டு அளித்தார். அதை வாங்கிய விஸ்வன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

சில்பி அவனை நோக்கி “கர்ப்பகிரகம்” என்றார். மேலும் பரவசத்தோடு அவன் கண்களை நோக்கி, “கண்டெடுத்த பிரதிஷ்ட்டைக் கல்லை நிறுவும் இடம்… நாம் அமைக்கப்போகும் முதல் கோவில். கடந்து உள் செல்பவன் உறையும் இடம்,” எனக் கூறினார். விஸ்வனின் கண்கள் பூத்திருந்தன. அவர் கால்களை வணங்கியவன் கரங்களை உயர்த்தி குடிலின் உத்தரம் நோக்கி கும்பிட்டு “ஓம்” என்றான்.

***

கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்ட நேத்ரனின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அது தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதபடிக்கு கைகளும் கால்களும் பெல்டுகளால் கட்டப்பட்டிருந்தன.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திரா, “ஷேல் ஐ?” என மெல்ல பதறியபடி இனியனின் பக்கம் திரும்பிக் கேட்டாள். இனியன் கூர்மையாக நேத்ரனின் உதடுகளைப் பார்த்துக்கொண்டே அவள் பக்கம் கையை மட்டும் வேண்டாம் என்றவாறு காண்பித்து, “நோ,” என்றான்.

நேத்ரனின் உடல் மேலும் மேலும் நடுக்கம் கொண்டது. அது வலிப்பு போல எழுந்து எழுந்து அடித்துக் கொண்டிருந்தது. அவனுடைய உதட்டசைவை இனியன் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மேலும் தெளிவாகப் பார்க்கும் பொருட்டுத் தன் கைகளால் காற்றைத் தொடுதிரையென மாற்றித் தொட்டு விரித்து நகற்றிப் பார்த்தான். நேத்ரனின் வாயிலிருந்து வெளிவந்த சொல் வார்த்தையாகத் தொடுதிரையில் தெரிந்தது. “கர்ப்பகிரகம்” என அதில் எழுதியிருந்தது. அதைக் கண்டு பரவசமடைந்த இனியன் மேலும் நேத்ரன் தன் கனவுகளில் கண்டவைகளைக் காணக் காற்றில் நிச்சலனமாக நின்றிருந்த அந்தத் தொடு திரையை வேகமாகப் பின்னகர்த்தினான்.

அதில் அவர்களின் புராஜெக்ட் குழு கண்டறிந்த லிங்க ரூபமும், கற்றாளிகளும் என விரிந்து சில்பியும், மோகனாம்பாலும், முதுகுடும்பனும் ராசாத்தியுமெனச் சென்று சஞ்சீவி மலையின் உச்சி கூர்மையாகத் தெரிந்தது. அதன் மேல் இளம்பிறையனென மதியன் மினுக்கிக் கொண்டிருந்தான்.

“ரைட் டைம் டூ ப்ளக் அவுட்,” என அலறினான் இனியன். அந்த நொடியே இந்திரா அதைச் செய்தாள்.

“ஒரே ஒரு இ-சிகரெட். ஜஸ்ட் ஒன்,” எனக் கெஞ்சும் பாவனையில் அவளைப் பார்த்துக்கொண்டே அவள் அனுமதிக்குக் காத்திருக்காமல் அதைப் பற்ற வைத்தான். மிக நீண்ட கம்பத்தில் இருந்த ஒற்றை மாடியின் ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக்கொண்டே புகையல்லாத புகையை ஊதினான் இனியன். கீழே நிலம் வெறிச்சோடி இருந்தது. ஆங்காங்கே பல இடங்களில் இதே போன்ற அமைப்புள்ள கம்பங்களில் ஒற்றை மாடியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என யோசித்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புராஜெட்டாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கும் ஒற்றைக் குடுவைகளில் சில மனிதர்கள் பறந்து கொண்டிருந்ததையும் பார்த்தான்.

பின்னால் திரும்பி அவளைப் பார்த்து, “குடம்பை தெரியுமா?” எனக் கேட்டான்.

அவள் தலையை ஆட்டியபடி, “தமிழ் வார்த்தையா?” என்றாள்.

“ஆமா,” என மெலிதாக புன்னகைத்தான். “குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே உடம்போடு உயிரை நட்பு -ன்னு ஒரு கவிதை,” என்றான். அவள் உடனே தனக்கு முன்னே உள்ள காற்றை தொடுதிரையென ஆக்கி அவன் சொன்னதைப் பற்றிய கவிதையைத் தேடி அதன் விளக்கத்தைப் பார்த்தாள். அதைப் பார்த்த அவன் கையிலிருந்த சிகிரெட்டைக் கீழே போட்டுவிட்டு அவள் கைகளை பற்றிக் கொண்டு, “ஃபக் தட் டேட்டாஸ். அப்படின்னா கிட்டத்தட்ட நாம இருக்க இந்த இடம் மாதிரி,” என்றான்.

“இங்க உயிர் இல்லங்கிறியா?”

“தெரில. இந்த சிலையப் பாறேன்,” என்றவாறு அருகில் கண்ணாடிக்குள் வைக்கப்பட்ட கருங்கல்லாளான லிங்கத்தைக் காட்டியபடி மேலும் தொடர்ந்தான். “ஒன்னு இன்னொன்னு கூட எப்படிப் பிணைஞ்சு இருக்குன்னு பாரேன். இங்க நாம எல்லாரும் தனித்தனியா இருக்கோம். முழுமையா நிறைவா மகிழ்வா இருக்கதா நினைக்கறோம். ஆனா உயிர் இல்ல. அது எப்பவோ நம்மல விட்டுப் போயிடுச்சுன்னு தோணிட்டே இருக்கு. ஐ மீன் என்னைக்குக் காமத்தைக் கைவிட்டு இப்படிக் குழாய்கள்ல பிறந்து இறக்க ஆரம்பிச்சோமோ அப்ப,” அவன் அவளுக்கு நேரே நின்று அவள் கண்களைப் பார்த்தான்.

எப்போதுமே உணர்வுகளடங்கிய அவனின் கண்கள் அவளை வந்து தாக்கும்போது அவள் தன் அடிவயிற்றில் மின்னல் வெட்டுவது போல உணர்வாள். இப்போதும் அப்படி உணர்ந்தாள். “ஒன்னு இன்னொன்னு கூடவா? இது ஒன்னுன்னு நினைச்சேன். ஐ மீன்… ஒரு உயிர்னு,” என்றாள் உணர்வுகளை வெளிக்காட்டாதபடி.

“பிறவா யாக்கை பெரியோன் -னு ஒரு வரி உண்டு. உயிர் ஒன்னு பிறக்கறதுக்கு முன்ன இருக்கற வடிவம் இதுவா இருக்கலாம்ல. இந்த லிங்கத்த உத்துப்பாரு. அது வெளில இல்ல. கர்ப்பபைக்குள்ள இருக்குன்னு கற்பனை பண்ணிப்பாரு. ரத்தமும் சதையுமான பைக்குள்ள. நம்ம உருவாக்கற மாதிரி கண்ணாடிப்பீங்கான்குள்ள இல்ல,” என்று சொல்லி மேலும் ஆழமாக அவளைப் பார்த்தான். அவளின் உடல் சிலிர்த்துக்கொண்டது. கைகளில் மயிர்கூச்செரிந்திருந்தது.

அவன் சிரித்துக்கொண்டே மிகவும் அருகில் வந்து அவள் கண்களை மேலும் ஆழமாகப் பார்த்துக் கைகளால் அவள் கன்னங்களைப் பற்றிக்கொண்டான். அவள் “இனியான்.. என்ன இது” என சற்றுப் பதட்டமாகக் கேட்டாள்.

“எப்பவும் போல பெயரைத் தப்பா சொல்றடீ. அது இனியன்,” என முனங்கிக்கொண்டே மேலும் நெருங்கி வந்து அவள் மூக்கைத் தன் மூக்கால் முன்னும் பின்னுமசைத்துச் சட்டென உதட்டில் முத்தமிட்டான். அவள் உதட்டிலிருந்து ஒரு அதிர்வு உடலில் பரவி மீண்டும் அடிவயிற்றின் மத்தியில் சிறு மின்னல் வெட்டியதை உணர்ந்தாள். அந்த அதிர்வுகளை உணர்ந்தவனாக அவள் முன் மண்டியிட்ட இனியன் அவளின் இடுப்பைக் கட்டியணைத்து அடிவயிற்றின் மேல் கை வைத்து “இதுதான்” என்றான்.

“என்ன”

“இதுதான் கர்ப்பகிரகம். என் செல்ல ராசாத்தி,” என அவள் இடையை மேலும் இறுகக் கட்டிக்கொண்டான்.

“உனக்குப் பைத்தியம்,” என்று சொல்லி அவனை அகற்ற முற்பட்டாள். ஆனால் இம்முறை அவளின் அடிவயிறு மேலும் மேலும் படபடத்தது. அங்கிருந்து அவளின் யோனிக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் அந்த அதிர்வுகள் கடத்தப்பட்டு முதன்முறையாக அது ஈரமானது.

அவன் கைகளை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவள் பிறப்புறுப்பின் மேல் முகம் புதைத்து அழுதான். “இனியான் என்ன இது. இங்க யாருமே இப்படி இல்ல. யாரும் அழறதில்லை. மகிழ்ச்சி மட்டும்தானே இங்க இருக்கு. எல்லாம் இங்க இருக்கு. ஏன் அழற?” என அவன் மேல் கனிந்து கேட்டாள்.

“எல்லாம் இருக்குடீ. ஆனா இங்க உயிர் இல்ல. ‘அது’ இல்ல,” என்றான்

“எது?”

“கடவுள்,” என்றான்.

“விளக்க முடியாதது கடவுள் அப்படிதானே. இங்க எல்லாமே நம்மலால விளக்க முடியுது இப்ப. இன்னும் பிடிபடாதவைங்க இருந்தா அத நமக்குப் பின்னாடி வர்ற நாம உருவாக்கப் போற க்ளோன்கள் விளக்குவாங்க. தி பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஜீன்ஸ வைச்சுதான் நம்ம அடுத்த தலைமுறைகள உருவாக்கறோம். விளக்க முடியாததுன்னு ஒன்னு இல்லன்ற வர இந்த மிஷன் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்னுதானே நம்மள உருவாக்கின முன்னோர்கள் சொல்லிருக்காங்க.”

“ஃபக் தட் முன்னோர்கள். டீ. உன்ன ‘டீ’ன்னு கூப்பிடறப்ப உன் அடிவயிறு மின்னல் வெட்டறதா சொல்லிருக்கல்ல. அது என்னனு இப்ப கண்டுபிடிச்சிருக்கேன்.”

“என்ன. மறுபடியும் புல்ஷிட்டா எதாவது சொல்லுவ.”

“இல்ல,” என்று சொல்லி ஏக்கமாக அவளின் அடிவயிற்றைக் கட்டிக் கொண்டு முகத்தை அதில் புதைத்தான். அவன் தலையைத் தடவி முகத்தைக் கைகளில் எடுத்து “என்ன” என அன்னையைப் போலக் கேட்டாள்.

அவன் அவள் கண்களைப் பார்த்து, “லெட்ஸ் ஃபக்,” என்றான்.

“யு மீன் செக்ஸ்?” என ஆச்சர்யம் மேலிடக் கேட்டாள். அவன் தலையை மேலும் கீழும் ஆம் என்பது போல ஆட்டினான்.

“இங்கு யாரும் இப்படி செய்யறதில்ல இனியான். உன்ன ஏன் எனக்கு பிடிச்சிருக்கு? உன்னை விட்டு உன் கிறுக்குத்தனங்களை விட்டு என்னால் போகவும் முடியல,” என அவனைத் தள்ளிவிட முயற்சி செய்தாள். அவன் மேலும் இறுக்கமாக அவளைப் பிடித்துக்கொண்டான். அவள் யோனியிலிருந்து திரவம் வெளிவருவதை அவளால் உணர்ந்து கொள்ளுமளவு இப்போது அவளின் உள்ளாடை நனைந்திருந்தது.

அவன் மெல்ல எழுந்து அங்கிருந்த பேழைக்குள் வைக்கப்பட்ட லிங்கத்தைத் தொட்டுக் கும்பிட்டான். அவள் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு லிஃப்டில் ஏறி “கார் பார்க்கிங்” என கத்தினான். அது அதிவிரைவாக அங்கு சென்று நின்றது.

“கார் ஆ. எதுக்கு? கார் போறதுக்கு வழி இருக்கான்னுகூட நமக்குத் தெரியாது. ரோட்ல எல்லாரும் போறதக் கைவிட்டுப் பல வருஷங்களாச்சு” எனப் படபடப்பாக கேள்விகளை அடுக்கினாள். அவன் சிரித்துக்கொண்டே அவள் கன்னங்களில் அழுத்தி முத்தமிட்டான். கார் பார்க்கிங் வந்ததும் இண்டர்காமில் “டூ எ நியர்பை மெளண்டைன் வித் எ குட் வ்யூ ஆஃப் மூன்,” என்றான். சில உருட்டுச் சத்தங்களுக்குப் பின் ஒரு கார் அவர்கள் முன் வந்து நின்றது.

“ப்ளீஸ் ஹேவ் எ சீட்,” என்ற இயந்திரக்குரல் ஒலித்தது.

ஆளரவமற்ற சாலைகளைப் பார்த்துக்கொண்டே வந்தான். மனிதர்கள் நடமாட்டமில்லை. வீடுகளும் இல்லை. ஆங்காங்கே மிக ஊசி போன்ற அமைப்பில் போஸ்ட் கம்பங்களுக்கு மேல் ஒரு கூடு போல ஒற்றைச் சாளரம் கொண்ட அறைகள் மட்டுமே இருந்தன. அங்கிருந்து யாராவது கீழே பார்க்க வாய்ப்பிருந்தால் இந்தக் காரை அவர்கள் பார்க்கக் கூடும். ஆனால் யாரும் கீழே பார்ப்பதில்லை என எண்ணிக்கொண்டான். அவன் அவளின் கைகளைப் பற்றியிருந்தான்.

சாலையின் முடிவில் காட்டிற்கான திறவுவாயில் வந்ததும் கார் அங்கு நின்றது. “யு ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்,” என்ற இயந்திரக்குரல் ஒலித்தது.

ஏற்கனவே புழங்கிய இடம் போல அவளைக் கூட்டிக்கொண்டு ஓடினான். மெல்லிய எதிர்க்காற்று அவர்கள் மேல் வீச மூச்சிரைத்தபடி இருவரும் ஒரு மாமரத்தினடியில் வந்து நின்றனர்.

அவன் அவளை இழுத்துக் கைகளை மேலே சுட்டி, “பெளர்ணமிக்கு முந்தைய மதி. பெளர்ணமியைவிட பிரகாசமா இருக்கும்,” என்றான். அவள் “ம்” என்றவாறு அவன் தோள்களில் சாய்ந்துகொண்டு அதைப் பார்த்தாள். அதன் பிரகாசத்தால் மலையின் விளிம்புகள் கூர் கொண்டு தெரிந்தன.

“இனியான் ஆர் வி ரியலி கோன்னா ஃபக்?” எனச் சற்றுத் தயக்கத்துடன் கேட்டாள்.

“ஏன்டீ. வேணாமா?” எனச் சினுங்கியவாறு அவள் தலையில் முத்தமிட்டான்.

“பத்து மாதம். எவ்ளோ டைம் வேஸ்ட்,” என்றாள்.

“அது கருவறையில கடவுளச் சுமக்கறது மாதிரி டீ. அந்த உணர்வை நான் ஸ்டடி பண்ண விரும்பறேன். உன் கூடவே இருப்பேன்டீ,” என்றான்.

“எனக்கு செக்ஸ் பத்தி புத்தக அறிவு மட்டும்தான். ஐ டோண்ட் திங்க் ஐ கேன் இனியான்,” எனப் பயத்தோடு கூறினாள்.

“நான் இருக்கேன்ல. பின்ன இயல்பாவே அது உனக்குள்ள இருக்கும். என்ன செய்யனும்னு அது சொல்லிக் கொடுக்கும். கூர்ந்து அதோட பேச்ச மட்டும் கேட்டா போதும்,” என அவளை அணைத்து மீண்டும் முத்தமிட்டான். பேசிக்கொண்டே இருந்தவர்கள் ஒரு கணத்தில் உடல் சேர்ந்தனர். அவள் உடல் முழுவதும் நிலவொளியை உள்வாங்கிக் கொண்டது போல ஆற்றலால் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அவள் கண்கள் கூர்மை கொண்டு அவன் கண்களையே நோக்கிக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு புள்ளியில் அவள் அந்த மின்னல் வெட்டை அடிவயிற்றின் ஏதோவோர் மையத்தில் மிக உச்சமாக உணர்ந்தாள். இம்முறை அது சற்று அதிக நொடிகள் நீடித்தது. அந்த நொடியின் உச்சகணத்தால் அவள் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

அவன் எதையோ சாதித்துவிட்டது போல அவளை முத்தமிட்டுத் தன்னை அவளிடமிருந்து மீட்டு உடலைத் தளர்த்திக் கொண்டான். அவள் எழுந்து இரு கால்களை ஒருசேரக் கட்டிக் கொண்டு கால்களுக்கிடையே முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். அவன் அதை எதிர்பார்த்ததைப் போலச் சற்றுச் சலிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு எழுந்து நின்று நிலவைப் பார்த்தான். அது இன்னும் பிரகாசமாகத் தெரிவது போல இருந்தது அவனுக்கு. சென்று அருவிப்பாறையில் குளித்து மீண்டெழுந்து வருகையில் மேலும் அவள் ஏங்கி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தான். “எமோஷனல் இடியட்ஸ்,” என அவளுக்குக் கேட்காதவாறு திட்டினான்.

“ட்ரஸ்ஸ மாத்திக்கோ அப்ஸர்வேஷன் எழுதனும்,” என உணர்வு முழுதும் நீங்கியவனாகச் சொன்னான். அவள் அவனை ஏதோ வித்தியாசமான பிறவி போலக் கலக்கத்துடன் பார்த்தாள்.

“டிட் யு ஃபீல் தட்?” என அவளின் கன்னங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள தொனியில் கேட்டான். அவள் இப்போது மேலும் அழ ஆரம்பித்திருந்தாள்.

“திஸ் கேர்ல்ஸ் ஆர் செண்டிமண்டல் ஃபூல்ஸ்,” என்று சொல்லித் தரையில் ஓங்கி அறைந்தான். “காதலும் காமமும் நடக்கற வரை புத்திஸ்வாதீனத்துடன் தானே இருக்கீங்க. பின்ன ஏன்டீ அது நடந்த பின்ன பைத்தியம் ஆகறீங்க?” என அவளை அடிக்க ஓங்கித் தன் தலையைப் பலமாக அடித்துக்கொண்டான். தன்னை அடித்ததைவிட அதிக உணர்ச்சிக்குள்ளாவது போல் அவன் கைகளைத் தடுத்தாள்.

“இந்திரா… செல்லம்மா.. இங்க பாருடீ.. என்னைவிட உன்னாலதான் அந்த உணர்வைச் சரியா உணர்ந்திருக்க முடியும். உன் கருவறைல அந்த எனர்ஜி ட்ரான்ஸ்மிஷன் இப்ப நடந்திருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆற்றல் பரிமாற்றம். இந்திரா… எனக்கு இது எவ்வளவு முக்கியமென்று தெரியும்ல. முதல்ல அழுகையை நிறுத்துடீ,” என்றான். அருகிலிருந்த ஓவர்கோர்ட்டை எடுத்து அதில் வைத்திருந்த மாத்திரையை அவளிடம் நீட்டினான்.

அவள் அவனையே வெறித்துப் பார்த்து, “வேண்டாம் இனியன். உன்னைப் போலவே ஒரு மினி இனியனை நான் பெத்துக்கப் போறேன்,” எனத் திடமாகச் சொன்னாள்.

“பைத்தியம்தான் பிடிச்சிருக்கு உனக்கு. வா இங்கிருந்து போலாம். இந்த இடமும் சூழலும்கூடப் பைத்தியக்கார நிலைய கொடுக்கக் கூடியதுதான். லேபரட்டரிக்குப் போய்ப் பேசிக்கலாம்,” என்றான்.

“நீ சொன்னியே இப்போ கொஞ்சம் முன்ன. ரொம்ப முனங்கற குரல்ல எனக்கு ஒரு மினி இனியன் கண்டிப்பா வேணும்னு,” என உடைந்தழுது கேட்டாள்.

“அது செக்ஸ டிரைவ் பண்ற டூல் இடியட். அதுக்கெல்லாமும் அர்த்தம் சொல்லி என்ன டென்ஷன் பண்ணாத. இந்த மனுஷ இனமே உன்ன மாதிரி செண்டிமெண்டல் பொம்பளைங்களாலதான் முன்னேறாம அழிஞ்சிருக்கும்னு தோணுது.”

“இல்லை இனியன். எதோட எல்லை வரையோ வந்துட்டது போல இந்த மரமும் அந்த மலையோட முனையும் இப்ப நடந்த உறவும் எனக்கு ஏதோ சொல்லுது. இனி இங்கதான் இருக்கப்போறேன். என் இனியனைப் பெத்துக்கப்போறேன்,” என்றாள்.

அவன் அவளின் இந்த முடிவைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை உறவின்போது தான் பேசிய அத்தனை உணர்ச்சிகரமான வார்த்தைகளும் அவளுக்குள் சென்று வேறு ஏதோ எதிர்வினை புரிந்திருக்குமா எனச் சந்தேகப்பட்டான். உணர்வுகளும் சொற்களும், செயல்களும் இத்தனை பெரிய மாற்றத்தை நிகழ்த்துமளவு வேதிவினையை நிகழ்த்துமா என ஒரு கணம் அவன் மண்டையை உலுக்கிக்கொண்டான்.

“சரி நீ எப்படியும் போ. நான் டேட்டாவை மட்டும் எடுத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு அவள் மண்டையை அழுத்தி அந்த டேட்டா கார்டை உருவிவிட்டு வேகமாக உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். திரும்பி ஒரு கணம் நின்று, “உன்னால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் லெபரட்ரியில எதிர்பார்க்கிறேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு உனக்குத் தெரியும்,” என்று சொல்லிவிட்டு நகரப்போனான்.

“இனியான்,” என மெல்ல கைகளை விரித்து அவனைக் கூப்பிட்டாள். காதல் மிகவும் ததும்பிய அவளின் சொற்களுக்கு அருகில் வர பயந்துகொண்டு ‘என்ன’ என்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.

“அந்த டேட்டால இல்லாததும்கூட எனக்குள்ள இருக்கு எங்கையோ ஒளிஞ்சிட்டு இருக்கு… என்னால விளக்க முடியாத ஒன்னு. அறிவால தெரிஞ்சுக்க முடியாத ஒன்னு இங்க என்கிட்ட இருக்கு. அத டேட்டாகார்ட்ல காபி பண்ண முடியாதே,” என அவள் தன் அடிவயிற்றில் கை வைத்து அவனிடம் பரிதாபமாகக் காண்பித்தாள். அவன் சற்று நேரத்திற்கெல்லாம் இடித்து உதிர்க்கப்பட்டவன் போல தளர்ந்து அமர்ந்தான்.

“இனியன்… இது பல முறை கண்டறியப்பட்டதுதானோன்னு தோணுது. உயிர் இருக்கற ஒவ்வொன்னும் உணரக்கூடிய உச்சப்புள்ளி இதுதான்னு தோணுது,” என்று கூறிவிட்டு நிலவை வெறித்தாள். அவன் மேலும் அவளுடன் பேச வாயெடுத்து அடக்கிக்கொண்டான். அவளே பேசட்டும் என்று தோன்றியது அவனுக்கு.

“இனியன் நீ கடவுள்னு சொல்லுவியே. அது நீ நினைக்கற மாதிரி ஆணும் பெண்ணும் இணையும்போது ஒரு நொடில உருவாகற ஒன்னு மட்டும் இல்லனு தோணுது. இன்னைக்கு உணர்றேன். இதுக்கு முன்னமும் இப்பவும் எப்பவும் இந்த ஆற்றல் நிகழ்ந்துட்டேதான் இருந்திருக்கு. கண்ணுக்குத் தெரியாம ஒன்னு ஒன்னோட பிணைஞ்சு ஒரு ஆற்றல் மாற்றம் நிகழ்ந்துட்டே இருக்கு. அது ஒன்னோட வடிவமாத்தான் அந்த யோனியோட கூடிய லிங்கம் இருக்கு,” என்றாள்.

அவன் சிறிது நேரம் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பின்னர் எழுந்து சென்றுவிட்டான்.

அவன் சென்றபின் அவள் உணர்வுகளற்று வெறுமையாக உட்கார்ந்திருந்தாள். அவனுடைய முதல் தொடுகையையும் முத்தத்தையும் அவளால் கடக்கமுடியவில்லை. அவள் அடிவயிற்றில் எழுந்த மின்னல் வெட்டை விழித்திருக்கையிலும் கனவிலும் என கற்பனை செய்து கொண்டிருந்தாள். அந்தத் தருணத்தின் ஆற்றல் மாற்றத்தைக் கருங்கல்லில் செதுக்க ஆரம்பித்தாள். சில சமயம் வெறிவந்தவள் போலச் சில சமயம் சாந்தமாக எனச் செதுக்கிக்கொண்டே இருந்தாள்.

அங்கேயே உண்டுறங்கிய ஐயிரண்டு திங்களுக்குப் பின் ஓர் முழு நிலவுக்குப் பிந்தைய நிலவொளியின் வெளிச்சம் நிறை நாளில் அவளுக்குப் பேற்றுக்காலம் வந்தது. பேற்றுக் கால வலியைக் காட்டுக்கு அளிக்கும்படி அழுதரற்றிக் கால்களை அகல விரித்தபடி தன் வயிற்றிலிருந்த அதை வெளியே எடுத்துப் போட்டு அதன் சத்தத்தைக் கேட்டாள். குழாயில் பிறக்கும் சிசுக்களையே பார்த்தவளுக்கு அதன் சத்தம் உடலில் அதிர்வுகளை உருவாக்கியது. கருவறையினின்று வெளியே எடுக்கப்பட்ட லிங்கம் உயிர் கொண்டதென அதை நினைத்தாள்.

தொப்புள் கொடியை அறுத்துக் குழவியைக் கையில் ஏந்தியபடி மெல்ல “இனியன்” என்றாள். பனிக்குட நீரும், ரத்தமும், சதைத்துணுக்கும் கலந்த மண்ணைக் குழைத்து பருமனான அந்த மரத்தின் அடிப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகை போன்ற அமைப்பிற்குள் அவள் செதுக்கி வைத்திருந்த யோனியுடன் கூடிய லிங்கக் கல்லில் கொட்டி “ஓம்” என சீராக முழங்கினாள்.


ஓவியம்: Created with AI Dall-E2

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்