கதை

வெண்புறா

4 நிமிட வாசிப்பு

மதங்கொண்ட யானையாய் மனம் துடிக்க துக்கத்தில் துவண்டு கிடந்தேன். எத்தனை போர்கள் எத்தனை தந்திரங்கள் அதற்காக எக்கச்சக்கமான உயிர்கள். குண்டு வெடிப்பில் வெந்து போன உடல்கள் சிதறிய உள்ளுறுப்புகள் இத்தனை ரத்தக்களரி கண்ட பிறகும் ஏனிந்த கலக்கம். சொல்லப் போனால் இதெல்லாம் செய்தது நான்தானே.

ஏழு லட்சம் ஆன்மாக்களைக் காவு வாங்கிய பின்பும் ஒரு சிறுமியின் அழுகை!

ஏன்? ஏன் அந்தப் போர்க்களத்துக்குச் சென்றேன்.போயிருக்கக் கூடாது. என் கொள்கைகளைக் கரைத்த மரண ஓலம் எந்தன் செவிகளில் இறங்கிய பெரும் பாரம்.

நான் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு நிலையான அரசாங்கம். சிந்திக்கத் தெரியாமல் உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் இந்த மக்கள். அவர்களை அவர்களிடமிருந்தே காப்பாற்றி மகத்தான ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபிக்கக் கனவு கண்டேன். சந்ததி சந்ததிகளாக ஓட்டு போட்டு அரசியல்வாதிகளின் கல்லாவை நிரப்பும் இந்த ஆட்டுமந்தையிலிருந்து ஒற்றை மனிதனாய்ப் புரட்சி செய்ய வந்தேன். நாடுகளை வளைத்துப் பிடித்தேன். கிட்டத்தட்ட உலகத்தைச் சொந்தமாக்கிக் கொண்டேன். ஆமாம் நானொரு சர்வாதிகாரி ஹிட்லரைப் போல இன வெறுப்பு கொண்டவனல்ல. 700பில்லியன் மக்களுக்காக ஏழு லட்சம் உயிர்களைப் பலி கொடுப்பது தவறல்ல என்றவன், இரண்டு நாட்களாக அறையில் முடங்கிக் கிடக்கிறேன். மேற்கொண்டு போருக்கான ஆணைகளைப் பிறப்பிக்க டாம் என் அந்தரங்கக் காரியதரிசி அரித்துக் கொண்டிருக்கிறான்.

டொங் டொங் எனச் சப்தம் எழக் கதவு தட்டப்பட்டது.

அவன்தான் வந்துவிட்டான்.

உள்ளே வா டாம்.

டாம், தலைவரே மேற்கு பகுதியின் தளபதி உங்கள் கட்டளைக்காக படைகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நிறுத்தச் சொல்.

டாம், எதைத் தலைவரே?

போரை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு திரும்பச் சொல்.

தலைவரே…?

என்ன ஆனது டாம்? நீ மதிக்காதது என் ஆணைகளை.

மன்னியுங்கள் மேன்மை பொருந்தியவரே.

“ராஜ்ஜியம் வாழ்க!”

வழக்கமான முழக்கமாக “ராஜ்ஜியம் வாழ்க” வை இந்தக் கணம் நா மறுக்கிறது. குழம்பிய முகத்துடன் குறுகுறுவென ஒரு பார்வையை வீசிவிட்டுப் போனான் டாம்.

நான் என்ன நினைக்கிறேன். கூடாது. 25 வருடங்களாக அணு அணுவாக நிலை நிறுத்திய அரசாங்கத்தை நானே தவிடு பொடியாக்கத் திட்டமிடுகிறேன்.

முடியாது. நடக்காது. நடக்கவும் கூடாது. ஆனால் அந்தக் குழந்தை இறந்துபோன தாய் மடியில் முகம் புதைத்துக் கதறிய பிஞ்சு முகம். கண்ணீரா அது. என் நெஞ்சுக்கூட்டுக்குள் வழிந்த அக்கினிக் கடல்.

ஆம். உறுதியாகக் கொல்லத்தான் போகிறேன். கட்டக் கடைசியாக ஒரே ஒரு கொலை.

அறையை விட்டு வெளியே வந்தேன். லிசியில் ஏறி அமர்ந்தேன். இந்த இரண்டாயிரம் ஏக்கர் மாளிகையில் என் பயணத் தோழன் லிசி. ரோபாட்டும் வாகனமும் கலந்து கட்டிய ஜந்து.

வினோதமான அதன் எலக்ட்ரிக் சத்தங்கள் எனக்குப் பரிச்சயமானவை.

லிசி, சென்றடைய வேண்டிய இடம்…

டாக்டர் முகிலின் ஆராய்ச்சிக் கூடம்.

300 கி.மீ வேகத்தில் விர்ர் என என்னைச் சுமந்து மறு நிமிடத்தில் இறக்கிவிட்டது லிசி.

கண்ணாடிக் கூண்டுகளில் ஆராய்ச்சிக்காக பயோ ஆயுதங்கள் பல்லிளிக்க, சுவரில் அலங்காரத்திற்காக வகையான துப்பாக்கிகள் மாட்டப்பட்டிருந்தன. தோட்டாக்கள் மின்ன, துப்பாக்கி ஏந்தியவன்தான் நானும். இந்த நவீன யுகத்திலோ இவை மியூசிய மம்மிகள். ஹைட்ரஜன் குண்டுக்குச் சமமான ஆயுதங்கள் இப்போது என் வீரர்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும் விளையாடுகிறது.

அந்தப் பிரம்மாண்ட சோதனைக் கூடத்தில் ஒரு ஓரமாகத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது அவ்வியந்திரம். டாக்டர் முகில் பத்து நாட்களுக்கு முன்னால் இதைப் பற்றி கூறியபோது குப்பைத் தொட்டிக்கு உவமானமாய்க் கூறியவன். இப்போது இதன் உதவியை நாடி வந்திருக்கிறேன்.

துணியை விலக்கினேன். சிலிண்டர்களைக் குறுக்காக ஒன்றன்பின் ஒன்றாக வைத்துப் பொருத்தியதைப் போல இருந்தது அந்த இயந்திரம்.

பச்சை நிற ட்யூப்கள் சிலந்தி வலையாய்ப் பின்னப்பட்டுப் பளீரென்று ஒளிர்ந்த அது காலத்தைக் கடக்கும் என முகில் சொன்னபோது ஆயுதத் தேவைக்கு மத்தியில் அறிவுகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதே என்று கடிந்துகொண்டேன்.

கரங்கள் நடுங்க தேதி வருடம் மாதம் குறிக்க கருங்குமிழியொன்று என்னை இழுத்து…

அப்பப்பா என்ன வேகம் வியர்வை சொட்டுகிறது. வாசலில் பன்னீர்ப் பூக்கள் பவளமாக ஜொலித்து மணம் பரப்பின. அதோ இரட்டைத் தென்னை அதன் நிழலில் ஊஞ்சல்.

மனதை அலைபாயவிடாதே ரவி.

ரவி ஆமாம் அதுதான் என் பெயர்.

தலைவர் என்னும் அந்தஸ்தில் மாண்டுபோன என் அடையாளம்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அப்பாவின் கம்யூனிசப் புத்தகங்களும் அம்மாவின் கடவுள் படங்களும் எப்போதும் போல வீட்டை நிறைத்திருக்க மாடிப்படியில் ஏறினேன். மூன்றாம் படியில் பார்வை நிலை கொண்டது.

பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடும்போது இடறி விழுந்ததில் ஏற்பட்ட கீறல், பதறிப் போன அம்மா வாரி எடுத்து என்னை அணைத்து அழுதாள்.

நினைவுகளில் இருந்து மீண்டு நிஜம். ஆனால் மறுபடியும் அம்மா.

தாலாட்டு பாடுகிறாள். வழி தவறிப்போன ஆட்டுக்குட்டியைப் போல உணர்ந்தேன். ஸ்வரங்களில் தவறினாலும் பாட்டில் பாசம் வழிந்தது. சொந்த வீட்டில் திருடனைப் போல் பதுங்கி நடந்து அப்பாவின் அறையில் ஒளிந்துவிட்டேன். அப்பாவின் அறைக்கும் என் அறைக்கும் இடையே ஒரு ஜன்னல். அது ஏன் அங்கே இருக்கிறது என இன்றளவும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை கண்டிப்பான அப்பா என்னைக் கண்காணிப்பதற்காக ஏற்படுத்தி வைத்திருப்பாரோ என்னவோ. ஜன்னலின் வழி அம்மா ஒரு நோஞ்சான் சிறுவனுக்குத் தலை தடவித் தாலாட்டு பாடுகிறாள். நான்தான் அந்த ஒன்பது வயதுச் சிறுவன்.

அம்மா. அம்மா. கண்களில் நீர் வடிகிறது.

அடுத்த வருடத்தின் முதல் மாதத்தில் இறக்கப் போகிறாள். நாசமாய்ப் போன கேன்சர் அவளை என்னிடத்தில் இருந்து பிரித்துவிட்டது. குக்கர் விசில் கடந்த கால நினைவுகளில் இருந்து கடந்த காலத்திலிருக்கும் என்னை மீட்டது. அவசர அவசரமாகச் சமையலைக் கவனிக்கக் கீழிறங்கினாள் அம்மா.

இதுதான் சந்தர்ப்பம். அறைக்குள் சென்றேன். சோதனைக் கூடத்திலிருந்து களவாடிய துப்பாக்கி என் கையில்.

அசந்து உறங்குகிறான்.

சீக்கிரம் ரவி முடித்துவிடு.

இல்லை. பாவமறியாத இந்தக் குழந்தையின் மேல் என் கொலைகளைச் சுமத்துகிறேன். ரவி அது நீயேதான். எண்ணிப் பார் அம்மாவைப் பறி கொடுத்து அழுது வடிந்த உன்னை அறை விட்டுத் தேற்றிய அப்பாவை, நித்தமும் சிறையிட்டு வீட்டை நரகமாக்கிய அவரின் அரட்டல்களை. அதை இவனும் அனுபவிக்க வேண்டுமா?

கொல்! கொல்! கொல்!

வெறிகொண்டு ட்ரிக்கரை அழுத்த தோட்டா அவன். இல்லை என் தலையைச் சிதறிக்கொண்டு பாய்ந்தது. ரத்தத்தைத் தலையணை உறிஞ்ச அந்தக் கருப்புக் குமிழி மீண்டும் என்னை உறிஞ்ச…

மறையப் போகிறேனா??????

மறுபடியும் அந்தக் குவாண்டம் உலகம் வண்ணங்கள் நின்று மின்ன வட்டங்கள் விலகி ஓட

ஆயிரம் பட்டாம் பூச்சிகள் மூளைக்குள் சிறகடிக்க விழித்துக்கொண்டேன். என்ன ஆயிற்று?

என்னை நானே கொல்ல முடியாதா…

சுற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. வானுயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே அந்தரத்தில் “ஹாப்பி 2030” மிதக்கிறது.

இஷ்டத்துக்கு நடமாடும் மக்கள். மூலைக்கு ஒன்றாய்த் திரியும் குழந்தைகள். சத்தியமாக இது என் ராஜாங்கமில்லை.

தெருவின் நடுவில் அந்த முகம், அவள்தான் என் இதயத்தைக் கண்ணீரால் கரைத்தவள். லாலிபாப்பைச் சப்பிக்கொண்டே வந்தாள். நேராக என்னிடம் வந்து கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

ஹாப்பி நியூ இயர் அங்கிள்.

அங்கிள் அங்க பாருங்க.

அவள் காட்டிய திக்கில் வெண் புறா ஒன்று இறகை விரித்து இலக்கின்றிப் பறக்க மனமோ அதனோடு எடையிழந்து பறந்தது.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

கார்த்திகேயன்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த இவர் பலவிதமான புத்தகங்களை வாசிப்பதில் ஈடுபாடுடையவர். கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

View Comments

  • அருமை. இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள் ?

Share
Published by
கார்த்திகேயன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago