மோகினி

19 நிமிட வாசிப்பு

பபதி தாரா அயர்ந்து நின்றாள். தன்னுடைய முதல் கண்காணிப்புப் பணியில் அத்தனை பெரிய இடரைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. உறைதூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்துவரப்பட்டிருந்த கலபதி நீலனின் துச்சமான பார்வை அவளை மேலும் சோர்வடையச் செய்தது.

விண்வெளிப் பள்ளியில் அவள் மாணவியாக இருந்தபோது அவளது விடுதி அறைச்சுவரைச் சுவரொட்டிகளாய் அலங்கரித்தது ‘உ.ஆ.க.133 இராசேந்திரன்’ விண்கலம்தான். பயிற்சி முடிந்து படையில் சேர்ந்த ஒரே ஆண்டில் அவளின் ஆதர்சக் கலத்திற்கே அவள் உபபதியாகப் பதவி உயர்வு பெறுவாள் என்று சென்ற மாதம் அவளிடம் யாராவது சொல்லியிருந்தால் கிண்டலடிக்கிறார்கள் என்று விலகிப் போயிருப்பாள்!

இருபது மணி நேரத்திற்கு முன்பு கலபதி நீலன் வேண்டா வெறுப்பாகக் கலத்தின் கட்டுப்பாட்டை இவளிடம் விட்டுவிட்டுத் தன் ஓய்வறைக்குப் போனபோது தாரா உற்சாகத்தில் மிதந்தாள் (ஒரு கணம் கலத்தின் ஈர்ப்புவிசை அமைப்பு பழுதாகிவிட்டதோ என்ற ஐயம்கூட அவளுக்கு எழுந்தது, உண்மையிலேயே மிதப்பதைப் போல உணர்ந்தாள்!)

“அவ்ளோ பெரிய விண்கல் வரதக் கூடவாப் பார்க்கல?” நீலன் குரலில் ஏளனம் தெறித்தது.

தாரா பதிலேதும் சொல்வில்லை. பரணன் பேசினார், “அந்த விண்கல்லுல இருந்த பெரும்பான்மை கனிமம் இதுவரை நமக்குத் தெரியாத ஒன்னு… நம்ம கலத்தோட உணரிகள்லகூட அது சரியாப் பதிவாகல… எதோ வாயுத் தொகுதினு நெனச்சுச் சரியா கவனிக்காம விட்டுட்டோம்!”

இராசேந்திரன் கலத்தின் புதிய குறிப்பணிக்காக உபபதியாகத் தாரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலைப் பெற்றபோது அவர் ஒரு பெண்ணாக இருப்பார் என்பதைக் கலபதி நீலன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது கோளில், அவரது கலாச்சாரத்தில் தாரா என்பது ஆண்பால் பெயர்! உபபதி தாரா நீலனின் கோளாகிய புதிய உலகின் நிலவிலிருந்து வந்தவள்.

நீலனின் கலாச்சாரம் ஆணாதிக்கச் சமூகம். அவர்களின் மரபில் பெண்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதில்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் இனம் நிலவுக்குக் குடியேறியபோதுதான் முதன்முதலில் பெண்கள் விண்கலங்களில் கால்வைத்தனர்! அந்தக் காலக்கட்டத்தில் தங்கள் உலகில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களுக்கும் தட்பவெட்பச் சீர்கேடுகளுக்கும் காரணமே பெண்கள் விண்ணுக்குச் சென்றதுதான் என்று பெரும்பகுதியினர் நம்பினர்! அந்தச் சீற்றங்களும் சீர்கேடுகளும்தான் மக்களில் ஒரு பகுதி நிலவுக்குக் குடியேற வேண்டியதன் தேவையையே உண்டாக்கியது என்ற உண்மையை அவர்கள் ஏற்கவில்லை!

நிலவின் கலாச்சாரம் சமத்துவச் சமூகமாக வளர்ந்தது. வேறு வழியில்லை! மரபு என்ற பெயரில் இருக்கும் மக்கட்தொகையில் சரிபாதியை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்க அவர்களின் சூழலும் மூலவளங்களும் அனுமதிக்கவில்லை. குடியேறிய முதல் நூற்றாண்டில் இந்த உண்மை புதிய உலகத்திற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டனர், அடுத்த நூற்றாண்டில் நிலவுக் குடிகள் தற்சார்பு பெற்றபோது புதிய உலகினரைப் பார்த்து அஞ்ச வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை!

கடந்த நூற்றாண்டில் நிலவின் நாகரிக வளர்ச்சி நீலனின் புதிய உலகிற்குள்ளும் ஊடியிருந்தது. அரசியல், வணிகம், கல்வி என்று பல்வேறு காரணங்களுக்காக நிலவிலிருந்து புதிய உலகிற்கு வந்த பெண் அதிகாரிகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. மெல்ல மெல்லப் புதிய உலகின் பெண்கள் நிலவிற்குக் குடியேறத் தொடங்கினர். நீலனின் முதல் மனைவியும் அப்படித்தான் அவரைப் பிரிந்து சென்றிருந்தாள்!

கலபதி நீலன் வேறுவழியே இல்லாமல்தான் உபபதி தாராவின் பொறுப்பில் கலத்தைக் கொடுத்தார். உ.ஆ.க.133 இராசேந்திரன் விண்கலம் கொ.சி.1286 என்று குறிக்கப்பட்ட பேரடைக்குள் பயணித்துக்கொண்டிருந்தது. அப்பேரடையின் 224வது பகுதியில் உள்ள கொ.சி.ந.ம. 896 என்ற சூரிய மண்டலத்தை அலசுவதுதான் அவர்களின் குறிப்பணி. அங்குள்ள கோள்களின் கனிமவளங்களையும் உலகம் போன்ற தட்பவெட்பமும் வளிமண்டலமும் கொண்ட கோள்களையும் அலசுவதே நோக்கம்.

ஐந்து இலட்சம் ஒளியாண்டுகள் அகண்டதாக இருந்தது அந்தக் கொ.சி.1286 பேரடை. இவர்கள் செல்ல வேண்டிய கொ.சி.ந.ம.896 சூரிய மண்டலம் அப்பேரடையின் விளிம்பிலிருந்து சுமார் 75 ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தது. மணிக்குச் சுமார் 184 ஒளியாண்டுகள் கடக்கக் கூடிய மீயுந்துப்பொறிகளைக் கொண்ட இராசேந்திரன் விண்கலம் தன் இலக்கை அடைய 17 நாள்கள் ஆகும்.

கொ.சி. 1286 பேரடைக்குள் நுழைந்தது முதல் கலத்தின் குழுவினர் சுழற்சி முறையில் உறைதூக்கத்தில் ஆழ்த்தப்பட்டனர். மீயுந்து வேகத்தில் பயணிக்கும்போது ஐந்து நாள்களுக்கு மேல் ஒருவர் இயல்பான விழிப்பு-தூக்க சுழற்சியில் இருக்கக் கூடாது, இயலாது! பயணத்தின் தொடக்கத்திலேயே நீலன் தாராவை உறைதூக்கத்திற்குச் செல்லக் கட்டளையிட்டுவிட்டார்.

ஐந்து நாள்கள் முடிந்து நீலன் உறைதூக்கத்திற்குச் செல்ல வேண்டிய முறை வந்தபோது அவர் தலைமைப் பொறியாளர் பரணனையே கலத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்க விரும்பினார், ஆனால் பரணன் அதற்கு இணங்கவில்லை.

“யோவ், அவ சின்னப் பொண்ணுயா… விண்வெளில முழுசா ஒரு வருஷ அனுபவம்கூடக் கிடையாது அவளுக்கு… பார்க்கக் கொஞ்சம் அழகா இருக்கானு பதவி உயர்வு கொடுத்துட்டானுங்க!”

“பதி, அவ வகுப்புலயே முதல் ஆளாத் தேறியிருக்கா, முதல் குறிப்பணில சாமர்த்தியமாவும் சமயோசிதமாவும் செயல்பட்டு மூனு அதிகாரிங்க, 87 குடிமக்களோட உயிரக் காப்பாத்தியிருக்கா… பதவி உயர்வு அதுக்குத்தான்!”

நீலன் பரணனை எள்ளலாகப் பார்த்தார். பரணன் அசரவில்லை,

“நீங்க உத்தரவு போட்டா நான் அத மீற முடியாது! ஆனா, விண்கல விதின்னு ஒன்னு இருக்கே? உபபதி விழிப்புநிலைல இருக்கும்போது அவளுக்குக் கீழ அதிகாரம் இருக்குற என்னைக் கட்டுப்பாட்டுத் தலைவனா போடக் கூடாதே! அதையும் மீறிப் போடனும்னா அவளுக்கு அனுபவம் போதாதுன்ற உங்க மதிப்பீட்ட நீங்க கலத்தோட நடவடிக்கைப் பதிவுல குறிப்பிட்டாகனும்… கூடவே, உங்க மதிப்பீட்டுக்கு நான் ஒத்துக்கலங்குறதையும் குறிப்பிட்டுடுங்க!”

“நீ போலாம்!” பரணனைப் பார்க்காமலே சொன்னார் நீலன்.

“தாராவக் கூப்பிடு!” அருகில் இருந்த தொடர்பு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

***

தாரா உண்மையில் அந்தச் சிக்கலைத் திறம்படக் கையாண்டிருந்தாள். சற்றும் எதிர்பாராத அந்தப் பிரம்மாண்ட விண்கல் கலத்தை நெருங்கியபோதுதான் அவர்கள் அதையும் அருகிலிருந்த அதே போன்ற பிற விண்கற்களையும் கவனித்தனர்.

தாரா சற்றும் தாமதியாமல் சடசடவென உத்தரவுகள் பிறப்பித்தாள். தலைமைப் பொறியாளர் பரணனும் கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கப்பட்டார்.

“கலபதிய எழுப்பனும்…”

“எழுப்பி? அவர் உன்ன மதிக்காதது சரினு உறுதிப்படுத்தப் போறியா, உபபதி?”

“ஏற்கனவே அவர் என்ன நம்பல… கலத்துக்கு ஏதாச்சு சேதமாச்சுனா நம்ம குறிப்பணிக்கே பாதகம் வந்துடும்… எனக்கு என் ஆணவத்தைவிடக் கடமை முக்கியம்!”

“என்னம்மா… பெரிய பெரிய விண்கற்கள் திடுதிப்புனு வந்தப்ப பதற்றப்படாம நிதானமா கையாண்டுட்டு, நீலன நெனச்சு எதுக்குக் கவலைப்படுற?”

“இல்ல…”

“தாரா! உன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… நீ கொடுத்திருக்கிற உத்தரவுகள் நம்ம கலத்தைச் சரியா கையாளும்… நீலனை உன் மண்டைக்குள்ள விடாத… அவரு மனைவி விட்டுப்போன கோவத்த உன்கிட்ட காட்டுறாரு! தைரிய-“

விண்கலம் குலுங்கிய குலுக்கலில் இருவரும் சற்றுத் தள்ளாடினர். திறமையாகக் கையாளப்பட்டும் அந்தப் பெரிய விண்கல் அவர்களது கலத்தைச் சற்று உரசியிருந்தது.

“கலபதிய எழுப்புங்க!” தாரா ஆணையிட்டாள்!

***

யீஈஈஈங்ங்ங்… யீஈஈஈங்ங்ங்… சிவப்பு எச்சரிக்கை… சிவப்பு எச்சரிக்கை… யீஈஈஈங்ங்ங்…

கலபதி நீலன் சற்று முன்தான் கண்காணிப்பை முடித்துக்கொண்டு தனது ஓய்வுக் குமிழுக்குள் வந்து படுத்திருந்தார், ஆழுறக்கம் தழுவும் நேரம் பார்த்துக் கலத்தின் கட்டுப்பாட்டுக் கணினி அலறியது.

‘அனுபவம் இல்லாதவளுக்குலாம் பதவி உயர்வு கொடுத்து நம்ம கழுத்த அறுக்குறாங்க!’

எரிச்சலுடன் எழுந்தவரைக் குமிழுக்குள் இருந்த பேசியில் கரகரத்த பரணனின் குரல் துரிதப்படுத்தியது:

“பதி… அவசரம்… உடனே மையம் வரவும்… பதி… அவசரம்… உடனே மையம் வரவும்…”

“வரேன்!” என்றபடியே அலுப்புடன் எழுந்தார்.

அவர்களின் அந்தப் பெரிய ஆய்வு & சாரண விண்கலம் பயணித்துக் கொண்டிருந்த கொ.சி.1286 பேரடைதான் அவர்கள் இதுவரை பார்த்த, கேள்விப்பட்டிருந்த, படித்திருந்ததிலேயே அதிகமான விண்கற்களை உடையதாக இருக்க வேண்டும். எந்தப் புள்ளியில் இருந்தாலும் அருகில் குறைந்தது பத்து விண்கற்களாவது இருந்தன, அவற்றில் இரண்டு மூன்று எப்போதும் இவர்களது கலத்தின் மீது மோதிவிடும் பாதையிலேயே நகர்ந்துகொண்டிருந்தன. இவர்களது உணரிகளில் சிக்காத புதியவகை தனிமங்களை அவ்விண்கற்கள் அதிகம் கொண்டிருந்ததால் நாவாய் மீக்கணினியின் துணையிருந்தும்கூடக் கலத்தைச் செலுத்துவது எளிதான காரியமாய் இருக்கவில்லை. அதற்காக நீலன் தாராவைக் குறைத்து மதிப்பிடுவதைக் கைவிடவில்லை!

‘விளிம்பிலேயே இவ்வளவு விண்கற்கள் என்றால் மையத்தில் எப்படியோ! நல்லவேளையாக நம் பணி விளிம்போடு முடிந்தது’ என்று பெருமூச்சுவிட்டவாறே விண்கலத்தின் ‘மையம்’ என்கின்ற மையக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார் கலபதி நீலன்.

அவர் நுழைந்ததும் மரியாதை நிமித்தமாக ஒரு நொடி விறைத்துவிட்டு அவரவர் தத்தம் கடமைகளில் ஆழ்ந்தனர். உபபதி தாராவைத் தன் வழமையாகியிருந்த துச்சமான பார்வை பார்த்தார் நீலன்.

“சிவப்பு எச்சரிக்கை கொடுக்குற அளவுக்கு அப்படி என்னையா பெரிய விண்கல் குறுக்க வந்துடுச்சு?” பரணனைப் பார்த்துக் கேட்டார்.

தாரா எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் எதிரிலிருந்த திரையைச் சுட்டிக்காட்டினாள். நீலன் ஒரு சில நொடிகள் அதனை உற்றுப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“வாய்ப்பே இல்ல… தொலைவுணரில எதோ கோளாறா இருக்கனும்… 63வது பகுதில விண்கல் துண்டு மோதினதுல நம்ம உணரி அடிவாங்கி இருக்கும்… பெரிசா எந்தச் சேதமும் இல்லனு சொன்ன?!”

“பதி, உணரிலாம் சரியாத்தான் இருக்-“

“அப்ப மீக்கணினி சிக்கலா?” – பரணனை முடிக்கவிடாமல் இடைவெட்டினார் நீலன்.

“கலத்துல எந்தச் சிக்கலும் இல்ல, எல்லாம் சரியா இருக்கு…”

“அப்புறம் எப்படியா பேரடையோட நடுப்பகுதில இருக்கோம்னு காட்டுது கணினி? இரண்டர லட்சம் ஒளியாண்டுகள் வந்துட்டோமா அதுக்குள்ள?”

தாரா பதில் சொன்னாள்,

“இரண்டு காரணங்கள் இருக்கலாம்… ஒன்னு நீளக்குறுக்கம், நம்ம வேகமும் இங்க மையத்துல இருக்குற கருங்குழி மண்டலத்தோட ஈர்ப்புவிசையும் சேர்ந்து நாம பயணிச்ச தொலைவை நம்மைத் தப்பா கணக்குப் பண்ண வெச்சிருக்கும்… இல்ல-“

“நமக்கே தெரியாம ஏதோவொரு சுரைவழிக்குள்ள புகுந்து இங்க வந்திருப்போம்?”

நீலன் அவளை இடைவெட்டினார்.

“சரி, கலத்தைத் திருப்ப வேண்டியதுதானே? இதுக்கு எதுக்குச் சிவப்பு எச்சரிக்கை?”

“எங்களால முடியல, உங்களால முடிஞ்சா பண்ணுங்க!”

உபபதி தாராவின் குரலில் எரிச்சலும் வெறுப்பும் வெளிப்படையாகத் தெரிந்தன. நீலன் அவளை முறைத்தார்.

பரணனும் அவளை வியப்போடு பார்த்தான். தாரா அடங்கிப் போகக் கூடாது என்றுதான் பரணன் எண்ணினானே தவிர இப்படி வெளிப்படையாகக் கலபதிக்குப் பணியாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றல்ல. நடுவெளியில் இருக்கும் கலத்திற்குள் கலபதிதான் உச்ச அதிகாரமுடையவர், என்னதான் எரிச்சல் வெறுப்பு இருந்தாலும் அவரிடம் அதைக் காட்டிக்கொள்ள யாரும் துணியமாட்டார்கள், உபபதியாகவே இருந்தாலும்!

தாரா உபபதியாகி முழுதாய்ப் பத்து நாள்கள் ஆகவில்லை… இராசேந்திரனைப் போன்ற ஒரு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த கலத்தின் கலபதியாகித் தன் வாழ்வில் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு இளம் மாலுமியின் கனவு நீர்க்குமிழியைப் போல உடையப் போகும் இயலாமைதான் இது என்று பரணன் எண்ணிக்கொண்டார்!

“நம்ம கலம் இந்தப் பேரடையோட மையமா இருக்குற கொ.சி. இரட்டைக் கருந்துளை மண்டலத்தோட நேரடி ஈர்ப்பு விசைல சிக்கிக்கிட்டிருக்கு… கலத்தோட செலுத்துபொறி எதுவும் நம்ம கட்டுப்பாட்டுல இல்ல…”

தாரா விளக்குவதற்கு முன்பே நீலன் நிலைமையை ஊகித்திருந்தார். அவரது முப்பது வருட விண்வெளி அனுபவத்தில் ஒன்றை அவர் உறுதியாகக் கற்றிருந்தார் என்றால் அது கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கும் கலத்திற்கும் அதன் குழுவிற்கும் மீட்சியே இல்லை என்பதைத்தான்!

“இன்னும் எவ்ளோ நேரம்?”

அவரது குரலில் ஒரு ஆழ்ந்த அமைதி இருந்தது, தாரா தன்னை மதிக்காமல் பேசியதைக்கூட அவர் கண்டுகொள்ளவில்லை, வேறொரு தருணமாக இருந்திருந்தால் அதைக் காரணமாக வைத்தே அவளைக் கலத்திற்குள் சிறை செய்திருப்பார்.

“சுமார் இரெண்டு மணி நேரம்…” பரணன் பதிலளித்தான், “நிகழ்வெல்லையத் தொட!” தெளிவுக்காகச் சேர்த்துக்கொண்டான்.

கருந்துளையை நெருங்க நெருங்க இடம்-காலம் ஆகியவற்றின் அர்த்தம் மாறிவிடும். கருந்துளைக்குள் காலம் என்பது இல்லை. ‘நிகழ்வெல்லை’ எனப்படும் புள்ளிவரைதான் ஓரளவு காலம் என்பதன் போக்கை நமது வழக்கமான புரிதலில் உணர்வோம். அதற்குப் பிறகு அது ஒரு முடிவில்லாத மாயை! ஒவ்வொரு கணமும் ஒரு யுகம்! ஆனால் உள்ளே இருப்பவருக்கு அது தெரியாது!

நீலன் மெல்லத் தனது இருக்கையில் அமர்ந்தார், பரணனை நோக்கிக் கலம் முழுவதும் கேட்கும் தடத்தைத் திறக்க ஆணையிட்டார், அனைவருக்கும் அவரவர் கடமையிலிருந்து விடுதலை கொடுக்கும் ஆணையை வெளியிட எண்ணினார்… இனி கலபதி மாலுமி என்ற பேதத்தில் என்ன பொருள்? நம் கட்டுப்பாட்டில் இல்லாத கலத்தின் கருவிகளோடு போராடுவதில் என்ன பொருள்? மிச்சம் இருக்கும் இந்த இரண்டு மணிநேரத்தை அவரவர் சுதந்திரமாக விருப்பம் போலக் கழிக்கட்டும். சிலர் தாம் வழிபடும் இறைவனை வேண்டுவர். சிலர் தம் குடும்பத்திற்கு ஏதேனும் கடைசி தகவல் அனுப்ப முயல்வர். சிலர் பிடித்த உணவை உண்பர். சிலர் கலவி நாடுவர். அவரவர் விருப்பம்.

“ஒலிபரப்புகிறது, பதி!” – பரணன் சுரத்தில்லாமல் சொன்னான்.

நீலன் ஒருமுறை தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார்,

“கலபதி பேசுகிறேன்–” வழக்கம் போலத் தொடங்கியவர் ஏதோ யோசித்தவராகச் சற்று நிறுத்தித் தொடர்ந்தார்,

“சக மாலுமிகளே, தோழர்களே… வணக்கம்! நான் நீலன் பேசுகிறேன்… ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கலபதியாகப் பதவி உயர்வு பெற்றபோது இந்தக் கலத்திற்கு மீகாமன் ஆனேன்… இன்றுவரை இக்கலத்திலேயே இருப்பதற்காக இடையில் வந்த இரண்டு பதவி உயர்வு வாய்ப்புகளைக்கூட உதறித் தள்ளினேன்… ஐந்தாண்டுகளும் என்னுடன் இந்தக் கலத்தில் இருப்பவர் உங்களில் பலர்… இன்று நம் பிரியத்திற்குரிய இக்கலமே நமது ஈமக்கலமாகச் சவப்பெட்டியாகக் கல்லறையாக-“

தழுதழுக்க எத்தனித்த குரலைச் சிரமத்துடன் கட்டுப்பாட்டில் வைத்துப் பேசிய அவரின் ஒலிபரப்பை இன்னொரு ஒலிபரப்பு இடைவெட்டியது,

“வந்தனம்… உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள்!”

அந்த இடத்தில் அப்படி ஒரு சூழலில் அவர்கள் அவ்வழைப்பைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“வந்தனம்! நான் கலபதி நீலன், இந்த உ.ஆ.க.133 இராசேந்திரன் கலத்தின் மீகாமன், அ.பே. 001 வெள்ளிவீதி பேரடையின் புவி கிரகத்திலிருந்து வருகிறோம்…”

“நோக்கம்?”

“இந்தப் பேரடையின் 224வது பகுதியில் உள்ள கொ.சி.ந.ம. 896 என்ற சூரிய மண்டலத்தை அலசுவது!”

நம் மொழி இவர்களுக்கு எப்படித் தெரியும், யார் இவர்கள் என்ற சிந்தனையுடனே நீலன் விடைதந்தார்.

“எங்கள் உயிர்வருடி உங்கள் கலத்தில் 344 ஆண்பால் உயிரினங்களும், 296 பெண்பால் உயிரினங்களும் இருப்பதாகக் காட்டுகிறது, சரியா?”

“ஆம்!”

கலத்தில் இருக்கும் 5 நாய்கள், 3 பூனைகள், 1 ஆமை, 2 ஓந்திகள் ஆகிய செல்லப் பிராணிகளையும் சேர்த்துத் துல்லியமாகச் சொன்ன அவர்களின் தொழில்நுட்பம் நீலனைக் கொஞ்சம் கலக்கியது.

“கலத்தில் பெண்களும் அதிகாரிகளா?”

“ஆம்!”

நீலன் மேன்மேலும் யோசனையுடன் ஒற்றைச் சொற்களில் பதில் தந்து கொண்டிருந்தார். இந்த உரையாடல் அந்த விண்கலம் முழுதும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது, அனைவரும் அசையாது கவனித்துக்கொண்டிருந்தனர்.

“கலத்தில் உள்ள உச்சபட்ச பெண் அதிகாரியின் பதவி, பெயர் என்ன?”

“உபபதி தாரா!”

‘இவள் இருப்பதால்தான் நாம் பிழைக்கப் போகிறோமா!’ என்ற ஒரு அலுப்பு அவர் குரலில்!

மறுமுனை சில கணங்கள் அமைதியானது.

“உ.ஆ.க.133 இராசேந்திரன்! நாங்கள் உங்களுக்கு உதவத் தயார், நீங்கள் எங்கள் நிபந்தனைக்கு உட்பட்டால்…”

“என்ன நிபந்தனை?”

அந்த இடைவெட்டு ஒலிபரப்பு அருகில் இருக்கும் ஒரு கிரகத்திலிருந்து வந்தது. அதன் பெயர் மோகினி. அப்படி ஒரு கிரகத்தைப் பற்றி இவர்கள் யாரும் கேள்விப்பட்டதே இல்லை. இவர்களுக்குத் தெரிந்த எந்த விண்மீன் வரைபடத்திலும் அப்படி ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை! அந்த இடத்தில் ஒரு சூரிய மண்டலமோ, அதில் கிரகங்களோ இருப்பதாகவே எங்கும் தகவல் இல்லை!

தங்களிடம் இருக்கும் சக்திவாய்ந்த இழுகதிரின் வலிமையையும் தங்கள் சூரிய மண்டலத்தின் ஈர்ப்பு விசையையும் கொண்டு கவண்வில் உத்திமூலம் இவர்களது கலத்தைக் கருந்துளையின் ஈர்ப்பிலிருந்து மீட்டுவிட முடியும் என்று அந்த மோகினி கிரகத்தினர் வாக்களித்தனர். அவர்கள் நிபந்தனைதான் சற்று வினோதமாக இருந்தது. மரணத்தை எதிர்நோக்கியவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல என்றாலும் ஏன், எதற்காக என்ற வினாக்கள் அவர்களைக் குடைந்தன.

நிபந்தனை இதுதான், காப்பாற்றப்பட்டு அவர்களின் கிரகத்திற்கு வருவதற்கு முன்னால் விண்கலத்தில் இருக்கும் ஆண்கள் அனைவரும் தத்தம் விந்தணு மாதிரிகளைக் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

கலத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் அதிகம் யோசிக்காமல் ஒத்துக்கொண்டனர் (2 ஆண்நாய், 1 ஆண் பூனை, 1 ஆண் ஓந்திக்கும் சேர்த்து இவர்களே முடிவு செய்துவிட்டனர்!)

‘ஏன்? எதற்கு?’ என்ற வினாக்கள் மட்டும் அவர்களைக் குடைந்து கொண்டிருந்தன. ஆனால், அதிக நேரமில்லை! மோகினி கிரகத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அவர்களுக்குக் காரணம் ஓரளவு புரிந்துவிட்டது.

இராசேந்திரன் கலக்குழுவினரைத் தவிர அந்தக் கிரகத்தில் வேறு ஆண்களே இல்லை!

கலத்தின் பெண்ணதிகாரிகளும் பெண் மாலுமிகளும் முதலில் மோகினி கிரகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டனர். ஆண்கள் சில மருத்துவச் சோதனைகளுக்கும் விந்தணு கொடுத்தலுக்கும் பின்பு கிரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மோகினி கிரகத்துப் பெண்கள் இவர்களை அரச மரியாதையுடன் நடத்தினர். ஒவ்வொருவரையும் பல பெண்கள் சூழ்ந்துகொண்டு உபசரித்தனர். கலபதி நீலன், தலைமைப்பொறியாளர் பரணன் முதலிய உயரதிகாரத்தினர் உபசரிப்பு ஓய்விற்குப் பிறகு அக்கிரகத்தின் மகாராணியின் திருவோலக்க மண்டபத்திற்கு விருந்தினர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மோகினி கிரகத்தின் மகாராணி அதிக படாடோபம் இல்லாமல் இயல்பாக இருந்தாள். மகாராணிக்கு அருகில் அவளுக்கு இணையான அலங்காரங்களுடன் தாரா அமர்த்தப்பட்டிருந்தாள். கலத்தின் பிற பெண்மாலுமிகளும் அவையில் பல காலம் பழகியவர்களைப் போலக் கலந்திருந்தனர்.

நாம் இங்கே வந்து மாட்டிக்கொண்டது தாராவின் சதியோ என்ற எண்ணம் கலபதி நீலனின் மனத்தின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது.

மகாராணி இவர்களை உபசரித்துவிட்டு அக்கிரகத்தின் மரியாதை நிமித்தக் குடிமக்களாக இவர்களை அங்கீகரித்தார். மோகினி கிரகத்தில் இவர்கள் எங்கும் போகலாம், எந்தப் பொதுச் சொத்தையும் அனுபவிக்கலாம், யாரோடும் இணைந்து கொள்ளலாம்…

மகாராணியின் விருந்தை ஒருபுறம் நன்கு சுவைத்தாலும் மனத்தின் இன்னொரு மூலையில் ‘ஆண்களே இல்லையா?’ என்ற வினா உறுத்திக்கொண்டிருந்தது நீலனுக்கும் பிறருக்கும்.

‘வெறும் பெண்களால் நடத்தப்படும் ஒரு கிரக அரசாங்கம் எப்படிச் சீராகச் செயல்பட முடியும்?’ என்று நீலன் எண்ணினார்.

விருந்து முடிந்து மகாராணி தானே இவர்களைச் சித்திரக் கூடத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார். அங்குப் பலவகையான ஓவியங்களும் சிற்பங்களும் இருந்தன. பல்வேறு கிரகங்களின் பல்வேறு கலாச்சாரங்களின் பல்வேறு காலகட்டங்களின் இயல்புகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களும் சிற்பங்களும் அங்கே இருந்தன.

கூடம் என்று ஒருமையில் அழைக்கப்பட்டாலும் அது அடுக்கடுக்கான பல கூடங்களின் தொகுப்பாகவே இருந்தது! நல்லவேளையாக இவர்கள் நடக்க வேண்டியதாக இல்லை, நின்றபடியே பயணிக்கக் கூடிய சிறுசிறு தனிநபர் துள்ளுந்துகளில்தான் சுற்றிப் பார்த்தனர்.

துள்ளுந்துகளின் தொழில்நுட்பமோ, காட்சிப்பொருள்களின் வசீகரமோ, உடன் வந்த அழகிய பெண்களின் சகவாசமோ… அலுப்பின்றி நேரம் போவதே தெரியாமல் பல மணி நேரங்களை அந்தச் சித்திரக்கூடத்தைச் சுற்றிப் பார்ப்பதில் செலவிட்டனர். உள்ளே போகப் போக ஓவியங்களில் அக்கிரகத்தின் வரலாறு காட்டப்பட்டிருந்தது (அல்லது அப்படித்தான் நீலன் எண்ணிக்கொண்டார்!)

வெவ்வேறு காலகட்டங்களில் அக்கிரகத்திற்கு வந்திறங்கிய (சிக்கிய?) விண்கலங்களும், அவற்றிலிருந்த குழுவினர் இக்கிரகத்தில் குடியமர்த்தப்படுதலும் அவ்வோவியங்களில் காட்டப்பட்டிருந்தன. விண்கலங்கள் வந்திறங்கும் போது அவற்றின் குழுவில் இருந்த ஆண்கள் ஒரு சில ஓவியங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுகின்றனர்!

ஆண்கள் என்ன ஆகின்றனர்?

“இதுதான் இக்கிரகத்தில் முதன்முதலில் வந்திறங்கிய விண்கலம்… உங்கள் கணக்குப்படி ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர் இதில்தான் வந்தனர்… கருந்துளை மண்டலத்தின் ஈர்ப்புவிசையில் சிக்க இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக இந்தக் கிரகத்தின் ஈர்ப்புவிசைக்குட்பட்டு இங்குத் தரையிறங்கினர்…”

மகாராணியே அந்தப் பழைய ஓவியத்தைச் சுட்டிக்காட்டி விளக்கினார். அவ்வோவியத்தில் காட்டப்பட்ட விண்கலத்தின் குழுவினர் அனைவரும் ஆண்களே!

நீலனின் மனத்தில் வினாக்கள் மழைக்கால ஈசல்களைப் போலப் பறந்தன. வாய்விட்டுக் கேட்கும் துணிவின்றித் தலையசைத்துப் புன்னகைத்தார்.

ஒவ்வொரு கூடத்திலும் பல வாசல்கள் பக்கத்துக் கூடங்களுக்கு வழிவிட்டன. இந்தக் கூடத்திலும் அவ்வாறே இருந்தது. எல்லா வாசல்களும் விசாலமாகத் திறந்திருக்க, ஒரே ஒரு வாசல் மட்டும் அடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடனேயே நீலனின் ஆர்வம் தூண்டப்பட்டது. இந்தக் கிரகத்தின் மர்மத்துக்கான விடை அதற்குள்தான் இருக்கிறது என்று அவருக்குள் பட்சி கூவியது!

மகாராணி அந்த ஆதி ஓவியத்தின் மற்ற பகுதிகளை விவரித்துக்கொண்டிருக்க, நீலன் மெல்ல அந்த அடைக்கப்பட்டிருந்த கதவின் அருகில் நகர்ந்தார்… உள்ளே இருந்து யாரோ கூச்சலிடும் ஓலம் போலக் கேட்டது… அது ஆண்குரலா பெண்குரலா என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை அவரால்!

ஏதோ ஒரு துணிவில் மகாராணியிடமே கேட்டுவிடுவோம் என்று எண்ணியவராய் “இது-” என்று தொடங்கியவரைச் சட்டென இடைவெட்டினார் மகாராணி,

“நேரம் போனதே தெரியல… நீங்க ஓய்வெடுங்க… மத்ததப் பிறகு பொறுமையாச் சுத்திப் பார்த்துக்கலாம்… என்ன அவசரம் நமக்கு? இதவிட்டா வேற வேலை என்ன?”

என்று ஒய்யாரமாகப் புன்னகைத்தவர், தமது சேடிப் பெண்களிடம் ஏதோ கண்சாடைக் காட்டிவிட்டு இவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். தாராவும் மகாராணியோடே சென்றாள்.

மகாராணி போனதும் இவர்களைச் சூழ்ந்து வந்த பெண்களும் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்குப் போகலாம் என்றனர். நீலன் அந்த அடைபட்டிருந்த கதைவைப் பற்றிக் கேட்டதை அவர்கள் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அன்பாகவும், மரியாதையாகவும்தான் நீலனை அவருக்கான அறைக்கு அழைத்து வந்தார்கள், ஆனால், அவருக்கு என்னவோ கழுத்தைப் பிடித்து இழுத்து வந்து இந்த அறையில் அடைத்துவிட்ட ஓர் உணர்வு!

அனைவருக்கான அறைகளும் பக்கம் பக்கமாகத்தான் இருந்தன, ஆனால் ஒவ்வொன்றுமே அந்தக் கிரகத்தின் அரசனுக்குரிய அறையைப் போல விசாலமாகவும், அலங்காரங்களும் வசதிகளும் நிறைந்தும் இருந்தன. நீலன் தனக்கான அறைக்குள் வந்தபோது அவருடன் தங்குவதற்குப் பல பெண்கள் போட்டி போட்டார்கள். தான் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. அவர்கள் ஒரு பரிதாபப் பார்வையை வீசிவிட்டுச் சென்றனர்.

நீலனுக்கு உறக்கம் பிடிக்க வெகு நேரமாகியது. ‘ஆண்கள் என்ன ஆனார்கள்?’ என்ற வினா அவரைக் குடைந்து கொண்டிருந்தது.

‘ஆண்களைக் கொன்றுவிடுகின்றனரா? அல்லது, அவர்களை அடிமைகளாக்கி வேலை வாங்குகின்றனரா? அந்தப் பூட்டிய அறையின் மர்மமென்ன?’

மறுநாள் காலை நீலன் எழுந்தபொழுது மகாராணியிடமிருந்து அவருக்குக் காலையுணவு விருந்திற்கு அழைப்பு காத்திருந்தது. தன்னைக் குளிப்பாட்டிவிட விரும்பிய பெண்களைச் சமாளித்து அனுப்பிவிட்டுத் தானே கிளம்பி நீலன் மகாராணியின் விருந்து கூடத்திற்கு வந்தபோது அவருக்கு ஒரு பெரிய வியப்பு காத்திருந்தது.

நேற்று மகாராணியாக இவர்களை வரவேற்ற பெண் இன்று சேடியாக உணவு பரிமாறினாள். சேடியாக இருந்த ஒருத்தி மகாராணியாக விருந்து மேசையின் தலைமை இருக்கையில் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.

இது ஏதோ பாதுகாப்பு ஏற்பாடு போல என்று எண்ணி நீலன் கேட்டபோது அவருக்குக் கிடைத்த விளக்கம் அவரை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

உண்மையில் மோகினிக் கிரகத்தில் மகாராணி, பணிப்பெண் என்ற அமைப்பெல்லாம் இல்லை, அனைவருமே சமம்! ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரின் முறை, மகாராணியாக இருக்க!

அன்றைய உலாவில் நீலன் மோகினி கிரகத்தின் தொழில்நுட்ப வீச்சைத் தெரிந்துகொண்டபோது காலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த வியப்பிற்கும் விடை கிடைத்தது!

மோகினி கிரகம் ஆற்றல் சுயச்சார்பை முழுமையாக எட்டியிருந்தது. அக்கிரக முன்னோர்களின் திறமையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் அக்கிரகத்தின் ஆற்றல் தேவைகள் முழுக்க முழுக்க சூரியவொளி, காற்றாலை, நீர்சக்தி, கடலாற்றல், புவிவெப்ப ஆற்றல் முதலியவற்றால் சரியாகத் திட்டமிடப்பட்டுப் பெறப்பட்டன. இதனால் அந்தக் கிரகவாசிகள் யாரும் வேலை செய்யத் தேவையின்றி இருந்தது, இலவசமாகக் கிடைத்த ஆற்றலாலும், எல்லா வேலைகளையும் செய்துவிடும் அதிநுட்ப எந்திரங்களாலும் மோகினி கிரகத்தின் ஒவ்வொரு குடிமகளும் மகாராணிதான்… விரும்பியதைச் செய்துகொண்டு இன்பமாகக் காலங் கழித்துவந்தனர்!

எனவே ஆண்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகின்றனர் என்ற சாத்தியம் இல்லை என்பது உறுதியானது நீலனுக்கு. எனில், ஆண்களை இவர்கள் கொன்றுவிடுகின்றனரா?

‘கொல்லப்படப் போகிறோம் என்றால் இந்த ராஜ உபச்சாரம் எதற்கு? விண்கலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது அதில் வைத்தே ஆண்களைக் கொன்றுவிட்டுப் பெண்களை மட்டும் காப்பாற்றிக் கிரகத்திற்குக் கொண்டு வந்திருக்கலாமே?’

‘ஒரு வேளை ஒரு சில நாள்கள் இன்பம் அனுபவித்துவிட்டுக் கொன்றுவிடுவரோ?’

மோகினி கிரகத்துப் பெண்கள் ஆணுடனான கலவிக்கு ஏங்கித் தவிப்பவர்கள் இல்லை என்பதை நீலனின் ஆணாதிக்க மனமே ஒத்துக்கொண்டது!

‘நேற்றிரவு நான் வேண்டாம் என்றதும் கேள்வி கேட்காமல் மரியாதையாக என்னைத் தனிமையில் விட்டுச் சென்றார்களே!’

அவர்கள் நீலனுக்கு அளித்த உபசரிப்பிலும் எந்த உள்நோக்கமும் தெரியவில்லை… அந்தக் கிரகத்துக் குடிமகனாகவே அவர் நடத்தப்பட்டார்… மோகினி கிரகத்தில் தனிநபர்ச் சொத்து என்பவை மிக மிகச் சொற்பமே… பெரும்பான்மை இடங்களும் பொருள்களும் பொதுப் பயன்பாட்டிலேயே இருந்தன… தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் இருந்தன, எனவே யாருக்கும் யாரோடும் வம்பு வழக்குகள் இல்லை… அனைவரும் ஒரே குடும்பத்தினரைப் போல அன்போடும் மரியாதையோடும் நடந்து கொண்டனர். நீலனையும் அவ்வாறே நடத்தினர்.

அவர்தான் அந்தப் பெண்ணுலகில் இயல்பாக இயையச் சிரமப்பட்டார்!

‘ஒருவேளை புதிய உலகிலும் ஆற்றல் தற்சார்பு ஏற்பட்டால் நம் பெண்களைச் சுதந்திரமாக விட்டுவிடுவோமா?’ என்று நீலனின் மனம் தன்னைத் தானே கேட்டுக்கொண்டது, ‘இல்லை’ என்று அதற்கு நன்றாகத் தெரிந்தது.

‘நிச்சயம் இந்தப் பெண்கள் ஆண்களை எங்கோ அடைத்து வைத்து ஏதோ கொடுமை செய்கிறார்கள்! அதைக் கண்டுபிடித்து அவர்களை விடுதலை செய்யாமல் விடமாட்டேன்!’

மறுநாள் அவர் கண்விழித்தபோது அவரது அறையில் இருந்த மேசையில் அவருக்கான உணவும் புத்தாடைகளும் இருந்தன. உதவிக்கு ஒரு பெண்ணும் காத்திருந்தாள். நீலன் குடித்துமுடித்து ஆடையை அணிந்துகொண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்பியபோதுதான் தன்னறையில் கண்ணாடி இல்லை என்று உணர்ந்தார். உதவிக்கு இருந்த பெண்ணிடம் கேட்டபோது அவளுக்கு அது என்னவென்றே தெரிந்திருக்கவில்லை.

“கண்ணாடி இல்லாம எப்படி இவ்ளோ அழகழகா அலங்காரம் பண்ணிக்குறீங்க?”

“எனக்கு ஒருத்தி பண்ணிவிடுவா, நான் வேறொருத்திக்குப் பண்ணிவிடுவேன்… நம்ம அழகால நமக்கே என்ன பயன்? அடுத்தவதான ரசிக்கப் போறா!”

‘முழுக்க பெண்களால் ஆன கிரகத்துல ஒரு கண்ணாடி கிடையாதா?’

நீலன் அந்த நகைமுரணை எண்ணிச் சிரித்துக்கொண்டார்!

நீலன் சுற்றிப் பார்க்க ஒரு பெரிய மிதவை வண்டி கொடுத்திருந்தனர், அவரோடு உடன்வர ஆர்வம் காட்டியவர்களில் இருவரை மட்டும் அனுமதித்தார் நீலன். வண்டி புறப்பட்டது.

“உன் பெயர் என்ன?” தனக்கு வலது பக்கம் அமர்ந்தவளின் தோளில் கைபோட்டபடிக் கேட்டார்,

“ஷீல்யா” என்றாள் அவள் கொஞ்சலாக, “இன்றைக்கு!” என்று கண்சிமிட்டினாள்.

நீலன் இடது புறம் இருந்தவளைப் பார்க்க, அவள் ஒட்டி அமர்ந்துகொண்டு “க்’ளாஃஸா!” என்றாள். நீலனால் அந்தப் பெயரைத் திரும்ப உச்சரிக்க இயலவில்லை. இரண்டு பெண்களும் சிரித்தார்கள்.

இவர்களோடு நெருங்கிப் பழகி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார் நீலன்.

மோகினி கிரகத்தில் பல பல்கலைக் கழகங்கள் இருந்தன. வேலையே செய்யத் தேவையில்லை என்றாலும் பொழுதுபோக்கவும், மூளைக்குத் தீனி போடவும் பலப் பெண்கள் பல்வேறு கலைகளையும் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களையும் ஆர்வமாகக் கற்றதைப் பார்க்க நீலனுக்கு வியப்பாக இருந்தது. பலரும் எந்திரங்களுக்குப் பதில் தாங்களே சில தொழில்களிலும்கூட ஈடுபட்டனர்.

நீலன் தனது சுற்றுலாப் பாதையைச் சித்திரக்கூடத்தை நோக்கியே அமைத்திருந்தார். எடுத்த எடுப்பிலேயே அங்கே போகாமல், பல்கலைக் கழகங்கள், விளையாட்டு & உடற்பயிற்சி மையங்கள், கலையரங்கங்கள், தொழிற்சாலைகள், கண்காணிப்பு & கட்டுப்பாட்டு அறைகள் என்று சுற்றித் திரிந்துவிட்டு மாலை நெருங்கும் வேளையில் சித்திரக்கூடத்தை அடைந்தனர்.

“நேத்து பார்த்தது அலுக்கலயா?” ஷீல்யா கேட்டாள்.

“நேத்து முழுசாப் பார்க்கலயே… இங்க மொத்தம் எத்தன கூடங்கள் இருக்கு?”

“அது இருக்கு நூத்துக்கணக்கா… உங்களப் பார்த்தப்ப ஓவியத்துல ஆர்வம் இருக்குற ஆள்னு தோனல எனக்கு…” க்’ளாஃஸா ஒரு குறும்பான பார்வையோடு கேட்டாள்.

“அ- அப்படிலாம் இல்லயே… எனக்கும்… எனக்கும் ஓவியத்துல ஆர்வம் உண்டு!”

நீலன் தட்டுத்தடுமாறிப் பதில் சொன்னார். க்’ளாஃஸாவும் ஷீல்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கண்சாடை காட்டிக்கொண்டனர்.

நீலன் தனக்கும் ஓவியங்களில் ஆர்வமுண்டு என்று காட்டிக்கொள்ள முயல, அவ்விரு பெண்களும் அவரை வினாக்களால் வறுத்தெடுத்தனர். ஒரு வழியாக அவர்களைச் சமாளித்துக்கொண்டு அவர் அந்தப் பூட்டிய வாசலின் அருகே வந்தார்.

“ஆதி விண்கலத்துல பெண்கள் யாருமே வரலயா?”

“ஆமா… அப்பலாம் பெண்கள் விண்வெளிப் பயணம் செய்யமாட்டாங்களாம்!” க்’ளாஃஸா தோளைக் குலுக்கினாள்.

நீலன் சற்று நேரம் அமைதியாக அந்தப் பழைய ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆதி விண்கலம் ஏறத்தாழ மோதித் தரையிறங்கும் காட்சி ஒரு ஓவியத்தில். அதன் ஆண் மாலுமிகள் மோகினி கிரகத்தை அலசும் காட்சி இன்னொரு ஓவியத்தில். இப்படியே பார்த்துக்கொண்டு வந்தார் நீலன்.

சற்றுத் தள்ளி இருந்த ஓர் ஓவியக் காட்சியில் ஒரு பெண் ஆளுயரக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தே அலறும் காட்சி தீட்டப்பட்டிருந்தது. நீலன் முதலில் அதையும் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டு நகர்ந்துவிட்டார், சட்டென்று ஏதோ பொறிதட்டியவராக மீண்டும் அந்த ஓவியத்திடம் வந்தார்.

“அப்படி என்ன இருக்கு இதுல? மறுபடி மறுபடி பார்க்குறீங்க? உங்க கிரகத்துல ஓவியம்லாம் கிடையாதா?”

ஷீல்யா அலுப்பாகக் கேட்டாள்.

“இது… இது என்னது?”

ஓவியத்தில் இருந்த கண்ணாடியைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

“அது எதோ தொலைப்பேசித் திரை! அவங்க சகோதரியோட பேசி அழுறாங்க… பாவம்!”

“இல்ல ஷீல்யா… இது கண்ணாடி!”

“கண்ணாடினா?”

ஷீல்யா அப்பாவியாகக் கேட்டாள்.

“இதுதான்!” ஓவியத்தில் மீண்டும் சுட்டிக்காட்டினார், “நெசமாவே உனக்குத் தெரியாதா?”

ஷீல்யா உதட்டைப் பிதுக்கினாள். அவளின் முகத்தில் பொய் இல்லை. நீலன் க்’ளாஃஸாவைப் பார்த்தபோது அவள் வேறு ஓவியங்களைப் பார்ப்பவளைப் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“அந்த ஆண்கள்லாம் என்ன ஆனாங்க? பெண்கள் எப்ப வந்தாங்க?”

நீலன் இன்னொரு ஓவியத்தைப் பார்த்துக் கேட்க, ஷீல்யா ஆயாசமாகக் கண்களை உருட்டினாள்,

“ஓவியம் சலிச்சுப் போச்சு… நீர்க்கேளிக்கை அரங்கத்துக்குப் போலாம் வாங்க…” ஷீல்யா கெஞ்சலும் கொஞ்சலுமாய் நீலனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“அந்த அறைக்குள்ள என்ன இருக்கு?”

நீலன் அவர்கள் இருவரையும் தீவிரமாகப் பார்த்தார். ஷீல்யா பதில் சொல்லாமல் தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள்.

“நாளைக்குத் தெரிஞ்சுப்பீங்க!” க்’ளாஃஸா பதில் சொன்னாள்.

“இன்னிக்கே போய் பார்க்கலாமே?”

“முடியாது!”

“ஏன்? நானும் இந்தக் கிரகத்தின் குடிமகன்… எங்க வேணா போக எனக்கு உரிமை இருக்கு!”

நீலனுக்கே அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொன்னார்.

ஷீல்யா ‘நான் போறேன்’ என்று அவர்களைவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

க்’ளாஃஸா சற்று நேரம் நீலனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இப்போதைக்கு நீங்க மரியாதை நிமித்தக் குடிமகன்தான், இந்தக் கிரகத்தோட அதிகாரபூர்வக் குடிமக்களாக ஒரு சடங்கு இருக்கு… அது அந்த அறைக்குள்ளதான் நடக்கும்… நாளைக்கு உங்களுக்கு அந்தச் சடங்குதான்… ரொம்ப கவலப்படாம இன்னிக்கு இருக்குற மிச்சப் பொழுத அனுபவிப்போம் வாங்க…”

க்’ளாஃஸா நெருங்கி வந்து அவரை அணைத்தவாறு அங்கிருந்து அழைத்துச் சென்றாள். நீலன் சிந்தனை வயப்பட்டவராக அவளுடன் சென்றார்.

மாலை முழுவதும் இருவரும் ஒரு நீர்க்கேளிக்கை அரங்கில் பொழுதுபோக்கினர். அடிமனத்தில் உறுத்திய வினாக்களைத் தாண்டி நீலன் க்’ளாஃஸாவின் துணையைப் பெரிதும் சுவைத்தார். அவள் கற்றுக்கொண்ட கலைகள், பாடங்கள், செய்த வேலைகள் என்று அறிய அறிய அவள் மீது நீலனுக்கு ஓர் ஆழமான ஈர்ப்பு உண்டானது.

இரவின் தொடக்கத்தில் க்’ளாஃஸாவை அணைத்தபடி நீலன் தனது அறையை நெருங்கியபோது பரணனும் ஒரு பெண்ணுடன் அவனது அறைக்கு வருவதைக் கண்டார். இருவரும் ஒரு சில கணங்கள் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், பரணன் கண்ணிமைக்கும் நேரத்தில் வணக்கம் செய்வதைப் போல ஒரு விறைத்த தலையசைப்பைச் செய்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான். நீலனும் பதில் தலையசைப்பைச் செய்துவிட்டு அறைக்குள் வந்தார்.

க்’ளாஃஸாவும் நீலனும் இரவுணவை உண்ணும்போது தாரா வந்தாள்.

“வணக்கம் நீலன், சந்தோஷமா இருக்கீங்க போல?”

அவளது குரல் தட்டையாகத்தான் இருந்தது, ஆனால், எள்ளல் தொனிப்பதாக நீலனுக்குத் தோன்றியது. ‘பதி’ என்று அழைக்காமல் தன்னை வெறும் பேரை மட்டும் சொல்லி அழைத்ததையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

“கருங்குழில விழுந்து சாகுறதுக்கு இது பரவாலையே!”

“நல்லது… இந்தாங்க!”

தாரா ஒரு சிறிய உலோகக் குப்பியை நீட்டினாள்.

“என்ன இது?”

“மருந்து! இந்தக் கிரகத்தோட சுற்றுச்சூழலுக்கு உங்க உடல் ஒத்துப்போக உதவும்!”

நீலன் அவளைச் சந்தேகத்துடன் பார்த்தார்.

“அவங்க சொல்றது சரிதான் நீலன், இங்க புதுசா வர எல்லாருக்குமே இந்த மருந்த கொடுப்போம்… நாங்களுமே ஆறுமாசத்துக்கு ஒருவாட்டி எடுத்துப்போம்… மோகினியோட வளிமண்டலத்துல சில விஷவாயுக்கள் இருக்கு… அதுங்க நம்மைப் பாதிக்காம இருக்க இது முரிவு மருந்து!”

க்’ளாஃஸா விளக்கினாள்.

“நீலன்… நாம இங்க வந்து ரெண்டு நாள் ஆகுது… உங்களுக்கே தெரியாம இத உங்க சாப்பாட்டுல கலந்துகொடுத்திருக்க முடியும்… ஆனா இவங்க அப்படிப் பண்ணல… நீங்க நம்பணும்னுதான் என்கிட்ட கொடுத்து அனுப்பியிருக்காங்க… என்னோட மருந்தையும் நான் இன்னும் சாப்பிடல… இதோ…” தாரா இன்னொரு குப்பியை எடுத்துக் காட்டினாள், “உங்ககூட சேர்ந்தே சாப்பிடுறேன், எந்தக் குப்பி வேணுமோ எடுத்துக்கோங்க!”

கையை நீட்டினாள்.

நீலன் ஒரு சில நொடிகள் அவளை உற்றுப் பார்த்தார். கையிலிருந்த குப்பியைத் திறந்து மருந்தை வாயில் போடப் போனவரை க்’ளாஃஸா தடுத்தாள்,

“இந்தாங்க… பால்ல கலந்து குடிங்க… அப்படியே சாப்பிடக் கூடாது!”

இருவரும் மருந்தைப் பருகிய பின் தாரா அங்கிருந்து சென்றாள்.

“ரொம்பத் திறமையான பொண்ணு… வந்த ஒரே நாள்ல எங்க பார்த்தாலும் இவளப் பத்திதான் பேச்சு!”

வெளியேறிய தாராவைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் க்’ளாஃஸா.

இரவுணவை முடித்துக்கொண்டு க்’ளாஃஸாவுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார் நீலன்.

சில மணி நேரத்தில் க்’ளாஃஸா ஆழ்ந்து உறங்கிப் போனாள். நீலன் ஓசைப்படுத்தாமல் எழுந்து தன் அறைக்கும் பரணன் அறைக்கும் பொதுவாக இருந்த சுவரை நோட்டம்விட்டார், அதில் ஒரு மூலையில் உற்றுப் பார்த்தால் தெரியும் வகையில் ஒரு சிறிய கதவு இருந்தது, சேவக எந்திரங்கள் அறைகளின் ஊடாகப் பயணிக்க ஏற்படுத்தப்பட்ட வழி அது என்பதை நீலன் உணர்ந்துகொண்டார், அதைத் திறக்க அவர் கைநீட்டியபோது அது தானாகத் திறந்துகொண்டது, மறுபுறத்தில் பரணன்!

“நாளைக்கு-” என்று அவன் தொடங்க, நீலன் இடைவெட்டினார்,

“தயாரா இருப்போம்! கதிர்த்துப்பாக்கிய கூடவே வெச்சிரு… மத்தவங்களுக்கும் எச்சரிக்கை பண்ணிடுவோம்…”

பரணன் ஒரு சில கணங்கள் அவரை உற்றுப் பார்த்துவிட்டுப் பின் சரி என்று விறைப்பாகத் தலையசைத்துவிட்டு வந்த வழியே சென்றான்.

நீலனும் மீண்டும் வந்து க்’ளாஃஸாவை அணைத்தபடிப் படுத்து உறங்கிப் போனார்.

காலையில் நீலன் கண்விழித்தபோது க்’ளாஃஸா அங்கு இல்லை. அவருக்கான புதிய உடைகளும் காலையுணவும் காத்திருந்தன. உடையிலும் உணவிலும் அலங்காரமும் ஆடம்பரமும் அதிகம் தெரிந்தன.

‘கொண்டு போய்க் கொல பண்றதுக்கு எதுக்கு இவ்ளோ ராஜ மரியாதை’ என்று தோன்ற, நீலன் நகைத்தார்.

‘ஒரு வேள, பலி கிலி மாதிரி எதாவது கிரியையா இருக்குமோ? அதான் இவ்ளோ மரியாதையா? க்’ளாஃஸா கூட ஏதோ சடங்கு கிடங்குனு சொன்னாளே…?’

பலப்பல சிந்தனைகளோடே நீலன் காலைக்கடன்களை முடித்தார். உதவிக்கு வந்திருந்த பெண்கள் அவரைக் குளிப்பாட்டி, உடையணிவித்து உணவூட்டித் தயாராக்கினார்கள். அவர்களைப் போகச் சொல்லிவிட்டு மறக்காமல் தான் ஒளித்து வைத்திருந்த தனது கதிர்த்துப்பாக்கியைத் தனது ஆடைக்குள் மறைத்துக்கொண்டார். அது சிறிய அளவுதான், ஆனால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்த்தோட்டாக்கள் ஒரு யானையைக்கூட ஒரே நொடியில் சாம்பலாக்கிவிடும்!

துப்பாக்கி இருக்கும் துணிவில் நீலன் கம்பீரமாக நடைபோட்டார். அறையைவிட்டு வெளிவந்தவரின் கண்கள் அனிச்சையாகப் பரணனின் அறை வாசலை நோட்டம்விடவும் அக்கதவு திறக்கவும் சரியாக இருந்தது. பரணனை எதிர்பார்த்த கண்களுக்கு அங்கிருந்து வெளிப்பட்ட பெண் ஏமாற்றமளித்தாள். அவளும் இவரைப் புதிராகப் பார்த்தாள். நீலன் எதையும் கண்டுகொள்ளாமல் திருவோலக்க மண்டபத்தை நோக்கி நடந்தார்.

நீலனுக்கான அடுத்த அதிர்ச்சி அன்றைய மகாராணியின் உருவில் காத்திருந்தது. சாட்சாத் க்’ளாஃஸாதான் அன்றைய மகாராணியாக அரியாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தாள். நீலனை முன்பின் அறியாதவளைப் போல நிர்தாட்சண்யமாகப் பார்த்தாள். அருகில் ஒரு நீண்ட கதிரீட்டியைப் பிடித்தபடி தாரா அக்கிரகத்தின் இராணுவ உடையில் இருந்தாள்.

“கிளம்பலாமா?”

க்’ளாஃஸாவின் குரலில் நளினமும் இருந்தது அதே நேரம் கம்பீரமும் கட்டளையும் இருந்தன.

கூட்டத்தில் பல புதிய பெண்கள் இருப்பதை நீலன் கவனித்தார். இதுவரை அவர்களை அவர் அங்கே பார்த்ததில்லை. அப்பொழுதுதான் நீலனுக்கு இன்னொன்றும் சட்டெனப் புரிந்தது- அங்கே இவரைத் தவிர ஆண்கள் யாருமே இல்லை!

‘என் குழுவினர் எங்கே? ஒருவர்கூட இல்லையே? என்ன ஆனார்கள்?’

நீலனின் உடல் சட்டென விறைத்தது, உடலில் மறைத்திருந்த துப்பாக்கி விண்விண்னென்று துடிப்பதைப் போலத் தோன்றியது, அதற்குப் போட்டியாய் அவரது இதயம் துடித்தது. துப்பாக்கியைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்று எழுந்த உணர்வைப் போராடி அடக்கிக்கொண்டு தொடர்ந்தார் நீலன். அவர்களின் ஊர்வலம் மெல்லச் சித்திரக்கூடத்தை அடைந்தது.

“தொடங்கலாம்!”

க்’ளாஃஸாவின் கட்டளையைத் தொடர்ந்து சிலப் பெண்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அவர்களோடு நீலனையும் நிற்க வைத்தனர்.

“எங்கள் மூதாதையர்களைப் போல விண்கலத்தில் வந்து இக்கிரகத்தில் கால் பதித்த அன்பிற்குரிய விருந்தினர்களே… இந்த மோகினி கிரகத்தின் சந்ததிகள் பெருகி வம்சங்கள் விருத்தியாவதெல்லாம் உங்களின் கொடையால்தான்… அந்தக் கொடைக்கு நாங்கள் என்றுமே நன்றியுள்ளவர்களாக இருப்போம்… இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்களினால் இங்குப் பெண்கள் மட்டுமே இருக்க முடியும்… எனவே இந்தச் சடங்கு அவசியமாகிறது… இதன் மூலம் மரியாதை நிமித்க்த குடிமக்களாகிய உங்களை எங்கள் அதிகாரபூர்வக் குடிகளாக ஏற்கிறோம்…”

‘ஆண்கள அடிமையாக்கூட வெச்சுக்க மனசு வராம கொன்னுடுறீங்களா? இதுக்கு நாங்க எவ்வளவோ மேல்… எங்களுக்கு எவ்ளோ அதிகாரம் இருந்தாலும் பெண்கள எங்க கூடவே வெச்சிருக்கோம்…’

என்று எண்ணமிட்ட நீலனின் மனத்தில் இன்னொரு வினாவும் அப்போது எழுந்தது ‘நம்ம கிரகத்துப் பெண்கள்கிட்ட நீ எங்களுக்கு அடிபணிஞ்சு வாழுறியா, இல்ல பலியாகுறியானு கேட்டா அவங்க எதத் தேர்ந்தெடுப்பாங்க?’

அவரது மனம் அவ்வினாவை விரும்பவில்லை. அதற்கான விடையை எதிர்கொள்ள அவர் தயாராக இல்லை!

பூட்டப்பட்டிருந்த அறைக்கதவு இலேசாகத் திறக்கப்பட்டிருந்தது, க்’ளாஃஸா அதை நோக்கிக் கைகாட்டினாள்…

‘உங்க சந்ததி விருத்திக்கு எங்களப் பலி கொடுக்குறீங்களா? நடக்காது மகளே…’ என்று மனத்திற்குள் நகைத்தவாரே நீலன் அந்தப் பெண்களின் வரிசையைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.

கதவை நெருங்கும்போதே உள்ளிருந்து பல கூச்சல்கள் கேட்டன. பலர் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அலறும் ஓலம்!

நீலனின் கை ஓசைப்படாமல் கதிர்த்துப்பாக்கியைப் பற்றிக் கொண்டது…

சுடுவதற்குத் தயாராய் அவர் உள்ளே சென்றார்…

சடாலென அவர் முன் ஒரு நெடிய பெண்ணுருவம் வந்து நிற்க-

நீலன் அனிச்சையாய்த் துப்பாக்கியை வெளியிலெடுத்து நீட்ட-

அந்தப் பெண்ணும் ஒரு துப்பாக்கியை நீட்ட-

‘தாராவா? இல்லையே! நம் கலத்தின் துப்பாக்கி இவள் கையில் எப்படி?’

நீலனின் சுட்டுவிரல் துப்பாக்கியின் விசையை அழுத்தப் போக-

ஒரு கணம்தான்… ஒரே கணம்…

சரேலென வந்த பெருமழையைப் போல நீலனை உண்மை நனைத்தது-

அது ஓர் ஆளுயரக் கண்ணாடி!


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்