கதை

மெட்டா

11 நிமிட வாசிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரவமில்லாத ஒரு கிராமத்தின் கீழே ஆயிரம் அடி ஆழத்தில் இருந்த சி ஏ ஆர் என் அணுவைப் பிளக்கும் ஆய்வுக்கூட மேசை மீது முடி பிளக்கும் சிந்தனையில்ஆழ்ந்திருந்த மாசிலாமணி தனது தோளை உலுக்கிய சிங்கமுத்துவை மேலே செருகிய கண்களுடன் பார்த்தான்.

“தூக்கம் எலும்பை முறிக்கும். இந்தா இந்த ஆற்றல் பானத்தைக் குடிச்சிட்டு வேலையைப் பாரு. மத்த துகள் பொறிகள் எல்லாம் வேகமா முன்னேறிட்டிருக்காங்க.”

புட்டியை வாயில் கவிழ்த்துவிட்டு சிங்கமுத்துவை நோக்கி மோனப்புன்னகை செய்த மாசிலாமணி “இப்போ நம்ம அல்காரிதம் டெஸ்டர் வேலையும் நம்ம கம்பெனியும் தேவலோகம் மாதிரி தெரியுது,” என்ற தன் மேலான கருத்தை வெளியிட்டான்.

சிங்கமுத்து சிரித்துக்கொண்டே சொன்னான், “கம்பெனி டெமாக்ரசிங்கற பேருல கிண்டல் பண்ணி போஸ்ட் போட்டு லட்சம் லைக் வாங்கின செல்வாக்காளர்களுக்குச் சிறப்பு அசைன்மென்ட் கொடுத்துட்டாங்க. நாமதான் மின்வலையில மீனா சிக்கிட்டோம்.”

பிரபஞ்சம் ஆபத்தில் இருக்கிறது என்பதைச் சின்ன வயதிலிருந்தே பல ஹாலிவுட் படங்கள் மூலமும் வீடியோ கேம்கள் மூலமும் அறிந்துகொண்ட மாசிலாமணி தனது பங்களிப்பாகக் கிராமப்புறக் கல்லூரியில் பொறியியல் படித்தவுடன் ஒரு ஐடி நிறுவனத்தில் சேர்ந்து புவியின் ஆபத்தை விரைவுப்படுத்த ஆரம்பித்தான். எல்லாவிதச் சமூக வலைத்தளங்களிலும் சமூகத்திற்கு விரோதமாக ஆவேசமாக எம்பிக் குதித்து எகிறி அடித்துக்கொண்டே அலுவலக நேரத்தில் சமோசாவும் பாலில்லாத நாலு வகைத் தேநீரும் உட்கொண்டு புவி வெப்பமயமாதலை விரைவுப்படுத்தி வந்தான்.

பதவி உயர்வுக்காகத் தன்னைச் சிறந்த மென்பொருள் டெஸ்டர் என்று சொல்லி அவன் சமர்ப்பித்திருந்த தன்-விளக்க அறிக்கைகளாலும் சப்ஜெக்ட் நிபுணன் என்று சொல்லி வி டியூபில் பதிவு செய்த குறும்படங்களுக்கு அவன் சமாளித்து உருவாக்கிக்கொண்ட பின்தொடர்வோர் எண்ணிக்கையாலும் இந்த எடக்கு முடக்கான சிக்கல் வந்துவிட்டது.

அதாவது உண்மையிலேயே பிரபஞ்சத்திற்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது.

திடீர்திடீரென்று மனிதர்களும் பொருள்களும் காணாமல் போக ஆரம்பித்தார்கள். கொஞ்ச காலம் கடந்ததும் சிறு ஊர்களும் நகரங்களும்கூடக் காணாமல் போவதாக அறிக்கைகள் வந்தன. மத்திய ஐரோப்பாவில் தொடங்கிய இந்த விபரீதம் பிற கண்டங்களுக்கும் பரவி வந்தது.

ஒரு நீல நிற மின்னல் வானத்தில் தோன்றுவதையும் அடுத்த முப்பது நாட்களுக்குள் சுற்றி இருந்த மனிதர்கள், மரங்கள், மலைகள், வீடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக் காணாமல் போய்விடுவதையும் செயற்கைக் கோள் மென்பொருள்கள் உதவியுடன் உயர்நிலை கேம்கள் விளையாடிக் கொண்டிருந்த சில வாண்டுப் பையன்கள் கண்டறிந்து சொல்லிவிட்டார்கள். பூமியின் மேற்பரப்பில் இந்த மாற்றம் உடனடியாகவும் ஆழங்களில் மெதுவாகவும் இருந்தது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உற்று நோக்கிக் கொண்டிருந்த உலகின் தலை சிறந்த அறிவியலாளர்களும் இதை முதலில் நம்பாமல் கருத்து உதிர்த்து வந்த போதும் பின்னர் ஒப்புக்கொண்டனர்.

இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று இணையத்தின் மூலம் அறிவு விரிந்துவிட்டது. இன்னொன்று அறிவியலாளர்களுக்கு வயதாகிவிட்டது. சிறுவர்களுக்கு மனத்தடை இல்லை என்பதும் சிலரால் பேசப்பட்டது.

நகரங்கள் காணாமல் போன இடங்கள் பூகம்பம் வந்த பிரதேசங்களைப் போலக் காட்சி தரவில்லை. பல ஆண்டுகளாகக் கேசம் வளராத தலையின் வழவழப்பான இடம் போலக் காணப்பட்டது. அடுத்துப் பெய்த மழைகளில் செடிகளும் பட்டாம்பூச்சிகளும் பனித்துளிகளும் எப்போதும் போலக் குழந்தைகளைப் பார்த்துச் சிரித்தன. ஒரே ஒரு வித்தியாசம். செடிகள் ஓர் அடிக்கு மேலும், பட்டாம்பூச்சிகள் ஓர் அங்குலத்திற்கு மேலும், பனித்துளிகள் ஒரு மில்லி மீட்டருக்கு மேலும் வளரவில்லை.

தொலைந்த நகரங்களால் நிம்மதி தொலைந்த தலைவர்களும் மற்றும் நிலவியல், இயற்பியல் நிபுணர்களும் நீரூற்றுகள் சூழ்ந்த பெரிய விடுதிகளில் கூடி அவசர சிந்தனை செய்தார்கள். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து செய்திகளுக்கு பேட்டி தந்தார்கள். இடி மின்னலுக்குப் பயந்து நடுங்கினார்கள்.

க்வாண்டம் இயற்பியல் பயின்று எதற்கும் எப்போதும் ஒன்றும் செய்ய முடியாது என்று முடிவுக்கு வந்திருந்த, பெரும்பாலும் தலையில் முடியில்லாத சில வேதாந்த அறிவியலாளர்கள் மட்டும் தங்களுக்குள் அர்த்தத்துடன் ஏதோ ஒன்று எதிர்பார்த்திருந்தது வந்துவிட்டது போலப் புன்னகைத்துக்கொண்டார்கள்.

தேர்தலை எதிர்நோக்கி இருந்த சில தலைவர்கள் பூமிக்குள் சேட்டிலைட் செலுத்தி இழந்த நகரங்களை மீட்டெடுப்பேன் என்று சூளுரைத்து மீம்களால் கழுவப்பட்டனர். கிரக அமைப்புகளை அறிந்திருந்த, சோசியல் மீடியாவில் சோசியம் சொல்பவர்கள் சொத்துக் குவிப்பில் கைதாகும் அளவிற்குச் சம்பாதித்தனர். மின்னல் கண்டு சிறுவர்களும் செடிகளும் மட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாதங்கள் பத்து இப்படியே உருண்டன. நகரங்கள் முப்பது காணாமல் போயின. திடீரென்று ஒரு பதினைந்து வயது மாணவன் அனுப்பிய செய்தி, தலைமை அறிவியலாளரை ஈர்த்தது.

ஐயா,

நான் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியில் வசித்து வருகிறேன். என் பெயர் கோபு. எங்கள் ஆசிரியர் நேற்று அணுக்கருக்கள் பற்றிப் பாடம் நடத்தினார். அணுவிற்கு நிறையைத் தருவது ஹிக்ஸ் போசான் (Boson) என்னும் துகள் என்றும் போசான் என்னும் துகள் இல்லாவிட்டால் அணுவிற்கு நிறை அல்லது எடை என்பதே இருக்காது என்பதும் நமது பூமி, அதன் மேல் இருக்கும் சாதனங்கள் எல்லாம் இந்த போசான் காரணமாகவே இருக்கின்றன என்பதும் அவர் வேகமாகப் படித்துக்கொண்டே போன போதும் புரிந்தது. அணுவின் சமநிலைக்கு உட்கருவில் உள்ள துகள்களும் அவற்றின் நேர்மின் சக்தியும் அதைச் சுற்றிச் சுழலும் எதிர் சக்தி எலக்ட்ரான்களுக்கும் காரணம் என்பதை விளங்கிக்கொண்டோம்.

அப்போது நான் எந்திருச்சு, ‘சார் அணுவின் கட்டமைப்பு கெட்டுப்போச்சுன்னா பூமிக்கு என்ன ஆகும்’ னு கேட்டேன்.

அதிகப்பிரசங்கி சட்டைக்கு பட்டன் போட்டுட்டு வாடான்னு வெளிய அனுப்பிட்டாரு.

வெளியே அனுப்பியது பரவாயில்லை. ஆனா கேள்விக்குப் பதில் இல்லாதது ஒரே அரிப்பா இருக்குது. போசானுக்கு திடீருன்னு என்னவாவது ஆகிடுச்சன்னா என்ன ஆகும் சார்.

கேள்வி முட்டாள்தனமா இருந்தா மன்னிச்சுடுங்க சார்.

இப்படிக்கு,
தங்கள் கீழ்ப்படிதலுள்ள
கோபு
முத்துப்பட்டி

ரிச்சர்ட் ஃபெய்ன்மென் துள்ளி எழுந்துவிட்டார்.

அவர் மிச்சமிருந்த ஒரு சில அசல் சிந்தனையாளர்களில் ஒருவர். தனது தலைமுடியை பென்சிலால் நீவிக்கொண்டே பத்து நிமிடம் யோசித்தார்.

துகளுக்கும் அணுவுக்கும் புடவிக்கும் ‘மாஸ்’ கொடுக்கும் போசானின் அடிப்படை இயல்பில் குலைவு ஏற்பட்டால் என்ன ஆகும்? ஒரு சங்கிலித்தொடர் வினையாக அணுத்துகள்களில் இருந்து நிறை தரும் துகள் வெளியேறிவிட்டால் என்ன ஆகும்? பெருவெடிப்பின் கணத்தில் அடிப்படை ஆதி ஆற்றலும் துகள்களும் சமநிலையில் உருவாகி இந்த உலகம் தோன்றியதாக வைத்துக்கொண்டால் அந்தச் சமநிலையைத் திருப்பிவிடும் நிகழ்வும் சாத்தியம்தானே?

ஃபெய்ன்மென் உட்கார்ந்திருந்த ஐம்பதாம் மாடி சொகுசு அறைக்கு வெளியே பரந்திருந்த அட்லாண்டிக் கடல் காட்சியும், அறைக்குள்ளே இருந்த பயோ சென்சிடிவ் குளிரூட்டியும், மனத்தின் உணர்வு நிலையை முகத்தைப் படம்பிடித்து வாசித்து அதற்கேற்ற அமைதியூட்டும் வகையில் ஏஐ சிஸ்டம் மூலம் தெளிக்கப்பட்ட வாசனைத் திரவ அலைகளும் நாக்கில் ஒட்டியிருந்த, சற்று முன் குடித்த காடிப்புளிச் சாராயத்தின் சுவைத் தீற்றலும், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே வந்தமர்ந்து அலகால் குத்திக் கொண்டிருந்த மீன்கொத்திப் பறவையும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

சரியாகப் பதினொன்றாவது நிமிடம் இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பினார்.

ஒன்று முத்துப்பட்டி கோபுவிற்கு, ‘உனக்கு என் அன்புகள். நாம் இருவரும் இருக்கும் நகரங்கள் அழியாமல் இருந்தால் விரைவில் என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். உனக்கு அணு இயற்பியலில் என்னால் முடிந்ததைக் கற்பிக்க விரும்புகிறேன்.’

அவர் அனுப்பிய இரண்டாவது மெயில்தான் உலகைப் புரட்டிப் போட்டுவிட்டது.

பல பத்தாண்டுகள் முன்னர் மூடப்பட்டுவிட்ட துகள் முடுக்கி மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஜெனிவாவில் இருந்த முக்கிய மையம் 150 ஆண்டுகள் முன்பு கதிர்விச்சு விபத்தால் மூடப்பட்டபின் உலகெங்கும் அச்சத்தால் நிறுத்தி வைத்திருந்த உட்கரு இயற்பியல் மையங்கள் மீண்டும் வேலை செய்யத் தொடங்கின.

ரகசியமாக சில நாடுகளே பராமரிப்பு நிலையில் அந்த இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருந்தன.

அதில் ஒரு மையத்தில் இருப்பவன்தான் உற்சாக மிகுதியால் பல அறிவியல் பிளாக்குகளை வெட்டு ஒட்டு தொழில் நுட்ப அடிப்படையில் எழுதியவனும் பிரபல மென்பொருள் மற்றும் தரவு அறிவியல் வல்லுனராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவனுமான மாசிலாமணி. தனது குருப் தலைமையின் பழி வாங்கும் நடவடிக்கையால் மாட்டிக் கொண்டுவிட்டவன்.

“தரவு பொருள்கோள் புள்ளியியல் பணிக்கு நம்ம மாசிலாமணியை விட்டால் யாரும் இல்லை சார். அயராத உழைப்பாளி நள்ளிரவில் (தலைமைக்கு) அழைப்பாளி. ஒரிஜினலி பிரில்லியண்ட். என்ன மாஸ் சரிதானே?” என்று கேட்கப்பட்டபோது இளித்துக்கொண்டே நெளிந்ததில் கடும் கோபத்தைப் பற்களுக்கிடையில் மறைத்துக்கொண்டான்.

அவனுக்குத் துணையாக அனுப்பப்பட்ட சிங்கமுத்து ஐடிஐ படித்து ஐடி நிறுவனத்தில் கேண்டீன் நடத்தி வந்த போதும் தனது தணியாத ஆர்வம் காரணமாக, கூடவே சில சான்றிதழ் படிப்புகளை முடித்து பிராஜெக்ட் அசிஸ்டன்ட் ஆக கம்பெனிக்குள் நுழைந்தவன்.

இருவருக்கும் இருந்த கல்யாண குணங்களின் பொருத்தத்தால் ஒரு நன்னாளில் அவரவர் மனைவியரால் வெற்றித் திலகமிடப்பட்டு குரவை ஒலியுடன், மரங்கள் பூக்களை உதிர்த்த ஒரு மாரிக்கால நற்பொழுதில் புவியடிக் குழிக்குள் பூரிப்புடன் இறக்கிவிடப்பட்டனர்.

மாதக்கணக்கில் நீண்ட இந்தப் பிராஜெக்டில் மாசிலாமணியின் பணி சுருக்கமாகச் சொன்னாலும் விரிவாகச் சொன்னாலும் இதுதான்:

அதிவேகத்தில் துகள்களை ஓடவிட்டு அவற்றின் மோதலில் வெளிவரும் புதிய துகள்கள் அல்லது ஆற்றலை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது, நெருப்பில்லா நெருப்பில் தீய்ந்து போகும் துகள்கள் தேய்ந்து போகையில் வெளிவரும் ஆற்றலைக் கணக்கெடுத்து மில்லி எலக்ட்ரான் வோல்டின் மதிப்பை விசைப்பலகையில் வேகம் கொண்டு தட்டச்சிடுவது.

தானியங்கியாகத் தரவு சேகரிப்பதில் அ-மனிதக் கொடும்பிழை (machine-made disaster) எதிர்கொள்ள நேர்ந்ததால்தான் ஜெனிவாவின் முடுக்கி சுயம்புவாகச் சுற்றி எதிர்பாரா கதிரியக்கம் வெளியாகியது என்று சொல்லப்பட்டது. இதுவே மாசிலாமணியின் சோதனைக்கான பின்புலம்.

நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் கண்ணிமைக்காமல் அணுத் திரையில் துகள்கள் மோதுவதைக் குறைவேக மீள் ஓட்டத்தில் கவனித்து, வெடிபடும் அணுவில் இடிபடும் தாளம் தனைப் பிசகாமல் தொடரவேண்டும்.

இப்படி மாசிலாமணி – சிங்கமுத்து போலவே இந்த நிலவறையில் வந்து சிக்கிக்கொண்ட சில நூறு இளைஞர்களும் தனித்தனியான பாதாளச் சிற்றறைகளில் ஒரே வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

இதைப் போலவே உலகின் அணுசக்தி கொண்ட எல்லா நாடுகளிலும் மலையடிவாரங்களின் கீழே பல குழுக்கள் செயல்பட்டன. தான்தோன்றி வெப்பமற்ற சீர்நிறைசீர் அணுவியல் தன்னழிவு (Autonomous Adiabetic Systematic Synchronous Atomic Self-annihilation) என்னும் நிகழ்வின் காரணங்களைக் கண்டு கொண்டு உலகைக் காக்கும் பணியில் இருப்பதால் மாசிலாமணிக்கு ஒரு பெருமை உண்டுதான்.

தளராமல் மீண்டும் தனது பார்வையை நெடுந்திரையில் ஓடவிட்ட மாசிலாமணி தனது குலதெய்வமான சொன்னவண்ணம் செய்த பெருமாளை நினைத்துக் கொண்டிருந்தான்.

ஒரு எலக்ட்ரான் திரையில் வேகமாக ஓடியதைக் கண்டான். எதிர்வரும் போட்டானை விழுங்கி ஆற்றல் பெற்று எகிறியது. எகிறிய வேகத்தில் எதிரில் வந்த எலக்ட்ரானை மோதி இரண்டும் மறைந்து போயின. மெல்லிய தீற்றலாக, சாம்பலாக, ஆற்றல் ஒளி பரவி தேய்ந்து அழிந்தது. உறக்கம் வந்தது.

இன்றைக்குத் திரும்பிப் பார்த்தால் துகள் முடுக்கியில் தரவு பிடிப்பதில் எப்படியான குவாண்டம் குதிப்பை அறிவியல் உலகம் அடைந்துவிட்டது என்று வியந்தான்.

அப்போது ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டவனாக, யாரோ எதையோ சொல்ல விழைவது போலத் தோன்றியதால் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அணிந்திருந்த நேனோ அளவைக் கண்ணாடியின் உதவியால் ஒரு எலக்ட்ரான் புளியங்கொட்டை அளவு பெரிதாகத் தெரிந்தது. அது எதிர் வந்த இன்னொரு துகள் மீது மோதாமல் ஏதோ ஓர் ஆற்றல் பின்னுக்கு இழுக்க, சிதையாமல் நின்று ஒளிர்ந்தது.

அப்போது நடந்ததை மாசிலாமணி யாரிடம் சொன்னாலும் நம்பப் போவதில்லை என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பிற்பாடு நினைத்துக்கொண்டான்.

அந்த நுண்துகள் அவனிடம் பேசியது. அல்லது அவனிடம் எண்ணங்களை விதைத்தது. அல்லது அந்தச் சித்த அலைகள் அவன் மனதில் துலங்கி வந்தன, கழுவப்பட்ட வானில் தெளியும் கேலக்சிகள் போல.

எண்ண அலைகளைத் திருமூலம் என்ற அலகின் மூலம் அளக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆதலால் தனக்கு அளிக்கப்படும் எண்ணங்களின் மூலத்தைப் புரிந்துகொண்டான் மாசிலாமணி.

உன்னித்துப் பார்த்த மாசிலாமணி அந்த இரு துகள்களும் மோதிக் கொள்ளாமல் சற்று தயங்கியதைக் கண்டான். ஒரு துகள் மற்றொன்றைச் சற்று மென்மையாகத் தொட்டது. ஆற்றல் பரிமாறவில்லை. அப்போது எலக்ட்ரான் பேசியது.

“மகனே, என்னை அறிவாயா?”

“இந்த மாயம் எல்லாம் வி.ஆர் விளையாட்டில் அலுவலத்திலேயே நிறைய ஆடிவிட்டேன்,” என்று சொல்லிக்கொண்டான்.

“நம்ப முடியவில்லையா? என்னை அறிய மாட்டாய். நான் உன்னை அறியாத காலமே இல்லை,” என்று சொல்லி ஒரு முறை கடிகார எதிர்ச் சுற்றில் சுழன்று ஒரு குட்டிக்கரணம் அடித்து நின்றது

“இதுதான் முழுதடங்கிய மெட்டா நிலை என்பது. தொட்டும் தொடாமல் ஒளிர்ந்து ஒளிராமல் இருக்கும் சமச்சீர் நடுநிலைமை. இங்கேதான் எல்லா உயிர்களும் ஆழுறக்கத்திலும் மரணத்திலும் வந்து சேர்கிறார்கள்.

சுழிய வெப்பநிலையை உருவாக்கும் முன், துகள்கள் அடையும் கடைசி நிலை இதுதான். இந்த நிலையில் உயிர்கள் ஒத்திசைவு கொன்டு அடங்குகின்றன.

உங்கள் பருவுலகில் உருவாகும் எல்லாப் புலன்வெளி மாற்றங்களும் துகள்களின் சலன மாத்திரத்தில் ஏற்படுகின்றன.

மூளையில் ஹைப்போதலாமஸில் இருக்கும் துகள்கள் இந்த நிலையை அடைந்தால் ஒருவன் முழு மோனத்தில் நிலைபெறுகிறான். சிலருக்குப் புதிய காட்சிகள் வரும். புதிய வாசனைகள் கிட்டும். நோயுற்ற ஒருவர் இந்த நிலைக்குத் தன் அணுக்களை வரச் செய்தால் முழு குணம் உண்டாகும். மரணத்தை விரும்பும்போது எடுத்துக்கொள்ளலாம்.”

சிங்கமுத்து சிலிர்த்த நிலையில், “அணுக்கடவுளே, இதை எப்படி நாம் திட்டமிட்டு அடைவது?” என்று கேட்டான்.

“வாசி யோகத்தின் உச்சநிலையில் கும்பகத்துக்கும் பூரகத்திற்கும் இடைப்பட்ட மத்திய யோகம் என்று ஒன்று உண்டு. இதில் கிடைக்கும் ஆற்றல் உலகத்திற்குத் தீமையை விளைவிக்கலாம் என்பதால் சித்தர்கள் ரகசியமாக வைத்து விட்டனர்.”

“மேலும் கேள். நாங்கள் துகள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆனதே இந்த அண்டம். எங்களுக்குள் ஆற்றல் பொட்டலங்களையும் எடை தரும் பொட்டலங்களையும் வீசிப்பிடித்து விளையாடி நடத்துவதுதான் உங்கள் ஆட்டமெல்லாம். ஒற்றை மனிதன் என்று ஒன்றில்லை. தேனீக்களின் உலகம் போல.”

“அப்படியானால் கடவுளே, இப்போது ஏன் இந்தப் பாதாளத்தில் இந்தக் கணத்தில் உன்னை வெளிப்படுத்திக் கொண்டாய்?”

துகள் சிரிப்பது போல ஒரு சிறிய வளைந்த புகையை வெளிவிட்டு ஒரு சுற்று சுற்றித் தொடர்ந்தது.

“நான் இல்லாத காலம் என்று ஒன்றில்லை. சரி, இன்று மதியம் என்ன சாப்பிட்டாய்?”

“சற்று கெட்டுப் போகத் துவங்கியிருந்த அவித்த முட்டை ஒன்று. ஆனால் அதன் தீயச் சுவையைச் சற்று விரும்பினேன்தான்.” மாசிலாமணி சற்று வெட்கப்பட்டுக் கொண்டான்.

“தம்பி, எங்கே விழைவும் விலக்கமும் சரி, பாதி இருக்கிறதோ அங்கே நிறை தரும் துகளுக்கும் சக்தி தரும் துகளுக்கும் இடையே சம்யோகம் நடக்கிறது. அந்தத் துகள் முழுமையான தூண்டல் நிலையை அடையாமல் சரி பாதியில் நிற்கிறது. அப்போது இந்தக் காட்சி கிடைக்கிறது. இது உங்கள் மொழியில் சொல்வதென்றால் நாற்பத்தெட்டு மன்வந்திரங்களுக்கு ஒரு முறை ஒரு சென்டில்லியன் உயிர்களில் ஒருவருக்குக் கிடைக்கப் பெறும்.”

“அது மட்டுமல்ல. நீ எனக்குப் பிரியமானவன். இடது கையிலேயே தட்டச்சு செய்து கொண்டு வலது கையில் முட்டை போண்டா சாப்பிடும் திறமை கொண்டவன். நிரலர்களில் ஏறு என்ற பெயரைத் தயார் செய்து கொண்டவன். முக்கியமாக ரெண்டும் கெட்டான் நிலையில் உச்சம் பெற்றவன். மலர்ந்து மலராத பாதி மலர் போல அறிவியல் வகுப்பில் அபத்தமாக வெண்பா எழுதியவன். அசட்டுத்தனமான கதையே எழுதிக் கொண்டிருக்கும்போதே சாகித்ய விருதைக் கனவு கண்டு விசைப்பலகையில் ஜலதரங்கம் வாசிப்பவன்.”

“இந்த அரைகுறைத்தன்மை முழுமை பெற்றவர்களிடம் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்கிறேன். பூச்சியத்திற்கும் ஒன்றுக்கும் இடையில் இருக்கும் கோடான கோடி சாத்தியக் கூறுகளில் சறுக்கி விழுந்தவன் எழமுடியுமா என்ன?”

மாசிலாமணிக்கு இதெல்லாம் எங்கோ கேட்டது போல இருந்தது.

“எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்களே. உன் பெயரே ஒரு பெரிய க்வாண்டம் அறிவியலின் உண்மையைக் குறிக்கிறது என்பதை அறிவாயா?”

“மாசு என்றால் ப்ரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய மொழியில் எடையைக் குறிக்கும். மணி என்பது ஒளி. எலக்ட்ரான் இல்லாமல் ஒளி இல்லை. மாசு இல்லா மணி என்றால் எடை இல்லாத ஒளி – நிறை இல்லாத, மின் சக்தி மட்டுமே கொண்ட துகள்களைக் குறிக்கும். அதாவது போசான் போனான். ஃபோட்டான் (Photon) மட்டும் இருக்கிறான்.”

சிங்கமுத்துவின் பெயருக்குள் என்ன மர்மம் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்ப முயன்றவனை ஏதோ ஒன்று திரும்ப முடியாமல் செய்திருந்ததை உணர்வதற்குள் சற்று மயக்க நிலையை அடைந்திருந்தான். விடாமல் பொழிந்து தள்ளியது துகள். இந்த நேரத்தில் மின்சக்தியின் அளவைகளை தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டான். அதன் மூலம் திருப்ப முடியாத பெரும்பிழையை எதிர்காலத்திற்கு இழைத்துக் கொண்டிருந்தான்.

“பிரபஞ்சம் தனது காலத்துக்கும் முன்னரே பேரழிவைச் சந்திக்க நேர்ந்தால் அதைக் காப்பதற்கு இந்த யோகத்தைச் செய்யவேண்டும். அதற்கான வாசி யோகக் குறிப்பு உனக்கு இந்தத் திரையில் ஒரு நிமிடம் செய்யுள் வடிவில் சுடர்விட்டு மின்னும். அதை காப்பி பேஸ்டு செய்யாமல் மனனம் செய்து அஜபா முறையில் பதிவு செய்து கொள்ளவேண்டும். உன் மரணத்திற்கு ஒரு நாழிகை முன்னால் மட்டுமே இதைத் தகுதி உடைய சாதகனுக்குச் சொல்லலாம். அதற்கு முன் வெளியே சொன்னால் மெட்டா குழப்பம் ஏற்பட்டு சொல்வபவனுக்கும் கேட்பவனுக்கும் மூளை ஒழுகி காது வழியே வெளியேறி விடும்.”

மாசிலாமணி தனது இருக்கையில் சற்று அசைந்து கொடுத்தான். “இறையே பல கோடி பேர்கள் ஒரே நேரத்தில் கருத்து குண்டுகளை மின்வெளியில் ஆவேசமாக எறியும்போது ஏற்படும் வெப்பம்தானே மெட்டா?”

இந்த எண்ணம் வந்தததும் அவன் முகத்தை, ஒரு நூலைப் படிப்பது போலப் படித்து விட்ட துகள் அவன் தலையில் ஒரு லேசர் கற்றையை அடிகோலாக பாவித்து ஓங்கித் தட்டியது.

“மகனே இப்போது காட்சி மாறும். அதற்கு முன் இந்தப் பாட்டைக் கேள்.”

கண்டு விட்டதாய்க் கதறும் மண்டடையற்ற பிண்டங்காள்!
கண்டதும் கடந்து போக அண்டமென்ன அற்பமோ?
காண்டல் காட்சி காண்பான் காலம் கலந்திருந்த ஒருமையில்
வீண்இலா ஒளி-வெளியைப் பேணி உய்வர் பித்தரே!

“இறையே, நகரங்கள் காணாமல் போவதென்? இதைத் தடுப்பது எப்படி? அதன் மூலம் அழியாத தாரகையாக அறிவு வானில் சுடர்வது எப்படி?” என்று கேட்டுக் கை கூப்பிய மாசிலாமணியிடம் துகள் சொன்னது,

“உலகம் தோன்றுவதற்குச் சரியான ஆற்றலும் சரியான நிறையும் கொண்ட ஒரு போட்டானும் ஒரு போசானும் சேர்ந்து எலக்ட்ரானைத் தாக்கியதுதான் காரணம். அந்த முதல் துகள்களுக்கு நன்றி சொல். அதிலிருந்து மோதியும் சுழன்றும் பல யுகங்களாகப் பரவிய துகள்களின் லீலைதான் இதெல்லாம் என்று அறிக.”

“ஏதோ ஒரு தருணத்தில் ஒரு துகள் தனது ஆதித்துகளின் இருப்பிடம் – ஆற்றல் – சுழற்சி நிலையைத் தேட முனையும்போது போசான்களும் ஃபோட்டான்களும் பெரிய துகள்களிலிருந்து தாமாக வெளியேறி நிறையில்லாத, மின்னூட்டமில்லாத, சுழல் இல்லாத நிலையை அணுக்கள் அடையும். ப்ரோட்டான்களும் எலக்ட்ரான்களும் அமைதியாகத் தங்கள் சுழற்சியைச் சுருக்கிக்கொண்டு மெல்லிய மின்விசையை வெளியேற்றி ஆவி போலக் கரைந்துவிடுகின்றன.”

“தெய்வமே அப்படியென்றால் இது ஒரு தான்தோன்றி அணுச் சிதைவா?” என்றான் மாசிலாமணி.

“மனிதர்கள் எங்கள் மீது கை வைக்கும்போது வருவதுதான் அணு விபத்துகள். இது அப்படியல்ல. நாங்கள் அமைதியாக எங்கள் இருப்பிடம் செல்வதுதான். மெதுவாக பலூனில் காற்றை வெளியேற்றிச் சுருங்குவது போன்றது.”

“அணுக்கள் ஏன் இப்படித் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அண்ணலே?”

“தம்பி, பிறப்பும் இறப்பும் உங்கள் கற்பித உலகின் முட்டாள்தனங்கள். நாங்கள் அணுவாக ஆவதும் அலையாக அமைவதும் எப்போதும் தொடரும் ஒரு சுழற்சி. நாங்கள் இல்லாத காலம் இல்லை. நாங்கள் என்பதே தவறு. அழிவு பற்றிய உனது திருப் புலம்பலை நிறுத்துக.”

“அலகிலா விளையாடல் புரியும் பேராற்றலின் சிவம் என்னும் போசானும் சக்தி என்னும் போட்டானும் ஓடி – துரத்தி, புணர்ந்து பிரிந்து ஆடல் புரிகின்றன. இந்த ஆடலின் நுண்வடிவம் நான். உன் உணர்வுகள் உருவாகும் மூளையின் நரம்பு மையம் நான். உன் அச்சம், ஆசை, வெறுப்பு, உடல், உலகம், உலோகங்கள் நானே. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எனது இருப்பை மாற்றிக்கொள்வதை நீங்கள் பேரழிவு என்று சொல்லிக்கொள்கிறீர்கள். நீ எனக்கு இனியவன் என்பதால் யாரும் காணாதது கிடைத்தது,” என்று சொல்லிக் கொண்டே எலக்ட்ரான் நீலச் சுடராக ஒளிர்ந்து மறைந்தது.

கண்களைத் திரையிலிருந்து கட்டாயமாகப் பிரித்தெடுத்து சுற்றிலும் பார்த்த மாசிலாமணி முதலில் கண்டுகொண்டது சிங்கமுத்து இருந்த இடத்தில் அவனைப் போலவே இரண்டு அடியில் ஓர் உருவம் இருந்தது. அவனது கணிணி மற்றும் வன்பொருட்களும் பாதியாகக் குறுகி இருந்தன.

பாதியாகக் குறுகிவிட்ட தனது உதவியாளரின் கூக்குரலைக் கேட்காமல் சிற்றறையிலிருந்து பாய்ந்து வெளியேறி ஓடிக்கொண்டே ஒரு குரல் செய்தியைப் பதிவு செய்து சர்வருக்கு அனுப்பியவாறே குகையின் மையப்பாதைக்கு ஓடி வந்தான். பிற பாதாள அறைகளிலிருந்து பலர் வந்து கூடி இருந்தார்கள். எல்லார் முகத்திலும் ஒரு பீதியும் பெருமிதமும் ஒருங்கே கலந்திருந்தன.

எல்லோரும் ஒரே நேரத்தில் தங்களுக்கு அருளப்பட்ட துகளின் ஆற்றலைப் பற்றி தங்கள் பெயர், நிறுவனப் பெயர் மற்றும் ஊழியர் எண் சேர்ந்து அனுப்பிய செய்திகள் அதி விரைவாக நுண்குழல் அலைகளில் பாய்ந்து கொண்டிருந்தன. அந்த அலைகளைத் துகள் சிதைவு அலை துரத்திக் கொண்டிருந்தது. பின்னதின் அலை நீள வீச்சு அதிகமாக இருந்தது.

அவர்களின் உயரம் மில்லி மீட்டர் அளவில் குறையத் துவங்கி இருந்தது.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

ஆர்.ராகவேந்திரன்

நான் கோவையைச் சேர்ந்தவன். ஒரு பொதுத் துறை வங்கியில் பணி. வயது 43. மாணவப் பருவத்தில் கலைக்கதிர், தி ஹிந்து (அறிவியல் – தொழில்நுட்ப இணைப்பு), Science Reporter போன்ற அறிவியல் பத்திரிகைகளில் ஆர்வம். க.மணி அவர்களின் அறிவியல் கட்டுரைகள் திறப்பு தந்தன. சுவாமி ரங்கநாதானந்தா அவர்களின் (நரம்பியலும் அதற்கு அப்பாலும்) படைப்புகள் ஊக்கமளித்தன. அறிவியலை ஜனநாயகப்படுத்தும் எழுத்துகள் பிடிக்கும்.

ஜெயமோகன் அவர்களின் எழுத்துலகில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நுழைந்தேன். ஆசிரியராக வரித்துக்கொண்டு அவருடன் பயணிக்க முயல்கிறேன். வாசிக்கும்போதே மொழியும் நுட்பமும் நாம் அறியாமல் கற்றுக் கொடுக்கிறார். கோவை நண்பர் தியாகு (நூல்நிலையம்) அவர்கள் வாசிப்புக்கு ஊக்கமளித்து வருகிறார். 'சொல்முகம்' வாசிப்புக் கூடுகை நண்பர்கள் களியாட்ட மனநிலையில் வாசிப்பை மேற்கொள்ள உதவுகிறார்கள். தொடர்ந்து கற்றலை மேற்கொள்ள விழைகிறேன்.

Share
Published by
ஆர்.ராகவேந்திரன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago