கதை

பறத்தல்

10 நிமிட வாசிப்பு

“பாட்டி, கொள்ளிவாய்ப் பேய் யேன் ராத்திரில மட்டும் வருது?”

“அது இந்தத் தோட்டத்த விட்டு யாரும் போய்றக்கூடாதுன்னு எல்லையெ பாதுகாக்குதுடா… அது பேய்ன்னு நெனைச்சா பேய்… காவல் தெய்வம்னு நெனைச்சா காவல் தெய்வம்… இல்ல நம்ம மூதாதையர்ன்னு நெனைச்சாலும் நெனைச்சிக்கலாம்…”

“யேன் பாட்டி இப்படிப் பயமுறுத்தற…? இந்தக் கொள்ளிவாய்ப் பேய் எப்படி இருக்கும்?”

“அது ஒரு வெளிச்சம் மிதக்கற மாதிரி இருக்கும்டா… உங்க தாத்தா போன மாசம் பக்கத்து எஸ்டேட்டுல்ல எம்.ஜி.ஆர் படம் பார்க்கத் திருவிழாவுக்குப் போனாருல…? அப்போ படம் முடிஞ்சி காட்டுப் பாதையில வரும்போது அந்த நெருப்புத் துண்டம் மிதந்து போறத பார்த்துருக்காரு…”

“அப்படின்னா அதோட முகம் யாருக்கும் தெரியலயா?”

“அப்படியே கொளுந்துவிட்டு எரியற முகம்னு நம்ம எஸ்டேட்டுல முன்ன அதிகாலையிலே தீம்பாருக்கு வேலைக்குப் போறவங்க சொல்லிருக்காங்க… பார்த்தாலும் பார்க்காத மாதிரி போய்டுவாங்களாம்…ஆனா… அது மிதந்து போகும்னு சொல்வாங்க…”

“பாட்டி மிதக்கறதுன்னா என்னா?”

இருள் சூழ்ந்து கொள்கிறது. உள்ளுணர்வா அல்லது கனவா எனப் பிரித்தறிய முடியாத மனப்பிரமையின் பிடிக்குள் இருப்பதாகத் தோன்றியது. பாட்டியுடனும் அப்புச்சி மாமாவுடனும் நிகழ்ந்த உரையாடல்கள்தான் நான். அதை மட்டும் மனம் சேமித்துக் கொண்டுள்ளது எனப் புலப்பட்டது. இருளுக்குள் இருள் அதனுள் இருள் அவ்விருளுக்குள் ஒரு தோட்டம். ரப்பர் மரக்காடு. ஒவ்வொன்றும் தோன்றித் தோன்றி வருகின்றன. கூரைக்கு மேல் எப்பொழுதாவது மழை பெய்வது போன்று ஒலி கேட்கும். அந்தத் தருணத்தைப் பார்த்துச் சில வருடங்கள் ஆகின்றன.

சட்டென இருள் நிறைந்திருக்கும் அரங்கொன்றில் எனக்குத் தெரிந்த கவிஞன் நேர்கூரான ஒளி தரையில் படர அதன் வட்டத்திற்குள் தோன்றினான். என் முகத்தை ஒத்திருந்த அவனுக்குப் பின்னால் தேவதைகளுக்கு இருப்பது போன்று வெண்சிறகுகள் அடுக்கடுக்காக முளைத்திருந்தன. அவை ஒழுங்கற்று இருப்பதும் அழகியலாகத் தெரிந்தது. அவசரமாகத் தரையிறங்கிய பறவையின் ஒழுங்கற்ற தோற்றம். அவன் மிதந்துகொண்டே இருந்தான். கவிதைகளின் பாதுகாவலன் அவன். வார்த்தைகளைக் கோர்த்துப் பூமியைக் காப்பாற்றுபவன். தம் கவிதைக்கான முதல் வரியைச் சொல்லத் தொடங்கினான். இறுக்கம் தொலைத்த ஓர் ஒற்றைக்குருவி பறப்பதற்கான நாளை கனவு காண்கிறது. எந்த இரவின் முணுமுணுப்பு பறத்தலைக் காணப்போகிறதென்ற குழப்பத்துடன் ஒரு பிரபஞ்சம் காத்திருந்தது.

கவிதையின் முதல் வரி முடிந்ததும் அரங்கில் இருக்கும் பாதிபேர் மிதக்கத் தொடங்கினார்கள். உடல் எடையை இழப்பதென்பது எத்தனை ஆத்மார்த்தமான கனவாக இருந்திருக்கும். அவன் அக்காட்சியைப் பிரயாசையோடு பார்த்துவிட்டு அடுத்த வரியைச் சொன்னான். பூமியின் பிரசவம் என்பது ஒரு வகையான கைவிடல் என்று இந்தக் குருவிகளுக்குத் தெரியப்போவதில்லை.

மிதந்து கொண்டிருந்தவர்களில் சிலர் வானப் பெருவெளியை நோக்கிப் பறந்து சென்றார்கள். கண்முன்னே தூரத்துக் குருவிகளாகிக் கொண்டிருந்தனர். உயரப் பறக்க அவர்களின் நினைவும் அழியத் துவங்கியிருக்கலாம். சன்னலோரம் வந்தமர்ந்துவிட்டு நொடிப்பொழுதில் எதையோ கண்டடைந்த அவசரத்தில் பறந்துவிடும் குருவிகளின் இல்லாமை. பறந்துபோன அத்தனை பேரின் இழப்பும் ஒரு நிழல் வடிவில் உருக்கொண்டு பெருகியது. பின்னர், ஓர் ஒளி சிறிதாகிப் பறந்துவிடுவதைப் போன்று தோற்ற விகாரம் கொண்டிருந்தது. அனைவரும் பறந்து சென்ற பின் அரங்கிற்குள் வந்தவன் தனிமையில் நின்றிருந்தான். பறத்தலுக்குத் தன்னையும் தயார் செய்து கொண்டிருந்தான்.

கால்களிரண்டும் உரசிக் கொள்ளும்போது எழும் சங்கிலி ஒலி எனக்கு முக்கியம். இல்லையெனில் இப்படியே நாள் முழுவதும் கனவா அல்லது நிஜமா என்று தெரியாத ஒரு பரவசத்திற்குள்ளேயே மாட்டிக்கொள்ள நேர்ந்துவிடும். கவிதைக்கான வார்த்தைகள் சுழன்று சுழன்று உருவாக்கும் மாயக்கனவு போல் தோன்றும் கணத்தில் தன்னிச்சையாகக் கால்கள் ஒன்றோடொன்று உரசி கால்களில் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியின் ஒலியை உருவாக்கிக்கொள்ளும். கடந்த பல மாதங்களாகக் கவிதைக்களுக்குள்ளே கிடக்கிறேன். சொற்கள் ஒவ்வொன்றையும் நினைவில் மீண்டும் மீண்டும் சொல்லி அடைத்துக் கொள்கிறேன். வார்த்தைகளால் வாழ்வது கடினமாகத்தான் இருந்தது. சட்டென விழித்தேன். உறக்கமென்று சொல்ல முடியாது. நாள்தோறும் ஓர் இருண்ட அறைக்குள் கிடப்பதென்பது ஒரு கவிஞனுக்கான மகாமட்டமான தண்டனையாகும். ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே விட்டு விட்டுத் திறக்கப்படும் வெளிச்சத்தைவிட இருள் பழகி போயிருந்தது. இருளுக்குள் எல்லாமும் இருக்கின்றன. அதைக் கண்கள் கொண்டு பார்க்க இயலாது எனத் தெரிந்து கொண்ட கணத்தில் மனத்தைக் கொண்டு கற்பனை செய்யத் துவங்கிவிட்டேன். கண்களைக் காட்டிலும் மனம் ஆயிரமாயிரம் காட்சிகள் உடையது.

“இது கவிஞர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு சார்… உங்களையும் அதுல இணைச்சிருக்கோம்… இப்படிக் கெடைப்பது ரொம்ப கஸ்டம்… நீங்க மகத்தான கவிஞன் என்பதால்தான் இந்த வாய்ப்பு… இல்லைன்னா எப்பவோ காணாமல் போய்ருப்பீங்க…”

இப்படிச் சொல்லித்தான் இங்கு இருக்க வைக்கிறார்கள். மேலும், மகா மரணங்களின் அடியில்தான் மிச்சமாய்க் கிடக்கிறோம் என்கிற அச்சவுணர்வு இங்கேயே இருந்துவிடலாம் எனத் தூண்டியபடி இருக்கின்றது. மூன்றுமுறை கவிதைக்குச் சர்வதேச விருது பெற்றவன் என்பதால் இந்தச் சலுகை என நினைத்தேன். இல்லையெனில் என்றோ பொறுமையிழந்து நான் பறத்தலுக்குப் பலியாகியிருப்பேன். தினம் ஒருமுறை இயற்கையைப் பற்றியோ பறவைகளைப் பற்றியோ கவிதை எழுதச் சொல்லிக் கேட்பார்கள். மனத்தினுள் திரண்டிருக்கும் அத்துணை அனுபவங்களையும் கொண்டு எத்தனைநாள் கவிதைகள் இயற்ற முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொருநாளும் கவிதைகள்தான் உயிரோடு வைத்திருக்கின்றன என்கிற ஆறுதல் தோன்றும். ஒவ்வொரு மாலையும் நான் எழுதிய கவிதையும் இன்னும் சிலர் எழுதிய கவிதைகளும் அறைக்குள் இருக்கும் ஸ்பீக்கரில் ஒலிப்பரப்பாகும். ஓர் இனிமையான குரலில் அக்கவிதைகளைக் கேட்கும்போது மனம் இலேசாகும். அதன் பின்னணியில் ஒரு மெல்லிய இசையும் கலந்திருக்கும். அதைக் கேட்டுக் கொண்டே மனத்தை அமைதிப்படுத்த வேண்டும். சில வேளைகளில் என் கவிதைகளே எனக்கு விந்தையாக ஒலிக்கும். வார்த்தைகளால் பலம் பெற வேண்டிய நிலையில் இருந்தோம்.

அப்பொழுதெல்லாம் தற்கொலை என்பது வீட்டுக் கூரையை விட்டு வெளியேறி வானப் பெருவெளியில் குதித்துக் கொள்வதுதான். அப்படித் தாங்கிக்கொள்ள முடியாமல் வெட்டவெளிக்கு வந்து பறந்து மறைந்தவர்கள் ஏராளமானோர் இருந்தனர். பறத்தலின் உன்னத அனுபவத்தை அடைய வேண்டி பரிசோதனை முயற்சியில் இறங்கிக் காணாமல் போனவர்களும் உண்டு. வானத்தில் விந்தையொன்று தோன்றிவிட்டதாக நினைத்த ஏராளமானோர் அடுத்த நாள் மிதந்து காணாமல் போனபோதுதான் இந்த மயக்க நிலை உச்சப் பதற்றத்தை உண்டாக்கியது. அது அலையலையெனப் பெருகி பெரும் மனித பயத்தின் கோட்டையாக மாறியது. அப்புச்சி மாமாவின் மரணம் அப்படியல்ல. அது தற்செயலானதல்ல.

அப்புச்சி மாமா

எனது அம்மாவின் தம்பி. புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தன் பால்ய வாழ்க்கையை எமொசிக் தோட்டத்தில் கழித்தவர். இயற்கை விரும்பி என்பதால் குடியிருப்பு அதிகம் இல்லாத அந்தத் தோட்டத்திற்குள் போய்வர அவருக்கு மட்டும் வன இலாகாவின் அனுமதி இருந்தது.

“எதுக்குத் தோட்டத்துக்கு வர்றீங்க சார்? எல்லாப் பயலுங்களும் இங்கேந்து டவுனுக்குப் போய்ட்டாய்ங்க…”

“இங்க ரொம்ப காலமா ஒரு ஒளி மிதந்துகிட்டு இருக்கு… அது நம்ம மூதாதையர்கள் விட்டுட்டுப் போன ஒரு செய்தி… அதோட விடையத் தேடிக்கிட்டு இருக்கன்…”

“சார், கோமடி பண்ணாதீங்க… வேட்டைக்குப் போய்றாதீங்க. அப்புறம் கேஸ் ஆய்டும்… போன வருசம் மூனு பேரு பண்டி வேட்டைக்கு உள்ள நுழைஞ்சி மாட்டிக்கிட்டாங்க…”

மாமா இந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இவர்களுக்குக் காடு என்பது ஓர் எல்லை. அதை மீறிக் காட்டினுள் அவர்களுக்கு விதிகள் மட்டுமே இருந்ததாகச் சொல்வார். விடுமுறைகளுக்கு எமொசிக் தோட்டத்திற்குச் சென்று காட்டுக்குள், ஆற்றினோரம் அமைதியாக அமர்ந்திருக்கும் எளிய மனிதர். இயற்கையைப் பற்றிய விவரணைகள் நிறைந்தவர். தன் மனத்தினுள் ஒரு காட்டைக் கொண்டுள்ளவர். அதனுள் ஒளிரும் வெளிச்சம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக அருவியில் சென்று அமர்ந்திருப்பவர். என்னையும் ஒரு முறை தோட்டத்திற்குள் இருக்கும் பெரிய அருவியின் பக்கம் அழைத்துச் சென்றிருந்தார். பாறைகளில் வந்து அவிழும் நீரின் முடிச்சை உற்றுக் கவனிக்கும்படி சொன்னார். அது அவிழ்ந்து கொட்டும் ஒலியைப் பிரமாதமாகப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது இரைச்சல் போலவே கேட்டது. அவர் அதை இசை என்று சொல்லிவிட்டுத் தலையசைத்தார்.

“மாமா, குளிக்கலாமா?”

“டேய் படுவா… அருவி ஒரு கவிதைடா… அதை இப்படிக் கொஞ்சம் உக்காந்து அனுபவி… உடனே குளிச்சி நாசம் செஞ்சிறாத… இப்படியே உக்காந்திருந்தா அப்படியே நம்ம இயற்கைக்குள்ள போய்ருவோம்… உடம்பு இலேசாயிரும்… அப்படியே பறந்துருவோம்…”

ஒரு சிறுவயது பையனின் அத்தனை கொண்டாட்ட மனநிலைக்கும் பெருந்தடையாக மாமா காட்சியளித்தார். அவர் சொல்லும் பறக்கும் பொய்களுக்கு நான் பலமுறை ஏமாந்துள்ளேன். சூப்பர்மேன் போல் தோளில் சிவப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வீட்டுக் கட்டிலிலிருந்து எகிறிக் குதித்துக் கீழே விழுந்து முட்டியில் காயத்தையும் பெற்றுள்ளேன்.

“மாமா, நம்மலாம் பறக்கவே முடியாது… பொய் சொல்லாதீங்க…”

“வாய்ல ரெண்டு போட்டுக்கடா… நான் படிச்சவன்… நமக்குள்ள ஒரு பறவை இருக்கு… இந்தப் பிரபஞ்சமும் இருக்கு… அந்தப் பறத்தல் ஒரு மானுட செய்தி போல நம்ம வரலாற்றுக்குள்ள இருந்துருக்கு… அது என்னான்னு இன்னவரைக்கும் என்னால முழுசா அறிஞ்சிக்க முடில…”

“அடப் போங்க அப்புச்சி மாமா…”

அவருடைய நிஜப் பெயர் ஆனந்தன். ஐந்து வயதில் அந்தப் பெயரை அழைக்கத் தெரியாமல் தடுமாறி அப்புச்சி மாமா என்று அழைத்தேன். அதுவே பலர் இரசிக்க, மாமாவும் தன் பெயராக ஏற்றுக்கொண்டு புழக்கத்திற்கு வந்துவிட்டது. பலநேரங்களில் தன்னை ஒரு பறவை என்று சொல்லி என் மனத்திற்குள் விதைத்தது அவர்தான். தன்னை ஒரு பறவையாகப் பார்க்கும்படி வற்புறுத்துவார். இரு கைகளையும் விரித்துப் பறக்கவும் செய்வார். அதனை ஒரு நகைச்சுவை துணுக்காகப் பார்த்துப் பழகியிருந்தேன். அன்றும் அந்த அருவி சத்தத்தினால் பேரானந்தம் கொண்டு கதறினார்; கைகளை விரித்துக்கொண்டு ஓடினார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அவரை அடைத்திருந்த அறைக்கு என்னைக் கொண்டு சென்றார்கள். பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் என அறிவுத் தொடர்புடைய அனைவரும் அடைக்கப்பட்டிருந்த இடம் அது. ஆறு மாதங்களாகத் தம் கால்களில் இடப்பட்டிருந்த சங்கிலியை இன்னொரு வன்மமான உறுப்பெனக் கருதி அதனை அடித்து உதறி மொத்தக் காலையும் சேதப்படுத்தியிருந்தார். கால் எலும்புகள் முறிந்திருப்பதாகச் சொன்னார்கள். கனத்த மனத்துடன்தான் பார்த்தேன். அவரைப் பார்க்க வேறு யாரும் வர இயலாது என்று சொல்லிவிட்டார்கள். கலைஞர்களின் பாதுகாப்புப் பட்டியலில் இருந்ததால் எனக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

“மாமா… என்ன ஆச்சு?”

வேறு என்ன கேட்பது அல்லது எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. என் குரல் அவர் நினைவில் அப்படியே உயிர்ப்புடன் இருந்திருக்க வேண்டும் என நினைத்தேன். அழைத்ததும் சட்டென ஒரு பறவை திடுக்கிட்டுத் திரும்புவது போல என்னைப் பார்த்தார். கிழட்டு முகம். கண்கள் விழுந்திருந்தன. நெற்றியில் அழுத்தமான கோடுகள். ஆயிரம் சந்தேகமும் கவலையும் மாறி மாறித் தாண்டவமாடிய நெற்றிச் சுருக்கம்.

“டேய்… படுவா… நீயா? நீ இன்னும் பறக்கலையா?”

அவர் கண்களில் அத்தனை பிரகாசத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லை என்றனர். ஆவேசம் கொண்டு நகர முயன்றால், கால்களில் சங்கிலியோடும் தரையோடும் பிணைக்கப்பட்டிருந்த உலோகப் பந்தைத் தாண்டி அசைந்துவிட முடியாது. அது இறுக்கமாக அவர் உடலைப் பிடித்து வைத்திருந்தது.

“நீ எப்படிடா பறக்காம இருக்க? ஓ இந்தக் கூரைலாம் தடுக்குதா? வெளில போடா… தெடலுக்குப் போ… இல்ல வானத்துக்குக் கீழப் போய் நில்லு… பறவையாவறது கெடைக்காத வரம்டா… ஒனக்கு ஒன்னு தெரியுமா மனுசனுங்க சில பேரு அந்தக் காலத்துலே தோட்டத்துக்கு ஒருத்தன் மிதந்திருக்கான்… ஆனா அப்ப அது நமக்குத் தெரில… அவன் மிதக்கறத பார்த்து அவனே பயந்திருக்கான்… அதனால போய்க் காட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டான்… அப்படி அவன் மிதக்கறதுக்கு இந்தப் பிரபஞ்சம் ஒரு காரணம்… இவனுங்களுக்கு இது தெரியாது… இப்ப எல்லாத்துக்கும் இந்த மிதக்கறது நடந்துகிட்டு இருக்கு… இந்தப் பிரபஞ்சப் பெருவெளி முதல்ல கேக்கறது மனுசனோட ஒடம்பைத்தான்…”

மாமா சொல்வது ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் ஏதோ ஒன்று விளங்குவதாகவும் நான் கற்பித்துக் கொண்டேன். உடலிலுள்ள காற்றின் கணம் குறைவதில்தான் ஏதோ ஒரு சூட்சமம் இருப்பதாகத் தோன்றியது. யோசித்து யோசித்து அவர் சுருங்கிப் போயிருந்தார். ஆனால், கண்களில் எதையோ கண்டறிந்த வெளிச்சம் தெரிந்தது.

“இப்ப மனுசன்… அடுத்து இங்கருக்கிற எல்லாமும் போய்ரும்டா… ஒன்னும் மிஞ்சாது… நட்சத்திரம் அதோட சக்திய மறுபடியும் கேக்குது… திரும்பவும் இழுத்துக்கும்… புரியாதுடா… இங்க இருக்கறவன் ஒவ்வொருத்தன் மண்டயிலயும்தான் மனுசன்ற ஆணவம் உக்காந்துருக்குலே… எவ்ள கெட்டியா பிடிச்சி வைக்க முடியும்டா? எல்லாம் போய்ரும்…”

மாமா அவரையறிமால் உட்கார்ந்துகொண்டே கதறினார். சுயநிலையை இழந்துவிட்டார் என்று சொல்லித்தான் என்னை அழைத்திருந்தனர். அவரைக் கைவிட முடிவு செய்திருந்தனர்.

“சுவாசிக்கற ஒவ்வொன்னும் ஒன்னு ஒன்னா பறந்து போய்ரும்… அது பறக்கறது இல்லடா… மகாசக்தியின் கைவிடல்… பூமாதேவி விட்டுருவா…”

அன்றைய நாளில் குடும்பத்திலிருந்து ஓர் ஆள் உடன் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அதற்குமேல் அவரை அந்த உலோகப் பந்துடன் இணைத்திருந்தால் அவர் பாதுகாப்பு மையத்திற்கே அச்சுறுத்தலாகலாம் எனக் கணித்துவிட்டனர்.

“சார், அவரை இன்னும் அஞ்சு நிமிசத்துல கழட்டி விடலாம்னு இருக்கோம்…”

ஒரு கண்ணாடி அறைக்கு வெளியேதான் நின்றிருந்தேன். மாமா, கைகளை மட்டும் விரித்து விரித்து என்னிடம் காட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பிரகாசமான கண்களுக்கு உடல் ஈடுகொடுக்காமல் சோர்ந்து கிடந்ததைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. வெளியில் மழை பெய்யும் சத்தம். அது மழையல்ல; இதற்குமுன் பறந்து மேலே போனவர்களின் சிறுநீர் என பாதுகாப்பு கூடத்தில் கேட்ட ஒரு கவிதை வரி சட்டென நினைவில் எட்டியது. அதை எழுதியவன் நிச்சயம் கற்பனையால் முழுவதுமாகத் தின்னப்பட்டவனாகவே இருக்க முடியும்.

“டேய், கண்ணா… நீ கவிஞன்… உண்மைய கவித்துவமா மாத்திட்டுப் போய்ட்டு இருப்ப… நான் ஆராய்ச்சியாளன்… உண்மையின் சாத்தியங்கள தேடிக்கிட்டு இருப்பன்… இந்தப் பூமி முழுசா இழுத்துக்கொள்ளப் படறது இப்போ கெடைச்ச செய்தி இல்ல… அது அங்கொன்னும் இங்கொன்னுமா நம்ம வாழ்க்கைக்குள்ள இருந்துருக்கு… சித்தருங்க இதை தியானத்துல பறக்கறதுன்னு சொல்லிட்டாங்க… அவுங்களுக்கு அறிவியல் தெரில… ஒன்னு ஒன்னா மெதுவா பொறுமையா இது நடக்குதுடா…”

மாமா பேசிக்கொண்டிருப்பதை அங்கிருந்த யாரும் பொருட்படுத்தவில்லை. அவர் நாளெல்லாம் இப்படித்தான் பேசி உளறிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அறைக்கு மேலேயிருந்த வெண்கூரைகள் சட்டெனத் திறந்து கொண்டன. மேலே இருண்ட வானம் தெரிந்தது. வழக்கத்திற்கு மாறாக அதிகமான நட்சத்திரங்கள் மின்னியபடியிருந்தன. மாமா தலையை மேலுயர்த்தி அண்ணாந்து பார்த்தார். மெல்ல மௌனம் கொண்டார். தலையைக் கவிழ்த்து முறிந்து கிடந்த தம் கால்களைத் தடவிப்பார்த்து அழுதார். அவர் அழுகையை இப்பொழுதுதான் கேட்கும் அங்குள்ளவர்கள் அதனை ஆர்வத்துடன் கவனித்தனர். எனக்கு மாமாவின் பிரகாசமான முகம் மட்டுமே நினைவில் அசைந்து கொண்டிருந்தது. மனம் நடுக்கம் கொண்டது. நமது மரணமும் இப்படியிருக்கக்கூடும் எனக் கற்பனை செய்துகொண்டேன்.

சற்றுநேரத்தில் அவருடைய கால்களைப் பிணைத்திருந்த சங்கிலி திறந்துகொண்டது. மாமா மெல்ல மிதக்கத் தொடங்கினார். கால்கள் ஊன்றாத மிதப்பு அவருக்குப் பிடித்திருந்தது. முகம் பூத்துக் குலுங்கியது. கைகளை வேகமாக அசைத்தார். இந்த விடுதலையை ஒரு பறவையின் மனத்திலிருந்து இரசித்தார். எனக்கு அது மரணமாகத் தெரியவில்லை. உடலுக்கும் பூமிக்கும் மிச்சமிருந்த ஈர்ப்பும் குறையத் தொடங்க மேலே மேலே சென்றார். அவருடைய உடல் ஓர் ஒற்றை நெருப்புத் துளியாக மாறிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் வானவெளியை நோக்கிப் பறந்து மறைந்தார். அவருடைய கையசைப்பு மட்டும் அகலாத ஓவியம் போன்று தெரிந்தது. என் முன் நிகழ்ந்த இரண்டாவது காட்சி அதுதான். அதற்குமுன் சட்டெனக் காணாமல்போன அம்மா, தங்கை, பெரியம்மா, தாத்தா என யாரையும் இப்படியெல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் உணரும் முன்பே பறத்தல் நிகழ்ந்துவிட்டது. செல்லம்மா பாட்டியின் பறத்தல் மட்டும்தான் இன்னுமும் கண்களுக்குள் தேங்கிக் கிடக்கிறது.

செல்லம்மா பாட்டி

“டேய் அப்போயி, அப்பலாம் எங்க எஸ்டேட்டுல கொள்ளிவாய் பேயு இருந்துச்சி தெரியுமா? ராத்திரி பத்து மணிக்கு மேல நாங்க வீட்டுலத்தான் இருப்போம். கரண்டுலாம் அப்போ இல்ல… ஜெனரேட்டர்லதான் லைட்டு ஓடும்… அது தட்டி விட்டுட்டாங்கனா அதுக்கப்பறம் யாரும் வெளில போக மாட்டோம்… அந்தச் சமயத்துலத்தான் அது வரும்…”

செல்லம்மா பாட்டி என்னை அப்போய் என்றுதான் அழைப்பார். நாள்தோறும் வீட்டில் எங்களிடம் அவருடைய தோட்டத்துக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பார். அதைக் கேட்டு என் மனத்தினுள் நான் பார்த்திராத ஒரு தோட்டக்காட்டை எழுப்பி வைத்தேன்.

“என்ன பாட்டி வரும்?”

“அதுதாண்டா கொள்ளிவாய்ப் பேய்ன்னு சொல்லுவாங்க… யொரு நெருப்புத் துண்டம் மாதிரி ரப்பர் காட்டுக்குள்ள ஓடும்… அந்த நெருப்பு அப்படியே பறக்கற மாதிரியே இருக்கும்டா…”

“பாட்டி அது மின்மினிப்பூச்சியா இருக்கும்… நீங்க பேய்ன்னு தப்பா சொல்றீங்க…”

பாட்டிக்குச் சுருக்கென்று கோபம் வந்துவிடும். அவருடைய நம்பிக்கைகளை அவமதிக்க விடமாட்டார். கண்களை உருட்டி மேலும் எங்களைப் பயமுறுத்துவது போன்று பார்ப்பார்.

எல்லோரும் மிதந்து காணாமல்போன அன்றைய நாளில் நான் வீட்டின் மேல்கூரையில் ஒட்டிக்கொண்டு கிடந்திருந்தேன். வீட்டில், கட்டிடங்களுக்குள், காருக்குள் இருந்தவர்கள் பலர் இப்படித் தப்பித்துவிட்டார்கள். வெளியில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் லட்சக்கணக்கானோர் அப்படியே பறந்துவிட்டனர். எங்கே போனார்கள் எனத் தெரியாமல் ஒரு முழு நகரம் தனிமையில் தகித்துக் கொண்டிருந்தது.

அனைவரும் ஒரு மாலை தேநீர் அருந்திக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அது நிகழத் துவங்கியது. முதலில் தங்கைதான் மிதந்தாள். வீட்டில் எடை குறைவானவள். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து சட்டென மிதக்கத் துவங்கினாள். அதன் பின்னர் எதுவுமே நினைவில் இல்லை. ஒரு கரடி பொம்மை சட்டென மிதக்கத் துவங்குவது போன்று மட்டுமே இன்னுமும் அக்காட்சி நினைவில் உள்ளது. கவிஞனாக இருப்பது எத்துணைக் கொடூரமான வரம் எனத் தோன்றியது. ஒரு அழுத்தமான இழப்பும்கூடக் கவித்துவமாகத் தெரிந்துவிடும் மனநிலையை மாற்ற முடிவதில்லை.

“டேய் ஒடம்பு மெதக்குதுடா…” எனச் செல்லம்மா பாட்டி கத்திக்கொண்டே வீட்டின் உட்கூரையில் போய் விழுந்தார். நான் வீட்டின் மரநாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிதத்ததலை எதிர்த்துப் போராடியபடி இருந்தேன். பாட்டியின் கண்களில் அத்தனை பயம். தலைக்கீழாகக் கூரையில் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்தார். அவருடைய பாரத்தைக் கூரை தாங்கவில்லை. மெல்ல முனகத் துவங்கியது.

“அப்போயி… உலகம் அழியப் போகுதுடா…” என அவர் சொன்ன கடைசி வார்த்தை இன்னுமும் காதுக்குள் மிதக்கின்றது. கூரையின் ஒரு பகுதி உடைந்து அப்படியே பறந்துவிட்டார். தங்கை விழுந்து கிடந்த கூரை உடைய சில அவகாசம் இருந்ததை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் விழுந்தால் முழுக் கூரையும் உடைந்து எல்லோரும் பறந்துவிடுவோம் என்கிற அச்சம். நாற்காலியின் பிடியைக் கெட்டியாகப் பிடித்திருந்தபோதுதான் கவனித்தேன். வீட்டில் இருந்த எந்தப் பொருளும் மிதக்கவில்லை. அப்படியே இருந்தவை இருந்தபடியே காட்சியளித்தன.

“டேய் அப்போயி… அந்தக் கொள்ளிவாய்ப் பேய் பாக்கறதுக்கு மனுசன் மாதிரியே இருந்துச்சின்னும் அது அப்படியே ரப்பர் காட்டுக்குள்ள மிதந்து போச்சின்னும் சொல்லிருக்காங்க… ஆனா அந்த மனுசன் மூஞ்சி நம்ம தோட்டத்துல உள்ளவங்களோடதுன்னும் சொல்லிருக்காங்க… அப்படின்னா மனுசன்தான் கொள்ளிவாய்ப் பேயா இருந்து மிதந்துருக்கான்…”

பாட்டியின் உடல் சிறு ஒளிப்பந்தாகி ஒரு பறவையாகிக் கொண்டிருந்ததை அவர் சொன்ன கொள்ளிவாய்ப் பேய்க் கதைகளுடன் இணைத்துக் கொண்டபோதுதான் அந்த விசித்திரமான அனுபவத்திலிருந்து என்னால் மெல்ல மீள முடிந்தது. இப்பொழுது யாரும் இல்லை. இந்த இருளை எத்தனைநாள் என்னால் பொறுத்துக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. எனக்கும் மனம் நிலைக்கொள்ளாமல் போகும்போது என்னையும் விட்டுவிடுவார்கள் எனத் தோன்றியது. இந்தப் பிரபஞ்சத்தில் கைவிடப்படுவது எப்படி இருக்கும் என ஒவ்வொரு நாளும் கற்பனை செய்திருந்தேன்.

அப்புச்சி மாமா, செல்லம்மா பாட்டி சொன்னது போல எப்பொழுது உலகம் அழியத் தொடங்கும் என்றெல்லாம் யூகிக்க முடியவில்லை. ஆனால், இதனை அழிவாகவும் என்னால் சிந்திக்க முடியவில்லை. இதுவொரு பறத்தல். மனிதன் பறவையாகி இந்தப் பிரபஞ்சத்தை ஈன்றெடுத்த தாயிடம் மீண்டும் செல்லும் தருணம். சென்று அங்கொரு நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கக்கூடும். வானத்தில் தெரிந்த ஆயிரமாயிரம் நட்சத்திரங்களின் கூட்டம் பறந்து சென்றவர்களாக இருக்கலாம் என அடுத்த கவிதைக்கு மனம் தயாராகிக் கொண்டிருந்தது.

விளக்கு தட்டப்பட்டது. சாப்பிடுவதற்கான நேரம். அப்பொழுதுதான் கவனித்தேன் மேசையின் கால்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. உணவுத் தட்டிலிருந்த ஒரு சிவப்பு ஆப்பிள் மெல்ல மிதந்து மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

கே.பாலமுருகன்

மலேசியா, கடாரத்தில் வாழும் கே.பாலமுருகன் 2005ஆம் ஆண்டு முதல் தமிழில் சிறுகதை, நாவல், சிறுவர் நாவல், சினிமா விமர்சனம், பத்தி, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை கல்வி, இலக்கியம் என்று 25 நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகஙகளில் மாணவர்களுக்குச் சிறுகதை பயிற்சிகளும் வழங்கி வருகிறார். இதுவரை அநங்கம், பறை, களம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு அமரர் சுஜாதா நினைவாக ஆழிப் பதிப்பகம் நடத்திய உலகலாவிய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். மேலும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்கிற நாவலுக்குக் 'கரிகாற் சோழன்' விருதைப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவருடைய சிறுவர் நாவல்/சிறுவர் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அன்னை வேளாங்கன்னி அறிவியல் கலைக்கல்லூரி 2018ஆம் ஆண்டு 'தமிழ் நாயகர் தனி நாயகர்' விருதை அளித்துக் கௌரவித்தது. மேலும், நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் மாணவர்களுக்காக அவர் வழங்கிய இலவச கல்விச் சேவையைப் பாராட்டி 2020ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருதும் அளிக்கப்பட்டுள்ளது. தன் balamurugan.org என்கிற அகப்பக்கத்தில் தற்போது எழுதியும் வருகிறார். இவருடைய மூக்குத் துறவு என்கிற அறிவியல் சிறுகதை கடந்தாண்டு அரூ அறிவியல் சிறுகதை போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான பத்து கதைகளில் ஒன்றாகும். இதுவரை எழுதிய நூல்களின் எண்ணிக்கை கல்வி, இலக்கியம் சார்ந்து 38 நூல்கள் ஆகும். சமீபத்தில் இவரது குறும்படத்திற்காக மலேசிய அளவிலான சிறந்த குறும்படம் பிரிவில் சோழன் விருது கிடைத்தது.

Share
Published by
கே.பாலமுருகன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago