கட்டுரை

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

13 நிமிட வாசிப்பு

சமீபத்தில் உலகின் கவனத்தைக் கவர்ந்த மூன்று முக்கியமான செய்திகளிலிருந்து துவங்குகிறேன்.

  1. தென்கொரிய சீரியல்களைப் பார்த்த பள்ளி மாணவர்கள் இருவருக்கு வடகொரிய அரசாங்கம் மரண தண்டனை விதித்தது.
  2. பல வருடங்களாக கோவிட் ஊரடங்கு விதிகளால் கடும் நெருக்கடிக்குள்ளான சீன மக்களில் ஒருசாரார் முதன்முறையாக அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.
  3. ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்த ஆங்சான் சூகி தேர்தலில் வென்ற பின்னரும் மியன்மரின் ராணுவ அரசால் கைதுசெய்யப்பட்டு வீட்டுச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் செய்திகளுக்கும் 1984 நாவலின் சாரத்துக்கும் இருக்கும் தொடர்பை நான் விளக்க வேண்டியதில்லை. உலகமெங்கும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக ஒரு மனிதரோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ எடுத்து வைக்கும் முதல் அடி என்பது கண்காணிப்பு. கண்காணிப்பு குற்றமல்ல. ஆனால், அதன்பின்னுள்ள நோக்கத்திற்கேற்றவாறு கண்காணிப்பின் வண்ணங்கள் மாற்றமடைகின்றன. இதை நம் நடைமுறை வாழ்க்கையிலேயே பரிசோதித்துப் பார்க்கலாம். வெறுமனே ஒருவர் நம்மைக் கண்காணிப்பதை அறியத் துவங்கியதுமே நம் நடவடிக்கைகள் மாறுகின்றன. ஒரு சிறிய அசௌகரியத்தை நாம் உணரத் துவங்குகிறோம். அதிலும் ஒரு மனிதனை அடக்கி ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு அச்சமூட்டுவது. அதை ஒரு அரசாங்கம் செய்யும்போது அது பயங்கரமானதாக உருமாற்றம் பெற்றுவிடுகிறது. இந்தப் புள்ளியில்தான் சர்வாதிகாரம் உருப்பெறுகிறது. தன்னுடைய அதிகாரத்தை முழுமுற்றாக நிலைநிறுத்துவதற்காக சர்வாதிகார (Totalitarian) அரசாங்கங்கள் தனிமனித சுதந்திரத்தை அழித்து, அதற்கடுத்த கட்டமாக, தனிமனிதர்களையே அழிக்கும் சம்பவங்களை வரலாறு நெடுக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சர்வாதிகார அரசாங்கங்களின் அழித்தொழித்தல் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்ட தனிமனிதன் நெருப்பில் மடியும் சிறு பூச்சியென மடிகிறான். ஆனால், வரலாறு முழுக்க எங்கோ ஒரு மனிதன் இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கினை முன்னுணர்ந்து சமூகத்துக்கு அபாய மணியை அடித்துக்கொண்டே இருக்கிறான். பல செவிகளில் அது விழுவதில்லை. அச்சத்தம் சென்று சேர்ந்த வேறு பல செவிகளும் அதை மறுபக்கம் வசதியாகக் கடத்திவிடுகின்றன. சர்வாதிகாரிகளின் செவிக்கு இவ்வொலி சென்று சேர்ந்ததும், அபாய மணியடித்த மனிதன் ஆவியாக்கப்படுகிறான். அவன் இருந்ததற்கான தடயங்கள் அழிக்கப்படுகின்றன. சில வருடங்களில் அவன் நினைவுகளும் எஞ்சுவதில்லை. ஆனாலும், அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின் மூலமாகச் செய்யும்போது அவர் காலத்தின் குரலாக மாறிவிடுகிறார். அவரது படைப்பும் காலத்தின் ஒரு பகுதியாக மாறியும், கணந்தோறும் தன்னைப் புதுப்பித்தபடியேயும் இருக்கிறது. அப்படியொரு படைப்புதான் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 என்ற நாவல்.

நாவலின் பின்புலம்

ஆர்வெல்லின் இந்த நாவல் Dystopian பாணியைச் சேர்ந்தது. எல்லாமே சரியாக இருக்கக்கூடிய பொன்னுலகைக் கற்பனை செய்து எழுதிய Utopian வகை எழுத்துக்கு எதிராக, எதுவுமே சரியாக இல்லாத, எல்லாமே பிறழ்ந்திருக்கும் ஒரு சமூகத்தை விரிவாக எழுதிச்செல்லும் முயற்சியாக Dystopian வகை நாவல்கள் எழுதப்பட்டன. அவ்வகையில் 1984 நாவல் ஒரு செவ்வியல் படைப்பென முன்வைக்கத்தக்கது.

ஜார்ஜ் ஆர்வெல் இந்த நாவலை 1949 ஆம் ஆண்டு எழுதினார். அடுத்த ஆண்டே அவர் மறைந்துவிட்டார். அவரது இந்த நாவலோ இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. எங்கெங்கெல்லாம் சர்வாதிகாரம் ஓங்கி தனிமனித சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த நாவல் என்றும் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கும். ஆர்வெல் இந்த நாவலை எழுதிய காலகட்டத்தில் உலகமே ரஷ்ய கம்யூனிச ஆட்சியை வியந்து நோக்கிக்கொண்டிருந்தது. புரட்சியின் மூலம் உதித்த அரசாங்கம் பார்புகழும் நல்லாட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது என்ற மேலோட்டமான சித்திரத்தையைப் பெருவாரியானவர்கள் நம்பியும் சிலாகித்தும் வந்த நிலையில், ஸ்டாலின் ஆட்சியின்கீழ் சோவியத் ரஷ்யாவில் எண்ணிக்கையில் அடங்கா சர்வாதிகாரக் கொடுமைகள் நடந்தேறின. அரசாங்கத்திற்கும் கட்சிக் கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் கட்சிப் பணிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுக் கடும் உடலுழைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பட்டினிக்கு உட்படுத்தப்பட்டு மடிந்தனர். இக்கொடுமைகள் யாவும் The Great Purge என்ற பெயரால் வரலாற்றில் அழைக்கப்படுகிறது. ஸ்டாலினின் அரசியல் எதிரியான ட்ரோட்ஸ்கியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாவலில் காட்டப்படும் Big brother-இன் மீசையுள்ள சித்திரம் ஸ்டாலினையும், Emmanual Goldstein-னுடைய சித்திரம் ட்ராட்ஸ்கியின் உருவத்தையும் ஒத்திருப்பதையும் வாசகர் எளிதாக ஊகிக்கலாம். மேலும், இந்த நாவலில் காட்டப்பட்டுள்ள கட்சி அமைப்பும் [பிக் பிரதர் (Big brother) – கட்சியின் உள் அங்கித்தினர் (Inner party) – வெளி அங்கத்தினர் (Outer party)], அக்கால சோவியத் ருஷ்யாவைப் பிரதி செய்வதுதான். சோவியத் ருஷ்யா மட்டுமல்லாது, ஸ்பைனில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் மற்றும் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்த மனித அழித்தொழிப்புகளும்கூட ஆர்வெல்-ஐ ஆழமாகப் பாதித்தன. நாவலில் காட்டப்படும் வெறுப்புப் பிரச்சாரமும் ஹிட்லரின் ஆட்சியில் உண்மையில் நிகழ்ந்ததுதான். இந்தத் தனிமனிதக் கண்காணிப்பும், ஈவிரக்கமற்றப் படுகொலைகளும், அரசியல் அழித்தொழிப்புகளும் இங்கிலாந்தில் நடைபெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே 1984 நாவலுக்கு மூல விசையாக இருந்துள்ளது.

தொழில்நுட்பம்

தனிமனித சுதந்திரத்தை ஒடுக்குவதற்குத் தொழில்நுட்பம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை இந்த நாவலின் மூலம் அறியலாம். தொழில்நுட்பத்தின் சாதகங்களைக் குறித்தே பிரதானமாகப் பேசப்பட்டு வந்த காலத்தில், அதன் பாதங்களையும் பேசிய நாவல் இது. குறிப்பாக, டெலிஸ்கீரீன் கருவி பிக் பிரதரின் இயந்திரக் கண்களைப் போலவே ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணிக்கிறது. கூடவே, அதுவே பிக் பிரதரின் இயந்திர வாய் போல மாறி, தனிமனிதனிடம் கட்டளையும் இடுகிறது. அதன் கண்களில் இருந்து தப்புவது எவருக்கும் எளிதல்ல. ஓஷியேனியாவின் கட்சி அங்கத்தினர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் டெலிஸ்கீரின் இருக்கிறது. ஆனால், அந்த வீடுகளின் நிலை எப்படியிருக்கிறது? நாவலின் கதை நாயகன் வின்சென்ட் ஸ்மித் வாழக்கூடிய அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் அவலநிலையை முதல் இரு அத்தியாயங்களில் துலக்கமாகக் காட்டிவிடுகிறார் ஆர்வெல். அந்தக் கட்டிடம் அழுக்கேறி, இடியும் நிலையில் இருக்கிறது, மின் தூக்கி வேலை செய்யவில்லை, பெரும்பாலும் மின்சாரம் இருப்பதில்லை, கட்டிடம் எங்கும் துர்நாற்றம் வீசுகிறது, குழாய்கள் பழுதாகிப் போய், சாக்கடை தேங்கி நாற்றமெடுக்கிறது. மக்களுக்கு இன்றியமையாத மின்தூக்கி போன்ற தொழில்நுட்பம் வேலைசெய்யவில்லை. ஆனால், சர்வாதிகாரத்திற்குத் தேவையான தொழில்நுட்பமான டெலிஸ்கீரின் மட்டும் எந்த வீட்டிலும் பழுதடையவில்லை.

கண்காணிப்பு

தனிமனித சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அவனைப் புறவயமாகக் கண்காணிப்பது என்பது புதுமையல்ல. எல்லா சர்வாதிகார அரசுகளும் வழக்கமாகக் கையாளக்கூடிய உத்திதான் இது. ஆனால், 1984 நாவலில் காட்டப்படும் உத்திகள் வெறும் புறவயமான கண்காணிப்பு மட்டுமல்ல. ஒரு மனிதனின் புறவயமான நடவடிக்கைகளைத் தாண்டி அவனது அகத்திற்குள் ஊடுருவி அவனது சிந்தனைகளைக் கண்காணிக்கிறது கட்சி. அதன் மூலம் அவன் கட்சிக்கு எதிராக ஏதேனும் சிந்தனைக் குற்றமிழைக்கிறானா என்றும் கண்காணிக்கிறது கட்சி. சிந்தனைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவே “சிந்தனைப் போலீஸ்” என்ற அமைப்பு செயல்படுகிறது. அதன் அடுத்த கட்டமாக, கட்சிக்கு எதிரான சிந்தனைகளை இல்லாமல் செய்வதற்காக, மொழித் தளத்தில் பல மாறுதல்கள் புகுத்தப்படுகின்றன. சிந்திப்பதை வெளிப்படுத்துவதற்கு மொழி இன்றியமையாதது. ஆகவே, மொழியில் உள்ள பல சொற்களைக் களைந்து புது சொற்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதற்கென்று ஒரு குழு வேலை செய்கிறது. கட்சியின் இங்ஸாக் (INGSOC- English Socialism) கொள்கையின்படி, புது மொழி என்ற பெயரில் பழைய சொற்களைக் களைந்து புதிய சொற்களைக் கொண்ட புது அகராதி பதிப்பிக்கப்படுகிறது. அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுப் பல்வேறு பதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. புதுமொழிதான் (Newspeak) இங்ஸாக், இங்ஸாக்தான் புதுமொழி என்றும் நம்பப்படுகிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், இந்தப் புதுமொழி அகராதிகளில், மொழியில் உள்ள எதிர்ச்சொற்கள் யாவும் அழிக்கப்படுகின்றன. உதாரணமாக, “Good” என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லான “Bad” என்ற சொல் நீக்கப்பட்டு “Ungood” என்ற சொல் உருவாக்கப்படுகிறது. அதேபோல, “Excellent” என்ற சொல் நீக்கப்பட்டு “Plusgood” என்ற சொல் உருவாக்கப்படுகிறது. ஆக, ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே மொழி வரிசையில் ஒரே சொல் என்ற அளவிற்கு அதிநுட்பமான ஒற்றைப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். மொழியைச் சுருக்குவது என்பது சிந்தனையைச் சுருக்குவதுதான். இது போன்ற சொற்களை அகராதிகளிலிருந்தும் அச்சு இதழ்களிலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டால் மெல்ல மெல்ல மக்களின் நினைவில் இருந்து இவை நீங்கிவிடும், அவர்கள் இச்சொற்களை மறந்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. (புத்தகங்களையும் அச்சிதழ்களையும்கூட எப்படி கட்சி அனுமதித்தது என வியப்பாக இருக்கிறது. அவற்றையும் அழித்திருப்பார்கள். அதை ஆர்வெல் இந்த நாவலில் எழுதவில்லை. ரே பிராட்பரியின் Fahrenheit 451 நாவலில் புத்தகங்களையும் எரித்துவிடுகிறார்கள்.)

அடுத்ததாக, கடந்த காலச் சரித்திரத்தையே மாற்றுகிறார்கள். இதுதான் அராஜகத்தின் உச்சம். கடந்த காலப் பத்திரிகை செய்திகளையெல்லாம் பிக் பிரதரின் சொற்களுக்கேற்பவும் அவரது கொள்கைகளுக்கேற்பவும் மாற்றி எழுதுகிறார்கள். அவர் சொல்லி ஒரு விஷயம் நடக்கவில்லையென்றால், அவர் அதைச் சொல்லாதது போல கடந்த காலச் செய்திகளை மாற்றுகிறார்கள். இப்படி கடந்த காலச் செய்திகளை மாற்றுவதன் மூலம், சரித்திரத்தையே மாற்ற முயல்கிறார்கள். மக்களின் நினைவும் இதன்மூலம் குழப்பியடிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில் பார்த்தால், பொய்களை உண்மையாக்குகிறார்கள், உண்மையைப் பொய்யாக்குகிறார்கள். இதைச் செய்வது உண்மை மந்திரி சபை. ஓஷியேனியாவின் மந்திரி சபைகள் அவற்றின் பெயர்கள் சுட்டுவதற்கு நேரெதிரான காரியங்களைச் செய்பவை. உண்மை மந்திரி சபையில்தான் பொய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அன்பு மந்திரி சபையிலோ ஒரு ஜன்னல் கூட இல்லாமல் பயங்கரமாகக் காட்சியளிக்கிறது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். கைதிகளைச் சித்ரவதை செய்யக்கூடிய 101 ஆம் எண் அறை இருப்பதே அன்பு மந்திரி சபையில்தான்.

சொற்களை, நினைவுகளை, சிந்தனைகளை, நடவடிக்கைகளை என மக்களின் சகலவிதமான செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு, மக்கள் மழுங்கடிக்கப்படுகிறார்கள். விளைவாக, கட்சி என்ன சொல்கிறதோ, அதுவே சரி என்ற எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் விதைக்கிறார்கள். ஆகையால்தான், கட்சியின் பிரதான கொள்கைகளான, “சண்டையே சமாதானம், அடிமைத்தனமே சுதந்திரம், அறியாமையே பலம்” போன்றவற்றை எந்தக் கேள்வியுமின்றி மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

எழுத்துக் குற்றவாளி

இந்த நாவலின் முதல் அத்தியாயத்திலேயே வின்சென்ட் தன்னுடைய குற்றச்செயலைத் துவக்கிவிடுகிறான். டைரி எழுதுவதுதான் அக்குற்றம். சரியாகச் சொல்வதானால், டைரி வாங்கியதே குற்றம். இன்னும் சரியாகச் சொல்வதானால், டைரி வாங்க நினைத்ததே குற்றம். அந்த டைரியில் முதல் சொல்லை எழுதும்போதே வின்சென்ட்டுக்கு தான் பிடிபட்டுவிடுவோம் என்று தெரிந்துவிடுகிறது. எழுதுபவன் எப்போதுமே பொது உண்மையை எழுதுபவனல்ல, தனி உண்மையை எழுதுபவன். அவன் தன் சிந்தனைகளை எழுதுவதே கட்சிக்கு எதிரான செயல்பாடுதான். (உண்மையை எழுதுபவன் அறிவியல் புனைவுகளிலும் தண்டனைக்கே உள்ளாகிறான். இது ஒன்றில் மட்டும் யதார்த்ததிற்கும் அறிவியல் புனைவுகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.)

அன்பும், பாலுறவும்

அன்பு, பாலுறவு போன்றவைக்கும் கட்சி கட்டுப்பாடுகள் விதிக்கிறது. இவையெல்லாம் கட்சிக்குத் தேவையென்றால் மட்டுமே அனுமதிக்கப்படும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையேயான இயல்பான அன்பும்கூடக் கண்காணிப்புக் கருவியாக மாறுகிறது. குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் இதர பெரியவர்களையும்கூடப் பின் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். வின்சென்ட்-இன் அண்டை வீட்டுக்காரனான பார்லன்ஸ் இறுதியில் அவனது குழந்தையால்தான் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறான். “குழந்தைகள் ஒற்றர் படை” என்ற அமைப்பும் ஓஷியேனியாவில் உள்ளது. உண்மையில் இது போன்ற இளையர் ஒற்றர் படை ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் இருந்தது. அவர்கள் “Hitler Youth” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரைக் கண்காணித்து கட்சிக்குத் தகவல்கள் அனுப்பினார்கள். ஆகவே இந்நாவலில் காட்டப்படும் குழந்தைகள் ஒற்றர் படை என்பது முழுக்க கற்பனை அல்ல. பல சமயங்களில் யதார்த்தம் கற்பனையைக் காட்டிலும் கொடூரமானதாகத்தான் இருக்கிறது.

பார்லன்ஸின் குழந்தைகள் தூக்குத் தண்டனையை நேரில் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குகின்றன. பார்லன்ஸின் மகன் கவண் கல்லால் வின்சென்ட்டைத் தாக்குகின்றான். இது போன்ற சில காட்சிகளின் மூலம் ஓஷியேனியாவின் குழந்தைகளின் மனநிலை எப்படி இருந்தன என்பதைக் காட்டிவிடுகிறார் ஆர்வெல்.

கணவன் மனைவிக்கிடையேயான இயல்பான உடலுறவில்கூடக் கட்சி கட்டுப்பாடுகள் விதிக்கிறது. கட்சிக்கு விசுவாசமான புதிய அங்கத்தினர்கள் கிடைப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அதையும் கட்சி அனுமதிக்கிறது. காதலைப் பிரித்தெடுத்து இயந்திரத்தனமான கூடலை மட்டுமே கட்சி அனுமதிக்கிறது. “குழந்தையை உண்டாக்குவது” போன்ற புதுப்புது சொற்களின் மூலம் உடலுறவின் இயல்பான அர்த்தமே மாற்றம் பெறுகிறது. “இன்றிரவு குழந்தையை உண்டாக்கலாமா” என்று அவன் மனைவி அழைக்கும்போது வின்சென்ட் அருவருப்பு உணர்வையே அடைகிறான். கட்சிக்காகத்தான் குழந்தை, அதற்காகத்தான் உடலுறவு என்ற கட்சியின் சித்தாந்தத்தைத் தகர்ப்பதற்காகவே அவன் விலைமாதிடம் செல்கிறான். கடைசியில் அவள் கிழவி என்று தெரிந்தாலும் அவன் வந்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். ஜூலியாவுடனான உறவில் அவன் விருப்பமுடன் ஈடுபடுவதும் இக்காரணத்தால்தான். ஜூலியா, “உன்னைப் போலவே பிற கட்சி அங்கத்தினருடனும் நான் பலமுறை உறவு கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லும்போது மகிழ்ச்சியடைகிறான். தன்னைப் போலவே கட்சியை எதிர்க்கக்கூடிய ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று உற்சாகமும் அடைகிறான்.

வின்சென்ட்டின் ஏமாற்றம்

கதைநாயகன் வின்சென்ட் கட்சிக்கு எதிரான சகலவிதமான சிந்தனைகளையும் உடையவன். ஆனாலும், அவனால் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக எதுவும் செய்ய இயலாது. அதேசமயம் அவனுக்குக் கட்சிக்கெதிராகப் பெரும் புரட்சியை வழிநடத்தும் எண்ணமோ, அதன்மூலம் ஏற்படவிருக்கும் சமூக மாற்றத்திலோ ஆர்வம் இல்லை. அவன் ஏங்குவதெல்லாம் தனிமனித சுதந்திரத்திற்காகத்தான். அதே சமயம், ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் இணைந்து பணியாற்றிக் கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடவும் விருப்பம் இருக்கிறது. அவனது பெற்றோர்கள் காணாமல் போகிறார்கள், மனைவி பிரிந்து செல்கிறாள், அவனுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவும் கிடையாது. முதல் அத்தியாயத்தில் காட்டப்படும் இடிந்த கட்டிடமும் துர்நாற்றம் வீசக்கூடிய தெருவும் அவனது சிதைந்து போன வாழ்வின் வெளிப்புறப் பிரதிபலிப்புதான். சுதந்திரத்தை எண்ணி அவனால் கனவு மட்டுமே காண இயல்கிறது. அவனது கனவில் ஒரு பெண் தோன்றி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாவது அவனது ஆழ்மனத்தில் உள்ள சுதந்திர வேட்கையைச் சுட்டுவதுதான். கனவிலிருந்து விழித்துக்கொண்டவன் “ஷேக்ஸ்பியர்” என்ற சொல்லை உச்சரிக்கிறான். அவன் ஏன் ஷேக்ஸ்பியர் என்ற சொல்லை உச்சரிக்கிறான் என்பதைக் குறித்து இன்று வரை விமர்சகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். என் வாசிப்பில், வின்சென்டின் ஆழ்மனதில், முழுமையான கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொண்டிருந்த இங்கிலாந்தின் முதன்மையான கலைஞனான ஷேக்ஸ்பியரின் மீது பெரும் நாட்டம் இருந்திருக்கிறது. எங்கோ எப்போதோ சிறு வயதில் அவன் ஷேக்ஸ்பியரின் நாடகத்தைப் பார்த்திருக்கலாம் அல்லது அவனது பெற்றோர் அவனுக்கு அவரைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். நினைவுக்கு எட்டாத பழங்காலத்தின் சுவடுகளைக் கனவின் மூலம் மட்டுமே அவனால் தொட இயல்கிறது. அல்லது ஷேக்ஸ்பியர் போன்ற கலைஞர்கள் முழுமுற்றான படைப்புச் சுதந்திரத்தோடு இயங்கிய அந்த லட்சிய இங்கிலாந்தின் மீதான வேட்கையும் காரணமாக இருக்கலாம்.

மனோதத்துவ ரீதியிலான கட்சிக் கட்டுப்பாடுகளையெல்லாம் அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒரு குழந்தையின் மீது வெடிகுண்டு வீசப்படும் காட்சியைக் கைதட்டி ரசிக்கும்படியாக மனிதர்களைக் கட்சி மாற்றியிருக்கிறது. குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதேயில்லை. மொழித் தளத்திலும், நினைவுத் தளத்திலும் கட்சி ஊடுருவிக் கொண்டேயிருக்கிறது. விளைவாக, தனது சிந்தனையும் நம்பிக்கைகளும் கூட அசலானதுதானா என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

உண்மையில், அவன் அகம் மழுங்கித்தான் போனதா என்ற சந்தேகம் வாசகருக்கும் ஏற்படவே செய்கிறது. காரணம், அவன் நண்பன் என்றெண்ணிய ஓப்ரியன் எதிரியாக மாறிவிடுகிறான். எதிரியாக இருக்கக்கூடும் என்று கருதி வெறுத்த ஜூலியா காதலியாகிவிடுகிறாள். இளமையானவள் என்று நினைத்து அவன் பின்தொடர்ந்த விலைமாதோ ஒரு கிழவி. நம்பிக்கையானவர் என்று அவன் நினைத்திருந்த முதியவரான கடைக்காரர் கார்ரிங்டன், உண்மையில் இளமையான சிந்தனைப் போலீஸ் அதிகாரி. மேலோட்டமாகப் பார்த்தால், பிறரால் அவன் ஏமாற்றப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், அவன் அவனுடைய அகத்தினால் ஏமாற்றப்படுகிறான். ஏமாற்றத்தில் ஆகக் கொடுமையான ஏமாற்றம் என்பது நம் அகத்தாலேயே நாம் ஏமாற்றப்படுவதுதான். எனில் அதே ஏமாற்றத்தைத்தானே ஜூலியாவும் அடைந்தாள் என்றும் தோன்றலாம். ஆம், ஜூலியாவும் ஏமாற்றப்பட்டாள். ஆனால், அவள் வின்சென்ட் அளவிற்கு பிறரை அதிகமாக நம்பவில்லை. ஆகையால், வின்சென்ட்டை ஒப்பிடுகையில் அவளுக்கு நம்பிக்கைத் துரோகத்தின் வலி சற்று குறைவுதான்.

ஜூலியா ஒருவித அலட்சியப் பாவம் கொண்டவளாகவே தென்படுகிறாள். அவளுக்கு தனிமனித சுதந்திரமோ,சமூக மாற்றமோ நோக்கமில்லை. தான் நினைத்த இன்பங்களை அடைவதற்கு அவளுக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. அதன் பின்னணியில் சுயநலமும் இருக்கிறது. ஜி. நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவலின் கதை நாயகன் சொல்வான், “மக்கள் கூட்டத்தை தேச பக்தர்கள், தேசத் துரோகிகள் என்று இரண்டே வகுப்பாகப் பிரிக்காமல், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒருரகம் என்று ஒத்துக்கொண்டேன். யாரையும் நல்லவன் – கெட்டவன், உலோபி – தாராளக்காரன், பெரிய புத்திக்காரன் – சிறிய புத்திக்காரன் என்ற முறையில் பார்க்காது, அவனது தேவைகள் என்ன, அவற்றை நான் எந்த முறையில் பூர்த்தி செய்து அவனிடத்திலிருந்து என்ன பிரதி உபகாரத்தை எதிர்பார்க்க முடியும் என்ற முறையில் சிந்திக்கலானேன்”. அதுபோலத்தான் ஜூலியாவின் செயல்பாடுகள் இருக்கின்றன. தன்னுடைய நுகர்வுக்குத் தான் செய்யவேண்டியதென்ன என்பதுதான் அவளுடைய நோக்கமாக இருக்கிறது. வின்சென்ட்டிடம் வருவதற்கு முன்பே கட்சி அங்கத்தினர் பலருடன் ரகசியமாக உல்லாசமாக இருந்திருக்கிறாள். வின்சென்ட்டுனான அவளது காதலுக்கான காரணமும் வலுவாக இல்லை. தெருமுனையில் அவனைச் சந்தித்து, “நான் உன்னைக் காதலிக்கிறேன்,” என்று ஒரு சீட்டில் எழுதிக் கொடுக்கிறாள். எதற்காக வின்சென்டை அவள் காதலிக்க வேண்டும்? அவனை ஒரு கருவியாகக் கொண்டு தன்னுடைய சுதந்திரத்தையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயன்றாளா என்றும் தோன்றுகிறது. வின்சென்ட் ஒரு கட்டத்தில் அவளிடம், “நீ இடுப்புக்குக் கீழே மட்டும்தான் புரட்சிக்காரியாக இருக்கிறாய்,” என்பதை இங்கே நினைவு கூரலாம்.

வின்சென்ட்- ஜூலியா காதல்

வின்சென்ட்- ஜூலியா காதல் துவங்கியது செயற்கையாக இருந்தாலும், அதன்பின்னர் அவர்களுடைய காதல் படிப்படியாக வலுவடைகிறது. உடல் சார்ந்த நெருக்கம் அதை மேலும் தீவிரப்படுத்துகிறது. “If they could make me stop loving you, that would be the real betrayal,” என்று இருவரையும் சொல்ல வைக்கிறது. ஓப்ரியனின் வீட்டில் சகோதர சேனைக்காக அவன் எத்தகைய கொடுமைகளையும் செய்வீர்களா என்று கேட்கையில், செய்வேன் என்கிறாள் ஜூலியா. குழந்தையின் முகத்தில் ஆசிட் ஊற்ற முடியுமா என்ற கேள்விக்கும் முடியும் என்கிறாள். ஆனால், நீங்கள் இருவரும் பிரிந்து ஒருவரை ஒருவர் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு மட்டும் அது மட்டும் தன்னால் முடியாது என்று அவள் சொல்லும்போது அவளுடைய காதலின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. முடிவில், இருவரும் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொள்ளும்போது, அவர்களது காதல் இறந்து போகிறது. அவர்களும் நடைபிணமாகிறார்கள்.

ஓப்ரியன்

இந்த நாவலின் மர்மம் மிகுந்த கதாபாத்திரமாக விளங்குபவன் ஓப்ரியன். தன்னைக் காப்பாற்ற வந்த தேவதை என்று வின்சென்ட் இவனை மிகவும் நம்புகிறான். ஆனால், ஓப்ரியன் தேவதை வேஷமிட்டு வந்த சாத்தான் போன்றவன். “இருளில்லாத இடத்தில் நாம் சந்திப்போம்” என்ற வரிக்கு வின்சென்ட் அவனுக்கு வசதியான அர்த்தத்தை எடுத்துக்கொள்கிறான். ஆனால், ஓப்ரியனோ வதை முகாமில் இருக்கும் ஒளிமிகுந்த அறைதான் அது என்று முடிவில் வின்சென்ட்டுக்கு உணர்த்திவிடுகிறான். ஒப்ரியன் போன்றவர்கள்தான் கட்சியின் ஆயுதங்கள். ஒரு சிந்தனைக் குற்றவாளியை மனோதத்துவ ரீதியில் நம்பவைத்து ஏமாற்றி, ஆக உச்சமான சிந்தனைக் குற்றத்தைச் செய்ய வைத்து, முடிவில் பொறி வைத்துப் பிடிக்கிறான். அதன் பின்னர் அவர்களை 101 ஆம் அறையில் அடைத்து அவர்கள் மீதான முழுவெற்றியை உறுதிசெய்கிறான். ஓப்ரியன் மிகச்சிறந்த உளவாளியாக இருக்கும் அதே சமயத்தில், மிகப் பயங்கரமான கொடுமைக்காரனாகவும் இருக்கிறான். உடல் ரீதியாக அணுவணுவாக வின்சென்ட்டைச் சித்ரவதை செய்கிறான். ஆனாலும் அவனுக்குத் திருப்தியில்லை. அவனது நோக்கம், தன்னுடைய இரையின் உடலை மட்டுமல்ல, இரையின் மனதையும் தனது முழுமுற்றான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே. அதனால்தான், வின்சென்ட்டை ஆகக் கடைசியாக, 101 ஆம் அறைக்கு அழைத்து வருகிறான். அங்கே தன் முகத்துக்கு எதிராக எலிகளைக் கண்ட மாத்திரத்தில், இக்கொடுமையை ஜூலியாவுக்குச் செய்யுங்கள் என்று கதறுகிறான் வின்சென்ட். இந்தப் புள்ளியில் வின்சென்ட் தன் காதலைக் காட்டிக்கொடுக்கிறான், இதே புள்ளியில், ஓப்ரியன் தன்னுடைய உளவியல் சித்ரவதைகளை நிறுத்திக்கொள்கிறான். 2+2 =5 என்பது பல்வேறு உடல் மற்றும் உளவியல் சித்ரவதைகளின் மூலமாக மீண்டுமொரு முறை நிறுவப்படுகிறது. விடுதலையான பின்னும் நாவலின் இறுதி அத்தியாயத்தில் வின்சென்ட் தனக்கு முன்னிருக்கும் மேஜையின் தூசுப் படலத்தில், தன்னையறியாமல் 2+2= 5 என்று எழுதுகிறான். அவன் இனி எப்போதும் பிக் பிரதரை நேசிப்பான். விடுதலையான பின்னரும் வின்சென்டும் ஜுலியாவும் சந்திக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கிடையே இருந்த அந்த உண்மைக் காதல் இப்போது இல்லை. அது 101 ஆம் அறையிலேயே கொல்லப்பட்டுவிட்டது.

ப்ரோல்ஸ்

ப்ரோல்ஸ் எனப்படும் கல்வியறிவற்ற, நாகரிகமற்ற அடித்தட்டு மக்களைக் குறித்தும் இந்த நாவலில் பேசப்படுகிறது. ஓஷியேனியாவின் சமூகப் படிநிலையில் கடைசிப் படியில் இருப்பவர்கள் இவர்கள். இவர்கள் மனிதர்களே இல்லை. இவர்கள் மிருகங்கள். இவர்களைக் கண்காணிக்கவும் அவசியமில்லை என்று கட்சி கருதுகிறது. இவர்களது வீடுகளில் டெலிஸ்கீரின் இல்லை. இவர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை என்றாலும், இவர்கள் இப்படியே இருப்பதுதான் தனக்கு வசதி என்ற தெளிவு கட்சிக்கு இருக்கிறது. இவர்களால் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதால் இவர்களைக் கட்சி ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. அதை உறுதிப்படுத்துவது போலவே இவர்களது நடவடிக்கைகளும் இருக்கின்றன. வின்சென்ட் ஒரு முதியவரைப் பார்த்து போருக்கு முந்தைய லண்டன் எப்படி இருந்தது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும்போது அவை எவற்றுக்கும் அந்தப் பெரியவரிடம் விடை இல்லை. மாறாக, அவர் தனக்கு வழங்கப்பட்ட மதுபானத்தின் சுவையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். ப்ரோல்கள்தாம் பெருவாரியானவர்கள். ஆனால், அவர்களின் வரலாற்றுப் பிரக்ஞையே முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கைப் பாடுகளில் மூழ்கி, அதற்கு வெளியே உள்ளவற்றைக் குறித்த பிரக்ஞையற்றிருக்கிறார்கள். ஆனாலும், வின்செண்ட்டுக்கு அவர்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. புரட்சி என்று ஒன்று ஏற்பட்டால், அது ப்ரோல்களால்தான் ஏற்படும் என்று எண்ணுகிறான். ப்ரோல்களின் உலகம் என்பது சற்று தெளிவற்றுத்தான் இருக்கிறது. ஆர்வெல் இந்தப் பகுதியை இன்னும் சற்று விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சில குறியீடுகள்

இந்த நாவலில் இடம்பெறும் சில குறியீடுகளையும் குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த ஓஷியேனியாவும் ஒரு அவலக் குறியீடுதான். இந்த நாவலில் வின்சென்ட் தனக்குப் பிடித்தமான ஒரு கண்ணாடிக் குண்டை (Paper weight) வாங்குகிறான். அது தன்னை வளமானதொரு கடந்த காலத்துடன் இணைப்பதாக நம்புகிறான். அதைப் பார்க்கும்போதெல்லாம், அவனுக்கு ஒரு மெல்லிய ஆசுவாசம் ஏற்படுகிறது. அதே போல, புனித க்ளமெண்ட் தேவாலயத்தின் சித்திரமும் அவனுக்கு கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால், அந்தச் சித்திரத்திற்குப் பின்னால், அவனைக் கண்காணிக்கும் டெலிஸ்கிரீன் இருப்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் பிடிபட்டவுடன், உடைக்கப்படும் முதல் பொருள் அவனது விருப்பத்திற்குரிய கண்ணாடி குண்டுதான். வரலாற்று உண்மைகளைச் செரிக்கும் ஞாபக வாய் மற்றொரு குறியீடு. வின்சென்டின் காலில் உள்ள சிரங்கு மற்றொரு அவலக் குறியீடு. வின்சென்ட்டும் ஜுலியாவும் அடிக்கடி ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அதன் இறுதிவரியான, “I sold you and you sold me, Here comes a chopper to chop off your head,” அவர்கள் இருவருக்கும் பின்னாளில் ஏற்படவிருக்கும் கொடூரமான முடிவை முன்னுணர்த்தும் குறியீட்டு வரி. வின்சென்ட்டின் அச்சத்தின் குறியீடாக வரும் எலிகளையும் குறிப்பிடவேண்டும். காதலையே கொல்லும் எலிகள் இந்த நாவலில்தான் தென்படுகின்றன. இவை யாவற்றையும் விடவும் முக்கியமான குறியீடு என்பது டைரிதான். அந்த டைரிதான் அனைத்துக்குமான தொடக்கம். வரலாற்றில் எங்கெல்லாம் கொடுமைகள் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இப்படியொரு டைரி இருக்கும்போலும். அது டைரி என்ற வடிவில் மட்டுமல்ல, அது ஒரு நாவலாகவும் இருக்கலாம். 1984 நாவலே எதிர்காலத்தை நோக்கி எழுதப்பட்ட ஒரு டைரிதான் என்றும் தோன்றுகிறது.

நாவலின் மொழியமைப்பு

நாவல் மூன்று பாகங்களாக விரிந்திருந்தாலும், வாசிப்பதற்கு சவாலானது அதன் முதல் பாகம்தான். ஏனெனில் ஓஷியேனியாவின் வறண்டு போன தெருக்கள், உயிர் துடிப்பற்ற மனிதர்கள், சுவாரஸ்யமற்ற வாழ்க்கை, இவற்றையெல்லாம் விரிவாகச் சொல்லும்போது நாவலாசிரியரின் மொழியும் வறண்டு போய் சுவாரஸ்யமற்று இருக்கிறது. இது ஆசிரியர் பிரக்ஞைபூர்வமாகக் கடைப்பிடித்த உத்தி என்றே தோன்றுகிறது. (இதே ஆசிரியர் எழுதிய “விலங்குப் பண்ணை” நூலின் மொழி சுவாரஸ்யமாக இருப்பதை நினைவுகூரலாம். அந்தப் படைப்பு கோரிய மொழிநடையை அதற்கு அளித்திருக்கிறார்.) மேலும், ஓஷியேனியாவின் சமூக அமைப்பு, மக்களின் அன்றாடச் செயல்பாடுகளும், நாவலின் முக்கியமான கதாபாத்திரங்களும் ஒவ்வொருவராக அறிமுகம் ஆகிறபோது, கதை நகராமல் நிற்பது போல் தோன்றுகிறது. ஆனால், அடுத்தடுத்த பாகங்களில் இந்த ஆயாசம் தோன்றவில்லை. ஏனெனில், நாவலின் களத்தையும் கதாபாத்திரங்களையும் விரிவாக முதல் பாகத்தில் அறிமுகம் செய்தபிறகு, அவர்களின் செயல்பாடுகள் வளர்ச்சியடைகையில், கதையும் மெல்ல வேகமெடுக்கிறது. குறிப்பாக, மூன்றாம் பாகம் மிக வேகமாக நகர்கிறது.

க.நா.சுவின் தமிழ் மொழிபெயர்ப்பும் அதே உணர்வையே தருகிறது. ஆனால், க.நா.சு மூலத்திலுள்ள சில முக்கியமான வரிகளையெல்லாம் நீக்கிவிட்டார். “Here comes a chopper to chop off your head” போன்ற முக்கியமான குறியீட்டு வரிகளை அவர் மொழிபெயர்க்கவில்லை. பிக் பிரதர் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தியிருக்கலாம். முத்தண்ணா என்ற சொல் பொருந்தி வரவில்லை. இக்குறைகளைத் தாண்டி, பிற பகுதிகள் யாவும் ஆங்கில மூலத்திற்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது. மேலும், இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தியதே பெரும் சாதனை. அதற்கே அவருக்குத் தமிழ் வாசகர்கள் நன்றி செலுத்த வேண்டும்.


திரைகடலுக்கு அப்பால் தொடர்: பிற கட்டுரைகள்

இதழ் 16 பிற படைப்புகள்

கணேஷ் பாபு

2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு, தனக்கே உரிய பாணியில், மொழியின் பல்வேறு அடுக்குகளுக்குள் புகுந்து பார்க்க எத்தனிக்கும் புதுப் படைப்பாளி. பின்மதியங்களில் தூங்கி வழியும் தெருவினில் விளையாடும் சிறுவர்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகளின் வழியே இளவெயிலை வீட்டுக்குள் பாய்ச்சுவது போல, மொழியின் வெளிச்சத்தால் வாழ்வை ஆராய்வதே தன்னுடைய கதைகளின் நோக்கம் என்று நம்புகிறார். வாழ்வின் பல்வேறு சாத்தியங்களை மொழியின் பல்வேறு சாத்தியங்களால் அள்ளி எடுப்பதே எழுதுபவனின் சவால் என்று சொல்லும் இவர், தன்னுடைய எழுத்து வழிகாட்டிகளாக எஸ்.ராமகிருஷ்ணனையும், ஜெயமோகனையும் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனால் சிறந்த சிறுகதைகளாக சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்குகளில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்றன. இவரது கதைகள் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ், தமிழ்முரசு போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

Share
Published by
கணேஷ் பாபு

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

அகம் அல்காரிதம்

"சில துறவிகள் புரிகின்ற 'உயிர் நீத்தல்' சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு."

2 years ago