விண்மீன் மண்டலத்தின் பாதுகாவல் மிகு பிரதான சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க என்னால் முடிந்ததென்றால் அதற்குக் காரணம், பல வருட உழைப்பும், திட்டமிடலும்தான் என்றால் மறுத்துப் பேச, நீங்கள் என்ன என்னைப் போல் சிறையிலிருந்து தப்பித்த கைதியா?
விண்மீன் மண்டலத்தில், சில திரைமறைவுக் குழுக்கள் இயங்குகின்றன. பொருள் தந்துவிட்டால், இட்ட பணிகளை, அரசாங்கங்களின் மூக்கின் கீழ், வியக்க வைக்கும் துல்லியத்துடன் செய்துமுடிப்பார்கள். பின் பிரபஞ்சத்தின் மூலைகளில் திசைக்கொன்றாய்க் காணாமல் போய்விடுவார்கள். இதில் இவர்கள் காட்டும் நேர்த்தியும், நிலைத்தன்மையும், பேரார்வம் கூடிய நிதானமும் அளப்பறியது. மலைக்க வைக்கக் கூடியது. உத்வேகமளிக்கக்கூடியது. திட்டமிடலின் ஒரு பகுதியாக, அப்படி ஒரு குழுவைச் சிறைச்சாலையில் கிடைத்த நிழல் உலகத் தொடர்புகள் மூலம் பணி அமர்த்தியிருந்தேன். அதற்கு நான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பது குறித்து தனியாக ஒரு கதை எழுதலாம்.
அந்தக் குழு என்னை ஒரு மத்தியரக விண்கலம் மூலம் விண்மீன் கால்பாட்டின் கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு பாதுகாப்பாய்க் கொண்டு வந்துவிட்டிருந்தது. ‘கால்பாட்’ என்பது விண்மீன் ரோந்துக்குழுவின் பெயர். விண்கலனை செலுத்துதல், அதற்குத் தேவைப்படும் எரிபொருள், அணுக்கழிவு அகற்றம், பயண உரிமம் புதுப்பித்தல், விண்வெளியின் அந்தப் பகுதியில் உலவுவதற்கான அனுமதி என எல்லாமும் அந்தத் திரைமறைவுக் குழு பார்த்துக்கொண்டதில், எனக்கு அடுத்து என்ன செய்யவேண்டுமென்று யோசிக்கவும், செயல்படவும் நேரம் கிடைத்தது.
இந்தப் புள்ளியில் என் அடுத்த கட்டம் குறித்து ஒரு தீர்மானமான முடிவுக்கு நான் வரவேண்டும்; கொஞ்சம் பிசகினாலும் நான் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால், தப்பி வந்துவிட்டேனே ஒழிய அடுத்து எங்கு போக வேண்டும் என்பது தீர்மானமில்லாமல் இருந்தது; முடிவெடுப்பது சிரமமாக இருந்தது. இது போன்ற தருணங்களில் நான் என் பாட்டியின் பாடல்களைக் கேட்பது வழமை; அப்படிச் செய்கையிலெல்லாம் என் மனக்கிலேசங்கள் தீர்ந்து ஒரு நல்ல முடிவைக் கடந்த காலங்களில் எட்டிய அனுபவம் இருக்கிறது. என் பாட்டியின் பாடல்களைக் கேட்க முதலில் எனக்கு இணைய வசதி இருக்க வேண்டும்; பயண வழித்தடத்தில் அதற்கான வசதி இருக்கிறதா என்று சோதித்ததில் கடைசியாகப் பல்சார் ஒன்று இரண்டு மணி நேரங்களுக்கு முன்புதான் கடந்திருந்ததாகத் தெரிய வந்தது. உற்சாகமாக என் பாட்டியின் பாடல்களை இணையத்தில் தேடினேன்; ஒரு பழங்கால இசைக் கலைஞர் பாடிய பாடலைப் பாடும் என் பாட்டியின் காணொலி கிடைத்தது.
“வக்ரதுண்ட மஹாகாய சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா சர்வ கார்யஷு சர்வதா!”
இந்தப் பாடல் என் பாட்டிக்குப் பிடித்தமானது.
எப்படி நான் என் அம்மாவுக்கு ஒரே பிள்ளையோ அது போல என் அம்மாவும் என் பாட்டிக்கு ஒரே பிள்ளை. என் அம்மா மற்றும் நான் ஆகிய இருவரில் என் பாட்டிக்கு எல்லா விதத்திலும் அது நடத்தையாக இருக்கட்டும், உடல் வலுவாக இருக்கட்டும், குரலாக இருக்கட்டும், குணமாக இருக்கட்டும் மிக நெருக்கமாக இருப்பது நான்தான் என்று என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன். என் தாய்க்கு இசையில் எவ்வித நாட்டமும் இல்லை. மேலும் அவள் படிப்பில் ஆர்வமில்லாதவளாகவும் இருந்திருந்தாள். இதன் கூட்டு பலனாக அவளுக்கென்று ஒரு சமூகப் புழக்கமும், நட்பு வட்டமும் இருக்கவில்லை.
என் தாத்தா என் பாட்டியை ஏமாற்றித் திருமணம் செய்து ஒரு குழந்தையைத் தந்துவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக என் தாயார் என்னிடம் அவ்வப்போது சொல்லியிருக்கிறார். பிரிவுத்துயரிலிருந்தும், துக்கத்திலிருந்தும் என் பாட்டி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே அவள் இசையை நாடியதாக என் அம்மா மூலமாக நான் தெரிந்துகொண்டிருந்தேன். நான் பிறந்த சில வருடங்களிலேயே என் தந்தை விபத்தொன்றில் இறந்துவிட்டதால் என் தாயுமே தனிமையில்தான் என்னை வளர்ந்திருந்தார்.
என் பாட்டியுடனான என் ஒற்றுமைகள் குறித்து நான் என் தாய் மூலம் தெரிந்துகொண்டுவிட்டபிறகு நான் என் பாட்டியுடனே இருக்க விரும்பினேன். ஆனால், அவளோ நான் பிறப்பதற்கு முன்பே இறந்திருந்தாள். நான் சிறை சென்றுவிட்ட பிறகு என் தாயும் மரணித்திருந்தாள். சிறையில்கூட என் தாயை நினைவு கூர்ந்ததைவிட என் பாட்டியையே நான் அதிகம் நினைவு கூர்ந்திருக்கிறேன். என்னை நான் எனது பாட்டியின் ஆண் உருவம் என்றே அனுமானித்திருந்தேன். நான் எப்போதெல்லாம் என் தாயின் பாடல்களைக் கேட்டேனோ, அப்போதெல்லாம், என் தாயின் குரலைக் கேட்க விழைகிறேனா அல்லது அந்தக் குரல் வழி என் பாட்டியின் பாடலை, அதில் உள்ள சிந்தனையை, சொற்தொகுப்பை ரசிக்க விழைகிறேனா என்பது தீர்மானமில்லாமல் இருந்தது. நீங்கள் கண்களால் பார்த்தே இராத, ஒருவர் மீது நீங்கள் இத்தனை ஈர்ப்பு கொள்ள முடியுமா? அது சாத்தியமா? ஆனால், என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அப்பாடல்களில் இருப்பது என் தாய் மட்டும்தான் எனில் அந்தப் பாடல்களை நான் கேட்க விரும்பியிருக்கமாட்டேன் என்பது. இதற்கு என்ன பொருள்? இது சொல்ல வருவது என்ன?
“நான் உன்னிடம் இதைச் சொல்லவே இல்லையே. இது நிச்சயம் உன் பாட்டியாகத்தான் இருக்க முடியும்,” என்று என் அம்மா அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன். இதன் பொருள் என்ன?
இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் நானே எனது பாட்டியின் ஆகச்சிறந்த மரபணு வெளிப்பாடாக இருக்க முடியும் என்றே எனக்கு எப்போதும் தோன்றும். இப்போது யோசித்துப் பார்த்தால், என் தாய் எனக்குக் கற்றுத்தந்தவைகள் அனைத்தும் நான் என் பாட்டியையே அதிகம் ஒத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கற்றுத்தந்தவைகளாக இருக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால், தனக்குச் சிறிதும் ஆர்வமில்லாத இசை குறித்து என் தாய் எனக்கு ஏன் கற்றுத்தர வேண்டும்? இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் என் தாய், தன் பாட்டிக்கும் எனக்கும் இடையில் ஒரு மரபணுப் பாலமாக இருப்பதாகவும், இவ்வுலகை விட்டுப் போய்விட்டதாக நம்பப்படும் ஒன்று என் மரபணுவில் இன்னமும் உறைந்திருந்து என் வாழ்க்கைக்கு நானே கற்பிக்க நினைத்திடாத அர்த்தங்களைக் கற்பிப்பதாகவும் எனக்கு எப்போதும் தோன்றும்.
என்னிடமிருந்து வெளிப்படும் நல்லவைகள் எல்லாமும் அந்த சக்தியின் வெளிப்பாடு என்றே நான் கருதினேன். நான் எவ்வித நல்லதும் செய்யாத போதிலும், என்னை நானே விரும்பிடக் காரணமாக இருப்பது அந்த சக்திதான் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் இருந்தது. என் பாட்டியில் மீள் பிறப்பு என்றே நான் என் பிறப்பு குறித்து எப்போதும் கனித்திருந்தேன். இப்படிப் பல விலைமதிப்புமிக்கவைகளை என்னிடம் விட்டுச்சென்றிருப்பதாலேயே நான் என் பாட்டியை மிகவும் விரும்பினேன். அவளை எத்தனை விரும்பினேனோ அத்தனைக்கு அவளிடம் சரணாகதி அடைய விரும்பினேன். அதைச் சாத்தியப்படுத்த நான் பல முயல்வுகளை மேற்கொண்டேன்: மந்திரவாதிகளை வைத்து ஆன்மாக்களுடன் தொடர்புகொள்வது நாடகீயமாக இருந்தது; சிமுலேஷன்கள் வழி அனுபவங்கள் தகவல்கள் அதிகம் இல்லாததால், திருப்தியற்றவைகளாக இருந்தன; எந்திர மனித உணர்வாளர்கள் என் பாட்டியின் விலைமதிப்பற்ற தன்மைகளை வெளிப்படுத்த முயன்று தோற்றனர்.
நான் இன்னுமொரு காணொலியை உயிரூட்டினேன்.
“உனக்கு நான்கு வயதிருக்கையில், உன் தந்தையிடம் நான் இரண்டாவது குழந்தைக்கு வலியுறுத்த முயன்றேன்” என்றாள் அம்மா.
“அவர் சம்மதிக்கவில்லையா?” என்றேன் நான்.
“இல்லை. நான் வலியுறுத்தவே இல்லை.”
“ஏன்?”
“உன்னால்தான்.”
“என்ன?”
“ஆம். உன் பாட்டியின் தன்மைகளால் நீ அந்த இளம் வயதிலேயே உன் வயதொத்தவர்களை விடவும் பன்மடங்கு சிறப்பாக, வீர்யத்துடன் இருந்தாய். உன் தன்மைகள், இயக்கங்கள் மற்றவர்களுக்கு எட்ட முடியாத இலக்குகளை வகுத்துவிடலாம். சகோதரர்களுக்குள் எட்ட முடியாத இலக்குகள் பற்பல பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களில் ஒருவர் மிகவும் வீர்யமானவராகவும், ஏனையவர்கள் அந்த உச்சத்தை எட்டிப்பிடிக்க முடியாதவர்களாகவும் நேர்வது மிகப்பட சகோதர துவேஷங்களை உருவாக்க வல்லது. உன்னால் அவர்களின் சுயமதிப்பு குலையலாம், தாழ்வுமனப்பான்மை மிகுக்கலாம். அது ஒரு மெல்லக் கொல்லும் விஷம்.”
“இல்லை. அப்படி ஏன் யோசிக்க வேண்டும்? அவ்விதம் நேர்ந்தால், சகோதரர்கள் அதனைச் சாதகமாக, முன்னுதாரணமாகக் கொண்டு பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பயனுள்ளவாறு தகவமையலாம் அல்லவா? தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம் அல்லவா?”
என் தாய் நீண்டதொரு பெருமூச்சைப் பிரசவித்தாள்.
“அது, அதீத நம்பிக்கை என்று உனக்குத் தோன்றவில்லையா? வாழ்க்கை, அவ்விதம் ஒரு வாய்ப்பாட்டைப் போல அமையாது? எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுதிதான் வாழ்க்கை என்பது. நாம் எதிர்பார்ப்பது போலவே வாழ்க்கை அமையும் என்று நாம் எப்போதும் சொல்வதற்கில்லை. நான் நிறைய குழந்தைகள் பெற்று வளர்க்க விரும்பினேன். ஆனாலும்…” என்ற என் தாய் விசும்பினாள்.
நான் சற்று நேரம் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன். பின், “மன்னியுங்கள். என் பிறக்காத சகோதரர்களை நானே கொன்றுவிட்டேன்” என்றேன் நான் காணொலியில்.
காணொலியின் அந்தப் பகுதியை நான் மீண்டும் மீண்டும் ஓடச்செய்தேன். அந்த வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். துக்கம் தாளாமல் அழுதேன். பின் அதில் சலிப்புற்று காணொலியை மீண்டும் ஓடச்செய்தேன்.
“சிலருக்கு எல்லாமும் அதிகமாக இருக்கும்: மூளை வளர்ச்சி, சிந்தனை, கைகள், கால்கள். இவற்றைக் கொண்டு அவர்கள் எப்படி அதிகக் காரியங்களைச் சாத்தியப்படுத்துகிறார்களோ அதே போலத் தங்களைச் சுற்றி அதிக இடத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். உன் பாட்டி அப்படிப்பட்டவர், நீயும் உன் பாட்டியைப் போலவே,” என்றாள் என் தாய்.
அந்த இடத்தில் நான் காணொலியை நிறுத்தினேன்.
“வக்ரதுண்ட மஹாகாய சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா சர்வ கார்யஷு சர்வதா!”
என் இதழ்கள் என் மரபணுவில் உறைந்திருந்த என் பாட்டியின் அப்பாடலைத் தன்னிசையாக முனுமுனுத்தன.
நான் ஏன் சிறை செல்ல நேர்ந்தது என்பதை யாரேனும் கேட்க நேர்ந்தால் சிரிப்பார்கள். நான் செய்த குற்றம்: ஒரு மின்கலம் வாங்கித்தந்தது. அந்த மின்கலத்தை வாங்கியவர் பின்னாளில் ஒரு அரசியல்வாதியைக் குண்டு வைத்துக் கொல்ல அந்த மின்கலத்தைப் பயன்படுத்திக்கொள்வார் என்று எனக்கெப்படித் தெரியும்? ஆனால், நான் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டேன். அசல் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், ஏமாளியைக் குற்றவாளி என்று நிறுத்திவிடலாம். இதுதான் அரசியல் போக்காக இருக்கிறது. இப்படி ஒரு நியாயமற்ற அரசியல் அந்த அரசியல்வாதிக்கு வேறு எதைச் செய்துவிடும்? அந்த வகையில், அந்த மரணம் அந்த அரசியல்வாதிக்குப் பொறுத்தமானதாக இருக்கலாம். ஆனால், என்னை இந்தச் சிறைவாசத்திற்கு பொறுத்தமாக்கியது எது?
நான் மீண்டும் என் பாட்டியின் ஏனைய கோப்புக்களைத் தேடியபோது ஒரு காணொலியில், ஒரு பெட்டியில் சில அறிவியல் புனைவிதழ்கள் தெரிந்தது கண்டு நான் துணுக்குற்றேன். அவைகளுக்கும், அவளுக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்துகொள்ள ஒரு பெருவிருப்பம் என்னை ஆட்கொண்டது..
அந்தப் புனைவிதழ்கள் இன்னும் வெளியாகிக்கொண்டிருக்கவேண்டுமே என்றெண்ணியபடியே இணையத்தில் தேடினேன். அதிர்ஷ்டவசமாக, அந்த இதழ் இன்னமும் வெளியாகிக்கொண்டிருந்தது. அதன் காப்பகம் சென்று அந்தக் குறிப்பிட்ட இதழைத் தெரிவு செய்தேன். அதில் இரண்டு எதிர்கால தொழில் நுட்பங்கள் சார்ந்த கட்டுரைகள் என் கவனத்தை ஈர்த்தன. முதலாவது, ஒரு பாறை குறித்த குறிப்பு. அந்தக் குறிப்பில், ஒரு வேற்றுகிரகப் பாறை, உயிர்களை அந்தந்தக் கிரகங்களில் தன்மைகளுக்கேற்ப மாற்றும் என்று குறிப்பிட்டிருந்தது. அந்தப் பொருளின் மாய விளைவுகளின் நிமித்தம், அந்தப் பொருள் முதலில் கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வரவே அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது கட்டுரை என் வயிற்றையே பிசைவதாய் அமைந்தது. அது, மரபணு வழியாக உயிர்த்தெழுதல் குறித்து விளக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அவற்றை முழுமையாக வாசித்தேன். கிரகித்தேன். லயித்தேன்.
ஆனால், இப்போது இதற்கெல்லாம் நேரமில்லை. நான் அடுத்தகட்டம் செல்ல வேண்டும். முதற்கண் என்னையே நான் காபந்து செய்துகொள்ள வேண்டும்.
சிறைக்கைதிகளுடனான நட்பில் நான் சில ரகசியங்களை உள்வாங்கியிருந்தேன். அதில் ஒன்று, குறியாக்கம் செய்யப்பட்ட தகவல்களைப் பரப்ப நியூட்ரினோ புயல்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல். அது, எங்களைப் போன்ற, சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் குழுக்களின் வசதிக்கெனவும், அவர்களுக்கிடையிலான தகவல் தொடர்பிற்கெனவும் உருவாக்கப்பட்ட ஒரு வலைபின்னல். ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணைத் திறவுகோலாகப் பயன்படுத்தினால் அந்தத் தகவல்களைத் தரவிறக்கம் செய்யலாம்.
அப்படிச் சில, பயன்பாட்டிலிருந்த அதிர்வெண்கள் குறித்துச் சிறையிலிருந்த கால கட்டத்தில் நிழல் உலகத் தொடர்புகள் மூலம் நான் முன்பே அறிந்திருந்தேன். அதிர்வெண்கள் வாய்மொழிச்செய்தியாகவே பகிரப்படும் ஒன்று. அவ்வப்போது மாறிக்கொண்டேயும் இருக்கும். தொடர்ந்து நிழல் உலகுடன் தொடர்பில் இருப்பவர்க்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவ்வதிர்வெண்களை வைத்து, நியூட்ரினோ புயல்களை இடைமறிக்க, ஒரு குறிப்பேடு கிட்டியது. அதைத் தரவிறக்கம் செய்தேன்.
அந்தக் குறிப்பேட்டில், இருள் உலகில் சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் சேவைகள் குறித்து வெளியாகியிருந்தது. அந்தப் பத்திரிக்கையைப் புரட்டியதில் எனக்குத் தோதாக ஒரு சேவை பற்றிய தகவல் கிட்டியது.
“நீ எந்த உலகின் ஜீவராசியாகவும் இருக்கலாம். இது ஒரு விண்வெளிக்கல். இதன் மூலம், ஒரு மீத்தேன் உலகில் நீ தரையிறங்க நேர்ந்தால், நீயும் மீத்தேன் அடிப்படையிலான உயிராகிவிடுவாய். ஒரு சிலிக்கான் உலகில் நீ தரையிறங்க நேர்ந்தால், நீயும் சிலிக்கான் அடிப்படையிலான உயிராகிவிடுவாய். நீ ஒரு கார்பன் உலகில் தரையிறங்க நேர்ந்தால், நீயும் ஒரு கார்பன் அடிப்படையிலான உயிராகிவிடுவாய். இந்த விண்வெளிக்கல் ஒரு தழுவுக் கருவி. உன்னை, உலகங்களுக்கிடையில் தாவும் உயிராக்கிவிடும்.”
இதுதான் சேவை குறித்து அளிக்கப்பட்டிருந்த சிறுகுறிப்பு.
என் போன்ற சிறையிலிருந்து தப்பித்த கைதிக்கு உயிர்கள் வாழும் கிரகங்களுக்குப் புலம்பெயர அதிக வாய்ப்பில்லை. வாய்ப்புகள் சுருங்குவது அந்தந்தக் கிரகங்களில் உயிர்கள் அமையப்பெறும் அடிப்படையில்தான். ஒரு முழு மனிதனாக, ஒரு மீத்தேன் கிரகத்தில் உலவ எனக்குப் பிராணவாயுவும், புறக்கவச உடைகளும் வேண்டும். கிரகத்தின் அழுத்தம், தின்மை, உணவு, கதிர்வீச்சு ஆகியவைகளை எதிர்கொள்வது அடுத்தடுத்த சவால்கள். ஒரு தழுவுக் கருவி என்னை, நான் சென்று சேரும் கிரகத்தின் அடிப்படையிலான உயிராக மாற்றிவிட்டால், நான் எந்தக் கிரகத்திலும் பிழைக்கலாம். அதற்கு எனக்குப் பிராணவாயுவோ, உணவோ, இருப்பிடமோ, புறக்கவச உடைகளோ தேவைப்படாது. இவ்விதமாகத் தொலைந்த என்னைத் தேடி அடைவது, விண்மீன் மண்டலக் காவல்துறைக்கு அதிக சிரமம் தரக்கூடிய, செலவு வைக்கக்கூடிய ஒரு காரியமாகிவிடும். ஆதலால், தீர்க்க முடியாத வழக்குகளின் பட்டியலில் என் தேடுதல் வேட்டையைத் திணித்துவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
நான் தேடுவது விடுதலையை. அறுதி விடுதலையை. அதற்கு இந்தச் சேவைக் கச்சிதமாய்ப் பொறுந்தும் ஒன்று என்று தெளிந்தேன். அதைத் தெரிவு செய்தேன். உடனே என் கண் முன்னே திரையில் வாசகமொன்று தோன்றியது.
“இந்தப் பொருளை விற்பவர் இதனை ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டுமே விற்கத் திட்டமிட்டுள்ளார். நீங்கள் அந்த வட்டத்துக்குள் வருபவரா என்பதைப் பார்க்க அவர் சில கேள்விகள் வைத்துள்ளார். கேள்விக்கு நீங்கள் தயாரா?” என்றது வாசகம்.
‘தயார்’ என்ற பொத்தானை அழுத்தினேன்.
“உங்களுக்குப் பிடித்த பாடலொன்றை அட்சர சுத்தமாகப் பாடுங்கள்,” என்றது கணிணி வாசகம்.
நான் கண்களை மூடி மரபணுவில் உறைந்திருந்த பாடலை உச்சரித்தேன்.
“வக்ரதுண்ட மஹாகாய சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா சர்வ கார்யஷு சர்வதா!”
“உங்கள் பதில் ஏற்கப்பட்டது” என்ற வாசகத்துடன், அந்தப் பொருள் கிடைக்குமிடும் என்ற இடத்தில், ஒரு கிரகத்தை மேல் வட்டமாகச் (epicycles) சுற்றி வரும் ஒரு கைவிடப்பட்ட விண்வெளி நிலையத்தின் பிரபஞ்ச முகவரி தரப்பட்டிருந்தது. என்னை அங்கே அழைத்துச் செல்லுமாறு என் விண்வெளிக்கப்பலை இயக்குபவர்களிடம் கட்டளையிட்டேன்.
நாங்கள் அந்த விண்வெளி நிலையத்தைச் சென்று சேர்ந்தபோது அங்கே ஒரு வயதானவள் இருந்தாள். அந்த விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையின் சாய்மானத்தை வைத்துக் கணக்கிடுகையில், இன்னும் சில மாதங்களிலோ அல்லது ஓரிரு வருடங்களிலோ அந்த விண்வெளி நிலையம், தான் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகத்தின் மீது மோதி அழிந்துவிடும் என்று தோன்றியது. அக்காரணத்திற்காகவே அந்த விண்வெளி நிலையம் கைவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக வேலை செய்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் இது போன்ற நிலையங்கள், அவற்றில் காணப்படும் தற்காலிகத்தன்மை, அதிலிருக்கும் ஆபத்து எல்லாமும் தொகுப்பாக ஒரு கச்சிதமான புகலிடம். நான் அக்கிழவியை அணுகினேன்.
“விண்மீன் மண்டலத்தின் பெருங்குற்றவாளிகளும், கொள்ளைக்காரர்களும், தொடர்க் கொலைகாரர்களும்கூடச் சுதந்திரமாக வெளியே உலவிக்கொண்டிருக்கையில், நான் மட்டும் ஏன் சிறையில் வாட வேண்டும்? இந்தப் பிரபஞ்சத்தில், தன் தவறுணர்ந்து வருத்தப்பட்டு, மனம் திருந்தி, இனி எக்குற்றத்திலும் ஈடுபடக்கூடாதென மனதளவில் அசலான உறுதி பூண்ட பழங்குற்றவாளிகள் இல்லவே இல்லையா? இனி எவருக்கும் எவ்விதக் கேடும் விளைவிக்க முடியாத ஒருவன் ஏன் சிறையில் சாக வேண்டும்? சிறை செல்ல நேராதவர்கள் எல்லாம் நிரபராதிகளா? இல்லையே? ஆக, திருந்தியவன் வாழ அனுமதித்தால்தானே அவன் மீண்டும் தவறு செய்யாமல் இருப்பதைக் காண வாய்ப்பு கிடைக்கும்? நான் தப்பித்தவன். என்னைக் கால்பாட் தேடுகிறது. நான் அவர்களிடம் மீண்டும் சிக்க விரும்பவில்லை. அவர்களிடம் நான் பிடிபட்டுவிடவே கூடாது. அவர்களே நினைத்தாலும் என்னைப் பிடித்துவிடாதபடிக்கு நான் இப்பிரபஞ்சத்தின் விஸ்தீரணத்தில் தொலைய வேண்டும். அவர்களுக்கு என்னைத் தேடிக் கண்டடைவது சிரமமாக இருக்க வேண்டும், அந்த முயற்சியே மிக அதிக செலவைக் கோருவதாக அமையவேண்டும். அப்போதுதான் என்னை மீண்டும் சிறையிலடைப்பது குறித்து அவர்கள் கனவுகூடக் காண மாட்டார்கள்,” என்றேன்.
“நான் உன் உளக்குறிப்பை அறிகிறேன். ஆம். நீ சொல்வது சரிதான். குற்றம் நடக்க எத்தனை காலமானாலும், அதிலிருந்து மீள, தவறுணர, மனம் திருந்த, செய்த தவறுக்கு வருத்தம் கொள்ள மிக மிகக் குறுகிய காலமே தேவைப்படுகிறது. அதன் பிறகும் தொடரும் அந்தச் சிறைவாசம் எதற்காகிறது? நீ சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். இந்தக் கல் உன்னிடம் இருந்தால், நீ எந்தக் கிரகம் அடைகிறாயோ, அந்தக் கிரகத்தின் இந்திரியத்தின் அடிப்படையிலமைந்த உயிராகிவிடுவாய். இதனால், மிகப்பெரும் பொருட்செலவு தேவைப்படும் பிராணவாயு, உணவு, உடைகள், உறைவிடம், புறக்கவச உடைகள் என எதுவும் உனக்குத் தேவைப்படாது. இந்த அபூர்வக்கல், பிரபஞ்சக் கொள்ளைக்காரர்கள் மூலம் பெறப்படும் மந்திரக்கல். அதனால் இதன் விலை 10000 வரவுகள்,” என்றாள் கிழவி.
நான் பத்தாயிரம் வரவுகளுக்குச் சமமான ஹவாலா பரிமாற்றக் கடவுச்சொல்லை அவளிடம் பகிர்ந்தேன். அவளிடமிருந்து அந்தக் கல்லைப் பெற்றுக்கொண்டேன்.
“இந்தக் கல்லை ஒருவருக்கு விற்கையிலெல்லாம் இதைச் சொல்ல விரும்புகிறேன்” என்ற அந்தக் கிழவி, சற்று இடைவெளிவிட்டு, ஆழ மூச்சிழுத்து, கண்களை மூடி,
“ரோமாபுரியில் இருக்கையில்…..” என்றுவிட்டு அவள் நிறுத்த,
“ரோமனாக இரு,” என்று முடித்தேன் நான்.
“பலருக்குப் பயன்படக்கூடிய ஒன்றை மிகக் குறுகிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு விற்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? என் பாட்டி அந்தப் பாடலைப் பாடுவாள். அந்தப் பாடல் தெரியாத ஒருவர் இன்று உங்களைச் சந்தித்திருக்கவே முடியாது அல்லவா?” என்றேன் நான்.
“நீ சிறையை விட்டுத் தப்பித்ததாகவா எண்ணிக்கொண்டிருக்கிறாய்?” என்றாள் அவள்.
“மனிதர்கள் நகர்வதில்லை. அவர்கள் இழுக்கப்படுகிறார்கள். உன்னை எது இழுத்தது என்று தேடு. உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்,” என்றவள் உள்ளறைக்குள் நுழைந்து கண்களை விட்டகன்றாள்.
நான் யோசனையுடன் விண்வெளிக்கப்பல் வந்தடைந்தேன். அவளின் பதில் எனக்குக் குழப்பத்தைத் தந்தது. குழம்பி சஞ்சலத்திற்குள்ளாகிவிட்ட என் மனத்தைச் சாந்தப்படுத்த என் அம்மாவின் ஒரு சலனப்படத்தைக் கணிணியில் ஓடச்செய்தேன். அதில் அவள் தன் தாயிடமிருந்து பெற்ற பாடங்களை, தான் கற்காத பாடங்களைப் பாடமெடுத்துக்கொண்டிருந்தாள்.
“…72 ராகங்கள்; ஒவ்வொன்றும் 5 டிகிரி; ஆக மொத்தம் 360 டிகிரி. அதுதான் சோடியாக் என்பது. இசை என்பது வெறும் சப்தங்கள் அல்ல. அது, பிரபஞ்சத்தின் வரைபடம். சோடியாக் வரைபடம். இந்த வரைபடம் சப்தங்களால் ஆனது. இசையில் தொலைவதும், இவ்விசைக்கு நிகரான சோடியாக்கில் தொலைவதும் உனது பாட்டிக்கு ஒன்றுதான்.”
மற்றுமொரு சலனப்படத்தில் என் தாய், என் பாட்டி அவளுக்குச் சொல்லிக்கொடுத்ததைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“..உன் பாட்டி சொல்வாள்… உன் ஆழ்மனம் எப்போது விழிக்கிறதோ அப்போது அது தன் இலக்கைத் தேடிச் செல்லத்துவங்குகிறது….”
நான் சலனப்படங்களை நிறுத்தினேன். வாடகைக்கு அமர்த்தியிருந்த விண்வெளிக்கப்பலில் எனது நேரம் முடிந்திருந்தது. ஜன்னல் வழியே பிரபஞ்சவெளியைப் பார்த்தேன். அந்த இடம் பரிச்சயப்பட்ட இடம் போல் தோற்றமளித்தது. ஆம். அப்போது நான் இருந்த இடம் சோடியாக் வளையம்தான். எங்கெங்கோ சுற்றி இறுதியில் சோடியாக் வளையத்திற்கே வந்துவிட்டிருந்தேன்.
நான் முதலில் சென்றடைந்தது ஒரு மீத்தேன் கிரகத்திற்கு. அது ஒரு குள்ள கிரகம். ஒரு மஞ்சள் குள்ள சூரியனை அது சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்தக் கிரகம் அடைந்ததுமே அந்தக் கல் என்னை ஒரு மீத்தேன் உயிராக மாற்றியது. ஒரு மீத்தேன் உயிராக, பல ஆண்டுகள் நான் அந்த மீத்தேன் கிரகத்தின் மீத்தேன் கடலிலும், குட்டைகளிலும் நீந்திக்கிடந்தேன். ஒரு ஆறடி பாரிய குழாய்ப்புழுவைப்போல் அங்கே கிடைக்கும் மீத்தேன் மற்றும் சல்ஃபைடை உண்டு செரித்தேன். அந்தக் கிரகம் ஒரு விண்கல் மோதலால் துண்டு துண்டாக உடைந்து வெடித்துச் சிதறியபோது நான் சென்று சேர்ந்தது ஒரு சிலிக்கான் கிரகம். அங்கே ஒரு பாறையாகத் தசாப்தங்கள் நீள் உறக்கம் கொண்டேன். பிற்பாடு அந்தக் கிரகமும் ஒரு விண்கல் மோதலால் பல்லாயிரம் துண்டுகளாக வெடித்துச் சிதறியபோது நான் அடைந்த கிரகம் என்னவிதமான கிரகமென்று என்னால் கணிக்க முடியவில்லை.
பாறையாக இருந்தது. அந்த மந்திரக்கல் என்னை அக்கிரகத்தின் பாறையாக மெல்ல மெல்ல மாற்றத் துவங்கியிருந்தது. அந்தக் கிரகம் எத்தகையது என்று கணிக்க முற்பட்டேன். சூரிய அஸ்தமனம் ஆகியிருந்த அந்தக் கிரகத்தில் எதையும் உற்று நோக்குவது சற்று கடினமாக இருந்தது. அப்போது திடீரென ஒரு பாரிய சப்தத்துடன் ஒரு குண்டு எனக்கருகில் வெடித்தது. சுக்கு நூறாக உடைந்து கொண்டிருந்தபோதுதான் நான் வைத்திருந்த அந்த மந்திரக்கல்லுக்கும், அந்த கிரகத்தின் பாறைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்தேன். நான் வந்து சேர்ந்தது, அந்த மந்திரக்கல் வெட்டி எடுக்கப்பட்ட கிரகத்திற்குத்தான் என்பதைப் புரிந்துகொள்ள அது போதுமானதாக இருந்தது. ஆக, நானும் மந்திரக்கற்களின் தொகுதி ஆகி விட்டிருக்கிறேன். என் விதியை நினைத்துச் சிரிப்பதா, அழுவதா என்பது ஊர்ஜிதம் கொள்ள முடியாத வகைக்கு இருந்தது.
விண்கலன் ஒன்று மேலெழும்ப, அதனுடன் ஒட்டியிருந்த ஒரு கம்பி வலையில் நான் பல்லாயிரம் கற்களாகக் கிடந்தேன். என் பார்வையில், விண்வெளியில் ஒரு விண்வெளிக்கப்பல் அந்த விண்கலனைத் தன்னை நோக்கி இழுப்பது தெரிந்தது. அந்தக் கப்பலின் வயிற்றில் பிரபஞ்சக் கொள்ளைக்காரர்களின் குறியீடான மண்டை ஓடும், கறுப்புக் கொடியும் சித்திரமாக வரையப்பட்டிருந்தது. நான் பிரபஞ்சக் கொள்ளைக்காரர்களால், மந்திரக்கற்களாகச் சேகரிக்கப்பட்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த வாய்ப்பு புதியதாக இருந்தது. இந்தப் புதிய வாய்ப்பு என்னுள் புதிய எண்ணங்களைத் தோற்றுவித்தது.
என் தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து எனக்கு மனக்கிலேசம் அளித்தது: ‘உன் ஆழ்மனம் எப்போது விழிக்கிறதோ அப்போது அது தன் இலக்கைத் தேடிச் செல்லத்துவங்குகிறது’, ‘இசையில் தொலைவதும், இவ்விசைக்கு நிகரான சோடியாக்கில் தொலைவதும் உனது பாட்டிக்கு ஒன்றுதான்’.
என் பாட்டியை ஒருவன் ஏமாற்றிப் பிள்ளை தந்துவிட்டுப் பிரிந்தான். அந்தப் பிரிவுத் துயரிலிருந்து வெளிவர என் பாட்டி இசையைப் பற்றிக்கொண்டாள். அந்த இசை சோடியாக்கைக் குறிக்கும் இசையாக இருந்தது. ஏனெனில் அவளது பாடலில் ஓரிடத்தில் ‘சூர்ய’ என்ற வார்த்தை வருகிறது. அது சோடியாக்கைக் குறிப்பது. எவனோ ஒருவனால், நானும் ஏமாற்றப்பட்டே சிறை சென்றேன். சிறைக்கைதிகளுடனான பரிச்சயத்தில் எனக்கு ரகசிய அதிர்வெண் கிடைத்தது; அதிர்வெண் மூலம் மந்திரக்கல்..நான் இப்போது வந்தடைந்திருக்கும் இடமும் சோடியாக் வளையம்தான். இந்தத் தற்செயல் ஒற்றுமை என்னைத் திகைக்க வைத்தது. இது அப்படி என்னதான் சொல்ல வருகிறது?
எனக்கு என் பாட்டியின் பெட்டி நினைவுக்கு வந்தது. அதில் வந்த அறிபுனை இதழ், அதில் இருந்த கட்டுரைகள். இப்போது நான் வாங்கிய பாறை பற்றி அந்தக் கட்டுரையில் அப்போதே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இப்படி ஒரு பாறை வர இருக்கிறது என்பது குறித்து என் பாட்டிக்குத் தெரிந்தே இருந்ததா? நான் வீணாக ஒருவனால் ஏமாற்றப்பட்டு வழக்கொன்றில் சிக்கிச் சிறை செல்வேன் என்பதும் பின்னர் அதிலிருந்து தப்ப எனக்கு ரகசிய அதிர்வெண் கிடைக்கும் என்பதும் அவள் அறிந்தே இருந்தாளா?
அந்த அதிர்வெண், அதன் மூலம் நியூட்ரினோ புயல்களிலிருந்து நான் தரவிறக்கம் செய்த அந்தக் குறிப்பேடு எல்லாமும், என் பாட்டி எனக்கென வாங்கிய மந்திரப் பாறைகள் அவளின் எதிர்காலத்தில் என்னை வந்து சேர அவள் செய்த விநியோக ஏற்பாடா? ஒரு ஆணின் உடற்கூட்டுக்குள்தான் சிக்கிக்கொண்டால், தனக்கு என்னவெல்லாம் நடக்குமென்பது என் பாட்டிக்கு முன்பே தெரிந்திருந்ததா?
இசையின் மூலம் தன் ஆயுளுக்கும் சோடியாக்குடன் தொடர்பிலிருந்தது போதாதென்று, என்னைத் தழுவுக் கருவிப்பாறையாக்கி அதே சோடியாக் வளையத்தில் தொலைய வைத்தாளா? இப்பாறை மூலம் நான் பல கிரகங்களில் பல்லுயிராக இருப்பது அத்தனையும் சோடியாக் வளையத்துக்குள்தான். இது எதைக்குறிக்கிறது? ஒருவேளை, நான் சோடியாக் வளையத்துள் பாறைகளாக நீள்வதும், அவள் தன்னிசையால் சோடியாக் முழுவதும் நிறைவதும் சமம்தானோ?
எனக்குத் தலை சுற்றியது. மன நிலை பாதிப்பதைப் போல் உணர்ந்தேன். நினைவடுக்குகள் மெல்ல மெல்ல முன்னுக்குப்பின் முரணாவதைப் போல் தோன்றியது. என் பாட்டியின் அந்தப் பாடல், என் மரபணுவில் பதிந்துவிட்ட அந்தப் பாடல், உறக்கத்திலிருந்த மரபணுக்களை உசுப்பி எழுப்பும் மற்றும் எழும்பிய குணாதிசயங்களின் மரபணுக்களை மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்தும் பயிற்சியா? இது குறித்து எனக்கு ஓரளவிற்குப் புரிதல் இருந்தது. மரபணு மூலமாக குணாதிசயங்களை விழித்தெழவைத்தல் மற்றும் உறங்கச்செய்தலை (gene methylation) என்பார்கள்.
காட்சிகளுக்கும், ஓசைகளுக்குமான உலகில் அரசாட்சி செய்யும் ஒரு அரசர் வீட்டில் நூறு சாளரங்கள் என்று கொள்ளுங்கள். அந்த உலகில் உள்ள உங்கள் வீட்டை ஐம்பது சாளரங்கள் கொண்டு கட்டுகிறீர்கள். திறந்திருக்கும் ஐம்பது சாளரங்கள் வழி வரும் காற்று, ஓசைகள் அனைத்தும் நூறு சாளரங்கள் வழி வரும் காற்று மற்றும் ஓசைகளின் ஒரு பகுதியாகத்தானே இருக்க முடியும்? உங்களைவிட ஐம்பது சாளரங்கள் அதிகம் கொண்ட வீட்டில் வசிக்கும் அரசர் உங்களைக் காட்டிலும் அதிகம் காற்றும் ஓசைகளும் பெறுபவராகத்தானே இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது, உங்கள் வீட்டைச் செப்பனிடுகிறீர்கள். அதில் எஞ்சிய ஐம்பது சாளரங்கள் மூடியிருப்பது உங்களுக்குப் புலப்படுகிறது. இப்போது அவற்றை நீங்கள் திறந்துவிட்டால், உங்கள் அரசருக்கு சாளரங்கள் வழி கிடைக்கும் சாத்தியங்கள் அனைத்தும் உங்களுக்கும் கிடைப்பதாகிறது. அப்படியானால், அரசருக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைந்து பூஜ்யமாகிவிடுகிறது என்றுதானே பொருள். அதன் விளைவாக நீங்களே அரசராகிவிடுகிறீர்கள். அல்லவா?
மரபணுத்திரள் என்பது இப்படியான சாளரங்கள் கொண்ட ஒரு வீடுதானே. என் பாட்டியின் மரபணுவிலிருந்துதான் நான் என் மரபணுக்களைப் பெற்றிருக்க முடியும்: சில சாளரங்கள் மூடப்பட்டும், சில சாளரங்கள் திறக்கப்பட்டும் இருந்திருக்கலாம். ஆயினும், என் பாட்டியே உச்சபட்சமான சாளரச் சாத்தியங்களைப் பெற்றிருந்திருந்தால், அத்தொகுப்பிலிருந்து ஒரு பகுதியைப் பெற்ற என் மரபணுவில் என் பாட்டியிடம் திறந்திருந்த சாளரங்களுள் சில மூடியும், மூடியிருந்த சாளரங்களுள் சில திறந்தும் இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது அல்லவா? இப்போது அந்த மாயாஜாலப் பாறையைப் பெற நான் என் மரபணுத்தொகுப்பில் உறைந்திருந்த பாடலை நினைவுகூர்ந்து பாடியது, என் மரபணுத்திறளின் சாளரத்தொகுதியின் நிலைப்பாட்டை என் பாட்டியின் மரபணுத்திறளின் சாளரத்தொகுதியில் நிலைப்பாட்டிற்கு மாற்றும் ஒரு செயல்பாடாக ஏன் இருந்திருக்கக் கூடாது?
ஏனெனில்,
“உங்களைச் சற்றே தாழ்த்திக்கொள்வது, நீங்கள் உண்மையிலேயே எந்த இடத்திற்கு மேலதிகப் பொறுத்தமாக இருப்பீர்களோ அவ்விடத்திற்கு விரைவாக நீங்கள் சென்று சேர வழி வகுக்கும்.” என்ற குரல் கேட்டது.
அது உண்மைதான். என் பாட்டி தன் இசையால், சோடியாக்கில் தொலைவதையே விரும்பியிருக்கிறாள். நானோ கால்பாட்டின் பிடியிலிருந்து தப்பிக்க நிரந்தரமாக எங்கேனும் மீட்சியற்ற வகையில் தொலைய விரும்பிய இடமும் சோடியாக் வளையமாகவே ஆகிவிட்டது.
அந்தப் பெண் குரலை நான் அறிவேன். அது அப்படி ஒன்றும் புதிய குரல் அல்ல. அந்தக் குரலை நான் அதற்கு முன்பும் பலமுறை கேட்டிருக்கிறேன். காணொலிகளில், பாடலாக…
இப்போது உங்களுக்கு ஒரு சிறிய தகவல்…
இக்கதையைத் துவங்கியவன் இப்போது இல்லை. அவன் என்னுள் அமிழ்ந்துவிட்டான். இது நான். நான் யார்? இக்கதையைச் சொல்லத்துவங்கியவனின் பாட்டி.
நீங்கள் சற்றே குழம்புகிறீர்களெனில், ஒரு கதை, கதைசொல்லியையே மாற்றிய கதையை இப்போதுதான் முதன் முதலாக எதிர்கொள்கிறீர்கள் என்று பொருள்.
ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…