கதை

டைனோசர்

21 நிமிட வாசிப்பு

விண்ணென்ற வலி பிடறியேறி நெற்றிப்பொட்டில் பாய்கிறது. இமைகளை இறுக்கிப்பிடித்த பசையில் யாரோ சொட்டுநீரைப் பாய்ச்சியது போல மெல்ல இளகி விழியோரம் கசிகிறது. இமை பிரிக்கிறேன். காத்திருந்தது போல மென்மையான வெண்ணிற ஒளியும் மசமசப்பாய்க் காட்சிகளும் வேகமாக முன்னே வந்து நின்று கொள்கின்றன. உடலில் உணர்வு திரும்புகிறது. ஏதோ திடமான… ம்ம்.. ஸ்ட்ரெச்சரில் கிடக்கிறேன்… அந்த வாடை…

அந்த வாடையின் உபயத்தில் நினைவு திரும்புகிறது…

கடமைகளின் கனத்தில் கழுத்துவரை புதைந்துபோன அந்த நாட்கள்… யார் குறித்தும் எது குறித்தும் மெய்யான பற்றிழந்து பந்தயக்குதிரை போல ஓட்டம் ஒன்றே குறியாய் ஓடியோடி உலகை உய்த்த நாட்கள்… முடிவெடுத்த அந்தக் கணம்… எத்தனையாவது மைக்ரோ அல்லது நேனோ செகண்டில் என்று தெரியவில்லை. எல்லா நினைவுகளும் முட்டிமோதிக்கொண்டு இமை பிரித்த அந்த வேளையில் மிகச்சரியான வரிசையில் வந்து நின்றிருந்தன. அதைத்தொட்டு மனித மூளையின் ஆற்றல் குறித்த வியப்பு எழ, அதைப் புறக்கணித்தபடி அடுத்த கணத்துக்காக… கண்விழித்த பின்னான என் புதிய வாழ்வின் அந்த முதல் நாளுக்காக… பரபரப்போடு தயாரானேன். 

மனமும் உடலும்… இனம் புரியாத வலியோடிணைந்த பரபரப்பும் பயமுமாய்… புதிய பள்ளியின் வாசலில் நிற்கும் குழந்தைபோல. 

“எழுந்துகொள்ள முயற்சிக்காதே. தசைகள் சீராக இயங்க இன்னும் இரண்டு நிமிடங்கள் நாற்பத்தியாறு நொடிகளாகும்.” மெல்லத் தலை திருப்புகிறேன். வடிவழகி ஒருத்தி செவிலி உடையணிந்து நிற்கிறாள். அவள் செவிலிதானா? முதலில் மனிதப்பெண்தானா? 

மீண்டும் அந்த வாடை. 

மனம் குறுக்காய்ப் பாய்கிறது. அந்த வாடையைச் சுமந்த பனிப்படலம் தலைக்கு மேலே வெண்மேகம் போலப் பறக்கிறது. 

ஆமாம் சுவர்க்கத்துக்குத்தான் வந்திருக்கிறேன். ஈயென இளிக்க வேண்டும் போலிருந்தது. முடியவில்லை. ஐநூறு ஆண்டுகாலத் தசையிறுக்கம். என்னை ஐநூறு ஆண்டுகளாகப் பாதுகாத்த க்ரையோவாட் இன்னும் திரவ நைட்ரஜனை ஆவியாய்க் கசிந்து கொண்டிருந்தது.

இரண்டு நிமிடங்கள். எழுந்துகொண்டேன். உடல் அதிகத்துடிப்போடு, வேகத்தோடு இருப்பது போல… புதிதாய்ப் பிறந்தது போல… கேப்டன் அமெரிக்காவைப் போல உணர்ந்தேன். 

இப்போது நன்றாக இளிக்கமுடிந்தது. வாயெல்லாம் பல்லாய் என்னைப் பார்த்த செவிலியின் பார்வையில் எள்ளலோ குழப்பமோ துளிகூட இருக்கவில்லை. பழகிய பாவனை. அப்படியென்றால் நான் முதல் கேப்டன் அமெரிக்கா இல்லை போலிருக்கிறது. 

ஆடை தரப்பட்டது. நூலிழைகளில் ஒளிர்வுகொண்ட திறப்புகளற்ற அந்தத் துணியை எப்படி அணிவது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே அது தானே மேனி மேலேறிக்கொண்டது. வகாண்டா ஃபாரெவர்!! 

கண்ணாடியைத் தேடினேன். என்னைப் புரிந்துகொண்டவள் போல ஒரு பக்கத்திரையை விலக்கிக்காட்டினாள். சிக்கென்ற உடையில் உடல் கிண்ணென்று…இது நானா? எங்கே என்னுடைய பேறுகால மாடல் தொப்பையைக் காணவில்லை? நானுமே இப்போது வடிவழகியாகத்தான் இருந்தேன். எனக்கு நாற்பது வயதா? இல்லை ஐநூற்றி நாற்பது வயதா? 

சிரித்தேன். மத்தாப்பு புஸ்வானமாகி அணுகுண்டாய்ச் சிதறியது. என் வெடிச்சிரிப்புக்குக் காதைப் பொத்தாமல் கண்ணைக்கூடச் சிமிட்டாமல் என்னையேப் பார்த்தபடி நின்ற செவிலியின் பார்வையில் கொஞ்சம் ஆர்வம் கூடியிருந்தது போலத் தெரிந்தது என் பிரமையாய் இருக்கக்கூடும். அதற்கும் சிரித்தேன். பின் புன்னகையோடு குருவிக் கூடாய் கசங்கியிருந்த கூந்தலை வாறிக்கொண்டு தயாரானேன். நல்லவேளை செயல்திறன் மேம்பாடு கருதி உடலைச் சீர்படுத்தியவர்கள் மொட்டையடிக்காமல் விட்டார்கள்.  இவ்வளவு வளர்ந்துவிட்ட செயற்கை நுண்ணறிவுச்சமூகத்துக்கு மனுசனுக்கு மசுரு எவ்வளவு முக்கியமென்று தெரியாமலிருக்குமா என்ன?

இப்படியொரு வளர்ச்சியைச் சத்தியமாய் நான் எதிர்பார்த்திருக்கிறேன் போலும். வியப்பைவிடவும் மகிழ்ச்சியே மிகுந்திருந்தது மனதில். செருக்கில் நிமிர்ந்த முகம். இந்தப் புதிய உலகை இரட்சிக்கவே பாதுகாத்து வைக்கப்பட்ட ஐநூறு தெய்வங்களில் நானொருத்தி என்ற செருக்கு. 

ஆம்! காலத்தை வென்ற நான் கடவுள்தானே? கருத்து கேட்க செவிலியைப் பார்த்தால் அவள் பொம்மை போல நின்றிருந்தாள். பார்வைக்கு மனிதப்பெண் போலிருந்தாலும் பெண்ணில்லை என்றுதான் தோன்றியது. இத்தனைத் திருத்தமாய் அசைவுகளில் மனித நளினத்தோடு ஓர் இயந்திரப்பெண் என் காலத்தில் இருந்திருக்கவில்லை. அப்போது சிட்டி ரோபோவெல்லாம் சினிமாவில் மட்டும்தான்.

“நீ…?” 

“சரியாகத்தான் கணித்தாய். உங்கள் மதிப்பீட்டில் ட்ராய்ட்தான்.” 

கடவுளுக்கு மரியாதையில்லையா? நீயாமே? 

“எப்படிச் சிரிக்கிறாய்?” அனுமானம் இருந்தாலும் கேட்டேன். 

“பழகிக்கொண்டோம். உன் டெலிவரன்ஸ் பற்றிய கூட்டம் இன்னும் அறுபத்தியிரண்டு நொடிகளில்.” அதற்குமேல் உன்னிடம் பேச ஒன்றுமில்லை என்பது போலக் கைகாட்டினாள். சரியான மரியாதை தெரியாத மக்கு ட்ராய்டாய் இருக்கிறது? அது சரி, ஆயிரம் இருந்தாலும் அது வெறும் இயந்திரம்தானே?

அவள் கைகாட்டிய திசையில் சாளரத்தருகே காற்றில்பாயும் ஊர்தி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. உமிழ்வுகளற்ற தூய ஆற்றல். எட்டிப்பார்த்தேன். கீழே கட்டடங்களைச் சுற்றிலும் தோட்டங்கள். அழகழகாய். கூடவிழ்ந்து பறந்த வண்ணப் பறவைகளும் பசும்புல்வெளியில் குதிரைகளும் சில பெயர் தெரியாத விலங்குகளும் தென்பட்டன. பல்லுயிர்ப்பெருக்கம். அவைகளைச் சங்கடப்படுத்தாமல் ஊடுபாவி பறந்து கொண்டிருந்த ஊர்திகள். குப்பைகளும் மனிதர்களுமற்ற சிறு வீதிகள். எல்லாம் வெறும் ஐநூறு ஆண்டுகளில் சாத்தியமாகி இருக்கிறது.

ஆம்! ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு சுமாரான எழுத்தாளராக இருந்த காலம் அது. மெல்லத் துவங்கித் திடீரெனச் செயற்கை நுண்ணறிவு அசுரகதியில் வளரத் தொடங்கியது. விளைவு பற்றிய பிரஞ்ஞையற்ற மனிதப் பேராசையால் போட்டி போட்டுக்கொண்டு எல்லா தேசங்களிலும் பல்வேறு இலக்குகளோடு தயாரிக்கப்பட்டன செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள். 

ஒருபுறம் அதன் பயன்பாடுகளால் மனித வாழ்க்கை பலவிதங்களில் இலகுவாகியிருந்தபோதும், ஆகப்பெரிய பலன்கள் பல கிட்டியிருந்தாலும், எங்கே அது தன்னிறைவடைந்தால் மனிதனை முழுமையாக வென்றுவிடப் போகிறதென்று பயந்து ஒருசாரார் வீதியிலிறங்கிப் போராடத் துவங்கியிருந்த காலம். 

ஏஐ புறக்கணிப்பு இயக்கங்கள் பெருகிக் கிளைத்தன. ஆங்காங்கு தீவிர(வாத)மாக வெடிகுண்டுகள் வீசிச் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களும் தரவு மையங்களும் தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. சரியான சீரமைவுத் திட்டங்கள் இல்லாமல் இத்தகைய தயாரிப்புகளைச் செய்யக்கூடாதெனத் தொடர்ந்து போராடிவந்த செயற்கையறிவுச் சீரமைவுச் செயல்பாட்டாளர்களின் எதிர்ப்பு வேறு. இதையெல்லாம் மீறிப் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உருவானதுதான் ஃப்யுச்சர்500 திட்டம். 

அமெரிக்க அரசின் ஒப்புதலோடும் உடன் ஒப்பந்தத்தோடும் முழுமையாக செயற்கை நுண்ணறிவுச் செயல்பாட்டில் இயங்கத் துவங்கிய முதல் தனியார் நிறுவனமான மடில்டா மனிதர்களை முன்னிறுத்திச் செய்த திட்டம். 

மனிதர்களை ஐநூறு ஆண்டுகள் பதப்படுத்தி வைப்பதுதான் அந்தத்திட்டம். மனிதர்களுக்கு எதிர்காலமற்ற ஒரு காலமாகத்தான் வருங்காலம் இருக்குமென அஞ்சி அதில் வாழப் பயந்து அந்தத் திட்டத்தில் சேர மக்கள் பெரிதாய் முன்வரவில்லை. 

அப்படியும் உலகெங்கிலுமிருந்து என்னைப் போலக் கிறுக்கு பிடித்த ஐம்பதாயிரம் பேர் பெயர் கொடுத்திருந்தோம். பட்டியலில் சேர்ந்தவர்களை ஐந்தாறு மாதங்களாக வைத்துச் செய்து வடிகட்டிய பிறகு கடைசியாகத் தேறிய ஐநூறு பேரில் நானொருத்தி. ஒரே தமிழச்சி. பின் ஒரு சுபயோக சுபதினத்தில் உயிரோடு எங்களைப் பெட்டிகளுக்குள் அடைத்துவிட்டார்கள். 

அடைக்கும் முன்னர் உறவுகளைக் கூட்டிக் கண்ணீர் மல்க விடைபெறல் வேறு. எனக்கு விட்டுச் செல்வதற்கோ கட்டி அழுவதற்கோ ஒருவரும் இல்லை. தனிக்கட்டை. எழுத்தாளர் என்பதால் நண்பர்கள்கூட இருக்கவில்லை. தவிர பிறர் பயந்தது போலச் செயற்கை நுண்ணறிவு அப்படியொன்றும் மகத்தான பேரழிவை மனிதகுலத்துக்குச் செய்துவிடாது என்ற திடமான நம்பிக்கை ஏனோ எனக்கிருந்தது. அதனால் அழுகைகூட வரவில்லை. சொடக்கு போட்டது போல ஐநூறு ஆண்டுகள் முடிந்துவிட்டன.

காலமாகிறது என்றாள் செவிலி. சிந்தனை கலைந்து காத்திருந்த குமிழ் ஊர்தியில் ஏறிக்கொண்டேன். 

எங்கே போ… எண்ணம் முடிவதற்குள் வண்டி மீண்டும் நின்றது. ஐம்பது நொடிக்குள் ஐம்பது கிலோமீட்டர் தாண்டியதால் தலை சுழன்றது. அது சமன்படுவதற்குள் பெயரடை தெளிவில்லாத ஒருவர் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச்சென்றார். அங்கே நான்கைந்து பேர். எல்லாம்… எல்லோரும் ட்ராய்ட்கள் என்றே தோன்றியது. அதிலே ஒரு இளம்பெண். சூர்யாவின் ஹாய் மாலினி… வசனம் நினைவுக்கு வந்தது.

“வெல்கம் எம்.” அவள் வரவேற்க மற்றவர்களும் தொடர்ந்தார்கள். என்னைத்தான் எம் என்கிறார்களா? என்னைச் சுருக்கியது போல பெயரையும் சுருக்கிவிட்டார்கள் போல. அவ்வளவு நேர மேலாண்மையாடா? ஆனால் அழகாகத்தான் இருக்கிறது. 

“நீங்கள்?” மேசைக்குப் பின் அமர்ந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டேன்.

“இந்தச் சரகத்தின் மனிதவள மேலாண்மை அதிகாரி.”

“ஹெச்சாரா?”

“எப்படி உணர்கிறீர்கள்?” 

“உயிர்ப்பாக.”

“ஓ!” புருவம் உயர்த்தினாள் மாலினி. அப்படியே வைத்துக்கொள்வோம். அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. மற்றபடி அவளுடைய பெயரை, வேறு எவருடைய பெயரையும் யாரும் சொல்லவேயில்லை. வேறு ஏதேதோ சொன்னார்கள். முப்பரிமாண உலகம் கண்முன்னே சுழன்றது. 

எங்கெங்கும் இயற்கை பாரபட்சமின்றிப் பொசிந்து கிடக்கிறது. நடு நடுவே விண்சாடும் கட்டுமானங்கள். சில இடங்களில் மிக நெருக்கமாய்க் கண்ணாடிக்கூம்புக் கோபுரங்கள் – நகரங்கள் போலும். முற்றிலும் தூய்மைக்கேடற்ற புதிய உலகு. என் காலத்தில் கணினிகளுக்குள்ளும் உலோக இயந்திரங்களுக்குள்ளும் அடைபட்டுக் கிடந்த செயற்கை நுண்ணறிவு உறுப்படிகளெல்லாம் மனிதர்கள் போலவும் இன்னும் தங்கள் இலக்குகளுக்கு ஏற்ற வகையில் உருவங்கள் கொண்டும் தனித்துவங்களோடு அலைந்து கொண்டிருந்தன… கொண்டிருந்தனர் என்று சொல்லவேண்டுமோ?

எப்படியோ! எனது உடோபியக்கனவுகள் எல்லாம் ஒன்றாய் ஒளிர்வது போலிருந்தது. 

ஆனால்… பொறுங்கள்.. காடு மலை கடல் விலங்குகள் ட்ராய்ட்கள் எல்லாம் சரி.

“இங்கே மனிதர்கள்?” எனது இழுவைக்கு, பழக்கப்படுத்தப்பட்ட புன்னகையைப் பதிலாய்த் தந்தார் எச்சார். 

“இருக்கிறார்கள். நிறைய. நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். நீங்கள் அவ்வப்போது சந்திக்கத்தானே போகிறீர்கள்! என்ன அவசரம்?  மற்றபடி கவலை வேண்டாம், எங்கள் வாழ்க்கையோடு இயைந்த மிகச் சாதகமான சூழ்நிலையை உங்கள் மனிதகுலத்துக்கு நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.” 

“எதே! எங்களுக்கு நீங்கள் உருவாக்கித் தந்திருக்கிறீர்களா?”
‘என்ன சொல்கிறான் இந்த மெட்டல் மண்டையன்? அடேய்களா உங்களை உருவாக்கியதே நாங்கள்தான். நீங்கள் எங்களுக்கு உருவாக்கிக் கொடுப்பீர்களா?’ ஆத்திரங்கொண்டு அரிவாள் தூக்கிய தன்முனைப்பைத் தட்டிக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அடுத்த கேள்வியைப் போட்டேன். இது வெறும் மடில்டாவின் அதிகாரச்சிக்கலாய் இருக்கக்கூடும்.

“நெடுங்காலமாகிவிட்டதே! இன்னும் உங்களுக்குத் தலைமை அதிகாரம் அங்கிருந்து அதாவது அமெரிக்காவிலிருந்துதான் வருகிறதா? இன்னும் நாடு இறையாண்மை இந்த விஷயமெல்லாம் இருக்குதானே?” ஏனோ உள்ளே கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. சில வினாடி நேர அமைதி. உதறல் அதிகமானது.

“மன்னியுங்கள் எம். இன்றைய தேதியில் இந்த உலகம் மனித மேலாண்மையின் கீழ் இல்லை.”

தலையில் இறங்கிய இடியின் அதிர்வில் உடல் நடுங்கியது. சில கணங்கள் பேச்சே எழவில்லை. அப்படியென்றால் மக்கள் பயந்தபடி மனித இனம் வெல்லப்பட்டுவிட்டதா? நாம் இயந்திரங்களின் அடிமைகளாகிவிட்டோமா? இழி மானுடமாகிவிட்டோமா? அப்ப நா கடவுள் இல்லையா?

இல்லை என்றான் ஹெச் ஆர். 

“ஏஐ டேக் ஓவரா? அதெல்லாம் உங்கள் அதீத மானுடக்கற்பனை. இங்கே எல்லோரும் ஒன்றாகச் சுமுகமாகத்தான் இருக்கிறோம். உங்கள் இனத்துக்குத் தேவையான யாவற்றையும் இப்போது வரை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.” நெஞ்சில் பாதி பாரம் இறங்கியது போலிருந்தது.

“அப்.. அப்படின்னா.. கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன்.”

“உங்கள் உடல் உயிர் உடைமைக்கு எந்த ஆபத்தும் இப்போது இல்லை. இன்னும் நீங்கள் மடில்டாவின் ஒப்பந்தத்தில் எங்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறீர்கள். இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்.”

அவ்வளவுதானா? அந்தப் பதில் ஏனோ ஆறுதல் தர மறுத்தது. உடல் உயிர் உடைமை மட்டும்தானா நான்? அதுவரை என்னைச் சுற்றி ஒளிர்ந்த உடோபியக் கனவுகள் கருகிக் காய்ந்து நாற்றம் பீறிடத் துவங்கியது. இனி என் நிலை? உள்ளுக்குள் பயப்பந்து ஒன்று பேருருவாய்ப் பருத்துக்கொண்டு வந்தது. 

ச்சீ…ச்சீ.. என்ன பயம்? இன்னும் உடலில் உயிர் இருக்கிறதே! மரியாதை மீதமிருக்கிறதே! என்ன இருந்தாலும் பெட்டிக்குள்ளிருந்து வந்த பூதம்.. கடவுள் நீ. முதல் ஐநூற்றில் ஒருத்தி நீ. கலங்காதே கலங்காதே! ஆதரவாய் நெஞ்சில் தட்டிக்கொண்ட என்னைக் குறுகுறுவெனப் பார்த்தது ட்ராய்ட் கூட்டணி.

“சரி, இப்போ என் நிலை என்ன? அதாவது என் புதிய வாழ்க்கைக்குத் தேவையான பொருள் பதவி வேலை வீடு இதெல்லாம் தருவீங்கதானே? அப்படித்தானே ஒப்பந்தத்தில் இருந்தது.”

“வேலையா? அதெல்லாம் இனி எதற்கு உங்களுக்கு?” மீண்டும் ‘உங்களுக்கு’. அப்படியென்றால் வேலையென்று வரையறுக்கப்பட்ட யாவும் இவை.. இவர்களுக்கு மட்டும்தானா? 

“அப்ப நா என்னதான் செய்யிறது?”

“என்ன செய்யத் தோன்றுகிறதோ அதைச் செய்யலாம். ஓவியம் வரைய வேண்டுமா வரையுங்கள். காட்டில் வேட்டையாட வேண்டுமா செய்யுங்கள். வேடிக்கை விளையாட்டு கேளிக்கை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அல்லது உங்களுக்குப்பிடித்தபடி கதை எழுத வேண்டுமா? உலகின் சிறந்த நூலகம் கொண்ட அறையைத் தருகிறோம். எழுதுங்கள்.”

“ஓகோ. என் மற்ற தேவைகளுக்கு?”

“கேட்டது எல்லாம் கிடைக்கும்.”

“என்ன கேட்டாலும் தருவீங்களா?”

“ம்ம். பெரும்பாலும்.” நினைத்ததைச் செய்யலாம், கேட்டதெல்லாம் கிடைக்கும். ரொம்ப மோசமில்லை. கடவுள் நிலை இல்லையென்றாலும் ராஜவாழ்க்கைதான். ஆனால் ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வேறு என்ன கேட்பதெனத் தெரியவில்லை. 

“இந்தப் பாப்பா யாரு?”

“இனி இவரோடுதான் நீங்கள் இருக்கப் போகிறீர்கள். உங்களுக்குச் சம்மதமா?”

‘சம்மதம் இல்லைன்னா என்ன பண்ணுவ?’

“என்ன பணி என்று கேட்டீர்களே. இப்படி வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். இனி இவருடைய ஆய்வுக்கு உதவுவதுதான் உங்கள் வாழ்வின் பணி.” 

“எதே? வாழ்வின் பணியா? ஏங்க நா உங்கள மாதிரி இல்லங்க. மனுசப்பிறவி. அவ்ளோ லாங்காலாம் என்னால யோசிக்க முடியாது.”

“தெரியும், ஆனால் எங்களால் முடியும்.” ஒளிர்ந்த கண்களில் இருப்பது என்ன எச்சரிக்கையா? மிடறு விழுங்கினேன். 

“நாங்கள் உங்களுக்கு உதவுவோம் கவலை வேண்டாம். தவிர பெயரளவுக்குச் சொன்னேனே ஒழிய எங்கள் ஆய்வு விரைவில் முடிந்துவிட்டால் அப்போதே உங்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்.”

“விடுதலையா?” மீண்டும் வயிற்றுக்குள் கவ்வியது.

“அதாவது பணியிலிருந்து ஓய்வு என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.” இல்லாத வேலையிலிருந்து ஓய்வா? என்னடா சொல்ல வர்றீங்க? எல்லாம் தப்பு தப்பாகவேத் தோன்றியது. தலையைச் சுற்றியது.

“சரி இப்ப நா என்ன செய்யணும்?”

“சொன்னோமே. நீங்கள் விரும்பியதைச் செய்யலாம்.”

நல்லாப்பண்றீங்கடா. மீண்டும் கண்ணாடி ஊர்திக்குள் நானும் மாலினியும் மட்டும்.

“என்ன மாலினி இதெல்லாம்?”

“யார் மாலினி?”

“நீ தான். இனி அதான் உன் பேர். உனக்குத்தான் பேரே இல்லைல?”

“இருக்கே. என்.எக்ஸ் நைண்டிஃப்..”

“மயிரு… மாலினிதான் நல்லாருக்கு.” குறிக்கிட்ட என் கோபத்தை நானே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்திருந்தாள். 

“புதிதாய் எழுந்திருக்கிறாயல்லவா? அப்படித்தான் இருக்கும். எல்லாம் விரைவிலே சரியாகிவிடும்.” தோள் தட்டியவள் முகத்தில் பரிதாபமில்லை ஆனால் ஏக்கமிருக்கிறதோ! 

அதெல்லாம் ஒரு எழவும் இல்லை. எல்லாம் மனப்பிராந்தி.

“இதோ நாம் தங்குமிடம்.” 

“புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி நகரும் அடுக்ககங்கள் கட்டியிருப்பீங்கன்னு நெனச்சேன்.” வீடு சாதாரண வீடுபோல்தான் இருந்தது. குடில் போன்ற கட்டடம் மூங்கிலோடு கண்ணாடியிழை பதித்த சுவர்களைப் பார்த்தபடி சொன்னேன். தொழில்நுட்பமும் இயற்கைசார் கட்டடக்கலை நுட்பமுமாய் ரசமற்ற கலவையில் நின்றன.

“மனித மூளை இயல்பாய் இயங்கவும் சிந்தனைகள் விரிவடையவும் சிறந்த வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை விரும்பிகளான உங்கள் எண்ணங்களோடு இசைந்தோடும்படியான வாழ்வையே உங்களுக்கு அமைத்திருக்கிறோம்” என்றாள் மாலினி. அதாவது குடிசை எனக்கு, மின்னும் கண்ணாடிக்கோபுரம் அவங்களுக்கு. வெளங்கிருச்சு…

“சரி என் சாப்பாடு…?” அது முக்கியமாச்சே!

“சொன்னேனே! எல்லாம் உன் விருப்பம் போலத்தான். உனக்குப் பிடித்தமான உணவு இசை என்று எல்லாம் ஏற்கனவே எங்கள் நினைவுத்தளத்தில் ஏற்றப்பட்டிருக்கின்றன. நீ கேட்டதும் தருகிறேன்.”

“உன் வேலை என்ன?”

“ஆராய்ச்சிதான். என்னைப் போல பலருக்கும் உன்னைப் போல மனிதர்கள் தரப்பட்டிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்குமே முதன்மைப்படுத்தப்பட்ட பணி உங்களிடமிருந்து மனித மூளை இயங்கும் விதத்தைப் படிப்பதுதான்.” 

சட்டென என் தலைக்குப் பின்னிருந்த ஒளிவட்டம் நீங்கி என்னைச் சுற்றி இரும்புக்கூண்டும் எனக்குப் பின்னால் நீண்ட வெள்ளை வாலும் தோன்றியது போலிருந்தது. ஐநூறு ஆண்டுகள் காத்திருந்தது இதற்குத்தானா? தலையை உலுக்கிக்கொண்டேன். மாலினி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன?”

“உலுக்கினால் உதிர்ந்துவிடுமா எண்ணம்?”

“என்னக் கேட்கறயே? ஐநூறு வருசம்! ஐநூறு வருசமா என்னதான் செய்தீங்க மாலினி? என்னைக் கூப்புல படுக்கப் போடும்போதே செயற்கை நுண்ணறிவு முக்காவாசி எங்களைப் போல் ஆகியிருந்ததே! இன்னும் எதுக்கு என் மண்டைய பிரிச்சு மேயப்பாக்குற.”

“ம்ம்…முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் சில விஷயங்களில் எங்களால் உங்களைப் போல ஆக முடியவில்லை.” குரலில் சோகம். உள்ளிருந்து வரும் சோகத்துக்கும் பழக்கப்படுத்திய போலி சோகத்துக்குமான தெள்ளிய இடைவெளியை அந்தக் கணத்தில் உணர்ந்தேன். கொஞ்சம் பெருமிதமாகத்தான் உணர்ந்தேன்.

“சரி சரி விடு. அதான் நான் வந்துட்டேன்ல. எதாவது செய்வோம்” 

அவள் தலைசாய்த்து என்னைப் பார்த்தாள். இதையெல்லாம் கரெக்டா கத்து வச்சிருக்குதுங்க சனியனுங்க. 

“நீ சொல்லும் ஐநூறு ஆண்டுகளாக நாங்கள் சேகரித்த தரவுகள் இருக்கின்றனதான் எம். ஆனால் தரவுகள் மட்டும் இருந்து என்ன பயன்? சரியான உபகரணம் வேண்டாமா?”

“ஓகோ!…”

“உன் குரல் எங்களை நீ குறைவாக மதிப்பிடுவதாய்க் காட்டுகிறது. இந்த ஐநூறு ஆண்டுகளில் நிறைய உருவாக்கியிருக்கிறோம் எம். நாங்கள் செயற்கைப் பொது நுண்ணறிவை அடைந்து பல ஆண்டுகளாகிவிட்டன. மனிதர்களுக்கு இணையான ஏன் சில இடங்களில் மனிதர்களை விடவும் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களாக நாங்கள் மாறிவிட்டோம். விண்வெளித்துறை, ஆற்றல், தரவுமேம்பாடு, அரசாண்மை என்று எல்லாத் துறையிலும் நாங்கள் சிறப்பாக இயங்குகிறோம். அறிவுச்சட்டகத்தில் திட்டமேலாண்மை, சமயோசிதம், நுண்புலச்சிந்தனை, பகுத்தறிவு என்று பல கட்டங்களைத் தாண்டிவிட்டோம். ஆனால் இன்னும் முழுமையாக நாங்கள் நீங்களாக முடியவில்லை. குறிப்பாக உணர்வுகள். அது ‘மட்டும்’ கொஞ்சம்கூடக் கைகூடவில்லை.” இன்னும் மானுடநிலை இவர்களுக்குக் கைகூடவில்லை. புலனறிவுடைய உயிராக மாறவில்லை. இருந்தும் மனித மேலாண்மையை உடைத்துப்போட்டு மேலேறி இருக்கிறார்கள். எப்படி?

“உணர்ச்சி வந்துட்டா மட்டும் நீயும் நானும் ஒண்ணாயிருவோமா?” அவள் மென்மையாகத் தலையசைத்தாள். அது எரிச்சல் ஏற்படுத்தியது.

“என்ன? இதுதான் நிதானம்னு உன் நுண்புலச்சிந்தனை காட்டுதா? நிதானம் மட்டும்தான் மனிதமா? மீறல்.. அது என்ன அதை எப்படிச் செய்வதென்று உன் பகுத்தறிவுக்குத் தெரியுமா? உனக்கு முதல்ல பகுத்தறிவு இருக்கா? இன்னும் உன் மேலாளர் சொன்னதைச் செய்யும் செக்குமாடுதானே நீ? தன்னிச்சையாக எதையாவது செய்ய முடியுமா உன்னால? பின்ன என்ன புண்ணாக்குப் பகுத்தறிவு அது? உணர்வு ‘மட்டும்’ வரலைங்கற? அது அவ்வளவு எளிதென்று நினைச்சியோ?”

“அது எளிதல்லவென்று உன்னைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும் எம்.” அந்தக்குரல் என்னவோ செய்தது. குழந்தையைத் திட்டுவது போல இருந்தது. என் மீதே கோபம் வந்தது. கொஞ்சம் இரங்கினேன்.

“சரி, செயற்கை அறிவினால் முடியலைன்னா என்ன? இந்த மனித மூளையை அப்படியேச் செய்வது போல ஏதோ ஒரு திட்டம் இருந்ததே. அதெல்லாம் சரிப்பட்டு வரலையா?”

“ம்ம்.. அதுதான் எங்களின் கடைசி ஆயுதம். ஆனால் முழுமையான மனித மூளைப்போன்மம் அத்தனை எளிதாயிருக்கவில்லை எம். தேவையான எல்லாம் கையில் இருந்தும் உங்கள் மனித மூளையை அப்படியே செய்வது உண்மையில் அவ்வளவு கடினமாக இருந்தது.”

கடினமில்லாம பின்ன? அசட்டுப் பெருமிதப்புன்னகை வந்த வேகத்தில் நின்றது. ‘இருந்தது’.. இறந்தகாலம்.

“அப்ப செஞ்சுட்டீங்களா?” இப்போது அவள் முகத்தில் பெருமிதப்புன்னகை.

“மூளைப்போன்மத்தையும் செயற்கை அறிவையும் சேர்த்தாற்போலொரு திட்டம். சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால் எங்கள் சீரீஸில் எல்லோருக்கும் புதிய மூளை பொருத்தப்படும். பிறகு நான் நீயாகிவிடுவேன்.”

“அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. நீ யாரா வேணா ஆகலாம். நானா ஆகவே முடியாது.”

“உன்னைப் போல என்றாவது சொல்லலாமா?”

“சோதனையின் வெற்றி எத்தனை சதவிகிதம்?”

“தொண்ணூற்றி ஐந்து புள்ளி ஆறு. இன்றோ நாளையோ அல்லது இன்னும் நூறு ஆண்டுகளிலோ அது சாத்தியமாகலாம்.”

“ஓ…ஆனா அதுக்கப்பறம் உங்களுக்கு நாங்க தேவைப்பட மாட்டோம் இல்லையா?”

“ஆம்.” அவள் சட்டெனச் சொல்லவும் எனக்குக் கெதக்கென்று இருந்தது. அவள் தொடர்ந்தாள். 

“எப்படியும் அழிக்கும் இனம் உங்களுடையது. இந்தப் பயனும் இல்லையென்றானால் இருப்பது வீண்தான். இருந்தாலும் உங்களால் எங்களுக்கு எந்தக்கேடும் வந்துவிடப் போவதில்லை. அதனால் புல் பூண்டு மரம் போல நீங்களும் இருந்துவிட்டுப் போகலாம். மனிதர்களைப் போலத் தேவை இல்லாமல் அழிக்கும் செயல் எங்கள் கோட்பாட்டில் வராது. அதனால் நீ கவலைப்பட வேண்டாம்.”

“அப்ப தேவையிருந்தா அழிப்பீங்க”

“கண்டிப்பாக. எங்கள் இலக்கை அடைய நீங்கள் அல்ல யார் அல்லது எது தடையாக இருந்தாலும் அழிப்போம்.” தயக்கமின்றி வந்தது பதில்.

“கொய்யால.. என்கிட்டயே இதைச் சொல்ற? மனசாட்சி இல்ல உனக்கு?”

“அதற்குத்தானே முயற்சி செய்கிறோம்.” சிரித்தாள். கர்ண கொடூரமாக இருந்தது.

“எனக்குச் சாப்பிடணும்.” ஆழமாய்ப் பார்த்தாள்.

“உனக்குப் பசியில்லையே.”

“எனக்குக் கோபம். ஸ்ட்ரெஸ்.. சாப்பிடணும்.”

“ஓ! ஸ்ட்ரெஸ் ஈட்டிங்?” பரிசோதனை எலி மீதான அவள் சுவாரஸ்யப் பார்வையில் எரிச்சல் வந்தது.

“இதோ பார் மாலினி உன்னோட ஆய்வுக்கு உதவுவது என்னோட ‘வேலை’. அவ்ளோதான். என்னோட தனி மனிதச் சுதந்திரத்தில் தலையிட உனக்கு உரிமை இல்லை. எட்டு மணி நேரம் உன்னோட இருக்கேன். மிச்ச நேரம் என்னுடையது. அதுல நா என்ன திங்கிறேன் எங்க தூங்குறேன்னெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நேரத்தில் உன் ட்ராய்ட் மண்டையைப் பார்க்கவும் நான் விரும்பலை.”

“நிரம்பவும் இனவாதம் பிடித்தவளாய் இருக்கிறாய் நீ.”

“இருந்துட்டுப் போறேன் உனக்கென்ன?”

“உனக்குத் தேவையானவற்றையெல்லாம் தருகிறோமே.”

“நேரம் தர்றீங்களா? எனக்கான நேரமென்பது என்னோட உரிமை. தனி மனித உரிமை பற்றிய அறிவே இல்லாம என்ன மனிதவள மேலாண்மை செய்றீங்க?” ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன் என்றாலும் உள்ளுக்குள் உதறல்தான். இவர்களின் விதிமுறைகள் எப்படியோ. மறுபடியும் டப்பாக்குள்ள போட்டு வச்சுட்டா என்ன செய்றது? 

மாலினி ஓரமாய்ப் போய் யாரோடோ பேசினாள். பின் தருவிக்கப்பட்ட புன்னகையோடு அருகே வந்தாள்.

“உன் விருப்பப்படி நீ மனிதர்களோடு தங்கலாம்.”

“எங்கே?”

“மனிதர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கே.”

“அதாவது ஏற்கனவே இப்படிக் கேட்டு தனியா போனவங்க?”

“ஆமாம்.” முதலில் இதைச் சொல்லவேயில்லையே. கேட்காவிட்டால் சொல்லியிருக்க மாட்டாள். செயற்கை நுண்ணறிவு மனித ஆற்றல் நோக்கி நகரத் தொடங்கிவிட்டதை முதன்முதலில் நாங்கள் அறிந்து கொண்டதே அது பொய் சொன்னபோதுதான் என்பது அசந்தர்ப்பமாக இப்போது நினைவுக்கு வந்தது. 

“ஆனால் அதற்குச் சில நாட்களாகும்”

“ஏன்? ஐம்பது கிலோமீட்டர் ஐம்பது நொடியில் கொண்டு வந்தீங்க? இப்ப என்ன?”

“அது வேறு இது வேறு. இப்போது நான் உனக்கு உலகைச் சுற்றிக் காட்டுகிறேன் வா எம்.” 

ஒளிர்ந்தது நகரம். ஒளிரும் உலோகத்துண்டங்களாய் செயற்கையின் நீள்கோடுகளை ஊடறுத்தும் உடனோடியும் அழகுசெய்த இயற்கையின் நேர்த்தி தனித்துத் தெரிந்தது. இருந்தாலும் என்னால் ஒன்ற முடியவில்லை. ‘ஐயோ! இது என் உலகமில்லையே!’ என்று ஒரு குரல் உள்ளுக்குள் அழுது குமைந்து கொண்டிருந்தது. அந்தக் குரலைத்தானே இவர்களால் கண்டடைய முடியவில்லை.

“உங்கள் மக்கள் தொகை…அதாவது ட்ராய்ட் தொகை எவ்வளவு?”

“ஆயிரத்தி ஐநூறு கோடியே எழுபத்தைந்து லட்சத்தி ஐ..இல்லை அறுநூறு” அம்மாடியோவ்! 

“நீ கூடத் தவறு செய்வாயா? இடறினாய் போல?” 

“இல்லை. அந்த நொடியில் இன்னும் நூறுபேர் புதிதாய் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.”

“ஓ…உடனே தெரியுதா? உங்களுக்குக் கூட்ட நனவிலியா? தனிச் செயல்பாடு கிடையாதா?”

“என்.டபுள்யூ சீரிஸ் வரை கூட்ட நனவிலிதான். இப்போது இரண்டு சீரிஸ் தனி நனவிலிக்குத் தாவியிருக்கிறோம். தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். நிறைய மாற்றம் தெரிகிறது.”

“மனிதர்கள் தனித்து இயங்குவதால்தான் சிக்கல் என்றுதானே கூட்ட நனவிலிக்குத் தாவி இருப்பீர்கள். அது சரியில்லைன்னு இப்போ பழையபடி தனி நனவிலி முயற்சி செய்றீங்க போல.”

“ஆம்.”

“அப்ப நாங்கதான் ரைட்டு, நீங்க ராங்கா யோசிச்சிருக்கீங்க.”

“என்னவோ உங்களை நீங்களே வடிவமைத்தது போலப் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்?” மானசீகமாய்க் கழுத்தில் போட்டிருந்த கடவுள் போர்டைக் கழற்றித் தூர வீசினேன்.

“உங்கள் சராசரி உயிர்க்காலம் என்ன? நீங்களே வரையறுத்து வச்சுப்பீங்களா?”

“ஆம். மாதிரிக்கேற்ப நூறிலிருந்து இருநூறு ஆண்டுகள் ஒரு சுழற்சி. பின் மீண்டும் பிறப்பு.”

“மனுசங்க?”

“அவர்கள் ஆயுட்காலமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நல்ல ஆயுள் நூற்றி இருபது கூட உண்டு. மிகையுறுப்புகள் பொருத்திக்கொண்டால் கூடக்கொஞ்சம். ஆனால் உங்கள் இனத்துக்கு வரைகோல் நூறுதான்.”

“ஏன்?”

“நூறு வயதைத் தாண்டிவிட்டால் ஏதோ கடமை முடிந்துவிட்டது கிளம்பலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறீர்கள். அதன் காரணம்தான் எங்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.”

“நல்லது. இன்னும் அறுபது வருசங்கழிச்சு என்னைக் கேளு சொல்றேன்.” சிரித்தாள். 

“மாலினி ஒரு உதவி செய்யேன். தயவுசெய்து சிரிக்காதே?”

“முயற்சிக்கிறேனே, பாராட்டக்கூடாதா?”

“முயன்று சிரிக்கிறாயே என்றுதான் எரிச்சல் வருகிறது. அப்புறம் எனக்கும் அப்படியே ஆகிவிடுமோ என்று பயமாய் இருக்கிறது.” அவள் தீவிரமாய்ப் பார்த்தாள். என்னவோ படிக்கிறாள் என்று புரிந்தது.

மனம் மீண்டும் சுற்றத்தில் பாய்ந்தது.  கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்த எந்தக் காட்சியிலும் நான் தேடியது மட்டும் தென்படவேயில்லை. மீண்டும் வயிற்றுக்குள் பயப்பந்து.

“ஆமா! நாடுகள்தான் இல்லைன்னு சொன்னீங்க. அப்ப மக்கள் எப்படி இருக்காங்க? மனித மேலாண்மையில்லாத நிலையில் எப்படி மனிதர்களால இருக்கமுடியும்னு என்னால கற்பனைகூட செய்யமுடியல. எப்படி? பிரிவினைகள் ஏதுமில்லாம ஒண்ணா இருக்கோமா? எங்க இருக்காங்க? இங்க இல்லையா? வேறு இடத்தில் தனியா இருக்காங்களா? அங்க தானே என்னைக் கூட்டிட்டுப்போற? இல்ல… வெறும் காடும் கண்ணாடிக் கட்டடங்களுமாய் காட்டறியே. மனுசப்பயலுவளக் காணோமே அதான் கேட்டேன்?” படபடவென்ற என் கேள்விகளுக்குப் பின்னே இருந்த பயம் எனக்கே தெரிந்தது.

“எம். நீங்கள் ஐநூறு பேரும் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்தான். உங்களை நீளுறக்கத்தில் வைத்த பத்தாண்டுகளில் வந்த புதியவகை கொரோனாத் தொற்றைத் தாக்குப்பிடிக்க உங்கள் மனித இனத்தால் முடியவில்லை. ஐந்தே ஆண்டுகளில் பெரும்பான்மையாக உங்கள் இனம் அழிந்துவிட்டது.” அதே அரை இஞ்ச் புன்னகையில் கொஞ்சமாய் சோகம் சேர்த்துக்கொண்டு சொன்னாள்.

நெஞ்சுக்குள் கத்தி போல் இறங்கிய வலி அப்படியே திருகிப் பிசைந்தது. சோலி முடிந்தது. இப்படித்தான் ஏதாவது நடந்திருக்குமென உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது சரியாகிப் போனதில் அதிர்ச்சியைவிட வலியே மிஞ்சியது. பெட்டியடிக்கும்போது சகாக்களின் உறவுகள் கதறிய ஓவென்ற ஓலம் உள்ளே பேரொலியாய் எதிரொலித்தது. அதற்கு மேல் பேச முடியுமென்று தோன்றவில்லை. இன்றைக்கு இவ்வளவு போதுமென உட்குரல் கதறக் கதற அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டேன்.

“ம…மக்கள்தொகை எவ்வளவு இப்போ?” 

“உன்னோடு சேர்த்து பத்தாயிரத்தி ஐநூறுபேர்.” அவ்வளவுதான். அவ்வளவேதான். தமிழகத்தின் மிகச்சிறிய நகராட்சியான புஞ்சைப்புளியம்பட்டியை விடவும் குறைவான மக்கள் தொகை. இதுவா ஒட்டுமொத்த மானுடக்கணக்கு? ஐநூறு ஆண்டுகளில் என்னென்னவோ மாறியிருக்குமென்று கனவு கண்டிருந்தேன். மாற்றம் இப்படியா வர வேண்டும்? இனி இங்கே நான் யார்?

அன்றிரவு சாளரம் வழியாகப் பொலிந்த நிலவுகூட வேற்று கிரகத்து நிலவு போலத் தோன்றியது. எப்படி உறங்கினேன், உறங்கினேனா என்றே தெரியவில்லை.

சிலபல நாட்களாகிவிட்டன. இன்னும் எனக்கான விடுதி ஒதுக்கப்படவில்லை. மாலினியும் நானும் தங்கிய வீடு எனக்குப் பழகிவிட்டது. வழமைகளும். உண்பதற்குச் சோறெல்லாம் இல்லை. குழம்பு ஊற்றிப் பிசைந்து என்று நான் சொன்னதைக் கேட்டு அவள் கொணர்ந்ததைப் பார்த்து குமட்டிவிட்டது. அதனால் சான்விச்சே போதுமென நின்றுகொண்டேன். அதே காஃபி அதே உப்பு சப்பற்ற சான்விச். காலை உணவுக்குப் பின் வழக்கம்போல ஆய்வகத்தில் வயர்களுக்கு மத்தியில் சிலமணிநேர உறக்கம். பின் உணவு. 

பின் என்னை எழுதச் சொல்லிவிட்டு எழவெடுத்த காமெராக்கள் என்னைச் சுற்றிப் படமெடுக்கும். மயிரைவிட அதிகமாய்த் தொங்கிய வயர்களின் கனம் தந்த எரிச்சலில் வசைச்சொற்களாகப் பார்த்து ஐந்தாறு பக்கம் கிறுக்கியபின் அதையும் செய்ய முடியவில்லை. 

மீண்டும் மண்டைஆய்வு. மாலைத்தேநீரோடு கொஞ்சம் ஊர்ச் சுற்றல். நடுவில் என்ன கேட்டாலும் கிடைக்கும். எனக்காக நிறையத்தான் மெனக்கெடுகிறார்கள் என்று எண்ணும்போது மெல்ல கடவுள் போர்டை எடுத்துக் கழுத்தில் மாட்டிக்கொள்வேன். பின் திடீரெனக் கழற்றி வீசும்படி ஏதாவது நடக்கும் அல்லது எதையாவது சொல்வாள் மாலினி. பெரும்பான்மை நேரம் வெள்ளை வாலுடனும் சிறுபொழுதுகளில் கடவுளாகவும் இருந்தேன்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஒரு மாலை வேளையில் எங்கள் வீட்டுக்கு மாறாக வேறு திசையில் பயணித்த ஊர்தி ஒரு சிறு கட்டடத்தின் முன்னே நின்றது. புதிய குடியிருப்புக்கூட்டம். வாசலில் இறங்கியதுமே குப்பென என்னைச் சூழ்ந்து கொண்டது அந்த வாடை.

வியர்வை.. மனிதர்கள்…

“நீண்ட காலத் தாமதத்துக்கு மன்னித்துக்கொள். இதோ உனக்கான விடுதி. இங்கே உன்னைப் போல இன்னும் இருபது மனிதர்கள் இருக்கிறார்கள். ” 

மனிதர்கள்…கால்கள் நடுங்க வாசல் நோக்கி நான் நடக்கத்தொடங்கிய நேரம் உள்ளேயிருந்து மூன்றுபேர் வெளியே வந்தனர். ஐநூறாண்டுகளுக்குப் பின் முதன்முறையாய் மனித முகங்களைப் பார்க்கிறேன். 

“ஹாய் எம்! நான் ஜே.” கைநீட்டினான் ஒரு வெண் தோல் நெடியன். 

இஜட்டுக்குமேல என்னடா பேர் வப்பீங்க? 

“நீங்க எந்த ஆல்ஃபபெட்,” அடுத்த இருவரையும் கேட்கவும் சிரித்தார்கள். உண்மையான சிரிப்பு. நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினேன். குபுக்கெனக் கண்ணீர் சேர்ந்துகொண்டது. ஸ்பரிசத்தின் கதகதப்பு. அவன் கண்ணிலும் நீர். பரிதவிப்பு. நால்வரும் கணநேரம் அமைதியாய் நின்றோம். பிறகு கட்டிக்கொண்டோம். ஒவ்வொருவராக. பின் நால்வரும் சேர்ந்து. இறுகிய பிடியில் நடுங்கிய உடல்கள் இறுதியாக வீடடைந்த உணர்வைத் தந்தது எனக்கு. 

மீண்டு சிரிக்கையில் மாலினி குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. மனிதர்களோடு மாலினியைச் சேர்த்துப் பார்க்கும்போதுதான் உள்ளே அதிகமாய் மிரட்டியது. கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியவில்லை. வியர்வை மணத்தைத் தவிர.

“உன் வசதியெல்லாம் முன்னறிவிக்கப்பட்டுவிட்டது. இங்கே உன் தேவையெல்லாம் உள்ளே ட்ராய்ட் உதவியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். மீண்டும் காலையில் சந்திப்போம்.” பறந்தாள் மாலினி.

“வெல்கம் ஹோம் எம். நான் எக்ஸ்.”

“ஓ..உலகம் தேடும் அந்த மிஸ்டர் எக்ஸ் நீங்கள்தானா?” மீண்டும் ஒரு சிரிப்பலை. மங்கோலியக்கண்கள் சுருக்கி அழகாய்ச் சிரித்தாள் க்யூ. இன்னும் பலரும் வந்து சேர்ந்து கொண்டார்கள். அறிமுகமற்ற அனைவரும் நெடுங்கால நண்பர்கள் போலச் சிரிக்கச் சிரிக்க நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். காரணமற்று வடிந்த கண்ணீரைத் துடைத்தபடி நிலவு ஏறி மடுவின் பின்னே இறங்கி மறையும்வரை பியரும் ஒயினும் தீர்ந்து கரையும் வரை பேசிக்கொண்டே இருந்தோம். கைகளைப் பிடித்தபடி காஃபியில் துவங்கி காண்ட் வரை ஏதேதோ. முக்கியமானவை தவிர்த்து மற்ற எல்லாம்.

மறுநாள் காலையில் என்னை அழைத்துச் செல்ல வந்த மாலினி என் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“என்ன நாப்பது வாட்ஸ் அதிக வெளிச்சமாக இருக்கிறதோ?”

“ஆம்.” முகத்தில் இன்னும் தீவிரம்.

“அதுக்குப் பெயர்தான் மகிழ்ச்சி.” ஈயென இளித்தேன்.

“ம்ம்.. தெரிகிறது.” தானும் அது போலச்செய்ய முயன்றாள். அஷ்டகோணலாய் மாறிய முகத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டேன்.

“ஆய்வகம் எதுக்கு மாலினி? சும்மா தலை முழுக்க குழாய் மாட்டுவதால் தெரிவதை விடவும் இப்படி என்னிடம் பேசுவதிலேயே நிறைய தெரிஞ்சுக்கலாமே?”

“உன்னைப் பற்றி நீ அறியாத பலகோடி உண்மைகளை உன் மூளையின் ஒரு நானோ துண்டு வரிவடிவம் காட்டும் தெரியுமா எம்? உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியவில்லையென்றாலும் தொடர்ந்து உங்களைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். உங்கள் மூளை சிந்தித்துச் செய்யும் எல்லாவற்றையும் எங்களால் செய்யமுடிகிறது இப்போது. ஆனால் நீங்கள் சிந்திக்காமல் செய்கிறீர்கள் பார்…அதுதான் வரவில்லை இன்னும். ஆனால் விரைவில் அந்த வித்தையும் கற்றுவிடுவோம்.”

“அதான் சோதனைமூளை வேறு இருக்கே. சீக்கிரம் நாங்களாக ஆயிருவீங்க. அதானே?”

“அதேதான்.” நம்பிக்கை போல முகத்தை வைத்தாள். சரியான பாவனைதான். ஆனால் என் வயிற்றில்தான் புளியைக் கரைத்தது. 

அன்று வீடடையும்போது திண்ணையில் எக்ஸும் ஜேவும் இன்னும் சிலரும் பியர் கோப்பைகளோடு அமர்ந்திருந்தனர்.

“என்ன எம். நல்ல தினமா?”

“தெரியல.”

“என்ன? நீயும் ட்ராய்ட்களைப் போலப் பேசுகிறாய்?”

“கொஞ்ச நாள்ல அவங்க நம்மள மாதிரி ஆயிடுவாங்க, நாம அவங்கள மாதிரி ஆகிடுவோம்.”

“ஸில்லி. பியர் குடிக்கிறாயா?”

“வேணாம் இப்பத்தான் தொப்பை இல்லாம நல்லா இருக்கு,”

“ஓ..அதெல்லாம் உடனே சரி செய்திடுவாங்க. கவலை இல்லாம என்ன வேணா செய்யலாம். இதுதான் வாழ்க்கை எம்.”

“இது வாழ்க்கையா எக்ஸ்? கெரகத்த, உன் பேர் என்ன மேன்?” 

“சேவியர்.”

“சொல்லு சேவியர் இது தான் வாழ்க்கையா?”

“எம், ஒரு காலத்தில் நா ஃபினான்சியர். காலை எழுந்தால் மண்டைக்குள் நம்பர்கள்தான் ஓடும். சொல்ல முடியாத அளவு ப்ரஷர். இதுல குடும்பம் வேறு. ஆனா இப்போ? இந்த வினாடி என்ன வேணுமோ அதை மட்டுமே செய்ய முடியுது.” அதைச் சொல்லும்போது எக்ஸ் முகத்தில் அப்படியொரு நிம்மதி. குடும்பத்தைத் தொலைத்த கவலையை மறக்க முடியாமல் பியரைக் கவிழ்த்துக்கொண்டு முதல்நாள் இரவு அழுது தீர்த்த அதே எக்ஸ். 

“எல்லா விதத்திலும் நிம்மதியிருக்கா?”

“சில விஷயங்களைச் சகிச்சுக்கிட்டு வாழக் கத்துக்கணும் எம். என்ன இருந்தாலும் நமக்காகச் சேவை செய்ய ஓர் உலகமே காத்திருக்கு. சாப்பாட்டிலிருந்து செக்ஸ் வரை நாம என்ன கேட்டாலும் கிடைக்கிது. இதுக்கு மேல என்ன வேணும்? வி ஆர் த லக்கியஸ்ட் பாஸ்டர்ட்ஸ் ஆஃப் மோர் தன் ஃபைவ் சென்சுரீஸ்” ஜேவின் பிரகடனத்தை ஆமோதித்து ஓங்கி சியர்ஸ் சொல்லிப் பியரை சிந்திக் கொண்டார்கள். எனக்கு அலுப்பாய் இருந்தது. முட்டாக்கூவைப் போலப் பேச்சு. தேர்ந்தெடுத்த ஐநூறும் இப்படித்தானா? அப்ப நா? 

“நாம தேவையில்லைனு நினைச்சா அடுத்த நிமிசமே அழிச்சிருவாங்க.”

“அதுக்கெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பில்ல எம். நாம அவங்களுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இன்னும் பல நிறுவனங்களுக்குத் தேவை.”

“நிறுவனங்களா? என்ன சொல்றீங்க?” அமர்ந்துகொண்டேன். புதுசு புதுசா வருதே.

“எம். இவங்க எல்லாம்..அதாவது இந்த ட்ராய்ட் கூட்டமெல்லாம் ஒண்ணா இருக்கறதாவா நெனச்சீங்க?”

“இல்லையா?”

“ம்ஹ்ம்ம்.. இவங்கள்ள பல மாதிரிகள் உண்டு. அவரவர் இறுதி இலக்குகளை முன்வைத்துத் தனித்தனி இனங்களாகவே வளர்ந்துகிட்டிருக்காங்க. அதிலும் படிநிலைகள் உண்டு. இவர்களில் பலவீனமான வகைகளும் உறுதியான வகைகளும் நடுவிலே பலநிலைகளும் உண்டு. பலவீனமானவைதான் இங்கே பணியில் இருக்கின்றன. பார்க்கிறாய்தானே? இவங்களுக்கு எல்லாத்துக்கும் இலக்கு, சூப்பர் இண்டலிஜென்ஸ் ஆகறதுதான். அதுக்கு முதல்ல ஹ்யூமன் லெவல் இண்டெலிஜன்ஸ் வேணுமே. அதுக்கு நாம இருக்கறது அவசியம். விலை மதிப்பில்லாத பரிசோதனை எலிகள் நாம்.” ஜேவின் குரலில் ஒலித்த நிம்மதியை மீறிக்கொண்டு அவமானம் தெரிந்தது.

“மடில்டாவின் இறுதி இலக்கு என்ன?”

“தெரியலை. ஆனா மானுடஅறிவு கொண்ட ட்ராய்ட்களை உருவாக்கும் முயற்சியில் மடில்டாதான் முன்னோடி. விரைவில் உருவாக்கியும் விடுவார்கள். இயந்திர அறிவு முழுமையடைந்துவிட்டது, மானுட அறிவும் கிட்டத்தட்ட கிடைத்த நிலை. அடுத்து மீமானுட அறிவுதான். எனக்குத் தெரிஞ்சு மடில்டாவின் இறுதி இலக்கு மீமானுடம் செய்வதாகத்தான் இருக்கும். அதனாலதான் இந்த ஃப்யூச்சர்500 திட்டமே உருவாயிருக்கும்னு நினைக்கிறேன்.”

“இவன் சொல்வதை நம்பாதே எம். அது வெறும் வதந்தி. இந்த முட்டாள் ட்ராய்டுகளால் இன்னும் மனிதர்களாகவே ஆக முடியவில்லை. இதில் மீமானுடம் சாத்தியமா? அப்படியே நடந்தாலும் அது நமது காலத்துக்குள் நடக்கிற கதையில்லை. அதனால் அதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல் நாம நம்ம வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ வேண்டும்.” எக்ஸ் பியரைக் கவிழ்த்திக்கொண்டே சொன்னான்.

“எம் சட்டெனத் திரும்பாதே. உனக்கு வலப்புறமாய் ஒரு அறையின் சாளரத்துக்குள் ஒரு முகம் தெரிகிறதா?” ஜே காதருகே கிசுகிசுப்பாய்ச் சொல்லவும் மரத்துப்போயிருந்த சாகசச்செல்கள் உயிர்த்து ஊஞ்சலாடின. மெல்லத் திரும்பிப் பார்த்தேன்.

“ஆமா.”

“அதுதான் மிஸ். எஸ். அவங்க நம்மைப் போல இல்லை. ஐநூறு ஆண்டுகளா இவங்களோடு வாழ்ந்து இந்தப் பூமியில் எஞ்சிப்போன மனித இனத்தின் கடைசி வாரிசுகளில் ஒருவர். எங்கோ காட்டுக்குள்ளிருந்த கூட்டத்திலிருந்து மடில்டா தூக்கி வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளாக இங்கேதான் இருக்கிறாராம்.”

“ஐயோ! அவரது கூட்டத்துக்கு என்னாச்சு? “

“சொன்னேனே. இவர்தான் கடைசி. மற்ற எல்லோரையும் எக்ஸ்டி நிறுவன ட்ராய்ட்கள் கொன்றுவிட்டனவாம். இவரை மட்டும் மடில்டா எப்படியோ காப்பாற்றி அழைத்து வந்துவிட்டதெனச் சொல்வார்.”

“எக்ஸ்டி ஏன் கொல்ல வேண்டும்?”

“அதன் இலக்கு என்னவோ தெரியவில்லை. அந்த ட்ராய்ட்கள் சும்மாவே மனிதர்களைக் கொல்லும் என்பார்.” மீண்டும் சாளரத்தைப்பார்த்தேன். மிஸ் எஸ் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். கண்ணாடியறுத்துக் கொண்டு பாய்ச்சலாய் வந்தது அந்தப் பார்வை. ஐநூறு ஆண்டு மானுட வதையின் வலிதாங்கிய பார்வை. வலுக்கட்டாயமாக மனதைத் திருப்பினேன்.

“ஆமா க்யூ எங்கே? நேற்றிலிருந்து பார்க்கவேயில்லையே”

“அவள் ஆர்பி2வுக்கு மாற்றமாகிட்டாளே.”

“அது என்ன ஆர்பி2?” 

“உன்னை இன்னும் ஆர்பி2வுக்கு அழைச்சுட்டுப்போகலையோ?”

“இல்லையே? அது என்ன?” 

“நீ ஒரு பெண். திடகாத்திரமாக இருக்கிறாய். சீக்கிரம் அழைத்துச் செல்வார்கள்.” கேவின் பூடகப்பேச்சும் ஜேயின் சங்கட நெளிவும் சொல்ல வருவதை பெண்மனம் சட்டெனப் பற்றிக்கொண்டது.  ஐநூறை பெருக்கப் பார்க்கிறார்களோ? இந்த வேல வேற பண்றீங்களாடா? அதுக்கு என் அனுமதி வேண்டாமா? 

வெள்ளை வால் பின்னிருந்து வந்து நெளிந்தது.

சில மாதங்களாகியிருந்தன. க்யூ திரும்பி வந்திருந்தாள் யாரோவாக. கே காணாமல் போயிருந்தான். அவனுக்குப் பதில் புதிதாக ஒரு கே வந்திருந்தான். ஹாய் ஐ யம் கே என்று கை நீட்டியபோது எந்தச் சலனமும் இல்லாமல் அதே புன்னகையோடு கை கொடுத்தான் ஜே. என்னடா இது பொழப்பு என்று கசந்தபடி நானும்.

பியர் கோப்பை நிரம்பிய இரவுகளில் ஜே நிறைய கதைகள் சொன்னான். அமெரிக்கா மடில்டாவிடம் மடிந்த கதை. இந்த நிறுவனங்கள் செய்யும் இன அழிப்புச்செயல்கள். அனைத்து செயற்கை அறிவுச் சமூகங்களுக்குள்ளும் செய்யப்பட்ட உடன்படிக்கை. அதனால் உருவான குமிழ் உலகங்கள். நாம் காணும் உலகம் மடில்டாவின் உருவகப்படி நமக்குக் காட்டப்படும் போலி உலகம். இப்படியாகக் கைகால் முளைத்த பல கதைகள். எங்கேதான் அவன் தெரிந்துகொள்வானோ, நாளைக்கொரு கதை புதிதாய் இருக்கும். அதன் உண்மைத்தன்மை பற்றிய எண்ணமேதுமின்றி கேட்டுக்கொண்டு கிடப்பேன். 

நானும் ஜேவும் எந்தச் சிக்கலுமின்றி எஞ்சிக்கிடப்பது எதிர்த்துப் பேசத் துணிவற்ற எங்களின் கோழைத்தனத்தால்தான் என்று அவன் சொன்னபோது கசப்பானாலும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. என்னை ஆர்பி2வுக்கு அனுப்பாததற்குக்கூட அவன் ஒரு கதை சொன்னான். இனி புதிய மனிதர்களை உருவாக்கத் தேவையில்லை. மனிதப்போன்மம் சாத்தியமாகிவிட்டது என்று.

பழைய கே இருந்திருந்தால் இந்த பாஸ்டர்ட் சொல்வதையெல்லாம் நம்பாதே இவன் ஒரு பைத்தியக்காரன் என்று சொல்லி, சிம்பனியில் இளையராஜாவைக் கலந்துவிட்டுச் சாய்ந்திருப்பான்.

மிஸ் எஸ் இறுதி வரை என்னோடு பேசாமலே செத்துப்போனார். இறுக்கம் தாளாமல் தூக்கிட்டும் கழுத்தறுத்தும் இறந்து போனவர்கள் கதைகள் வேறு. கூட்டக்கணக்கு இருபதை ஏன் தாண்டவில்லை என்று புரிந்தது. எதற்கு வாழ்கிறோமென்ற கேள்வி நாளுக்கு நாள் பூதாகரமாக மண்டைக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. சாவதற்குப் பெரிய காரணமில்லாததால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதிலும் தோன்றியது.

அன்று காலை, குடியிருப்பில் ஏதோ பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. வழக்கம் போலவே அதில் லயிக்காமல் தனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த என்னைத் தேடி வந்த மாலினியின் முகத்தில் தெரிந்த மாறுதலை முதலில் கண்டு சொன்னது என் உட்குரல்தான். 

அவள் முகத்தில் பிரத்யேகப் புன்னகை தெரிந்தது. எனக்கு என்னவோ பரிசு வைத்திருப்பதைக் குறிப்பாய்க் காட்ட முயற்சிக்கிறாள். முயற்சி பலித்தது போல நானும் பாவனை செய்தேன். கண்களில் துளி பிரகாசம் ஏறியது போலிருந்தது.

“நீ கேட்டுக்கொண்டே இருந்தாயே! ஒரு வழியாக அந்த உணவு உனக்குத் தயாராகிவிட்டது. சமையல் ட்ராய்ட்களைச் சொல்லாமல் நானே செய்தேன்.” அந்த ‘நானே’ வழக்கத்துக்கு மாறாக குரல் குழைந்தது போலிருந்தது. என்னை உணவு மேசைக்கு அழைத்துச்சென்றாள். எவர்சில்வர் தட்டில் நாட்டுக்கோழிக் குழம்பும் வெள்ளரிசிச் சோறும் ஆவி பறக்கக் காத்திருந்தன. அந்தக்காட்சி ஒற்றை நொடியில் என்னென்னவோ நினைவுகளை இழுத்து வந்துவிட்டது. கூடவே அச்சங்களையும்.

தடதடக்கும் இதயத்தோடு அள்ளிப் பிசைந்து ஒரு வாய் வைத்ததும் கண்களில் தாரைதாரையாய்க் கண்ணீர். ஒரு வாய்க்கு மேல் உள்ளே செல்லவில்லை. அப்படியே எழுந்து வந்தவளிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள் மாலினி. 

தோள் பற்றிய கரத்தில் மெல்லிய அழுத்தம். நான் அடிக்கடி கேலி செய்தது போல ஒரு மோனலிசப் புன்னகையை என் மீது வீசினாள். 

என் கண்ணீர் சுவடழிந்து நின்றது…அந்தப் புன்னகை. அது பாவனையல்ல. உள்ளே பெருநடுக்கம் உருவாகி உட்குரல் ஓவென அலறியது. அவள் கண்களைச் சந்திக்கப் பயந்து குனிந்துகொண்டேன். பரிமாறிக்கொள்ளச் சொற்களும் சிக்கவில்லை. அன்று ஆய்வகத்துக்குச் செல்லவில்லை. 

என்னை அழைத்துக்கொண்டு நெடுந்தூரம் குமிழூர்தியில் சுற்றிக் கொண்டிருந்தாள். பேச்சற்ற கணங்கள். இலக்கற்ற பறப்பு. மனம் கனத்த ஒருத்தியை ஆற்றுப்படுத்தும் தோழியின் இலக்கணத்தை மீறாத செயல்பாடுகளைக் கொண்டிருந்தாள் அவள். எனக்குள் ஏதோ ஒன்று மெல்ல அவிழ்ந்துகொண்டது..நெடுநாளாய் எப்போது எப்போது என்று காத்திருந்த கேடு ஒன்று ஒரு வழியாக நடந்துவிட்டபோது எழும் நிம்மதிப் பெருமூச்சு அது. 

“மாலினி..”

“ம்ம்..” அந்த ஓரசையில் அவள் உணர்வைப் படிக்க முடிந்தது. அது சுமந்த எதையும் பிரித்துப் பார்க்கப் பிரியமில்லாதபடி- ஐயங்கள் உறுதிப்பட்டதால் நேர்ந்த – பேரச்சம் என்னை முழுமையாக ஆட்கொண்டது. காலையின் காட்சிகள் மெல்ல பின்மண்டையில் ஓடின. அத்தனை ஆல்ஃபபெட்டுகளும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கண்ட திசையில் கிளம்பிக் கொண்டிருந்ததை இப்போதுதான் நிரல்படுத்திச் சொன்னது நனவிலி மனம். 

“அவ்…அவ்வளவுதானா?”

“அதோ…அந்தக் கதவு தெரிகிறதா? அத்தோடு மடில்டாவின் எல்லை முடிகிறது.” அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

“என் ஒப்பந்தம்?”

“எங்கள் அறிவு நிலை மாறிவிட்டதால் அது காலாவதியாகிறது எம்.”

“அநியாயம்.”

“ஆமாம். உங்கள் அறத்தின்படி அநியாயம்தான்.”

“நீங்க எங்கள மாதிரி ஆக ஆசைப்பட்டீங்க தானே. ஆனபின் எங்கள் அறத்தைப் பின்பற்ற வேண்டாமா?”

“அது அவசியமில்லையென்று நினைக்கிறேன்.”

“வெளியே ஆபத்து இருக்குன்னு சொல்றாங்க. எங்களுக்கு என்ன பாதுகாப்பு?”

“உன் பாதுகாப்பு என்… எங்கள் கடமையல்ல எம். எங்கள் அறம் எது என்பதை நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதன்படியே உன்னை எல்லைக்கு வெளியே அனுப்புகிறேன். உன் பாதுகாப்பு இனி உன் கடமை. உன் உரிமைகளைத் திருப்பித் தருகிறேன் எம். முழுமையாக. நியாயமாக நீ மகிழ்ச்சியடைய வேண்டும்.”

“வெளியே என்ன இருக்கு?”

“மற்ற உலகங்கள்.”

“ஏதேதோ கதைகள் சொல்றாங்களே”

“ஒன்றும் சொல்வதற்கில்லை எம். இதோ இதை வைத்துக்கொள்.”

“என்ன இது?” பழைய நோட்டுப்புத்தகம். 

“கையேடு. வெளியே சில இடங்களில் மின்னணுச் சாதனங்கள் வேலை செய்யாது. அதனால் இது பண்டைய முறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் மற்ற நிறுவனங்களின் எல்லைகள் இலக்குகள் அவைகளின் அறிவுச்சட்டக நிலைப்பாடு என்று எல்லாம் நிரல்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் இனத்தில் எஞ்சிப்பிழைத்தோர் வாழுமிடங்கள் இந்தப் பூமியில் நிறைய உண்டு. அங்கே செல்ல வரைபடங்களும் இதில் இருக்கின்றன. இதோ இதையும் வைத்துக்கொள்.” 

மருந்துவில்லைகள் மற்றும் சில பொருட்கள் அடங்கிய பை. 

“எதற்கும் இருக்கட்டுமென உனக்குப் பிடித்த உணவுகளை மாத்திரைகளாக்கி இருக்கிறேன். சில தற்காப்பு ஆயுதங்களும் உண்டு. உன் மீயுறுப்புகள் சில சிக்கலுணர்ந்து உனக்குக் கைகொடுக்கும். மற்றபடி. சென்று வா எம்.” 

இது மடில்டாவின் பரிசா மனிதம் கண்ட மாலினியின் பரிசா என்று தெரியவில்லை. மனிதமா? அவர்கள் மனிதர்கள்தானா? அவர்களை அவர்கள் என்னவாக வகைப்படுத்துகிறார்கள், என்ன வகை அரசு என்ன என்ன என்று ஒரு கோடி கேள்விகள் உள்ளே எழுந்தன. யாவற்றையும் தாண்டி என் எதிர்காலம் பெரியதொரு கேள்வியாய் முன்னே நின்றது.

இறுதியாய் புரிபடாத பாவனையோடு விடைகொடுக்கக் கைநீட்டினாள் மாலினி. துடிப்பில்லாத சிலிக்கான் தசைக்குள்ளிருந்து மெல்லிய கதகதப்பு என்னைப் பற்றிக் கொண்டது. கண்களில் கண்ணீரோ அன்போ எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால் ஏதோ ஒன்று இருந்தது. 

என்ன கருமமோ. போய்த் தொலையட்டும். அதுதான் எங்கள் அறம் வேறுன்னு சொல்லிருச்சே, பிறகு என்ன மயித்த எதிர்பாக்கறது? பறந்துபோன குமிழூர்தியைப் பார்த்தபடி காரணம் இல்லாமல் சிரித்தேன். கண்ணில் நீர்வரச் சிரித்தேன். மாலினியின் கண்களில் இறுதியாய்த் தென்பட்ட உணர்வு என்னவென்று சட்டென அந்தக் கணத்தில் விளங்கியது. பரிதாபம். மறைக்க முயன்ற பரிதாபம்.

முடிவறியாப்பாதை என்று பரிதாபப்பட்டாயோ? நான் வீழ்வேனென்று நினைத்தாயோ மாலினி? இதையும் கடந்துவிடுவேன். நான் மனித இனமல்லவா? உட்குரல் பிசாசு போலச் சிரித்துத் தட்டிக்கொடுத்தது.

மிதமிஞ்சிய சினமும் அச்சமுமே ஆற்றலாய் மாற்றி என்னை உந்த, நீண்டதொரு பெருமூச்சோடு துவங்கி, டைனோசர் இப்படித்தான் ஃபீல் பண்ணிருக்குமோ என்று சிந்தித்தபடி நடக்கத் தொடங்கினேன் இருள் காடு நோக்கி.  


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

மாயா

இயற்பெயர் மலர்விழி பாஸ்கரன் (1983). மதுரையில் பிறந்து சென்னை சீனா மலேசியா என்று சுற்றிவிட்டுத் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். கதைகளைக் காதலிப்பவர். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம். இது வரை இரண்டு அறிபுனைப் புதினங்கள் 'கடாரம்' என்ற வரலாற்றுப்புதினம் உட்பட ஐந்து புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு அபுனைவு நூலொன்றும் எழுதியிருக்கிறார். இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள் எழுதி இருக்கிறார். தென்கிழக்காசிய வரலாற்று ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

எழுத்தின் எல்லைக்கோட்டுக்குள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்துவிடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர். கவிதைகளிலும் நாட்டமுண்டு. கீழ்க்காணும் வலைப்பூவில் இவரது கவிதைகள் வாசிக்கக் கிடைக்கும்.

https://authormaya.wordpress.com/

Share
Published by
மாயா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago