‘இந்தக் கெணத்துல குதிச்சு குளிக்கிறத எப்ப நிறுத்தப் போற? சின்னப் பிள்ளையா நீ?’ என்று அம்மா கேட்டாள். கொடியில் தொங்கிய துவாலையால் தலையைத் துடைத்துக் கொண்டிருந்த சேகருக்கு இது பழகிப் போன கேள்வி. ஆழமும், அமைதியும், உடல் முழுதும் பரவும் திடீர்க் குளிர்ச்சியையும் எப்படி விளக்க முடியும். வயதிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? எப்பொழுதும் போல மௌனம்தான் இந்தக் கேள்விக்குப் பதில்.
‘சரி… நாகராஜன் மாமா வந்துருக்காரு. இந்தக் காப்பிய அவருகிட்ட குடு. அடுப்பிலிருந்து இட்லியை இறக்கி வச்சுட்டு வரேன்,’ என்றாள்.
சட்டை அணிந்து, அம்மா நீட்டிய பித்தளைக் குவளையோடு வாசலுக்கு வந்தான். காலையிலேயே வெயில் ஒரு வெள்ளை நதி போலத் தெருவில் ஓடியது. அப்பாவும், நாகராஜன் மாமாவும் எதிரெதிர்த் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
‘சேகர்…எப்படி இருக்க?’ உள்ளங்கைகளைத் திண்ணையில் பதித்துக் கால்களை மெதுவாக ஆட்டியபடியே கேட்டார் நாகராஜன். நாகராஜனின் குடும்பம் பல தலைமுறைகளாக இந்த ஊரிலேயே வாழ்பவர்கள். அப்பாவின் நண்பர்.
‘நல்லா இருக்கேன் மாமா.’
‘இன்னும் ரெண்டு வாரத்துக்கு இங்கிருந்துதான் வேல பாக்கப் போறியாமே. அப்பா சொன்னாரு.’ மூக்குக்கண்ணாடியை மேல் தள்ளியபடியே கேட்டார் நாகராஜன். இரண்டு, மூன்று நாளாகச் சவரம் செய்யாத தாடை, சுருண்ட கருவெள்ளை முடிகளை அகற்றிக்கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் வழுக்கை, அவசரத்தில் தீட்டிய விபூதிக் கீற்று என்று கூட்டங்களிலே சீக்கிரம் கரைந்து போகக் கூடிய முகம் அவருக்கு.
‘ஆமாம்… இவங்களையும் பாத்து கொஞ்சம் நாள் ஆச்சு…அதான்.’
‘ஒர்க் ப்ரம் ஹோம் பளகிப் போச்சுன்னு நெறய பசங்க ஆபிசுக்குத் திரும்பிப் போக மாட்டேங்கிறாங்களாமே… படிச்சேன்,’ என்றார். அப்பாவுக்கு இவர் சொன்ன விஷயம் புரியவில்லை என்று அவர் முகத்திலேயே தெரிந்தது.
‘ஆனாலும் இது வசதிதான்… அலைய வேணாம் பாரு,’ என்று காபியை இரண்டு மடக்கு குடித்தார் நாகராஜன்.
‘நெட்டு இருந்தா போறும் மாமா.’
‘ம்ம்ம்… வலை… வலை,’ என்றார் நாகராஜன். மனதால் அளக்க முடியாத எதையோ வார்த்தைகளில் கொண்டு வர முயற்சிப்பது போல.
‘வர ஆடிக்குள்ள இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெக்கலாம்ன்னு யோசிச்சிட்ருக்கோம்,’ என்று அம்மாவின் குரல் ஒலித்தது. சமையலறையில் இட்லியை இறக்கி வைத்துவிட்டு இங்கு வேறு எதுவோ ஒன்றை ஏற்றி வைக்கும் திட்டத்துடன் வந்திருக்கிறாள் போல என்று நினைத்துக்கொண்டான் சேகர்.
‘பூஜையில கேட்டுற வேண்டியதுதான்,’ என்றார் நாகராஜன்.
‘வர அமாவாசையலே பூஜையை வெச்சிருக்காரு… அத சொல்லத்தான் வந்தாரு,’ என்றார் அப்பா.
‘அப்படியா… நல்லதா போச்சு. நான் கலந்துக்குறேன்,’ என்றாள் அம்மா சந்தோஷமாக.
‘சரி அப்ப நான் கிளம்புறேன். திண்டிவனம் போணும், ஒரு வேல இருக்கு.’
‘சாயங்காலம் பையன்கிட்ட குடுத்துவிடறேன்’ என்றார் அப்பா
‘அவசரம் இல்லே… மெதுவா கூடக்க் குடுத்துவிடலாம்,’ என்று சொல்லிவிட்டு, தெருவில் கழட்டிப் போட்ட வார் போட்ட செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு, கையில் வைத்திருந்த கருப்புத் தோல் பையைத் தலைக்கு மேல் குடை போல பிடித்துக் கொண்டு நடந்து சென்றார் நாகராஜன். செருப்பு குதிகாலைத் தட்டி எழுப்பும் சத்தம் நாய்க் குட்டிகள் போல அவரைப் பின்தொடர்ந்தது.
***
அன்று சாயங்காலம் அப்பா கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு நாகராஜன் மாமா வீட்டை நோக்கி நடந்தான் சேகர். வெயில் குறைந்திருந்தாலும் சாலை வெப்பமாக இருந்தது. சற்றுத் தள்ளி தெருவோரத்தில் தங்க அரளி பூத்திருந்தது. அம்மாவுக்குப் பிடித்த செடி. அதைத் தங்கப் பெட்டி என்பாள். மலர்கள் தங்கம் நிரம்பிய பெட்டியிலிருந்து தொங்கும் காசு மாலைகள் போல இருக்கும் என்பாள். தெருவில் நடமாட்டம் எதுவும் இல்லை. சற்றுத் தள்ளி வீட்டு வாசலின் முன் யாரோ நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள். மண் வாசனை லேசாக நாசியை நெருடியது.
தெரு முனையில் ஐயன் குளத்தில் நீர் இன்னும் இருக்கிறது என்பதை அதில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையின் அடர்ப் பச்சையால்தான் அடையாளம் காண முடிந்தது. குளத்தைச் சுற்றி இருக்கும் மேட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிழிந்துபோன ஒற்றைக் கையுறை அணிந்த விக்கெட் கீப்பர் சிறுவன், அவுட், நீ அவுட் என்று கத்திக்கொண்டே, பேட்ஸ்மேனிடம் இருந்து பேட்டைப் பிடுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான். பேட்ஸ்மேன் விடுவதாக இல்லை. விரல்களால் திருகிய ரப்பர் பந்தை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றியபடியே இருந்த பௌலரும் மற்ற சிறுவர்களும் சுற்றி நின்று இழுபறியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘டேய்… சேக்கு’ குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினான் சேகர். குளத்து மேட்டைத் தாண்டி, தெருவுக்கு அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள்ளிருந்து நிழலில் மறைந்த முகமும், இங்கே வா என்று சைகை செய்த கையும் மட்டும் தெரிந்தன. அருகில் செல்ல நிழல் முகம் திரண்டு லோகு என்ற லோகநாதன் முகமாக மாறியது.
‘எப்ப டா வந்த ஊர்லிருந்து?’ என்றான் 10ஆம் வகுப்பு வரை சேகருடன் பள்ளிக்குச் சென்ற லோகு.
‘ரெண்டு, மூணு நாளாச்சு…இதென்ன கடை?’
‘நம்முதுதான்… அண்ணன் கழனிய பாத்துக்கட்டும், நீ கடையில உக்காருன்னு அப்பா சொல்லிட்டாரு, அதான் உக்காந்துட்டேன்,’ என்றான் லோகு. சிப்ஸ், ஷாம்பு, பாக்குப் பொட்டலங்கள் அவன் பின்னே தோரணம் போலத் தொங்கிக் கொண்டிருந்தன. வண்ண மிட்டாய்கள் நிறைந்த ஒரு கண்ணாடிக் குடுவையை முட்டாகக் கொடுத்து நிற்க வைக்கப்பட்டிருந்த கைபேசியில் ஏதோ படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. உள்ளங்கி மட்டுமே அணிந்த எவனோ ஒருவன் பாதாளச் சாக்கடைக் குழாயின் பகுதி போல தெரிந்த ஒரு துப்பாக்கியைத் தன் தோளில் வைத்து ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தைத் தீக்கோளம் ஆக்கிக் கொண்டிருந்தான். வாயில் நாராச வார்த்தைகள் வெடித்துக் கொண்டிருந்தன.
‘உக்காரு டா,’ என்றான் லோகு. பக்கத்தில் அடுக்கி இருந்த அரிசி மூட்டைகளின் மீது அமர்ந்தான் சேகர். பகல் முழுவதும் வெயிலில் காய்ந்த மூட்டை வெம்மையாக இருந்தது.
‘ஒன்ன பாத்து ஒரு மூணு, நாலு வருஷம் ஆயிருச்சே,’ என்றான் லோகு.
‘ஆமாம்… வேல கொஞ்சம் டைட் டா.’
‘ரொம்ப பிஸி போல… வாட்ஸ் அப் மெசேஜுக்கு கூட பதில் போட மாட்டியோ?’
‘அது இல்லடா…’ என்று இழுத்தான் சேகர். லோகுவிடமிருந்து அவ்வப்பொழுது குறுஞ்செய்திகள் வருவதுண்டு. ஆனால் எல்லாமே பல முறை பலருக்கு அனுப்பப்பட்ட வடிவேலு மீம்ஸ்களும், மொக்கைப் பகடிகளும்தான்.
‘இன்னும் எவ்வளவு நாள் இருக்க?’
‘ரெண்டு வாரம்.’
‘வா ஒரு தரம் சேர்ந்து டவுன் சுத்தலாம். போடுவ இல்ல?’ கட்டை விரலை வாய்க்கருகே கொண்டு வந்து சைகை செய்தான் லோகு.
‘எப்பயாவது.’
‘சென்னைல ஆபிஸ்லயே போடுவாங்களாமே,’ என்ற லோகுவின் கருத்திற்குப் பதில் சொல்ல இயலாமல் திறந்திருந்த புழுங்கல் அரிசி மூட்டையிலிருந்து சிறிது அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொண்டான் சேகர்.
‘அண்ணா… ஒரு பத்து ரூவா சிப்ஸ் பாக்கெட்டு, பெஸ்சி கோலா,’ என்றான் சற்று முன் குளக்கரையில் இருந்த விக்கெட் கீப்பர் சிறுவன். இழுபறி முடிவுக்கு வந்துவிட்டது போல என்று நினைத்துக் கொண்டான் சேகர்.
தொங்குகின்ற தோரணத்திலிருந்து ஒரு பாக்கெட்டைப் பிய்த்து, ஐஸ் பெட்டியிலிருந்து சிறு பிளாஸ்டிக் குழாயில் அடைத்த செவ்வண்ணத் திரவத்தை அந்த சிறுவனிடம் கொடுத்தான் லோகு.
‘எங்க போய்கிட்டு இருக்க இப்ப?’ என்றான் லோகு, ஆபீஸ் சரக்குப் பார்ட்டியை முற்றிலும் மறந்துவிட்டவனாக.
‘இங்கதான்… நாகராஜன் மாமா வீடு வரைக்கும். பூஜைக்குக் காசு குடுத்துட்டு வரச் சொன்னாரு அப்பா.’
‘ஏன்டா… ஒங்க அப்பாக்குத்தான் அறிவில்லேனா ஒனக்கு எங்கடா போச்சு?’ சற்றுக் கோபம் தலை காட்டியது சேகருக்கு. ஆனால், லோகு சிறு வயதிலிருந்தே அப்படிப் பேசக் கூடியவன்தான். புதிது ஒன்றும் இல்லை.
‘ஏன்?’ என்றான் சேகர்.
‘அந்த நாகராஜன் ஒரு கிறுக்கு… பூஜ, கீஜனுட்டு..சொம்மா. அவன் புள்ளை போனதிலிருந்து இன்னும் மெண்டல் ஆயிட்டான். மூணு வருசம் முன்னால என்ன ஆச்சு தெரியும்ல?’
‘என்ன ஆச்சு?’
‘பாதிப் பூஜையில எளுந்து ஓடிப் போய் ஊருக்குளாற இருக்குற வாட்டர் டேங்க் மேல ஏறிட்டான.’
‘அது மேலயா?’
‘ஆமாம்.’ லோகு சொல்லும் தண்ணீர்த் தொட்டி மிகவும் உயரமானது. அதில் ஏறுவதற்கு ஒரு குறுகிய இரும்பு ஏணி மட்டுமே. ஊராட்சி ஊழியர்களேகூடக் கயிறு கட்டித்தான் ஏறுவார்கள்.
‘மேல ஏறி, வேட்டிய அவுத்து தலைக்கு மேல ஆட்டிக்கிட்டே, டாங்க சுத்தி ஓடுனான்.’ சேகருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இன்று காலை அவனிடம் பேசிய நாகராஜன் மாமாவின் பிம்பமும், உருவிய வேட்டியுடன் பித்தனைப் போல ஓடும் பிம்பமும் ஒன்றுக்கொன்று ஒட்டவில்லை.
‘நம்ம கோவிந்தன்தான் மேல ஏறிக் கஷ்டப்பட்டுத் திருப்பிக் கூட்டியாந்தான். ஒளறிக்கிட்டே இருந்தானாம் அந்த ஆளு, கோவிந்தன் சொன்னான்.’
‘ம்’ என்பதைத் தவிர சேகருக்கு வேற என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
‘100 பொட்டுக் கடலை, நாலு தேங்கா பத்தை,’ என்று ஒரு சிறுமி கேட்டாள். கைபேசியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த கட்டிடம் பொடிந்து வீழ்ந்தது. ‘அப்படிப் போடு’ என்றான் லோகு சிறு திரையைப் பார்த்தபடி. நேரம் ஆகி விட்டது போலத் தோன்றியது சேகருக்கு.
‘சரி… நான் ஒன்ன அப்புறம் பாக்கறேன்,’ என்று உட்கார்ந்திருந்த மூட்டையில் இருந்து இறங்கினான்.
‘மூணு நாளைக்கு நான் ஊர்ல இல்ல. திருப்பி வந்ததும் மெசேஜ் பண்றேன். டவுனுக்குப் போலாம்,’ என்றான் லோகு. சரியென்று தலை அசைத்துவிட்டுத் தெருவுக்கு வந்தான் சேகர். திரும்பி வீட்டிற்கு போய் விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் அப்பாவிற்கு நாகராஜன் மாமா வீட்டிற்குப் போகாததற்கு ஏதேனும் காரணம் கூற வேண்டும். அது சரிப்பட்டு வராது என்பதால் நாகராஜன் வீட்டை நோக்கி நடந்தான்.
***
நாகராஜன் மாமாவின் வீடு கிருஷ்ணன் கோவிலைத் தாண்டி இருந்தது. உள்ளடங்கிய வீடு. வாசலில் இருந்த முருங்கை மரத்தின் காய்ந்த இலைகள் சிறு திண்ணைகளின் மேல் சாய்ந்து இறங்கும் ஓட்டுக் கூரை மீது பாய் போலப் படிந்திருந்தது. திறந்திருந்த கதவை லேசாகத் தட்டி ‘மாமா’ என்று கூப்பிட்டான் சேகர். கொல்லையில் பெரிய கிணறு. அதன் அருகே இருந்த வாழையின் இலைகள் சூரியனின் ஒளியை வெட்டி வெட்டித் தலையாட்டிக் கொண்டிருந்தன. முற்றத்தை சுற்றி இருந்த தளங்களில் நிழல் படர்ந்திருந்தது. ஒரு மூலையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியின் குரல்.
‘யாரு?’ என்றார் நாகராஜன். சாய்வு நாற்காலியில் இருந்து சற்றுத் தலையை திருப்பியபடி.
‘நான் சேகர்.’
‘அட சேகர் வா.’
மெல்லிய விரிசல்கள் சிலந்தி வலைப் போல் பரவிய சிவப்பு ஆக்சைடு தரை சேகரின் காலுக்கு அடியில் இதமாகக் குளிர்ந்திருந்தது.
‘உக்காரு,’ என்றார் நாகராஜன் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை அடக்கிவிட்டு.
சுவற்றுக்கருகே இருந்த ஒரு பிரம்பு நாற்காலியை எடுத்து அவர் அருகில் போட்டு அமர்ந்தான் சேகர்.
‘பயலுக்கு தைரியம் ஜாஸ்தி… ஆனா அவன் திங்கிறத பாத்தா நமக்குச் சோறு இறங்காது,’ என்றார் நாகராஜன் ரிமோட்டால் தொலைக்காட்சியைச் சுட்டிக் காட்டியபடி. பியர் க்ரில்ஸ் பல கால்கள் நெளியும் ஏதோ ஒரு ஜீவராசியை லாவகமாக அரிந்து வாயில் திணித்துக் கொண்டிருந்தான்.
‘யார் வந்திருக்குறது?’ என்று கேட்டபடியே உள்ளிருந்து வந்தாள் நாகராஜனின் மனைவி.
‘நம்ம தனபால் மகன்… சேகர்,’ என்றார் நாகராஜன்.
‘வா தம்பி… மெலிஞ்சு போய்ட்டியே.’
மெலிஞ்சிட்டியே, கறுத்திட்டியே என்ற கேள்விகளுக்கு சேகரிடம் எப்பொழுதுமே பதில் இருந்ததில்லை.
‘வேலை…’ என்று இழுத்தான்.
‘இரு… காப்பி கொண்டு வரேன்,’ என்று உள்ளே சென்றாள்.
‘அப்பா குடுத்து விட்டாரு,’ என்று மேல்சட்டைப் பையிலிருந்து சில ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்தான் சேகர்.
‘அப்புறம்கூடக் குடுத்து விட்ருக்கலாமே… சரி அத சாமிகிட்ட வெச்சிரு.’
சுவற்றில் பல தெய்வங்களின் சட்டமிட்ட படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு ஓரத்தில் சந்தனப் பொட்டோடு சுரேஷின் படமும். நாகராஜனின் மகன். அவனை சேகருக்கு அவ்வளவாக தெரியாது. சில வருடங்களுக்கு முன் எங்கோ வெளியூரில் விபத்தில் இறந்து போனான் என்று கேள்விப்பட்டிருந்தான்.
‘இதோ இங்க இருக்கு,’ என்று ஒரு சிறு அலமாரியைத் திறந்தார் நாகராஜன். அலமாரிக்குளிருந்து உலர்ந்த மலர்களின் மணமும், பழநி விபூதியின் மணமும் கலந்து காற்றில் விரிந்தது. பெரிய மாங்கொட்டை அளவில் உள்ளே இருந்த ஒரு பெட்டியைத் திறந்து அதில் பணத்தை வைக்கச் சொன்னார் நாகராஜன். பெட்டியின் உள்ளே மடித்து வைக்கப்பட்ட பச்சைப் பட்டுத் துணி மேல் காய்ந்த உப்பு நார்த்தங்காய் போலச் சிறு துண்டுகள் இருந்தன. சற்று உற்று நோக்கிய சேகருக்கு அவற்றின் கூறுகள் தெளிந்து கருத்த தண்டுகளும், விரிந்த பழுப்பு நிறக் குடைகளுமாக நிலைகொண்டது.
‘காளான் இல்லே இது?’ என்று ஆச்சர்யமாகக் கேட்டான் சேகர்.
‘காளான்தான்… ஆனா இவதான் எனக்கு வழிகாட்டி,’ என்றார் நாகராஜன். இவ என்ற சொல்லில் மரியாதையும், அன்னியோன்னியமும் தூக்கி நின்றது. காளானின் குடைகளில் மெல்லிய வலைப் பின்னல் போலக் கோடுகள், அதனூடே சூரிய ஒளியால் மிளிரும் பனித் துகள்கள் போல ஏதோ மின்னிக் கொண்டிருந்தது.
பணத்தைப் பெட்டியின் ஒரு ஓரத்தில் வைத்தான் சேகர்.
‘தம்பி காபி எடுத்துக்க,’ என்றாள் நாகராஜனின் மனைவி. காபியுடன் ஒரு சிறு தட்டில் முறுக்கு இருந்தது. ‘சங்கர் கடை முறுக்கு’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். காபி கொதித்தது. பியர் க்ரில்ஸ் கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏதோ ஒரு வழுக்குப் பாறையில் எந்தச் சத்தமும் இல்லாமல் ஏறிக் கொண்டிருந்தான். சுவற்றில் மாட்டி இருந்த ஊசல் கடிகாரம் ஒவ்வொரு வினாடியையும் சிறு ஓசையோடு அறிவித்தது. முற்றத்தில் இரண்டு புறாக்கள் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தன.
‘ஏதோ வழிகாட்டின்னு சொன்னீங்களே. அப்படின்னா?’ சேகர் கேட்டான். சூடான காபியைக் குடித்து முடிக்கும் வரை எதாவது பேச வேண்டுமே என்பது முக்கிய காரணமாக இருந்தாலும், தெய்வங்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்ற காளான்கள் அவனைச் சற்று ஈர்த்தன.
‘பூஜைக்கு இது வரைக்கும் வந்தது கிடையாது இல்ல?’ என்று கேட்டார் நாகராஜன். சிறு வயதில் சென்றிருக்கிறான். ஊதுவத்தி மணமும், நிறைய பெண்களும்தான் நினைவில் இருந்தது சேகருக்கு.
‘இங்க வரவங்க நெறய பேருக்குப் பிரச்சனை, சந்தேகம்.. இப்படிப் பல சமாச்சாரம். இதெல்லாம் எப்ப தீரும்னு கேக்க பூஜைக்கு வராங்க. ஒரு ஆறுதலுக்குத்தான். அதுக்கெல்லாம் இவதான் வழி காட்டுறா. அதுவும் என்ன எனக்குள்ளார கூட்டிகிட்டுப் போய்.’ சேகர் மெதுவாகக் காபியை ஊதி உறிஞ்சினான்.
‘செடி, கொடி, காளான் இதுங்களையெல்லாம் நம்ம அவ்வளவா கவனிக்கிறது கிடையாது. இதுல பலது நமக்கு முன்னமே இந்த பூமியில வந்தது. ஒரு விதத்தில நம்ம மூதாதையர். அதுகள நம்ம ஏதோ ஜடம்ன்னு நினைச்சுகிட்டு இருக்கோம். ஆனா, காட்டுல மக்கிப் போன ஒரு மரத் துண்டுல மொளைக்குற காளானோட வேர் பல கிலோமீட்டருக்குப் பூமி கீழே பின்னிப் பிணைஞ்சு இருக்காம். இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. தேவையானதக் கொடுத்து, வாங்கி அது காட்டையே வாழ வைக்குதாம். அது கண்ணுக்குத் தெரியற வேரு. அதுடைய கண்ணுக்குத் தெரியாத சல்லி வேரு பலதும் இருக்கு,’ என்று நிறுத்தி சேகரைப் பார்த்தார் நாகராஜன் மாமா. அவர் கண்களில் தான் தொடர்ந்து சொல்லப் போகும் செய்தி சேகரின் மனதில் இறங்குமா என்ற சந்தேகம் தெரிந்தது.
‘கண்ணுக்கு தெரியாத வேர்தான் மனுஷ மனசுல ஊடுருவியிருக்கு. இத பல காலத்துக்கு முன்னாடியே நம்ம ஆளுங்க புரிஞ்சுக்கிட்டாங்க.’ சேகர் அவரைக் காபியின் மேலே எழும் சிறு நீராவி சரடுகள் ஊடே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ஒனக்கு ஒண்ணு தெரியுமா, எல்லா மனுஷ மனமும் ஒரு பொதுவான அடித்தளத்துல ஒட்டிக்கிட்டு இருக்கு. நாய் தோல்ல உண்ணி மாதிரி,’ நாகராஜன் தொடர்ந்தார்.
‘அத கலெக்ட்டிவோ, என்னவோ… ஏதோ சொல்லுவாங்க. அது சகல மனசுக்கும் பொது. ஒரு பெருவெளி. எனக்கு எப்பவுமே அது கொந்தளிக்குற கடலுக்கு அடியில இருக்குற அமைதியான படுகை மாதிரிதான் தெரியும். டீவில பார்த்துருப்பியே, அந்தத் தலைக் கவசத்தைப் போட்டுக்கிட்டு, சுவாசத்துக்கு ஆக்சிஜன் எடுத்துக்கிட்டு, சில பேரு கடலுக்கு அடியில அந்த மணல் படுகைல மெதுவா நடந்து போறத,’ நாகராஜன் சேகரை பார்த்தார். ஆமாம் என்று தலை ஆட்டினான் சேகர்.
‘அந்தப் பெருவெளியிலயும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத சல்லி வேர் புகுந்துருக்கு. மெயின் ரோட் நடுவுல வழிகாட்ட சின்ன சின்ன செவப்பு லைட் பொதச்சு வெச்சுருப்பாங்களே, அத போலத்தான் அங்க இந்த வேர் தெரியும். அது வழியாத்தான் என்ன கையப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போவா இவ. அந்தப் பாதை முடிவுலதான் நல்லா ஜொலிக்கிற முத்து மாதிரி என் முன்னால இருக்குறவங்க கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்கும்,’ நாகராஜன் சேகரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
‘முறுக்கு எடுத்துக்க,’ என்று உபசரித்துவிட்டு, ‘நான் சொல்றது கிறுக்குத்தனமா இருக்கோ?’ என்று கேட்டார் நாகராஜன். சேகருக்கு நாகராஜனின் மனநிலை பற்றி எதுவும் தீர்மானமாகாததால், ‘இல்லை இல்லை,’ என்று சற்று அவசரமாகவே சொன்னான்.
‘இதெல்லாம் ரொம்பப் பழையச் சடங்கு. இப்ப எல்லாம் அழிஞ்சிருச்சு. ஏதோ ஒலக்கத்துல சில மூலையில காட்டுக்குள்ளாற இருக்குறவங்க வேட்டைல மிருகம் சிக்குமா, மழை பெய்யுமா, நோய் நொடி போகுமா ன்னு இன்னமும் கேட்டுகிட்டு இருக்காங்க. இவளும் அங்க யாருக்கோ பதில் சொல்லிக்கிட்டு இருக்கா,’ காலியான காபிக் கோப்பையைத் தரையில் வைத்துவிட்டுக் கிளம்ப யத்தனித்தான் சேகர்.
‘ஆனா… அந்தக் கடல் படுகைல ஒரு குழி இருக்கு சுரேஷ்,’ என்றார் நாகராஜன். திடீர் என்று பாதை மாறிய பேச்சோ அல்லது பெயர் மாற்றி கூப்பிட்டதோ அல்லது நாகராஜனின் குரலில் ஏற்பட்ட சிறு நடுக்கமோ ஏதோ ஒன்று சேகரை மீண்டும் உட்கார வைத்தது.
‘என்ன’ என்றான் சேகர்.
‘மனசோட அடித்தளத்துல… அந்தப் பெருவெளியில,’ என்றார் நாகராஜன். குரல் இன்னும் மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது.
‘அந்த குழி ஒரு இருட்டு கெணறு மாதிரி,’ ஒரு பெருமூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
‘முன்னெல்லாம் அதுல இறங்க மாட்டேன். எனக்குத் தைரியம் வந்ததில்ல. அந்தக் குழி என்ன எங்கேயோ கூட்டிகிட்டுப் போயிடும்னு ஒரு பயம். இந்த வான்ல இருக்குற சில நட்சத்திரங்கள்லாம் வெடிச்சு ஒரு கருங்குழி ஆகிடும்னு சொல்றாங்களே, அதுல நுழைஞ்சா ஒரு கதவு போல நம்மள இந்தப் ப்ரபஞ்சத்தில வேற இடத்துக்குக் கூட்டிகிட்டுப் போய்டுமாம். அதுல பல கருங்குழிகள் ரொம்ப சிறுசாம். அணு அளவுக்குத்தான் இருக்குமாம். நம்ம மனசோட அடித்தளத்துலயும் அந்த மாதிரி ஒண்ணு இருக்கு,’ சேகர் அவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். நாகராஜனின் கண்கள் முற்றத்தை நோக்கி இருந்தாலும், அவர் வேறு எங்கோ இருந்தார்.
‘சுரேஷ் போன பிற்பாடு, அவன் வேற எதாவது ஒரு ப்ரபஞ்சத்தில, காலத்துல இருப்பானோ? அவனைப் பாக்க முடியுமோன்னு மனசுல கேள்விகள் தோணிச்சு.’ நாகராஜனின் கண்டம் மேல் ஏறி இறங்கியது. சாய்வு நாற்காலியின் கைப் பிடிகளை இறுக்கிப் பிடித்திருந்தார்.
‘அதனாலதான் அதுக்குள்ள இறங்க ஆரம்பிச்சேன். அங்க சுரேஷேல்லாம் இல்ல. ஆனா…’ நிறுத்தி சேகரை நிதானமாகப் பார்த்தார் நாகராஜன். அவர் கண்களின் வெள்ளையில் ரத்த நுண்குழாய்கள் ரேகையிட்டிருந்தன. மூக்குக்கண்ணாடி வழியே அவை சிறு வேர்கள் போலத் தெரிந்தது சேகருக்கு.
‘இவ பூமிய தாண்டி, மனுஷ மனசத் தாண்டி, காலவெளியெல்லாம் பரவிட்டான்னு. அடித்தளங்களோட அடித்தளத்துலகூட இவளோட சல்லி வேரு பிணைஞ்சு இருக்கு.’ குரலில் ஆச்சர்யம் தொனித்தாலும் அவருடைய முகபாவம் என்னவோ இது அவர் எதிர்பார்த்ததுதான் என்பது போல இருந்தது.
‘அதுக்குள்ளாற விளக்கும் கிடையாது பாதையும் கிடையாது. மத்த இடத்துல கையப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போறவ இங்க என்ன பந்தாடுவா. சூறாவளில சிக்கின எல மாதிரித்தான் என் நெலம. என்ன சொல்றேன், என்ன செய்றேன் எதுவும் விளங்காது. சில சமயம் சுத்த பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டிங்கன்னு பொண்டாட்டி சொல்லுவா.’ அவிழ்ந்த வேட்டியுடன் தண்ணீர்த் தொட்டியைச் சுற்றி ஓடியதாக இவரைப் பற்றி லோகு சொன்னது நெஞ்சில் பளிச்சிட்டது சேகருக்கு.
‘ஆனா, ஒண்ணு மட்டும் அழுத்தமா தெரியும் தம்பி. அந்த இடத்திலிருந்து நான் சொல்றது எங்கேயோ, யாருக்கோ ஆறுதலா இருக்குன்னு. அது மட்டும் சத்தியம்’ என்றார் நாகராஜன். ஊசல் கடிகாரம் ஆறு மணி ஆகிவிட்டதை அடித்து உரைத்தது. முற்றத்தில் இருந்த புறாக்கள் திடீர் என்று இறக்கைகளை அடித்து மேலே கிளம்பியது. கடந்த சில நிமிடங்கள் சற்று உறைந்து போய் இருந்த சேகர் தன்னை மீண்டும் உணர்ந்தான்.
‘நேரம் ஆச்சு. நான் கெளம்புறேன்,’ என்றான் சேகர். மெல்லிய குரலில்.
‘பூஜைக்குக் கண்டிப்பா வா பா,’ என்று வழி அனுப்பி வைத்தார் நாகராஜன்.
***
அமாவாசை அன்று சாயங்காலம், முன்னதாகவே கிளம்பி நாகராஜன் மாமா வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள் சேகரின் அம்மாவும், அப்பாவும். ஜூம் காலை முடித்துவிட்டுச் சற்றுத் தாமதமாகப் பூஜைக்குக் கிளம்பினான் சேகர். லோகுவின் கடை பூட்டி இருந்ததது. நல்ல வேளை என்று நினைத்துக் கொண்டான், இல்லையென்றால், அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் சுத்தமாக அறிவு இல்லாததை மீண்டும் அறிவுறுத்தி இருப்பான் லோகு.
நாகராஜன் மாமாவின் வீட்டு வாசல் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. நீர் தெளிக்கப்பட்டு, கோலமும், வாழை மரமும், முகப்பில் பச்சைக் குஞ்சலங்கள் போலத் தொங்கிய மாவிலை கொத்துகளும் வரவேற்றன. வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி இரண்டு பெரிய அடுப்புகளில் சர்க்கரைப் பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. காற்றெங்கும் வெல்லத்தின் மணம் புகை போலப் பரவியது. வீட்டின் உள்ளே முற்றத்தைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். நிறைய பெண்கள். எல்லோர் முகத்திலும் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு. சுவற்றில் மாட்டி இருந்த எல்லாக் கடவுள் படங்களிலும் மலர் சூட்டப்பட்டிருந்தது. சுரேஷின் படத்தைச் சுற்றி ஒரு மாலை.
சேகர் அங்கே வந்திருப்பதை பார்த்த அப்பா தன் அருகே வந்து அமரும்படி சைகை செய்தார். சிறிது நேரத்தில் நாகராஜன் மாமா ஒரு அறையில் இருந்து வெளியே வந்தார். சில தினங்கள் முன் பார்த்தவர் போல் இல்லை. செம்பட்டும், சற்றே நீண்ட வெண் தாடியும், நெற்றியில் சிறு குங்குமப் பொட்டும் புதிதாக அவர் மீது குடியேறி இருந்தன. ஆனால், அதையும் தாண்டி சேகரின் கண்களில் பட்டது, அவரது தோள்களின் இறுக்கமும், சற்றே துவண்ட நடையும். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத, கடினமான பயணத்தை எதிர் நோக்குபவர் போல.
சேகர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் வந்து உட்கார்ந்தார் நாகராஜன் மாமா. அவர் முன்னே ஒரு சிறிய பித்தளைத் தட்டில் மல்லிகை மலர்களால் சூழப்பட்டு நடுவில் ஒரு கருங்குழிப் போலக் கிடந்தன காளான்கள். சிறிது நேரம் கண்களை மூடி இருந்துவிட்டுக் காளான்களை ஒன்றொன்றாக எடுத்து வாயில் இட்டு மெல்லத் துவங்கினார். சில நிமிடங்களில் தட்டில் மல்லிகை மட்டுமே எஞ்சியது.
ஏதோ முணுமுணுக்கத் தொடங்கின அவரின் உதடுகள். சட்டென்று கண் திறந்து கூட்டத்தில் ஒருவரைச் சுட்டிக் காட்டினார். அந்தப் பெண் பதட்டமாக எழுந்து வந்து நாகராஜன் மாமாவின் முன் வணங்கி ஏதோ சொன்னாள். சேகர் உட்கார்ந்த இடத்திலிருந்து சில வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது. ஏதோ கணவனின் வேலை பற்றிய கேள்வி என்று மட்டும் புரிந்தது. சற்று மௌனமாக இருந்தார் நாகராஜன் மாமா. தலையைப் பலமாக ஆட்டிவிட்டு அந்தப் பெண்ணிடம் மென்மையாக ஏதோ உச்சரித்தார். எழுந்து நமஸ்கரித்துவிட்டுச் சென்றாள் அந்தப் பெண். பின்னர் ஒருவர், இருவர் என்று பலர் வந்து வணங்கி, சந்தேகம் சொல்லி, பதில் வாங்கிச் சென்றனர்.
நாகராஜன் மாமா சேகரின் அம்மாவைச் சுட்டிக் காட்டியபோது சேகரையும் அருகே வரச் சொல்லி அழைத்தாள் அம்மா. சற்று எரிச்சலுடனேயே எழுந்து சென்றான் சேகர். கேள்வி என்ன என்பது அவனுக்கு முன்னமே தெரியும். மாமாவின் முகம் காய்ச்சல் வந்தால் போலச் சிவந்திருந்தது. மேலே மின் விசிறி சுழன்று கொண்டிருந்தாலும் அவர் வியர்வையில் நனைந்திருந்தார். குங்குமப் பொட்டு கரைந்து அதில் இருந்து ஒரு சிறு வால் நெற்றியில் இறங்கிக் கொண்டிருந்தது.
‘பையனுக்கு நல்ல பொண்ணா அமையணும், நெறய நாளா தேடிக்கிட்டுருக்கோம்,’ என்றாள் அம்மா கை கூப்பியபடியே. இவ்வளவு அடிபணிந்த குரலை அவளிடம் இருந்து அன்றுதான் கேட்டான் சேகர்.
‘கெடைக்கும், சீக்கிரமே கெடைக்கும். சௌபாக்கியவதி வருவா. பக்கத்தில் இருந்தே வருவா. போ. நிம்மதியா போ,’ என்றார் நாகராஜன் மாமா. அவர் என்னையோ, அம்மாவையே அறிந்துகொண்டதாகவே தெரியவில்லை.
கூட்டம் குறைந்திருந்தது, நாமும் கிளம்பலாமே என்று அப்பாவை சேகர் கேட்க நினைத்தபோதுதான் அது நடந்தது. நாகராஜன் மாமா திடீர் என்று எழுந்து ஒரு பெரும் கூச்சலுடன் கொல்லைப்புறத்தை நோக்கி ஓடினார். தண்ணீர் தெறிக்கும் உரத்த சத்தம்தான் சேகரைத் தட்டி எழுப்பி கிணற்றருகே ஓட வைத்தது. சற்றும் தாமதிக்காமல் கிணற்றில் குதித்தான் சேகர். பாறை இருக்குமோ, கல் துருத்திக் கொண்டிருக்குமோ என்ற எண்ணங்கள் குறுக்கிடும் முன்னால் அவன் தண்ணீரில் இருந்தான். இருள் ஒரு கனமான போர்வை போல சேகர் மேல் படர்ந்தது. ஆனால், குளிர்ந்த நீர் அவனின் உணர்வுகளைச் சற்றுக் கூராக்கியது.
குழப்பமான குரல்கள் மேலே மெல்லிய கரு நீல வட்டம் போலத் தெரிந்த கிணற்றின் விளிம்பில் இருந்து சேகரின் காதுகளுக்குச் சன்னமாக எட்டியது. கரும் பாறைகளான கிணற்றுச் சுவர்கள் இருட்டில் லேசாக மினுமினுத்தன. சற்றுத் தள்ளி அவன் இடப் பக்கத்தில் திடமான நிழல் ஒன்று தண்ணீரில் அமிழ்ந்தும், மிதந்தும் தூண்டிலில் அகப்பட்ட மீன் போலத் தத்தளித்துக் கொண்டிருந்தது. சேகர் சற்றென்று அந்த நிழலுக்கடியில் அமிழ்ந்து, கைகளால் அவரை இடுப்போடு வளைத்து, நாகராஜன் மாமாவைக் கிணற்றின் சுவற்றருகே இழுத்துச் சென்றான். அவர் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். திடீர் என்று ஒரு கேவலுடன்
‘மூணு கண்ணுத் தொறந்தா உன் வம்சம் வ்ருத்தி ஆவும். உண்மைதான்.’ அவர் உடம்பு விதிர்த்துக் கொண்டிருந்தது. சிறு அதிர்வுகள் தோல் மூலம் உடல் எங்கும் பரவியது.
‘மாமா… மாமா!’ கத்தினான் சேகர்.
‘ஆனா அந்தச் செவப்பி கோவம் எல்லாத்தயும் அழிக்குமே. அஞ்சு மொகமும் ஒலகத்தை சாம்பலாக்குமே. என்ன செய்ய?’
‘சேகர்… சேகர்’ மேலிருந்து அப்பாவின் பதட்டமான குரல் கேட்டது.
‘இங்க இருக்கேன் பா,’ என்றான் சேகர். மெல்லிய டார்ச் வெளிச்சம் அவன் தலையை வருடியது.
‘அப்படியே இரு. கயிறு கீழ விடுறேன்,’ என்று ஏதோ ஒரு புதுக் குரல் கிணற்றின் விளிம்பிலிருந்து விழுந்தது.
‘ஆனா இது ஆசிர்வாதம்,’ நாகராஜன் மாமா இப்பொழுது சத்தமாகச் சிரித்தார்.
‘புதுக் கதவு தொறக்கும். சாம்பல்ல செடி முளைக்கும். உன் தூரத்து சந்ததிகளோட பாட்டு நெலத்துலேயே கேக்கும்,’ என்று பித்துக் கவிதை சொல்லிக் கொண்டிருந்தார் நாகராஜன் மாமா. கயிறு அவனை உரசியது. அதை பிடித்து மாமாவின் இடுப்பைச் சுற்றிக் கட்டினான். கயிறு மெல்ல எழுந்தது. மனிதக் கொக்கி போல வளைந்து மேலே எழும்பத் தொடங்கினார் நாகராஜன் மாமா. அவரின் சிரிப்பு கரும் பாறைகளில் எதிரொலித்தபடியே இருந்தது.
***
மூன்று மாதம் கழித்து ஜாதகம் ஒன்று சேர்ந்திருப்பதாகவும், பெண் பார்க்கச் செல்ல வேண்டும் என்று அப்பா போன் செய்ததால் ஊருக்கு வந்தான் சேகர். பெண் பெயர் மீனாட்சி. சேகருக்குப் பிடித்திருந்தது. அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது அம்மா பெண்ணிடம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பதால் அவளைக் கூப்பிடச் சொன்னாள்.
‘சௌபாக்கியம்… சௌபாக்கியம், மாப்பிள வீட்டுக்காரங்க கெளம்பறாங்க. உன்கிட்ட சொல்லிட்டுப் போணுமாம்,’ என்றாள் பெண்ணின் தாயார்
‘சௌபாக்கியம்…?’ அம்மா இழுத்தாள்.
‘நாங்க அவள அப்படித்தான் கூப்டுவோம்,’ என்றார்கள். அம்மாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சேகரை ப் பார்த்துப் புன்னகைத்தார்கள். ‘குருவி உக்கார…’ என்று ஒரு எண்ணம் சேகரின் மனதில் சடுதியில் தோன்றி மறைந்தது.
***
மறுநாள் விடியற்காலை சேகரை அவசரமாக எழுப்பிவிட்டார் அப்பா
‘என்ன…’ என்று கேட்பதற்குள்.
‘நாகராஜன் மாமா போய்ட்டாருடா,’ என்றார்.
‘எங்கு?’ என்று சேகரின் தூங்கும் மனதின் ஒரு பகுதி கேட்டாலும், சற்றென்று விழித்துக்கொண்டான்.
‘காலையிலதான், தூக்கத்திலியே இறந்துட்டாரு,’ என்றார் அப்பா. சற்று முன் கண் கலங்கி இருப்பார் என்று சேகருக்குத் தோன்றியது.
அன்று மாலையே எரியூட்டினார்கள். தூரத்து உறவினர் ஒருவர் தான் சடங்குகளை செய்தார். மயானத்திற்கு நிறைய பேர் வந்திருந்தனர்.
‘ஆனா, ஒண்ணு மட்டும் அழுத்தமா தெரியும் தம்பி. அந்த இடத்திலிருந்து நான் சொல்றது எங்கேயோ, யாருக்கோ ஆறுதலா இருக்குன்னு. அது மட்டும் சத்தியம்,’ நாகராஜன் மாமா சேகரிடம் என்றோ சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் நிழலாடின. எரியும் சடலத்திலிருந்து கரும் புகை இரவு வானின் நட்சத்திரங்களை அணைத்துக் கொண்டது. ஒரு பெரிய காளான் போல.
***
மேலே நெளிந்த ஒளிப் பின்னல் என்னை மெதுவாக இழுத்தது. துடுப்பைப் போன்ற என் கைகளும் கால்களும் தானாகவே நீரைப் பின்தள்ளி…நான் மெதுவாக எழும்பிக் கொண்டிருந்தேன். என்னோடு பலரும்.
‘புறப்பாடு’ என்று குரல்கள் பாடின. ‘ஆமாம்’ என்ற ஒரு குழுவின் பாட்டில் என் குரலையும் இணைத்துக் கொண்டேன்.
நீர் வெளிச்சமாக இருந்தது. சிவப்பாகவும், கரு நிலமாகவும் வண்ணங்கள் நீரில் தோய்ந்திருந்தன. நான் மறைந்திருந்து வேட்டையடியாடிய பவளப்பறைகளின் வளைகள், உறக்கத்திற்கு என்னை மெல்ல இட்டுச் செல்லும் சாதாழைகளின் அரவணைப்பு, அடிச் சேற்றில் வாழும் சிலந்திமீனின் காரம் — என் உலகத்தை விட்டுச் செல்கிறேன் என்று ஒரு சோகம் மனதில் நிழலாட அக்கணமே அது பாட்டாகப் பீறிட்டது. கணக்கில்லா பல குரல்கள் அந்தச் சோகத்தில் தங்களைப் பிணைத்துக் கொண்டன.
‘அன்னையின் சுழற்சி இது. இங்கே இருப்பது அவளின் ஒரு அங்கம்தான். அவளது முழு உடலை நாம் காண வேண்டும்… நினைவுகளை மீட்க வேண்டும்… நாம் தோன்றிய இடத்தில் புதைந்து மறைய வேண்டும்.’ பாட்டு சற்றே நின்று மீண்டும் தொடர்ந்தது.
‘ஆனால் மீண்டு வருவோம். நம் முன் சென்ற பல தலைமுறைகளின் நினைவுகளோடு. சிறு வடிவம் எடுத்து. அன்னையின் சுழற்சி இது.’
பாடல் அடிநீரோட்டம் போல் என்னையும் என்னுள் மிதக்கும் பல உயிர்களையும் வருடிச் சென்றது. கடலின் ஏதோ ஒரு மூலையில் இருந்து மற்றொரு உற்சாகப் பாட்டு என்னைத் தொட்டு அதிர்வுகளாக என்னுள் இறங்கிற்று.
‘அன்னையின் மூன்று இணைகளையும் நாம் காண்போம். மேலே கவிழ்ந்து இருக்கும் கருப்புக் கடலில் அவர்களின் பிற சிறு மகள்களையும்.’
நான் ‘ஆமாம்’ என்றேன். ‘அன்னையின் சுழற்சி இது,’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். என்னுள் இருந்த செறிந்த உப்பு நீர் என் தோலில் இருந்து சிறு குமிழிகளாக வெளியேறியது. நான் மிகவும் லேசாக உணர்ந்தேன். பிரிந்த குமிழிகளின் போர்வையில் நான் மேல் எழும்பினேன். நாங்கள் எல்லோருமே…
பல கோடி சூரியன்கள் அடர்ந்திருக்கும் ஒரு மண்டலத்தின் கோடியில் இருந்தது அந்தக் கிரகம். சிவந்து, பருத்த ஒரு சூரியனின் ஆறாவது கோளாக ஒரு நீண்ட நீள்வட்டப் பாதையில் சுழன்று கொண்டிருந்தது. அதன் இரவுப் பகுதியில் கருந்தோலில் படர்ந்த வெளிர் தேமல் போலக் கடல் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பு. அதன் மத்தியப் பகுதியில் இருந்து எழுந்த இரு மலைத் தொடர்கள் நீண்டு கடல் நீரைத் தொட்டன. இந்தப் பெரும் கரங்கள் அணைத்த இடைவெளியில் ஒரு கடற்கரை.
இரு பௌர்ணமி நிலவுகள் இரவு வானின் இரு பக்கங்களில் ஒளிர மூன்றதாக ஒரு அரை மதி கடல் உரசும் தொடுவானில் இருந்து மெதுவாக மேல் எழும்பிக் கொண்டிருந்தது. நீர் பரப்பு எங்கும் பொங்கி, அசைந்தாடும் ஒளிக் கோலம்.
நிலவுகளின் ஈர்ப்பால் ராட்சச அலைகள் ஆக்ரோஷமாகக் கரையில் மோதி, தூரம் பயணித்து, கரையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஆங்காங்கே புடைத்து நிற்கும் செம்பாறைகளைத் தொட்டு, சிறு நுரைக் குமிழிகள் உடையும் இரைப்புச் சத்தத்துடன் மீண்டன.
பாறைகளைத் தாண்டி மற்றொரு கடல். மாவு போன்ற மணல் நிறைந்த கடல். சன்னமான மணல் துகள்கள் நிலவுகளின் வெளிச்சத்தில் நிலத்தில் முளைத்த வண்ண நட்சத்திரங்கள் போல மின்னின. இரவு வானின் ஆடி பிம்பம் போல.
மணல் மேடுகள் அலைகள் போல உறைந்திருக்க அந்த மணற்பரப்பு எங்கும் ஒரு எதிர்பார்ப்பு. நிலவுகளால் சிதறிய நிழல்கள் ‘இதோ, பல நூறாண்டுகளுக்கு முன் இங்கிருந்து சென்ற மைந்தர்கள் மீண்டும் வருகின்றனர்’ என்று ரகசியமாகக் கிசுகிசுத்தது. மணல் அலைகள் மேலிருந்து மெல்லியப் புகைப் படலம் போலத் துகள்கள் காற்றில் மிதந்து நீரை நோக்கி நகர்ந்தன ‘அதோ அங்கிருந்துதான்’ என்று கூறுவது போல.
கடலிலிருந்து எழுந்தது ஒரு விசித்திரமான நீண்ட அலை. அதன் நிதானம் அதை வேறுபடுத்தியது. மற்ற அலைகள் கரையில் வேகத்தோடு பரவ இந்த அலை மட்டும் மெதுவாக ஊர்ந்தது.
கரை தட்டிய சிறிது நேரத்தில் உடைந்தது; அரைவட்டமாக, கால்வட்டமாக, சரிந்த நேர்க்கோடுகளாக, வளைந்தும் நெளிந்தும் சிறு துண்டு அலைகளாக. இந்த அலை, கடல் மேல் தோன்றியது அல்ல. ஆழத்திலிருந்து எழும்பிய ஒரு உயிர்ச் சங்கிலி.
பல லட்சம் சதைப் பிண்டங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு, இரு புறங்களிலும் நீண்டிருந்த அங்கங்களினால் ஈர மணலைத் துழாவி, தள்ளி, முன் நகர்ந்து கொண்டிருந்தன. வெண் தோல் மூடியிருந்த தசைகள் அசைந்து, அதிர்ந்த படியே இருந்தது. காற்றில் ஏதோ சேதி அனுப்புவது போல. தலை போல் துருத்திக் கொண்டிருந்த ஒரு தசைப் பகுதியில் புதைந்திருந்த இரு கண்கள் வெறித்து இருந்தன. கோடைகாலத்தில் சிறு பள்ளங்களின் அடியில் தேங்கிய நீர் போல் நிலவுகளின் வெளிச்சத்தில் அவை மென்மையாக ஒளிர்ந்தன.
என் அடித் தசைகளும், கைகளும்தான் மாற்றத்தை முதலில் உணர்ந்தன. எப்பொழுதுமே நெகிழ்ந்திருக்கும் அன்னையின் உடல் மாறி இறுகி இருந்தது. நறநறவென்ற உரசலால் என் அடித்தோல் முழுதும் வலிப் புள்ளிகள், என் தசைகளில் கணக்கில்லா கீறல்கள், அவற்றிலிருந்து கசியும் என் வெள்ளை உதிரம்.
ஆனால், நான் எங்கோ இருந்தேன. கடல் அடியில் இருக்கும் வெம்மையான பிளவுகளில் எழும் குமிழிகள் போல என்னுள் நினைவுகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன. இந்தப் பாதையில் நான் முன்பு தவழ்ந்திருக்கிறேன். என் சிறு அங்கங்கள் வேகமாகத் துடுப்பிட, மென் தசைகளில் உணர்ந்த பாட்டு ஒன்று என்னை (எங்களை) வழி நடத்த இதே பாதையில் ஊர்ந்திருக்கிறேன். என் சிறு உடல் முழுதும் அன்று ஒரே குறிக்கோள். அன்னையின் எல்லையில்லா நீர் மடியில் என்னைக் கொண்டு சேர்ப்பது…
‘தெய்வங்கள், அன்னையின் இணைகள்’ கனவு போல் விரிந்த என் நினைவுகளிருந்து என்னைச் சுண்டி இழுத்தது பல தொய்ந்த குரல்கள். இங்கே ஒலிகள் மிகவும் மந்தமாக என்னுள் இறங்கியது.
ஆனால், ஒளி…என் கண்கள் சற்று மேலே நோக்கின. அன்னையின் இரு இணைகள். மேல் கடலில் நீந்தும் ஒரு பிரம்மாண்ட மீனின் இரு கண்கள் போல. மூன்றாவது தெய்வம் பாதிக் கண் மூடி இருந்தது. எங்கும் ஒளி. இணைகளின் பார்வை வீச்சில் அன்னை குதூகலித்திருந்தாள். நீண்ட நீர்க் கைகள் கொண்டு அவர்களைத் தொட எத்தனித்து, தோற்று, நுரை நீராக எங்கள் மேல் பொழிந்தாள். தெய்வங்கள் தொட்ட ஒளிப் பூசிய நீர்…என் காயங்களைக் கழுவி வலியை மறக்கடித்தது. எனக்குள் நீந்திய, நான் உருவாக்கிய, உயிர்கள் சிலிர்த்தன.
மேலே கவிழ்ந்து இருந்த கரும் கடலில், இணைகளின் அரவணைப்பில் பல கோடி மகள்கள் ஒரே இடத்தில நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களின் சகோதரிகள் அவர்கள். என் நினைவு ஆழங்களில் பதிந்தவர்கள். இவர்கள் எல்லோரையும் நான் நன்கறிவேன்.
ஆனால், என் சகோதரிகளின் அமைவில் ஏதோ ஒரு மாற்றம்…நான் மீட்டெடுத்த என் நினைவுகளில் உள்ள பிம்பத்திற்கும் நான் காண்பதற்கும் இடையே ஏதோ ஒரு சிறு…
கடற்கரையைத் தொட்ட மலைகளின் சாம்பல் நிற சரிவுகளிலிருந்து பல நிழல்கள் திரண்டு, வேகமாக இறங்கிக் கரையைத் தொட்டன. நிலவுகளின் வெளிச்சத்தில் இந்தக் கருந்திட்டுக்கள் பல நூறு மிருகங்களாக தெளிந்தன. பற்களும், நகங்களும், முக்கோண வடிவம் கொண்ட முகங்களின் மேல் இரு சிறு தண்டுகளின் நுணியில் பழங்கள் போலே துருத்திக் கொண்டிருந்த சிவந்த கண்களுமாக மணலில் விரைந்தன. இரை, வேட்டை, பசி என்ற விசைகள் மட்டுமே இயக்க, பெருந்தூரத்தைச் சில நிமிடங்களில் கடந்து, ஆழ் கடலிலிருந்து எழுந்து வந்த வெள்ளை உயிர்ச் சங்கிலிகள் மேல் பாய்ந்தன.
வளைந்த கூர் நகங்கள் சதைப் பிண்டங்களை கிழிக்க, திறந்து கொண்ட ஆழமான வெட்டுகளில் முகம் புதைத்து, வாய் முழுதும் நிறைந்த பல் வரிசைகளால் தசைத் துண்டங்களைக் குதறி எடுத்து விழுங்கின. வெள்ளை குருதி வாடையும், வெட்டித் திறந்த சதையின் வெம்மையும் வெறியேற்ற, ரோமம் நிறைந்த கால்களை ஈர மணலில் பதித்து நிலவுகளைப் பார்த்து எழுந்த ஊளைகளும், வெறிச் சிரிப்பும் கடல் அலைகளின் ஓசையைத் தாண்டிக் கேட்டது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே சதைப் பிண்டங்களால் நீண்டிருந்த சங்கிலி வெகுவாகக் குறைந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு துண்டுச் சங்கிலிகள் நகர்ந்து கொண்டிருந்தன. சிதைக்கப்பட்ட அங்கங்களையும், சிதறிக் கிடந்த மாமிசத் துண்டங்களையும் கடல் மீண்டும் தன் ஆழங்களுக்கு இழுத்துக்கொண்டது.
‘ஏதோ ஒன்று புதிதாக…’ என்ற எண்ணம் முழுமை பெரும் முன் ஒரு வெறுமையை உணர்ந்தேன். எப்பொழுதுமே என் அகத்தில் அடர்த்தியாய் ஒலித்துக் கொண்டிருக்கும் என்னைச் சார்ந்தவர்களின் பாடல்களில் இடைவெளிகள் தோன்றின. கடலில் அவ்வப்போது இது போல ஆவது உண்டு. கூரிய பற்கள் கொண்ட ஆறு வால் மீன்கள் கடல் மேல் இரை கிடைக்காதபோது ஆழத்திற்கு வந்து எங்களை வேட்டை ஆடும். அப்பொழுது சில குரல்கள் காணாமல் போகும்.
ஆனால் இங்கே, திடீரென்று பல பாடல்கள் மறைந்தன. அந்த இடைவெளிகள் விரிந்துகொண்டே சென்று என்னை அச்சுறுத்தியன. அது வரை உற்சாகமாய் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்கள் உரு மாறி வலியின் உச்சத்தைத் தொட்ட முனகல்களாக என்னுள் இறங்கியது. எங்களை இறுக்கிப் பிணைத்திருந்த ஒலி நரம்புகள் வேகமாக துண்டிக்கப்படுவதை என் அகத்தில் அறிந்தேன். நான் அதுவரை அனுபவித்திராத பேரச்சம் என்னைக் கவ்வியது. என் அங்கங்கள் செயலற்று நின்றன. மேலிருந்து தெய்வங்களின் ஒளி மங்கி, இருள் என்னைச் சூழ்ந்தது. அதன் சுகமான மடிப்புகளில் என்னை மெதுவாக இழக்கலானேன்… விழித்துக்கொண்டேன்.
என்னுள் என் பிள்ளைகள் சலனமைடைந்து முட்டினார்கள். என் அருகே சில பாடல்கள், பலம் குன்றி ஒலித்தாலும், இன்னும் உயிர்ப்போடு இருந்தன.
‘நெருங்கிவிட்டோம்…அதோ அந்தப் பாறைகளை கடக்க வேண்டியதுதான்… நாம் தோன்றிய இடம் அங்கேதான்… இதோ மிக அருகே.’
சோர்வடைந்த என் அங்கங்களை மறுபடியும் அசைத்தேன், தரை தேய்த்து முன் நகர்ந்தேன். என் முன்னே நிழல்கள் போல எழுந்து நின்ற பாறைகள் ‘சற்றுத் தூரம்தான், சற்றுத் தூரம்தான்… வா’ என்று என்னை அழைப்பதுப் போலத் தோன்றியது.
பயணத்தின் களைப்பை பாரம் போலச் சுமந்துகொண்டு அலைகள் தொட்டுத் திரும்பும் பாறைகளைத் தாண்டி ஊர்ந்தன அவை. பாறைகளின் மறு பக்கம் விரிந்திருந்த வெண் பொடி மணலில் நுழைந்து நீந்தி, மெதுவாக அதில் அமிழ்ந்து, தலை மட்டும் மணலின் மேல் நீட்டி, கடலை நோக்கி அமர்ந்தன.
இந்த மணல் என்னைச் சுகமாகத் தாங்கிக் கொண்டது. என் காயங்களில் அப்பிக் குளிர்வித்தது. வலியெடுத்த அங்கங்களை இதமாக அமுக்கிக் கொடுத்தது. நான் ஜனித்த இடம் என்னை மறந்துவிடவில்லை. அதன் மிருதுவான தழுவல் என்னுள் புதைந்தவைகளை நினைவூட்டியது.
உறக்கம் என்னைத் தழுவத் தொடங்கும் பொழுது என் அருகிலிருந்து கேள்வி மிதந்து வந்தது. ‘யார் அவள்?’ விழித்துக்கொண்ட நான், சற்று முன்பு என் சிந்தனையில் தோன்றி மறைந்து போன ஒரு எண்ணத் தொடரை மீட்டெடுத்தேன். என் கண்கள் மேல் நோக்கின. மேலே கவிழ்ந்து இருந்த கடலில் புதிதாக ஒரு சகோதரி தோன்றி இருந்தாள்.
பெரிய முகமும், நீண்டிருந்த வாலும், ஆழ் கடலில் எங்களை வேட்டையாடும் ஆறு வால் மீன் போலத் தெரிந்தாள். ஆனால், அகலமும், கனமும் நாங்கள் இது வரை கண்டிராதவை. கொந்தளிக்கும், சிவந்த நஞ்சு கொண்ட சவ்வுப்பை போல வீங்கி இருந்தது அவள் முகம்.
‘இவள் என்ன செய்யப் போகிறாள்,’ என்று என் அருகில் எழுந்த அச்சம் தோய்ந்த குரல்களை உள்ளிழுத்துக்கொண்டே ஆழ் உறக்கத்தில் தொலைந்து போனேன்.
பல தடவை தன்னைத்தானே சுற்றிக் கொண்டது அந்தக் கிரகம். இரவும், பகலும் மீண்டும் மீண்டும் ஒன்றை ஒன்று துரத்தின. இருபத்தி இரண்டாவது இரவு வானில் மூன்று பௌர்ணமிகள் தோன்றின. கவிழ்ந்திருக்கும் குடை போன்ற வானின் இரு புறத்திலும், உச்சியில் ஒன்றுமாக முக்கோணத்தின் மூன்று மூலைகளில் நிலவுகள். ஆனால், வான் நிறைந்திருக்கும் இந்த வெளிச்சத்தையும் தாண்டி வானின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது வால் நட்சத்திரம். அதன் உப்பிய முகம் சூரியனின் வெப்பத்தால் மெல்லக் கரைந்து நீண்ட வாலாக வழிந்தது. சற்று நேரத்திலேயே அதன் முகத்தின் அமைப்பு சிதைந்து ஐந்தாக உடைந்து, நெருப்புத் துண்டங்களாக நிலத்தை நோக்கிப் பாய்ந்தது.
ஆழ் உறக்கத்தில் இருந்து மீண்டெழுந்தேன். நீண்டு நெளியும் சிறு வேர்கள் பரவிய ஒரு குறுகலான குகையும், கரும் பாறைகளும், நான் இதுவரை சுவைக்காத நீருமாக ஒரு கனவின் சிதறல்களை என்னுள் உணர்ந்தேன். ஆனால் ஒரு பாடல் மட்டும் என் நினைவில் ஒட்டி இருந்தது.
(மூணு கண்ணு தொறந்தா உன் வம்சம் வ்ருத்தி ஆவும். உண்மைதான்.)
புரியாத சொற்களால் புனைந்தப் பாடல். கால வெளியைக் கடந்து என்னுள் சேர்ந்த சப்தங்கள். ஆனால், அதன் அர்த்தம் நன்கு விளங்கியது.
என் குழந்தைகள் என்னைச் சுற்றித் திரிவதை நெளியும் மணல் சொல்லியது. அலைகள் செம்பாறைகளைத் தொட்டு அவற்றையும் தாண்டி என்னைச் சுற்றி இருக்கும் வெண் மணலை நனைத்தது. நேரம் நெருங்கிவிட்டது. ‘போ…அன்னை அழைக்கிறாள்… போ’ என்றேன்.
சிறிது நேரத்தில் மணலைத் துளைத்துக்கொண்டு மேல் வந்தார்கள் என் குழந்தைகள். சிறு அங்கங்களை மணலில் துழாவி மெதுவாகக் கடலை நோக்கி நகர்ந்தார்கள். மேல் கடலில் வால் மீனும் பிள்ளைகளை ஈன்றிருப்பதைக் கண்டேன். ஐந்து பிள்ளைகளும் எங்களை நோக்கி வேகமாக இறங்கத் தொடங்கினர். அவர்களையும் அன்னை அழைக்கிறாளோ?
(ஆனா அந்தச்செவப்பி கோவம் எல்லாத்தயும் அழிக்குமே. அஞ்சு மொகமும் ஒலகத்தை சாம்பலாக்குமே. என்ன செய்ய.)
கனவில் கேட்ட வேற்றுலகப் பாட்டின் துண்டு ஒன்று என் அயர்ச்சியைக் கிழித்துக் கொண்டுக் கொப்பளித்தது. கருநிழல் போல் துயரம் என்னை மூடியது.
தூரத்தில் செல்லும் என் குழந்தைகளேயே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றியும் செந்தழல் அடுக்குகள் இரவு வானத்தைத் தொட்டன. சுட்டெரிக்கும் வெப்பத்தைச் சுமந்துண்டு பலத்தக் காற்று வீசத் துவங்கியது. நில அதிர்வுகளை என் உடலால் உணர்ந்தேன், என்னைச் சுற்றி இருந்த மணல் மேடுகள் தகர்ந்து வீழ்ந்தன. நின்று கொண்டிருந்த செம்பாறைகள் தள்ளாடிச் சரிந்தன.
(ஆனா இது ஆசிர்வாதம். புதுக் கதவு தொறக்கும். சாம்பல்ல செடி முளைக்கும். உன் தூரத்துச் சந்ததிகளோட பாட்டு நெலத்துலேயே கேக்கும்.)
கனவில் கேட்ட பாடல் என்னை இதமாக வருடியது. வண்டல் சேற்றால் கலங்கிய கடலடியைத் துளைத்து வரும் ஒரு ஒளிக் கீற்று போல என் அகத்தை ஒளிர்வித்தது.
கொந்தளிக்கும் மணலில் மெதுவாக உள்ளே அமிழ்ந்தேன்.
ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…