தேவதேவன் கவிதையின் மதம்

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

10 நிமிட வாசிப்பு

அண்மையில் தூத்துக்குடி கலை இலக்கியப் பெருமன்றத்தின் அழைப்பில் கவிதை பற்றிய ஒரு சொற்பொழிவும் உரையாடலும் முடிந்து மீண்டும் கூடிய முடிவில்லாத ஒரு உரையாடலின் முடிவாக எனது இனிய அன்பர் கூறினார்: “என்னதான் ஆனாலும் மனிதன் ஒரு மிருகம்தானே; அவனை மாற்றவே முடியாது.”

மெத்தப் படித்தவர்களுக்கும் வரலாறு கற்பித்திருக்கிற இது உண்மைதான் என்றாலும் இதை இப்படியே விட்டுவிடாதபடிக்கு மனிதர்களிடம் நிகழ்ந்த மாற்றங்கள் நமக்குப் புதிய வாழ்வுக்கான நம்பிக்கைதரவும் செய்திருக்கின்றன. நாம் வந்துநிற்கும் இந்த இடத்தை ஒரு புள்ளியாக வைத்துக்கொண்டு நாற்புறமும் சுற்றிப் பாருங்கள். வரலாற்றையும் எதிர்கால நம்பிக்கைகளையும் தாண்டி மனிதன் அடையவேண்டிய இடத்தை அது அங்கேயே கொண்டுவந்துவிடும்.

குடும்பம் எனும் ஒரு சிறிய அமைப்பிலிருந்து இதை ஆராய்ந்து பார்க்கலாம். தான் எனும் உணர்ச்சியே – மய்யமே – மனிதனை எத்துணை வலுவான செயல்களாகவும் சீரழிவாகவும்கூட ஆட்டிப்படைக்கிறது என்பதை நாம் அறிவோம். அதுவே குடும்பம் என்கிற அமைப்பில் தன் மனைவி, தன் குழந்தை, தன் உறவுகள், தன் சுற்றம், சாதி, இனம், தேசம் என விரிகிறது. கண்மூடி இவைகளில் நாம் திளைத்துக்கொண்டிருக்கிறோம். மெதுவிஷமாய் எங்கும் எதிலும் விரிந்து பரவிக்கிடக்கும் தீமைகளை நாம் கண்டுகொள்வதில்லை. இந்த விஷவட்டம் தனக்குள்ளே போட்டிகளையும், பொறாமைகளையும், குழப்பங்களையும், சச்சரவுகளையும், போர்களையும், அறமின்மைகளையும், அமைதியின்மைகளையும் நீங்காத் துயர்களையும் படைத்து ஆட்டிக்கொண்டிருப்பதை நாம் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து கொண்டிற்கும் இவற்றிற்கு – நாளையும் தொடரப்போகும் இவற்றிற்கு – ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் நாம் அறியவில்லை. மனிதன் தோன்றியதிலிருந்து ஒரு மிருகம்தான் என்று முடிவுக்கு வந்துவிடுகிறோம். தோன்றியதிலிருந்தே அவன் ஒரு புனிதனாகவும், முழுமையை அறிந்த தெய்வமாகவும் அவன் இருக்கலாம் என்பதும் ஒரு யூகம்தான். கண்கூடாக நிகழ்ந்த உண்மைகளில் செயல்களில்தான் அது வெளிப்படும். நெடிய வரலாற்றில் அது வெளிப்பட்டிருக்கலாம். இன்று வெளிப்படும் செயல்களிலும் அவற்றை நாம் காணமுடியலாம், துயர்மிக்க எதிர்மறையான செயல்களைப் போலவே.

சமமின்மையாலும், அறமின்மையாலும் தகிக்கும் இந்த நிலம் அச்சத்தாலும் அதிகாரத்தாலும் தன்மய்யத்தாலும் ஒரு முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பது. அதைத்தானே வரலாறு என்கிறோம். தனது கொந்தளிப்பான உணர்வு நிலைகளை உற்றுநோக்கும் ஒருவன் தான் ஒரு வரலாறுதான் என்பதை உணர்வான். தன்னில் சுரக்கும் ஓர் அன்பை, பேரமைதியைக் கண்டுகொண்டவனே காலமற்றவனாய் அந்த வரலாற்றைத் தாண்டி நிற்பவனாகிறான். இதுவும் ஒரு யூகம்தானா? ஒருவன் அதனைத் தானாகவேதான் கண்டுகொள்ள வேண்டும், காலமற்ற அந்தக் கணங்களின் பாதைகளற்ற அந்தத் தொடர்ச்சியையும் பயணத்தையும் காலத்தை அததற்குரிய இடத்தையே கொடுத்தபடி நாம் கட்ட வேண்டியதையும்.

வரலாறு அதிகாரமிக்கவர்களாலும் பூசிமெழுகுபவர்களாலும்தான் எழுதப்படுகிறது என்றாலும் அவற்றையும் மீறி உண்மையை ஆய்ந்துணர முடிபவர்களால் நாம் கண்டடைவது என்ன? நாம் கண்டுகொள்ளாததும் கண்டுகொள்ள வேண்டியதும் என்ன என்பதுதானே அதுவாக இருக்க முடியும்? அதுதான் மெதுவிஷமாய் நம் உள்ளும் புறமுமாய் எங்கும் பரவிக்கிடக்கிறது என்கிறோம். கண்ணுக்குத் தெரியாத அதற்கு நாம் என்னென்ன(சாத்தான்!) பெயர்களைச் சூட்டினாலும் அது பெயர்களில் மறைந்து கொண்டு மீண்டும் மீண்டும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. மெதுவிஷமும் பற்றமுடியாத ஒரு புதுமனிதனை நாம் உருவகித்துப் பார்க்கிறோம் இப்போதும். விளம்புவதற்கப்பாற்பட்ட ஓர் செயலாக, செயல்களாக, அது உலவ வேண்டும்.

மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் எந்தவகைப் பிரிவும், மெதுவிஷமாகவும் பேரிடராகவும் மானுடத்தின் அழிவுச்சக்தியாகவே இருக்கிறது என்ற கண்கூடான உண்மையை இன்று நாம் உணரவேண்டியவர்களாக இருக்கிறோம். இதனை நாம் உணரமுடியாதவர்களாக இருந்ததின், இருப்பதின் காரணங்களையும் நாம் அறியலாம். இந்த அறிநிலைக்குக் குறுக்கே நிற்கும் காரணிகளை நாம் கண்டுகொள்வதில்லை. கண்டுகொள்ளும்போதும் நாம் விலக்குவதில்லை, ஏன்? இந்த மனிதன் – இந்த உலகம் – படிப்படியாகத்தான் வளரும், வளர்ந்துகொண்டிருக்கிறது என்கிறோம் இல்லையா? எத்துணை தந்திரசாலிகளாக இருக்கிறோம் நாம்? ஏன்? பிறர் கூறும் எந்தப் பதில்களாலும் விளக்கங்களாலும் பயன்விளையாது.

எத்தகைய மனிதர்களாய் நாம் வாழப் பழகிவிட்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வது நல்லது. இந்தக் கேள்வியே இல்லாமல் நாம் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம், என்பது நம்முடைய முதன்மையான பதில். இந்த உலகத் துயரை அடிப்படையாகக்கொண்டே இந்தக் கேள்வியும் பிறந்துள்ளது இல்லையா? இந்த வாழ்வுக்குப் பழக்கப்பட்டுவிட்ட மனிதர்களைத் தானே நாம் சராசரி எனவும், பாமரர்கள் எனவும், ஆன்மிக விழிப்பற்றவர்கள், ஆழமற்றவர்கள், தட்டையானவர்கள் என்றெல்லாம் சொல்கிறோம்? சரி, ஏதோ சொல்கிறோம்: ஆனால் இந்த ஆபத்தான, கொடூரமான, அறமின்மைகளும், அநியாய வறுமையும் துயரும் சூழ்ந்த இந்த உலகின் காரணமாய்த் திகழ்வது இவர்கள்தாம் என்றும், நன்கு கூர்ந்து கவனித்தால் நாம் அனைவருமேதான் என்பதையும் அறியமுடிகிறதல்லவா? நம்மில் இந்த அறிதல் இது ஓர் அறிவாக மட்டுமே – செய்களாக அன்றி – செயல்படுவதிலிருந்துதான் நாம் இதைச் சொல்கிறோம்.

ஓர் ஊரில் 15 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் ஒரு கோயில் கும்பாபிஷேகம். ஒரு குழு அதற்கான கோடி ரூபாய்த் தொகை வேண்டி உண்டியல் தூக்கி வருகிறது. அந்த ஊரிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களுக்குமே இதில் ஆர்வமில்லை, பயனற்றது இச்செயல், பத்தாம்பசலித்தானமானது என்பதே எண்ணம். ஆனாலும் நேரில் வந்து அவர்கள் உண்டியல் குலுக்கும்போது… எதற்காக இவர்கள் ஆசைகளையும் நம்பிக்கைகளையும் கெடுப்பானேன் சிறுதொகைதானே சிறுதொகைதானே என்றே அனைத்து மனிதர்களுமே உண்டியல் அளித்து அந்த நிகழ்வை வெற்றிகரமானதாக நடத்திவிடுகிறார்கள.

இப்படித்தானா இந்தத் துயர்ப்புகை மண்டும் இந்த உலகை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டேயிருக்கிறோம்? இயற்கையோடு நமக்குள்ள உறவும் அதன் வழியாகவே மனிதர்களோடு மனிதர்களுக்கு உள்ள உறவும் இவைகளாலேதான் அறுந்துபோயிருக்கின்றன என்பதை நாம் கண்டுகொள்வதில்லை.

இயற்கையின் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு திருவிழா அல்லவா? பனிக்காலத்தில், மலைகளின் தவம் பலித்ததுபோல் வானமே பூமிக்கு வந்து இறங்கிவிட்டது போன்ற பனிமூட்டம்… வசந்தம் என்றும், கோடை என்றும், மழை என்றும் நாம் கொண்டாடுவதற்கு விழாக்களா இல்லை: அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

நாம் நம் எண்ணங்களால் உருவாக்கியிருக்கும் சடங்குகள் பற்றி இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுந்து அந்தத் தடையினைப் பார்க்கிறோம். காலமற்ற காதலில் நனைந்துபோன நம் இதயம் அந்தச் சடங்கிலுள்ள பொருள்மீறிய அழகியலிலும் லயிக்கிறது. ஆனால் அதன் செயலிலுள்ள காலமும் இடமும், கொண்டாட்டங்களும் மீண்டும் மீண்டும் நம்மைக் கொண்டு நிறுத்திவிடுகிற இடம் தன்மய்யமும், பிரிவும், வேற்றுமைகளும் அனல்தகிக்கும் அதே இடமன்றி இந்தப் பேரண்டப் பெருந்தெய்வம் நமக்குத் தந்திருக்கும் இயற்கை அல்லவே!

நம்முடைய பிரச்னைகள் என்ன? (மானுடகுலம் அடைய வேண்டிய இடத்தை அடைந்து நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறதா?) நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? (நம்முடைய வாழ்க்கை சரிதானா?) இந்தக் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் நாம் அறிஞர்களையும், தலைவர்களையும், மதங்களையும் நம்பிக்கைகளையும்தானே சார்ந்திருக்கிறோம். காலம்காலமான பழக்க வழக்கங்களில் மானுடப் பொதுவான நன்மை பயக்காத ஒன்றை எப்படி ஒரு மனிதன் தரித்துக்கொண்டிருக்கமுடியும்? விடுபடாத இயற்கையுடனும், அன்பினாலும் அழகினாலும் மட்டுமே நிகழும் அன்றாடச் செயல்களே சடங்குகளாகவும் இருக்கையில் அவனுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்குமா? அவசியம் இருக்குமா? செய்யவேண்டியவைகளை விட்டுவிட்டுத்தான் செய்ய வேண்டாதவைகளைச் செய்துகொண்டிருக்கும் தவறான பாதையில் மனிதன் வெகுகாலமாய் நடந்துகொண்டிருக்கிறான் என்பதுதானே உண்மை?

0

வரலாறும் சூழலுமாய் இப்போது நம்மைச் சுற்றிக்கிடக்கும் எண்ணங்களைப் பற்றிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட அது எனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் இடையிலிருக்கும் ஒரு காலம் என நினைக்கிறேன். ஆனாலும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அத்தனை நூல்களையும், இந்திய வரலாற்றின் அத்தனை கவிதை காவிய நூல்களையும் அறிந்து வாசித்து அந்த வயதிலேயே ஆழ்ந்து வாசித்துள்ளேன் என்கிற ஞாபகம் முக்கியமானது.

நானும் எனது நண்பனும் எங்கள் பள்ளித் தேர்வு விடுமுறைக்காலங்களில் (காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு) நண்பனின் தந்தை வைத்திருந்த ‘சீன் கம்பெனி’ என்றழைக்கப்படும் நாடகத் திரை வாடகை விற்பனைக் கூடத்தின் செயல்முறைப் பணியாளர்களாய் ஒட்டிக்கொள்வோம். ஏறிக் கட்டி அவற்றைத் தொங்கும்படியும் சுருளும்படியும் அமைத்துவிட்டுச் சென்றிருப்பார்கள் தொழிலாளர்கள. நாடகம் முடிந்த மறுநாள் காலை வந்து அவற்றை அவிழ்த்துச் சுருட்டி அடுக்கிக் கட்டி இருப்பிடம் கொண்டு சேர்ப்பர். அரங்கில் இயக்குவதுமட்டுமேயான எளிய வேலை எங்களுடையது. ரொம்ப ஜாலியானதொரு பொழுதுபோக்கு அது எங்களுக்கு.

செவ்வியல் நாட்டியப் பெருந்தகைகளின் நாட்டியத்தின்போது ஒலித்த மெல்லிய மயிரிழை அசைவுகளின் ஒலியையும் ஆடைகளின் அசைவொலியையும் ஆபரங்களின் சிணுங்கலையும் மெத்திடும் பாதங்களின் தாளலயங்களுக்கு மேடைப்பலகைகளும் தளங்களும் அளித்த எதிரொலியையும் (பேர்பெற்ற ஆளுமைகளின் பெயர்கள் அனைத்தையும் நான் இங்கே தவிர்த்துள்ளேன்) ஒரு செவ்வியல் நாட்டியம் தொடவிரும்பிய பேரழகை சின்னஞ்சிறு வயதில் ஒருவனுக்குக் காணக் கிடைப்பதே பெறும்பேறு என்றும் நல்லது என்றும் நான் கருதுவேன். அதலும் குறிப்பாக பெண்களுடைய நாட்டியங்கள்.

எந்தக் கலையானாலும் இலக்கியமானாலும் அது மனிதனை மோகத்தை நோக்கி, ஆசைகளை நோக்கி, அறிவுச்சேகரங்களை நோக்கி, புறஉலகையும் சுயப்பெருமைகளையும் நோக்கி மனிதனை அழைத்துச் சென்றுவிடுவதில் ஒரு ஒளியுமில்லை. வரலாறுகளையும் சூழலையும் அறிந்தேகூட அவன் வந்து நிற்க வேண்டிய இடம் எது என்பதிலும் எதையும் அணிந்துகொள்ளாத வெறும்காலோடேயே அவன் இந்த பூமியில் நடப்பதிலும்தான் அது இருக்கிறது என்கிறேன்.

வழக்கமான பொருட்காட்சித் திருவிழா அது. ஒவ்வொரு நாளும் ஒரு நாடகம் அல்லது ஒரு நாட்டியம் நடந்துகொண்டிருக்கும் அந்த அரங்கில் அன்று அரசியலிலும் திரைப்படங்களிலுமாய் பெரும்புகழில் பேர் பெற்றிருந்த கண்ணதாசனின் ஒரு நாடகம் நடைபெற இருக்கிறது.

அரங்கு நிறைந்து ததும்பிக்கொண்டிருக்கிறது. மூடியிருக்கும் முன் திரைக்குள் நாங்கள். பக்கத்து மூங்கில் சுவர் ஓட்டையைக் குடைந்து பெரிதாக்கித்தான் வெளியே திரளைப் பார்ப்பது வழக்கம். அப்போதுதான் மேடைக்குள் தயாராய் உள்நுழைகிறார் நாயகர், தலைவர். எல்லோரும் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்கிறார்கள். ஓர் பொடியன் மட்டுமே அந்தச் சுவர்த்தட்டியின் ஓரத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்துகொண்டு எழுந்திராதபடி இருக்கிறான். கண்ணதாசன் எனும் அந்த நாயகரும் கிட்டத்தட்ட அந்தச் சிறுவனை உரசியபடிதான் அந்தத் தட்டியருகே வந்து ஓட்டையை விரல்குடைந்து அகலமாக்கி வெளியே மக்கள் கூட்டத்தை எட்டிப் பார்க்கிறார். கூட்டம் வேண்டுமல்லவா? சிறுவனின் உயரத்தில் இன்னொரு மடங்கும், பருமனில் இன்னொரு மடங்கும்போல் இருந்தார் அவர். அவர் பேருடலுக்கு அவர் அவனைப் பொருட்படுத்தாதது சரிதான் என்றிருந்தது. ஆனால் அந்தச் சிறுவனின் மனிதில் ஓடியது ஒரு கணம்கூட அல்ல ஒரு சிறு பின்னக் கணம்தான் இருக்கும். அதைத்தான் நான் இப்போது இங்கே எழுதுகிறேன். ‘ஹ, இவரென்ன பெரிய கவிஞர் (கவியரசர்) எனக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் பாடல்களை இதே போலவே நானும்தான் எழுதிவிட முடியும்!’

ஒரு போதுமே இந்தச் சிறுவன் அத்தகையவன் அல்ல; வெகு நீண்ட காலங்களுக்குப் பிறகும் இப்போது அந்தச் சிறுபின்னக் கண நினைவின் பெரிய காரணத்தைச் சொல்லவே இங்கே விழைகிறேன்.

திரைப்பாடலாசிரியராய் கண்ணதாசன் அவர்கள் அடைந்த உயரமும் ஆழமும் விரிவும், நம் நினைவு அடுக்குகளில் அமர்ந்திருக்கும் கவிதை இலக்கிய அளவிற்கு உயர்ந்தது. அதே சமயம் அது நமது பிரக்ஞையிலுள்ள அறிவுச் சேகரங்களிலிருந்து வந்திருக்கிறது என்பதே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானதொன்று. ‘வீர்யம் குறைந்தவன் பழமைக்கு வசப்படுகிறான் என்னும் பிரமிளின் சொற்கள் நினைவுக்கு வரும் இடம் இது. ஒரு வசதிக்காகவே தான் இதை இங்கே குறிப்பிடுகிறேன்.’ அவற்றிலுள்ள மேன்மைகளோடும்கூட அவருக்கு ஓர் உயிர்த்தொடர்பில்லை என்பதே அவருடைய பல திரைப்படங்களில் அவர் எழுத நேர்ந்த சத்தற்றதும் பொருளற்றதும் ஆபாசமாக ஒலிப்பதுமான பாடல்களின் இரகசியங்கள். தங்களைச் சமாளித்துக்கொள்ள விரும்பும் பொய்ம்முகங்களாகவே வயதான காலத்தில் ஆன்மிகத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாய் கண்டதைப் படித்து, புலம்பி, ஆன்மிக வேடமணிந்து கொள்ளும் நம் பெரியவர்களைப் போலவே அவரும் அமைந்துவிட்டதில் எந்த ஒரு ஒளியும் மேன்மையுமில்லை.

தான் வாழும் காலத்திலும் தன்னை கண்ணதாசன் ஒருபோதும் பெருங்கவிஞன் என்று சொல்லிக்கொள்வதில்லை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நாம் இங்கே ஆளுமைக்குள் போவதற்கோ குலைப்பதற்கோ, தீர்ப்புக் கூறுவதற்கோ அன்றி நாம் நம்மைப் புரிந்துகொள்வதற்கே இத்தனையையும் இங்கே பேசியிருக்கிறோம்.

மெய்யான கவிஞனை உந்தும் சக்தி – பின்னூட்டம் – ஆற்றல் – காலத் தொடர்ச்சியினாலும் கற்ற அறிவினாலும் மட்டுமே உருவாவதல்ல. காலாதீதத்தினின்று – நித்தியத்தினின்று – சுழலும் வாளாய்ச் செயல்படுபவன் அவன். வரலாறு, சூழல் அனைத்துப் பாரங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய நிலம் பூக்குவிக்கும் மலர் அவன். அது – அந்தமலர் – ஓர் அறிவு கிடையாது. ஆனால் அது ஓர் அறிவாகத்தான் வெளிப்படுகிறது. அவன் தொட்டவுடனே மலரும் அது, மீண்டும் தொட்டவுடனே மறைந்துவிடும் ஒற்றை மின்பொத்தானைப் போலிருக்கிறது.

நாம் பத்திரமாய் பார்த்துக் கொள்ளவேண்டியது. பற்றாமல் வருடிச் செல்லும் நம் உள்ளங்கைகளுக்கே வசப்படும் அன்பு அது. நம்மால் முடிந்தவரை இந்த வாழ்க்கையை நாம் நம் கவிதைகள் மூலம்தான் நாம் நமக்குள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம், கொள்ளமுடியும் என்று தோன்றுகிறது. அப்போது மட்டுமே மனிதர்களாக வாழ்கிறோம்.

மெய்யான மனிதர்களையும் கவிஞனையும் நாம் எங்குமே பிரித்துப்பேசவில்லை. மனம் என்றும் அடிமனம் என்றும் ஆழ்மனம் என்றும் அனுபவங்களாலும் அறிவுகளாலும் புதைந்துகிடக்கும் சேகரங்களிலிருந்தே நாம் வெளிப்படுகிறோம் என்பதை அறியும்போதே அதற்குமப்பால் மிகுந்த தாகத்துடன், ஆற்றலுடன் தகித்துக்கிடக்கும் பொன்இன்மையிலிருந்து பீரிட்டு எழுபவனும் அதைத் தன் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ளவே தன் நடையை வைத்திருப்பவனுமானவனே பெருங்கவிஞனும் அசல் மனிதனும் ஆவான். எல்லோரும் அசல்மனிதனாகவும் கவிஞனாகவும் மாறும்போதுதான் பெருங்கவிஞன் என்ற சொல்லும் மறையும். சக இதயம் எனும் தோழமை ஒன்றுமட்டுமே உலகில் நிறையும். இது ஒரு இலட்சியம் அல்ல; கண்கூடான உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாங்கள் பெரியார்கள் என்றும், மகத்தான ஆளுமைகள் என்றும், ஞானிகள் என்றும், ரிஷிகள் என்றும், தெய்வப்பிறவிகள் என்றும் அபூர்வப்பிறவிகள் என்றும் கடவுள்களைப்போலவே மதித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை நீங்கள் அரைகுறை உள்ளொளிபடைத்தவர்களே என்கிறீர்கள். அரைக்கிணறு தாண்டல் என்றெல்லாம் கவிதையும் பேசியிருக்கிறீர்கள்….. என்று ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.

கொஞ்சம் பொறுங்கள். அது உங்களைத் துன்புறுத்தியிருக்கிறதா, கஷ்டப்படுத்தியிருக்கிறதா? என்றால் நாம் ஒரு ஆளுமைக் கலாச்சாரத்தில் தான் வாழ்கிறோமா? நமக்கு காரியத்தைவிட ஆளுமைகளும் அவர்கள் பேரும் புகழும் வழிபாடுகளும், நம் எண்ணங்களும் நாமும்தான் முக்கியமா? யோசித்துப் பாருங்கள். அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்ந்து கடந்திருக்கிறார்கள். அவர்களால் நமக்குத் தரமுடிந்ததும் நாம் பெறமுடிந்ததும் முழுமையானது இல்லை அல்லவா? நாம்தான் நம் வழி நடக்கவேண்டும் என்றிருக்கையில் அம் மாமனிதர்களின் இடம்தான் என்ன? நம் சிறுமைகளையும் மானுடச் சமமின்மைகளையும்தானே நாம் இங்கே காண்கிறோம்? இந்தக் காணுதலே உண்மையானதும் மிகமிக அழகானதும் என்றே நான் சொல்வேன். ஆனால் அதன்பிறகு காண்பான் என்னவாகிறான்? எங்கு வந்தடைகிறான் என்பதல்லவா இன்றியமையாதது. பக்தர்கள் கடவுளை வழிபடுதல் போன்றமைகளான நம் பழமை இதற்குச் சரிவருமா ஒவ்வொரு மனிதனுமே கடவுளாகவும் கவிஞனாகவுமே ஆகவேண்டியிருக்க, இவையெல்லாம் கேலிக்கூத்தாக, வியர்த்தமாக அரைகுறை உள்ளொளிகளாகவே இருப்பதாகப்படவில்லையா நமக்கு?

எப்படியோ இந்தக் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதால் அவர்கள் முக்கியத்துவமும் காலமற்ற மெய்மைகளாலும் பேருணர்வுகளாலும் அவர்கள் சமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற மெய்மையையும் அறிந்து அதன்வழி நடப்பதே சரியானது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா? விவேகமற்ற மூடபக்தியா நம்முடையது?

மெதுவிஷமும் பற்ற முடியா மெய்யான மனிதர்களாக நாம் ஆகிவிட்டால், பண்பாடு, கலாச்சாரம், பக்தி, சடங்கு, வழிபாடு, பூஜை, புனஸ்காரங்களால் நாம் பாடுபடுவதெல்லாம் தானாகவே நடக்கும் மெய்ச்செயல்பாடுகளாக மனிதப் பண்பாடு, கலாச்சாரம் எனும் சொற்களுக்கே அவசியமின்றி ஒரு நல்லொழுங்கு தானாகவே அல்லவா நடந்துகொண்டிருக்கும்? அப்போது நம் உள்ளம் தேவையான அறிவுகளுடன் மட்டுமே இயங்குவதாகும். உயிர்வாழ்விற்கான ஆகக் குறைந்த எண்ணங்களுடனும் முயற்சிகளுடனும் எல்லா உயிர்களும் தம் சுற்றமாய் அமைந்த பிற உயிர்களோடும் பொருட்களோடும் தனிமை என்பதே இன்றி துயரம் என்பதே இன்றி எத்துணை ஒருமையுடன் வாழ்கின்றன? அவர்கள் மனிதனை நோக்கிச் சொல்கின்றனர் இதனை என்று தோன்றுகிறதில்லையா?

அண்மையில் ஓரிடத்தில் கண்ணதாசன் பற்றித் தெளிவற்ற பலகுரல்களைக் கேட்டதின் அடிப்படையில்தான் மேலே குறிப்பிட்டுள்ளேன். அதே போன்றதுதான் அதற்குமுன்னர் நிகழ்ந்த ஒரு விழாவின்போது ஓர் அரசு அமைச்சர் வாரிசு போன்றவற்றை நான் உரையாடும்படி நேர்ந்ததை நினைத்துக்கொண்டதையும் எழுத நினைக்கிறேன். இவை எதுவுமே ஓர் ஆளுமை பேணும் கலாச்சாரத்தினுடையதே அல்ல என்பதையே நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நமக்கு வேண்டியது மெனு அல்ல; உணவு.

ஓர் அரசியல் கட்சி நாட்டைக் காப்பதற்கான – உளரீதியாகவோ, புறரீதியாகவோ ஆன கட்டாயத்தின்பேரில் நல்லாட்சியைத் தொடங்குகிறது. இதன் போக்கில் காலத்தின் சக்கரங்களையே கொண்டு முதலமைச்சரும் கட்சித் தலைவருமானவர் தன் மகனையே வருங்கால முதலமைச்சராகவும் ஆக்குவதற்கான எல்லாவகையான பயிற்சிகளையும் அளிக்கிறார். இவைகளில் நாம் கவனிக்கவேண்டியவைகள் நுணுக்கமானவைகளாயிருக்க, நாம் இந்தக் கூட்டத்திலுள்ள போட்டி, பொறாமை, பேராசைகள் மட்டுமே கொண்டுநிற்கும் எதிர்க்கட்சிக்காரனாக இருந்து பயனில்லை. அது குழப்பமும், சச்சரவுகளும் துயர்களும் இல்லாத மானுடத்தை உருவாக்கவும் இயக்கவும் பயன்படாது.

பிரிட்டிஷ்காரர்கள், அந்நியநாட்டவர்கள் எல்லாருமே இந்தியாவில் வணிகர்களாகவும் படையெடுப்பாளர்களாகவும் நுழைந்து மக்கள் வாழ்வைச் சிதைத்தும் பேணியும் ஆண்டுகொண்டிருந்தார்கள் என்றால் அதற்குமுன்னர், எத்தனை எத்தனை கோட்டைக் கொத்தளங்களுடன், ஆண்டான் அடிமைகளுடனும் ஓயாத போர்களுடனும் முடிவில்லாத துன்பங்களுடனும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர்களின் வீங்கிய தன்மய்யங்களுடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள், நம் மனிதர்கள், உலகிலுள்ள எந்த மனித இனத்தையும் அதன் பேராசைகளையும் இன்றும் எதிர்த்துப் பேசமுடியாதபடி? இந்தியாவைப் பொறுத்தவரை அரசப் பரம்பரைகளில் அசோகர், அக்பர் போன்றவர்களும், மக்களில் பெயர் தெரியாமல் மறைந்துபோன பல மனிதர்களும் இருப்பார்கள் என்றும் இவர்களால் முழுமையான, புனிதமான, அசைக்கமுடியாத, தகர்க்கமுடியாத பெருவாழ்வொன்றைப் படைக்க முடியாமற்போய்விட்டதுதான் நாம் கவனிக்க வேண்டியவற்றுள் இன்று முக்கியமானது என்கிறேன்.

அந்த நகரம்

அந்த நகரத்தில் ஒரு விநோதம் நடக்கத் தொடங்கியிருந்தது. நான் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் வழியே இல்லாததால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரே வழியாகிவிட்டது இப்போது. சொன்னால்தானே தெரியும் உங்களுக்கு. சொல்கிறேன். ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் தாயும் தந்தையும் இறந்துவிடுகிறார்கள். முதலில் அடுத்து அடுத்து சில இடங்களிலும்கூட இது நிகழும்போது இது ஒரு தற்செயல்தான் என்று நினைத்தார்கள். ஆனால் அது தொடர்ந்து அந்த நகர் முழுக்க முழுமை கொண்டுவிட்டதும்தான் அவர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து விடுவதற்கு வாய்ப்பு ஏதுமே இன்றி இயல்பாகிவிட்டது. ஒவ்வொரு குழந்தையின் தாயும் தந்தையுமாகவே அனைத்து மனிதர்களும் ஒரு பொறுப்பு எடுத்துக்கொண்டவர்கள் போல் மாறிவிட்டிருந்தார்கள். எந்தக் குழந்தைக்கும் எந்தக் குறையுமில்லை. எந்தத் தாய் தந்தையர்க்கும் எந்தக் குறையுமில்லை. குறிப்பாக மரணம் பற்றிய பயமே எந்த மனிதருக்கும் இல்லை. எந்த வேளையிலும் தாங்கள் மரிக்கத் தயாரானவர்கள் போலும் அன்றி வாழ்வு, மரணம் பற்றிய நினைப்புகளே அற்ற பெருவாழ்வில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். காலத்தில் நீடிக்கும் வாழ்வு பற்றிய கவலையற்றிருந்தார்கள். இந்த விநோதம், அற்புதம் ஒவ்வொரு நகரத்திலும் ஆங்காங்கே நிகழத் தொடங்கி முழுமை நோக்கிப் பரவிக் கொண்டிருந்ததும் யாரும் சிந்தித்துக் கொண்டிருக்கவே வாய்ப்பில்லாதது போல இயல்பாகிப் போனது.


புகைப்படம்: விஸ்வநாதன்

மேலும் படிக்க

இதழ் 16 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்