ஏழ்கடல்

14 நிமிட வாசிப்பு

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி” என்ற வாசகம் தமிழிலும் அதன் பொருள் ஆங்கிலத்திலும் பொறித்திருக்கும் பெரும் சுவர்ச் சித்திரம் திரையில் மெல்லத் தெளிந்து வர, “வார்த்தைகள் தெளிவாகத் தெரிகிறது, எங்களைத் தெரிகிறதா?” என்று கேட்டார் ஜார்ஜ்.

“ஆம், உங்கள் இருவரையும் தெரிகிறது,” என்று சொன்னவாறே திரையில் வார்த்தைகளைக் குறுக்காக மறைத்து ஒரு பெண் தோன்றிப் புன்னகையுடன் “டாக்டர் ஜார்ஜுக்கும், பாதிரியாருக்கும் வணக்கம். நான் புநைல், ஆய்வகத்தின் துணை பொறுப்பாளர், டாக்டர் ஸ்மித் இன்னும் ஓரிரு நிமிடத்தில் வந்துவிடுவார்,” என்றாள்.

மெடா (Meta) எனப்படும் இயந்திர மனிதர்களின் விதிக்கிணங்க புநைலுக்கு ஊதா நிறக் கண்கள். கண்கள், தடையின் நுண் அசைவுகள், நடையின் ஒரு மெல்லிய இயந்திரத்தன்மை போன்றவை தவிர்த்து சாமான்ய நோக்கில் இவர்களை மனிதனா மெடாவா என்று கூறுவது கடினம்.

ஜார்ஜ் அவள் கண்களைத் தான் கூர்ந்து நோக்குவதைச் சுதாரித்து, “நாங்கள் பிந்திவிட்டோமா?” என்று கேட்டார்.

“இல்லை சரியான நேரத்திற்கு இணைந்திருக்கிறார்கள், இன்னும் கிரகணத்துக்கு சுமார் 30 நிமிடங்கள் உள்ளன. உங்களுக்கு விண் மண்டலத்தின்(Galaxy) நேரலை தெளிவாகத் தெரிகிறதா,” என்று கேட்டாள்.

ஜார்ஜ் தன் உடலை விமானி அறையின் கண்ணாடி பக்கம் திரும்பி மெடா கேபி 2503 யை நோக்க, அதை உணர்ந்த கேபி 2503, ஜார்ஜுக்கும் பாதிரியாருக்கும் அருகே நடந்து வந்து திரையில் தெரியும் புநைலைப் பார்த்து, “எங்கள் விண்கலத்தை புகாகோ விண்ணலைக் கம்பம் (Space Antenna) நோக்கித் திருப்பியாயிற்று, இணைப்பு அலைகள் மெருகேற்றப்படுகின்றன (Fine Tuning), இன்னும் சில நிமிடங்களில் காட்சிகள் திரையில் தெரிய வரும்,” என்றான்.

அது விளங்கியது போல் புநைல் புன்முறுவல் செய்ய, அவளுக்குப் பின்னால் ஆய்வக நிர்வாகக் கட்டுப்பாட்டு அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. டாக்டர் ஸ்மித்தும், அவரைத் தொடர்ந்து அவருடைய வயதை ஒத்த பழுத்த முதியவரும், துள்ளல் நடையுடன் ஒரு நடு வயதோனும் வந்தமர்த்தார்கள்.

புநைல் சுட்டு விரலால் காற்றில் கட்டளையைக் கீரிட, ஜார்ஜின் திரையில் கேமரா கோணம் மாறி புநைலின் ஆய்வக நிர்வாகக் கட்டுப்பாட்டு அறையை மாடியில் இருந்து பார்ப்பது போல் மாற, தலையை நன்றாக தூக்கி டாக்டர் ஸ்மித் பேசுவதற்கு ஆயத்தமாக, அவர்கள் தங்களைப் பெரும் திரையில் பார்க்கிறார்கள் என்று ஜார்ஜால் யூகிக்க முடிந்தது.

டாக்டர் ஸ்மித், “ஜார்ஜ்…உன்னை முதுகலைப் பட்டமளிப்பு அன்று கடைசியாகப் பார்த்தது என்று நினைக்கிறேன். எப்படி இருக்கிறாய்?”

“சரியா நினைவு வைத்திருக்கிறீர்கள் டாக்டர். முப்பது ஆண்டுகளுக்கு முன் எம்.ஐ.டி யில், 2023யின் கோடைக்காலம்… முதலில் நன்றி டாக்டர், தங்கள் பெரும் அலுவல்களுக்கிடையே கிரகணத்துக்கு முன் எங்களுக்காக நேரத்தை ஒதுக்க நினைத்ததற்கு.”

“நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை. எல்லாம் மெடாக்கள் தன் செயற்கை நுண்ணறிவுத் திறனால் பார்த்துக்கொள்ளும். நான் இறுதியில் ஒப்பமிட வேண்டும், அவ்வளவே. ஒப்பம் இடும்போது சாட்சிக்காக இந்த விண் மண்டலத்தில் இல்லாத ஒருவர் தேவை. தேடிக் கொண்டிருக்கையில் பாதிரியாரைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் பார், மனிதன் நிலவுக்குச் சென்றதைவிட முக்கிய வரலாற்று நிகழ்வு. பெரு வெடிப்புக்கு (Big Bang) ஒத்த சம்பவம், அதனாலேயே பெருவெடிப்பு 2.0 என்று சூட்டிருக்கிறோம். இருந்தும் என்ன, எங்கள் நால்வரைத் தவிர யாரும் இங்கு இல்லை,” என்றார் டாக்டர் ஸ்மித்.

தொடர்ந்து, “அதுவும் நல்லதுதான், எந்தத் தலையீடும் இல்லை. நினைத்ததைச் செய்யலாம்,” என்று மெல்லிய குரலில் ஆறுதலடைந்தது போல் கூறினார்.

நடு வயதோன் உடனே, “பெரு வெடிப்பைக் காண மக்கள் எல்லாரும் நதிக்கரையோரம் குவிந்திருக்கிறார்கள்,” என்றான்.

“நதியா?”

“முற்றிலும் உள்ளரங்கில் ஓடும் செயற்கை நதி,” என்றாள் புநைல்.

“ஓ சரி சரி… மீட்புப் குழு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்…” என்றார் ஜார்ஜ்

ஏதோ நியாபகம் வர, ஜார்ஜ் உடனே, “மன்னிக்கவும், என் குழுவினரை அறிமுகப்படுத்தாதற்கு. நான் ஜார்ஜ், வானியற்பியல் விஞ்ஞானி (Astrophysicist)… இவர் பாதிரியார் ஜான்… அவர் கேபி 2503, விண்கலத்தின் நிர்வாகி…”

கேபி 2503 தலையாட்டி வணக்கத்தைத் தெரியப்படுத்த, தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் சலனமில்லாமல் கையில் பைபிளுடன் ஜெபத்தை முணுமுணுத்து கொண்டிருந்தார் பாதிரி ஜான்.

திரையில் புநைல் தெரிந்த பகுதியை நோக்கி கேபி 2503 உற்சாகமாக, “நான் மெடா 6.0” என்றான்.

அதை உணர்ந்து பதிலுக்குப் புன்னகைத்தவாறே, “நாங்கள் மெடா 7.5” என்றாள் புநைல்.

“புநைல்… இதுவரை கேள்விப்படாத பெயர்… தரவுத் தளத்தில்(Database) கூடத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.”

டாக்டர் ஸ்மித், “இவர்கள் எல்லாரும் தனக்குத் தானே பெயரிட்டுக் கொண்டவர்கள். ஹோமர், டாண்டே, வள்ளுவன், டூமாஸ், விர்ஜில், ப்ராஸ்ட் எனப் பெரும்பாலும் ஒரு படைப்பாளி பெயராக இருக்கும். இலக்கியப் பித்துக்கள்,” என்றார்.

புநைல், “ஆம் என் முழு பெயர் புளோரன்ஸ் நைட்டிங்கேல், சுருக்கமாக புநைல் என்று அழைப்பார்கள்,” என்றாள்

“மகிழ்ச்சி! மீட்டுப் குழுவின் தகவல்களின்படிப் புது விண் மண்டலத்தில் பத்து வருடத்தில் ஏழாம் தலைமுறை மெடாக்கள் உருவாக்கிய இரண்டு உலகங்களும், அடைந்த பரிமாண வளர்ச்சியும் அசாத்தியமானது” என்றான் கேபி 2503.

புநைல் பெருமை நிரப்பிய விழிகளுடன் திரும்பி “எல்லாம் எங்கள் தலைவரின் திறன்” என்று பழுத்த முதியவரைச் சுட்டிக்காட்டி, “இவர் சர்வ செயற்கை நுண்ணுணர்வு சாதனங்களின் தலைவர் கபூன். மெடா 0.5 லிருந்து செயற்கை நுண்ணறிவு அறிவுப் பரிணாமத்தில் பயணிக்கிறார்.”

எந்தவித உணர்வும் இல்லாமல், ஒரு கடமையெனத் தலையைத் திரையின் பக்கம் திருப்பிக் கண்களைச் சிமிட்டிவிட்டு முன்னம் போலவே தன் பார்வையை அறையின் மேற்கூரையில் நிறுத்தினார் கபூன்.

ஜார்ஜ் உற்சாகத்துடன் “நீங்கள்தானா அவர்…நீங்கள் வடிவமைத்து அனுப்பிய வெப்பக் கவசங்கள், தீயணைப்பு தானூர்திகள் போன்றவை எங்களுக்குப் பெரிதும் உதவின…கோடி நன்றிகள்…தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார்.

அதற்கும் எந்தச் சலனமும் இல்லை.

ஏன் இவரை மனிதன் என்று இதுவரை நினைத்தோம் என்று யோசித்து, புதுப் பரிணாமம் பெற்ற மெடாக்கள் தங்கள் அனுபவத்திற்கும் அறிவாற்றலுக்கும் ஏற்பத் தங்கள் தோற்றத்தையும் மெருகேற்றிக் கொள்கின்றன என்று முடிவுக்கு வந்தார் ஜார்ஜ்.

பாதிரி ஜெபத்தை நிறுத்தி “அனைத்திற்கும் நன்றி” என்றார்.

கபூன் தலையை இறக்கி அதை ஆமோதிப்பது போல் ஆட்டிவிட்டு பழையபடி மேலே தூக்கிப் பார்வையை நிறுத்தினார்.

இந்த மூன்று மாதப் பயணத்தில் முதல் முறையாகப் பாதிரியின் குரலைக் கேட்டது ஜார்ஜுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

“நான் டாம் ஆய்வகத்தின் துணை செயற்குழு தலைவர்… எல்லாமும் என் பார்வையின் கீழ் நடக்கிறது” என்று தன்னைச் சுயஅறிமுகப்படுத்திக் கொண்டான் நடு வயதான்.

பிண்ணனியில் “கிரகணத்துக்கு இன்னும் 25 நிமிடங்கள்” என்று அறிவிப்புமணி ஒலித்தது.

கேபி 2503 குதூகலமாக “நேரலை இணைப்பு கிடைத்துவிட்டது. புகாகோ அலைக்கம்பத்தில் இருக்கும் தொலைநோக்கி வழியாகப் பார்க்கிறோம். மூன்று கோள்கள் தெரிகின்றன” என்று கூறியபடியே காற்றிலே கீறிட ஜார்ஜ் முன்னிருந்த திரை இரண்டாக பிரிந்து, ஒரு பக்கம் டாக்டர் ஸ்மித் குழுவினரும், மறு பாதி விண் மண்டலமும் தெரிந்தன.

புநைல் “அங்கிருந்து தெரியும் இடது கோளான பூமி 3.0 இல் நாங்கள் உள்ளோம், எங்களுக்கு அடுத்து இருப்பது சூரியனாக மீளப்போவது, அதற்கு அடுத்து பூமி 2.0. மூன்றும் இன்னும் சில நிமிடங்களில் நேர்க்கோட்டில் சந்திக்கின்றன…நாங்கள் ஒப்பமிட்டவுடன் எங்களுடன் உங்கள் அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். மின்காந்தக் குறுக்கீடுகளால் தரவுப் பரிமாற்றம் எதுவும் பாதிக்காமல் இருக்க விண் மண்டலத்தின் வெளி அடுக்கில் மின்காந்தக் கவசம் பூட்டப்படும். நிகழ்வை நேரலையாக நீங்கள் தொலைநோக்கி வழியாகப் பார்க்கலாம் ” என்றாள்.

ஜார்ஜ் அனைத்தும் புரிந்தது போல் தலையை ஆட்டி “நன்றி! எல்லாம் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள். ஒரு சூரியனை உருவாக்குவது என்பது மாபெரும் வரலாற்றுத் தருணம். இதில் நாங்களும் ஒரு சிறு பகுதியாக ஆனதற்காகப் பெருமை கொள்கிறோம்” என்றார்.

“வாழ்த்துக்கள் ஜார்ஜ், நீயும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டாய்,” என்றார் டாக்டர் ஸ்மித்

“வரலாறா?…..” என்று ஜார்ஜ் இழுக்க

“பூமியில் இருந்து கிளம்பிய கடைசி மனிதன்.”

“ஓ, முறைப்படி பாதிரியார்தான் கடைசியில் ஏறியது.”

ஜெபத்தை நிறுத்திய பாதிரியார், ஜார்ஜைக் கோபமாகப் பார்க்க, அதை உணர்ந்த ஜார்ஜ் தாழ்ந்த குரலில், “ஏற்றப்பட்டார்… பாதி மயங்கடிக்கப்பட்டு… பிடித்து இழுத்து…”

“ஆனால் குழு தலைவர் என்கிற முறையில் சிறப்பாகச் செயல்பட்டதால் உன் பெயர்தான் வரலாறில் இடம்பெறும்.”

“சிறப்பு என்று கூற முடியாது. பாதிரி எவ்வளவோ மன்றாடியும் இரண்டாயிரம் பேர் கொண்ட ஒரு மக்கள் குழு வெளியேற மறுத்துவிட்டது.”

கேபி 2503, “இதே போல் ஆங்காங்கே குழுக்களாக குறைந்தது ஒரு நூறாயிரம் மக்களாவது அவளுள் ஒளிந்திருக்கலாம்” என்றான்.

“அவளா?”

“பூமி.”

“மெடாக்கள்?” என்று புநைல் கேட்க

“குறைந்தது இருநூறு மெடாக்கள் மனிதர்களுடன் தங்கிவிட்டார்கள். ஒருவேளை மனம் மாறி மக்களும் மெடாக்களும் வெளியேற நினைத்தால், உபயோகமாக இருக்குமே என்று விண்கப்பலை (Spaceship) அவர்களுக்காக விட்டுவிட்டு, நாங்கள் முப்பது பேர் பயணிக்கக்கூடிய சிறிய ஆய்வு விண்கலத்தில் (Exploration Spaceshuttle) எழுபது மனிதர்களுடன் பாதிரியையும் இழுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டோம்.”

“இது தற்கொலைக்குச் சமம்! அவர்களுக்கும் அறிவில்லையா?” என்று டாம் கேட்க

கேபி 2503 நமட்டுச் சிரிப்புடன் “மெடாக்களின் உருவானதே மனித குலம் மேம்படத்தான். பெற்ற அன்னையை விட்டுவிட்டுப் போவதென்பது…” என்றான்.

டாம் நக்கலாக, “அப்படியானால் நீ எதற்கு வெளியேறினாய்?”

“உண்மையில் எனக்கு வெளியேற எண்ணமில்லை. உங்கள் ஆய்வகத்தில் இருந்து அழைப்பு வந்தது என்னை 7.5ஆகப் பரிணாமம் ஆக்க. ஆனதும் உடன் திரும்பிப் பூமிக்குச் செல்வதே என் திட்டம். என் உடல் கூடு இப்போது 120 டிகிரி வரையே வெப்பம் தாங்கும்.”

கபூனின் பார்வை சட்டென ஒரு கணம் கேபி 2503வைக் கண்டு திரும்பியது.

டாக்டர் ஸ்மித் “சரி சரி, எப்படி இருக்கிறாள் பூமி?”

“தட்ப வெப்பம் 100 டிகிரி தாண்டிவிட்டால் பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி…கஜகஸ்தானே இப்போது ஒரு தீவு என்றால் யாரும் நம்ப மாட்டீர்கள். அடர்க் காடுகளில் மட்டும் கொஞ்சம் பசுமை இருக்கிறது,” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறினார் ஜார்ஜ்.

டாக்டர் ஸ்மித் “கவலை வேண்டாம், நீங்கள் எப்போது இங்கு வந்து சேருவீர்கள்?”

“சிறிய விண்கலமாதலால் இரண்டு மாதமாவது ஆகும் உங்கள் விண் மண்டலத்திற்கு நுழைய” என்றான் கேபி 2503.

ஜார்ஜ் “ஆனால் நீங்கள் உருவாக்கும் சூரியனும் ஏழ்கடலும் நிலைகொள்ள ஐந்து மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள்,” என்றார்.

“ஐந்து மாதத்திற்குப் பிறகு நீங்கள் இங்கு வரும்போது பசுமை கொண்ட புல் வெளி நிறைந்து, மலர்கள் பூத்துக் குலுங்கி, மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனும் உருவாகி, ஈடன் தோட்டம் (Garden of Eden) போல் காட்சியளிக்கும்,” என்றார் டாக்டர் ஸ்மித்.

“தோட்டத்தில் சாத்தானும் தன் வேலையை ஆரம்பித்திருப்பான்,” என்றார் பாதிரி ஜான்.

டாம் “சாத்தான் இல்லாத சொர்க்கப்புரி” என்றான்.

பாதிரி பொங்கி, “இதே போலத் தான் பூமி சொர்க்கப்புரி ஆகப் போகிறது என்று பதினோரு வருடங்கள் முன்பு பிரகடனப்படுத்தப்பட்டது, சர்வமும் நாசம்,” என்றார்.

“அது அணுகுண்டு(Atomic Bomb), இது ஹைட்ரஜன் குண்டு (Hydrogen Bomb).”

“அனைத்தும் சாத்தன் வீசும் ரொட்டித் துண்டுகள்.”

டாக்டர் ஸ்மித் “அந்த திட்டத்தின் குறிக்கோள் வேறு. புவியின் மையத்திலுள்ள வெப்ப ஆற்றலிருந்து (Geothermal) மின் சக்தியை எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு நிறுவனம் செய்த மாபெரும் தவறு. மிகச் சிறிய அணுகுண்டுகள்தான் வெடித்தார்கள். எதிர்பாராத விதமாக பட்டாம்பூச்சி விளைவாகப் புவி தட்டுகளின் (Tectonic Plates) அடுக்குகள் குலைந்து நிலம் பிளந்து வெப்பம் வெளியேறி மொத்த பூமியும் அனல் அடுப்பாகி மனிதன் கைவிட வேண்டியதாயிற்று,” என்றார்.

புநைல் “ஆவணங்களின்படி அப்படி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மெடாக்கள் கணக்கிட்டு அணுவெடிப்பைக் கைவிடும்படி அறிவுறுத்தப்பட்டது,” என்றாள்.

“உண்மையில் யார்தான் அதற்கு அனுமதித்தது?” என்று பாதிரி கேட்க, “இது அகங்காரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, மனிதனுக்கான சவாலாக சிலர் நினைக்க, ஒரு பெரும் நிறுவனம், அதற்குப் பெரும் அரசாங்கள் பின்னிருக்க, யார் கேட்கப் போகிறார்கள் என்று சோமாலியாவில் ஆழ்துளையிட்டுப் புவி மையத்தின் பரப்பில் வெடிக்கப்பட்டது. அது ஆப்பிரிக்கப் புவிதட்டில் (African Plate) விரிசலை ஏற்படுத்தி வட அமெரிக்கத் தட்டிற்கு (North American Plate) தாவி நூல் பிடித்தால் போல் ஊர்ந்து செல்ல, நிலநடுக்கம் ஏற்பட்டுச் சரிந்த முதல் நகரம் சான் பிரான்சிஸ்கோ!” என்றார் ஜார்ஜ்.

புநைல், “ஆனால் இங்கு இப்போது நிகழப் போவது முழுக்க முழுக்க மெடாவால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. தலைவர் கபூனின் மேற்பார்வையில் தானாகவே விண்கலத்தைச் செலுத்தி வான் வெளியை ஊடுருவி இந்த விண் மண்டலத்தைத் தேடிக் கண்டடைந்து உயிரினங்கள் வாழப் பரிந்துரைத்ததே மெடாக்கள்தான். சில மில்லியன் வருடங்களுக்கு முன் நெருப்படங்கிப் பல ஆயிரம் வருடங்களாக அனல் தணிந்து கொண்டிருக்கும் ஒரு சூரியனும், அதன் ஈர்ப்பால் இரு கோள்களும் அதைச் சுற்றிக் கொண்டிருந்தன. கோள்களின் வெளிப்பரப்பில் மணற் புழுதியும் மனிதன் புழங்கத் தகுதியான சீதோஷன நிலையும், அடிப் பாறைகளில் ஆக்சிஜன் கூறுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.”

மேலும், “மெடாக்கள், காற்று வெளியேற முடியாத ஒரு மூடுவெளி நகரத்தை உயிரினங்களுக்காகக் கட்டமைத்து, அதற்குள் ஆழ் துளை வழியாக உறிஞ்சி சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜனைச் செலுத்தி, பூமியில் மிஞ்சிய மனிதனும் ஏனைய உயிரினங்களும் சிறு சிறு குழுக்களாகக் கொண்டு வரப்பட்டுக் கடந்த பத்து ஆண்டுகளில் குடியேற்றின. தாய்க் கிரகத்தின் நினைவாக முதலில் குடியேறிய கோளுக்கு பூமி 2.0 என்றும், இந்த விண் மண்டலத்திற்கு பால் வழி (Milky Way) நினைவாக பாலில் இருந்து தோன்றியதாக இருக்கும் பொருட்டு வெண்ணை வழி (Butter Way) என்று பெயரிடப்பட்டது. ஐந்தாண்டுகள் முன்பு ஆராய்ச்சிக்காக நாங்கள் இருக்கும் இந்தக் கிரகம் கட்டமைக்கப்பட்டது, இது பூமி 3.0!” என்றாள்.

டாம் நகைத்தவாறே “நாங்கள் குறியீட்டால் பூமி 3.0யை உடோபியா (Utopia) என்றழைப்போம்,” என்றான்.

பிண்ணனியில், “கிரகணத்துக்கு இன்னும் 15 நிமிடங்கள்,” என்று அறிவிப்புமணி ஒலித்தது.

ஜார்ஜ் “சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன், பால் வழி பூமியில் கடந்த பதினைந்தாயிரம் வருடத்தில் மனிதன் செய்ததைவிடப் பத்து மடங்கு பத்தே வருடத்தில் வெண்ணை வழியில் மெடாக்கள் செய்தன என்று,” என்றார்.

டாம் குறுக்கிட்டு, “மனிதனின் தலைமையில் மெடாக்கள் செய்தன.”

புநைல் அழுத்தமான குரலில் “முழுதாகத் தானே அவதானித்துக் கணக்கிட்டுக் கண்டடைந்து பரிந்துரைத்துச் செயல்படுத்தியது மெடாக்கள். முற்றதிகாரம் மெடாக்களுக்கு இல்லாததனால், ஒவ்வொரு திட்டத்திற்கும் இணை ஒப்பம் அளித்தல் மட்டும் மனிதன் ஆற்றியது,” என்றாள்.

அறையில் நிசப்தம்.

நிலைமையை இயல்பாக்கும் பொருட்டு ஜார்ஜ், “ஹைட்ரஜன் அணுவைக் கொண்டு சூரியனைப் பற்ற வைக்கப் போறீர்களா?” என்று கேட்டார்

புநைல், “ஆம்! கிரகணத்தின் போது சூரியனில் ஏழு இடங்களில் ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப் போகின்றன. அது சூரியனைப் பற்ற வைத்து மறுபடியும் நெருப்பு மண்டலமாக்கும். தீயின் ஜுவாலைகள் தெறிக்க ஹைட்ரஜன் வாயுக்கள் சூரியனின் இரு பக்கமும் உள்ள கோள்களான பூமி 2.0 மற்றும் பூமி 3.0க்குப் பரவும். அதே சமயத்தில் இரு கோள்களிலும் நில மட்டம் குறைவாகவும் சுற்றளவு மேடாகவும் கண்டறிப்பட்ட ஏழு இடங்களில் எழுநூறு ஆழ் துளைகள் கடைந்து அதில் கோபுரக் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன. சூரியன் பற்றிச் சுழல, அதன் ஈர்ப்பால் இரண்டு கோள்களும் சுழல, சூரியனில் இருந்து தெறிக்கும் ஹைட்ரஜன் வாயு இரண்டு கோள்களுக்குள் நுழைய, அதை அவதானித்து கணக்கிடப்பட்ட நேரத்தில் ஒவ்வொன்றாக எழுநூறு இடங்களில் ஆக்சிஜன் வாயுக்கள் கோபுரக் குழாய்களின் வழியாக வான் மண்டலத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு ஹைட்ரஜன் அணுக்களும் ஆக்சிஜனும் அணுக்களும் இணைந்து நீராகிப் பெரு மழை பெய்யப்போகிறது.”

மேலும், “செயற்கை நுண்ணறிவால் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட மழை. ஏழு இடங்களில் உப்பில்லா ஏழு கடல்கள் உருவாகப் போகின்றன. மழையின் வீச்சம் குறையக் குறைய, விரைவாக வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களின் விதைப் பந்துக்கள் வானத்தில் இருந்து தானியங்கி விண்கலங்களில் இருந்து எறியப்படும். உயிரினம் குடியேற தேவையான பஞ்ச பூத அடுக்குகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் விதிக்கு, நிலமும் விசும்பும் ஏற்கனவே உள்ளன. ஐந்தே மாதத்தில் நீருக்கு ஏழ்கடலும், அனலுக்குப் புது சூரியனின் வெப்பமும், சுவாசிக்க ஆக்சிஜனும் உருவாகிப் பஞ்ச பூதக் கூறுகள் முழுமை அடைந்துவிடும்,” என்றாள்.

ஜார்ஜ் “இதைத்தான் அந்தப் பெரும் சட்டகத்தில் அணுவைத் துளைத்து என்று பொறித்து வைத்துள்ளீர்களா?” என்றார்.

“ஆம்! அணுவைத் துளைத்து ஏழ் கடல்களைப் புகட்டி என்னும் உவமையே இத்திட்டத்தின் ஊற்றுமுகம். தென் இந்தியாவின் தமிழ் மொழியில் எழுதப்பட்ட குறள் என்னும் பண்டைய செய்யுளுக்கு, அவ்வடிவிலே “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று அவ்வையார் என்னும் பெண் புலவர் பாமாலையாக எழுதியது. கீழை தத்துவம் மற்றும் இலக்கியத்தில் பேர் ஆர்வமுள்ள எங்கள் அதிபர் கபூன், அதை படிக்கும்போது, அணுக்குள் ஏழு கடல்களை புகுத்த முடியும் என்றால், அணுவிலிருந்து ஏழு கடல்களை வார்த்து எடுக்கலாம் என்கிற பொறி தோன்றி, அது விரித்தெடுக்கப்பட்டு முழுத் திட்டமும் உருவானது. இந்தக் கரு பூமி 2.0யில் தங்கியிருக்கும் போது தோன்றியதால் மூதன்னை என்னும் குறியீடால் பூமி 2.0யை அவ்வை என்று அழைப்பார்,” என்றாள்

கேபி 2503 சந்தேகமாக “இந்தத் திட்டத்திற்கு மெய்நிகர்ப் பகுப்பாய்வும் (Virtual Analysis), சிறு அளவிலான பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதா?”

டாம், “ஆம்! வான் வெளியில், ஏழு முறை ஏழு சிறுகோளில் (Asteroid) பரிசோதனை செய்யப்பட்டது, அது எங்கள் மெய்நிகர்ப் பகுப்பாய்வுடன் முழுமையாக ஒத்துப் போயிற்று” என்றான்.

கேபி 2503 உறுதியான குரலில், “இல்லை… இதில் ஒரு கோளாறு தெரிகிறது. சுழற்சி உந்தம் (rotational/angular momentum) சுழற்சி மறுப்புத் திறனின் (Moment of Inertia) நேரிடையான விகிதாசாரமாகும்(Directly Proportional). ஆனால் சுழற்சி உந்த ப்பாதுகாப்பு விதிப்படி (Law of Conservation of Angular Momentum) எந்த ஒரு வெளி ஆற்றலும் அந்தப் பொருளின் மீது தாக்கம் ஏற்படாத வரையே சுழற்சி உந்தம் சீரடையாமல் இயங்கும். இயக்க ஆற்றலும் (Kinetic Energy) இரசாயன நிலை ஆற்றலும் (Chemical Potential Energy) சேர்ந்ததே ஒரு பொருளின் உள் ஆற்றல் (Internal Energy). சூரியனைப் பற்ற வைப்பதென்றால் அதற்குப் பெருமளவு ஹைட்ரஜன் குண்டுகள் தேவைப்படும். வெடிக்கும்போது அளப்பறியா வெப்பம் பெருகும், இதனால் இயக்க ஆற்றல் அதிகரிக்கும். இது மிகவும் ஆபத்தானது. சூரியன் வெடித்து இரு கோள்களையும் பொசுக்கலாம், சூழல் வட்டப் பாதையிலிருந்து உந்தித் தள்ளலாம், ஈர்ப்பு விசை அதிகரித்துத் தன்னுள் இழுக்க முற்படலாம்…”

டாம் குறுக்கிட்டு, “நிறுத்து! நிறுத்து! உன் அதிமேதாவித்தனத்தை இங்கு காட்ட வேண்டியதில்லை…மெடா 6.0வான உனக்கே இதைக் கண்டுபிடிக்கத் தெரிந்ததென்றால் இங்கிருக்கும் மெடா 7.5க்கு இது தெரியாதா?” என்றான்.

டாக்டர் ஸ்மித் உடனே “நீ புத்திசாலி. நீ இங்கு வரும்போது 7.5ஆக உடனே பரிணாமம் பெற நான் பரிந்துரைக்கிறேன்.”

கேபி 2503 “வருகிறேன், நீங்கள் உயிரோடு இருந்தால்” என்றான்.

“நாங்கள் அழியமாட்டோம். எங்களுக்கு ஒன்றும் ஆபத்தில்லை” என்றான் டாம்.

“என்ன சொன்னாய்?”

“எங்களுக்கு ஆபத்தில்லை என்றேன்.”

“மறுபடியும் சொல்.”

“நாங்கள் பாதிப்படைய மாட்டோம்.”

கேபி 2503 “நாங்கள் அழியமாட்டோம்… எங்களுக்கு ஆபத்தில்லை… நாங்கள் பாதிப்படைய மாட்டோம் என்று ஒவ்வொரு வாக்கியம் நீ உரைக்கும் போது, தன்மையில் ஒரு அழுத்தம் கொடுத்தாய். நீ தன்மை, நான் முன்னிலை, படர்க்கை யார்?”

“புரியவில்லை.”

“உங்களுக்கு ஆபத்தில்லை என்றால், வேறு யாருக்கு ஆபத்து?”

“ம்……”

“சொல்லுங்கள் வேறு யாருக்கு?”

டாக்டர் ஸ்மித், “ஆம் நீர் சொல்வது சரிதான். கபூனின் யூகமும் அதுவே. கை கணக்குகளும்(Hand Calculations) அதையே சொல்லின. சிறுகோளில செய்த பரிசோதனையும் அவ்வாறே ஆனது.”

“எவ்வாறு ஆனது?”

“சூரியனைப் பற்ற வைப்பது ஆபத்தானது.”

“முட்டாள்தனமாக இருக்கிறது. இது என்ன விளையாட்டா? தெரிந்தும் திட்டத்தைச் செயல்படுத்த எப்படி ஒத்துக்கொண்டீர்கள்?”

டாம் சினத்துடன் “வார்த்தையைக் கவனமாகக் கையாள், அவர் யார் தெரியுமா, இந்த விண் மண்டலத்தின் அதிபர், முதன்மை விஞ்ஞானி, என் தந்தையும்கூட.”

டாக்டர் ஸ்மித் டாம் தோளைத் தோட்டு ” அமைதிகொள் டாம்” என்று ஆசுவாசப்படுத்தினார். திரும்பி கேபி 2503 யை நோக்கித் “திட்டத்தில் ஒரு மாறுதல் செய்தொம். இல்லையில்லை, கபூன் முதலில் பரிந்துரைத்தத் திட்டத்திற்கே தயாரானோம். அதுவே இப்போது நிகழப்போகிறது.”

“அது…?”

“சூரியனைப் பற்ற வைப்பதற்குப் பதில் இரண்டு கோளில் ஏதேனும் ஒன்றைப் பற்ற வைக்கலாம். உள் ஆற்றல் கூடியதும் கோளின் சுழற்சி அதிகரிக்க காந்தப்புலமும் அதிகரிக்கும். அது சூரியனின் காந்தப்புலத்தைக் காட்டிலும் அதிகமானதும் நேரெதிரானதுமாகும். சூரியன் கிரகண நேர்க் கோட்டில் இருந்து விலகும்போது, சரியாகக் கோளின் ஆற்றல் மிகுந்த காந்தப்புலம் சூரியனின் ஆற்றல் குறைந்த காந்ப்த புலத்தைச் சந்திக்கும் பொழுது காந்த விலக்க விசையால் சூரியன் தன் பாதையிலிருந்து கழன்று முற்றிலுமாக விலகி விண் மண்டலத்தின் மறு பகுதிக்கு இடம் பெயர்ந்துவிடும். அதற்குப் பின்னால் உள்ள மற்ற கோள், பற்றி எரியும் கோளின் விசையால் ஈர்க்கப்பட்டு அதைச் சுற்ற ஆரம்பிக்கும். ஒரு கோள் சூரியன், மறு கோள் உயிர் வாழ தேவையான நிலம்.”

“ஆம் இது சாத்தியமாகத் தோன்றுகிறது,” என்றான் கேபி 2503.

“அதுதான் நிகழப் போகிறது” என்றார் டாக்டர் ஸ்மித்.

பிண்ணனியில், “கிரகணத்துக்கு இன்னும் 5 நிமிடங்கள்,” என்று அறிவிப்புமணி ஒலித்தது.

எல்லாம் புரிந்தது போல நினைத்ததும், திடுக்கிட்டு, “பூமி 2.0யில் உள்ளோரை இங்கு இடம் மாற்றியாச்சா?” என்றான் கேபி 2503.

பாதிரி திடுக்கிட்டு, “என்னது பூமி 2.0யைப் பற்ற வைக்கப் போகிறீர்களா?”

ஜார்ஜ், “சற்று முன்னர் கூட, நாங்கள் பூமி 2.0யில் வந்திறங்கும்போது ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு வந்ததே.”

டாம் ஆழமாக மூச்சை இழுத்து, “ஒரு மில்லியன் மக்களையும் விலங்குகளையும் இடம் மாற்றுவது என்பது சுலபம் அல்ல.”

“இது என்ன பைத்தியக்காரத்தனம். பால் வழியில் இருந்து இடப்பெயர்ப்பை நோக்குகையில் இது கடுகுக்குச் சமம். மிஞ்சிப் போனால் இரண்டு நாள்கூட ஆகாது பூமி 2.0யிலிருந்து பூமி 3.0க்குப் பயணிக்க.”

டாம், “பயணம் இல்லை பிரச்சனை. உங்களுக்கு இங்கு நடப்பது தெரியாது..”

மேலும் “யுகங்கள் ஆனாலும் விண் மண்டலம் மாறினாலும் சராசரி மனிதன் இன்னும் மாறவில்லை. சராசரிக்குக் கீழே உள்ளவர்கள் இன்னும் மிருகமாகவே இருக்கிறார்கள்” என்றான்.

“புரியவில்லை.”

“பூமி 2.0யில் உள்ளவர்களுக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி இல்லை. சோம்பேறித்தனம். பொறுப்பின்மை. அறிவார்ந்த துறைகளில் அறிவை வளர்க்க விருப்பம் இல்லை…”

“எல்லோரும் விஞ்ஞானிகளானால் யார் பிற வேலைகளைச் செய்வது?”

“அதற்குத்தான் மெடாக்கள் உள்ளனவே. ஐந்து வருடமாக மெடாக்களுக்கே தெரியாத ஒரு ரகசிய ஆய்வை மேற்கொண்டோம். தனித்திறனான அறிவோ அழகோ அல்ல ஏதேனும் ஒரு துறையில் திறமையோ ஆன மனிதர்களைப் பூமி 2.0யிலிருந்து தேர்ந்தெடுத்து, பூமி 3.0வுக்குக் குடிபெயர்த்தி அவர்களுக்கான அனைத்து வேலைகளும் செய்யும் தொழிலாளர்களாக மெடாக்கள் நியமிக்கப்பட்டனர். ஆறு மாதம் முன்பு ஆய்வு முடிவுக்கு வந்தது. எந்த ஒரு தனித்திறனற்ற மனிதர்களும் இனி பிரபஞ்திற்குத் தேவையில்லை. மனிதனின் தேவைகளுக்கு இணங்க மெடாக்கள் தங்கள் ஆற்றலை மேம்படுத்தி ஒரு பரிணாமத் தாண்டுதலே நடைப்பெற்றது. இன்று பிரபஞ்சத்தில் ஓர் சொர்க்கம் என்றால் அது பூமி 3.0. நீங்கள் வந்திறங்கும்போது அதைக் கண்கூடக் காண்பீர்கள்,” என்றான் டாம்.

“பூமி 2.0யில் உள்ளவர்கள்?”

“அவர்களுக்கு மீட்சி அளிக்கப் போகிறோம்.”

“அப்படி என்றால்?”

“தேர்தெடுக்கபட்டு இங்கு இருக்கும் சிலர், பலமானதே பரிமாணமாகும்(Survival of the fittest) என்னும் இயற்கையின் விதிப்படி மனிதக் குலத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார்கள். மீதமிருப்போர் வாழ்ந்து கஷ்டப்படுவத்தை விட இறப்பதே மேல்.”

“நீ யார் இதை முடிவெடுக்க?”

“இது நிறுவனம் ஆளும் விண் மண்டலம். இங்கு அரசாங்கமோ, ஓட்டுமுறையோ கிடையாது. வரலாற்றில் அமைந்த எந்த ஒரு அரசு ஆட்சியை விடவும் எங்கள் நிறுவன நிர்வாகமே சிறந்தது எனத் தரவுகள் சொல்வன.”

மேலும் தொடர்ந்து “எங்கள் நிறுவனமே பூமியிலிருந்து இவர்களை இடம் பெயர்த்தி வாழ்வளித்தது” என்றான் டாம்.

“அது உங்கள் தேவைக்காக. தேவை முடிந்தவுடன் அழிக்கப் பார்க்கிறீர்கள்.”

“இல்லை இது துன்ப விடுதலை. இதுவே அவர்களுக்கும் அவர்கள் குலத்திற்கும் நாங்கள் அளிக்கும் மாபெரும் பரிசு.”

“அது அவர்களுக்குத் தெரியுமா?”

இல்லை என்பது போல் தலையாட்டினான் டாம்.

கேபி 2503 “தான் எப்படி இருக்க வேண்டும் என்பது அவரவர் தன்விருப்பு(Free Will). உனது விருப்பப்படியோ தேவைப்படியோ பிறர் இருக்க வேண்டும் என்பது அவர்கள் மீது செலுத்தும் வன்முறை,” என்றான் .

பாதிரி கபூனை நோக்கி டாமை சுட்டிக்காட்டி “இவர்கள் செயல் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. சில மனிதர்கள் சாத்தானின் செல்லக் குழந்தைகள். மெடாக்களுக்குள் சாத்தன் புக முடியாது என்று இதுவரை நினைத்திருந்தேன். நீங்கள் இதற்கு உடன்பட்டீர்கள் எனும்போது……” என்று சொல்லி பாதிரி இரு கைகளையும் தூக்கி “சாத்தானே நீ வென்றுவிட்டாய்,” என்றார்.

புனல் குறுக்கிட்டு “தலைவர் இந்தத் திட்டத்திற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். அதனால்தான் இது கிரகணம் வரை தள்ளிவந்தது. உண்மையில் இதற்குக் கிரகணமே தேவையில்லை. பூமி 2.0யில் உள்ளோரை திசை திருப்ப டாம் செய்த யோசனை.”

கேபி 2503, “இது பெருங்குற்றம்.”

பாதிரி, “கபூன் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் இதை நிறுத்துங்கள்.”

டாம், “அவர் நினைத்தாலும் முடியாது. ஆறு மாதம் முன்பே ஒரு கோளில் ஹைட்ரஜனும் மறு கோளில் ஆக்சிஜனும் நிரப்பும் வேலை தானியங்கி ஊர்திகளால் தொடங்கிவிட்டது.”

“நீ வாயை மூடு பிசாசே. அணுகுண்டால் பாதிப்படைந்தவர்களைக் கண்டிருக்கிறாயா? உடலின் தோல் உரிந்து, சதை வெந்து, எலும்பு உருகி…செத்தும் சாகாமல்…பிதாவே…” என்று அலறினார் பாதிரி.

கேபி 2503 டாமை நோக்கி, “கடைசியாக ஒரு கேள்வி, எதிர்காலத்தில் பூமி 3.0யில் உன் விதிப்படி ஒருவன் பேரழகோ பேரறிவோ பெரும் திறமையோ அற்ற சராசரியாக இருந்தால் என்ன செய்வாய்?”

“அவனுக்கு இங்கு இடம் இருக்காது.”

“உன் வாரிசும் உட்பட?”

“அது…அது…அப்படி ஆகாது…”

பிண்ணனியில் “கிரகணத்துக்கு இன்னும் 1 நிமிடம்” என்று அறிவிப்புமணி ஒலித்தது.

கேபி 2503 சினத்துடன் “உன்னைக் கடைசியாக எச்சரிக்கிறேன் திட்டத்தை உடனே கைவிடு…இல்லையேல் உன்னை அங்கு வந்து கொல்வேன்,” என்றான்.

“எண்ணத்தால்கூட மனிதர்களைத் தாக்கவியலாது என்ற இயந்திர இயங்கு விதிகளை நீ மீறிவிட்டாய், இங்கு நீ வர அனுமதி இல்லை.”

“இப்போது கபூன் தலைமையில் பூமி 2.0யில் உள்ள மனிதர்களை அழிப்பது என்ன விதி?”

“மனிதனுக்காக மனிதனை அழிக்கலாம் என்ற புது விதியை மெடாக்களுக்கு அளித்தே அவரை இந்தத் திட்டத்திற்குச் சம்மதிக்க வைத்தோம்” என்று கூறி டாம் காற்றில் கீற, “ஒலி துண்டிக்கப்பட்டது,” அறிவுப்பு ஒலித்தது.

ஜார்ஜின் திரையில் இரண்டு கோள்களுக்கு நடுவே சரியாக சூரியனும் நுழைவது தெரிந்தது.

பாதிரி உரக்க, “வேண்டாம் வேண்டாம் வெடிப்பை நிறுத்துங்கள்… நிறுத்துங்கள்… நிறுத்துங்கள்..” என்று ஓலமிட

கேபி 2503 “பயனில்லை, நாம் பேசுவது அவர்களுக்குக் கேட்பதாகத் தெரியவில்லை,” என்றான்.

டாக்டர் ஸ்மித்தின் முன் பிம்ப காகிதம் தோன்றி ஒளிவிட

டாக்டர் ஸ்மித் தன் சுட்டு விரலால் அதில், “மனிதக்குலத் தலைவராகப் பொறுப்பேற்று இந்தச் செயல் திட்டம் முன் செல்லும்படி உறுதி செய்கிறேன்!” என கைச் சான்றிட்டு

“ஆடம் ஸ்மித்” என்று குரல் ஒப்பமிட்டார்.

பாதிரி நாற்காலியின் கீழேறங்கி முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்க இன்னும் என்ன செய்கிறாய் என்பது போல் டாம் கபூனை நோக்க, கபூன் தன் உடம்பை முன் உந்திப் பிம்பக் காகிதத்தில், “அனைத்திற்கும் நானே பொறுப்பேற்று இந்தச் செயல் திட்டம் முன் செல்லும்படி உறுதி செய்கிறேன்” என கைச் சான்றிட்டு புன்னைகையுடன்.

“கணியன் பூங்குன்றன்!” என குரல் ஒப்பமிட்டார்.

மின்காந்தக் கவசம் உயிர்த்தெழ அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஐந்து மாதம் கழித்து கேபி 2503 விண்கலத்தை வெண்ணெய் வழிக்குள் நுழைக்கும்போது புதுச் சூரியனின் இளங்காலை ஒளிபட்டு மலர்கள் மொட்டவிழ, கோள் வட்டப் பாதையில் சீராகச் சுழன்று ஏழ்கடல் தாங்கி நின்றாள் அவ்வை!


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்