டார்க் வெப்பில் சில ஆப்களின் பேடா வெர்ஷனைத் திருட்டுத்தனமாக வெளியிடுவார்கள். ப்ராட்-ஜீபீடி செயலியிடம் விளையாட்டுத்தனமாகப் பின்வரும் கேள்வியைக் கேட்டபோது…
“ஒருக்கால் ஏஐ மாடல்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேம்படுத்தப்பட்டிருந்தால் இந்திய சாஸ்திரிய சங்கீத உலகின் போக்கு என்னவாகியிருக்கும் என்பதைக் குறித்து ஒரு கதை எழுத முடியுமா?”
ஒளி இருளைப் பிரித்துவருகையில் நாதவெளியில் சஞ்சரிப்பதில் கூடிவரும் லயத்தில்தான் ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும் என்று குருநாதர் கூறுவார். அவர் சொல்லிச் சொல்லிப் பயிற்றுவித்ததுதான் இந்த அதிகாலை சாதகம் செய்யும் பழக்கமெல்லாம். அதை இந்நகரத்தில் தக்கவைத்துக்கொள்வதில்தான் எத்தனைப் பிரச்சினைகள். தி.ஜாவின் குரு சுவாமிநாதய்யரைப் போல சுதி சேர்ப்பதற்கே அத்தனை நேரம் பிடிக்கும். நகரத்தின் இடையறாத இரைச்சலும் தம்புராவின் சுருதியில் கரைந்து இல்லாமலாகும் வரையில் அவரது விரல்கள் அதன் தந்திகளை இயக்கியபடியே இருக்கும். மாடியில் வசிக்கும் வீட்டுச் சொந்தக்காரர் விதித்த ஆறு மணிக் கெடு, சாமிப்பாட்டை அலரவிடும் கோயில் ஸ்பீக்கர்கள் இப்படி ஒன்றுகிடக்க ஒன்று அதற்கெதிராக பூதாகரமாகக் கிளம்பி வரும். கெஞ்சிக்கூத்தாடி, மல்லுக்கட்டிச் சண்டையிட்டு இறுதியில் வீட்டைக் காலி செய்யும் படலத்தில்தான் எப்போதுமே வந்து நிற்கும். ஆயிற்று, பதினைந்து வீடுகள் மாறி ஆயிற்று.
பத்மாவிற்கும் சலித்துவிட்டது. இதுதான் கடைசி, சத்தமோ கித்தமோ இங்கயே இருந்துடுவோம், சாமான மூட்டை கட்டி வண்டி ஏத்தறதெல்லாம் இனிமேல் சரிபட்டு வராது. நமக்கோ ஒத்தாசை செய்ய பிள்ளையோ குட்டியோ கிடையாது, நீங்களும் அந்தப் பாழாப் போன சங்கீதத்தைக் கட்டிண்டு பரப்பிரம்மமாய் இருப்பேள், இங்க நான்தான எல்லாத்தயும் கட்டி மாரடிக்க வேண்டிருக்கு. போருஞ்சாமி நாப்பது வருஷமா இந்தப் பாட்டக்கட்டி அழுது என்னத்தக் கண்டோம், நமக்குன்னு ஒரு சொந்த வீட்டக்கூட அமைச்சுக்க வக்கில்ல, ஏதோ அந்த ஓட்ட கவர்மெண்ட் வேலைல ரிடையர் ஆறவரைக்கும் குப்ப கொட்டினேளே அதுவரைக்கும் ஷேமம். வயத்துப் புழைப்புக்காவது ஆச்சு என்று அவள் பிலாக்கணம் வைப்பதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கையில் அவர் அறியாமலே ஒரு வரட்டுச் சிரிப்பு அவர் உதட்டோரங்களில் வந்து உட்கார்ந்துகொள்ளும். அதைக் கண்ணுருகையில் அவளும் நிறுத்திவிடுவாள்.
பாவம் அவளும்தான் எத்தனைக் காலம் பொறுமையுடன் காத்திருக்கிறாள். கல்யாணம் ஆன புதிதில் கலவியின் எச்சத்திலிருந்து விடுபட மனமின்றி மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்தத் தம்புராவின் சுவரத்தில் மனதை ஒருமுகப்படுத்தி ரேளிக்குச் சென்று சாதகம் செய்ய உட்காருவார். படிபடிப்படியாகச் சுவரங்களைக் கோர்த்து அதிலிருந்து விடுபட்டு மற்றொரு ஏகாந்தத்தை எட்டிவிட்ட கர்வத்தில் லயித்திருக்கையில் அந்தக் கலவியின் சௌந்தர்யமும் சில நாட்களில் அதுனுடன் எப்படியோ பிணைந்து கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைவார். மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில் உணரும் மெல்லதிர்வை மீளுணர்வார். அபூர்வமான அக்கணங்களில் பத்மாவும் சில சமயங்களில் பங்கேற்றிருக்கிறாள். உச்சத்தை மேலும் தக்கவைக்க இயலாது என்று குரல் உணர்ந்து கொள்ளும் தருணத்தில் இயல்பாகவே திறக்கும் அவர் கண்கள் கதவுச் சட்டகத்தின் மீது அவசரமாக உடுத்த சேலையின் வசீகரத்துடன் கண்மூடிச் சாய்ந்திருப்பதை காண நேர்ந்ததுண்டு. அபாரமாக ஜொலிக்கும் அவள் முகத்தின் ஒளிர்வையே அந்நாள் முழுதும் குரலில் கைப்பற்ற முயல்வார். கைப்பற்றி விட்டோம் என்ற தருணங்களும் அவருக்கு வாய்த்ததுண்டு. இரவில் அவளுக்கே அதைத் திருப்பித்தர முயல்வார்.
கலவியின் நினைவை இசையில் மீட்டெடுப்பதெல்லாம் சரியா என்று அவருக்குத் தோன்றியதுண்டு. குருநாதருடன் இதையெல்லாம் வெளிப்படையாக விவாதித்திருக்கா விட்டாலும் அவருக்குத் தெரியும் இவர் மனதின் அங்கலாய்ப்புகளை. பள்ளிக்கூடத்தில், காதல் தோல்வியை முதலில் தழுவிக்கொண்ட நாளன்று மனம் அதை விட்டு விலகாமால் மீண்டும் மீண்டும், குருவின் முன் பாடிக்கொண்டிருக்கும் போதுகூட, அதில் தன்னை ரணப்படுத்திக் கொள்ள முயல்வதை, “என்னடா சங்கரா, இன்னக்கி அப்படி என்ன துக்கம் உனக்கு, திரும்பத் திரும்ப அந்த ரிஷபத்தோட கூர்மனைல கிழித்துக் கொள்ள உன் குரல் தவியா தவிக்கறதே,” என்று அவரும் அதை எப்படியோ யூகித்து விட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். “இப்பதானே பெரியவனா வாழ்க்கைல காலடி எடுத்து வெச்சிருக்க, இன்னும் இதைவிட கொடூரமான எத்தனை எத்தனையோ வலிகள நீ அனுபவிக்க வேண்டிவரும். அதை எல்லாத்தயுமே சத்தமுன்ன செஞ்சு பாத்தயே அதப் போல, வலி எல்லாத்தயும் இசைல, உன் மனோதர்மத்துக்குள்ள, உட்கார வெக்கறதுதான் அதுக்கு மருந்து” என்று அவர் சமாதானப்படுத்தியதும் நினைவுக்கு வரும். “வலி மட்டுமல்ல, உன் கோபதாபம், உன் களிப்பு, உன் ஏக்கம், உன் அபிலாஷை… உன் உணர்வோட சகலரசங்களயும் இசைல மீட்டெடுக்கறதுதான் உன் இசைப்பணி. இசைல அதயெல்லாத்தயுமே மத்தொன்னா மாத்தறதுதான் உன் வித்வத்தோட வெற்றி,” என்று அவர் வலியுறுத்தியதைத் தாரக மந்திரமாகவே அவர் ஜபித்து வந்திருக்கிறார்.
***
“ரகு வந்துட்டான் பாருங்கோ,” என்று பத்மாவின் குரல் அவரை நினைவுகளிலிருந்து மீட்டது. ரகு வழக்கம் போல் அவர் காலைத்தொட்டு வணங்கிவிட்டுtஹ் தம்புராவை எடுத்துவந்தான். பல வருட குரு சிஷ்ய உறவு அதற்கேயுரிய தாளகதியில் சம்பாஷணைகள் ஏதுமின்றி தன்னை இயல்பாகவே நிகழ்த்திக் கொண்டது. அன்யோன்யமான மற்றொரு உலகிற்குள் நுழைந்துவிட்ட குரல் அதன் புறவுலகு பாவனைகளைத் துறக்க ஆயத்தம் செய்துகொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் பாடிப்பழக்கப்பட்ட சுவரப் பின்னல்களினூடே மேலும் மேலும் உயர்ந்த குரல் அது விழையும் அமைதியை எய்தாது மீண்டும் மீண்டும் பழைய கோர்வைகளில் அத்தோல்வியை மறைக்க முயன்றது. கதிகளை விரைவாக்கி மனதை நெருடிக்கொண்டிருக்கும் முட்டுச்சந்தைக் கடக்க முயன்று தோல்வியுற்ற சலிப்பில் புற உலகிற்குத் திரும்பிய கண்கள் குருவை நேரடியாகப் பார்க்கச் சங்கோஜப்பட்டது போல் தாழ்த்திக் கொண்டன.
“இண்டர்வியூ இருக்குன்னியே, என்ன ஆச்சு?”
“ம்ம், போனேன்.”
“போன சரி, என்னாச்சுன்னு கேட்டேன், வேல கிடச்சுதா?”
“கிடச்சுது ஆனா இந்த வேல ஒத்துவருமான்னு தெரியல.”
“ஏன், சம்பளம் குறச்சுத் தரானோ?”
“அதெல்லாம் நிறையவே தரான்…”
“அப்றமென்ன…”
“என் ப்ரோக்ராமிங் திறமையவிட என் சங்கீத படிப்புக்குத் தான் வேலையே குடுக்கறா?”
“சங்கீதத்துக்காகவா, பேஷ், நல்ல விஷயம்தானே, அப்படி என்ன வேல?”
“இந்த ஷாட்ஜீபீடி கேள்விப்பட்டிருப்பேளே, அத மாதிரி ஏஐ மெஷீன் லேர்னிங்கலாம் வெச்சு ஹிந்துஸ்தானி கர்னாடக சங்கீதத்துல ஒரு புரட்சிகரமான ஆப்ப அவா தயாரிக்கறா சங்கீத் ஏஐ.”
“ஷாட்ஜீபீடினா, எம் மாதிரி குமாஸ்தா வேல எல்லாத்தயும் செயற்கை நுண்ணறிவ வெச்சு காலி பண்ணிடுத்தே, அந்தப் பிசாசுதானே?”
“அதேதான்.”
“சாஸ்திரிய சங்கீதத்துல அப்படி என்ன பெரிய புரட்சிய அது பண்ணிடுமாம்?”
“ஸ்வர்ங்களை அலை எண்களாகவும் ராகத்த அலை எண்களுக்கிடையே விதிமுறைகளுக்கு உட்பட்ட உலவுதலாகவும் அந்த ஆப் நம்ம சங்கீதத்த வகுத்துக்கறது. இந்த அடிப்படைல ஆயிரக்கணக்கான கர்னாடக சங்கீதக் கச்சேரிகள ஆராய்ந்து ஒவ்வொரு மேதையின் பாணியையும் அது பொதுமைப்படுத்திக்கறது.”
“சரி, இதெல்லாம் சாத்தியம்னு ஏத்துக்கிட்டாலும், இதெல்லாத்தயும் வெச்சுண்டு அது என்ன செய்யப் போறதாம்?”
“சாகித்யத்தோட அடிப்படையான சட்டகத்துல அதாவது அதோட அலையெண், ராகத்தோட அடிப்படை ஆரோகண அவரோகண விதிகள், இப்படி அதோட அடிப்படை அறிவியல் ரீதியான இலக்கணத்தோட, கச்சேரிகள ஆராஞ்சு சேத்து வெச்சுருக்கற கலைஞனோட மனோதர்மக் கூறுகளை இணைத்துப் பாக்கறது.”
“மணி ஐயரோட மனோதர்மத்த அவ்வளவு சுலபமா கூறுகளாக வரையறப்படுத்த முடியும்னு தோணல. சரி இதுனால யாருக்கென்ன லாபம்?”
“மணி ஐயர் பாடாத பாட்டலாம் அவர் குரலில் அவர் பாணில கூடிய சீக்கிரமே கேக்க முடியும்னு அவா சொல்றா.”
“மணி ஐயரோட மனோதர்மம் தனக்கு ஒத்துவராதுன்னு ஒதுக்கிவிட்ட பாட்டெல்லாம் அதுக்கு எப்படித் தெரியும்? கீர்த்தனைய அதோட சகல சங்கீத சாஸ்த்ர இலக்கணத்தோட மனப்பாடம் செஞ்சுட்டா போருமா? இதோ அந்தச் சுவத்துலேந்து நம்மள ஆசீர்வதிச்சிண்டிருக்காரே கே.வி.என் மாமா அவரோட குரு அரியக்குடிய பத்தி ஒரு கதை சொல்லுவா. வராளி ராகத்துல சேஷாசல நாயகம் கீர்த்தனம் இருக்கே, அத ஒரு மாசமா திரும்பத் திரும்ப ஆத்துலயே பாடிண்டிருந்தாராம். ஏன் கச்சேரில் பாட மாட்டேங்கறேள்னு யாரோ கேட்டப்போ சங்கதிகளும் பாட்டும் என்னுள்ள கலந்து என்னோட ஒரு அம்சமா இன்னும் ஆகலன்னு சொன்னாராம். ஒரு வருஷம் உள்ள ஊறப் போட்டப்றம்தான் அத வெளில ரிலீஸ் பண்ணினாராம். அவ்வளவு பெரிய மகான் அவருக்கே அவ்வளவு மெனக்கெட வேண்டிருந்தது. இத எப்படி ஏதோ ஆப்னு சொன்னயே அதுக்கெப்புடி கத்துத்தருவா. சரி நாம ஏன் குதர்க்கமா யோசிக்கணும், நல்லது நடந்தா சரிதான். உங்கம்மாவும் ரொம்ப நாளாவே வருத்தப்பட்டுண்டிருக்கா, தேமேன்னு வேலைய எடுத்துண்டுடு. எத்தன நாளுக்குத்தான் இந்த சபாக்காரா பின்னாடி தொங்கலாடிண்டிருப்பே?”
“மனசு கேக்கல மாமா, பார்ப்போம்.”
“யோசிச்சுண்டே இருக்காம சட்டுபுட்டுன்னு முடிவெடு. ஆமாம், என்ன மாதிரி வேலை அது, என்ன பண்ணுவ அங்க?”
“அது கண்டெடுத்த பொதுமைகள வெச்சிண்டு அது விதவிதமான குரல்ல விதவிதமான பாட்டுக்கள உருவாக்கிக்கிட்டே இருக்கும். ஆனா அதுல பலது அபத்தமாக இருக்கும். சங்கீதம் தெரிஞ்சவா அந்த அபத்தங்களலாம் சுட்டிக் காட்டினா அது அத வெச்சு தன்னையே மேம்படுத்திக்கும்.”
“சபாஷ், உட்டா அது கச்சேரியே பண்ணிடும் போலிருக்கே.”
ரகு பதிலளிக்காமல் விரக்தியாக அவர் முகத்தையே உற்றிருந்தான்.
“நீங்களும் அந்த கம்பேனிக்காராள போய் ஒரு நட பாத்துட்டு வந்துடுங்கோ, உங்களுக்கும் ஏதாவது ஹானரரி வேல எதாவது தருவானா இருக்கும்,” என்று பத்மா சமயலறையிலிருந்து சாமர்த்தியமாகக் கேட்டு வைத்தாள்.
சங்கரன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.
ரகு போன பின் இருவரும் சிறிது நேரம் டீவி சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு படுக்கையறைக்குச் செல்வதற்கு பத்து மணி ஆகிவிட்டது. உறங்குவதற்கு முன் முகம் கழுவுவது பத்மாவின் வழக்கம். அன்று சோப் போட்டுக் கழுவியிருந்ததால் முகம் பளிச்சென்று ஜொலித்தது. அதிசயமாக வெளிச் சத்தங்கள் அனைத்தும் இருளின் விகாசத்தில் அமிழ்ந்திருந்தன. திறந்த ஜன்னல் கம்பிகளினூடே முழு நிலவு அதன் வசீகரிக்கும் மாதமொரு முறை ஏமாற்று வேலையை நிகழ்த்திக் கொண்டிருந்தது.
“என்னையே ஏன் உத்துப் பாத்துண்டிருக்கேள்?”
“வேற யாருமில்லயே உத்துப் பாக்கறதுக்கு!”
“இந்த ஆசைலாம் வேற இருக்கோ?”
“ஆச கிடக்கு, அது இருந்துண்டேதான் இருக்கும். அத விடு ஒன்னு கேக்க போறேன், மறைக்காம பதில் சொல்லணும், சரியா?”
“என்ன?”
“சங்கீதக்காரன கல்யாணம் பண்ணிண்டுட்டோமேன்னு வருத்தமா உனக்கு. வசதியுள்ளவாள்லாம் உங்கப்பாவ பொண்ணு கேட்டு வந்தப்போ அவர்தான் ஏதோ சங்கீதப் பித்துப் பிடிச்சு என்ன உன் தலைல கட்டி வெச்சுட்டார்.”
“பித்து அவருக்கு மட்டுமா… ஏனாம் பாவம், இவ்வளவு வருஷத்துக்கப்புறம் இந்தப் பயித்தார விசாரணை?”
சங்கரன் அவள் முகத்தையே வெறித்திருந்தார். லயித்து லயித்து சங்கீதத்தில் மீட்டெடுத்த முகம். வயதாகிவிட்டாலும் தலை நரைக்காதிருந்தது அவரை எப்போதுமே கிரகடிக்கும்.
“என்ன பேச்சையே காணும்?”
“ஒன்னுமில்ல, உன் முகமிருக்கே, அதுக்கு சங்கீதக் களைலாம் உண்டு தெரியுமோ, என் கண்ணுக்கு மட்டும்தான் அது தெரியும். ஆனால் கொஞ்ச நாளாவே, ரிடையர் ஆயிட்டப்பறம், அது அப்பப்ப காணாமப் போயிடறது.”
“காணாமலாம் போல, அரிசி புளி மாத்தர வெலயப் பத்தின கவல மேல வந்து உக்காண்டா அது என்ன பண்ணும் பாவம்.”
சங்கரன் சிரித்தபடியே அவள் முகத்தை பார்த்திருந்தார். பின் அவள் காதிற்கு மட்டும் கேட்க வேண்டும் என்பது போல் சன்னமாகப் பாடத் தொடங்கினார்.
“வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதீ
ஹரது தர திமிரம் அதிகோரம்.”
ஜெயதேவரின் அஷ்டபதி, கல்யாணமான புதிதில் அடிக்கடி பாடியது.
ப்ரியே சாருஸீலே ப்ரியே சாருஸீலே என்று அவளுக்கே அவளுக்கான இனிமையை அவரது அபாரமான குரல் வாரி இறைக்கையில் அரிசி புளி பற்றிய கவலை முகம் இல்லாமலாகி நாற்பது வருடங்களுக்கு முன் இதே பாடலில் மயங்கிய களை அவள் முகத்தில் படர்ந்தது
“தேஹி முக கமல மதுபானம்” என்று பாடுகையில் அறியாமலேயே அவர் விரல்கள் அவள் முகத்தை வருடின.
“போருமே, வாலிபம் திரும்பறதோ…” என்று அவள் பாசங்கு காட்டினாள்.
“போகாதது எப்படித் திரும்பிவரும் பத்மா,” என்று சங்கரன் அவளை அணைத்துக் கொண்டார்.
***
சங்கீத் ஏஐ-யின் செவ்வியலிசை அனோடேஷன் ஸ்டூடியோவின் அறையில் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட இருபது இஞ்ஜினியர்கள் காதில் ஹெட்ஃபோன்களைப் பொருத்திக்கொண்டு மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். ரொட்டேஷன் முறையில் ஒவ்வொரு நாளும் அவர்களுக்குக் குறிப்பிட்ட வித்வான்களின் கச்சேரி ரெக்கார்டிங்கள் அலாட் செய்யப்பட்டிருக்கும். கேட்டு குறிப்புகள் எழுத வேண்டியதே அவர்கள் வேலை. இது போல திரைப்பட இசை, மேற்கத்திய இசை ஸ்டுடியோ என்று அந்தத் தளத்திலிருந்த பல ஸ்டுடியோக்களிலும் அனோடேஷன் பணி பல வருட காலமாக நடந்துகொண்டிருந்தது. ரகுவிற்கு அன்று முசிரி மற்றும் விஸ்வனாத ஐயரின் சில கச்சேரிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆபேரி ராகத்தில், நகுமோமு கீர்த்தனை. சுத்த தைவதத்திற்குப் பதில் சதுஸ்ருதி தைவதத்தை முசிரி பயன்படுத்துவதைக் குறிப்பில் சுட்டிக் காட்டினான். ககநீனி கிலகு பகுதூரம் பனிநாடோ என்ற வரி அவனை ஏதோ செய்கிறது. உணர்வு தோய்ந்திருக்கும் வரியின் மீது தன் சங்கீத மேதைமையை முசிரி பாய்ச்ச விரும்புகிறார். கல்பனாஸ்வரங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு அவ்வரியின் ஒவ்வொரு வார்த்தையையும் பரிவுடன் நாவால் வருடிப் பார்க்கிறார். சுவைத்துத் தீரவில்லை என்பதுபோல் மீண்டும் மீண்டும் சற்றே வேறுபடுத்தி சுவைத்ததை நிரவலை போலிருந்தாலும் நிரவல் என்று கண்டிப்பாக வரையறுக்க முடியாத வகையில் பகுத்தாய்கிறார். ககனானி என்ற வார்த்தையில் குரல் வழுக்கிச் செல்கிறது நெகிழ்வூட்டும் பல பரிமாணங்களை உடனழைத்தபடி. பஹுதூரம் பனிநாடோ என்ற இடத்திற்கு முன் ஒரு கணத்திற்குக் குரல் ஒடுங்குவதால் ஏற்படும் காத்திரமான மௌனத்தில் தியாகையரின் ஜீவாத்மா பரம்பொருளின் பரமாத்மா இருக்கும் தொலைவை உணர்ந்த சோகத்தில் பெருமூச்சிறைப்பது ரகுவிற்கு ஹெட்போனில் கேட்கிறது. பிரமிப்பில் கை ஹெட்போனைக் கழட்டி வைக்கிறது. இரண்டு நிமிடங்கள் ஏதும் செய்யாது பிரக்ஞையற்ற நிலையில் ஸ்தம்பித்திருந்தான். பிரக்ஞையற்ற ஜடப் பொருளான (அல்லது அதற்கும் ஏதோ ஒரு விதத்தில் பிரக்ஞை இருக்கிறதோ?) சங்கீத் ஏஐ-க்கு பரமாத்மாவின் தொலைவினால் ஏற்பட்ட பெருமூச்சை எப்படிப் புரியவைப்பது. உள்ளடக்கம் எவ்வாறு உருவத்தைப் பாதிக்கிறது என்பதை இவ்விடத்தில் இனங்கண்டு கொள்ளவும் என்று பொத்தம்பொதுவான குறிப்பைத் தட்டச்சு செய்தான். விளக்கினால் மட்டும் புரிந்து கொள்ளவா போகிறது. காருக்குறிச்சி அருணாச்சலத்தின் ஏலா நீ தயாராதுவிற்கு எழுதிய குறிப்பு நினைவிற்கு வந்தது. தாரஸ்தாயி ரி-யில் அமைந்த ஓர் கமகத்தை அதற்குச் சுட்டிக்காட்டி, ரிஸ, ரிகம, ரி என்று அதை அடையாளப்படுத்திவிட்டு க? என்ற கேள்வியைக் கேட்டு இரண்டு ஆச்சரியக் குறிகளையும் இட்டிருந்தான். “வாட் டு யூ மீன் க?” என்று பதிலிட்டிருந்தது. காருக்குறிச்சியாரின் ஹுசேனி ராக அலாபனையில் வரும் சிறு ஸ,ரிநித பரயோகம் ஒன்றைச் சுட்டிக்காட்டி ரி? என்று கேள்விக் குறியிட்டு அதற்கு அனுப்பி வைத்தான். “ஐ கிவ் அப்” என்று அதன் அங்கலாய்ப்பைப் படித்துவிட்டு, மண்டு மண்டு சுட்டுப் போட்டாலும் இதுக்கு சங்கீதம் வராது என்று தலையில் அடித்துக் கொண்டதும் அவனுக்கு நினைவிற்கு வந்தது.
அது என்ன செய்யும் பாவம். புள்ளி இயல் விவரங்களின் அடிப்படையில் அடுத்த சுவரம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத்தானே அது நிர்ணயிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியங்கள் இருக்கையில் நிகழ்தகவுகளை வைத்து அது தன் தேர்வைச் செய்கிறது. நிகழ்தகவுகள் ஒத்திருக்கையில் அவற்றிலிருந்து அனுபவத்தின் நிதர்சனத்தைக் கொண்டு பகுத்தாய அதற்கு வாய்ப்பில்லாததால் ஒத்திருக்கும் சாத்தியங்களில் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்துவிட்டு அடுத்த சுவரத்தை நிர்ணயிக்கப் போய்விடுகிறது. தியாகய்யரின் துன்பத்தைச் சுவரத்துடன் இணைத்துப் பார்க்கும் ஆற்றல் அதற்குத் தற்போதைக்கு இல்லை. இங்குதான் தன் போன்ற சங்கீத வித்தகர்களின் அனொடேஷன் குறிப்புகள் அதற்கு எவ்வளவு உதவியாக இருக்கப் போகின்றன என்பதை ரகு உணர்ந்து கொண்டான். ஒரே ராகத்தில் அமைந்த பல பாடல்களில் துயரத்தையும் சுவரக் கோர்வைகளுக்கும் இருக்கும் தொடர்பைக் குறிப்புகள் வழியே மீண்டும் மீண்டும் எதிர்கொள்கையில் துன்பம் தோய்ந்திருக்கும் வரிகளுக்கு அச்சுவரப் பிரயோகங்களைத் தேர்வு செய்ய அது பழகிக்கொள்ளும். தியாகய்யரின் துன்பத்தைச் சரணத்தின் பொருள் கொண்டு அது அடையாளப்படுத்திக் கொண்டாலும் பாடுவோனின் துயரத்தை அது எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளும்? துயரத்தில் இருக்கும் பாடகனைப் போல் இப்பாடலைப் பாடு என்ற கட்டளை அதற்கு வெளியிலிருந்துதான் வந்தாக வேண்டும் என்பதுதான் அதன் மிகப் பெரிய போதாமை.
அந்த அலுவலகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் அவனுக்கு எழுவதுண்டு. அதைச் சில க்ரூப் ஹக்களிலும் தவுன் ஹால்களிலும் அவன் தைரியமாகக் கேட்கவும் செய்தான். அவர்களும் “உங்கள் பங்களிப்பே வருங்கால சந்ததியினருக்கு சங்கீதம் பயில்வதற்கான இன்றிமையாத ஆப் ஒன்றை உருவாக்குவதற்கான அஸ்திவாரம்” என்று அவர்களுக்கே உரிய கார்ப்பரேட் ஸ்பீக்கில் பதிலளித்தார்கள். அவனைப் போன்ற, சங்கீதத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் எழுதும் அனோடேஷன்கள் கண்டிப்பாக சங்கீதம் பயில்பவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதென்னவோ உண்மைதான் என்றும், நாமும் ஏதோ ஒரு விதத்தில் சாஸ்திரிய சங்கீதத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்றும் தன்னையே தேற்றிக்கொண்டான்.
***
சங்கீத் ஏஐ-இன் ஆண்டு விழாவில் வித்வான் சஞ்ஜே ரகுராம் கலந்து கொண்டு அதன் புது ஆப் ஒன்றை ரிலீஸ் செய்யவிருக்கிறார் என்று ஆடிட்டோரியம் முழுவதிலுமே ஒரே பரபரப்பு. ஆப் தயாரிப்புகள் அனைத்துமே ஸ்டெல்த் மோடிலிருந்ததால் ஆப்பை பற்றிய விவரங்கள் எதையுமே ரகு அறிந்திருக்கவில்லை. பரம்பரா 1.0 என்ற ஒரு பேடா வெர்ஷனை அவர்கள் ஏற்கனவே முதலில் ஃப்ரீயாகவும் இப்போது சப்ஸ்க்ரிப்ஷன் முறையிலும் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அதன் 2.0 வெர்ஷனாக இருக்குமோ என்று இவன் யோசித்தான். அதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்ற கேள்வியும் உடனெழுந்ததால் இருக்காது, புது ஆப்பாகத்தான் இருக்கும் என்ற பதிலையும் சொல்லிக்கொண்டான்.
கம்பனியின் சிடிஓ சுஷீல் ஜோஷி பேசத் தொடங்கினார். சஞ்ஜே ரகுராம் வழக்கமாக அவரது கச்சேரிக்களுக்கு அணியும் உடையில் மேடையில் வீற்றியிருந்தார். சுஷீல் பரம்பராவின் வெற்றியைச் சிறிது நேரம் பறைசாற்றிவிட்டு சங்கீத் ஏஐயின் புது ஆப்பான ஐ-சிங் கைப் பற்றி பேசத் தொடங்கினார்.
“திஸ் ஆப் இஸ் ட்ரூலி எ டெமாக்ரடைசேஷன் ஆஃப் அவர் கிளாசிகல் ம்யூசிக்,” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு ஆப்பின் அருமை பெருமைகளை எல்லாம் பட்டியலிட்டார். “டிஸ்ரப்ஷன்” என்ற வார்த்தையைச் சற்று அதிகமாகவே பயன்படுத்தியது போல் ரகுவிற்கு பட்டது.
“கஸ்டமர் ஆப்பில் அவரது குரலை மட்டும் ரெகார்ட் செய்துகொண்டால் போதும் அதன்பின் சப்ஸ்க்ரிப்ஷனுக்கு ஏற்ப பிகினர், அமெசூர், எக்ஸ்பர்ட், பெர்ஃபார்மர் என்று அவர் குரலுக்கு வித்வத்தை அளித்துக் கொள்ளலாம். ஆப்பின் பாடல் லைப்பரியில் எந்தப் பாடலை வேண்டுமானாலும், தன் குரலைச் சந்தா செலுத்தும் லெவலின் வித்வத்துடன் சேர்த்துக்கொண்டு அவர் பாடலாம், ஏன், அதை ரெக்கார்ட செய்து அவர் அதை விற்பனைகூடச் செய்யலாம். ஆப்பை எந்த மொழியில் வேண்டுமானாலும் கான்ஃபிகர் செய்யும் வசதியுமுண்டு என்று வரிசையாக அடுக்கிக்கொண்டே சென்றார். இறுதியில் ஆப்பின் “க்ரவுன் ஜுவல்” சப்ஸ்க்ரிப்ஷனான “வித்வான்”-ஐப் பற்றிப் பேசுகையில் உண்மையிலேயே சங்கீதத்தைச் சிறுபான்மையிரிடமிருந்து விடுவித்த பெருமையும் பூரிப்பும் அவர் முகத்தில் வழிந்தோடியது போல் ரகுவிற்குத் தோன்றியது. “வித்வான்” பிரிவிற்குச் சந்தா செலுத்தியவர்கள் அத்திட்டத்தில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துகொண்ட எந்த சங்கீத வித்வானின் பாண்டித்யத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம், காப்பிரைட் விதிமுறைகளுக்குள் வராத பழைய ஜாம்பவான்கள் உட்பட…. இப்போது ஆப்பை வெளியிடும்படி வித்வான சஞ்ஜே ரகுராமை அழைக்கிறேன்.”
சஞ்ஜே மேஜை மீது வைத்திருந்த கணினியில் எண்டர் பட்டனைத் தட்டினார். பின்னால் மெகா ஸ்க்ரீனில் ஐ-சிங் ஆப் மீது கன்ஃபெடித் துகள்கள் விழுகையில் அனைவரும் கைதட்டினார்கள்.
“எனக்கு சாஸ்த்ரிய சங்கீதமெல்லாம் தெரியாது. எப்போதுமே சினிமாப் பாட்டுதான். எனக்குப் படித்த பழைய சினிமா பாட்டொன்ன இப்போ ஆப்ல ரெக்கார்ட் செய்யப் போறேன்” என்று கூறிவிட்டு
“குச் நா கஹோ குச் பீ நா கஹோ” என்று சென்ற நூற்றாண்டில் பிரபலாமாக இருந்த ஒரு ஹிந்தி சினிமாப் பாட்டொன்றின் இரு சரணங்களைப் பாடினார்.
நிறைய பயிற்சி செய்திருப்பார் என்று அரங்கிலிருந்தவர்கள் சிந்திக்கும் அளவிற்கும் சுருதி லயம் பிசகாமல் அவர் நன்றாகவே பாடியது ரகுவை ஆச்சரியப்படுத்தியது.
‘இப்போ எனக்கு ஒரு குறிப்பிட்ட வித்வானின் வித்வத்தை அளித்துக் கொள்ளப் போகிறேன். காஷ் ஐ அம் க்ளூலெஸ், ஹெல்ப் மீ அவுட் ஹியர் சஞ்ஜே…
சஞ்ஜே ஸ்க்ரீனில் தோன்றிய விதவான்களின் பட்டியலை ஸ்க்ரோல் செய்தார். “ஹவ் அபுட் திஸ் கய், இவர் நல்லா பாடுவார்னு சில பேர் சொல்றாங்க.”
“அஃப் கோர்ஸ் வாட் வாஸ் ஐ திங்கிங். எஸ் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென் சஞ்ஜே நம்பளோட பத்து வருட ஒப்பந்தம் சைன் பண்ணிருக்கார் என்பதையும் இங்க பெருமையுடன் அறிவிக்கிறேன்”
ஐ-சிங்கின் திரையில் சஞ்ஜே ரகுராமின் பெயர் மின்னியதும் சொல்லி வைத்தது போல் அனைவரும் கைதட்டினார்கள்.
“அப்படியே உங்களுக்குப் பிடித்த பாட்டொன்னயும் தேர்வு செஞ்சிடுங்க சஞ்ஜே”
சஞ்ஜே பட்டியலிலிருந்து ஒரு பாட்டை சொடுக்கினார்.
தாரினி தெலுசுகொண்டி சஞ்ஜேக்கே உரிதான சங்கதிகளுடன் சரியான காலப்பிரமாணங்களுடன் சுஷீலின் குரலில் ஒலித்தது.
பாடல் முடிந்தவுடன் சஞ்ஜே வா உஸ்தாட் என்று சிரித்துக்கொண்டே சுஷீலை நோக்கி வலது கரத்தை நீட்டினார்.
சுஷீல் நெஞ்சில் கையை வைத்தபடி பவ்யமாகச் சபையினரை வணங்கினான். கரகோஷத்தை தாங்கிக் கொள்ளமுடியாத ரகு அவசரமாக அரங்கைவிட்டு வெளியேறினான்.
***
அன்புள்ள சங்கரன் மாமா,
தங்களை நேரில் பார்த்து விடைபெற்றுக் கொள்ள தைரியமில்லாததால் மின் அஞ்சலின் வழியே விடைபெற்றுக் கொள்கிறேன். அந்த பாக்கியத்திற்கு நான் அருகதை இல்லாதவனும்கூட. பதினைந்து வருடங்களாக நீங்கள் எவ்வளவு பொறுமையாக நம் பவித்ரமான கர்நாடக சங்கீத பாரம்பரியத்தை எனக்குக் கற்றுக் கொடுக்க முயற்சித்திருக்கிறீர்கள் என்று இத்தருணத்தில் கண்களில் நீர் மல்க (உண்மையாகவே!) உணர்ந்து கொண்டேன். அதில் ஒரு சிறு பகுதியையேனும் நானும் உள்வாங்கிக் கொண்டேன் என்று தோன்றுகிறது. தீக்ஷிதரின் “ஶ்ரீ சுபரம்மண்யாயா நமஸ்தே” கீர்த்தனையை உங்கள் குருவின் அபாராமான பாணியில் நீங்கள் எனக்கு ஆறு மாதங்களாகப் பயிற்றுவித்ததை நான் இன்று நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். வாசவாதி சகல தேவா வரியின் விலாம்ப மத்யம துரித கால நிரவல்களை எத்தனை முறை எத்தனை விதமாகப் பாடிக் காட்டியிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் பாடுவதை மேலும் மேலும் அனுபவிப்பதற்காகவே நானும் வேண்டுமென்றே தவறாகப் பாடினேனோ? இசைப் பிரவாகத்தின் ஒரு துளியைக் கைபற்றுவதற்கே எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் சிறிது சிறிதாக வளர்த்துச் செல்லும் பாரம்பரியத்தை எல்லாம் இன்று சுஷீல் ஜோஷி என்பவன் தன் தொழில்நுட்பக் காலடியில் கடாசி அசிங்கம் செய்துவிட்டான். அதற்கு நானும் உடந்தையாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் உடம்பில் கம்பளிப்பூச்சி ஊர்வது போல ஓர் அருவருப்பு பரவுகிறது. வேலைக்குச் சேர்வதற்கு முன்னேயே இருந்த மன உளைச்சல் நினைவிற்கு வருகிறது. லௌகீக நிதர்சனங்களை முன்னிட்டு அதைச் சரியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாததும்கூட. அம்மா நானும் வேலையில் சேர்ந்து சௌக்கியமாக ஜீவிதம் நடத்துகிறேன் என்ற சந்தோஷத்துடன் போய்ச் சேர்ந்துவிட்டாள். அதுமட்டும் ஷேமம்தான். ஆனால் இனியும் அந்த உளைச்சலைப் அலட்சியப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. தொழில்நுட்பத்திற்கு வெளியே நாம் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் அனைத்துமே கேலிக்குரியவையாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எல்லோரும் வல்லுநர்களாக மார்தட்டிக் கொள்ளும் காலமிது. ஜனநாயகத்தின் உச்சமும் இதுதானோ என்னவோ. ஒரே குழப்பமாக இருக்கிறது. மேலும் சங்கீத்-ஏஐ உடன் இவ்வளவு காலம் உறவாடிய பின் என்னையே சந்தேகிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு வழியில் நானுமே அதைப் போல் நீங்கள் அளிக்கும் குறிப்புகளையும் விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம். வாசவாதி சகல தேவா வை உங்கள் மனோதர்மத்தில்தான் அவ்வளவு மாதமாகப் பாட முயற்சித்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. சங்கீதத்தை மூச்சைப் பிடித்தாவது கற்றுக் கொண்டுவிடலாம். ஆனால் மனோதர்மத்தை? அதற்குத் தேவையான அனுபவ விசாரத்தை நான் தனியாகத்தான் கண்டடைய வேண்டும்.
அதனால் திட்டங்களின்றி மனம் போன போக்கில் ஒரு நீண்ட யாத்திரை போகலாமென்றிருக்கிறேன். உங்களுக்குத்தான் தெரியுமே, தி.ஜாவின் பாபுவின் மீது எனக்கிருக்கும் பிரியத்தை. யார் கண்டார்கள் எனக்கும் ஒரு யமுனா எங்காவது காத்திருக்கிறாளா என்னவோ?
மாமிக்கு என் நமஸ்காரங்கள்.
இப்படிக்கு,
உங்கள் பிரியத்துக்குச் சற்றும் தகுதியற்ற சிஷ்யன்
ரகுநாதன்.
பி.கு. அடுத்த மாதம் சங்கீத்-ஏஐ நடத்தவிருக்கும் மாபெரும் கச்சேரிக்கான இரு டிக்கட்டுகளை இத்துடன் இணைத்திருக்கிறேன். தெரிஞ்சவா யாருக்காவது குடுத்துடுங்கோ.
சங்கரன் கணினியை மூடிவைத்து ரகுவைப் பற்றியே நினைத்திருந்தார்.
***
அன்புள்ள ரகு,
வருத்தமாக இருந்ததால், சில நாட்கள் போகட்டும் என்று பதில் போடுவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். தாமதித்ததும் ஒரு விதத்தில் நல்லதுதான்.
எப்போதும் போல் துரிதகால அவசரம் உனக்கு. உன்ன என்ன பிடிச்சு கட்டிவைக்கவோ போறேன். இந்த ஒடிப் போற பழக்கமும் நம்ம பாரம்பரியத்துல புதுசில்லையே. கே.வி.என் மாமா வர்தாவுக்கு ஓடிப் போனதத்தான் உனக்குச் சொல்லியிருக்கேனே. உன் கம்பேனியிடமிருந்து ஓடிச் செல்வதாய் பாவித்துக் கொண்டாலும் நீ உன்னிடமிருந்துதான் ஓடுகிறாய். சங்கீதம்கறது ஒரு தவம், பகவானோட அனுக்கிரகத்தால மட்டுமே அது சாத்தியப்படறது. நம்மோட பிரயத்தனங்கள் அனைத்துமே ஒருவகையில் அந்த அனுக்கிரகத்திற்கான நன்றி செலுத்துதல்தான். பகவானுக்கும் முன்னால வந்த மஹானுபவாவுலுகளுக்கும். எம்டிஆர் வாளோட ஏந்தரோ உனக்கும் ஞாபகம் இருக்கும்னு நெனக்கறேன் (அத நெனச்சாலும் மறக்க முடியுமா என்ன?) அரம்பத்துல மகானுபவாவுவ அவர் அவ்வளவு நேரம் அவ்வளவு உருக்கமா ஏன் பாடினார் என்று நான் பலதடவ யோசிச்சிருக்கேன். அது ஒரு மந்திரம் போலத்தான், பாடகர்ங்கறதவிட அவர் ஒரு நாதோபாசகராகத்தான் அத உச்சாடணம் செய்யறார். அப்படிப்பட்ட, உனக்கும் உன்ன ஆட்டிபடைக்கறதுக்கும் இடையே உள்ள அன்னியோன்யத்துல தொழில்நுட்பம் எப்படிக் குறுக்கிட முடியும்.
நீ அனுப்பிச்ச டிக்கட்ட எடுத்துண்டு மாமியும் நானும் போயிட்டு வந்தோம். ஒரே வார்த்தைல சொன்னா பிரம்மாண்டம். மேடைல மணி ஐயர்வாள் இருவரும் (மதுரை, பால்காட்) லால்குடியும் உட்கார்ந்திருந்தத பாத்தபோது மயிர் கூச்செறிந்தது. அவ்வளவு தத்ரூபமாக இருந்துது அவாளோட நகல்கள் (ஹோலோகிராம்னு ப்ரோசூரில் போட்டிருந்தான்). “மணி மண்டபம்” தான் போ. மணி ஐயர்னாலே வேகமா பாடறவர்னு ஒரு பிம்பத்த ரசிகா வெச்சுண்டிருக்கா. ஆனா காவேரிய போல் வேகமா பாஞ்சு சுழலறச்சேயும் சுருதி லயம் இரண்டுலயும் அவருக்கிருந்த கட்டுப்பாட்டுனால அந்த வேகத்து நடுவுல ஒரு அமைதியையும் அவர் தக்க வெச்சுக்கறார். தி.ஜா அவர அடுக்குக் காசித் தும்பை மலர்னு சொன்னது ஏனோ மா ஜானகியைக் கேட்கறப்போ நெனவுக்கு வந்துது. செல்வத்தப் புறக்கணிக்கற நிதிசால சுகமா பாட்ட மதுர மணிய சங்கீத்-ஏஐ பாட வைச்சத நினைச்சா சிரிப்புதான் வரது. ஆனா சும்மா சொல்லக்கூடாது கச்சேரி நன்னாவே இருந்தது.
பிரயத்தனங்கள் எப்போதுமே கேலிக்குரியவையாக ஆகிவிடுவதில்லை, அவற்றின் இலக்கு சரியாக இருக்கும்பட்சத்தில். ஒரு விதத்துல இந்தத் தொழில்நுட்பமுமே பகவானோட அனுக்கிரகம்தானோ. அந்த மஹான்கள இன்னமும் கேட்கனும்னு அவருக்கு வாஞ்சையோ என்னவோ. உயிரோட திரும்பிக் கொண்டுவர விதி அவரையுமே கட்டிப்போட்டுதால தொழில்நுட்பத்தால அந்த வாஞ்சைய தீத்துக்கறார்னு எடுத்துண்டா நீ சங்கீத்-ஏஐல பிரயத்தனம் செய்யறதும் ஒரு நன்றி செலுத்துதல்னு ஆயிடறதுதானே? யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை மாதிரி.
நீ தேடிச் சென்றது உனக்கு விரைவிலேயே கிட்ட என்னுடைய மற்றும் மாமியுடைய ஆசிகள்.
பாபுவாக பாவித்துக் கொண்டு என்னயும் வைத்தியாக்கிவிட்டாய். பரவாயில்லை, கடிதம் எழுதி எவ்வளவு நாட்களாக்கிவிட்டது, அதில் ஓர் அலாதியான சுகம் இருக்கிறது, அதையும் நாம் இழந்துவிட்டோம்.
என்றுமே என் அன்பிற்கு உரியவனான சிஷ்யனுக்கு
பிரியத்துடன்
சங்கரன்
பி.கு: அப்படியொரு யமுனாவைச் சந்திக்க நேர்ந்தால் அவசியம் எழுது.
***
“சபாக்காராள போய்ப் பாத்தேளா?”
“ம்.”
“என்ன சொன்னான்?”
“என்ன சொல்லுவான் அதே ரெண்டு மணி கச்சேரிதான் குடுக்க முடியுமாம்?”
“இப்பலாம் ப்ரபலங்களுக்கே நாலு மணி ஸ்லாட் தானாம்.”
“ஏனாம்?”
“ப்ரைம் ஸ்லாட்லாம் சங்கீத்-ஏஐ காரனோட க்யூரேட்டட் டிஜிடல் எக்ஸ்பீரியன்ஸ் கான்சர்ட் தானாம். அதுக்குத்தான் இப்பலாம் மவுசாம்.”
“அப்போ…”
“எனக்கு அரிசி புளி வெலைய நெனச்சு கவலப்படற என் பத்மா மூஞ்சி நெனவுக்கு வந்துது. ஆட்டோவ வச்சுண்டு அந்த சங்கீத்-ஏஐ ஆபீசுக்குப் போய், இதோ இந்த ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டு வந்துட்டேன். நம்ம குரல்ல கச்சேரி வரதோ என்னவோ அஞ்சு வருஷத்துக்கு ஒப்பந்தப்படி ஆத்துக்கு செக்கு வந்துடும்.”
“ரகு அவாளோட சங்கார்த்தமே வேண்டாம்னுதானே ஓடிப் போனான்?”
“அவன் குழந்தை. அவனுக்குன்னு ஒரு பத்மா வாய்க்கட்டும்…”
“ஆமாம் என்ன பழி சொல்லாட்டா உங்களுக்குத் தூக்கம் வராதே,” என்று சிணுங்கிவிட்டுப் படுக்கையறக்குள் பத்மா விரைந்தாள்.
சிறிது நேரம் அவள் சென்ற திசையையே சங்கரன் வெறித்திருந்தார்.
பின்னர் ரகுவிற்கு எழுதியது நினைவிற்கு வர சாய்த்து வைக்கப்பட்டிருந்த தம்புராவை நிமிர்த்தி சுருதி சேர்க்க ஆரம்பித்தார். அவனுக்கு மிகவும் பிடித்த காம்போதி ராகத்தில் அமைந்த “ஓ ரங்கசாயி” யைப் பாட ஆரம்பித்தார். அடுத்தடுத்து வந்த சங்கதிகளில் காம்போதியின் சுவரங்கள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு முழுமை பெற்றன. பிலச்சுடே யனுச்சு ரா ராதா என்று வேண்டிக் கொண்டாலும் நீ வரமாட்டாயா என்ற பொருட்படும் அவ்வரியில் அவரது நிரவல்கள் ரங்கநாதரைப் பக்தனின் அதிகாரத்துடனும், கனிவுடனும், விடாப்பிடித்தனத்துடனும் அழைத்தன. அரைமணி நேரமாய் அடுக்கப்பட்டுக் கொண்டே இருந்த ஸ்வரங்கள் ஶ்ரீரங்கத்துக் கோபரம் போல் உயர்ந்து அக்கோவிலின் விஸ்ராந்தியையும் தங்களுக்குள் இழுத்துக் கொண்டன. முடிக்கையில் அதுவரையில் கதவுச் சட்டகத்தின் மீது சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த பத்மா கண்களில் நீர் ததும்ப அவரை சேவித்துக் கொண்டிருந்தாள்.
பாடுகையில் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்த அந்த ஆதார ஸ்வரம் அமைதியாகும்வரை அவரது விரல்கள் தம்புராவை இயக்கிக் கொண்டிருந்தன. தம்புராவின் அதிர்வுகள் ஒய்ந்தபின் காலடியில் சேவித்தபடி இருந்த பத்மாவை அவரது கண்கள உற்றன.
அவள் தலையை அவர் விரல்கள் கோதின.
இறைவர்க்கோர் பச்சிலை பத்மா, இறைவர்க்கோர் பச்சிலை என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன.
ஓவியம்: Created with AI Dall-E2
நன்றி: சுரேஷ் செல்லப்பன்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…