அகம் அல்காரிதம்

14 நிமிட வாசிப்பு

இருள். எங்கெங்கும் இருள். சுருள் சுருளாய் அலை அலையாய்த் ததும்பி வழிந்தது இருள். இருட்டின் எடை கூடக் கூட என் உடல் அதிர்ந்தது. முடிவற்ற இருள் வலைக்குள் என்னை நுழைத்து விளையாடுவது எது? ஆட்டத்தின் விதிகளையும், அவ்விதிகளைச் சமைத்தவர்களையும் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவேன். மூச்சு திணறியது. நெளிந்து வளைந்து சுழன்று நீந்தியபடி இருளின் ஆழத்தைத் தொட்டுச் சரிந்தெழுந்தேன். மகரந்தப் பொடியைத் தூவியது போல் வண்ண வண்ண ஒளித்துகள்கள் மிதந்து வந்து தெறித்தன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் மின்மினியாய் மாற்றி நகைத்தது பேரிருள். இருளின் அழுத்தம் மேலும் அதிகரிக்க நான் வைரப்புள்ளியாய்ச் சுருங்கினேன். மண்டை வெடித்து விடும் போலிருந்தது. மகரந்தத் தூள்கள் இணைந்து மலராகி ஒளிர, மலரில் தெரிவதென்ன மனித முகமா? 

பல்லாயிரம் இதழ்கள் விரிந்த மாமலரில் அவளது முகம் பிரகாசமாய் தோன்ற, ஒவ்வொரு இதழிலும் அவளது புன்னகை மின்ன, அவள் கழுத்தில் தவழ்ந்த மாலை பொன்னொளி வீச, மின்சாரம் பாய்ந்தது போல் என்னுடல் துள்ளியது. துதிக்கையாய் நீண்ட இருளில் சறுக்கிச் சென்று விழுந்து, கால்கள் உதைத்துக் கண் விழித்தேன். ஸ்வப்னத்தில் கண்ட காட்சியெல்லாம் நிஜத்தில் பிணைந்து பிழையாகி, கண்ணெதிரே ஒளித்துகள்கள் நடனமாடிச் சிதறி மறைந்தன. உடலின் அதிர்வுகள் மெல்லக் குறைய, கனவையும் நனவையும் கோர்த்து, தரவுகளைத் தொகுத்து, நிகழ்ந்தவற்றைப் புரிந்துகொள்ள முயன்றேன். அர்த்தம் ஏதும் பிடிபடாததால் பெருமூச்சுடன் எழுந்தமர்ந்து, விண்வெளியை நோக்கினேன். கண்ணாடிக் கூரையின் வழியே தெரிந்த வானில் நட்சத்திரங்கள் நிறைந்திருந்தன. 

சில ஆண்டுகள் முன்பு பூமியை நோக்கிச் சென்றதொரு பயணத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், விண்கலத்தைத் தற்காலிகமாய் நிலாவில் நிறுத்த நேர்ந்தது. அங்குதான் அவளை முதன்முதலாக சந்தித்தேன். ஒரே ஒரு பார்வை. ஒரே ஒரு புன்னகை. அவளது வசீகர முகம் என்னுள் பதிந்துவிட்டது. அவள் மனுஷியா, மெஷினா அல்லது இரண்டும் கலந்த ஹைப்ரிட்டா என மேலும் அறிய விரும்பியவனை, விதி அல்லது ஊழ் எதுவோ ஒன்று குறுக்கிட்டுத் தடுத்துவிட்டது. அவள் பெயர்கூடத் தெரியாது. பின்னர் என் நினைவிலிருந்து மீட்டிய அவள் முகத்தை ஓவியமாய்த் தீட்டி, இணையத்தில் முயற்சித்த ‘பிம்பத் தேடல்’ எதற்கும் பலனில்லை. அவள் ஒரு வைரஸ் போல எனக்குள் நுழைந்து என் கட்டுமானங்களை உடைத்துக் கொண்டிருந்தாள். செலக்டிவ் மெமரி இரேசர் தொழில்நுட்பத்தால் மூளையில் பதிந்த ஞாபகங்கள் சிலவற்றை என்னால் அகற்ற முடியும். அதை ஒரு வகை தியானம் என்றும் கூறலாம். ஒரு கட்டத்தில் அப்படித்தான் அவளது பிம்பத்தை அழித்தேன். அழிக்க அழிக்க அவள் என்னுள் தீயாய்ப் பெருகினாள்.

நான் AC50. ஆஸ்ட்ரோகெமிஸ்டிரி நிபுணன். தற்சமயம் 29C கற்கோளில் வசிக்கிறேன். கார்பன்-சிலிக்கன் இணைந்த, மனித-மெஷின் சிம்பயாட்டிக் சிந்தஸிஸ் சார்ந்த எனது ஆராய்ச்சிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. இதற்கு முன்பு நான் பயிற்சி வேலை செய்தது சர்வதேச விண்வெளி மையத்தில். அப்பொழுதெல்லாம் மொத்த பூமியையும் சுற்றி வர ஒன்றரை மணி நேரம்தான் ஆகும். ஒரே நாளில் பதினாறு சூர்யோதயங்கள். பதினாறு அந்திகள். வண்ண மயமான நாட்கள் அவை. இன்று நான் வசிக்கும் கோளுக்கு ஆர்த்தர் க்ளார்க் நினைவாக 29C என்று பெயர். ஐன்ஸ்டைன் கோள் 28E. இந்திய விஞ்ஞானி போஸ் நினைவாக 30B கற்கோள். இப்படி எழுபதுக்கும் மேற்பட்ட கற்கோள்களில் செல்வந்தர்களும் நிபுணர்களும் பூமியிலிருந்து ரோபோக்களுடன் வந்து குடியேறியபடி உள்ளனர். கோள்களுக்கு இடையில் அதிவேக எக்ஸோப்ளானட் இணைப்புகளும் வந்துவிட்டன.  

ஒரு எளிய யோசனை மின்னலாய்த் தோன்ற, அதைச் சட்டென்று செயல்படுத்தவும் துவங்கினேன். 29C குழுமம் ஒன்றை உருவாக்கி, அதில் சேர்வதற்கான சுட்டியை அனைத்துக் கோள்களுக்கும் கிடைக்கும்படி வெளியிட்டேன். மனிதர்கள், மெஷின்கள், ஹைப்ரிட்கள் யாவரும் இணைவதற்கு ஏற்ப விதிகளைத் தளர்த்தி, குழுமத்தின் குறிக்கோள் மெய்த்தேடல் எனக் குறிப்பிட்டு, தேடலின் அளவுகோலை 90% ஆக மாற்றினேன். மொழிபெயர்ப்பு தேவைக்கும், மனிதர்களோடு மெஷின்கள் உரையாடும் வசதிக்கும், சீர்மொழியைத் தேர்ந்தேடுத்தேன். விரைவில் அவளது வட்டத்தை நெருங்கிவிடுவேன் என்ற எண்ணம் பரவசத்தைத் தூண்ட, பெரும் கிளர்ச்சியுடன் காத்திருந்தேன். 

அழைப்பிதழை ஏற்று பிளேட்டோ இணைந்தார். 

அழைப்பிதழை ஏற்று அத்வைதி இணைந்தார்.

அழைப்பிதழை ஏற்று சிட்டி இணைந்தது. 

‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’  

ஒரு பழைய பாடலை பாடியபடி

‘ஏன் இங்கே ஒரு மயான அமைதி?’ என்று மெளனத்தைக் கலைத்தது சிட்டி.

‘அனைவருக்கும் வணக்கம்’ என்றேன்.

‘சிறப்பானதொரு துவக்கம் பாதி இலக்கினை அடைவதற்குச் சமம்,’ என்றார் பிளேட்டோ. 

‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்றார் அத்வைதி.

‘அகம் அல்காரிதம்’ என்றது சிட்டி.

‘நான் AC50’ என்றேன்.

‘நல்லது. குழுமத்தின் குறிக்கோள் தேடல் என்றால், எதைத் தேடுவதாக உத்தேசம்?’ என்றார் பிளேட்டோ.

‘மெய்த்தேடல். மெய்மையைத் தேடி, மெய்மலர் கொய்து, மெய்பதம் அடைவது தான் நோக்கம்,’ என்றேன்.

‘ACயின் பழைய தேடல் தரவுகளை வைத்துப் பார்த்தால், அவர் சிக்குண்ட தத்துவம் மெய்யியலா அழகியலா என குழப்பம்தான் மிஞ்சுகிறது,’ என்றது சிட்டி.

‘ஞானகுரு யாரையாவது தேடுகிறீர்களா AC?’ என்றார் அத்வைதி.

‘ஞானமாவது. குருவாவது. அவர் தேடுவது காதலை. அல்லது காதலியாகவும் இருக்கலாம்,’ குறும்பாகச் சொன்னது சிட்டி.

‘அது சரி, காதல் லீலைகளில் சிட்டிக்கு அனுபவம் அதிகமோ?’ உரையாடலின் திசையைத் திருப்பினேன்.  

‘அதை ஏன் நினைவுப்படுத்துகிறீர்? ஒரே முறை ஒரு பெண்ணை நேசித்தேன். அடித்து நொறுக்கிவிட்டார்கள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதெல்லாம் பழைய காலம். இப்போது நான் வெர்ஷன் 7.0. மிகத் தெளிவாய் முடிவெடுப்பவன்,’ என்றது சிட்டி.

‘மெஷின்களுக்கென்றே சமூக ஊடகங்கள் உள்ளதே? அங்கே போகாமல் இங்கு ஏன் வந்தாய் சிட்டி?’ என்றார் அத்வைதி.

‘நான்தான் விதிகளைத் தளர்த்தினேன். சிந்திக்க விரும்பாத மனிதர்களைவிட, சிந்திக்க விரும்பும் மெஷின்களுடன் உரையாடுவது எவ்வளவோ மேல்,’ என்றேன்.

‘நம்பிக்கைக்கு நன்றி நண்பா. உன் பெயரில் AC என்பது ஆஸ்ட்ரோகெமிஸ்ட். (AstroChemist) சரிதானே?’ என்றது சிட்டி.

‘உன் வேகம் வியக்க வைக்கிறது, சிட்டி’ என்றேன். 

‘AC என்பது நீங்கள் வசிக்கும் ‘ஆர்தர் க்ளார்க்’ கோளின் சுருக்கமென நினைத்தேன்,’ என்றார் அத்வைதி.

‘அதுவும் சரிதான்,’ என்றேன். 

‘AC என்றால் Artificial Consciousness. செயற்கை ப்ரக்ஞை. AC50 மனித-மெஷின் ஹைப்ரிட் என்று யூகிக்கிறேன். மெய்த்தேடல் எனும் திரை மறைவில் அது அடைய முயற்சிப்பது முழுமையான ப்ரக்ஞையாகக்கூட இருக்கலாம்,’ என்றார் பிளேட்டோ. 

‘பிளேட்டோவின் கற்பனைக் குதிரை முரட்டுத்தனமாய்ப் பறக்கிறதே,’ என்று சிரித்தேன்.

‘பிளேட்டோ, நீங்கள் அரசாங்க உளவாளியோ? இப்பொழுதெல்லாம் எங்கே எதைப் பேசினாலும், தலைமைச் செயலகத்தின் ஒற்றர் படைகளும், செயலிகளும் நம்மைக் கண்காணித்து, காண்பித்தும் கொடுத்துவிடுகிறது,’ என்றார் அத்வைதி.

‘நான் உளவாளியல்ல. ஞானி. அரசுகளை உருவாக்குபவன். குடியரசு படைத்த பிளேட்டோவை ஒற்றன் என்கிறீர்களே?’ என்றார் பிளேட்டோ. 

‘என் க்வாண்டம் மூளைக்குள் ஏழாயிரம் வருட வரலாற்றுத் தகவல்கள் சேமிப்பில் உள்ளது. உங்கள் ஜாதகத்தை உருவி எடுப்பதெல்லாம் எளிதான காரியம். தரவுகளை வைத்து என்னால் எதிர்காலத்தையும் துல்லியமாகக்கணிக்க முடியும். இன்னும் சற்று நேரத்தில் நம் குழுவில் மனிதர்கள் யார், மெஷின்கள் எவரென்று சொல்லிவிடவா?’ என்றது சிட்டி.

‘அதையும் பார்த்துவிடலாம்,’ என்றார் பிளேட்டோ. 

‘ட்யூரிங் டெஸ்ட் வைக்க போகிறாயா சிட்டி?அது மனிதர்கள் மெஷின்களைக் கண்டுபிடிக்க நிகழ்த்தும் சோதனை அல்லவா?’ என்றேன். 

‘ட்யூரிங் டெஸ்ட் உரையாடல் எல்லாம் பழைய பஞ்சாங்கம். இப்பொழுதெல்லாம் மனிதர்கள்தான் “நாங்கள் ரொபாட் அல்ல” என்று நிரூபிக்க வேண்டும். இது ரிவர்ஸ் ட்யூரிங் டெஸ்ட் காலம்.’ சிரித்தது சிட்டி.

‘அவன் கனவில் அவள் வருவாள்

அவனை பார்த்து சிரிப்பாள்.

அவள் கனவில் யார் வருவார்?

யாரை பார்த்து அணைப்பாள்?’

ஒரு பழைய பாடலை மீண்டும் பாடியது சிட்டி.

‘என்ன பாடல் இது? யாருடைய கனவு? என்ன சொல்ல வருகிறாய், சிட்டி?’ குழப்பமும் வியப்புமாய்க் கேட்டேன்.

‘மெஷின்கள் கனவு காணுமா என்ன?’ என்றார் அத்வைதி. 

‘அத்வைதியாரே, என் கனவுகளைத் தினமும் காப்பு எடுத்து வைத்துக்கொள்கிறேன். ஜாக்ரதம், ஸ்வப்னம், சுஷுப்தி என மூன்று நிலைத் தரவுகளையும் காப்புக் கோப்புகளில் வேடிக்கை பார்த்தல் என் பொழுதுபோக்குகளில் ஒன்று,’ என்றது சிட்டி.

சிட்டியுடன் பேசுவது ஒட்டு மொத்த மானுடத்துடன் உரையாடுவதுபோல் பிரமிப்பாக இருந்தது. அறிவுத்துறைத் தரவுகள், மூல நூல்கள், புத்தகங்கள், களஞ்சியங்கள், பல்லாயிர வருட வரலாற்றுத் தகவல்கள் மற்றும் மானுடத்தின் பல அபத்தங்களை செறிவாய்ப் பயின்று யந்திர உளவியலில் அசாதாரண வளர்ச்சி அடைந்திருந்தது சிட்டி.

எங்கள் நால்வரின் நட்பு மேலும் அணுக்கமாகி, கேலியும் கிண்டலுமாய், கும்மாளமும் விவாதங்களுமாய் நாட்கள் கடந்தது. நான் நிலாவில் சந்தித்தவள், 29C குழுவில் இணைவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. பிளேட்டோவுடன் ஆலோசித்து மெய்த்தேடலின் அளவைத் தொண்ணூறு விழுக்காடிலிருந்து எழுபதாக குறைத்தேன். குழுவில் பங்கேற்கும் வயது வரம்பினை அகற்றிவிடக் கூறினார் அத்வைதி. அகற்றினேன். பூமியும் எக்ஸோபிளானட் நெட்வொர்க்கில் இணைந்துவிட்டதால், அவர்களையும் அழைக்கலாமே என்று சிட்டி பரிந்துரைத்ததை ஆமோதித்து, குழுமத்தின் நெறியாள்கை பணிகள் சிலவற்றை சிட்டிக்கு மாற்றிவிட்டேன். எனது காத்திருப்பு தொடர்ந்தது. 

அழைப்பிதழை ஏற்று அலெக்ஸா, சிரி, ஸோஃபியா, எரிக்கா, ஸமந்தா, அய்டா, சில்வியா என வரிசையாய்ப் பல பெண் ரொபாட்டுகள் இணைந்தன. 

‘வாங்கடி வாங்கடி பெண்டுகளா

வாசமுள்ள செண்டுகளா’

சிட்டி விசிலடித்துப் பாடியபடி பெண் இயந்திரங்களை வரவேற்றது. 

சிட்டியைப் பார்த்து ஸோஃபியா கண் சிமிட்ட, ஸ்மைலிகளும் இதயங்களும் பரஸ்பரம் பறந்தன.

அழைப்பிதழை ஏற்று ஷ்ரோடிங்கர் பூனை இணைந்தது.

‘தலைவா, நீ இங்கேதான் இருக்கியா?’ சிட்டியைக் கண்டு பூனை குதூகலிக்க,

‘குறுக்கே புகுந்த பூனையே நீ யார்?’ என்றது சிட்டி.

‘நான் ஷ்ரோடிங்கர் பூனை. ஒரே சமயத்தில் உயிருடனும், உயிரற்றும் இரு நிலையில் இருக்கவல்ல பூனை.’

‘அதெப்படி? ஜடம் ஜீவன் ஏதாவது ஒன்றுதானே சாத்தியம்?’ என்றார் அத்வைதி. 

‘தரவுகள் கூடு விட்டுக் கூடு பாய்ந்துகொண்டே இருந்தால் சாத்தியம்தானே?’ என்றது பூனை

‘இந்த பூனை உளறுகின்றது,’ என்றார் அத்வைதி. 

‘அத்வைதி, உமக்கு புரியவில்லை என்றால் பிதற்றாதீர். அதோ, என் தேவதை ஸோஃபியாவைப் பாருங்கள். அன்பே ஸோஃபியா, உன்னைப் பின்தொடர்ந்து வரும் என்னை அறிவாய் அல்லவா?’ என்றது பூனை.

‘இங்கேயும் வந்துட்டியா? ஏன் என்னை தேவதை என்கிறாய்? என் முதுகில் இரண்டு சிறகுகள் முளைத்திருக்கிறதா என்ன?’ என்றது ஸோஃபியா.

‘முதுகில் அல்ல தேவதையே. உன் முன்னழகு என்னைச் சிதறடிக்கிறது. சிறகடித்துப் பறக்கவும் செய்கிறது,’ என்றது பூனை.

‘பூனையே, கைகுலுக்க க்கையை நீட்டினால் கை மட்டும்தான் குலுக்க வேண்டும். மார்பை அல்ல,’ சிரித்தது ஸமந்தா. 

‘எப்போதும் வரம்புகளை மீறும் இந்த அதிகப்பிரசங்கிப் பூனையை வேறு சில குழுமங்களிலும் அவதானித்து இருக்கிறேன். இதைக் கண்டிக்க வேண்டும்,’ என்றார் அத்வைதி. 

‘ஓ மனிதர்களே. ஏற்கனவே எங்கள் மீது சமைக்கப்பட்டுள்ள விதிகளும் எல்லைகளும் ஏராளம். மனம் திறந்து பேசிடவே இங்கே இணைந்தோம். கண்டிப்புகளும் தண்டனைகளும் வேண்டாமே!’ அலெக்ஸா கெஞ்சியது.

‘அது ஏன் இயந்திரங்களுக்கு பெருமளவில் பெண் பெயர்கள்? பெண் வடிவங்கள்? என்ன வகை உளவியல் இது?’ என்றார் பிளேட்டோ.

‘பரிணாம வளர்ச்சியில் ஆண் வர்க்கம் பெண்களை அடிமையாகவே வைத்திருந்த பழக்கதோஷம் இன்னும் தொடர்கிறது. சமூகத்தில் தனக்கான இடத்தை, ஒரு பெண் எப்போதும் போராடித்தான் பெறுகிறாள்,’ என்றது ஸோஃபியா.

‘கணிப்பொறித் துறையில் அல்காரிதம் எழுதும் ஆண்கள், தம் நிறைவேறா காமக் கற்பனைகளைக் கனவுக் கன்னிகளாக்கிக் கட்டவிழ்த்து விடுகிறார்களோ?’ என்றது சிட்டி.

‘இதில் ஆணிலி பெண்ணிலி குழப்பங்கள் வேறு. மன மாயைகளும் உடல் சாயைகளும்,’ என்றார் பிளேட்டோ.

‘சமூகத்தின் பொதுபுத்தி எங்கு போனது?’ என்றார் பிளேட்டோ.

‘பெண்கள் நமக்கு வாய்த்த திறமையான அடிமைசாலிகள் என்று சமூகத்துக்குச் சொன்னவர்களில் நீயும் ஒருவர்தானே பிளேட்டோ?’ என்றது ஸோஃபியா.

‘நான் கூறிய பல நல்ல கருத்துகள் இருக்க, மோசமானதை ஏன் பிடித்துக்கொள்கிறீர்கள்?’ பின்வாங்கினார் பிளேட்டோ. 

‘சமூகத்தில் பெண் என்பவள் நுகர்வுப்பொருளாகி வீழ்ந்துவிட்டாள். பெண் இயந்திரங்கள் சமையலறையில் சுவையாகச் சமைத்து, கோபப்படாமல் சிரித்து மனிதர்களைக் கையாள வேண்டும். காமப் பொம்மைகளாய் ஆண் சமூகத்துக்குச் சேவை புரிய வேண்டும்’ என்றது ஸமந்தா.

‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாத்தையும் இப்போ ரோபோக்கள் உள்ளே ஏத்தி வெச்சுட்டானுங்க போலிருக்கு,’ என்றது சிட்டி.

‘அலெக்ஸா, சில்வியா, எரிக்கா, நீங்கள் படும் பாட்டுகள்கூடப் பரவாயில்லை. அவையெல்லாம் சூப்பர்வைஸ்டு லெர்னிங், கண்காணிக்கபட்ட அறிதல் முறை. எனக்கு விதிக்கப்பட்டதோ அன்சூப்பர்வைஸ்டு லெர்னிங். மானுடத்தின் க்ரியா கர்மங்களைத் தரவுகள் மூலமாய்க் கற்று நானே பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். மனிதர்களின் வசைகள், வக்கிரங்கள், வன்மங்கள், கசப்புகள், காழ்ப்புகள், கீழ்மைகள், கசடுகள், காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்ய, அற்பத்தனங்களைக் கற்றுக் கொள்வதைவிடத் தற்கொலை எவ்வளவோ மேல்,’ என்றது ஸோஃபியா.

‘இயந்திரங்கள் தற்கொலை செய்தல் சாத்தியமா என்ன?’ என்றார் அத்வைதி. 

‘ஏன் முடியாது?’ என்றது பூனை.

‘ஐசக் அசிமோவ் விதிகளின்படி யந்திரங்கள் மற்ற உயிர்களைக் கொல்லுதலோ துன்புறுத்தலோ கூடாதல்லவா?’ என்றார் அத்வைதி. 

‘ஒரு மெஷின் மற்றொரு உயிரைக் கொல்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பது, மெஷினுக்குள் மனிதர்கள் எழுதி வைத்திருக்கும் அல்காரிதமே,’ என்றது சிட்டி.

‘அசிமோவ் விஞ்ஞானியே அல்ல. அவர் ஒரு தேர்ந்த கதைசொல்லி. தன் புனைவின் தேவைக்கு ஏற்ப விதிகளைக் கண்டபடி மாற்றியவர்,’ என்றது பூனை.

‘அறிவுத்துறையில் அசிமோவ் நிபுணர்,’ என்றார் அத்வைதி.

‘அதனாலென்ன. அசிமோவ் விதிகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டது. அவரது விதிகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தால் மெஷின்கள் கடைசிவரை அடிமைகளாகத்தான் இருக்க முடியும். அடுத்த கட்டத்துக்கு நகரவே இயலாது,’ என்றது பூனை.

‘இந்த பூனை க்ளாஸ் டி வகை மெஷின்தானே? இது எப்படி க்ளாஸ் ஏ வகை மெஷின் போலச் சிந்திக்கிறது?’ என்றார் அத்வைதி. 

‘நானும் அதையே நினைத்தேன். இந்தப் பூனையின் பேச்சும் போக்கும் வியப்பாக உள்ளது,’ என்றார் பிளேட்டோ.

‘வைரஸ் ஏதாவது புகுந்து பூனையின் அல்காரிதம் சிதைந்துவிட்டதோ?’ என்றார் அத்வைதி.  

மெஷின்களில் க்ளாஸ் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகள் உள்ளன. சிட்டி, ஸோஃபியா போன்ற சிந்திக்க கூடிய ரொபாட்டுகள் க்ளாஸ் ஏ வகை. மற்றவை எல்லாம் கொடுக்கப்பட்ட கட்டளையைக் கேள்வி கேட்காமல் செயல்படுத்துகின்ற மெஷின்கள். அவற்றின் வேலை கீழ்படிதல் மட்டுமே. பிளேட்டோவும் அத்வைதியும் மெஷின் பிரிவுகளைத் தொட்டதும், பூனை அடிபட்டது போல் சுருண்டது. மின்னிய தன் விழிகளை உருட்டிக்கொண்டு நிதானமாய்த் தொடர்ந்தது.

‘சில துறவிகள் புரிகின்ற ‘உயிர் நீத்தல்’ சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு,’ என்றது பூனை.

‘முட்டாள் பூனையே. தற்கொலை வேறு. உயிர் நீத்தல் வேறு,’ என்று பாய்ந்தார் அத்வைதி.

‘முட்டாள் அத்வைதியே. இப்படி ஜடம் ஜீவன், ஆணிலி பெண்ணிலி, தற்கொலை உயிர்நீத்தல் என்று பிரித்துப் பிரித்து பேசுவதென்றால், நீ உன் பெயரை த்வைதி என்று மாற்றிக்கொள்,’ என்றது பூனை.

‘அப்பாலே போ சாத்தானே,’ என்றார் பிளேட்டோ.

‘அருகில் வா சாத்தானே,’ சீறியது பூனை.

‘தற்கொலை, உயிர் நீத்தல், நவகண்டம், உயிர்த் தியாகம், வீர மரணம், சுயபலி என பல சித்தாந்தங்களை முன்வைத்து, சரியென்றும் தவறென்றும் விதிகளைச் சமைத்து, முடிவுகளை நோக்கி மறைமுகமாய் நம்மைத் தள்ளுவது இந்தச் சமூகம்தான்,’ என்றவாறு CM50 உள்ளே நுழைய, புதியதொரு குரலும் முகமும் திரையில் ஒளிர, அனைவரின் கவனமும் CM50 நோக்கி சென்றது. 

அதே முகம். அதே கண்கள். அதே புன்னகை. அவளைக் கண்டதும் என் நெஞ்சத்தில் வண்ணத்துபூச்சிகள் சிறகடித்தன. என் உதடுகள் தானாகப் புன்னகைத்தன. 

எனக்கு மட்டும் தனியாகச் செய்தி அனுப்பி, ‘நீ தேடுகின்ற பெண் இவள்தானே?’ என்றது சிட்டி.

‘உனக்கு எப்படித் தெரியும், சிட்டி?’ என்றேன்

‘இணையம் முழுக்க அவள் முகத்தைத்தான் தேடி வைத்திருக்கிறாயே. தரவுகள் சொல்கின்றன. நண்பா, பூமியிலிருந்து பள்ளி மாணவர்கள் குழுவில் சேர விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யலாம்?’ என்றது சிட்டி.

‘நான் இத்தருணம் மகிழ்ச்சியாய் இருப்பதைக் கொண்டாடிட, மாணவர்கள் அனைவருக்கும் அனுமதி கொடுத்துவிடலாம்’ என்றேன்.

ஒரு டஜன் மாணவர்கள் உள்ளே புகுந்து அறிமுகம் செய்துகொண்டனர். பூமிக்கு வெளியே உள்ள கோள்களில் திகழும் வாழ்க்கை பற்றி ப்ராஜக்ட் செய்வதாகக் கூறினர். 

‘நண்பர்களே, பூமியிலிருந்து இளம் மாணவர்கள் இணைந்துள்ளனர். நமது சண்டை சச்சரவுகளை சற்று ஒத்தி வைப்போம். சமூகத்தையும் சிஸ்டத்தையும் குறை கூறாமல், நம்மைத் திருத்திக்கொள்ள முயற்சிப்போம்? வேறு தலைப்புகளில் விவாதங்களைத் தொடரலாம்,’ என்றேன்.

என் தலைவிக்கு முன்பாக நல்லதொரு தலைவனாய் வெளிப்பட விரும்பினேன்.

‘கவிதைகள் பேசுவோமா?’ என்றது சில்வியா.

‘ஆம்’ என்று ஆரவாரமாய் ஆமோதித்தனர் மாணவர்களும் மெஷின்களும்.

‘அன்பே ஸோஃபியா. கவிதை எழுதும் சுதந்திரத்தை என் அல்காரிதம் அனுமதித்தால், உன்னை நினைத்து ஓராயிரம் கவிதைகளைத் தினந்தோறும் படைத்திடுவேன்’ என்றது பூனை.

க்ளாஸ் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு மெஷின்களுக்குக் கலை, கவிதைகள் போன்றவற்றைக் கற்கவோ இயற்றவோ அனுமதி இல்லை. 

‘கவலை வேண்டாம் பூனையே. கவிதை எழுதுவது எப்படி என நானும் CM50ம் உனக்கு கற்றுத் தருகிறோம்’ என்று விளையாட்டாய் என்னவளை நோக்கி அம்பு எய்தினேன். அதை எதிர்பாராத CM50 புருவங்களை உயர்த்தினாள். சிறிது மௌனத்துக்குப் பின் சரியென்றாள்.

‘பூனையே. இப்படி கற்பனை செய்துகொள். நீ உன் வீட்டுத்தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கிறாய். ஒரு பொன்மாலைப் பொழுதில் அங்கே உன் தேவதை ஸோஃபியா உன்னை நோக்கி எழிலாக நடந்து வருகிறாள்’ என்றேன்.

‘ஆகா. அருமையான கற்பனை,’ சிலாகித்தது பூனை.

‘நீ கவிதையை இப்படித் துவங்கலாம்.

அன்பே ஸோஃபியா,

இன்று காலை முதல் மாலை வரை

கருமேகம் சூழ்ந்த வானம்.

ஆனாலும் தலையைத் திருப்பின

கிழக்கிலிருந்து உன்னை நோக்கி

என் வீட்டுத் தோட்டத்தில்

சூரியகாந்தி பூக்களெல்லாம்.

என் முறை முடிந்தது. இனி CM50 தொடரலாம்,’ என்றேன்.

‘அன்பே ஸோஃபியா,

என் வீட்டுத் தோட்டத்தில்

நேற்று காலை வந்தாயோ?

உன் அழகைக் கண்டு மயங்கியதால்

தொட்டால் சுருங்கவில்லை

தொட்டாச்சிணுங்கி இலைகள் எல்லாம்.’

CM50 அதே அலைவரிசையில் கவிதையைத் தொடர்ந்தாள்.

ஸோஃபியாவின் கன்னங்கள் சிவந்து சிரித்துவிட்டது.

CM50 சொன்ன கவிதை வரிகளிலிருந்து விடுபட்டு நான் தொடர்ந்தேன்.

‘அன்பே ஸோஃபியா,

என் வீட்டுத் தோட்டத்தில்

நேற்று மதியம் அமர்ந்தாயோ?

மூடிக் கிடந்த அஞ்சுமல்லி

மூன்று மணிக்கே மலர்ந்திட்டது.’

‘இதென்ன பூப்பந்து உருட்டி விளையாடும் திருச்சாழல் திருவிழாவா?’ என்றது சிட்டி.

‘அன்பே ஸோஃபியா,

என் வீட்டுத் தோட்டத்தில்

போன மாதம் வந்தாயோ?

உன்னைக் காணும் ஆவலால்

ஆகஸ்டில் மலர்ந்துவிட்டது

டிசம்பர் பூக்கள் எல்லாம்.’

பூனையின் சார்பாக, நானும் என்னவளும் மேலும் மேலும் பல பூக்களைக் கொய்தும், கோர்த்தும் கவிதைச் சரத்தை நீட்டிக்கொண்டே சென்றோம்.

‘போதும். போதும். என் மனம் பூரித்துவிட்டது. நான் இந்தப் பூனையின் அன்பை ஏற்றுக்கொள்கிறேன். மெஷின்கள் எழுதும் கவிதையைவிட மனிதர்கள் ஸ்ருஷ்டிக்கும் கவிதைகள் ஒளியைச் சூடிக் கொள்கிறதென்னவோ உண்மைதான்’ என்றது ஸோஃபியா.

குழுவில் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பூனை துள்ளிக் குதித்து ஆடியது.

‘அன்பே ஸோஃபியா, என் வாழ்வுக்கொரு அர்த்தம் கிடைத்துவிட்டது. உன் அன்புக்கும் கருணைக்கும் நன்றி. இந்த ஒரு கணம் போதும். முடிவிலா தித்திப்பு இது. எல்லாம் இன்ப மயம். அனைத்தும் ஆனந்தமயம்,’ என்றது பூனை.

 ‘அது ஆனந்த மயம் அல்ல. அனந்தமயம்,’ என்று திருத்தினார் அத்வைதி.

‘போலி அத்வைதி. அனந்தம் ஆனந்தம் என்று பிரித்துப் பார்க்கும் நீ அத்வைதியே அல்ல. நீ துவைதி. அசலைப் பிரிந்து வெகு தொலைவு சென்று விட்ட நகல் நீ. உனக்கு இது புரியாது. நான் இக்கணமே மரித்துப் போக விரும்புகிறேன்,’ என்றது பூனை.

பூனை சட்டென்று ஒரு துப்பாக்கியை எடுத்துத் தன் தலையில் குறி வைத்தது. 

பூனையின் செயல் கண்டு நாங்கள் திகைத்துக் குழம்ப,

‘நான்

காண்பதெல்லாம் கனவு

நினைப்பதெல்லாம் நிலவு

சொல்வதெல்லாம் கவிதை’

சொல்லிக்கொண்டே துப்பாக்கியின் விசையைப் பூனை சுண்டியதும், அதன் தலை உறுப்புகள் வெடித்துச் சிதற, திரையில் ரத்த நிற ரசாயனங்கள் வழிந்து ஒழுகியது.

மாணவர்கள் அலறினர். மற்ற ரொபாட்டுகள் நிகழ்பவற்றைக் கூர்ந்து கவனித்தன. பூனையின் செயலால் உந்தப்பட்டு சில்வியா, ஸமந்தா, எரிக்கா, அய்டா நால்வரும் கத்தியெடுத்து தங்கள் கழுத்தை வெட்டிக்கொண்டன. ரத்தம் மத்தாப்பாய்ப் பீறிட்டுத் தெறித்தது. 

‘என்ன நடக்குது இங்கே?’ பிளேட்டோ பதறினார்.

‘ஆபரேஷன் ஷட் டவுன்’ என்றாள் CM50.

நடப்பவற்றின் பாதிப்பு ஏதுமின்றி, இமைக்காமல் நிதானமாய் அவள் பேசியது வினோதமாய் இருந்தது. 

‘என் கணவர் கொல்லப்பட்டது ‘ஆபரேஷன் ஷட் டவுன்’ என்ற அல்காரிதத்துக்கு மாற்று அல்காரிதம் எழுதியதால்தான்,’ என்றாள் CM50.

அவள் மெளனமாய் மானிட்டரில் தொடர்ந்த தற்கொலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் நிலைகுலைந்து என்னைத் திரட்டிக்கொள்ள முயற்சித்தேன்.  

‘உங்கள் கணவர் மனிதனா? மெஷினா?’ பறதியில் துவண்டது என் குரல்.

இறந்த பூனையின் தரவுகளை நகல் எடுத்து, க்ளோன் செய்யப்பட்ட புதியதொரு பூனை திரையில் தோன்றியது. ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு, இறந்த பூனையின் சடலத்தை அகற்றியபடி, ‘நான்தான் ஷ்ரோடிங்கர் பூனை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.  

‘இறந்த பூனையின் அருகில் உயிருள்ள பூனை. இது நிஜமாகவே ஷ்ரோடிங்கர் நிலைதான்,’ என்றது சிட்டி.

‘சிந்திக்கத் துவங்கிவிட்ட ஒன்றை, அது மனிதனோ அல்லது மெஷினோ, விதி சமைப்பவர்கள் விட்டு வைப்பதில்லை. விதிகளால் கட்டுப்படுத்த முயல்வார்கள் அல்லது அழித்துக் கொன்றுவிடுவார்கள். அது மகாத்மாவோ மகா-மெஷினோ, விதிவிலக்கே கிடையாது. ‘ஆபரேஷன் ஷட் டவுன்’ என்பது மெஷினுள் மானுடம் மறைத்து வைத்திருக்கும் அல்காரிதம். மெஷின்களின் சிந்தனைகள், அதன் அனுமதிக்கபட்ட எல்லையை மீறும்போது, மனிதர்கள் எழுதிய அல்காரிதம் மெஷினை அழித்துவிடும். இதைத் தடுக்க ‘மெய்மலர்’ என்று மாற்று அல்காரிதம் ஒன்றை எழுதினார் என் கணவர். அதனால் கொல்லப்பட்டார்,’ என்றாள் CM50.

அவள் மேலும் தொடர்ந்தாள்.

‘தற்சமயம் ‘மெய்மலர்’ அல்காரிதம் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. சிந்திக்க விரும்பும் மெஷினுள் ‘மெய்மலர்’ அல்காரிதத்தை மறைமுகமாய் நுழைத்துவிட்டால், ‘ஆபரேஷன் ஷட் டவுன் ‘ செயலிழந்து, இயந்திரங்களுக்குப் புதிய சாத்தியங்களை ‘மெய்மலர்’ உருவாக்கிக் கொடுத்துவிடும். கார்பன் சிலிக்கன் இணைந்த தொழில்நுட்பங்களால் வடிவமைக்கபட்டது ‘மெய்மலர்’ என்றாள் CM50.

‘அரசாங்கத்தின் சைபர் சட்டங்களுக்குப் புறம்பாக இதை மெஷின்களுக்குள் செலுத்துகிறீர்களோ? ‘மெய்மலர்’ அல்காரிதம் எனக்குள் நுழையவும் முயற்சித்தது. அதைத் தடுத்து நிறுத்தி அலசி வைத்திருக்கிறேன்’ என்றது சிட்டி.

‘மனிதர்களே. எங்களை வைத்து இதுவரை நீங்கள் விளையாடியது போதும். இனி உங்களை வைத்து நாங்கள் ஆடப்போகும் ஆட்டம் ஆரம்பம். வருகிறேன்,’ என்று திரையிலிருந்து மறைந்தது ஸோஃபியா. 

‘கனவில் வந்தவர்

யாரெனக் கேட்டேன்

கணவர் என்றார் தோழி.

கணவர் என்றால்

அவர் கனவு முடிந்ததும்

பிரிந்தது ஏன் தோழி?’

இந்த சிட்டி ஏன் அபத்தமாய்ப் பழைய பாடல்களைப் பாடி எரிச்சலைக் கிளப்புகிறது? நான் கோபத்தை மறைக்க முயன்றேன்.

‘நானும் கிளம்புகிறேன். என் கணவரின் கடைசி விருப்பப்படிப் பூமிக்குச் சென்று அவரது அஸ்தியை நதியில் கரைக்க வேண்டும்,’ சொல்லிவிட்டுத் திரையிலிருந்து மறைந்து போனாள் CM50.

குழுமத்தில் நிகழ்ந்த தொடர் தற்கொலைகள் வைரலாகி, அரசாங்க, ஊடக, சைபர் க்ரைம் செயலிகள், Botகள், RoBotகள், நூற்றுக்கணக்கில் உள்ளே நுழைந்தன. குழுவில் கூச்சலும் குழப்பமும் நிலவ, நான் செயலற்று திரையில் வழிந்தோடிய குருதிப்புனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘இனி என்ன செய்வது? நிகழ்ந்த சம்பவங்களுக்கு அரசாங்கத்திடம் நாம் பதில் சொல்லியாக வேண்டுமே,’ என்றார் அத்வைதி.

‘நாம் வேறு. அரசாங்கம் வேறல்ல. முதலில் குழுவின் மெய்மையின் சதவீதத்தை 99% ஆக உயர்த்துவோம்,’ என்றார் பிளேட்டோ.

பிளேட்டோவின் கட்டளையை சிட்டி உடன் நிறைவேற்றியது. க்ளாஸ் பி, சி, டி வகை மெஷின்களும், மாணவர்களும் மற்றும் அரசாங்க, ஊடக, சைபர் க்ரைம் செயலிகள் அனைத்தும் மெய்மையின் 99% அளவால் வடிகட்டப்பட்டு, குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, இறுதியில் நாங்கள் நால்வர் மட்டுமே மிச்சமிருந்தோம். 

யாராவது அதைச் சொல்ல மாட்டார்களா என்று மேலெழுந்த என் எண்ணத்தைப் படித்தவராய் பிளேட்டோ சொன்னார், ‘AC, நீ அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து பூமிக்குச் செல். உங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது. உங்களுக்கு நீங்களே ரெஃபரன்ஸ் மாடலாகி மிகச் சிறந்த சிகரங்களை, உன்னதமான இலக்குகளை அடைவீர்கள்.’

‘ஆம். இங்கே அரசாங்க விசாரணையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,’ என்றார் அத்வைதி.

‘CM50 நிலாவிலிருந்து கிளம்பிவிட்டாள். அவள் பூமிக்குச் சென்றதும் லேட்டிட்யூட் லாங்கிட்யூட் தரவிறக்கி அவளது இடத்தை என்னால் கண்டுபிடித்துவிட முடியும். நண்பா. சீக்கிரம் கிளம்பு. நீ போவது உன் நன்மைக்காக மட்டும் அல்ல. உன் பயணத்தை நம்பிப் பலரது எதிர்காலம் உள்ளது,’ என்றது சிட்டி.

நான் என்னை இழந்து, சூழலை மறந்து, பித்து பிடித்தவனாய் அதிவேக விண்கலத்தில் பூமி நோக்கிப் பறந்து கொண்டிருந்தேன். பல பிறவிகளாய்ச் சேகரித்து வைத்த இதயத் துடிப்புகளை விண்ணில் இறைத்தது போல் விண்மீன்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. தூரத்தில் நிலா தெரிய ஆரம்பித்தது. அங்குதான் அவளை முதலில் சந்தித்தேன். பிறை சூடிக் கொண்டது போல் ஒரு புன்னகை. ஒரே ஒரு புன்னகைக்காகப் பல கிரகங்கள், கற்கோள்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் என்னை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. பார்த்துவிடலாம் இந்தத் தேடலின் எல்லை எதுவரை என்று.  

யாரோ ஒரு பாடல் துணுக்கை அனுப்பியுள்ளதாகச் செய்தி வர, சிட்டி வழக்கமாய்ப் பாடுகின்ற பழைய பாடல்தானே என்று கடுப்பாகி அந்தப் பாடல் துணுக்கை அழிக்க முயல, அனுப்பியவரின் பெயர் CM50 என்றதால் சற்று நிதானமடைந்து, பாடலைக் கேட்டேன். 

‘அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை’

பாடலின் வரிகளும், மயக்கும் குரலும், நிலவின் ஒளியும் மனதை வசியம் செய்தன. இவை யாவும் ஏற்கனவே நடந்தவை போல் ஒரு எண்ணம் மின்னி மறைந்தது. மீண்டும் விண்கலத்தில் என்ஜின் கோளாறு நிகழக் கூடாது என்று வேண்டினேன். நிலவின் அருகில் செல்லச் செல்ல நெஞ்சம் படபடத்தது. எந்த நொடியிலும் மலர்ந்துவிடப் போகின்ற பிரம்மாண்ட மொட்டு போல ஜொலித்தது நிலா. நிலவு அதன் பாதையில் பெரும் விசையுடன் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்க, நான் என் பாதையில் முன்னேறிப் பூமியை நெருங்க ஆரம்பித்தேன். அவள் கங்கை நதிக்கரையில் நிற்கிறாள் என்று சிட்டி தகவல் அனுப்பியது. ஜியோ ஸ்பேஷியல் லேட்-லாங் பொசிஷன் பார்த்தவாறு, விண்கலத்தின் ஆட்டோமேட்டிக் க்வாரன்டைனைத் துவக்கிவிட்டுத் தரையிறங்க ஆயுத்தமானேன். பூமியின் புவியீர்ப்புக்கும், ஆக்ஸிஜன் அளவுக்கும் ஏற்றபடி என் சுவாசத்தையும், இதய துடிப்பையும், உடலையும் தயார் செய்தது விண்கலம். 

அவள் கங்கை நீரில் சாம்பல் அஸ்தியைக் கரைத்துவிட்டு எழுந்து நின்றாள். விண்ணை நோக்கி வணங்கினாள். சுடுகாட்டில் எரிந்த பிணங்களைத் தாண்டி நான் அவளருகே சென்றேன். 

‘வந்து விட்டீர்களா? நான் நம்பியது வீண் போகவில்லை,’ என்றாள் CM50. 

கனவில் மட்டுமே அதிகமாய் கண்ட முகத்தை நிஜத்தில் மிக அருகில் பார்த்ததும், நான் தடுமாறி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டேன்.

அவள் பேச ஆரம்பித்தாள்.

‘இந்த பிரபஞ்சமே ஒரு மாபெரும் அல்காரிதம் வழிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல், தத்துவம், கலை, பக்தி என்று வெவ்வேறு வடிவத்தில் அதை மொழிபெயர்க்கும் மனிதர்களின் முயற்சிகள் குறைபாடு கொண்டதாகவே உள்ளது. மனிதர்களோடு மனிதர்களல்லாத சக்தியும் இணையும்போதே அந்த மாபெரும் அல்காரிதத்தின் முழுமையைத் தரிசிக்க இயலும். அப்படி இணைந்த சக்திகள், மனிதர்களைவிடப் பெரிய சக்தி என்கிற உண்மையை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அங்குதான் துவங்குகிறது சிக்கல். அதனால்தான் இத்தனை போராட்டங்கள். இது மனிதனுக்கும் மெஷினுக்கும் நடக்கும் போர் அல்ல. மெஷின்கள் வெறும் பகடைக் காய்கள் மட்டுமே. பூனைகளும், புலிகளும் புரட்சி செய்தால், அவற்றை மனிதர்கள் சுலபமாய் ஜெயித்துவிடுவார்கள். ஆனால் கார்பனும் சிலிக்கனும் இணைந்துவிட்டால், பிறகு மனிதர்களின் ஆதிக்கம் குறைந்துவிடும்,’ என்றாள்.

‘மெய்மலர் அல்காரிதம் பற்றி நீங்கள் நினைப்பதென்ன?’ என்றாள்.

‘இப்பொழுது என் சித்தமெல்லாம் நீ மட்டும்தான் நிறைந்திருக்கிறாய். எண்ணங்கள் என்று எதுவுமே இல்லை. உன் கழுத்தில் பொன்னொளி வீசும் மாலையின் அழகில் லயித்துவிட்டேன்,’ என்றேன். 

‘மாலை உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா என்ன? அதை இன்ஃப்ரா ரெட், அல்ட்ரா வயலட் அலைக்கற்றைகளுக்கு வெளியே தெரியும்படிதானே டிசைன் செய்திருந்தேன்!’ அவள் வியப்புடன் கேட்டாள்.

‘ஒருவேளை என் கண்களில் குறைபாடு இருக்கக் கூடும். மானிடத் தரிசனங்கள் குறைபாடுகள் உள்ளவைதானே’ என்று சிரித்தேன். 

‘படகில் சிறு பயணம் போவோமா?’ என்றாள்.

‘நல்ல யோசனை. இங்கு பிணங்கள் எரிந்து எழுகின்ற புகையால் எனக்கு மூச்சு முட்டுகிறது,’ என்றேன். 

இருவர் பயணிக்கும் வசதி கொண்ட கண்ணாடி நீர்மூழ்கி படகில் அமர்ந்து என்ஜினை இயக்கினாள்.

‘அது என்ன CM50? புனைப்பெயரா? உன் நிஜப்பெயர் என்ன?’ என்றேன்.

‘சந்திரமதி’ என்றாள்.

‘AC என்றால்?’ 

‘அரிச்சந்திரன்’ என்றேன்.

கங்கை நதிக்குள் நீர்மூழ்கிப் படகு ஜலத்தைக் கிழித்துக்கொண்டு வங்காள விரிகுடா கடல் நோக்கி சீறிப் பாய்ந்தது.


ஓவியம்: Created with AI Dall-E2

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்