விண்வெளியில் புத்தகம் படிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்று அந்தக் குழுவின் தலைவர் சொன்னார்.
அவனுக்கு ஏன் என்று புரியவில்லை.
பூமியில் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கும் விண்வெளியில் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை அவன் அறிந்துகொள்ள விரும்பினான். இதற்காக அவன் ரகசியமாக ஒரு புத்தகத்தைத் தன்னோடு கொண்டு செல்ல ஆசைப்பட்டான்.
அவனுடன் விண்வெளி பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட பெண் சொன்னாள்
“புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் புத்தகங்கள் விநோதமாகிவிடும். புத்தகங்கள் பூமிக்கானவை.”
“விண்வெளியில் படிக்கும்போது என்ன நடக்கும்?”
“புத்தகம் காலத்தோடு தொடர்பு கொண்டது. காலவெளி பற்றிய உணர்வுதான் வாசிப்பு அனுபவத்தை உருவாக்குகிறது. விண்வெளியில் நமது காலவுணர்வு வேறுவிதமானது. கனவில் நாம் இருப்பது போலவே அந்த வாசிப்பிருக்கும்.”
“ஒரு சொல் பூமியில் ஒரு அர்த்தத்துடனும் விண்வெளியில் வேறு அர்த்தம் கொண்டும் இருக்குமா என்ன”
“நிச்சயமாக இருக்கும். விண்வெளியில் நீ நான் இருவரும் எடையற்றவர்கள். மிதக்கும் பொருட்கள் அவ்வளவே.”
“விண்வெளியில் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பது எனது நீண்டகாலக் கனவு”
“வீணாகக் குழப்பத்தை உருவாக்கிக் கொள்ளாதே. என்ன புத்தகத்தை விண்வெளியில் வாசிக்கக்கொண்டு செல்ல நினைக்கிறாய்”
“கவிதைத் தொகுப்பை. ஒரு கவிதைத் தொகுப்பைப் பூமியில் வாசிப்பதைவிட விண்ணில் வாசிப்பதுதான் பொருத்தமானது”
“உன் தேர்வு முட்டாள்தனமானது. கவிதை பூமியில் உன்னை எடையற்று மிதக்கச் செய்யும். விண்வெளியிலோ அது தாங்க முடியாத கனம் கொண்டதாகிவிடும். உனக்கு விருப்பம் என்றால் ஒரு சிறுவர் நூலை எடுத்துக்கொள்.”
அந்த யோசனையை அவன் ஏற்றுக்கொண்டான்.
தனக்கு விருப்பமான சிறார் நாவல் ஒன்றை அவன் விண்வெளிக்கு ரகசியமாகக் கொண்டு சென்றான்.
பூமிக்கு வெளியே அதை வாசிக்கத் துவங்கியதும் அவன் உடல் கனக்கத் துவங்கியது. உடனே பூமிக்குத் திரும்ப வேண்டும் என்ற வேட்கை அதிகமானது. அவனது நினைவுகள் பீறிடத்துவங்கின
புத்தகத்திலிருந்த எல்லாச் சொற்களும் விநோத நட்சத்திரங்களைப் போல ஒளிர்ந்தன. ஒரு புதிய கிரகத்தில் சஞ்சரிப்பது போல அவன் சிறார் நூலை வாசித்துக் கொண்டிருந்தான்.
பூமியின் வசீகரம் அப்போதுதான் அவனுக்கு முழுமையாகப் புரிய ஆரம்பித்தது.
ஓவியம்: Salvador Dalí
இதழ் 15 பிற படைப்புகள்
- அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4.0
- ஞாபகக் கல்
- கேளிர்
- வெறும் சிரிப்பு
- நடனத்தின் முடிவில்
- டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 9
- அடாசு கவிதை – 15
- பகல்
- லிலி: தொடரோவியக் கதை – 13
- தூக்குப்பை புனைவுக் கோட்பாடு
- கவிதையின் மதம் 11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு
- திரைகடலுக்கு அப்பால் 6: ஹேம்லெட் – பாவமும் பழியும்