குறுங்கதை

வெறும் சிரிப்பு

2 நிமிட வாசிப்பு

அவன் ஒரு சிரிக்கும் ரோபோவை உருவாக்கியிருந்தான். 

அந்த ரோபோ மனிதர்களைப் போலவே சிரித்தது. அதுவும் இளம்பெண்ணின் சிரிப்பொலியை அப்படியே உருவாக்கியது. தனது இரவுபகலான ஆய்வுப்பணிகளுக்கு நடுவே அவன் தன்னை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள யாரோ ஒருவரின் சிரிப்பைக் கேட்க விரும்பினான். அந்தச் சிரிப்பின் வழியே மட்டுமே தன்னால் சிரிக்க முடியும் என்று நம்பினான். அவன் உருவாக்கிய ரோபோ ஒவ்வொரு முறை சிரிப்பதற்கு முன்பும் ஒரு கேள்வி கேட்டது.

“யாரைப் போலச் சிரிக்க வேண்டும்”

“பதின்வயது சிறுமி போல. அன்பிற்குரிய காதலி போல, திருவிழா காண வந்துள்ள பெண்ணைப் போல, வெற்றி பெற்ற வீரனைப் போல” என்று ஒவ்வொரு முறையும் ஒரு சிரிப்பைத் தேர்வு செய்வான்.

உடனே அச்சு அசலாக அதே போன்று சிரிப்பை ரோபோ வெளிப்படுத்தும். ஆரம்ப நாட்களில் அதை ரசித்துப் பாராட்டிய அவன் பின்பு அந்தச் சிரிப்பு காகித மலர் போலச் செயற்கையாக உள்ளதை உணர்ந்தான்.

சிரிக்கும் குரலை விடவும் சிரிப்பில் மலரும் கண்கள் முக்கியம் என்பதை உணர்ந்தான். 

ரோபோ சிரிப்பைச் சட்டென நிறுத்துவதை அவனால் ஏற்கமுடியவில்லை. புகை காற்றில் மறைந்து போவது போலச் சிரிப்பு மெதுவாக மறைய வேண்டும் என்று விரும்பினான்.

சிரித்து முடிந்தபிறகும் விரிந்திருக்கும் முகத்தைக் காண ஏங்கினான். 

வேண்டும் என்றே ரோபோவிடம் “ஒரு மலரைப் போலச் சிரி” என்று ஆணையிட்டான். 

ரோபோ அவனது ஆணையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றது.

சிரிப்பின் பல்வேறு நிலைகளை, தருணங்களை, வெளிப்பாடுகளை அதற்குக் கற்றுத்தர முயற்சித்தான்.

“கண்ணீருக்குப் பின்பு வரும் சிரிப்பு வெறும் சிரிப்பல்ல” என்று அதற்குப் புரிய வைத்துப் பார்த்தான்.

“சிரிப்பில் சிரிப்பைத் தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது” என்று ரோபோ கேட்டது.

தனக்குத் தானே சிரித்துக் கொள்வதை ரோபோவிற்கு எப்படிப் புரிய வைப்பது என்று குழம்பிப் போனான்.

உறக்கத்தில் சிரிப்பதையும், அர்த்தமில்லாமல் சிரிப்பதை, ரகசியத்தை மறைக்கச் சிரிப்பதையும், துரோகத்தின் அடையாளமாகச் சிரிப்பதையும், பழிதீர்க்கும் சிரிப்பையும் பித்தேறி சிரிப்பதையும் அவனால் எவ்வளவு முயன்று கற்றுக் கொடுக்க முடியவில்லை.

சிரிப்பின் படிக்கட்டுகள் எந்த ஆழத்தை நோக்கிச் செல்கின்றன என்று ரோபோவால் உணர முடியவில்லை.

சலிப்புற்ற அவன் சொன்னான்.

“சிரிப்பு ஒரு மொழி. அதை உன்னால் கற்றுக்கொள்ளவே முடியாது”

அதைக் கேட்டு ரோபோ புன்னகை செய்தது.


இதழ் 15 பிற படைப்புகள்

எஸ்.ராமகிருஷ்ணன்

https://www.sramakrishnan.com/

Share
Published by
எஸ்.ராமகிருஷ்ணன்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago