கதை

ஞாபகக் கல்

8 நிமிட வாசிப்பு

சிறிய அலுமினிய டப்பா ஒன்றினுள் ஒரு கல்லையும் மூன்று சொற்கள் கொண்ட ஒரு துண்டு சீட்டினையும் அம்மா விட்டுச் சென்றிருந்தாள்.

இந்தப் பெட்டி அவளது பட்டுப்புடவைகளுக்குள் மறைத்து வைக்கபட்டிருந்தது. அம்மா இறந்தபிறகு அவளது பொருட்களை அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி அதன் சாவியை அப்பா வைத்திருந்தார். அதை நாங்கள் திறக்கவேயில்லை

கோடை விடுறைக்கு அமெரிக்காவிலிருந்து லீலா தனது பிள்ளைகளுடன் வந்திருந்த நாளில் அவள்தான் அப்பாவிடம் கேட்டு பீரோ சாவியை வாங்கினாள்.

ஒருவேளை அம்மாவின் புடவைகளை எடுத்துக்கொள்வதற்காகக் கேட்டிருக்கக் கூடும். எலுமிச்சை நிறப் பட்டுப்புடவை ஒன்றினுள் வைக்கபட்டிருந்த இந்தப் பெட்டியை அவள்தான் கண்டறிந்தாள். பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு வியப்புடன் என்னிடம் சொன்னாள்

“ரகு.. அம்மா எதையோ எழுதி வச்சிருக்கா பாரேன்”

நான் அந்த அலுமினிய டப்பாவைக் கையில் வாங்கித் திறந்தேன். உள்ளங்கையில் வைத்துக் கொள்வது போன்ற ஒரு கருங்கல். அத்தோடு ஒரு துண்டு சீட்டு.

அந்தத் துண்டு சீட்டில் நான் ஒரு விஞ்ஞானி என்று எழுதப்பட்டிருந்தது.

பெட்டியின் மேலே மிதக்கும் கல் என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதியிருந்தாள்.

நான் அந்தக் கல்லை எடுத்து மேல்நோக்கி எறிந்தேன். அது காகிதக் கொக்கு காற்றில் பறப்பது போல மிதந்து கொண்டிருந்தது.

“லீலா இதைப் பாரேன்” என்று உரத்துச் சப்தமிட்டேன்

லீலாவால் நம்பமுடியவில்லை.

உயரமான கிளையிலுள்ள மலரைத் தாவிப் பறிப்பது போல அந்தக் கல்லைத் தனது கைவசமாக்கிய லீலா சொன்னாள்

“மிரகிள். எப்படி இந்தக் கல் காற்றில் மிதக்குது.”

“அம்மாவைத்தான் கேட்கணும்” என்றபடி “பீரோவுள்ளே வேற ஏதாவது டயரி இருக்கா பாரு” என்றேன்.

அம்மாவின் பீரோவிற்குள்ளிருந்து லீலா ஒரு கணக்கு நோட்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். இது லீலா ஏழாம் வகுப்பு படிக்கும்போது பயன்படுத்திய பழைய நோட்டு. பின்பக்கமிருந்த வெள்ளை பேப்பர்களில் அம்மா எதையோ கிறுக்கி வைத்திருக்கிறாள்.

வேகவேகமாக அதைப் புரட்டிய லீலா சொன்னாள்.

“எனக்கு ஒண்ணுமே புரியலை. நீயே படிச்சி பாரு.”

சிறுநீரகச் செயலிழப்புக் காரணமாக அம்மா தனது நாற்பத்திரெண்டாம் வயதில் இறந்து போனபோது நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். லீலா பத்தாம் வகுப்பில் இருந்தாள். அம்மா நீண்டகாலம் மருத்துவமனையிலே இருந்தாள். நிறைய முறை நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று அவளைப் பார்த்திருக்கிறோம். இரண்டு முறை நலமடைந்து வீடு திரும்பியிருக்கிறாள். அப்போதும் வெளிறிப்போன அவளது முகத்தில் வேதனை உறைந்து போயிருந்தது. திடீரென ஒரு நாள் இரவு அம்மா மயங்கி விழுந்தாள். மருத்துவமனையில் சேர்த்தபோது நினைவை இழந்திருந்தாள். பின்பு அவள் நினைவு கொள்ளவேயில்லை. எல்லோரையும் மறந்த நிலையிலே இறந்துபோய்விடுவது எவ்வளவு துயரமானது.

•••

“நான் ஒரு விஞ்ஞானி” என்ற அம்மாவின் மூன்று சொற்கள் என்னைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்தன.

அம்மாவின் இந்த அடையாளத்தைப் பற்றி அவள் உயிரோடு இருந்தவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

சில நாட்கள் அம்மா என் அக்கா லீலாவின் ரிக்கார்ட் நோட்டுகளுக்குப் படம் வரைந்து கொடுத்திருக்கிறாள். சில கணித சூத்திரங்களை விளக்கிச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள் என்பதைத் தாண்டி அவளது அறிவியல் ஆர்வம் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் அப்பா. அவருக்கு அம்மா எப்போதும் சமையல்கட்டிலே இருக்க வேண்டும். சில வேளைகளில் அவள் தோட்டத்துச் செடிகளின் இலைகளைச் சீராக்கிக் கொண்டிருக்கும்போது ”வெளியே என்ன செய்றே” என்று அப்பா கோபமாகக் கத்துவதைக் கேட்டிருக்கிறேன். அப்பா வீட்டில் இருக்கும்வரை அம்மா சமையலறையில் தானிருந்தாள். அதைப் பற்றி எதுவும் குறை சொன்னதாக நினைவில்லை. வீட்டிலிருக்கும் நேரத்தில் அப்பா நாலைந்து முறை தேநீர் அருந்துவது வழக்கம். அதற்காகக் கெட்டிலில் எப்போதும் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.

அப்பா ராபின்சன் எஸ்டேட்டில் மேலாளராக வேலை செய்து வந்தார். எஸ்டேட் குடியிருப்புகளில் ஒன்றில் நாங்கள் குடியிருந்தோம். அது மூன்று அறைகள் கொண்ட வீடு. வீட்டின் பின்புறம் நிறைய இடமிருந்தது. அதில் அம்மா தோட்டம் அமைத்திருந்தாள். நாங்கள் பள்ளிக்கும் அப்பா எஸ்டேட் அலுவலகத்திற்கும் சென்றபிறகு அம்மா வீட்டில் என்ன செய்தாள் என்று எங்களுக்குத் தெரியாது

அம்மாவிற்குத் தோழிகள் எவருமில்லை. பக்கத்துக் குடியிருப்பிலிருந்த மேரி என்ற மலையாளப் பெண்ணுடன் மார்க்கெட் போய் வருவாள். வீட்டிலிருக்கும்போது ரேடியோ கேட்கும் பழக்கம்கூட அம்மாவிடம் கிடையாது. அவளது பகல்பொழுதைப் பற்றி இப்போது நானாகக் கற்பனை செய்து கொள்கிறேன்.

எஸ்டேட்டிற்குள் விநோதமான ஒசையொன்று எப்போதும் இருந்து கொண்டிருக்கும். காற்றால் உருவான இலைகளின் ஒசை திடீரென அதிகமாகவும் திடீரென உறைந்து போவதுமாக இருக்கும். தூரத்தில் ஒலிக்கும் பறவைகளின் குரல். ஜீப் செல்லும் சப்தம். ஜன்னல் வழியே தெரியும் கடந்து செல்லும் மேகங்கள். சோம்பலுற்ற நாய்களின் நடமாட்டம். அணைக்காமல் விட்டுப் போன தாமோதரன் மாஸ்டர் வீட்டின் முகப்பு விளக்கு. ஜீப்பின் அவசர வேகத்தால். பாதி நசுங்கி வளராமல் போன செடிகள். யாரோ வீசி எறிந்துபோன காலி மதுப்போத்தல்கள். ஆரஞ்சு வண்ண ஸ்வைட்டர் அணிந்து சைக்கிளில் வரும் தபால்காரன், பீடி புகைத்தபடியே நடந்து செல்லும் இரவுக்காவலாளி. வீட்டுவாசலில் உள்ள கல்லில் ஒங்கியோங்கித் துணியை அடித்துத் துவைக்கும் லிசியின் கலைந்த கூந்தல். வெயிலைக் கொத்தி அலையும் கோழிகள் என எஸ்டேட்டின் பகல் விநோதமானது.

மலர்களைத் தனக்கு விருப்பமான முறையில் கோர்த்துக் கொள்வதைப் போல அம்மா தனக்காகப் பகலைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். லீலாவின் பழைய கணக்கு நோட்டு ஒன்றில் அம்மா குறிப்புகள் போல எழுதியிருக்கிறாள். அந்தக் குறிப்புகளில் அவளது பரிசோதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. எப்படி அவளுக்கு அறிவியலில் ஆர்வம் வந்தது என்றோ, எந்தக் கல்லூரியில் அம்மா படித்தாள் என்றோ தெரியவில்லை. அம்மா இருந்தவரை அதைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்கும் போதும்கூட அவர் தெளிவற்ற பதிலைத்தான் சொல்லயிருக்கிறார். ஒருவேளை அவருக்கும் தெரியாமலிருக்கக் கூடும். அல்லது அம்மா அதை மறைத்துச் சொல்லியிருக்கலாம்.

புதிர்கட்டங்களை ஒன்று சேர்ப்பது போலக் கணக்கு நோட்டிலிருந்த குறிப்புகளைக் கத்தரித்துத் தனியே ஒட்டி அம்மா என்னதான் செய்து கொண்டிருந்தாள் என்பதைக் கண்டறிய முயற்சித்தேன்.

இவை அம்மாவின் குறிப்புகள்

•••

நவம்பர் 7 திங்கள் கிழமை

ஒரு கல்லை மிதக்க வைப்பது எளிதானதில்லை. இன்று அதற்கான பரிசோதனைகளைச் செய்து பார்த்தேன். கல் பிடிவாதமானது. அதை எளிதில் கையாள முடியாது. சில வேளைகளில் நான்தான் கல்லாகவும் இருக்கிறேன் என்பது போலவே உணருகிறேன்.

இன்னொரு குறிப்பு இப்படித் துவங்குகிறது

அக்டோபர் 12 புதன் கிழமை

நீண்டகாலமாகத் தொடரும் மௌனம்தான் கல்லாகிவிடுகிறது. கல்லை விழிப்படையச் செய்வதற்காகத் தினமும் அதனுடன் பேசுகிறேன். கல் எடையற்றது என அதை நம்பச் செய்ய வேண்டும். நான் ஒரு அப்பாவி என்று நம்பவில்லையா. அது போல.

இன்றைக்குச் சேவியர் வாங்கிக் கொடுத்த கெமிக்கல்களைக் கலந்தபோது ஒரு துளி வலதுகை பெருவிரல் நகத்தில் பட்டுச் சிவப்பாகிவிட்டது. நிச்சயம் அவர் அதைக் கவனிக்கக் கூடும். சிவப்பு வண்ணமுள்ள நகம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவரது கோபத்திற்குப் பயந்து எல்லா விரல்களுக்கும் மருதாணி வைத்துக் கொள்ளப்போகிறேன்.

நவம்பர் 5 சனிக்கிழமை

இன்றைக்குக் கல் மேஜையிலிருந்து பறப்பது போல அரையடி உயரம் மேலே சென்றது. சந்தோஷமாக உணருகிறேன். லீலா நடக்கத் துவங்கிய முதல்நாள் இப்படித்தான் உணர்ந்தேன். இந்தக் கல்லும் எனது மகள்தான்.

சோர்வாக இருக்கிறது. இதை ஏன் செய்கிறேன் என்று ஆத்திரமாகவும் இருக்கிறது. என்னை நான் வெறுக்கிறேன்.

நவம்பர் 6 ஞாயிற்றுகிழமை

இன்று காலையிலிருந்து எதற்காகவோ ஏரிக்குப் போய் வர வேண்டும் என்று தோன்றியபடியே இருந்தது. நோயாளி சிறுவனைப் போல ஏரி மிகத் தாமதமாகவே விழித்துக்கொள்கிறது. நான் ஏரியின் கரையில் நின்றபடியே மீன்கொத்தி ஒன்றைப் பார்த்தேன். அது எனக்கு வணக்கம் வைப்பது போலப் பறந்து போனது. ஏரியின் கரையில் கிடந்த கல் ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்தேன். இதற்காகத்தான் ஏரிக்கு வந்தேனோ என்னவோ.

நான் ஒரு கனவு கண்டேன். அதைச் சொல்வதற்கு முடியவில்லை. ஆனால் அதை மறக்க விரும்புகிறேன். விரும்பாத கனவுகள் ஏன் பின்தொடர்கின்றன

ஜனவரி 1 இரவு 10.30

கல்லிற்கு ஞாபகம் கிடையாது. ஒவ்வொரு கல்லும் ஒரு மலரே.

இன்றைக்குக் கல் மிதக்கத் துவங்கியது. லீலாவைக் கருக் கொண்ட நாளில் இது போன்ற சந்தோஷத்தைத்தான் உணர்ந்தேன்.

சமையலறைக்குள் கல்லை மிதக்கவிட்டேன். அது சிறகில்லாத பறவையைப் போல அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

ஜனவரி 3 திங்கள்கிழமை

இன்றைக்குத் தோட்டத்தில்லிருந்தபடி கல்லை வானை நோக்கி எறிந்தேன்.அது. தரைக்கு வர விருப்பமில்லாமல் வானில் சுழன்று கொண்டிருந்தது. வியப்புடன் அதை ஒரு வண்ணத்துப்பூச்சி கடந்து போனதைக் கண்டேன். கல்லிற்கு நான் விடுதலையை வழங்கியிருக்கிறேன்.

மார்ச் 11 வெள்ளிகிழமை

என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் . அவ்வளவுதான்

நான் ஒரு சிலந்தி. என்னைச் சுற்றி நானே வலை பின்னிக்கொள்கிறேன்.

எல்லாக் கற்களையும் மிதக்க வைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டேன். வயதான மனிதர்களைப் போலக் கற்களும் இளமையைத் தொலைத்துவிடுகின்றன.

ஏப்ரல் 2 சனிக்கிழமை

பரிசோதனை வெற்றி. ஒரே நேரத்தில் ஆறேழு கற்கள் என்னைச் சுற்றி மிதந்து கொண்டிருந்தன. விஞ்ஞானம் எவ்வளவு ஆச்சரியமானது.

ஏப்ரல் 8 வியாழக்கிழமை

கிடந்துபோன கிணற்றின் சுவரில் ஒரு செடி முளைத்து வளர்ந்திருப்பதைக் கண்டேன். அது நான்தான் என உணர்ந்தேன்.

நான் ஒரு விஞ்ஞானி. எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டேன்.

•••

அம்மா எதற்காகத் தனது பரிசோதனைகளை நிறுத்திக்கொண்டாள் என்று தெரியவில்லை. ஏன் அவற்றைச் செய்து பார்த்தாள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அம்மா பகல்வேளையில் வேறு எங்காவது போயிருக்கக் கூடுமோ என்று தெரியவில்லை

•••

அப்பா சொன்னார்,

“எஸ்டேட் நூலகத்தில் வைத்து அவளை நாலைந்து முறை மனோஜ் பார்த்திருக்கிறான். ஒருமுறை அவள் வின்சென்ட் பாதிரியோடு பேசிக்கொண்டு நடந்து போவதை நானே கண்டிருக்கிறேன். சில விஷயங்களைக் கேட்காமல் விட்டுவிடுவது நல்லது என்பதே எனது அனுபவம். அவள் எதையோ ரகசியமாகச் செய்து கொண்டிருந்தாள் என்பது மட்டும் நிஜம்”

“அம்மா ஒரு கல்லை மிதக்க வைத்திருக்கிறாள்” என்றேன்.

“வீண்வேலை” என்றார் அப்பா.

“அவள் எதையோ பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கிறாள்.”

“இப்படிக் கிறுக்குத்தனமாக எதையாவது செய்வாள் என்று எனக்குத் தெரியும். கல்யாணத்திற்கு முன்பு அவள் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்திருக்கிறாள்.”

“எந்த ஸ்டுடியோ?”

அப்பா பதில் சொல்லவில்லை.

ஆனால் மூன்று நாட்களின் பின்பு நான் வின்சென்ட் பாதிரியைப் பார்த்தபோது அவர் சொன்னார்.

“உனது அம்மா பத்மலட்சுமி பெரிய அறிவாளி. அவளை அமெரிக்கா அனுப்பிப் படிக்க வைத்திருந்தால் பெரிய சயின்ஸ்டிஸ்ட் ஆகியிருப்பாள். விஞ்ஞானத்தில் அவ்வளவு ஆர்வம்.”

“உங்களுடன் அம்மா என்ன பேசுவாள்?”

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் உன் அம்மாவிற்குச் சொல்வதற்கு விஷயங்கள் இருந்தன. நிறைய ஆச்சரியங்கள். நிறைய குழப்பங்கள். அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டோம்.”

“அம்மா விஞ்ஞானப் பரிசோதனைகள் செய்திருக்கிறாளா?”

“எங்கள் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலைக்குள்தான் அவள் எதையோ பரிசோதனை செய்து கொண்டிருந்தாள். அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொன்னதில்லை.”

“தினமும் அங்கே வருவாரா?”

“நினைத்தபோது வருவாள். அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இங்கே வரும்போது அவள் சந்தோஷமாக இருந்தாள்.”

“அந்த அறையை நான் பார்க்க முடியுமா?”

“கேம்ப் ஆபீஸ் பின்பக்கம் இருக்கிறது. நீயே போய்ப் பார்க்கலாம்”

•••

அம்மா தனது பரிசோதனைகளைச் செய்து பார்த்த அறை மிகச்சிறியதாக இருந்தது. அறையின் ஒரு முக்காலியும் மரமேஜையும் இருந்தது. நீல நிற அங்கி ஒன்று ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது. சுவரில் ஒரு இயேசுவின் படம். பாதி எரிந்த மெழுகுவர்த்தி ஒரு பக்கக் கதவு உடைந்த மர அலமாரி. அதற்குள் நிறைய கெமிக்கல்கள். சிறிய தராசு. கண்ணாடிக் குடுவைகள். உபகரணங்கள். மூத்திரவாடை போன்ற மணம்.

அந்த அறைக்குள் அம்மா நிற்பதைக் கற்பனை செய்துகொண்டேன். அது நான் அறிந்த அம்மாயில்லை. அவள் ஒரு சயின்ஸ்டிட். அவளை எனக்குத் தெரியாது

•••

சில நாட்களுக்குப் பிறகு நான் அம்மா வேலை செய்த ஸ்டுடியோ மேகவட்டம் என்ற ஊரில் இருப்பதைப் பற்றிஅறிந்து கொண்டேன். செல்வம் மாமாவிற்கு அதைப் பற்றித் தெரிந்திருந்தது.

மேகவட்டம் சிறியதொரு மலைக்கிராமம். அங்கே ரவுண்டாவை ஒட்டியிருந்த சலூன் கடை மாடியில் அந்த ஸ்டுடியோ இருந்தது. இப்போது அந்த ஸ்டுடியோவை யாரோ நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு அம்மாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

ஆனால் தாஸப்பன் நடத்தியபோது அவள் வேலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்றார்கள். தாஸப்பனின் வீட்டை தேடி அலைந்து சென்றபோது அவரது மகன் சொன்னார்

“எங்க அப்பா 1983ல் ஸ்டுடியோ ஆரம்பிச்சார். அப்போ எனக்கு ஆறு வயது. அப்போ உங்க அம்மாவை பார்த்து இருக்கேன். பத்மலட்சுமி தானே பேரு.. நான் லட்சுமியக்கானு கூப்பிடுவேன். நல்லா போட்டோ எடுப்பாங்க. ஸ்கூல் பசங்களைப் போட்டோ எடுக்க அவங்க கூடச் சைக்கிள்ல போயிருக்கேன். என்னைக் கூட நிறையப் போட்டோ எடுத்துருக்காங்க.”

அம்மா ஒரு போட்டோகிராபரா என வியப்புடன் யோசித்தேன். தாஸப்பனின் மகன் பழைய போட்டோ ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து காட்டினான். இரண்டு சிறுவர்கள் சைக்கிள் ஒன்றை வைத்தபடியே நின்றிருந்தார்கள்.

“இது நானும் நாராயணனும். அவன் இப்போ நார்வேல இருக்கான், அப்போ நான் எவ்வளவு அழகா இருந்திருக்கிறேன்” என ஏக்கத்துடன் சொன்னான்.

மிகவும் அழகாக எடுக்கப்பட்ட புகைப்படம். சைக்கிளின் நிழல் அத்தனை அழகாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்க்க பார்க்க அம்மாவின் திறமை வியப்பூட்டியது.

அவள் எங்களுடன் இருந்த நாட்கள் அவளது ஒரு பக்கம்தான் போலும். தனது சிறகை உதிர்த்துவிட்டுச் செல்லும் பறவையைப் போல அவள் கடந்தகாலத்தை உதறி முன்னோக்கிப் போயிருந்திருக்கிறாள்.

நாங்கள் அறிந்த அம்மாவிற்கும் நாங்கள் அறியாத பத்மலட்சுமிக்கும் இடையில்தான் எவ்வளவு இடைவெளி.

காலம் ஏன் பத்மலட்சுமியை வெறும் அம்மாவாக மட்டும் மாற்றியது.

•••

அப்பாவை விடவும் அம்மாவோடு நான் நெருக்கமாகயிருந்தேன். அப்பாவிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால்கூட அம்மாவிடம்தான் சொல்வேன். அம்மாவும் லீலாவும் அவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள். லீலாவைப் பார்த்தால் அம்மாவின் முகச்சாயல் அப்படியே இருக்கும். அம்மாவின் நடமாடும் நிழல்தான் லீலா.

அம்மாவோடு அவ்வளவு நெருக்கமாக இருந்தும் அவளது கனவுகளை நான் அறிந்திருக்கவேயில்லை. அவளது வேர்கள் ரகசியமாக இயங்கிக் கொண்டேயிருந்திருக்கின்றன.

அம்மாவின் மிதக்கும் கல்லை அலுமினியப் பெட்டியில் வைத்து என்னுடனே வைத்துக்கொண்டேன்.

அந்தக் கல்லை என்ன செய்வது? பொருட்களின் மீது நினைவு படிந்துவிடும் போது அதன் மதிப்பு மாறிவிடுகிறது. அம்மாவின் இந்தக் கல் பேரதியசமாக எனக்குத் தோன்றியது.

தனது ரகசியங்களை இந்தக் கல்லில் மறைத்துவிட்டுப் போயிருக்கிறாள் அம்மா. நாம் ஒவ்வொருவரும் நமக்கென ஒரு ரகசிய உலகைக் கொண்டிருக்கிறோம். அதற்குள் சஞ்சரிக்கிறோம். அந்த உலகை இன்னொருவர் புரிந்துகொள்ள முடியாது.

பறக்கும் கல்லை விடவும் அம்மாதான் விநோதமாக இருந்தாள். உலகின் ரகசியங்களை அறிந்துகொள்ளும் நாம் உடனிருப்பவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்வதில்லை.

சில நாட்கள் இரவில் அந்தக் கல்லை வெளியே எடுத்து மிதக்கவிட்டுப் பார்ப்பேன். அந்தக் கல் மிதக்கும்போது நானும் மிதப்பது போலவே இருக்கும். இதைத் தான் அம்மாவும் உணர்ந்திருப்பாளோ.

வீட்டின் கூரையைப் போல எங்களைப் பாதுகாப்பாகத் தாங்கிக் கொண்டிருந்த அம்மா தனக்குள் விரிந்த ஆகாசம் போல மர்மமாகவும் விசித்திரங்களை ஒளித்துக் கொண்டதுமாக வாழ்ந்திருக்கிறாள்.

அந்தக் கல் எனது சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையைக் கேலி செய்கிறது. மிகவும் குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறது. அதனாலே அதைப் பெட்டியில் பூட்டி வைத்துக்கொள்கிறேன்.

மறந்துவிட்டவன் போலப் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன்

அம்மாவின் கல்லிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் என்று விரும்பினேன். அந்தப் பெயரை உலகம் அறியாமல் எனக்குள்ளாக வைத்துக் கொள்ளவேண்டும என்று ஏனோ தோன்றியது.


ஓவியம்: நிஷாந்தினி

இதழ் 15 பிற படைப்புகள்

எஸ்.ராமகிருஷ்ணன்

https://www.sramakrishnan.com/

View Comments

  • அருமையான கதை. இயல்பான நடை. வாழ்க்கை முழுதும் தேடலோடு பயணிக்கும் நாம் நம்மோடு பயணிப்பவர்களைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொள்கிறோம் என்று யோசிக்க வைக்கும் கதை.
    அவளுக்கென்று இருக்கும் மனதை அறிய யாருமே முற்படவில்லை. அவளிற்குப் பிறகு அம்மாவிற்குள் இருந்த விஞ்ஞானியையும், சுட்டித் தனத்தையும் அறிந்து கொள்ளும் தருணம் நெகிழ்வான தருணம். வாழ்த்துகள்.

Share
Published by
எஸ்.ராமகிருஷ்ணன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago