தன்ராஜ் மணி - அரூ சிறுகதை

கேளிர்

14 நிமிட வாசிப்பு

கோலி குண்டு அளவில் தெரிய ஆரம்பித்த நீலக்கோளம் ஓரிரு மணி நேரத்தில் கூடைப்பந்தை விட இரு மடங்கு பெரிதாகத் தெரிய ஆரம்பித்தது. காட்சிக் கூண்டுக்குள் இருந்து இரண்டு மணி நேரத்தில் ஒருவர் கூட நகரவில்லை. அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி புன்னகையாக வழிந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பந்திற்குள் உள்ள பச்சை தெரிய ஆரம்பிக்க, பெரும் மகிழ் ஓலம் எழுப்பி ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டோம்.

“ஓராண்டு பயணத்தின் இறுதி சில மணி நேரங்கள்” என்றார் கடம்பன் கோளத்திலிருந்து கண் எடுக்காமல்.

விண்கலத்தில்தான் கடம்பன் பழக்கமானார். இந்த முந்நூற்றி ஐந்து வருட வாழ்க்கையில் நண்பன் எனச் சொல்லக்கூடிய சிலரில் ஒருவர் ஆகிவிட்டார். ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

இரு நூறு வருடங்கள் ஆயிற்று நேரடியாகப் பூமியைப் பார்த்து. பூமியில் வசித்ததைவிட வேறு கோளங்களிலும் பெருங்கற்களிலும் நான் மாறி மாறி வசித்த நாட்கள் அதிகம். பூமி மட்டுமே என் நிலம் என்னும் உணர்வை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் கொடுக்கிறது.

என் உடலுக்குத் தகுந்த இயற்கையான ஈர்ப்பு விசை. பல நாட்கள் பயிற்சிகள் செய்யாவிட்டாலும் உடலுக்குத் தொல்லைகள் இல்லை. மனிதன் தோன்றிய மண். என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சீர் மொழியில் அறிவிப்பு ஒலித்தது.

“தயவுசெய்து வெளியேற்றத்திற்குத் தயாராகுங்கள். வெளியேறியவுடன் சுவாசத்தில் கவனம் கொள்ளுங்கள்”

மீண்டும் மீண்டும் இந்த வரிகள் விண்கலம் முழுக்க ஒலித்தது. அனைவரும் அவரவர் விண் குப்பிக்குள் சென்று பூட்டிக் கொள்ளாதவரை நிற்காது.

“மறு நுழைவு மையத்தில் சந்திப்போம்” என்று கடம்பனிடம் சொல்லிவிட்டு என் விண் குப்பியை நோக்கி நடந்தேன். கோழி முட்டை வடிவில் இருந்த குப்பிக்குள் சென்று இருக்கையில் அமர்ந்தேன். இருக்கை வாரை இழுத்து என்னை இருக்கையுடன் பிணைத்துக்கொண்டேன். மிதமான சுவாச வாயு ஒழுகிக் குப்பியை நிறைத்தது. அருகில் இருந்த ஆபத்துதவி சுவாசப்பை சரியாக வேலை செய்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துக்கொண்டேன். நான் பார்த்து முடித்தவுடன் குப்பி தானாகப் பூட்டிக்கொண்டது.

சற்று நேரத்தில் அறிவிப்பு நின்றது.

ஒரு முறை குறைவாகச் சுவாசித்து பார்த்துக்கொண்டேன். மிகக் குறைவான பிராண வாயுவிற்குப் பழகிவிட்ட உடலுக்குள் பூமியின் மிதமிஞ்சிய பிராண வாயு நுழைந்தால் நஞ்சாகி உடல் அணுக்களைச் சிதைத்துச் சாவைக் கொண்டு வரும். மூன்று நிமிட அசிரத்தையால் முந்நூறு வருட வாழ்வை முடித்துக்கொள்ள எனக்கு மனமில்லை.

என் குப்பி நகர்ந்து வட்ட வடிவக் கோள் நுழைவு ஊர்தியில் இணைந்து கொண்டது. என்னுடன் அவ்வூர்தியில் மேலும் ஒன்பது குப்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. பத்து குப்பிகளும் வட்டத்தின் ஓரத்தில் இணைக்கபட்டிருக்க ஊர்தியின் இயங்கு தளம் நடுவில் விண்கலத்திலிருந்து வெளியேற இருக்கும் வினாடிகளை நீல நிறத்தில் காட்டியது.

வினாடி பூஜ்யத்தைக் காட்டியதும் விண்கலக் கதவு திறந்து நுழைவூர்தி வெளியேறியது. வெளியேறியவுடன் வேகத்தை மட்டுப்படுத்தி பூமியின் வளி மண்டலத்துள் நுழைந்தது. வெப்ப மண்டலத்தைத் தாண்டி சிறு வட்டமடித்து இறங்குதளப் பாதையில் தன்னை செலுத்திக் கொண்டது.

சற்று நேரத்தில் இறங்குதள நீர்பரப்பு தெரிய ஆரம்பித்தது. நுழைவூர்தி முழுக்க வேகத்தைக் குறைத்து மிதந்து நீர் நோக்கி இறங்கியது. ஓரிரு நிமிடங்களில் நீரில் மெல்ல அமிழ்ந்து இறங்கியது. சில நிமிடங்கள் மிதந்த பின் ஊர்தி கரை நோக்கி எங்கள் குப்பிகளைச் செலுத்தியது. கரையில் தீர்க்கமாகப் பிணைக்கப்பட்டு நீருக்குள் நீட்டிக் கொண்டிருந்த கரை சேர்ப்பானில் நுழைவூர்தி தன்னை இணைத்துக்கொண்டது. கரை சேர்ப்பான் எங்கள் ஊர்தியை நீருக்குள் இருந்து தூக்கி எடுத்து மெதுவாக நகர்த்தி, கரையில் இருந்த மேடையில் வைத்து தன் இணைப்பைத் துண்டித்துக்கொண்டது.

மேடை நகர்ந்து பிராண வாயு கட்டுப்படுத்தபட்ட அறைக்குள் சென்றது. எங்கள் ஊர்தி உள்ளே சென்றதும் அவ்வறையின் கதவுகள் காற்று புகா வண்ணம் அடைத்துக்கொண்டது. வெளியே பிராண வாயுவின் அளவு குறைக்கப்பட்ட பின் ஊர்தி எங்கள் குப்பிகளைப் பூட்டவிழ்த்தது. என்னுடைய குப்பி நகர்ந்து இடப்புறமாக இருந்த சிறிய அறைக்குள் சென்றது. அறைக்கதவு மூடியவுடன் “உங்கள் நலம் அறிவியுங்கள்” என்றது குரல் சீர் மொழியில்.

நான் நலமாக இருக்கிறேன் என்பதைக் காட்டும் பொத்தானை அழுத்தினேன்.

“சுவாசத்தில் கவனத்தோடு வெளியேறுங்கள்” என்றது குரல்

எனது குப்பியின் திறப்புப் பொத்தானை அழுத்தினேன். அது வெளியே இருக்கும் சுவாச வாயுவை அளந்துவிட்டு “சரியான அளவு” என திரையில் காட்டிவிட்டுக் கதவைத் திறந்தது. வெளியே இருந்தது குறைவான அளவில் இயற்கை பிராண வாயு. இத்தனை வருடங்களாகச் செயற்கை வாயுவிற்குப் பழகிய உடல். நான் சுவாசத்தை மிகவும் குறைத்துக்கொண்டேன்.

“நல்வரவு, ஓய்வெடுங்கள், பதினெட்டு மணி நேரம் கழித்து நீங்கள் வெளியேறலாம்” என்றது குரல்.

அறையை நோட்டம் விட்டேன். ஒரு படுக்கையும் அருகில் உணவு அடுக்கப்பட்ட உணவு மேஜையும் அதற்கருகிலேயே கழிவறையும் இருந்தன. எந்தக் கோளுக்குச் சென்றாலும் இருக்கும் அதே பாணி நுழைவறை. உணவு மேஜையைப் பார்க்காமலே எனக்குத் தெரியும் அதில் என்ன உணவிருக்கும் என்று. எட்டு மணி நேரமாவது தூங்காவிட்டால் அறையை விட்டு வெளியேற முடியாது.

உடைகளைக் களைந்துவிட்டுப் படுக்கையில் விழுந்தேன். இன்னும் பதினைந்து நாட்கள் மறு நுழைவு மையத்தில் கழிக்க வேண்டும். அதன் பிறகு, அதன் பிறகு…

மறு நுழைவு மையத்தில் கடம்பனை நான்கு நாட்கள் ஆகியும் பார்க்க முடியவில்லை.

கேட்டதற்குச் சிறிய ஒவ்வாமை சிகிச்சையில் இருக்கிறார் என்றனர்.

கோள நுழைவுகளில் இது சகஜம். கரும்பனை விண்கல் நுழைவில் ஆறு நாட்கள் வயிற்றுப் போக்குக்குப் பிறகுதான் நான் தேறி எழுந்தேன். காலை உணவிற்குப் பின் அறைக்கு செவிலி வந்தார். என் கையில் செலுத்தியிருந்த உடல் கூறு கண்காணிப்பு சில்லில் அவர் கையில் இருந்த சிறு குமிழ்தடியால் தடவிவிட்டுத் தடியை நிமிர்த்திப் பிடித்தார். அதிலிருந்து வெளியேறிய ஒளிக்கீற்றுகள் பரவி, திரை போல் ஆகி என் உடல் நிலை அறிக்கையைக் காட்டியது.

“நன்று” என்றார் சீர் மொழியில் சிறு புன்னைகையுடன்.

சீர் மொழியில் சொற்கள் அதிகம் இல்லை. கோள்களுக்கிடையே முக்கிய தகவல் பரிமாற்றத்திற்காக மிகக் குறைவான சொற்களுடன் உருவாக்கப்பட்ட மொழி. இப்போழுது எங்கும் சீர் மொழி மட்டுமே. பிற மொழிகள் காதில் விழுந்தே ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். பூமியிலாவது பேசுவார்கள் என நினைத்தேன்.

“இது தமிழ் நிலம் அல்லவா. மொழி தெரியுமா” என்றேன் சீர் மொழியில்.

“படித்ததுண்டு, யாரும் பேசுவதில்லை. சுவாச விரயம்” என்றார் புன்னகையுடன்.

அன்றைக்கான வில்லைகளை என் மருந்து பெட்டியில் நிரப்பிவிட்டு

“இரு நூறு வருடங்களுக்குப் பிறகு பூமி தொட்டிருக்கிறீர்கள். இங்கேயே இருக்கப் போகிறீர்களா” என்றார்.

“நிறைய சுவாச விரயம் செய்துவிட்டீர்கள்” என்றேன்.

கைகளால் வாயைப் பொத்தி செவிலி சிரித்தார்.

“உங்கள் பெயர்” என்றேன்.

“கொடி” என்றார்.

“கொடி, நல்ல பெயர்” என்றுவிட்டு என் காலை வேளை வில்லைகளை விழுங்கினேன்.

இந்த வில்லைகள் என் உடலைப் பூமிக்கு தயாராக்கும்.

“நான் குருதிவழி குடிபெயரி, தங்க இயலாது, ஐந்து வருடங்கள் அதிக பட்சம்” என்றேன்.

கொடியின் விழிகள் விரிந்தன.

“நீங்கள் அப்போது பெரும் பணக்காரர். எங்கள் குருதி வழியில் யாரும் குடி பெயர்ந்ததில்லை. அவ்வளவு பொருள் இல்லை, இருந்தால் என் பாட்டனார் துள்ளி குடி பெயர்வு களத்தில் குதித்திருப்பார். அவருக்கு இறக்க விருப்பமே இல்லை” என்றார்.

முந்நூறு வருடங்களுக்கு முன் பூமியில் சராசரி மனித வாழ் நாள் 200 வருடங்களுக்கும் மேல் அதிகரித்தது. மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இரண்டு தலைமுறைகளுக்கு மேல் ஒரு குருதி வழியில் இருக்கக் கூடாது எனச் சட்டம் இயற்றப்பட்டது. பேரன் குழந்தை பெற வேண்டுமென்றால் பாட்டன் இறக்க வேண்டும் அல்லது பூமியை விட்டு நிரந்தரமாகக் குடிபெயர வேண்டும். சட்டம் இயற்றப்பட்ட முதல் சில வருடங்களில் பூமியை விட்டு வெளியேறியவர்களில் நானும் ஒருவன்.

“நான் சாக விருப்பமில்லாமல் குடி பெயரவில்லை கொடி” என்றேன்.

பிறகு எதற்கு என்பது போல் கொடி என்னைப் பார்த்தார்.

“என் குருதி வழி வந்தவர்களைப் பல தலைமுறைகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துப் பார்க்க விருப்பப்பட்டேன்” என்றேன்.

நாற்காலியை இழுத்து என்னருகில் போட்டுக்கொண்டு அமர்ந்தார். நான் அவருக்கு இன்றைக்கான கடைசிப் பணியாக இருக்க வேண்டும்.

“பார்த்து” என்றார்.

“உயிர்கள் இனத்தைப் பெருக்குவதே தன்னைப் போன்ற ஒன்றை நகலெடுத்து தனக்கு மாற்றாக விட்டுச்செல்லத்தானே. கிட்டத்தட்ட ஏழு தலைமுறைக் காலம் கழித்து வந்திருக்கிறேன். இத்தனை தலைமுறை கழித்து நான் எவ்வாறு இங்கு எஞ்சி இருக்கிறேன் என்று பார்க்க வேண்டும்,” என்றேன்.

“அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?” என்றார்.

நான் புன்னகைத்தேன்.

“பிள்ளை பெற்றால் கண்டெல்லாம் பிடிக்க வேண்டாம், தானாகத் தெரியும். நீங்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவில்லையா?” என்றேன்.

“சொன்னேனே என் பாட்டனாருக்கு இறக்க விருப்பம் இல்லை. நல்ல நலத்தோடு இருக்கிறார். என் கரு முட்டையை எடுத்து சேமித்துவிட்டேன். எப்போதாவது போதும் என அவர் முடிவு செய்தால் அது தேவைப்படலாம். அவருக்கு முன் எனக்குப் போதும் என்று தோன்றிவிடும் போலிருக்கிறது. நல்ல வேளை உங்களைப் போல எனக்கு நகல்களையும் பிம்பங்களையும் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் எல்லாம் இல்லை” என்றார் வெடிச் சிரிப்புடன்.

சிறிது நேரம் பூமியின் தற்கால நடைமுறைகள் பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினார்.

அதன் பிறகு அங்கிருந்த நாட்கள் முழுதும் கொடியின் மூலம் அரசு அலுவல் நடைமுறைகள், விரைவாகக் காரியங்களை முடிப்பது எனச் செய்திகளில் அறிந்துகொள்ள முடியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். கடம்பனுக்கு மேலும் முப்பது நாட்கள் உள்ளிருப்பை அதிகரித்திருந்தனர். கண்ணாடித் திரைக்கு வெளியே நின்று சற்று நேரம் பேச அனுமதித்தனர். நன்றாகவே இருந்தார். அவரிடமும் கொடியிடமும் விடைபெற்றுக் கொண்டு மறு நுழைவு மையத்தை விட்டு வெளியே வந்தேன்.

அத்தனை மருந்துகளுக்குப் பிறகும் பிராண வாயுவின் அளவு எனக்கு அதிகம் போல்தான் பட்டது. மூக்கடைப்பானை எடுத்து மாட்டி உடலுக்குள் காற்று நுழைவதை மட்டுப்படுத்தினேன். இந்த இயற்கை பிராண வாயு தொண்டையைக் கமறச்செய்கிறது. பிற கோள்களில் இருக்கும்போது பூமியில் இருப்பது போல் மூச்சை ஆழ இழுத்துவிட வேண்டும் என ஆசையாக இருக்கும். இப்போது பூமியில் நிற்கிறேன், அதைச் செய்தால் உயிரே போய்விடும். என்னையறியாமல் சிரிப்பு வந்தது.

வெளியே நின்றிருந்த ஓராள் பொதுப் போக்குவரத்துப் பேழைக்குள் நுழைந்தேன்.

உள்ளே சென்று அமர்ந்தவுடன் “இடம்” என்றது.

“அரசு அலுவல் மையத்திற்கு அருகே ஐம்பது பணத்திற்கு ஒரு வாரம் தங்கக் கூடிய விடுதி” என்றேன்.

ஒரு விடுதியின் படம் பேழையின் கண்ணாடியில் ஒளிர்ந்தது. அறைகள் ஒவ்வொன்றாக முன் வந்தன. அத்தனையும் ஒன்று போலவே இருந்தன.

“இரண்டாம் அறை” என்றேன்.

“நன்று” என்றது குரல்.

கதவு தானாகப் பூட்டிக் கொண்ட பின் பேழை சத்தமில்லாமல் எழுந்து விண் பாதையில் ஏறி விடுதி நோக்கிச் சென்றது. இரண்டாம் தளத்தில் இருந்த நான் தேர்ந்தெடுத்த அறையின் வாசலில் சென்று நின்றது. என் ஆட்காட்டி விரலை முன்னால் இருந்த சிறு குமிழில் வைத்தேன். பயணத்திற்கான பணத்தை எடுத்துக்கொண்டு “நன்றி” என்றது.

பேழை கதவைப் பாலமாக வாசல் வரை நீட்டியது. நான் இறங்கி அறைக் கதவின் மேல் இருந்த குமிழில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன். குமிழ் பணத்தை எடுத்துக்கொண்டு “நல்வரவு” என்று சொல்லிக் கதவை உள் நோக்கித் திறந்தது. நான் அறைக்குள் நுழைந்தவுடன் பேழை கதவை உயர்த்தி சாத்திக்கொண்டு மீண்டும் விண் பாதை ஏறி வந்த வழியே சென்றது.

என் பயணப் பையை ஓரமாக வைத்துவிட்டு அறையின் கண்ணாடிச் சுவர்கள் வழியாகத் தெரிந்த பரந்து விரிந்த அரசு அலுவல் மையத்தைப் பார்த்தேன். இன்னும் மனிதர்கள் மட்டுமே முடிவெடுக்கும் ஒரே இடம் இதுதான்.

நான் என் குருதி வழியினரைச் சந்திக்க அனுமதியும் அவர்கள் இருப்பிடமும் என் கைக்கு வர குறைந்தது ஐந்து நாட்கள் ஆகிவிடும் என்று கொடி சொல்லியிருந்தார். மனிதர்கள் மட்டுமே என்பதால் நாட்கள் குறைக்கவும் செய்யலாம். அதற்கான வழிகளை நாளை பார்க்க வேண்டும். இவ்வளவு தூரம் பயணித்து வந்து சிறு சிறு அரசு நடைமுறைகளால் தாமதம் ஆவது எரிச்சலாய் இருக்கிறது.

இந்தப் பகல் வேளையிலும் எனக்குத் தூக்கம் கண்களைச் சொருகியது. இது சரியாக இன்னும் சில நாட்கள் பிடிக்கும். இந்தத் தூக்கக் கலக்கத்தில் அங்கு சென்றால் வேலை எதுவும் நடக்காது. கண்ணாடியைப் பொத்தானை அழுத்திக் கருப்பாக்கிவிட்டுப் படுக்கையில் சென்று விழுந்தேன்.

நான் கிளம்பி அரசு அலுவல் மையத்திற்குச் செல்ல அடுத்த நாள் மதியம் ஆகிவிட்டது. மக்கள் கணக்கெடுப்பு மையப் பணியாளரைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அறைக்காவல் செயலியிடம் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். வேறு சிலர் உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர்.

அரை மணி நேரம் கழித்து அறைக் காவல் செயலி என் பெயரை உரக்கச் சொல்லியது. நான் சென்று அறை வாசலில் நின்றேன். என் முழு உடலின் மேல் சோதனைக் கதிர்களைப் பாய்த்துப் பதிந்தவன் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டு கதவைத் திறந்தது. உள்ளே புன்னகையின்றிப் பணியாளர் அமர்ந்திருந்தார். நான் அருகில் சென்றவுடன் முன்னால் இருந்த இருக்கையைக் கை காட்டினார்.

என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார்.

“நான் குருதி வழி குடி பெயரி. என் வழி வந்தவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். அவர்களுடைய விபரங்களும் முகவரியும் வேண்டும்” என்றேன்.

“குடி பெயர்ந்து எத்தனை வருடம் ஆயிற்று?” என்றார்.

“இரு நூறு” என்றேன்.

“அப்படியென்றால் கொடுக்க அனுமதி உண்டு. தெரிந்துதான் கிளம்பி வந்திருக்கிறீர்கள்” இதையும் புன்னகையின்றிச் சொன்னார்.

அவரே தொடர்ந்து,

“உங்கள் அடையாளம் வேண்டுமே” என்றுவிட்டு அவர் அருகில் இருந்த குமிழ்தடியை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

நான் அதை வாங்கி என் இடது புறக் கீழ் விலா எலும்பில் பதித்திருந்த அடையாளச் சில்லில் அழுத்தித் தேய்த்துவிட்டு அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அத்தடியை வாங்கி அதன் இருக்கையில் நேராக நிறுத்தினார். திரை ஒளிர்ந்து மேலெழுந்தது. ஊடுருவிப் பார்க்ககூடிய வெள்ளைத் திரைக்குப் பின் தீர்க்கமாக வாசித்துக் கொண்டிருக்கும் அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“விலாவைத் தவிர அனைத்தையும் மாற்றிவிட்டீர்கள் போலிருக்கிறது” என்றார்.

செயலிகள் இத்தகைய வெட்டிப் பேச்சுகள் பேசுவதில்லை. இந்தப் பணியாளனால் காரியத்தைத் தாமதப்படுத்த முடியும் என்பதால் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.

“உங்கள் குருதி பூமி முழுக்க பரவி நிரம்பியிருக்கிறது. பல மாகாணங்களில் அனுமதி வாங்கிய பிறகுதான் உங்களுக்கு விபரங்களைத் தர முடியும். முப்பது நாள் கழித்து வாருங்கள் தயாராக வைத்திருக்கிறோம்” என்றான்.

“சரி. சில சொந்த விஷயம் உங்களிடம் பேச வேண்டும்” என்றேன். கொடி சொல்லிக் கொடுத்த நடைமுறை!

“சொந்த விஷயங்கள் பேசும்போது கண்காணிப்புகள் நிறுத்தி வைக்கப்படும். இக்கண்காணிப்புகள் உங்கள் பாதுகாப்புக்கானது. கண்காணிப்பின்றிப் பேச சம்மதமா?” என்றான்.

“சம்மதம்” என்றேன்.

“வாடிக்கையாளர் சொந்த விஷயம்” என்றான்.

சில நொடிகள் கழித்து “கண்காணிப்பு தற்காலிக நிறுத்தம்” என்றது குரல்.

“சொல்லுங்கள்” என்றான்.

“நான் பூமிக்கு வந்ததே இந்த ஒரு வேலைக்காக மட்டுமே. முப்பது நாள் என்னால் காத்திருக்க முடியாது. விரைவில் முடித்துக் கொடுத்தால் மகிழ்வேன். இந்தச் சிரமத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காகச் சிரமப் பரிகாரம் எதுவோ அதைச் செய்ய சித்தமாக உள்ளேன்” என்றேன்.

“இருபத்திமூணாம் கோள் கூட்டம் வரை சிரமப்பரிகாரங்கள் எட்டி இருக்கிறது. ஆச்சரியம்தான்” என்றான். புன்னகை மெலிதாக உதட்டில் எட்டிப் பார்ப்பது போல் இருந்தது.

மீண்டும் ஒரு முறை திரையை உயிர்ப்பித்துப் பார்த்தான்.

“மேல் கீழ் என நிறைய அனுமதிகள் வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும். அதற்கு சம்மதமா?” என்றான்.

“சரி” என்றேன்.

“நீங்கள் நேரில் வர வேண்டாம். இரண்டு நாட்களில் உங்கள் அரசு அலுவல் கோப்பில் சேர்த்துவிடுகிறேன்,” என்றான்.

“நன்றி” என்றேன்.

தன் கால் சட்டைப் பையில் இருந்து ஒரு குமிழை எடுத்து மேஜையில் வைத்து “ஐநூறு” என்றான்.

நான் என் ஆட்காட்டி விரலைக் குமிழில் வைத்தேன். பணம் அவன் கணக்கில் சேர்ந்துவிட்டதற்கான நீல ஒலிக் குமிழுற்குள் மிளிர்ந்து அடங்கியது. குமிழை எடுத்து மீண்டும் கால் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.

“கண்காணிப்பு தொடங்கலாம்” என்றான்.

“கண்காணிப்பு ஆரம்பம்” என்றது குரல்.

“நீங்கள் சொன்ன சொந்த விஷயங்களையும் பரீசீலித்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கப் பரிந்துரைக்கிறேன். வேறு அலுவல்?” என்றான்.

“நன்றி” எனச் சொல்லி எழுந்துகொண்டேன்.

தலையை என்னைப் பார்த்து அளவாக மேலும் கீழும் அசைத்தான். நான் அறையை விட்டு வெளியேறினேன்.

அவன் சொன்னது போலவே இரண்டாம் நாள் காலை என் அரசு அலுவல் கோப்பில் விபரங்களைச் சேர்ப்பித்துவிட்டான். என் குமிழ்தடியை உயிர்ப்பித்துப் பரபரப்பாக என் குருதியின் பரவலைப் பார்க்கத் தொடங்கினேன்.

என் குருதி வழியில் ஏழாம் தலைமுறையில் முப்பது பேர் இருந்தனர். பணியாளன் சொன்னது போல் பூமி முழுக்கப் பரவி நிறைந்திருந்தனர். அரசாங்கத்திற்கு அவர்கள் அளித்திருந்த முப்பரிமாண பிம்பங்களை என் குமிழ்தடி முனையில் மாறி மாறி மிளிரவிட்டேன். பழுப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பல நிறங்கள், பல முக அமைப்புகள். அத்தனை பேரையும் அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது, உடனே உடனே..

நான் இவர்களைத் தனித் தனியாகச் சந்திப்பதைவிட ஒன்றாக ஓரிடத்தில் திரட்டிப் பார்த்தால் உற்சாகம் பல மடங்கு கூடும் எனத் தோன்றியது. அனைவரும் அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத்தில் அடையக்கூடிய இடத்தைத் தெரிவு செய்தேன். ஐரோப்பிய மாகாணத்தில் ஓர் இடம். எனக்கு நான் இருக்கும் இடத்தில் இருந்து தனிப்பேழையில் அரை மணி நேரத் தொலைவு.

சீர் மொழியில் அனைவருக்கும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களைச் சந்திக்கும் ஆர்வத்தையும், சந்திக்க விரும்பும் இடத்தையும், இன்றிலிருந்து பதினைந்து நாளில் ஒரு சந்திப்புத் தேதியையும் அவர்கள் அரசாங்கத்திற்குக் கொடுத்திருந்த தொடர்பு அலைவரிசைக்கு அனுப்பி வைத்தேன். மறக்காமல் நான் அவர்களின் மூதாதை என்பதற்கான அரசாங்கச் சான்றிதழையும் அனுப்பி வைத்தேன்.

அரசாங்கத் தொடர்பு அலைவரிசை என்பதால் விரைவாகப் பார்த்துவிடுவார்கள் என எதிர்பார்த்தேன். நினைத்தது போலவே ஓரிரு நாட்களில் அனைவரும் பார்த்துவிட்டதற்கான அறிவிப்பு என் அலைவரிசைக்கு வந்து சேர்ந்தது.

சிலர் பார்த்தவுடன் தங்கள் இசைவைத் தெரிவித்து பிம்ப மடல்கள் அனுப்பி இருந்தனர். சிலர் சீர் மொழியில் சில வரிகளில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். நான்கைந்து பேரிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

அந்த வார இறுதிக்குள் இருபது பேர் சந்திப்புக்கு இசைவு தெரிவித்திருந்தனர். மற்றவர்கள் வர முடியாதது வருத்தம் என்றாலும் அவர்களைத் தனியே சந்தித்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

வருபவர்களுக்குப் பேழைகளையும், விடுதிக்கான அறைகளையும் பதிவு செய்து அவற்றை அவர்கள் பணச்சில்லுக்கு மாற்றினேன்.

சந்திப்பிடத்திற்கு அன்றே கிளம்பிச் சென்று தங்கினேன். நடுவில் இருந்த ஒரு வாரத்தில், சந்திப்பிற்கான உணவு வகைகள், அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் எனப் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்து வைத்தேன்.

சந்திப்புக்கு முதல் நாள் இரவு அனைவரும் விடுதிகளுக்கு வந்துவிட்டார்கள் என்ற தகவலை என் குமிழ்தடி காட்டியது. அன்றிரவு எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அனைவரையும் சந்திப்பதின் மகிழ்ச்சி, எப்படி இருக்கப் போகிறது சந்திப்பு எனும் பதட்டம் என நிலை கொள்ளாமல் படுக்கையில் நெளிந்து கொண்டிருந்தேன்.

அதிகாலை வேளையில் சிறிதாகக் கண்ணயர்ந்துவிட்டு எழுந்து தயாரானேன். மதிய உணவுக்குத்தான் சந்திப்பு. ஆனால் எனக்கு நிலை கொள்ளவில்லை. பரிசுப்பொதிகளோடு காலையிலேயே சந்திப்பு அரங்கிற்குச் சென்றேன். என் ஆட்காட்டி விரலைத் தடவிக் கதவுகளைத் திறந்தேன். எந்திர அறைக்குச் சென்று சிறிய தலைமை செயல் இயந்திர உருளையை எடுத்து என் குமிழ் தடியின் குமிழோடு இணைத்துக்கொண்டேன்.

“ஆணைக்குத் தயார்” என்றது தலைமைச் செயலி.

“உணவு தயாராகிறதா?” என்றேன்.

வட கோடியில் இருந்த சுவர்திரை விலகி, கண்ணாடிச் சுவற்றிற்குப் பின் சமையலறை காட்சிக்கு வந்தது. உணவுத் தயாரிப்பு எந்திரங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருந்தன.

“12 மணிக்கு உணவு மேசையில் அனைத்து உணவுகளும் இருக்கும்” என்றது தலைமைச் செயலி.

“சரி” என்றேன்.

மீண்டும் சுவர் திரை நகர்ந்து சமையலறையை மறைத்தது. பரிசுப் பொருட்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தேன். பெயர்கள் அனைத்தும் சரியாக இருந்தன. குழந்தைகளுக்குத் தர வேண்டியதை மட்டும் தனியே எடுத்து ஒரு மேஜையில் வைத்தேன்.

பிற பரிசுப் பொருட்கள் இருந்த மேஜையை காட்டி

“இந்த பொருட்களை என் விருந்தினர் கிளம்பும்போது அவர்கள் பேழையில் வைக்க வேண்டும்” என்றேன்.

“உத்தரவு” என்றது தலைமைச் செயலி.

ஒரு நான்கு சக்கரத் தூக்கு வண்டி விரைந்து வந்து நான் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த மேஜையை தூக்கிக்கொண்டு மண்டபத்தின் பேழை நிறுத்தக் கதவுகளை நோக்கி விரைந்தது. மலர் அலங்காரங்களையும், மேஜை அமைப்பையும் ஒரு முறை பார்த்துவிட்டுச் சென்று அரங்கின் வாயிலில் அமர்ந்து கொண்டேன்.

அரங்கின் வாசலில் சரியாக 11:30 மணிக்கு முதல் குடும்பம் வந்திறங்கியது. அந்தத் தயங்கித் தயங்கி நடந்து வரும் மஞ்சள் நிறக் குழந்தையின் கைப்பிடித்து கூட்டி வரும் பழுப்பு நிறத்தவன்தான் என் குருதி. அருகில் அவன் மஞ்சள் நிற மனைவி முகம் நிறைந்த புன்னகையுடன் வந்து கொண்டிருந்தாள்.

“எழில்” என அழைத்து சில தப்படிகள் ஓடி அவனைக் கட்டிக்கொண்டேன்.

அவன் மனைவிக்கும் ஓர் அணைப்பைக் கொடுத்துவிட்டுக் குழந்தையைப் பார்த்தேன். அது தந்தையின் காலுக்குப் பின் ஒளிந்தது.

“உனக்கு ஒன்று வைத்திருக்கிறேன். வா”

என்றுவிட்டு மேஜையருகில் சென்று “அழகி” என்று எழுதப்பட்ட பரிசுப் பொதியை எடுத்தேன்.

மூவரையும் அழைத்துச் சென்று அமரச் செய்த பின் “இது அழகிக்கு” என்று அவள் முன் நீட்டினேன். தந்தையின் மடியில் இருந்தவள் முகத்தை அவன் ஆடையில் புதைத்துக்கொண்டாள்

“வாங்கி கொள்” என்றான் எழில்.

மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்து தயக்கத்தோடு பரிசை வாங்கித் தன்னோடு அணைத்துக்கொண்டு மீண்டும் தந்தைக்குள் சுருண்டு கொண்டாள்.

“சிறிது நேரம் ஆகும்” என்றான் எழில் புன்னகையோடு.

புன்னகைக்கும்போது அவன் கண்கள் இடுங்கி, பின் விரிந்தது. நான் புன்னகைத்தால் என் முகமெல்லாம் கண்கள் மட்டுமாகவே இருக்கும் அவ்வளவு விரியும். எழிலுக்குக் கண்கள் காணாமல் போய்விடுகின்றன.

“உங்களை எப்படி அழைப்பது என்று ஒரே குழப்பம். அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்” என்றான் எழில்.

“பாட்டனை இப்போது எப்படி அழைக்கிறீர்கள்?” என்றேன்.

“பாட்டா என்றுதான்” என்றான் எழில்.

“அப்படியே அழைக்கலாம்” என்றேன்.

“பாட்டா இப்படி வருபவர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு வருவதில்லை நேராக இறுதி உறக்க நிலையங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். நீங்கள் எங்களைச் சந்திப்பது எங்கள் பாக்கியம்” எனச் சொல்லிக் கைகள் குவித்து, தலை கவிழ்த்து மரியாதை செய்தாள் சில்வி, எழிலின் மனைவி.

“ஏழாம் தலை முறைப் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு நான் அல்லவா கொடுத்து வைத்திருக்கிறேன். என் அழைப்பை ஏற்று வந்ததற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றேன்.

பேசுவது சில்வியிடமாக இருந்தாலும் என் கண்கள் அனைத்தும் எழில் மீதே இருந்தன. அவன் அமைதியாக நாங்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். என் கண்கள் அவன் அவயங்களையும், அவன் முக உடல் பாவனைகளையும் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. எங்காவது ஒரு சாயல், ஒரு சிறு கீற்று..

“உன் தந்தை..” என்றேன் எழிலைப் பார்த்து.

“அவர் சில வருடங்களுக்கு முன்புதான் போதும் என முடிவு செய்து உறக்க நிலையத்திற்குச் சென்றுவிட்டார். நிறை வாழ்வு வாழ்ந்தவர், கொண்டாடி வழியனுப்பினோம்” என்றான்.

அவன் குமிழ் தடியைத் தட்டித் தன் தந்தையின் முப்பரிமாண பிம்பத்தை அதன் மேல் மிதக்க விட்டான். எழிலின் கண்கள் அவன் தந்தையிடம் இருந்து வந்திருந்தது, இடுங்கிய கண்கள். சட்டென இன்னொரு பிம்பத்திற்கு மாறினான். பழுப்பு நிறத்தில் கண்கள் இடுங்கி எழிலுக்குச் சம்மந்தமே இல்லாமல் இருந்தார்.

“இது பாட்டனார்” என்றான்.

“சொல்லாவிட்டால் உன் பாட்டன் என்றே கண்டு கொண்டிருந்திருக்க முடியாது” என்றேன்.

எழில் சிரித்துவிட்டு “என் பாட்டனுக்குச் சில தலைமுறைக்கு முன்பே நாங்கள் சீன மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டோம், அதனால் குருதியில் சீனக்கலப்பு மிகுதி” என்றான்.

நான் புன்னகைத்தேன்.

தலைமைச் செயலி மெலிதாக ஊதா நிறத்தைக் கசிய விட்டது. மேலும் விருந்தினர் வாசல் வரை வந்து விட்டதற்கான சமிக்ஞை.

“பிறரும் வரத் தொடங்கிவிட்டனர். நீங்கள் சற்று இளைப்பாறுங்கள் நான் அவர்களை வரவேற்கச் செல்கிறேன்” என்று விட்டு வாசல் நோக்கி நடந்தேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் அழைத்த அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர். அனைத்து நிறங்களிலும் அனைத்து அளவுகளிலும் என் நகல்கள்.

என் நகல்கள்தானா?

மனம் மகிழ்வில் பொங்கிக் கொண்டிருந்தாலும் கண்கள் மட்டும் என் நகல்களில் என்னைத் தடவித் தடவித் தேடிக் கொண்டிருந்தன.

அனைவரும் அவர்களுக்குரிய வட்ட மேஜைகளில் அமர்ந்தவுடன். மேஜையின் மேல் பரப்பு விலகி உள்ளிருந்து இன்னொரு மேஜை பரப்பு சூடான உணவுடன் மேலெழுந்து வந்தது. அது விளிம்புகளில் பொறுத்திக் கொண்டவுடன் “நல்விருந்து” என்றது குரல்.

நான் அனைத்து மேஜைகளையும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அவர்கள் உண்பதை, அவர்கள் உரையாடுவதை, சிரிப்பதை, புருவ அசைவுகளை, குரலின் தன்மையை என ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் குருதி எத்தனை பாத்திரங்களில் எத்தனை வடிவம் எடுத்திருக்கிறது. மலைப்பாக இருந்தது.

இந்திய மாநிலத்தில் இருந்து வந்திருந்தவர்களிடம்கூட என் சாயல்களில் ஒன்றும் இல்லாதது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. அனைவருமே ஒன்று போல் கை மறைத்துச் சிரித்தனர், அனைவரும் வெவ்வேறு உணவாக இருந்தாலும் ஒன்று போலவே கரண்டிகளில் எடுத்து உண்டனர்.

ஒருவரும் உரக்கச் சிரிக்கவில்லை, நான் அறிமுகப்படுத்தாமல் தாங்களாக யாரிடமும் போய்ப் பேசவில்லை. தற்கால நடை உடை பாவனைகள், பலருக்கும் தற்காலத்தில் அழகென்று கொள்ளப்படும் சிறு நாசி, சிறு கண்கள். பிறந்தவுடனே மாற்றிவிடுகிறார்கள் என கொடி சொன்னார். குண அமைப்புகளும் தற்காலத்துடையதாக இருக்கிறது.

இவர்கள் செயலிகள் அல்ல மனிதர்கள் என்பதைத் தவிர இவர்களுக்கும் எனக்கும் வேறு ஒற்றுமைகள் எதுவும் இல்லை. கண்டிப்பாக என்னுடையது ஒன்றும் இவர்களில் எஞ்சவில்லை. ஒரு தொடர்பும் அற்ற கடம்பனுக்கும் எனக்கும் இருந்த ஒற்றுமைகளில் ஒரு இம்மியும் இவர்களோடு இருக்கப் போவதில்லை என்பது இந்த அரை மணி நேரத்திலேயே தெரிந்துவிட்டது.

இந்த யோசனை மனதில் வந்ததும் கூடவே இப்படி நான் இல்லாமல் போனதைக் காணத்தான் இரு நூறு வருடங்கள் காத்திருந்தேனா என்ற எண்ணமும் உடன் வந்தது.

மூக்கடைப்பானை இன்னும் சற்று இறுக்கிவிட்டு ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டேன்.

மகிழ்ந்திருக்கும் சிறு திரளை என்னவென்று அறியாத உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அழகி பிரித்துவிட்டிருந்த பரிசுப் பொருளோடு என்னருகில் வந்தாள். நான் புன்னகைத்து இரு கைகள் நீட்டி அழைத்தேன். வெட்கப் புன்னகையோடு என் கைக்குள் வந்தாள். அவளைத் தூக்கி என் வலது மடியில் அமர்த்திக்கொண்டு

“பிடித்திருக்கிறதா?” என்றேன்.

தலையை ஆம் என்பது போல் ஆட்டிவிட்டு

“நன்றி பாட்டா” என்றாள்.

கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தேன்.

அவளை அணைத்துத் தூக்கிக் கொண்டு திரள் நோக்கி நடந்தேன்.


புகைப்படம்: பிரஷாந்த்

இதழ் 15 பிற படைப்புகள்

1 thought on “கேளிர்”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்