ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் மிகச்சிறந்தவை என நான்கு நாடகங்களை விமர்சகர்கள் அடையாளப்படுத்துகின்றனர். “ஹேம்லெட், ஒதெல்லோ, மெக்பெத், கிங் லியர்” ஆகிய நாடகங்களே அவை. இந்த நான்கு நாடகங்களில் மிகச்சிறந்ததாக, ஹேம்லெட் அறியப்படுகிறது. அறிஞர் பிராட்லியின் புகழ்பெற்ற வாசகம் ஒன்றுண்டு, “Hamlet is the best, King Lear is the greatest.” ஹேம்லெட்டுக்கும் லியர் மன்னனுக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. இருவருமே பாசத்தால் வீழ்ந்தவர்கள். லியர் மன்னன் தவறான ஆட்களின் மீது பாசம் வைத்ததால் வீழ்ந்தான். ஹேம்லெட் அவன் பாசம் வைத்திருந்த தகப்பனின் மரணத்திற்குப் பழிவாங்கும் முயற்சியில் வீழ்ந்தான். ஆனாலும், தான் வீழ்வதற்கு முன்னால் தன்னை வீழ்த்த நினைத்தவர்களைப் பழிவாங்கிவிட்டே வீழ்கிறான். அவ்வகையில், ஹேம்லெட் லியர் மன்னனைப் போலல்லாமல், நிம்மதியாகவே மரணமடைகிறான். அவன் பேசும் இறுதி வரி: “Rest is silence.”
ஷேக்ஸ்பியரின் செல்ல மகன் ஹேம்னெட் சிறு வயதில் இறந்துவிடுகிறான். அந்தத் துயரம் ஷேக்ஸ்பியரை ஒரு நிழலைப் போலத் தொடர்கிறது. அவனது நினைவாகவே இந்தக் கதையின் நாயகனுக்கு “ஹேம்லெட்” என்று பெயரிடுகிறார். அவர் மறைந்து ஐந்து நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் ஹேம்லெட் வாழ்கிறான்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஹேம்லெட் நாடகமே மிகவும் நீளமானது. குழப்பமும் புதிர்த்தன்மையும் மாறிமாறிப் பயின்று வரும் நாடகம் இது. அவ்வகையில், ஷேக்ஸ்பியரின் கதைமாந்தர்களில் மிகவும் குழப்பமானவன் என ஹேம்லெட் அறியப்படுகிறான்.
“To be, or Not to be, That is the question” (இருப்பதா, இல்லாமல் போவதா, அதுதான் கேள்வி) என்ற கேள்வியுடன்தான் ஹேம்லெட், பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிறான். டென்மார்க்கின் இளவரசனான ஹேம்லெட், பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது அவனது தந்தையான அரசர் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். பாம்பு தீண்டியதால் மன்னர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டாலும், உண்மையில் அவரைக் கொன்றது, அவரது உடன்பிறந்த சகோதரன். அவரைக் கொன்றது மட்டுமல்லாமல், அவரது மனைவியையும் அவன் மணம்புரிந்து கொள்கிறான். இந்த இரட்டைத் துயரங்களால் இளம் ஹேம்லெட் ஆழமாகப் பாதிக்கப்படுகிறான். தன் தந்தை மர்மமான முறையில் இறந்ததைக் காட்டிலும், அவரைப் புதைத்த புதைமேட்டின் ஈரம் காய்வதற்குள் தன் தாய் ஏன் தன்னுடைய சிற்றப்பனை மணம் புரிந்துகொண்டாள் என்பது அவனுக்கு விளங்காத புதிராக இருக்கிறது. விலங்கினம்கூட இன்னும் சிறிது காலம் துக்கம் காக்கும், ஆனால் மானுடப் பெண்ணானத் தனது தாயினால் ஏன் அது முடியவில்லை. மறைந்த தனது தந்தை தனது தாயினை உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் அல்லவா காதலித்தார். தன்னுடைய தாயினால் ஏன் இப்படியொரு செயலைச் செய்யமுடிந்தது. முறைமீறிய காமமும், சதையின்பமும் காதலைக் காட்டிலும் வலிமை வாய்ந்தவையா? பலவீனமே, உனது பெயர்தான் பெண்ணா (“frailty, thy name is woman”) என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ளும் ஹேம்லெட் ஒரு கட்டத்தில் பெண்ணினத்தையே வெறுக்கத் துவங்கிவிடுகிறான். இளம் வயதிலேயே அவனது வாழ்வில் பெரிய துயரங்கள் சம்பவித்துவிட்டன. மேலும், அத்துயரங்களுக்கான காரணங்களும் தெரியவில்லை. துயரம் மேலும் துயரத்தை அளிக்கிறது, குழப்பம் மேலும் குழப்பத்தை அளிக்கிறது. எத்திசையிலும் வெளிச்சமில்லை, யோசிக்க யோசிக்க மூளையின் வெப்பநிலை அதிகரித்து வெடித்துவிடும் போலிருக்கிறது. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றியும் ஹேம்லெட் யோசிக்கிறான். அதன் விளைவே, “To be, or Not to be” என்ற கேள்வி.
ஹேம்லெட்டின் வாழ்வையே இத்துயரங்கள் புரட்டிப்போட்டு விடுகின்றன. மன்னரின் மரணத்தை யாவரும் கடந்து சென்றுவிட்டிருந்தாலும், ஹேம்லெட் ஒருவனால் மட்டும் அதைக் கடக்க இயலவில்லை. துக்கத்தின் அடையாளமாக கறுப்பு நிற உடையிலேயே அவன் எப்போதும் காணப்படுகிறான். அவனது சித்தப்பா க்ளாடியஸ் (Claudius) அவனைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி, “துயர மேகங்களை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறாயா?” என்பதுதான். சித்தப்பாவும், அவனது மனைவியாக மாறிவிட்ட தன்னுடைய தாயும் எத்தகைய ஆறுதல் வார்த்தைகளைத் தெரிவித்தாலும், ஹேம்லெட்டினால் தன்னுடைய துயரத்தில் இருந்து வெளிவரமுடியவில்லை. தன்னுடைய கேள்விகளுக்கான விடைகளையும் அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
முடிவில், ஹேம்லெட்டின் தந்தையே ஆவி வடிவில் அவனைக் காண வருகிறார். தனது சகோதரன்தான் தன்னை வஞ்சகமான முறையில் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டான் என்று தெரிவித்து மறைகிறார். இந்தப் புள்ளியில்தான் ஹேம்லெட்டுக்குச் சிறிதளவு தெளிவு பிறக்கிறது. தன்னுடைய கேள்விக்கான விடையைத் தனது தந்தையே ஆவி வடிவத்தில் வந்து தீர்த்துவிட்டார். ஹேம்லெட்டின் மனம் பழியுணர்ச்சியில் பற்றியெரிகிறது. மன்னனுக்குரிய மேன்மையான குணங்கள் நிறைந்த தன்னுடைய தந்தையை, மக்களின் மனம் கவர்ந்த தனது தந்தையை, எந்தத் தகுதியும் இல்லாத, குணக்கேடனான தனது சித்தப்பன் எனும் கீழ்மகன் வஞ்சகமாகக் கொன்றதற்காகவும், அதனைத் தொடர்ந்து தனது அண்ணனின் மனைவியையே தனது மனைவியாக ஆக்கிக்கொண்ட அந்தக் காமக்கொடூரனின் துர்நடத்தைக்காகவும், அவனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறான் ஹேம்லெட். அதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அதேசமயம், மனம் குழம்பிய ஒரு பைத்தியக்காரனைப் போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். அவனது நடவடிக்கைகளில் தெளிவின்மையும், அச்சமும் தென்படுவதால் அவனை அணுகுவதற்கே அவனைச் சுற்றியிருப்பவர்கள் அஞ்சுகிறார்கள்.
தந்தையின் மரணம், தாயின் மறுமணம், இவ்விரு துயர்களோடு மற்றொரு துயரமும் சேர்ந்துகொள்கிறது. அது காதலி ஒஃபிலியாவின் பாராமுகம். ஆரம்பத்தில் ஒஃபிலியா ஹேம்லெட்டைக் காதலிக்கிறாள். ஆனால், அவளது தந்தையான மந்திரி பொலோனியஸ் மற்றும் அவளது சகோதரன் லாயர்ட்டஸ் இருவரும் ஹேம்லெட்டுக்கு எதிராகப் பேசி, அவளது மனதை மாற்றிவிடுகிறார்கள். “இளவரசனைக் காதலிப்பதால் துயரமே மிஞ்சும்”, “அவன் உன்னைக் காதலிக்கலாம், ஆனால் அவனால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள இயலாது” எனப் பல்வேறு அறிவுரைகளின் மூலம் அவளது மனம் திசைதிருப்பப்படுகிறது. தந்தையை நேசிக்கும் ஒஃபிலியா அவரது வார்த்தைக்கு மதிப்பளித்து ஹேம்லெட்டைப் புறக்கணிக்கிறாள். அவன் தனக்கு எழுதிய காதல் கடிதங்களையும் அவனுக்குத் திருப்பித் தந்துவிடுகிறாள். காதல் தோல்வி என்ற இந்த மூன்றாவது துயரும் ஹேம்லெட்டைப் பாதிக்கிறது. வஞ்சகம், புறக்கணிப்பு, தனிமை, இவையாவும் அவனை அலைக்கழிக்கின்றன.
ஹேம்லெட்டின் முதன்மை நோக்கம் பழிவாங்குவதே. ஆனாலும், தன் தந்தையே ஆவியாக வந்து தன்னைக் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்தாலும், பழியைத் தீர்க்க, ஹேம்லெட் எடுத்துக்கொள்ளும் கால தாமதம், வாசகர்களுக்குக் (அல்லது பார்வையாளர்களுக்கு) குழப்பத்தை உண்டாக்குகிறது. கொலையாளியான தன்னுடைய சிற்றப்பன் கிளாடியஸ் வழிபாட்டில் இருக்கும்போது, பழிவாங்குவதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைகிறது. ஆனாலும், ஹேம்லெட் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒருவன் வழிபாட்டில் இருக்கும்போது அவனைக் கொல்லலாகாது, அப்படிக் கொன்றால், அவன் சொர்க்கத்துக்குத்தான் செல்வான், இத்தகைய கொடியவனை சொர்க்கத்துக்கு அனுப்புவது தன் தந்தைக்குச் செய்யும் துரோகம் என்று நினைக்கிறான்.
அடுத்ததாக, ஹேம்லெட், தன் தந்தை வடிவில் வந்த ஆவியை முழுமையாக நம்புவதற்கும் தயங்குகிறான். அது உண்மையில் தன் தந்தையின் ஆவிதானா, அல்லது தன் மதியை மயக்குவதற்காக ஏதாவது சாத்தான் தன் தந்தையின் வடிவை எடுத்து தன்னை தீயவழியில் செலுத்த முயல்கிறதா என்றும் சந்தேகப்படுகிறான். அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, நாடக நடிகர்களின் உதவியை நாடுகிறான். தன் தந்தையின் படுகொலையைப் போலவே ஒரு காட்சியினை நாடகத்தில் ஏற்பாடு செய்து அதனைக் காண தன் சிற்றப்பனை அழைக்கிறான். நாடகத்தில் அக்காட்சியினைக் கண்ட கிளாடியஸின் முகம் மாறுகிறது. உடனே நாடகத்தை நிறுத்தச் செய்து தன் தனியறைக்குச் சென்றுவிடுகிறான். இக்காட்சியின் மூலமாக, ஹேம்லெட் தன் சிற்றப்பன் கிளாடியஸே தன்னுடைய தந்தையைக் கொன்றவன் என்று தெளிவாக அறிந்துகொள்கிறான். தன் தந்தையின் ஆவி சொன்ன செய்தி உண்மைதான் என்றும் சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிய வருகிறது.
இத்தனை சாதகமான தடயங்கள் கிடைத்தும் ஏன் ஹேம்லெட் கிளாடியஸைக் கொல்வதற்குத் தயங்குகிறான் என்பதே புரியாத புதிர். நாடகத்தின் இறுதிக் காட்சியிலும்கூடத் தனக்கும் தன் தாய்க்கும் விஷம் வைத்துவிட்டான் என்று தெரிய வந்ததும்தான், திடீர் ரௌத்திர உணர்ச்சியினால் தூண்டப்பட்டு கிளாடியஸைக் கொல்கிறானேயன்றி அதுவரையிலும்கூட கிளாடியஸைக் கொல்வதற்கு ஹேம்லெட் அவனாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை, எவ்விதத் திட்டமும் தீட்டவில்லை. ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால், It is impulsive rather than planned என்று சொல்லலாம். பழிவாங்குவதற்குத் தயங்குவதும், காலதாமதம் செய்வதுமே இன்றளவும் இக்கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளச் சிரமமான கதாபாத்திரமாக (enigmatic character) வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே டி.எஸ்.எலியட் ஹேம்லெட்டை “Mona Lisa of literature” என்கிறார்.
ஏன் ஹேம்லெட் கிளாடியஸைக் கொல்லத் தயங்குகிறான் அல்லது அவனது இக்காலதாமதத்திற்கு காரணம் என்ன என்று யோசிக்கலாம்.
ஹேம்லெட்டும் ஒஃபிலியாவும் மெய்யாகவே காதலித்தார்களா என்ற கேள்வியும் வாசகருக்குத் தோன்றலாம். அவர்களது காதல் காட்சிகள் நேரடியாக நாடகத்தில் இல்லை என்றாலும், ஒரு சில வசனங்கள் மூலம் அவர்கள் இருவரும் மெய்யாகவே ஒருகாலத்தில் காதலித்தவர்கள்தாம் என்று ஷேக்ஸ்பியர் நிறுவிவிடுகிறார். ஒரு காட்சியில் ஹேம்லெட் ஒஃபிலியாவைப் பார்த்து, ஆம், “ஒருகாலத்தில் நான் உன்னைக் காதலித்தேன் (I did love you once)” என்கிறான். ஒஃபிலியாவும், ஆம், “என்னை அவ்வாறு நம்பச் செய்தீர்கள் (you made me believe so)” என்கிறாள். ஆனால், அதன் பின்னர் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனின் அறிவுரையின்படி, ஒஃபிலியா ஹேம்லெட்டின் காதலைப் புறக்கணிக்கிறாள். இதனால் ஹேம்லெட் ஆழமாகப் பாதிக்கப்பட்டு, பெண்ணினத்தையே வெறுக்கத் துவங்கிவிடுகிறான். பெண்களும், பெண்கள் வழியாக இவ்வுலகிற்கு வரும் கயவர்களின் துர்நடத்தைகளும் அவன் மனதில் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாகத்தான் ஒஃபிலாவிடம் “துறவியர் மடத்திற்குச் சென்றுவிடு (Get thee to a nunnery)” என்கிறான் ஹேம்லெட்.
ஆனாலும், அவர்கள் இருவருக்குமிடையே உடல் சார்ந்த நெருக்கம் இருந்தது என்பதற்கான குறிப்புகளும் நாடகத்தில் இருக்கின்றன. “கன்னியவள் காதலன் அறைக்குள் நுழைந்தாள், அதன் பின் அறையை விட்டு வெளிவந்தவள் ஒருபோதும் கன்னி இல்லையே” என்று ஒஃபிலியா பாடும் ஒரு பாட்டின் மூலமாக, அவர்கள் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று அறிய முடிகிறது.
ஹேம்லெட்டினால் ஒஃபிலியாவை முழுவதுமாக வெறுக்க இயலவில்லை. அவள் மீதான காதலை அவளது சவக்கிடங்கில் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறான். “நான் ஒஃபியாவைக் காதலித்தேன். நாற்பதாயிரம் சகோதரர்களின் நேசத்தைக் காட்டிலும் என் காதல் பெரியது (I loved Ophelia. Forty thousand brothers Could not with all their quantity of love make up my sum”) என்கிறான்.
ஒஃபிலியா ஒரு பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாகவே தென்படுகிறாள். தன்னுடைய வாழ்வில் சுயமான முடிவை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு அனுமதிக்கப்படவேயில்லை. ஆண்கள் எடுக்கும் முடிவிற்கு இணங்குபவளாகவே இருக்கிறாள். இந்நாடகத்தில் தோன்றும் இரண்டு பெண்களுமே (ஒஃபிலியா, கெர்ட்யூட்) ஆண்களின் முடிவிற்குக் கட்டுப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். தான் நேசித்த ஹேம்லெட்டையும் அடையமுடியவில்லை, அண்ணன் லாயர்ட்டஸும் தன்னுடன் இல்லை, தந்தை பொலோனியஸும் கொலை செய்யப்பட்டு விடுகிறார். இத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள இயலாத ஒஃபிலியா, மனம் பேதலித்து, நீரில் மூழ்கி இறந்துவிடுகிறாள்.
இறப்பதற்கு முன் அரசனைச் சந்திக்க வரும் ஒஃபிலியா, சில மலர்களைப் பரிசளிக்கிறாள். தன் சகோரனுக்கு “ரோஸ்மேரிப் (Rosemary)” பூக்களை அளிக்கிறாள். இம்மலர்கள் அன்பையும், நினைவையும் குறிப்பன. ராணி கெர்ட்ரூட்டுக்கு கள்ளக்காதலைக் குறிக்கும் “ஃபென்னல் (Fennel)” மலர்களை அளிக்கிறாள். அரசன் கிளாடியஸுக்கு நம்பிக்கைத் துரோகத்தைக் குறிக்கும் “ரியூ (Rue)” மலர்களை அளிக்கிறாள். துயரம் தோய்ந்த காதலைக் குறிக்கும் “டெய்ஸி (Daisy)” மலர்களைத் தனக்கென எடுத்து வைத்துக்கொள்கிறாள். “நேர்மையைக் குறிக்கும் “வயலட் (Violet)” மலர்களைத் தான் எடுத்து வரவில்லை, அம்மலர்கள் தன் தந்தை பொலோனியஸ் இறந்தபோதே உலர்ந்துவிட்டன”, என்கிறாள்.
ஹேம்லெட்டைக் காட்டிலும் புதிரான கதாபாத்திரம் கெர்ட்ரூட். உண்மையில், அரசி கெர்ட்ரூட்டூக்கு வேண்டியதுதான் என்ன? அவள் தன் முதல் கணவனான அரசன் ஹேம்லெட்டை மெய்யாகவே காதலித்தாளா? அல்லது முதல் கணவன் இருக்கும்போதே அவனது தம்பியான கிளாடியஸுடன் கள்ள உறவு வைத்திருந்தாளா? அதனால்தான், முதல் கணவன் இறந்தவுடன் மிக விரைவில் அவனது தம்பியை மணமுடித்துக்கொண்டாளா? ராணியாக இல்லாமல் வெறும் விதவையாக இருந்தால் அதிகாரமும், மதிப்பும் இல்லாது போய்விடும் என்றெண்ணி கிளாடியஸை மணமுடிக்கச் சம்மதித்தாளா? வஞ்சகனான கிளாடியஸிடமிருந்து தன் மகன் ஹேம்லெட்டின் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கிளாடியஸை மணந்தாளா? அல்லது ஹேம்லெட்டே சொல்வதுபோல உடலின்பத்திற்காக கிளாடியஸை மணந்துகொண்டாளா? போன்ற முடிவற்ற கேள்விகளை இக்கதாபாத்திரத்தின் மீது எழுப்பிக்கொள்ளலாம். இக்கேள்விகள் எவற்றுக்கும் தெளிவான விடையில்லை என்பதே உண்மை. ஆனால், தன் மகன் ஹேம்லெட் மீது அவள் அளவற்ற அன்பு கொண்டிருந்தாள் என்பதை மறுக்க இயலாது. ஹேம்லெட் தன்னிடம் இருந்து விலகிச் செல்கிறான் என்பதை அறிந்து, அவனது பால்ய நண்பர்கள் இருவரையும் அழைத்து, அவர்களிடம் ஹேம்லெட்டின் மனவருத்தத்திற்கான காரணங்களை ஆராய்ந்து சொல்லுமாறு பணிக்கிறாள். ஹேம்லெட்டின் நலத்தை விரும்பி, இறுதிவரை அவனுக்காகக் கண்ணீர் வடிக்கிறாள். ஆனாலும், ஹேம்லெட் அவளிடம் கேட்கும் நேரடியான வினாக்களுக்குத் தகுந்த மறுமொழி அளிக்காமல் தவிர்க்கிறாள். காரணம், அவர்களின் உரையாடலை பொலோனியஸ் மறைந்திருந்து ஒட்டுக்கேட்பதை அவள் அறிவாள். கடைசிவரை தன் மகனிடம் தன் தரப்பை விளக்க முடியாமல், விஷத்தை அருந்தி உயிர்விடுகிறாள்.
நாடகத்தின் முதல் காட்சியிலேயே மன்னர் ஹேம்லெட்டின் ஆவி தோன்றிவிடுகிறது (இவரது பெயரும் ஹேம்லெட்). தனது தம்பியால் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்ட மன்னர் ஹேம்லெட் ஆவியாக அலைகிறார். தன்னுடைய மகன் ஹேம்லெட்டுக்குத் தான் கொலையுண்ட விவரத்தைச் சொல்லிவிட்டு, தன்னுடைய கொலைக்காக அவன் பழிவாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். தன் மகனிடம், ஒரு குறிப்பிட்ட காலம்வரையில் தன்னுடைய பாவங்களைப் போக்கிக்கொள்வதற்காக, ஆவியுலகில் இருந்துவிட்டு, அதன்பின்னரே தன்னால் சொர்க்கத்துக்குப் பிரவேசிக்க இயலும் என்கிறார். Purgatory (ஆன்ம சுத்திகரிப்பு) என்று அழைக்கப்படும் இவ்வழக்கம், கத்தோலிக்க மதத்தினரின் நம்பிக்கைகளில் ஒன்று. ஆனால், ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தில், ராஜ கன்னி (Royal virgin) என்று அழைக்கப்பட்ட ராணி முதலாம் எலிஸ்பெத் இங்கிலாந்தை ஆட்சிபுரிந்துகொண்டிருந்தார். அவர் புராட்டஸ்டன்ட் பிரிவின் ஆதரவாளர். அவருக்கு முன்னர் அரசாண்ட அவரது சகோதரியான ராணி மேரி, கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவராதலால், அவரது ஆட்சி காலத்தில் புராட்டஸ்டன்ட் பிரிவைச் சார்ந்தவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றார்கள். இதன் காரணமாக ராணி மேரி “Bloody Mary” என்றும் அழைக்கப்படுகிறார். மேரிக்குப் பின் ஆட்சிக்கு வந்த முதலாம் எலிஸபெத் காலத்தில் மதச் சண்டைகள் குறைந்தன. முதலாம் எலிஸபெத் காலத்தை மறுமலர்ச்சிக் காலம் (Renaissance period ) என்றும் அழைக்கிறார்கள். இக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் கலை இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஷேக்ஸ்பியரும் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த நாடகாசிரியரே. ஆனாலும், புராட்டஸ்டன்ட் மதப்பிரிவைச் சார்ந்த ராணியின் ஆட்சியில் கத்தோலிக்க மத நம்பிக்கையான purgatoryயைப் பற்றி ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகத்தில் குறிப்பிட்டிருப்பது ராணி எலிஸபெத் காலத்தில் நிலவிய சமயப் பொறைக்கு ஓர் அடையாளம் எனலாம். அதே சமயத்தில், இளவரசன் ஹேம்லெட் புராட்டஸ்டன்ட் சமயப் பிரிவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற ஊகமும் நிலவுகிறது, காரணம், கதைப்படி அவன் ஜெர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறான், இதே பல்கலைக்கழகத்தில்தான் புராட்டஸ்டன்ட் பிரிவில் செல்வாக்கு செலுத்திய முன்னோடியான மார்ட்டின் லூதர் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
மன்னர் ஹேம்லெட் தன் மனைவி கெர்ட்ரூட்டை ஆழமாக நேசித்திருக்கிறார். ஆகையால், ஆவி வடிவில் வந்தபோதும் தன்னுடைய மகனிடம், தன் மனைவியைத் தண்டிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார். தன்னுடைய தம்பியைப் பழிவாங்கக் கோரும் அவர், தன் மனைவியை மன்னிக்கத் தயாராகவே இருக்கிறார். ஹேம்லெட் தன் அன்னையிடம் வாக்குவாதம் செய்யும் காட்சியில் மீண்டும் ஆவி வடிவில் தோன்றும் மன்னர், அன்னையிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். மன்னர் ஹேம்லெட்டின் ஆவி கதையில் சிறுபொழுதே தோன்றினாலும், கதையில் முக்கியத் திருப்பங்களை உண்டாக்கிவிடுகிறது.
இந்நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரம் கிளாடியஸ். அதிகார ஆசையும், நயவஞ்சகமும், தகாப்புணர்ச்சி விழைவும் கொண்டவனாகச் சித்தரிக்கப்படும் கிளாடியஸ், ஒரு கட்டத்தில், தன்னுடைய குற்றத்தை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கோருகிறான். கடவுளிடம் தன் குற்றத்தை அவன் ஒப்புக்கொள்ளும் காட்சியில், “நான் என் சொந்த சகோதரனையே கொன்றவன். அதிகாரத்துக்கும் அவனது மனைவிக்கும் ஆசைப்பட்டேன். என் குற்றத்தின் நாற்றம் விண்ணை எட்டுகிறது. பாவப்பட்ட எனது கைகளில் எனது சகோதரனின் ரத்தக் கறை படிந்துள்ளது. இந்த ரத்தக்கறையை நீக்கி பனிபோல என் கைகளைச் சுத்தப்படுத்த சொர்க்கத்தில் போதுமான மழையே இல்லையா?” (What if this cursèd hand, Were thicker than itself with brother’s blood? Is there not rain enough in the sweet heavens, To wash it white as snow) என்று அழுகிறான். ஆனாலும், அடுத்தடுத்த காட்சிகளில் மீண்டும் தன் இயல்பான குற்றத்தின் பாதைக்குத் திரும்பிவிடுகிறான். இளவரசன் ஹேம்லெட்டைக் கொல்வதற்கு சதித்திட்டமும் தீட்டுகிறான். மண்ணாசையினாலும், பெண்ணாசையினாலும் பாதை மாறும் கிளாடியஸ், இறுதியில் ஹேம்லெட்டின் வாளால் வெட்டப்பட்டும் அவனால் விஷம் புகட்டப்பட்டும் இறக்கிறான்.
மொத்தத்தில், ஹேம்லெட் நாடகம், பல மர்மங்களும், புகைமூட்டங்களும் நிரம்பிய நாடகமாக இருந்தாலும், அதன் வேகமும், உணர்ச்சி ததும்பும் மொழியும், பார்வையாளர்களையும், வாசகர்களையும் ஒருசேரக் கவர்கிறது. குறிப்பாக, இந்நாடகத்தை வாசிக்கும் நவீன இலக்கிய வாசகர்களுக்கு இது மிகவும் அணுக்கமானது. எண்ணற்ற வாசக இடைவெளிகள், பூடகங்கள், குறியீடுகள் என வாசிப்பதற்கும் மிகவும் சுவாரஸ்யமான பிரதியாக ஹேம்லெட் நாடகம் விளங்குகிறது.
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…