கட்டுரை

கவிதையின் மதம் 11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

10 நிமிட வாசிப்பு

நூல் உருவம் கொள்ளத் தகுந்த கணிசமான கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்ட எழுபதுகளின் தொடக்க காலம் அது. கவிதை பற்றிய மிகத் தெளிவான ஆழ்ந்த எனது கண்ணோட்டங்களை எல்லா இலக்கிய வட்டாரங்களிலும் அன்பர்களிடமும் உரைத்துக்கொண்டிருந்த நேரம். திருக்குறளைப் பற்றி ஒரு மாணவத் துடுக்கோடு ஒரு வேலை செய்திருந்தேன். அதன்படி நான் தேர்ந்தெடுத்திருந்தது சற்றே ஏறத்தாழ ஒரு அய்நூறு திருக்குறள்கள். ‘கவிதை எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்கள்’ என்பது நூலின் தலைப்பு.

கவிதை என எழுதப்பட்டவை அல்ல; நீதிநூல் என்ற வகையிலேதான் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது என்பது நாம் அறியாததல்ல; அது எழுதப்பட்ட காலத்தில் உலகின் எந்தப் பிறமொழிகளிலும் இந்த அளவு சமய மேன்மையும் பண்பாடும் ஆழ்ந்த அறிவுமுடைய ஓர் இலக்கியம் தோன்றியிருக்கவில்லை என்கிற ஆராய்ச்சி அறிஞர் பெருமக்களின் குரல்களையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது நாம் இங்கே கவனிக்க வேண்டியது மிகமிக முக்கியமாக – இந்த அறிவு, பெருமைகள் எல்லாமே நன்மைபயக்காதது மட்டுமன்றி மனிதனின் ஓர் அகவளர்ச்சிக்கு – புதியதொரு சொல்லில் சொல்வோமானால் – ‘நல்லிருப்பு’க்கு ஆபத்தானதே ஆகும் என்பதுதான். (இதையே ஓர் அறிவுப் பார்வையோடு பலரும் சொல்லியிருக்கலாம்.)

அந்தத் தேர்வையும் ஒதுக்கலையும் செய்த சிந்தனைகளை ஒரு முழுமையான கட்டுரையாகவே அதே நூலில் முதல் அய்நூறு மற்றும் எண்ணூற்று முப்பது குறள்களோடு இணைத்து சற்று விரிவான ஒரு நூலாக்கத் திட்டம் தீட்டியிருந்தேன். நண்பர்களிடமும் பேசிக்கொண்டிருந்தேன். அதன்மூலம் மிகப் பயனுள்ளதான ஒரு காரியத்தைச் செய்துமுடித்துவிடலாம் என எண்ணியிருந்தேன்.

நாற்பது ஆண்டுகள் கழிந்தபோதும்கூட ஞாபகத்தில் வைத்திருந்து “அந்த நூல் என்ன ஆயிற்று?” என என்னைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுகூர்ந்தவர் கோவில்பட்டி அன்பர் ஓவியர் மாரிஸ். இன்று நமக்குத் தெரிகிறது, கூர்அறிவு என்கிற அடிப்படை ஞானம் ஒன்றிருந்தால் போதும் அறிவு ஒரு பெரிய விஷயமே அல்ல, எந்த மனிதனும் காணவேண்டியதைப் புரிந்துகொள்வது மிகமிக எளிதான ஒன்றுதான் என்பேன். ஒளிரவிடாது அதை அரிதாக்கி வைத்திருக்கும் தடைகள் -எல்லாவற்றிற்குமாகத்தான் – முழுமையாகவே நீங்கிவிட்டிருக்கையில்தான் அந்தச் சரியான நல்லவழி நடக்கிறது என்பதைக் கண்டிருக்கிறேன். இதுதான் நடக்கவேண்டியளவு தாராளத்துடன், வளத்துடன், நம் வாழ்வில் நடந்துகொண்டிருக்காத கொடுமையான (ஆன்மிக?) வறுமை இல்லையா? சொற்களில் மாட்டிக்கொள்ளாது இங்கே சொல்லப்படுவதைக் கவனித்துவிடுவீர்கள் என நம்புகிறேன். நமக்குத் தேவை அறிஞர்களோ, அறிவுகளோ அல்ல இவ்விஷயத்தில்.

சொற்களில் சொல்லமுடியாத ஓர் உண்மையைச் சொல்ல முயன்று சொற்களில் சொல்லியும் முடித்துள்ளார் வள்ளுவர் என்பதையும் பாருங்கள். அதற்கு அவர் அறிந்துள்ள உண்மைதான் அடிப்படையாக உள்ளது. பற்றற்றான் என்பது பற்றினை அறிந்துள்ள ஒரு நிலையின் பருஉருவப் படிமம் என்றே வைத்துக்கொள்வோம். இங்கே பற்றற்றான் – கடவுள் – என்ற சொல்லை உயிர்த்திருக்கும்படி ஒருவர் சொல்ல முடியுமென்றால் அந்தச் சொல்லை ஒரு கவிதைப்படிமம் என்றுமட்டும்தானே காணமுடியும்? பற்று என்பது ஒருவரின் சார்புநிலையும் இச்சையும் அல்லவா? அதன் ஆபத்துக்களை அறிந்தவராயிருக்கிறார் அவர். பற்றற்றான் பற்று என்பது இன்மையையே என்பதும், மனிதன் கண்டுகொண்ட மெய்ம்மை என்பதும் அதைப் பற்றிக்கொள்வது என்பது ஒருபோதும் சார்புநிலையோ இச்சையோ ஆகாது என்பதும் தெளிவு. இல்லையா? துறவு அதிகாரத்தில் உள்ள கவிதை இது.

முதல் கடவுள் அதிகாரத்தில் கடவுள்பற்றிய தத்துவப்பிரச்னைகள்தானே இடம் பெறுகின்றன? ஒருவர் அவற்றைத் தானேதான் படித்து அறிந்துகொள்ளவேண்டும். பிறருக்காய் ஏற்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் கவிதையின் மதத்தை நாம் அறிந்துகொள்ளாதவர்களாய் அதைக் கூறும் கவிதையையும், மனிதர்களையும், அறிவார்த்த ஓர்; நிலையையும்கூட – மட்டுமே என்பதுதான் சரி – மீண்டும் மீண்டும் ஆபத்தான நிலைகளோடே காலம்காலமாய்ப் பற்றிக்கொண்டு வாழ்கிறோம், இல்லையா?

‘சொற்கள் சோறு போடாது’ – மட்டுமல்ல; சொற்கள் விஷத்தையே தரும், தந்துகொண்டிருக்கின்றன. அர்த்தமற்று மரத்துப்போனவைகளாயும், பாறாங்கற்களாய் உணர்வுகளற்று நிற்பதன் மூலமாயும் இவை நடைபெறுகின்றன – என்பதைச் சொல்லவே நான் முயன்றுகொண்டிருக்கிறேன். ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற ஒரு குறளும் உண்டல்லவா? ஏன் இச்சொற்றொடர் பிறந்துள்ளது? சிந்தித்துப் பார்த்தால் போதும். அனைத்துத் தவறுகளுக்கான காரணத்தையும் நாம் கண்டுபிடித்துவிடலாம். இந்த அறிவு என்பதும் ஆராய்ச்சி என்பதும்கூட எளியதொரு செயல்தான். எது கடினமானதும், நடைபெறாது உலகைத் துயருக்குள்ளாக்கியிருப்பதும் அதை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும், ஏன் எப்போதும் செய்ய வேண்டிய ஒன்றை விலக்கிக்கொண்டே இருக்கிறோம் என்பதும்தானே நாம் இப்போது காண வேண்டிய உண்மை?

உண்மையின் உண்மையான செயல்பாடு செயல்கள்தாம். ‘ உண்மையை உரைக்கிறேன் பார்’ என்றபடி வந்துநிற்கும் சொற்கள் எல்லாமே போலிமையும் அதனாலான ஆபத்துக்களையும் விஷத்தையும் கொண்டவைகள்தாம்.

தொடக்க காலத்தில் ‘கவிதைபற்றி’ எனும் நூலில் மிகத்தெளிவாகவே ஒன்று கூறப்பட்டுள்ளது. கவிதையை நாம் உன்னதமானது என்று சொல்லவில்லை. உன்னதமானதைத்தான் கவிதை என்று சொல்கிறோம் என்பதே அது. இனி கவிதையின் மதம் என்ற ஒன்றுதான் உலகில் இருக்கமுடியும் என்பதும் அதுவே மனிதனின் சமயம் என்பதும்.

ஒருவர் இதுவரை தோன்றியுள்ள அனைத்து மதங்களின் மேன்மையான கூற்றுகளையெல்லாம் காணுவாரெனில் அது ஒரு கவிதையைப் புரிந்துகொள்வது போல்கிற காரியம்தான். நமக்கு முக்கியம், ஆபத்துகளாகும் அற்றின் ‘பிற’ அல்ல என்பதை அவர் நன்றாக அறிந்திருப்பாரானால் அது நம்மை உய்விக்கும்; அது மட்டுமே நம்மை உய்விக்கும். வாழ்வின் நடனத்தை நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே, நம் விரல்கள் பற்றியவுடன் மறைந்துவிடும் வாழ்வின் நடனத்தைத் தடுத்துநிறுத்தமுடியும். பார்வையால் மட்டுமே கிட்டக்கூடிய ஒன்று அது. கண்கள் மட்டுமே தொடும்வானம். பற்றுபவன் தன் தொடுகையை (பற்றை) உணர்வானானாலும்கூடப் போதும். அவ்வேளையும் அந்த நடனம் மறையவே மறையாது நிலவும். வழிநடையின்போது அனிச்சையாக நம் கைவிரல்கள் தொட்டுத் தடவிச் செல்லும் இலைகளின் நடனம் ஒருபோதும் மறையாது, மாறாக இயற்கையோடும்கூடிய ஒரு பேரிசையின் ஒத்திசைவோடே யாவும் கலந்து நிறைந்துவிடும். அத்தகைய ஒரு நடையை மேற்கொள்வதே அல்லவா வாழ்வின் இலட்சியமாகவும் நமது இலட்சியமாகவும் இருக்கமுடியும்?

ஒளிமிக்க ஒவ்வொரு கவிதையும் மரணத்தையும் பிறப்பையுமே தன்னுள் கொண்டபடி பிறிதொரு கவிதைக்காகவே ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது. பொய்யான அப்பிராணிகள் அசமந்தங்கள்போல் வந்துநிற்கும் கடவுள்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் சமத்துவமற்ற மனிதர்களுக்காகவும் அல்ல; ஆபத்தான இவர்களையும் இவற்றையும் அழித்தொழித்துவிடும் கருவியாக இருப்பதும் அதுதான். அதுவும் கூர்அறிவு கொண்டியங்கும் மனிதர்களுக்கும் மனிதவேளைகளுக்கும் மட்டுமே.

இத்துணை கடுமையான ஒன்றான இந்தக் கவிதையின் மதமும் பிற அனைத்து மதங்களையும் போலவே தீமைகளையே பயந்துவிடாதா என்றால், விடாது என்பதை நான் விளக்கவேண்டும் என நினைக்கிறேன். எண்ணங்களால் அது இயங்குவதல்ல. அறிவு தேவைப்படும்போது மட்டுமே இயங்குபவை நம் எண்ணங்கள். கவிதையின் மதம் எண்ணங்களன்றி மெய்ச்செயல்களையே விளைவிக்கக்கூடியதாக இருப்பதே அதன் இரகசியமும் மாண்பும்.

எனது வாழ்பனுபவங்களையும் கவிதைகளையும் மட்டுமே இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் காட்டுவதே சரியானது என நினைக்கிறேன். அதற்கு முன்பு சில கேள்விகள். இன்னும் நீங்காத மானுடத் துயர்களாய் எரிந்துகொண்டிருக்கும் நம் பிரச்னைகள் பவுத்தம் முதலான எந்த ஒரு மதத்தாலும், ஏன், எதற்காக, எவ்வாறு இன்னும் அழிவில்லாது எரிந்துகொண்டுதானிருக்கின்றன? இதுவே மிக முக்கியமான ஒரு கேள்வியாக நான் நினைக்கிறேன்.

சொற்களையும் எண்ணங்களையுமே பாதுகாப்பான வாழ்க்கையாகக் கொண்டு பற்றோடு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சுகமான வாழ்க்கைதான் விஷப்பயிர்களை விளைவிக்கும் களமாகவும் இருக்கிறது என்பதுதான் நாம் இதுவரை கண்டுகொள்ளாதது. அதற்குத் தேவையானது பற்றுக்களும் காலமும் தொட்டிராத பெருங்களம். அதற்குத் தேவையானதோ அதற்கான செயலை நோக்கித்தானே, தானே அமையும்? எந்த ஒரு இலட்சியமும் ஒரு எண்ணமே ஆகிவிடுவதால், எந்த ஒரு இலட்சியமும் எண்ணமும் இல்லாமல்தான் அதுவும் நிகழமுடியும் என்பதுதான் ஒரு சிக்கல். குழந்தைமை, களங்கமின்மை என்பதெல்லாம் அத்துணை சிரமமானதாகவும், குறுகியதாகவும், அரியதாகவும், ஏன் ஆகிவிட்டது, எப்படி? எதனால்?

அரண்களால் அமைந்த ஓர் பாதுகாப்புக் களத்துக்குள் – தனிப்பெருங்கருணை ஒன்றால் மட்டுமே ஒரு மாதிரிச் செயல்முறைப் பாடம் போல் நிகழும் வாழ்வினால்தானே நாம் பிழைத்துக்கொண்டுவருகிறோம்? அத்தகைய தருணங்களைக் கொண்டு நாம் உரைப்பதும், கண்டுகொண்டதே அன்றி யாரோ, தாமோ, கண்டுகொண்டதன் மூலம் அதாவது முன்னெண்ணங்கள் மூலம் நாம் நிகழ்த்துவதல்ல; நிகழ்த்தவில்லை என்பதை நாம் அறிந்துகொண்டுள்ளோம். அதையே கவிதை என்றும் கவிதையின் மதம் என்றும் நாம் இங்கே சொல்கிறோம். அனைத்து நற்பண்புகளினதும் நற்செயல்களினதும் ஊற்று இதுதான் இது ஒன்றேதான் என்கிறோம். இத்தகைய பண்புநலன்களைத்தானே எங்கள் ஒவ்வொரு மதமும் சொல்கிறது என்று ஒருவர் சொல்வாரேயானால் அம்மதங்களிலெல்லாம் மானுடச் செயல்களாக அன்றி, பிறிதொன்றாக ஒட்டியிருக்கும், படிமங்கள், சிலைகள், சடங்குகள், தங்களுக்கே மட்டுமென தனித்துப்போய் ஒட்டிக்கொண்டிருக்கும் அடையாளங்கள் இவைகள் நிகழ்த்தும் உண்மையான செயல்பாடுகள் என்ன என்பதையும் அவர் அறிந்து, ஆபத்துகள் அங்கிருந்துதான் வருகின்றன என்று – அந்தக் குப்பைகளிலிருந்து துர்நாற்றமெனவரும் நோய்க்கிருமிகளிலிருந்துதான் வருகிறது என்றும் கண்டு அவற்றை அவர் நீக்கவேண்டியிருக்கும்.

மெய்யானமதம் – கவிதையின் மதம் – ஒன்று இருக்கிறது, அதுவே நாம் அடைய வேண்டியது, அது மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் எந்த ஒரு அடையாளத்தையும் தத்துவத்தையும் கொள்கையையும் கொண்டிருக்காது, கண்ணுள்ளவர் கண்டுகொள்ளும்படி அது தானே நிகழும் – நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதை நாம் திட்டமிட்டு நிகழ்த்த முடியாது அப்படி நிகழ்வதில், ஆபத்துகள் தொடரமுடியாத உண்மையானது இருக்காது. இவைகளெல்லாம் நாம் கண்கூடாகக் காண்பவைதானே?

மீண்டும் மீண்டும் நாம் குறிப்பிட்ட விஷயத்திற்கே வருகிறோம். நமது போர்களுக்கும் குழப்பங்களுக்கும் அனைத்துத் துன்ப துயரங்களுக்கும் அமைதியின்மைக்கும் காரணமாய் நாம் கூறுவனவற்றை – ஒருவன் பின்பற்றும்போதே அவன் விடுதலையற்ற வேறு ஒரு மனிதனாக மாறிவிடுகிறான் -(குரூரமானவனாக!) ஆகவேதான் ஒருவன் அதனைத் தானாகக் கண்டுகொள்ளாதவரை விடுதலை இல்லை என்கிறோம்.

நாம் ஏன் இந்த இடத்தை ஒருநாளும் வந்தடையாமலிருக்கிறோம்? நல்ல கேள்வி இல்லையா இது? ஒவ்வொரு கேள்விக்கும் அந்தக் கேள்விக்குள்ளே பதில் இருக்கிறது, அதாவது கேட்பவனுக்குள்ளேதான் இருக்கிறது. அந்தக் கேள்வி உண்மையானதே அக்கறையானதே என்றால் அவனும் அந்தக் கேள்வியும் வேறுவேறு அல்ல என்பதையும் அவன் புரிந்துகொள்வான். தத்துவ அறிஞர்களும் ஆசான்களுமல்ல அவனது தேவை. நாம் நம் வாழ்க்கையையும் உலகையும் இவர்களால்தான் வீணடித்துக்கொண்டிருக்கிறோம். அதுவும் அவர்கள் குற்றமல்ல; நம்முடையதே அது என்றால் நாம் செய்ய வேண்டியதென்ன?

இவ்வகையில் நான் எனது அனுபவத்தை உங்களுக்குச் சொன்னால் அது பயன்படுமா? உத்தமமான அந்த நிலை எத்தகைய பாவமுமற்ற புனிதநிலை, எத்தகைய பெருநிலையும், பெருந்துக்கமும், பெருநிறையும் கொண்டது. அவ்வப்போது மானுட வாழ்வைவிட்டு விலகிநிற்கையில் வந்தொட்டும் இயற்கையின் ஒத்திசைவுமிக்க பெருவெளி தீண்ட நாம் உணரும் பேரானந்தநிலையையும் ஒருவர் சொன்னால் பயன்படுமா? மேலும் இவற்றை இரண்டாம் கையாகவா நாம் பெற விரும்புகிறோம்? சொற்கள் சோறுபோடுமா?

இது ஒரு தனிமனிதனுக்கான பிரச்னையல்ல; நாம் வாழும் உலகின் துயரக்கொடுமைகளுக்குமான பிரச்னையும் இதுதான். ஆகவே நமது மகத்தான பொறுப்பும், மன்னிக்கவே முடியாத பொறுப்பின்மையும் இங்கேதான் இருக்கிறது. இந்நிலையிலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்க முடிகிறது என்பதைத்தான் நான் தனிப்பெருங்கருணை ஒன்றின் மன்னித்தருளும் மாதிரிச்செயல்முறை பாடம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

காலம் மறந்துவிட்டது கவிதையாகவும் எழுதியிருக்கிறேன் அந்த அனுபவத்தை. அன்பர், வெங்கடாசலம் வஉசி கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசியர், கல்லூரியின் தனி நூலகத்திற்குள் எனது தீவிரமான வாசிப்புக்காலத்தில் நண்பராகிவிட்டவர்.

சில காலங்கள் – சில காலங்களே – நாங்கள் சந்திக்காமல் இருக்க நேர்ந்து திடீரென்று ஒருநாள் ஒரு நாற்சந்தியின் ஓரோர் மூலைகளில் நின்றபடி சாலைகளைக் கவனமாகக் கடக்க ஏறிட்டபோது எதிரே அவர்: அடடா! அதை எப்படிச் சொல்வேன்? கடவுளைக் கண்டமாதிரி! அப்போது வெங்கடாசலத்தின் முகத்தில் விரிந்த மலர்ச்சியையும்விட மேலாய் அல்லது அதற்கு இணையாய் அவர் நெற்றியிலிருந்த மிகப்பெரிய திருநீற்றுப்பட்டை! மிகக் குளிர்ச்சியான ஒரு அதிகாலை வேளை கதிரவன் கண்ணுக்குத் தென்படும்முன்னே உதித்த பேரொளிபோல!

இதை எழுதிக்கொண்டிருக்கும் உங்கள் எழுத்தாளரும் கவிஞருமான அன்பர், ஓர் அறிவியக்கத்தளத்தில் பேச நேரும்போதும் எழுதும்போதும் மட்டுமே எத்தகையவர் என்பதை நாம் அறிவோம் அல்லவா?

மேலே எழுதப்பட்டது ஒரு கவிதையின் முதல்பத்தி. அதன் அடுத்த பத்தியாகவே அதில் எழுதப்பட்ட பிறிதொரு அனுபவம் வேறொரு இடத்தில் வேறொரு காலத்தில் நடந்தது: ஒரு புத்தகத் திருவிழாவில் ‘தமிழினி’ கடைநோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். வசந்தகுமார் தன் உடனிருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார்: “சார், இவர்தான் ராசேந்திரன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் நன்கு படித்தவர். மொழிபெயர்த்துள்ளார். இவரே இதில் சூரர், தீரர், தொண்டர்!” அப்போதுதான் அந்த அன்பர் ராசேந்திரனின் புன்னகை பூத்த முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். நெற்றியில் அகலமாய் அதே போலொரு சின்னம். என் உதடுகளிலும் மெலிதானதொரு புன்னகை. ஆனால் அதன்பொருள் அப்போது வேறு. ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னது:”ஒருவர் ஒரு அடையாளத்தைப் பூணிக்கொள்கையில் பிறருக்கு எதிரான ஒரு போரைத்தான் அங்கே பிரகடனப்படுத்துகிறார்” என்பதே அது.

இந்த இருவேறு அனுபவங்களுக்கும் பிறகான ஒரு பத்து ஆண்டுகளுக்கும் பிறகுதான் இந்தக் கவிதையை நான் எழுதிமுடித்தபடி (கவிதை இக்கட்டுரையின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது) ராசேந்திரனை நினைத்துக்கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு முறை ‘தமிழினி’யில் அதே போலொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறோம். வியப்புடன் காதல் கொண்டவர்களாய் இணைந்து தேநீர் நோக்கி நடந்துசென்று கொண்டிருக்கையில் ஆழ்ந்த துயரும் களிப்புமான உரையாடலுடன், “சார், நான் ஒருநாள் சென்னையில் நிகழும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைநிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது Poems and Parables என்ற ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல் ஒன்று – அது விலை அதிகமாயிருந்தது கண்டு வாங்காமல் வந்துவிட்டேன். அதன்பிறகு ஒருபோதும் அது விற்பனைக்குக் கிடைக்காமலும் போய்விட்டது” (அப்போதே அது ஒன்றும் கவிதை எனும் துறை சார்ந்து நல்ல புத்தகம் இல்லை, என்றார் பிரமிள்) என்றேன்.

அன்று தூத்துக்குடி வந்து ஒரு பத்து இருபது நாட்கள்தான் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். “புத்தகங்கள் கிடைப்பதில்லை இப்போது. இணையத்தில் தேடி முழுமையாகப் புகைப்பட நகல்கள் இரண்டு எடுத்து ஒன்றை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்களால் எனக்கும் இதை இப்போது படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையாக உணர்ந்தேன்.” என நெகிழ்ச்சியான ஒரு கடிதத்துடன் எனக்கு அனுப்பியிருந்தார் அவர்.

காயப்படுவதும், நம் காயங்களிலிருந்தே நம் எல்லாச் செயல்களும் வெளிப்படுவனவாய் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதையும் நாம் அறியாமலிருக்கிறோம். அறியவேண்டியதாயிருப்பது அதுவேயாம். காயப்படுவது எது? நாம் யோசிக்கவேண்டும். ‘நான்’ என்று சேகரமாகியிருக்கும் நம் எண்ணங்கள் அல்லவா? ‘நான்’ என்பதே வன்முறை. நான் இன்னார் என்பது எத்துணை பெரிய வன்முறை? பிறவியிலேயே நாம் இப்படித்தான் இருக்கிறோம் என்பது உண்மையா? களைய முடியாததா அது? நடக்கக்கூடியதுதானே அது? எத்துணை தொழில்நுட்பங்களைக் கற்றிருக்கும் நாம் மின்னலைச் சுடராக்கி படைத்து வாழ்ந்துவிடத் தெரியாதவர்களாகவா இருப்போம்?

அண்மையில் தன்னறம் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது திருவண்ணாமலை பவா செல்லத்துரையின் தோப்பில் இருந்த விருந்து இல்லத்தில் தங்கியிருந்தேன். அதிகாலை எழுந்திருந்த போது அப்போதுதான் விழிக்கத் துவங்கியிருந்த குளுமையான இருளிலும் ஒளியிலும் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த தோப்பில் நடந்துகொண்டிருந்தேன். எப்போதுமேதான் வகுக்க முடியாத ஒளியிலும் நிழலிலும் ஊறிக்கிடக்கும் அடர்ந்த தோப்புகளில் காணப்படும் இருண்ட ஆழ்ந்த அமைதி என்பது இயற்கையின் மூலம் வெளிப்படும் தெய்வீகமான ஆற்றலும் மெய்ம்மையுமான மவுனமான ஓர் உரையாடல் என்றே எப்போதும் எனக்குப்படும்.

சற்று விடிந்து ஒளிவந்துவிட்டதும் எனது நடையும் முடிந்து குளத்தோரப் படிக்கட்டுபோல் காணும் வாசல்படிக்கட்டில் அமர்ந்தேன். அப்போது தூரத்து வெளிவாசலிலிருந்து ஒரு காரில் நுழைந்துவந்து என்னைப் பார்த்தபடி நின்றிருந்தனர் ஒரு முதிய பெண்மணியும் அவர் மகள்போல் தோற்றமளிக்கும் இளம்பெண்ணும். அந்த முதியபெண்மணி முந்திய நாள் விழாவில் அறிமுகமானவர்தான். அதிகாலையில் எழுந்து முடித்து, குளித்துவிட்டு, டிரைவரை எழுப்பிக் காரை எடுத்துக்கொண்டு, பக்கத்தில், சற்றுத்தூரத்திலிருக்கும் புகழ்பெற்ற ஒரு கோயிலுக்குச் சென்று கடவுளைத் தொழுது முடித்த கோலத்துடன் வந்து நின்றிருந்தார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னே டாக்டர் ஜீவாவை எனக்குத் தெரியும். கலைத் திரைப்படக் கழகத்தின் நிறுவனராய் இயக்குநராய் கலைகள்மீதும் இலக்கியம்மீதும் ஆர்வம் கொண்டவராய் அறியப்பட்டிருந்தவர். அதன் வளர்ச்சியே பின்னாளில் அவரை மருத்துவத்துறையில் மக்களுக்காக அரிய சாதனைகள் புரிந்த செயலாளியாகவும் மாற்றியிருந்தது. ஜீவா என்னை ஒரு நிகழ்வில் சந்திக்கும்போது என்னைப் பார்த்தபடி சொல்கிறார். “கவிதை எழுதிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது…” அதுதான் அவர் செயலாளியாய் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த காலம். என் முதுமையின் காரணமாய் உறுதியில்லாமல் நின்றிருந்த நினைவுடன் கேட்டேன். “ஜீவா எப்படி இருக்கிறார்” என்று தயக்கத்துடனேதான். லேசாகக் கண்கலங்கியாறு ‘அவர் போய்விட்டார்’ என்றார். ஆமாம் ஆமாம், கேள்விப்பட்டேன், கேள்விப்பட்டேன், என்று நானும் நினைத்துக்கொண்டேன். ஜீவா பற்றிய எனது நினைவுப் பகிர்தலால் அவரும் மிகவும் நெகிழ்ந்திருந்தார்.

இவை எல்லாம் நேற்று நடந்தவை. இப்போது முகமன்செய்து முடிந்தபடி அருகிலிருந்த இளம்பெண் ஆர்வமுடன் தன் கையிலிருந்த குங்குமப் பிரசாதத்தை விரித்து என்னிடம் அன்புச் சொற்களுடனே நீட்டினார். என்னை அறிந்தவர் போலவே ஜீவாவின் துணைவியார் செயலாற்றாமல் மவுனமாயிருந்தது அவர் புன்னகையிலிருந்தே தெரிந்தது.

நான் நல்லமாதிரி வாங்கி அவர்கள் முன்னேயே என் நெற்றியில் அணிந்துகொண்டேன் சற்றுநேரம். முகம் துடைத்துக்கொள்ள நேரும்போதே அதை அகற்றியும் கொண்டேன்.

‘தன்னற’த்தின் இன்னொரு நிகழ்ச்சி புத்தகக்கடைத் திறப்புவிழா, அந்நேரம் முதல் ஆளாய் நான்தான் திறந்துவைத்து உள்நுழைந்து சந்தனக் கிண்ணத்தைப் பார்க்கிறேன். முன்பெல்லாம் வழக்கமாய் அதைத் தொட்டு கையிலும் கழுத்திலும் தடவிக்கொள்வேன். அன்று என்னையறியாமலே ஓர் அனிச்சையாய் நெற்றியில் அதை ஓர் பொட்டாக இட்டுக்கொண்டேன். பிறகு அதைப் புகைப்படங்களில் காணும்போதுதான் அறிந்தேன்.

‘எல்லாம் ஒரு கணம் முன்புதான்’ என்ற ஒரு வரியை நான் விளக்க விரும்புகிறேன்.

மெய்யறிவாளனிடம் செயல்கள் தன்னிச்சையாக வெளிப்படுகின்றன. அனிச்சையாகவே ஒரு மனிதனிடம் வெளிப்படும் செயல் அடுத்த கணமே தனைஅறியும் வேகவிழிப்பினால் ‘எல்லாம் ஒரு கணம் முன்புதான்’ என்றபடி தோன்றி மறைந்துவிடக் கூடியதாகவே இருக்கிறது. தொடரும் எண்ணங்களின் தீமை அதற்கு இருக்காது. தேவையற்ற எண்ணங்களின் அடித்தளமாய் அமைந்ததும் அனைத்துத் தீமையினதும், வறுமையினதும் துயரங்களினதும் போர்களினதும் பாழ்கொலைக் களமாய் இருப்பதுவும் பெருங்களமாய்க் கண்ணுக்குத் தெரியாதவை போலும் தெரிபவை போலும் பரந்துவிரிந்து கிடப்பதும் பெரும்போர்களாய் நிகழ்வதும் கூர்ந்து நோக்குகையில் ஒன்றுமறியாதவையாய் நம்மிடம் ஒட்டிக்கொண்டிருப்பதும் – கூர்அறிவற்று நாம் பற்றிக்கொண்டிருப்பவையுமான எண்ணங்கள்தாம்.

மவுனமான பேரலைகள் எப்போதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் காலாதீதப் பெருவெளித் தருணங்களின் பொற்தீவுதானே நாம் அடைய வேண்டிய இடம்?

தொட்டதையெல்லாம் துடுப்பிட்டுத் தள்ளிக்கொண்டு முன்செல்கிறது தீவைக் கண்டுவிட்ட படகு, தான் தொட்டதுதான் அந்தப் பொற்தீவு என்பதையே அறியாமல், உணர்ந்த கணங்கள் மூலமே மீண்டும் மீண்டும் ஒரு வழியாய் தான் கண்டடைந்துவிட்ட வாழ்வை நிறைகொண்டு படைத்துவிட்டபடி, இயங்குகிறது.

0

வாழ்வின் நடனம்

வாழ்வின் நடனம்
மறையாதொளிர்வது கண்டான்,
நடைவழியில்
அசைந்தாடிக்கொண்டிருந்த செடிகளை
அனிச்சையாய் அவன் கைவிரல்கள்
வருடிக்கொண்டு சென்றபோது.

(மலரும் நன்மைகள். 2022)

செடி

அறியாது
ஒரு சிறுசெடியை மண்ணிலிருந்து பிடுங்கிவிட்டேன்
திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்
அது மரமாகிவிட்டது என் கையில்
அந்தரவெளியில் துடிதுடித்து
ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்
பாய்ந்துபோய் அதனை அணைத்துக் கொண்டது பூமி
கொலைக்கரத்தின் பிடிதகர்த்து
மேல்நோக்கிப் பாய்ந்தது புது இரத்தம்
கழுத்தில்பட்ட தழும்புடனே
பாடின தலைகள்.

(மின்னற்பொழுதே தூரம். 1981)

எதிர்பாராச் சந்திப்பில் ஏறிட்டுப் பார்த்தவேளை

புலர்காலைப் பொழுதின்
கீழ்வானின் திறந்தவிழிபோலும்
அழகினால் அவனைப் பொங்கவைத்தது
அவர் திருநீற்று நெற்றி.

அளாவி மகிழ்ந்து விடைபெற்று
தன் அரங்கம் வந்தான்.
அங்கே நண்பர் ஒருவர்
புதியதொரு நண்பர் ஒருவரை –
(புன்னகை பூத்த அதேபோலொரு அழகுமுகம்
நெற்றியில் ஒளிரும் அதே அணி)
அறிமுகம் செய்தார்:
“இவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியைக்
கரைத்துக்குடித்தவர், திறன்மிக்கார்,
தொண்டர், மாணவர், சூரர்…”

கருணையின் இகழ்ச்சியற்ற
அனுதாபப் புன்னகையைப் பூத்தன
அவன் இதழ்கள்.
இந்த மாதிரி அடையாளம் பூணுதல் எல்லாம்
ஒருவன் பிறருக்கு எதிராய்
தன்போரை அறிவிப்பதுதான்
என்றறைந்த கிருஷ்ணமூர்த்தியின்
நினைவைத் தட்டியது அந்த நிகழ்வு. அவ்வளவே.
மற்றபடி ஏது குறையும் நிகழவில்லை அவ்வேளை.
ஆனால்
ஆனால் என்ற சொல்லொ செயலோ
அமைதியோ, அமைதியின்மையோ,
ஏதென்றே சொல்லமுடியாத ஒன்று
அவனை வழிநடத்திக்கொண்டிருந்தது அங்கே.

(மலர் தேடும் மலர். 2020)

அது நிகழ்கிறது

அனிச்சையாய்
தரையிலிருந்த ஒரு புல்லினை
நம் விரல்கள் பிடுங்கிவிடுவதற்கும்,
நடந்துசெல்கையில்
அனிச்சையாய் நம் கை
ஒரு இலையைப் பிடுங்கிவிடுவதற்கும்,
வழியிலுள்ள ஒரு சாமி சிலைகண்டு
அனிச்சையாய் நம் கைகள் தொழுவதற்கும்…
அனிச்சையாகவே நாம் செய்யும் செயல்கள் எல்லாம்
அனிச்சையாகவேதானா நடைபெறுகின்றன?

அமைதியிழந்த மனம்
விடுதலையற்று மாட்டிக்கொண்ட
அவதிகளாலானதுதானே
நம் அவல வாழ்வு?

உதிர்ந்து கிடக்கும் ஒரு மலரை
அனிச்சை எனும் மேற்படி
எந்த ஒரு அனிச்சையும் இச்சையுமற்று –
கையிலெடுக்கையிலும், பின்
விட்டுச் செல்கையிலும்தானே
அது நிகழ்கிறது?

கடவுள்

எண்ணங்களற்ற நிலைதான்
கடவுள் என அறிந்துகொண்டபின்
ஓ, கடவுளே,
நான் எப்படி உம்மை
எண்ணிக்கொண்டே இருப்பேன்?

டம்… டம்… டம்… டம்… டம்… டம்…

எண்ணங்களற்ற நிலையின்
பார்வை வெளிதானே
மெய்ச் செயல்கள் பிறக்குமிடம்
மலர்கள் பூக்குமிடம்
காதல் மலருமிடம்
கவிதை கனலுமிடம்
கடவுளர்கள் வந்து தம்
தாகம் தணித்துக்கொள்ளுமிடம்
ஓரிதயம் கொண்டவர்களாய்
உலகம் ஒன்றுசேருமிடம்.


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

இதழ் 15 பிற படைப்புகள்

Share
Published by
தேவதேவன்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago