Categories: கட்டுரை

தூக்குப்பை புனைவுக் கோட்பாடு

10 நிமிட வாசிப்பு

அமெரிக்க எழுத்தாளரான உர்சுலா லெ குவின் (1929 – 2018) அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் (23 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுதிகள், 11 கவிதைத் தொகுதிகள், 13 குழந்தை புத்தகங்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் நான்கு மொழிபெயர்ப்புகள்). ஆறு நெபுலா (Nebula) விருதுகள், ஏழு ஹியூகோ (Hugo) விருதுகள் மற்றும் PEN/Malamud போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

இவர் எழுதிய The Carrier Bag Theory of Fiction எனும் இக்கட்டுரை, அறிவியல் புனைவு எழுதும் 12 பெண் எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்பாக 1988இல் வெளிவந்த Women of Vision என்கிற நூலில் இடம்பெற்றது.

மொழியாக்கம்: ஶ்ரீதர் ரங்கராஜ் மற்றும் அரூ குழுவினர்


ஹோமினிட்கள் மனிதர்களாகப் பரிணமித்ததாகக் கருதப்படும் மிதவெப்ப மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் முதன்மை உணவு தாவரங்களிலிருந்து பெறப்பட்டது. அந்தப் பகுதிகளில் பழைய கற்காலம் (Paleolithic), புதிய கற்காலம் (Neolithic) மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டங்களில் (Prehistoric) அறுபத்தைந்திலிருந்து எண்பது சதவீதம் வரையிலான உணவுகள் சேகரிக்கப்பட்டவையே; ஆர்க்டிக் கண்டத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் மட்டுமே இறைச்சி முதன்மையான உணவு. கண்கவரும் வண்ணம் குகைச் சுவரிலும் நம் மனத்திலும் நிறைந்துள்ளனர் பெரிய பெரிய மிருகங்களான மேமத்களை (mammoth) வேட்டையாடியவர்கள். ஆனால் உண்மையில் உயிருடன், உடலில் கொழுப்புடன் வாழ்வதற்கு நாம் செய்தது விதைகள், வேர்கள், முளைகள், தளிர்கள், இலைகள், கொட்டைகள், தசைக்கனிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றைச் சேகரித்தலே. இவற்றுடன் பூச்சிகள், மெல்லுடலிகள், வலை அல்லது பொறி வைத்துப் பிடிக்கப்பட்ட பறவைகள், மீன், எலிகள், முயல்கள் மற்றும் பிற தந்தமற்ற சிறு குட்டிகள் புரதத்தை அதிகரிக்க உதவின. மேலும், இதற்காக நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கவில்லை — விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிறரது வயல்களில் அடிமைப்பட்டு உழைத்த விவசாயிகளது உழைப்பைக் காட்டிலும் மிகக்குறைவு, நாகரிகம் உருவானதற்குப் பிறகான ஊதியம் பெறும் உழைப்பாளர்களைக் காட்டிலும் குறைவான உழைப்பே. வரலாற்றுக்கு முந்தைய மனிதனால் சராசரியாக வாரத்திற்குப் பதினைந்து மணிநேரம் உழைப்பதன் மூலம் நல்லதொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

வாழ்வாதாரத்திற்கென வாரத்திற்குப் பதினைந்து மணிநேரம் செலவிடுதல் என்பது பிற விஷயங்களுக்குப் போதுமான நேரத்தை அளிக்கும். அதீத ஓய்வு நேரம் இருப்பதால், வாழ்க்கையை உயிர்ப்பூட்டும் குழந்தைகள் இல்லாத, ஏதேனுமொன்றை உருவாக்கும் திறன் இல்லாத, சமைக்க, பாடத் தெரியாத, சிந்திப்பதற்குச் சுவாரசியமான நினைவுகள் இல்லாத, அலைவுறும் மனம் உடையவர்கள், தங்கள் வாழ்க்கையை உயிரூட்டுவதற்கென மேமத் வேட்டைக்கு நழுவிச்சென்றிருக்கக் கூடும். திறமையான வேட்டைக்காரர்கள் தளர்ந்த நடையுடன் திரும்பியிருப்பார்கள், கையில் பெருமளவு இறைச்சி, ஏராளமான தந்தம் மற்றும் கதையுடன். இவற்றில் கவனிக்க வைத்தது இறைச்சியல்ல. கதையே.

நான் எவ்வாறு வன-ஓட் (wild oat) விதையொன்றின் உமியை நீக்கப் போராடினேன், பிறகு இன்னொரு விதை, பிறகு உமி, பிறகு விதை, அதன்பிறகு உமி, பிறகு ஒலுங்கு கடித்த இடங்களைச் சொறிந்துகொண்டேன், அதன்பிறகு ஊல் வேடிக்கையாக ஏதோ கூறினான், நாங்கள் இருவருமாகச் சேர்ந்து நீரோடைக்குச் சென்று நீர் அருந்திவிட்டுச் சிறிதுநேரம் நீர்வாழ் கவுளிகளைப் பார்த்தபடியிருந்தோம், அதன்பிறகு எனக்கு இன்னும் சில ஓட் விதைகள் கிடைத்தன, என்கிற விதத்தில் மனதைக் கவரும் கதையொன்றைக் கூறுவது கடினமானது… நான் எவ்வாறு மிகப்பெரிய விலங்கின் மயிரடர்ந்த விலாப்பகுதியில் ஆழமாக என்னுடைய ஈட்டியைப் பாய்ச்சினேன், அந்நேரம் ஊப் எவ்வாறு அலைபாயும் தந்தமொன்றால் அறையப்பட்டு வலியில் அலறினான், எவ்வாறு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் நீரோடையெனப் பாய்ந்தது, நான் செலுத்திய அம்பு குறிதவறாமல் எவ்வாறு அதன் கண்ணைத் துளைத்து மூளைக்குள் புகுந்தது, எவ்வாறு பூப் சரிந்து வீழ்ந்த மேமத்-தால் நசுக்கப்பட்டுக் கூழானான் என்ற கதையோடு அது ஒருபோதும் போட்டிப்போட முடியாது. நிச்சயமாக முடியாது.

அந்தக் கதையில் சாகசம் மட்டும் இல்லை, அதிலொரு நாயகன் இருக்கிறான். நாயகர்கள் சக்தி வாய்ந்தவர்கள். வன-ஓட் குழுவிலிருக்கும் ஆண்கள், பெண்கள், அவர்களது குழந்தைகள், உருவாக்குபவர்களின் திறன்கள், சிந்திப்பவர்களின் சிந்தனைகள் மற்றும் பாடுபவர்களின் பாடல்கள் அனைத்தும், நீங்கள் உணரும் முன்னமே அக்கதையின் பகுதியாக மாறிவிடும். அனைத்தும் அந்நாயகன் குறித்த கதையில் தொழிற்படுவனவாகத் திணிக்கப்பட்டுவிடும். ஆனால் அது அவர்களின் கதையல்லவே. கதை அந்நாயகனுடையது.

மூன்று கினிக்கள் (Three Guineas) என்ற புத்தகத்தைக் குறித்துத் திட்டமிடுகையில் விர்ஜீனியா வுல்ஃப் (Virginia Woolf) தன்னுடைய குறிப்பேட்டில் ‘அரும்பதவுரை’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார்; வித்தியாசமான கதையொன்றைச் சொல்லும்பொருட்டு அவரது புதிய திட்டத்தின்படி ஆங்கிலத்தை மீளுருவாக்கம் செய்ய நினைத்தார். அந்த அரும்பதவுரையில் வீரம் என்ற பதிவுக்கான விளக்கமாக ‘உணவு நச்சுப்பாடு’ (Botulism) என்றிருந்தது. நாயகன் என்பதற்கு வுல்ஃபின் அகராதியில் ‘கண்ணாடிப் புட்டி’ என்று பொருள். ஒரு நாயகன் ஒரு கண்ணாடிப் புட்டி என்பது கடுமையான மறுமதிப்பீடுதான். இதோ, நான் கண்ணாடிப் புட்டியை நாயகனாக முன்மொழிகிறேன்.

ஜின் அல்லது ஒயின் அடங்கிய வெறும் கண்ணாடிப் புட்டியல்ல. அதன் மூல அர்த்தத்தில், பொதுவாக ஒரு கொள்கலன், வேறு ஏதோவொன்றைத் தன்னுள் வைத்திருக்கும் பொருள்.

உள்ளே வைப்பதற்கென்று உங்களிடம் கலன் இல்லையென்றால், உணவு உங்களிடமிருந்து தப்பிவிடக் கூடும் — அது ஓட் போன்று எதிர்த்துப் போராடாத திறமையற்ற ஒன்றாக இருந்தாலும் சரி. உணவு கிடைக்கும்போது உங்கள் வயிற்றுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இட்டுவைக்க வேண்டும், ஏனெனில் அதுதான் முதன்மையான கொள்கலன்; ஆனால் நாளைக் காலையில் கண்விழித்ததும் குளிரும் மழையுமாக இருந்தால் என்ன செய்வது, மெல்லுவதற்கென சில கைப்பிடி ஓட் இருந்தால் நல்லதல்லவா, குழந்தை ஊமுக்கும் அதைக்கொடுத்து வாயை அடைக்கலாம். ஆனால், ஒரு வயிற்றில் நிரம்பியதைக் காட்டிலும் அதிகமாக, ஒரு கைப்பிடிக்கும் அதிகமாக உங்களின் இருப்பிடத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வீர்கள்? எனவே நீங்கள் எழுந்து அந்த பாழாய்ப்போன சொதசொதவென்ற ஓட் விளைவிடத்திற்கு மழையில் நனைந்தபடி செல்கிறீர்கள். அதேசமயம் குழந்தை ஊஊவை எதிலாவது வைத்துக்கொள்ள முடிந்தால், இரண்டு கைகளாலும் ஓட்களை அள்ளிக்கொள்ள முடியுமல்லவா? ஓர் இலை, ஒரு சுரையோடு, ஒரு வலை, ஒரு பை, ஓர் உறி, ஒரு சாக்கு, ஒரு புட்டி, ஒரு பானை, ஒரு பெட்டி, ஒரு கொள்கலன். ஒரு தாங்கி. ஒரு ஏற்பி.

முதல் பண்பாட்டுக் கருவியென்பது அநேகமாக ஏற்பியாக இருக்கக்கூடும்… பல கோட்பாட்டாளர்கள் தொடக்கக்காலப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பென்பது சேகரிக்கப்பட்ட பொருள்களை வைத்துக்கொள்வதற்கான கொள்கலனாகத்தான் இருக்கமுடியும் என்று கருதுகின்றனர், ஏதோ ஒருவகையான உறி அல்லது வலையினாலான தாங்கி.

பெண்களின் உருவாக்கம் (Women’s Creation, McGraw-Hill, 1975) என்ற நூலில் எலிஸபெத் ஃபிஷர் (Elizabeth Fisher) இக்கருத்தை முன்வைக்கிறார். ஆனால், அப்படியிருக்க முடியாதே. அந்த அற்புதமான, பெரிய, நீளமான, கடினமான பொருள், அது ஓர் எலும்பு என்று நினைக்கிறேன், எங்கே அது? ஒரு திரைப்படத்தில், குரங்குமனிதன் முதன்முதலில் யாரையோ அவ்வெலும்பைக்கொண்டு தாக்கிவிட்டு முதல் கொலையைச் செய்துவிட்ட பரவசத்தில் உறுமியபடி, வானத்தில் எறிந்ததும், அது சுழன்று விண்வெளிக் கப்பலாக மாறும். பிறகு அக்கப்பல் பிரபஞ்சத்தைக் கருவுறச் செய்யும் பொருட்டு விண்வெளியில் சீறிப்பாயும். திரைப்படத்தின் முடிவில் ஓர் அழகான கரு உருவாகும் — வழக்கம்போல அது ஆண் — அந்தக் கரு (விசித்திரமாக) கருப்பையோ, உருவாகுமிடமோ இன்றிப் பால்வெளியில் மிதந்து கொண்டிருக்கும். அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அதுகுறித்த அக்கறையும் எனக்கில்லை. நான் அந்தக் கதையைச் சொல்லவரவில்லை. அக்கதையை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். கம்புகள், ஈட்டிகள், வாள்கள், நொறுக்குவதற்குக் குத்துவதற்கு அடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட நீளமான உறுதியான பொருள்கள் — இவற்றைப் பற்றிய கதைகள் அனைத்தையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பொருள்களை வைத்துக்கொள்ள உதவிய பொருள் குறித்தோ பொருள்கள் அடங்கியுள்ள கொள்கலன் குறித்தோ நாம் கதைகள் கேள்விப்பட்டதேயில்லை. அது புதுமையான கதை. முக்கியமான செய்தி.

அதேசமயம் பழமையானதும்கூட. ஆயுதம் எனும் ஆடம்பரமான, தேவைக்கதிகமான கருவிக்கும் முன்பு — யோசித்துப் பார்த்தால் மிக நீண்ட காலத்திற்கு முன்பு — பயனுள்ள கத்தி கோடரிக்கும் முன்பு; இன்றியமையாத சுத்தியல், அரைப்பான், மற்றும் தோண்டும் கருவிகள் போல (வீட்டில் வைத்துண்ணும் பொருட்டு நிரப்பி எடுத்துச்செல்ல ஏதுமில்லை எனும்போது அதிகமான கிழங்குகளைத் தோண்டியெடுத்து என்ன பயன்) மனித உடலிலிருந்து ஆற்றலை வெளிச்செலுத்தும் கருவிகளின் காலத்தில் அல்லது அதற்கும் முன்னரே ஆற்றலை வீட்டிற்குக் கொண்டுவரும் கருவிகளை நாம் உருவாக்கிவிட்டோம். இதுவே சரியாகப் படுகிறது. மனிதப் பரிணாம வளர்ச்சியின் தூக்குப்பைக் கோட்பாடு என்று ஃபிஷரால் அழைக்கப்படும் இச்சிந்தனையுடன் உடன்படுகிறேன்.

இக்கருதுகோள் மிகப்பரந்த அளவிலான கோட்பாட்டுத் தெளிவின்மை கொண்ட பகுதிகளை விளக்கியும், கணிசமான அளவில் கோட்பாட்டு அபத்தங்களை (பெரும்பாலும் புலிகள், நரிகள் மற்றும் குறிப்பிட்ட எல்லைப்பகுதிகளை ஆட்சி செய்யும் பாலூட்டிகளைக் கருத்தில் கொள்பவை) தவிர்ப்பதோடும் நின்றுவிடவில்லை; தனிப்பட்ட முறையில், இதற்குமுன் நான் உணர்ந்திராத வகையில் மனிதகுல பண்பாட்டின் மீது என்னை நம்பிக்கை கொள்ளவும் செய்கிறது. பண்பாடென்பது குத்துவதற்கும் அடிப்பதற்கும் கொல்வதற்கும் நீண்ட உறுதியான ஆயுதங்களின் பயன்பாட்டிலிருந்து கிளைத்ததாக விரிந்து வளர்வதாக விவரிக்கப்படும் வரை அதில் எனக்கு ஏதேனும் குறிப்பிட்ட பங்கிருப்பதாகவோ பங்கு வேண்டுமென்றோ ஒருபோதும் நான் கருதியதில்லை. (“பெண்களிடமுள்ள நாகரிகக் குறைபாடென ஃபிராய்ட் கருதியது உண்மையில் நாகரிகத்தின் மீது பெண்களுக்குள்ள விசுவாசக் குறைபாடே,” என்கிறார் லிலியன் ஸ்மித்.) இந்தக் கோட்பாட்டாளர்கள் குறிப்பிடும் சமூகம், நாகரிகம் என்பவை அவர்களுடையதே என்பது வெளிப்படை; அவர்களே அதன் உரிமையாளர்கள், அவர்கள் அதை விரும்பினர்; அவர்கள் மனிதர்கள், கடுமையாகத் தாக்குதல், குத்துதல், தள்ளுதல், கொல்லுதல் என முழுமையான அளவில் மனிதர்கள். நானும் மனிதனாக இருக்க விரும்பி, நான் அவ்வாறு இருந்ததற்கான சான்றுகளைத் தேடுகிறேன்; ஆனால் ஓர் ஆயுதத்தை உருவாக்கி அதனால் கொலை செய்வதே அதற்கான அளவுகோல் என்றால், நான் மாபெரும் குறைபாடுள்ள மனிதன் அல்லது மனிதனே அல்ல.

அவர்கள் சொல்கின்றனர், “அது சரிதான். நீ ஒரு பெண். அநேகமாக மனித இனத்தில் சேர்த்தியில்லை, நிச்சயமாகக் குறைபாடு கொண்டவள். இப்போது, நாயகனாகிய ஆணின் ஏற்றம் குறித்த கதையை நாங்கள் சொல்லிமுடிக்கும் வரை சற்று அமைதியாக இரு.”

“சரி நடக்கட்டும்,” என்றபடி ஊஊவை தாங்குபையில் ஏந்திக்கொண்டு கூடை சுமந்துவரும் குட்டிக் குழந்தை ஊம் உடன் நான் வன-ஓட்களை நோக்கி நகர்கிறேன். “நீங்கள் எவ்வாறு பூப் மீது மேமத் விழுந்தது என்பதை, கெய்ன் எவ்வாறு ஏபெலைத் தாக்கினான் என்பதை, எவ்வாறு நாகசாகியின் மீது வெடிகுண்டு விழுந்தது என்பதை, எவ்வாறு எரியும் குழம்பு கிராமவாசிகள் மீது கவிந்தது என்பதை, தீய சாம்ராஜ்யங்களின் மீது ஏவுகணைகள் எப்படி விழும் என்பதைப் போன்ற மனித (ஆண்) குலத்தின் ஏற்றத்திலுள்ள இன்னபிற படிகளைக் கூறிக்கொண்டிருங்கள்.”

பயனுள்ளது, உண்ணக்கூடியது, அழகானது என்பதால் ஒன்றைப் பைக்குள், கூடைக்குள், உருட்டப்பட்ட மரப்பட்டை அல்லது இலைக்குள், உங்களது சொந்தத் தலைமுடி கொண்டு பின்னப்பட்ட வலைக்குள், உங்களிடம் உள்ள ஏதோவொன்றில் வைத்து வீடு என்ற ஓரிடத்திற்கு எடுத்துச் செல்வது மனித இயல்பு, அந்த வீடு என்பதே மற்றொரு பெரிய அளவிலான பையாக அல்லது மூட்டையாக, மனிதர்களுக்கான கொள்கலனாக இருக்கிறது, பிறகு தேவைப்படும்போது நீங்கள் அவற்றை உண்கிறீர்கள், பகிர்ந்துகொள்கிறீர்கள், திட்டவட்டமான கொள்கலனொன்றில் குளிர்காலத்திற்காகச் சேமிக்கிறீர்கள், மருந்துச் சிப்பத்திலோ கோவிலிலோ அருங்காட்சியகத்திலோ வைக்கிறீர்கள், ஒரு புனிதத்தலத்தில் புனிதமானவற்றைக் கொண்டிருக்கும் ஓர் இடத்தில் வைக்கிறீர்கள், பிறகு அடுத்த நாளும் அநேகமாக நீங்கள் அதையே மீண்டும் செய்கிறீர்கள் — இதைச் செய்வதுதான் மனிதக்குலத்தின் வழக்கம் எனில், இதைச் செய்வதனால் ஒருவர் மனிதனாகிறார் எனில் நானும் ஒரு மனிதன்தான். முழுமையாக, சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, முதல்முறையாக அவ்வாறிருக்கிறேன்.

முரட்டுத்தனமற்ற போர்க்குணமற்ற மனிதராக அல்ல என்பதையும் உடனடியாகத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் முதுமையை நெருங்கும் கோபம் கொண்ட, கைப்பையால் வல்லமையுடன் முரடர்களை விரட்டியடிக்கும் பெண்மணி. இருப்பினும் அவ்வாறு செய்வதற்காக என்னை நாயகத்தன்மை கொண்டவளாக நானோ மற்றவர்களோ கருதிக் கொள்வதில்லை. அது தொடர்ந்து வன-ஓட்களைச் சேகரிப்பதற்கும் கதைகளைக் கூறும்பொருட்டும் செய்து தொலைக்க வேண்டிய சாதாரண காரியங்களுள் ஒன்றே.

இந்த வேறுபாட்டை உருவாக்குவதே அந்தக் கதைதான். என்னுள் உள்ள மனிதத்தை என்னிடமிருந்தே மறைத்த கதை, மேமத் வேட்டையாளர்கள் கூறும் தாக்குதல், குத்துதல், வன்புணர்தல், கொல்லுதல் அடங்கிய கதை, நாயகனைக் குறித்த கதை. உணவு நச்சேற்றத்தின் (botulism) அற்புதமான நஞ்சுக்கதை. கொலையாளியின் கதை.

அந்தக்கதை முடிவை நெருங்குவதாகச் சிலசமயங்களில் தோன்றுகிறது. கதை கூறுலே இல்லாமல் ஆகிவிடும் நிலையைத் தவிர்க்க, வன-ஓட்களுக்கிடையே, அன்னியமான சோளக் கதிர்களுக்கிடையே உழலும் எம்மில் சிலர் வேறொரு கதையைக் கூறுவது நல்லதென நினைக்கிறோம். ஒருவேளை, பழைய கதைகள் முடிந்தபின் மக்கள் இதைக் கேட்கலாம். இதில் சிக்கல் என்னவென்றால் நாமனைவரும் கொலையாளியின் கதையுடைய பகுதியாக மாற நம்மை அனுமதித்திருக்கிறோம். அந்தக் கதையோடு நாமும் முடிந்து போகலாம். எனவே, ஒருவித அவசர உணர்வுடன் நான் வேறொரு கதையைத் தேடுகிறேன், அதன் இயல்பை, கருப்பொருளை, அதன் வார்த்தைகளை. நான் தேடுவது சொல்லப்படாத அந்த ஒன்றை, வாழ்க்கைக் கதையை.

வேறொரு கதை என்பது நமக்கு அறிமுகமில்லாதது, அது கொலையாளியின் கதையைப் போலச் சுலபமாக, யோசனையின்றி வெளிப்படுவதில்லை; ஆனாலும் ‘சொல்லப்படாதது’ என்பது மிகையே. அந்த வாழ்க்கைக் கதையை பல்வேறு வார்த்தைகளில், விதங்களில் காலங்காலமாக மக்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். படைப்பு மற்றும் பரிணாமம் குறித்த தொன்மங்கள், தந்திரக்கார கதைகள், நாட்டுப்புறக் கதைகள், நகைச்சுவைகள், புதினங்கள் என…

புதினம் என்பது அடிப்படையில் நாயகத்தனமற்ற கதை சொல்லல். எனினும் அவ்வப்போது நாயகன் என்பவன், அனைத்தையும் கைக்கொண்டு இயக்க விழையும் தனது ஆதிக்க மனம் மற்றும் கட்டுப்பாடற்ற உந்துதல் காரணமாக அதைக் கைப்பற்றிவிடுகிறான். அதேசமயம், அப்புதினத்தை அழித்து விடக்கூடிய தனது கட்டுப்படுத்தவியலாத உந்துதலைக் கட்டுக்குள் வைக்கக் கடுமையான ஆணைகளையும் சட்டங்களையும் விதித்துக்கொள்கிறான். அதற்காக, முதலில் நாயகன் தனது ஊதுகுழல்களான சட்டமியற்றுபவர்கள் மூலம் ஆணைகளைப் பிறப்பிக்கிறான். முதல் ஆணை — கதையின் சரியான வடிவமென்பது அம்பு அல்லது ஈட்டியின் வடிவம் போல இருக்கவேண்டும். இங்குப் புறப்பட்டு நேரடியாக அங்குச் சென்று, டக்! சரியாக இலக்கை தைக்கவேண்டும் (அது இறந்து வீழவேண்டும்); இரண்டாவதாக, கதை மற்றும் புதினத்தின் மையக்கருவில் ஒரு மோதல் (conflict) இருக்க வேண்டும். மூன்றாவதாக, கதையில் அவன் இல்லையென்றால் அது சுவாரசியமற்றதாக ஆகிவிடும்.

இவை அனைத்திலிருந்தும் நான் வேறுபடுகிறேன். புதினம் என்பதன் இயல்பான, சரியான, பொருத்தமான வடிவம் மூட்டை அல்லது பை என்பேன். புத்தகம் சொற்களைக் கொண்டிருக்கிறது. சொற்கள் விஷயங்களை வைத்துள்ளன. அவை அர்த்தங்களைத் தாங்கியவை. புதினம் ஒரு மருந்துப்பொதி — குறிப்பிட்ட ஆற்றல் வாய்ந்த தொடர்புகளினால் பின்னப்பட்ட பலவற்றை தம்முள் ஏந்தியபடி, அவற்றை நம்முடனும் தொடர்புப்படுத்தும் பொதி.

புதினத்தில் உள்ள கூறுகளுக்கு இடையேயான தொடர்புகளில் ஒன்றாக மோதல் இருக்கலாம், ஆனால் கதைகூறுதலையே வெறும் மோதலாகக் குறைப்பதென்பது அபத்தமானது. (எழுதுவது எப்படி என்ற கையேடொன்றை வாசித்தேன். அதில், “கதை என்பதை மோதலாகவே கருதவேண்டும்,” என்றிருந்தது. தொடர்ந்து அதற்கான உத்திகள், தாக்குதல், வெற்றி, இத்யாதிகள்.) தூக்குப்பை / வயிறு / பெட்டி / வீடு / மருந்துப்பொதியாகப் புனையப்படும் கதையில், மோதல், போட்டி, மன அழுத்தம், போராட்டம் போன்றவை ஒரு முழுமையின் அத்தியாவசிய கூறுகளாகக் கருதப்படலாம். எனினும் ஒரு கதையை முழுவதுமாக மோதலாகவோ சீரிசைவாகவோ வகைப்படுத்தவிட முடியாது. ஏனெனில் கதையின் நோக்கம் என்பது சிக்கலைத் தீர்ப்பதோ நிலைபெறுதலோ அல்ல, தொடர்ச்சியான செயலாக்கம் மட்டுமே.

முடிவாக, நமது நாயகன் இந்த பையினுள் அவ்வளவு சிறப்பாகத் தோற்றமளிக்கவில்லை என்பது தெளிவு. அவனுக்கு ஒரு மேடை தேவைப்படுகிறது, ஒரு பீடம், ஒரு சிகரம். அவனைக் கைப்பையில் வைத்தீர்கள் என்றால் அவன் ஒரு முயலைப் போல, ஓர் உருளைக் கிழங்கைப் போலக் காட்சியளிப்பான்.

இதனால்தான் நான் புதினங்களை விரும்புகிறேன்: நாயகர்களுக்குப் பதிலாக அவற்றில் மனிதர்கள் இருக்கிறார்கள்.

எனவே நான் அறிவியற்புனைவுப் புதினங்களை எழுத வந்தபோது கனமான மூட்டையை இழுத்து வந்தேன். எனது இந்த தூக்குப்பையில் கோழைகள், முட்டாள்கள், கடுகினும் சிறிய துகள் போன்ற பொருட்கள் நிறைந்திருந்தன. அவற்றுடன் நுண்ணியதாக நெய்யப்பட்ட வலைகளும். பெரும் உழைப்பைச் செலுத்தி அதன் இழைகளைப் பிரிப்பீர்களேயானால், நீலநிறக் கூழாங்கல் ஒன்றும், வேறோர் உலகின் நேரத்தைச் சொல்லும் சலனப்படாத காலக்கடிகையும் சுண்டெலியொன்றின் மண்டையோடும் அதனுள் அடங்கியிருப்பதைக் காணமுடியும்; முடிவற்ற தொடக்கங்களும், முனைவுகளும், இழப்புகளும், மாற்றங்களும், பெயர்ப்புகளும், மோதல்களைக் காட்டிலும் மிகுதியான தந்திரங்களும், கண்ணிகளை மாயைகளைக் காட்டிலும் மீச்சிறு வெற்றிகளும் நிறைந்தவை. சிக்கிக் கொண்டுவிடும் விண்வெளிக் கலங்கள், தோல்வியுறும் செயல்திட்டங்கள், புரிந்துகொள்ள முனையாத மனிதர்கள் நிறைந்தவை. வன-ஓட்களை அதன் உமியிலிருந்து பிரித்தெடுக்கப் போராடுவது குறித்த சுவாரசியமான கதையொன்றைக் கூறுவது கடினம் என்று குறிப்பிட்டிருந்தேன், அது சாத்தியமற்றது என்று கூறவில்லை. புதினம் எழுதுவது எளிதானது என்று யார் சொன்னது?

அறிவியற்புனைவு நவீனத் தொழில்நுட்பத்தின் தொன்மவியல் என்றால், அதன் தொன்மம் துயரார்ந்தது. ‘தொழில்நுட்பம்’ அல்லது ‘நவீன அறிவியல்’ (இச்சொற்களை அதன் வழக்கமான பொருளிலேயே பயன்படுத்துகிறேன், சோதித்தறியப்படாத சுருக்கெழுத்து முறையில் ‘கடின’ அறிவியல்கள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் என்பதைக் குறிக்கிறது) என்பது வீரச்செயல்களடங்கிய முன்னெடுப்பு, ஹெர்குலியன் (Herculean) எனப்படும் வலிமையான பெருமுயற்சி, ப்ரோமிதியன் (Promethean) என்று குறிக்கப்படும் புரட்சிகரமான படைப்பூக்க சிந்தனை தேவைப்படுவது, வெற்றி என்று கொள்ளப்படுவது, அதனாலேயே இறுதியில் துயரார்ந்ததாகக் கருதப்படுவது. இந்தத் தொன்மத்தை உள்ளடக்கிய புனைவும் வெற்றிகரமானதாக (மனிதன் பூமி, விண்வெளி, வேற்றுகிரகவாசிகள், மரணம், எதிர்காலம் போன்றவற்றை வெல்கிறான்) மற்றும் துயரார்ந்ததாகவே இருந்துவருகிறது, இனியும் அப்படியே இருக்கும் (ஊழிக்காலம், பேரழிவுகள், முன்போ அல்லது இப்போதோ).

ஒருவர் எவ்வாறேனும், இந்தத் தொழில்நுட்ப-நாயகத்தனத்தின் நேரியலான, முற்போக்கிலமைந்த, காலத்தின்–(கொல்லும்)–அம்பெனும் முறையைத் தவிர்த்துவிட்டு, தொழில்நுட்ப-அறிவியலை ஆதிக்கம் செலுத்தும் ஆயுதமாக இல்லாமல் பண்பாட்டின் தூக்குப்பையாக மறுவரையறை செய்வாரேயானால், அதன் மூலம் பெறப்படும் உவப்பான பக்கவிளைவாக அறிவியற் புனைவின் கடினமும் குறுகல் தன்மையும் குறையும். அது ப்ரோமிதியனாக பேரழிவைக் குறிப்பதாக இருக்கவேண்டியதே இல்லை, தொன்மவியல் வகைமையைக் காட்டிலும் யதார்த்தத்தையே சார்ந்திருக்கும்.

அது ஒரு விசித்திரமான யதார்த்தவாதம், ஒரு விசித்திரமான யதார்த்தமும்கூட.

பிற தீவிர புனைவுகளைப் போலவே, சரியாகக் கருகொண்ட அறிவியற்புனைவென்பது — அது எவ்வளவு வேடிக்கையானதாக இருந்தாலும் — தற்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, மனிதர்கள் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், உணர்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்தப் பரந்துவிரிந்த அடுக்கில், பிரபஞ்சத்தின் வயிற்றில், இருப்பிலிருக்கப்போகும் விஷயங்களின் கருவறையுடன், முன்னம் இருந்தவற்றின் கல்லறையுடன், இந்த முடிவற்ற கதையுடன் எவ்வாறு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் முயற்சி. இதில், அனைத்துப் புனைவுகளிலும் உள்ளதைப் போலவே மனிதனையும் அவனுக்கான இடத்தில், விஷயங்களின் கருத்தாக்கங்களில் அவனுக்குரிய இடத்தில் வைக்கப் போதுமான வழிவகையிருக்கிறது; ஏராளமான வன-ஓட்களைச் சேகரித்து அவற்றை விதைப்பதற்கு, குழந்தை ஊமுக்காகப் பாடுவதற்கு, ஊல் கூறும் நகைச்சுவைகளைக் கேட்பதற்கு, நீர்வாழ் கவுளிகளைப் பார்ப்பதற்குப் போதுமான நேரமிருக்கிறது, இருப்பினும் கதை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் விதைகளைச் சேகரிக்க வேண்டியுள்ளது, நட்சத்திரங்களைக் கொண்ட பையில் இன்னும் நிறைய இடமிருக்கிறது.


ஓவியம்: Ignota

இதழ் 15 பிற படைப்புகள்

உர்சுலா லெ க்வின் and ஶ்ரீதர் ரங்கராஜ்

அமெரிக்க எழுத்தாளரான உர்சுலா லெ குவின் (1929 - 2018) அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் (23 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுதிகள், 11 கவிதைத் தொகுதிகள், 13 குழந்தை புத்தகங்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் நான்கு மொழிபெயர்ப்புகள்). ஆறு நெபுலா (Nebula) விருதுகள், ஏழு ஹியூகோ (Hugo) விருதுகள் மற்றும் PEN/Malamud போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

https://www.ursulakleguin.com/

Share
Published by
உர்சுலா லெ க்வின் and ஶ்ரீதர் ரங்கராஜ்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago