விஸ்வாமித்திரன் சிவகுமார்

நேர்காணல்: விஸ்வாமித்திரன் சிவகுமார்

23 நிமிட வாசிப்பு

“ஓவியத்திற்கும் சிற்பத்திற்குமுள்ள முப்பரிமாண வித்தியாசமே கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம்.”

விஸ்வாமித்திரன் சிவகுமார்

தேனி மாவட்டத்தில் இருக்கும் உத்தமபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட விஸ்வாமித்திரன் சிவகுமார், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து எழுதிவருகிறார். சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ‘சர்வாதிகாரி’யின் திரைக்கதையைத் தனது சில கட்டுரைகளுடன் சேர்த்து ‘சர்வாதிகாரி‘ எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவரின் ‘சிறுவர் சினிமா‘ எனும் கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் சிறுவர்களை மையப்படுத்திய 34 திரைப்படங்களைத் தேர்வு செய்து இவர் எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கியது. ‘குருதியில் படிந்த மானுடம்’, ‘கியூப சினிமா’ என்கிற உலக சினிமா சார்ந்த கட்டுரைத் தொகுப்புகளையும் இவர் எழுதியுள்ளார். இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் திரைப்படங்களில் உதவி திரைக்கதையாளராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

தனது விமர்சனப் பார்வை, சினிமா கட்டுரைத் தொகுதிகள், திரைக்கதை எழுதுவதின் நுட்பங்கள், இயக்குநர் பிரசன்னாவுடனான அனுபவங்கள் என அரூ குழுவுடன் விரிவாக உரையாடியுள்ளார் விஸ்வாமித்திரன் சிவகுமார்.

90-களில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிய நீங்கள், 2000-க்குப் பிறகு திரை விமர்சனங்களும் எழுதத் தொடங்கியதைப் பற்றிச் சொல்லுங்கள். அதற்கான உந்துதல் எது அல்லது யார்?

இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் என்ற எனது சொந்த ஊரில் இருந்த நூலகமே என்னுடைய கலை வேரிட்ட தொப்பூள்கொடி. அன்றைய காலகட்டத்தின் நல்ல நவீன இலக்கியங்கள் அங்கு வாசிக்கக் கிடைத்தன. அந்த உந்துதலிலேயே கவிதை மற்றும் கதைகள் எழுதி ஊரிலேயே முதல் நபராக ‘படைப்பாளன்’ என்ற ஆடையை நான் அணிந்துகொண்டேன். ஆனால் திரைப்படம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை அங்கு நான் கண்டதில்லை. அன்றாடம் வரும் நாளிதழ்களிலும் தமிழில் வெளிவரும் வெகுசனத் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களாகச் சுருங்கிக் கிடந்தன. அவையனைத்தும் மேலோட்டமான எழுத்திலான ஒரு குறுகிய வடிவில் அடங்கும் விமர்சனங்கள்.

இளம்வயதிலேயே நான் தேடி வாசிக்க ஆரம்பித்துவிட்ட சிற்றிதழ்களில்கூடத் திரைப்படங்கள் குறித்த எழுத்துகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை. கவிதையும் கதைகளுமாக அவை நிரம்பி வழிந்தன. காரணம் அன்றைய சிற்றிதழ்கள் சினிமாவை இலக்கியமாகக் கருதவில்லை. சினிமா என்றாலே தமிழ் சினிமா மட்டும்தான் என அவ்விதழ்களைக் கொண்டுவந்தவர்களின் பார்வையாக இருந்தது. அப்படியும் தமிழ் சினிமா குறித்த சில சோதனைப்பூர்வ விமர்சனங்கள் பூமா சனத்குமார் நடத்திய ‘ஆய்வு’, எஸ்.வி.ஆர் நடத்திய ‘இனி’ ஆகிய இதழ்களில் வெளிவந்தது இவற்றில் சிறப்புமிக்க விதிவிலக்குகள். இதில் சிகரமாக, கோமல் சுவாமிநாதன் கொண்டுவந்த ‘சுபமங்களா’ இதழ் இந்திய உள்ளிட்ட உலக திரைப்படங்களைக் குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தொடர்ந்து வெளியிட்டது என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்னும்கூட சில இதழ்கள் சினிமா குறித்துப் பேசியிருக்கக்கூடும். அவை கைகளுக்கு எட்டவில்லை. ஆயினும், ‘உலக சினிமா’ என்கிற ஒரு பேரின்பக் கலை இயங்குவது குறித்து பெரும்பான்மை ஊடகப் பார்வையில் படவில்லை. தேடல் என்பது இலக்கிய வாசிப்போடு முற்றுப் பெற்றுவிடும் என்பதான நிலையே அப்போதிருந்தது.

எனது கல்லூரிப்படிப்பு முடிந்து நல்வாய்ப்பாக சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னர், சில ஆண்டுகள் கழித்துதான் உலக சினிமா என்று ஒன்று இருப்பதும், அதைத் திரையிடத் திரைப்படச் சங்கங்கள் இருப்பதும், அப்படங்கள் குறித்து விமர்சனம் வெளியிடும் சிற்றிதழ்கள் வெளியாவதும் எனக்குத் தெரியவந்தது. அவ்வகையில், என்னுடைய முதல் உந்துதல், ஆதி கருப்பன் என்பவரது ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கோணம்’ என்கிற திரைச் சிற்றிதழ். பக்கத்திற்குப் பக்கம் திரை விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள் நிறைந்த இதழை அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். அதை வாசித்த வேகத்தில் அப்போது பவித்ரன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘ஐ லவ் இந்தியா’ என்ற படம் குறித்து ஒரு கறாரான விமர்சனத்தை அவ்விதழுக்கு எழுதி அனுப்பினேன். என் எழுத்தின் தீவிரத்தை உணர்ந்து அவ்விதழின் ஆசிரியர் என்னைத் தேடி வீட்டிற்கே வந்து என்னைப் பாராட்டினார். அதுவே என் முதல் திரை விமர்சனம்.

சென்னையிலுள்ள மந்தவெளியில் எழுத்தாளர் திலிப்குமார் தன் வீட்டிலிருந்த முன்னறையில் நடத்திக்கொண்டிருந்த புத்தக விற்பனையகத்தில் ‘சலனம்’ எனக்கு அறிமுகமானது. திரைப்படச் சங்கம் ஒன்றை நிர்வகித்து உலகெங்கும் வெளியாகும் கிளாசிக் திரைப்படங்களைக் காணும் வாய்ப்பை வழங்கிவந்த கல்யாணராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த திரையிதழ் அது. வெங்கடேஷ் சக்கரவர்த்தி, எம். சிவகுமார், அம்ஷன்குமார், சுகுமாரன், மொழிபெயர்ப்பாளர் என். ஸ்ரீராம் உள்ளிட்ட சிறந்த திரை ஆய்வாளர்களின் கூட்டுழைப்போடு, உலக சினிமா குறித்த அற்புதமான கட்டுரைகளைத் தாங்கி வந்த அந்த இதழே என்னுடைய பார்வையின் விரிவிற்கு ஆதார ஊன்றுகோல். அதன் நேர்த்தியான வடிவமைப்பும் உள்ளடர்த்தியுமே பிற்பாடு நான் ‘செவ்வகம்’ என்னும் திரையிதழை நுட்பத்துடன் கொண்டுவர பின்னுந்தமாக இருந்தன.

மேலுமான உந்துதலைத் தந்தது, அப்போது வெளியான சிற்றிதழ்களில் பிரசுரமான தமிழின் சிறந்த திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரனது கட்டுரைகள். குறிப்பாக, ‘மக்கள் பண்பாடு’ என்ற இதழில் துருக்கி இயக்குநர் இல்மஸ் குணே (Yılmaz Güney) குறித்து அவர் எழுதியிருந்த உணர்ச்சிபூர்வமான கட்டுரை என் உள்ளத்தை நெகிழ்த்திவிட்டது. இடதுசாரிக் கலைஞர்கள் குறித்த அவரது பெருமிதமான அறிமுகங்கள் சிந்தனையில் பரவசமாக அலையத் தொடங்கியதில் தோன்றிய மனவெழுச்சியே திரை விமர்சனத்தைக் காதலுணர்வுடன் எழுதமுடியும் என்ற எண்ணம் என்னுள் விதை காண ஒரு முன்புலம்.

என்னுடைய எழுதும் முறையே தியான அடிப்படையில் நிகழ்வது.

தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் நீங்கள். சினிமா குறித்துச் சிந்திப்பதற்கும், விமர்சிப்பதற்கும், எழுதுவதற்கும் தத்துவப் பரிச்சயம் எந்தளவிற்கு உதவியுள்ளது?

நான் தத்துவம் படித்தது கல்வியின் அடிப்படையில் எவ்விதத் தகவமைப்பை அது கொண்டிருக்கிறது என்பதை அறியும்பொருட்டே. அதற்கு முன்பே, மேலை/கீழைத் தத்துவக்களம் சார்ந்த அறிமுகங்களும் அவை சார்ந்த உள்முகத் தேடல்களும் ஆட்கொண்டவனாக இருந்தேன். நாம் பெறும் சுயமான அறிவு நம்மை அனைத்து தளங்களிலும் மெருகேற்றுவதைத் தன்னியல்பாகச் செய்துவிடும். அந்த நடைமுறையிலேயேதான் என் சினிமா சார்ந்த விமர்சனப்பார்வை உருப்பெற்றது. இன்றுவரை உலக சினிமாவில் படுவேகமாக நிகழும் பல்வேறு மாற்றங்களையும் உள்வாங்கி, பார்வையை கனப்படுத்திக்கொள்ள என்னுள்ளே அனுபவமாய் வளர்ந்தபடியிருக்கும் இந்தத் தத்துவக் கற்றல் உதவுகிறது. பிரபஞ்ச மயமான மானுடநேயமே அந்தக் கற்றலின் நிலைத்த வேறூன்றல்.

சினிமா விமர்சனம் எழுதுவதற்கு உங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொண்டீர்கள்? எழுதத் துவங்கும்போது உங்களுக்கென்று ஏதேனும் நெறிமுறைகளை வகுத்துக்கொண்டீர்களா?

அப்படியெல்லாம் சட்டதிட்டமாக எந்தவொரு நெறிமுறைகளையும் நான் வகுத்துக் கொண்டதில்லை. என்னுடைய எழுதும் முறையே தியான அடிப்படையில் நிகழ்வது. வலுக்கட்டாயமாக எதையும் நான் செய்ததில்லை. சிருஷ்டியின் தூண்டுதலே இதுவரையிலான என் அனைத்து எழுத்துகளுக்குமான பின்னணி. அப்புறம், ஒரு பார்வையாளனாக இருக்கும் நான் விமர்சகனாகப் பரிணமிக்கும்போது கண்டடையும் நுட்ப அனுபவங்களையே என் எழுத்தில் வாசகரோடு பகிர்ந்துகொள்கிறேன். அவ்வெழுத்தின் நோக்கம் திரை இரசனையைப் பயிற்றுவிப்பது என்றும் கண்டுகொள்கிறேன். படம் ஒரு நுகர்பொருளாக, பொழுதைப் போக்கும் ஒரு போதைத் தணிப்பானாக மட்டுமே தேங்கிவிட்டால் பார்வையாளருக்கு எந்தப் பயனுமில்லை.

ஒரு திரைப்படம் உங்களுக்குப் பரவசத்தையோ அல்லது ஆவேசத்தையோ ஊட்டவேண்டும். அதுவே பேசுவதற்குரிய படைப்பு. அப்படி நாம் நம் நண்பர்களிடத்தும் அறிந்தவரிடத்தும் பேசும்போதே அபிப்ராயம் சொல்லும் தகுதியைப் பெற்றுவிடுகிறோம். ஆனால் அதை எழுத்தின் கட்டமைப்போடு சிரத்தையாகப் பதியும்போதுதான் நமக்கு விமர்சகர் பட்டம் சூட்டப்படுகிறது. எனக்கு, தமிழ் சினிமா மீதிருந்த அன்பும் ஆதங்கமுமே திரை விமர்சனம் எழுதுவதற்கான தூண்டு காரணிகள். உணர்ச்சியில் இடைவிடாமல் பேசுவது போல மேற்கொண்ட செயல்தான் அது. காலம் விமர்சனத்தின் தேவை கருதி தன் கையில் என் கையைப் பிடித்து வைத்திருக்கிறது, அவ்வளவே.

இந்தியாவில் எடுக்கப்படும் சிறந்த சினிமா குறித்தும் தொடர்ந்து எழுதிவருவதே உங்களின் சிறப்பு. (உதாரணம்: ‘சர்தார் உதம்’ பற்றி எழுதியிருந்தீர்கள்.) உலக சினிமா குறித்து எழுதுபவர்கள் இந்தியாவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களைக் குறித்தும் எழுதுவது எவ்வளவு முக்கியம் என நினைக்கிறீர்கள்?

1999-ஆம் ஆண்டு ‘இடறல்’ என்கிற பெயரில் ஒரு திரைப்பட இதழ் கொண்டுவந்தேன். மலையாளத் திரைமேதை அரவிந்தனுக்கான சிறப்பிதழ் அது. அகிரா குரோசவாவிற்கும் அஞ்சலிக் கட்டுரை வெளியாகியிருந்தது. அந்த சமயம், சென்னையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் ஒரு திரையிடலின்போது, தலை சிறந்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியை ஏதேச்சையாகச் சந்தித்து அவ்விதழைத் தந்தேன். புரட்டிப் பார்த்தவர், “இவர் யார்?” என்று அகிரா குரோசவாவின் புகைப்படத்தைப் பார்த்துக் கேட்டார். நான் அவரைக் கேள்வியுடன் பார்த்தேன். எத்தனை மகத்தான படங்களுக்குக் கலையமைப்பு செய்தவர் அகிராவைத் தெரியாமல் இருப்பது எங்ஙனம் என்று எண்ணி அதையே கேள்வியாக்கி அவரைக் கேட்க, புன்னகையுடன் பார்த்தார். “நம் தமிழ்ச் சூழலில் எத்தனை பெரிய மேதைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் எழுதாமல் இந்த அயல்நாட்டுக்காரரைப் பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன?” என்றார்.

உண்மையில், அவரும் அகிரா குரோசவாவின்மீது மதிப்பு கொண்டவர்தான். அவரையும் உள்ளிட்ட தமிழ்ப் படைப்பாளர்கள் நிராகரிக்கப்படுகிறார்களே என்ற ஆதங்கத்தின் விளைவிலேதான் அவர் என்னிடம் கேட்டது. அடுத்த இதழில் அவரது நேர்காணலைக் கொண்டுவர வேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டாலும், பொருளாதாரக் கட்டமைப்பு இல்லாமல் வெறும் பரவசமே என்னுடைய மூலதனமாக இருந்ததால் அடுத்த இதழைக் கொண்டுவர இயலவில்லை. நம் அருகே உள்ள படைப்பாளர்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நான் கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வழி உணர்ந்த பாடமே தமிழ் மற்றும் இந்திய சினிமா குறித்து என்னை எழுதத் தூண்டியது எனலாம். அவற்றையெல்லாம் தொகுத்துப் புத்தகமாக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘சர்வாதிகாரி’ படத்தின் திரைக்கதை மற்றும் படம் குறித்த கட்டுரைகளைத் தமிழில் கொண்டுவந்திருக்கிறீர்கள். அவரது திரைப்படங்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பாக இல்லாமல், சர்வாதிகாரியின் திரைக்கதையை எழுதவேண்டும் என்கிற எண்ணம் எவ்வாறு உதித்தது? அதன் நோக்கம் என்ன?

அது ஓர் ஏதேச்சை நிகழ்வுதான். முன் திட்டமெல்லாம் ஏதுமில்லை. மதுரையிலிருந்து ‘கருத்துப் பட்டறை’ பதிப்பக உரிமையாளரான பரமன், இரஷ்யத் திரைப்பட இயக்குநர் செர்கய் ஐசன்ஸ்டீன் (Sergei Eisenstein) இயக்கிய ‘அக்டோபர்’ படத்தின் திரைக்கதையைத் தமிழில் எழுதித் தரச்சொல்லிக் கோரியிருந்தார். என்னைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்தின் கதையைக் காட்சிப்புலத்துடன் விவரிக்கும் திரைக்கதைப் புத்தகம், எந்த வகையிலும் அந்தத் திரைப்படம் தரும் அனுபவத்தை வழங்காது. எனவே, வேறொரு விமர்சனப் புத்தகத்தைத் தரலாம் என்று எண்ணியிருந்த சமயத்தில், ஏதேச்சையாக சார்லி சாப்ளினது ‘சர்வாதிகாரி’ (The Great Dictator) படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அது குறித்துக் கட்டுரை எழுதலாம் என்று மனம் தூண்டப்பட்டு, படம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள முயன்றபோது, சாப்ளின் அந்தப் படத்திற்குத் திரைக்கதை என ஒன்றை எழுதவில்லை என்ற தகவலும் கிடைத்தது. என்னுள் பேரதிர்ச்சி. அவர் முன்னம் இயக்கிய அனைத்து மௌனப் படங்களுக்குக்கூடத் தெளிவான திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால், முழுமையாக உரையாடல்கள் நிறைந்த ‘சர்வாதிகாரி’ படத்திற்குத் திரைக்கதை எழுதாமல் சின்னஞ்சிறிய குறிப்புகள் மற்றும் வரைபடங்கள் கொண்டு முழுப்படத்தையும் நினைவில்கொண்டே இயக்கியிருக்கிறார். சாப்ளின், சவால்களை சாகசங்களாக மாற்றிவிடும் ஓர் அற்புதக் கலைஞர் என்பதை உணர்ந்து அகம் சிலிர்த்துப்போனேன்.

அந்தப் பரவசத்தின் உணர்வொட்டாக, நான் ஏன் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. ஆங்கிலத்திலோ மற்ற உலக மொழிகளிலோ அப்படத்தின் திரைக்கதைப் புத்தகமாக வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்து இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதன் உள்ளியல்பு சிதையாமல் கோர்த்துத் திரைக்கதையை எழுதினேன். நான் முன்னமே உலக சினிமாக்களத்தில் திரைக்கதையாளராகப் பணியாற்றும் அனுபவம்பெற்றிருப்பது இந்த முயற்சிக்குப் பேருதவி புரிந்தது. நான் நேரில் சந்திக்காத சாப்ளின் என்கிற மகா கலைஞருக்கு மானசீகமாகத் திரைக்கதையில் பணிசெய்ததைப் போன்ற அரிதிலும் அரிய மனநிறைவை இந்தப் புத்தகம் எனக்கு உவந்திருக்கிறது.

‘சர்வாதிகாரி’ புத்தகத்தில் ‘ஆதிக்கமும் ஆதிக்கத்தை மீறும் எதிர்ப்புணர்வும்’ என்கிற கட்டுரையில் படத்தில் பல காட்சிகளை விளக்கி அவை சுட்டும் நுட்பங்களை எழுதியுள்ளீர்கள். ஒரு திரைக்கதையாசிரியராக இந்தப் படத்தில் திரைமொழியின் நுட்பத்தால் உங்களைப் பிரமிக்கவைத்த காட்சி எது?

தளபதி சூல்ட்ஸ், கொடுங்கோலன் ஹிங்கலைப் பழிவாங்குவதற்காக சாப்ளின் உட்பட ஐந்து பேர்களைப் ‘பலியாடுகளாக்கி’ உணவுத் தட்டில் நாணயத்தை மறைத்துவைக்கும் காட்சி. ஆறு நிமிடங்கள் வரை நிகழ்ந்தேறும் அந்தக் காட்சியை எத்தனைமுறை பார்த்தாலும் வாய்விட்டுச் சிரிக்காமல் கடக்கமுடியாது. அதேசமயம், அரசியலதிகாரம் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக ஏதுமறியாத அப்பாவி மக்களை எங்ஙனம் கைப்பாவைகளாக ஆட்டுவித்துப் பலியிடத் துடிக்கிறது என்ற விமர்சனமும் அக்காட்சிகளினூடாகச் சித்திரிக்கப்பட்டு நம்மை வியப்பில் ஆழச் செய்துவிடுகிறது. அந்தக் காலத் தினத்தந்தி நாளிதழில் ‘சிரி, சிந்தி’ என்றொரு கார்டூன் படம் ஒவ்வொரு நாளும் வரும். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை அந்தக் கார்டூன் படம் நகைச்சுவையுணர்வுடன் நினைவில் இருத்தும். கவனமாய் உற்றுப் பார்த்தால், அதன் மூலாதார வடிவம் சாப்ளினது திரையிருப்பாக விரிவதை நாம் காணலாம். சிரிக்கவும் அதைத் தொடர்ந்து சிந்திக்கவும் செய்த உலகளாவிய கலைஞர்களில் சாப்ளினுக்கு ஈடாக யாருமே இல்லை. ‘சர்வாதிகாரி’ மட்டுமல்ல, அவரது மற்ற திரைப்படங்களின் அனைத்து கணங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. முதன்மையாக, நோயற்ற வாழ்வைத் தரும் சிரிப்பை அள்ளி வழங்குபவை. அந்தச் சிரிப்பினூடே நாம் தவறவிடாமல் கைப்பற்றிக் கொள்ளவேண்டிய அறிவுசார் விழிப்புணர்வுகளை வழங்குபவை. நான் மேற்குறிப்பிட்ட உணவுக் காட்சி அவற்றில் ஓர் அதிசிறந்த உதாரணம்.

படத்தின் காட்சியமைப்புகளை வைத்து ‘சர்வாதிகாரி’ படத்தின் திரைக்கதையைப் பிரதி செய்கையில், எழுதுவதற்கு மிகச் சவாலாக அமைந்த காட்சி எது?

படத்தின் இறுதியில் சாப்ளின் மேடையில் நின்று பேசும் காட்சி. முன்னமே ஆங்கிலத்தில் இந்தப் படத்தின் திரைக்கதைப் பிரதி புத்தகமாக வந்திருந்தால் எவரொருவராலும் எளிதில் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்க முடியும். எனக்கு ‘வேலை வைக்கும்பொருட்டு’ சாப்ளின்தான் திரைக்கதையை எழுதவில்லையே. எனவே திரைப்படத்தின் காட்சிகளிலிருந்து அதன் நுட்பக் கோர்வைகளிலிருந்து கதையின் அரசியற்புலம் மற்றும் நகைச்சுவை நுண்மை உட்பட ஏதொன்றையும் தவறவிடாமல் எழுதவேண்டிய நுண்கவனம் எனக்குத் தேவைப்பட்டது. மேடைக்குக் கீழே குழுமியிருக்கும் மக்களுக்காக அளப்பறிய அர்த்த விரிவும் அது சமகாலம் உள்ளிட்டு என்றைக்குமான கொடுங்கோன்மை அரசியல் களத்தின்மீதாக நிகழ்த்தும் விமர்சன விரிவும் கலந்து சாப்ளின் அறிவார்ந்து பேசும் அந்த நான்கு நிமிடப்பேச்சை அதன் உணர்ச்சி குறையாமல் அசலாக மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றபடியே தமிழாக்கம் செய்ததும் திரும்பத்திரும்ப சரிபார்த்ததும் என் எழுத்துமனதிற்கு அத்தனை நிறைவைத் தந்தது. சாப்ளின் என்னும் மகத்தான கலைஞர்மீது இன்னும் பல மடங்கு மதிப்பு கூடியதும் உலகளாவியப் பேரன்பைக் கொண்டிருந்த அவரது தீர்க்கம்கொண்ட அகவெளிச்சம் திரையில் பரவியிருப்பதை நான் உணர்ந்ததும் அந்தக் காட்சியின் வாயிலாகத்தான்.

‘சிறுவர் சினிமா’ தொகுப்பு 34 சிறுவர் திரைப்படங்களுக்கான அறிமுகக் கட்டுரைகளை உள்ளடக்கியது. 2007-இல் ‘புதிய பார்வை’ இதழில் தொடராக வெளியானது. ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு நாடு அல்லது மொழியைச் சேர்ந்த திரைப்படத்தைப் பற்றியது. பூட்டான், பிரேசில், மொரோக்கோ, செக் ரிபப்ளிக் ஆகிய நாடுகளின் படங்களைப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். இணையம் அவ்வளவாக நிலைபெறாத அந்தக் காலகட்டத்தில் இந்தப் படங்களெல்லாம் எவ்வாறு பார்க்கக் கிடைத்தன? திரைப்பட விழாக்களா? இப்படங்களைத் தேடியலைந்து பார்த்த அனுபவங்களைப் பகிருங்கள்.

‘புதிய பார்வை’ இதழில் நான் ‘சிறுவர் சினிமா’ தொடர் எழுதிய காலகட்டம் வரை, சிறார் வாழ்வைப் பிரதிசெய்யும் சமகாலத் திரைப்படங்களைப் பார்க்கவேண்டுமென்றால் திரைப்பட விழாக்கள் மட்டுமே ஒற்றையடிப் பாதையாக இருந்தது. உலக சினிமா குறித்துப் பரந்த தளத்தில் எழுதப்படும் விமர்சனங்களுக்குச் சென்னையில் கள்ளத்தனமாகக் கிடைக்கும் சிடிக்களும் டிவிடிகளும் அன்றைக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், உலக சினிமாவிற்குள் ஒரு பிரிவை ஏற்படுத்திக்கொண்டு எழுதவேண்டுமானால், இந்திய அளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்குத்தான் சென்றாகவேண்டும். சென்னையிலிருந்து கிளம்பி வெளி மாநிலங்கள் சென்று திரைப்பட விழாக்களில் பங்கேற்பது என்பது புனித யாத்திரை சென்று பிடித்தமான கடவுளைத் தரிசிப்பது போல. அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை. ஆனால் பொருளாதாரமும் கைகூடி நிற்கவேண்டும். எழுத்தின்வழி பணம் கிட்டாது. அறையெடுத்துத் தங்குவது, விடுதியில் உண்பது, திரையரங்குகளுக்கு சிற்றூர்தியில் சென்று படத்தைத் தொடக்கத்திலிருந்து தவறவிடாமல் பார்ப்பது எனச் சில ஆயிரங்களைத் தின்றுவிடும் அந்த ஆனந்த அனுபவம். அறிமுகமற்ற பல நாடுகளிலிருந்து வெளிவரும் படங்களில் மிகச்சரியான படங்களைக் கணித்து அவற்றைப் பார்ப்பது என்பது தனிக்கலை. தீவிரத் திரைப்பட விழாக்களின் வேட்கையில் நான் கண்ணும் கருத்துமாகக் கண்டடைந்ததே ‘சிறுவர் சினிமா’ என்ற தலைப்பில் தங்குதடையில்லாமல் தொடர் வெளிவர பலம் வாய்ந்த ஒரு பின்னூட்டம். அந்தச் சிந்தனைச் சேகரம் இப்போது புத்தகமாக ஒருமித்த அழகிய வடிவில் கோர்க்கப்பட்டு, ‘செவ்வகம்’ பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருப்பதில் நிறையவே நிறைவு.

சென்னையிலிருந்து கிளம்பி வெளி மாநிலங்கள் சென்று திரைப்பட விழாக்களில் பங்கேற்பது என்பது புனித யாத்திரை சென்று பிடித்தமான கடவுளைத் தரிசிப்பது போல.

‘சிறுவர் சினிமா’ முன்னுரையில் – “உலகளாவிய சிறுவர் திரைப்படங்களை உற்றுப்பார்த்தால் அவர்களைச் சிறுமைப்படுத்தும் அபாயமான மற்றும் அழிவுகரமான காரணிகளாகப் பெற்றோர்களே இருக்கிறார்கள் எனச் சித்திரிக்கப்படுவதை நாம் உணரலாம்.” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தச் சித்திரிப்பைச் சிறப்பாகச் செய்த ஒரு திரைப்படத்தைச் சுட்டி விளக்க முடியுமா?

இந்தப் புத்தகத்தில் பெற்றோர் வன்முறையில் சிக்கித் தவிக்கும் சிறாரது துன்ப வாழ்வியல் சார்ந்து நான் எழுதியிருக்கும் படங்கள் அனைத்தும் இந்தக் கருத்தியலைச் சிறப்பாகச் சித்திரிப்பவைதாம். ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒரு திரைப்படம் என்ற கணக்கில் நான் எழுதியிருந்தாலும், ஒரு நாட்டில் எடுக்கப்பட்ட சிறார் வாழ்வியல் சார்ந்த படமாக எது கிடைத்தாலும் எழுதிவிடலாம் என எண்ணி என் தேடலை எல்லைப்படுத்திக்கொள்ளவில்லை. அந்த நாட்டில் எடுக்கப்பட்ட பல படங்களைப் பார்த்து நான் எழுதவேண்டிய படத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுத்த பின்னரே புத்தகத்தில் இடம்பெறச் செய்தேன். எனவே, பல்வேறு களங்களைக் காத்திரமான நுட்பத்துடன் உரையாடிய படங்கள் குறித்த விமர்சனத் தொகுப்பே நீங்கள் கை மேல் காண்பது.

விமர்சனத்தில் இடம்பெறும் இத்தாலியப் படமான ‘லிபரோ’, ஸ்பானியப் படமான ‘எல் போலா’ ஆகியவை பெற்றோர் தமது பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறையை நம்மை அதிர்விக்கும்படி வலுவாகக் காட்டுவன. இந்தப் படங்களில் நடமாடும் சிறுவர்கள் அந்தந்த நாடுகளின் துன்ப இருப்புகள் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் சோகமயப்பட்ட பிரதிநிதிகள் என்பதை உணர்த்துவதே என் விமர்சன நிலைப்பாடு. இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்த்துக் குற்றவுணர்வடைந்து மனம் திருந்தினாலே போதும், சிறுவரது இருப்பில் திணிக்கப்பட்டிருக்கும் பாதித் துன்பங்கள் கண்ணில் படாமல் ஓடிவிடும் என்பது திண்ணம்.

‘சிறுவர் சினிமா’ தொகுப்பில் மராத்தி மொழியிலும் (கைரி) தெலுங்கு மொழியிலும் (வனஜா) வெளியான இரு திரைப்படங்களைக் குறித்து எழுதியுள்ளீர்கள். இந்தியாவில் வேறு மொழிகளில் வெளியான குறிப்பிடத்தகுந்த சிறுவர் சினிமா ஏதேனும் சொல்ல முடியுமா?

அப்படி இருந்திருந்தால் ‘சிறுவர் சினிமா’ தொகுப்பில் அவை இடம்பெற்றிருக்குமே. அந்தத் தொடர் எழுதும் காலகட்டத்திற்கு முன்புவரை இந்தியப் பரப்பில் குறிப்பிடத்தகுந்த சிறுவர் சினிமாவை நான் கண்டிருக்கவில்லை, அல்லது என் கண்களில் படவில்லை. இந்திய சினிமாவிற்கு நடந்த சோகம் என்னவெனில், நேற்று எடுத்த அயல்நாட்டுத் திரைப்படத்தைப் பார்த்துவிடலாம். ஆனால் காலங்காலமாகக் காத்திருக்கும் ஒரு இந்தியத் திரைப்படத்தை எளிதில் பார்த்துவிட முடியாது. நான் சொல்வது 2010-களுக்கு முன்பான காலம்.

இப்போதும்கூடப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. ஏதேனும் விருதுகள் பெறும் சுமாரான திரைப்படத்திற்குக் கதவுகள் திறக்கப்படுவதுபோல, விருதுபெறாத நல்ல திரைப்படங்களுக்கான கதவு திறக்கப்படுவதில்லை. நான் திரைப்பட விழாக்களில் கண்ட பல நல்ல திரைப்படங்கள் இன்னும் பார்வையாளர் வெளிச்சத்திற்கு வரவில்லை. எனவே சிறுவர் சினிமா போன்ற சிறு பிரிவை உருவாக்கி, சிறந்த படங்கள் குறித்த விமர்சனங்களை மட்டுமே தொகுக்கும்போது ஏற்படும் சிரமங்கள் அநேகம். எனினும், 100 நாடுகள் 100 படங்கள் என்னும் என் திட்டத்தின்படி இன்னும் சிறார் குறித்த உலக திரைப்படங்கள் பற்றி எழுதுவேன். அதில் தகுதிபெற்ற ஒரு சில இந்தியப் படங்களும் இடம்பெறவேண்டும் என்றே விரும்புகிறேன்.

இயக்குநர் பிரசன்ன விதானகேயுடன் [நடுவில்] விஸ்வாமித்திரன் சிவகுமார் [இடது]

இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் திரைப்படங்களில் உதவி திரைக்கதை ஆசிரியராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர் நீங்கள். அவரை எப்படிச் சந்திக்க நேர்ந்தது? அவருடனான அனுபவங்களைப் பற்றி…

பிரசன்ன விதானகேவை முதன்முதலாக 1998-ஆம் வருடம் கேரளத் திரைப்பட விழாவில் பார்க்கிறேன். அவருடைய ‘புரஹந்த கலுவர’ (Death on a Full Moon Day) திரைப்படத்தின் இந்திய முதற்காட்சி (Indian premiere). அதிர்ச்சியால் விளைந்த அழுத்தத்தையும் படத்தில் நிழலாடும் அவலத்தால் விளைந்த துக்கத்தையும் ஒருசேர அள்ளித் தெளித்த அந்தப் படம் முடிவடைந்தபோது, அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று என் பக்கம் பார்த்து கைதட்டினார்கள். எனக்கு உடல் சிலிர்த்துப்போய் அருகே பார்க்க எனக்கு அடுத்த இருக்கையிலிருந்து எழுந்து நின்றார் பிரசன்னா. படம் தந்த மன அவசத்தில் உடனே பேச இயலவில்லை என்பதுடன், அவரைப் பல பார்வையாளர்கள் சுற்றி நின்று வாழ்த்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதால் தள்ளி நின்றுகொண்டேன்.

அதற்கடுத்த சந்திப்பு, 2003 டெல்லி திரைப்பட விழாவில் பங்கேற்ற அவரது ‘இர மதியமா’ (August Sun) மூலமாக நிகழ்ந்தது. படம் பார்த்துவிட்டு அன்றைய இரவை உறங்கவிடாமல் வேதனையில் ஆழ்த்தியிருந்தது அந்தப் படத்தின் நினைவுகள். ‘அவர் ஒருவேளை டெல்லி வந்திருந்தால் ஓரிரு வார்த்தைகளாவது பேசிவிட வேண்டும்,’ என்ற ஆர்வமும் உடன் சுழன்றுகொண்டிருந்தது. மறுநாளே திரையரங்க வளாகமொன்றில் பிரசன்னாவைப் பார்க்க வாய்த்தது. தனியாக நின்றிருந்தார். அவரருகே சென்று வணக்கம் தெரிவித்துவிட்டு, வேதனையான குரலுடன், “படம் நன்றாக இருக்கிறது” என்று சொன்னேன். ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்த பிரசன்னா, “தேநீர் அருந்தலாமா?” என்று புரிதல்மிக்க புன்னகையுடன் தோளில் கைவைத்து அழைத்தார். அந்தக் கணத்தின் மொட்டில் காத்திருந்த விரிவாய் மலரத் தொடங்கியது அவருடனான நட்பு.

அந்த முதல் தேநீரில் தொடங்கி, பிரசன்னாவின் திரைப்படங்களுக்கான திரைக்கதை எழுதும் பயணம் எவ்வாறு நிகழ்ந்தது?

டெல்லித் திரைப்பட விழாவில் என் உடன்பிறவா தம்பியும் உற்ற தோழனுமாகிய இயக்குநர் மாமல்லன் கார்த்தி இயக்கிய குறும்பட வட்டு (DVD) ஒன்றைப் பிரசன்னாவிற்குத் தந்திருந்தோம். எந்த எதிர்பார்ப்புமற்ற செயல்தான் அது. ஓரிரு மாதங்கள் கழிந்திருக்கும். மாமல்லன் என்னைக் கைபேசியில் அழைத்து, “பிரசன்னா சென்னை வந்திருக்கிறார். சந்திக்கிறீர்களா?” என்று வினவினார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தச் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவிற்கு எதிரேயிருந்த ஒரு பழைய உணவு விடுதியில் நடந்தது. ஒரு சில நண்பர்களைத் தவிர்த்து, உலக சினிமா குறித்து உரையாடமுடியாத தமிழகச் சூழலில், உரையாடுவதற்கென மேதமை படைத்த பிரசன்னா வாய்த்தது பேரதிர்ஷ்டமாகப் பட்டது. முதலில் திரையரங்குகள் சென்று திரைப்படங்கள் பார்ப்பது, நல்ல உணவகங்களுக்குச் சென்று உரையாடியபடியே உணவருந்துவது என பிரசன்னாவுடன் சென்னையைச் சுற்றிவரும் நண்பர்களாகத்தான் நானும் மாமல்லனும் இருந்தோம்.

2003-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இர மதியமா’ படத்திற்குப் பின், மூன்று வருட இடைவெளி கடந்து, 2007-ஆம் ஆண்டு அடுத்த படத்திற்கான ஆயத்தத்தோடு பிரசன்னா சென்னை வந்திருந்தார். எப்போதும் போல நட்புரீதியான சந்திப்பு. பிரிட்டீஸார் ஆளுகைக்குக் கீழே இலங்கை வருவதற்கு முன்னான காலத்தில் நிகழும் கதைக்களத்தின் ஆங்கில மொழியிலமைந்த முதற்பிரதியுடன் (First draft) பிரசன்னா வந்திருந்தார். திரைக்கதையின் சீரான வடிவைக் கையில் பிரதியாகப் பார்ப்பது அதுதான் முதல்முறை. படத்தின் கதையம்சத்தை விளக்கி எங்களிடம் பிரதியின் முழுமைவடிவத்தை அடையவேண்டிய கனத்த பொறுப்பை நாங்கள் எதிர்பாராமல் ஒப்படைத்தார். எங்களது விருப்பம் அவருக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டுமென்பதே. ஆனால், திரைக்கதை சார்ந்த பணியாக உருமாறும் என்று எண்ணியிருக்கவில்லை. தொழில்முறை சார்ந்து திரைக்கதை எழுதத் தெரியாத எங்களது தலையில் விழுந்தது கடின பாரமெனினும், நானும் மாமல்லனும் அந்தப் படத்தின் கதைக்குத் தேவையான தகவல்களை உற்சாகத்துடன் சேகரித்தோம். பிரசன்னாவிற்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு சிங்களம் தெரியாது. ஆங்கிலமே எங்களது திரைக்கதை எழுதுதலுக்கான மொழி. ஒரு வருட காலத்தில் திரைக்கதைப் பிரதியை எங்களது திறனுக்கு எட்டியவரை செழுமைப்படுத்தினோம். ஆனால் அப்போது அதிகாரத்திலிருந்த இராஜபக்சேயின் அரசு, படத்தில் உள்ளீடான அரசியல் இருப்பதாகக் கருதி, அந்தப் படத்தை எடுக்க அனுமதி தரவில்லை. பின்பு அடுத்து அதிகாரத்திற்கு வந்த அரசு கதை மீதான தடையை நீக்கியது. அது 2019-இல் ‘காடி’ (Children of the Sun) என்னும் பெயரில் திரைப்படமாக வந்தது. புசான் திரைப்பட விழாவில் உலக முதற்காட்சியும் (World permiere) கேரளத் திரைப்பட விழாவில் ஆசிய முதற்காட்சியும் (Asian Premiere) திரையிடப்பட்டு, பின் வந்த பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.

‘காடி’ படத்தின் திரைக்கதை தடையிடப்பட்டதால் 2007-ஆம் ஆண்டு உடனடியாக எழுதிய மற்றொரு திரைக்கதையில் உருவான படம் ‘ஆகாச குசும்’ (Flowers of the Sky). ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் அங்கீகாரமும் பரிசுகளும் பெற்ற அந்தத் திரைப்படமே, அரங்கில் வெளியானதை வைத்து நானும் மாமல்லனும் திரைக்கதையில் துணைப் பங்கேற்பு செய்த முதல் படம். ‘காடி’ படத்தின் வருகை பத்து வருடங்களுக்குப் பின்புதான் நிகழ்கிறது.

‘ஆகாச குசும்’ உடனடியாக எழுதப்பட்ட இன்னொரு திரைக்கதை என்று குறிப்பிட்டீர்கள். அந்தத் திரைக்கதை உருவான அனுபவத்தைப் பகிர முடியுமா?

‘காடி’ படத்தின் திரைக்கதை மீதான தடை குறித்த செய்தி முதலில் எனக்கு சோர்வளித்தது. முதல் முயற்சியே இப்படி முடிந்திருக்கிறதே என்ற ஆதங்கம். பிரசன்னா, “ஏன் வருத்தப்படுகிறீர்கள்? திரைக்கதையை நாம் நன்றாக எழுதியதால்தான் தடை செய்யப்பட்டிருக்கிறது. இது நமது எழுத்திற்குக் கிடைத்த வெற்றியே,” என்று சமாதானம் செய்தார். எனினும் அவருக்குள்ளும் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியும் மெல்லிய குழப்பமும் இருந்தது. அந்த சமயத்தில், சிங்கள சினிமாவின் புகழ்பெற்ற நடிகை மாலினி ஃபோன்சேகா மருத்துவ சிகிட்சை எடுக்கும்பொருட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். அருகே இருந்த உட்லேண்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்தார். அன்று மதிய வாக்கில் பிரசன்னாவும் நானும் அவரைப் பார்க்க அந்த விடுதிக்குச் சென்றோம். மாலினி ஃபோன்சேகா நடித்த பல படங்களை நான் முன்னமே பார்த்திருந்ததால், அவரை நேரில் சந்தித்தபோது அவர் ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்த வடிவமும் என் கண்முன்னமே மாயமாக நிற்பதுபோல உணர்ந்தேன். அறிமுகத்தில், “பிரசன்னா உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்,” என்று கூறி நட்புடன் சிரித்தார் அந்த அற்புத நடிகை.

உடல் சார்ந்த அக்கறை தொனியோடு, மாலினியிடம் சிங்களமொழியில் பேசிக்கொண்டிருந்தார் பிரசன்னா. விடைபெற்றுத் திரும்பும்போது, அவர் ஒருவித சோகத்தில் ஆட்பட்டிருந்ததை உணர்ந்தேன். நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஒரு உணவு விடுதிக்கு நடந்தே சென்றோம். அந்த விடுதியில் வைத்து, “அடுத்து என்ன செய்யலாம்?” என்று என்னைக் கேட்டார் பிரசன்னா. முன்னம் ஒருமுறை, தன்னை வைத்து ஒரு படமாவது இயக்கக் கூடாதா என்று மாலினி ஃபோன்சேகா அவரிடம் கேட்டதாக சொல்லியிருந்தது என் நினைவில் இருந்தது. ஒரு யோசனை தோன்ற, அவரிடம் சொன்னேன். “ஏன் மாலினி மேடத்தை வைத்து படம் எடுக்கக்கூடாது?” பிரசன்னா ஆர்வத்தோடு என்னைப் பார்த்து, “கதை?” என்று கேட்டார். சிங்கள சினிமாவில் பிரபல நடிகையாயிருந்த, “அவரது உண்மைக்கதையை அடியொற்றி எடுக்கலாம். இன்றைய உடல் நலிவிலிருந்தும் அவரை மீட்பதற்கு உதவிகரமாக அந்தப்படம் அமையக்கூடும்,” என்றேன். பிரசன்னாவின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. எங்களது முந்தைய சந்திப்புகளின்போது, மாலினி பற்றி பிரசன்னா பகிர்ந்துகொண்ட வாழ்வனுபவங்களை முன்வைத்து, சுவாரசியம் கலந்த பல புனைவு அம்சங்களுடன் எழுதிய திரைக்கதையே ‘ஆகாச குசும்’. 2008-இல் வெளிவந்த அந்தப் படம் உலகெங்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. மாலினியின் நடிப்பும் பிரசன்னாவின் இயக்கமும் திரைக்கதையின் பலமும் படத்திற்கு பல விருதுகளை அள்ளித் தந்தன.

திரைக்கதை எனும் கலையை எவ்வாறு பயின்றீர்கள்?

பள்ளி வயதிலிருந்து தொடங்கிய சினிமாவின் மீதான காதல் உள்ளூர் திரையரங்கிலிருந்து உலக சினிமா திரைவிழாக்கள் வரை மேற்கொண்ட நீண்ட பயணம் என்னுடைய இரசனையின் தேர்ச்சியை மட்டுமே வளப்படுத்திக்கொண்டு வந்தது. தொழில்முறையான திரைப்பயிற்சிக்கு அந்தத் தேர்ச்சி உதவாது என்பதை முதல் திரைக்கதை எழுதுதலில் உணர்ந்துகொண்டேன். காதலைக் கவிதையில் படிப்பதற்கும் நிஜமாக அதன் இன்ப துன்பங்களோடு அனுபவித்துப் பார்ப்பதற்குமான வித்தியாசமே படங்கள் பார்ப்பதற்கும் திரைக்கதை எழுதுவதற்குமான வித்தியாசம்.

திரைக்கதையை வெறும் கற்பனை வளத்தைக்கொண்டு எழுதிவிடலாம் என்றெண்ணும் ஒரு நெரிசல் கூட்டம் இந்திய அளவில் இப்போது உள்ளது. அது பிழையான தோல்வியை நோக்கி ஆளைத் தள்ளும் அணுகுமுறை. திரைக்கதைப் பயிற்சி என்பது முறையான கல்விமுறையைச் சார்ந்தது. ‘அ, ஆ’ என பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டிய கல்விப் பயிற்சி. அந்தப் பாடத்தைக் கற்றுத் தர சிறந்த குரு வாய்த்தால் அது பெரிய கொடுப்பினை. அப்படி எனக்கு வாய்த்தவர்தான் பிரசன்ன விதானகே. தமிழ்ச் சூழலில் இருக்கும் இயக்குநரிடம் நான் பணிசெய்திருந்தால் தெளிவு மிக்க திரைக்கதைப் பயிற்சியை அடைந்திருக்கும் வாய்ப்பு குறைவு. நல்லவேளை, தவறான பாதையில் முகவரியைத் தேடிச் செல்லாமல் திரையின் கருணைமுகம் என்னைக் காப்பாற்றிவிட்டது. இதன் பின்னணியில், பிரசன்னாவுடன் நான் பணியாற்றக் காரணமாயிருந்த மாமல்லனுக்கு என் நட்பின் அடியாழத்திலிருந்து நன்றி சொல்லவேண்டும்.

ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதுவதற்கும் திரைக்கதையாக எழுதுவதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன? ஒரு திரைக்கதையாசிரியராக, உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்.

கதை என்பது எழுத்தாளரது ஏதேனும் ஒரு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு இயல்பை மீறாத அவரது கற்பனைவிரிவில் உருவாவது. எழுதும்போது அவர் மட்டுமே அங்கே இருக்கிறார். வாசகர் என்பவர் கதை வாசிக்கும் தருணமே உருவாகிறார். ஆனால் திரைக்கதை என்று வரும்போது திரைக்கதையாசிரியரோடு (கண்ணுக்குத் தென்படாத) பார்வையாளரும் அருகே அமர்ந்துகொள்கிறார். கதையில் நிகழ்வது போலக் கதாபாத்திரங்கள் மற்றும் கதையம்சம் சார்ந்து வாசகரின் சுதந்திரமான உருவகப் புரிதல்களைத் திரைக்கதையில் எதிர்பார்க்கமுடியாது. ஏனெனில் அந்தத் திரைக்கதை நிஜமான காட்சிவடிவை அடையப்போகிறது. இரத்தமும் சதையுமான மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் உலவப் போகின்றன. கதைக்கு வாசகராக இருப்பவர் திரைப்படத்திற்குப் பார்வையாளராக மாறும்போது அவரது உருவகக் கற்பனைகளுக்கான இடம் மிகவும் குறைவு. எனவே திரைக்கதை படத்தைப் பார்வையாளரிடம் தெளிவாக எடுத்துச் செல்லப் பல சவால்களைச் சந்திக்க நேர்கிறது. ஓவியத்திற்கும் சிற்பத்திற்குமுள்ள முப்பரிமாண வித்தியாசமே கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம்.

காதலைக் கவிதையில் படிப்பதற்கும் நிஜமாக அதன் இன்ப துன்பங்களோடு அனுபவித்துப் பார்ப்பதற்குமான வித்தியாசமே படங்கள் பார்ப்பதற்கும் திரைக்கதை எழுதுவதற்குமான வித்தியாசம்.

தமிழிலும் இந்தியாவின் பிற மொழிகளிலும் உங்களை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் சிலரைச் சொல்ல முடியுமா? அவர்களின் எந்த அம்சம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

முதன்மையாக எம்.டி.வாசுதேவர் நாயர். மலையாள சினிமாவில் தன்னுடைய திரைக்கதையின் நிலைத்த வடிவத்தை அழுத்தமாகப் பதித்தவர் அந்தத் திரைக்கதை மேதை. சிறந்த இயக்குநர்கள் அனைவரும் அவரது இல்ல வாசலில் காத்திருந்தது திரைக்கதையாளரின் தேவையை இந்திய அளவில் உணர்த்திய பெரும் வரலாற்று நிகழ்வு. அடுத்து அதே கேரளத்திலிருந்து லோகிததாஸ். தனது உணர்வுநுட்பம் மிக்க திரைக்கதையால் நல்ல பார்வையாளர்களது இரசனையை ஈர்த்தவர். அவரது அகால மரணம் நல்ல சினிமாவிற்கான உண்மையிழப்பாகவே தொடர்கிறது.

அடுத்ததாக, நம் ஆர். செல்வராஜ். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிந்திக்கத்தக்க படங்களின் காத்திரமான பின்னணியைத் தந்தவர். ஆர். செல்வராஜை முதன்மைப்படுத்தி பாரதிராஜா கட்டிக் காக்க நினைத்த திரைக்கதையாளர் மரபை அதற்குப்பின் வந்தவர்கள் காக்காமல் போனதே சில பத்தாண்டுகளை உள்ளிட்ட இன்றைய தமிழ்சினிமாவில் திரைக்கதை குற்றுயிரும் குலையுயிருமானதற்குத் தாளமுடியாத காரணம். திரைக்கதை எழுதத் தெரியாத பல இயக்குநர்களும் திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாத பல எழுத்தாளர்களும் தமது திறனெல்லையோடு நின்று, திரைக்கதையாளர் மரபைத் திரும்பக் கொண்டுவர முயன்றால் மட்டுமே நல்ல (தமிழ்) சினிமா இனி பிழைக்கும். உலக அரங்கில் சமமான திறத்தோடு நிமிர்ந்துநிற்கும்.

இறுதியாக, சமகால இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கதையாளராக அனுராக் காஷ்யப்பைச் சொல்வேன். இராம் கோபால் வர்மா இயக்கிய ‘சத்யா’ படத்திற்குத் திரைக்கதை எழுதியது முதல் இன்று வரை அவரது படங்களில் தென்படும் புதிய தன்மையும் உள்ளார்ந்த சுவாரசியமும் சலிக்காதவை. கொண்டாட்ட மனது அவரிடம் உள்ளது. அது அவரது திரைக்கதைக்குப் பின்னணியாகச் செயல்பட்டுப் படத்திற்கு வலிமை சேர்க்கிறது என்று நினைக்கிறேன்.

ஒரு விமர்சகராகத் திரைக்கதை எழுதும் கட்டத்திலேயே அதை விமர்சிக்கத் தொடங்குவீர்களா? உங்களுக்கும் பிரசன்னாவுக்கும் ஒரு காட்சி குறித்து மாற்றுக்கருத்துகள் இருந்தால் எப்படி ஒரு முடிவுக்கு வருவீர்கள்?

கறாரான விமர்சகராக இருக்கும் ஒருவர், தான் பங்களிப்பு செய்யும் எந்த ஒரு படைப்புக் களத்திலும் அந்த விமர்சனப் பார்வையை முன்வைத்த வண்ணமே இருப்பார். எனவே திரைக்கதை சார்ந்தும் அது நிகழ்ந்தே தீரும். பிரசன்னாவுடன் நான் பணியாற்றி வெளிவந்த முதல் படமான ‘ஆகாச குசும்’ முதல், இன்றுவரை படத்தின் திரைக்கதை சார்ந்த உள்வடிவிலும் தொழில்நுட்பம் சார்ந்த வெளிவடிவிலும் என் விமர்சனங்களைத் தயங்காமல் முன்வைத்தபடிதான் இருக்கிறேன். பிரசன்னாவிற்கு நியாயமாகப் பட்டால் உடனடியாக மாற்றங்களை ஏற்றுக்கொள்வார். சில நேரங்களில் வாதங்களாகவும் மாறும். அந்தக் கணங்களை பிரசன்னா பொறுமையாகக் கையாண்டு சரியான விடயங்களைக் கண்டடையும் அவகாசத்திற்கு வழிவிட்டுக் காத்திருப்பார். தேர்ச்சிபெற்ற திரைமேதைகள் மட்டுமே இத்தகைய பொறுமையுணர்வைக் கையாள்வார்கள். பிரசன்னாவும் அப்படியான ஒரு திரைமேதை என்பது அனுபவத்தின்வழி நான் கண்ட உண்மை. வாதத்தின் இறுதியில், திரைப்படம் தன் உரிய வடிவத்தைப் பெறவேண்டும் என்பதற்கான வேட்கை மனோநிலையே எங்கள் அனைவரிடமும் கூடியிருக்கும். எனவே மாற்றுக் கருத்துகள் அந்தப் படைப்பைக் கூர்மைப்படுத்தும் இயங்கு காரணிகள் என்பதுவே எங்களுடைய புரிதல்.

ஒவ்வொரு திரைப்படத்திற்குமான திரைக்கதை வடிவம் தனித்துவமானதாக இருக்கும். கதைக்கரு உருவானதும் அதற்குகந்த திரைக்கதை வடிவத்தை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?

இயக்குநரின் இரசனைத் தெரிவையும் படைப்புநோக்கத்தையும் பொறுத்தே திரைக்கதையின் வடிவம் கட்டமையும். அவர் செல்ல விரும்பும் திசைக்குச் சரியான வழிகாட்டியாக இருப்பதே ஒரு திரைக்கதையாளரின் வேலை. வெகுசனத் திரைப்படமானாலும் சரி, கலைநுட்பம் கொண்ட திரைப்படமானாலும் சரி, இயக்குநரின் மனதில் வரைந்திருக்கும் ஓவியத்தை நிறம் அழியாமல் வெளியே கொணர்வதே ஒரு திரைக்கதையாளரின் தலையாய வேலை. கலைநுட்பம் வாய்ந்த படங்களில் காட்டவேண்டிய அதே தீவிரத்தையே வெகுசனத் திரைப்படத்திற்கும் ஒரு திறமைமிக்க திரைக்கதையாளர் காட்டுவார். ஆனால், வெகுசனத் திரைப்படத்திற்குக் குறைந்தபட்சத் திறனே போதுமானது என்கிற கணிப்பு தமிழில் நிலவுகிறது. திறமை குறைந்த எவரோ எடுத்த அவசர நிலைப்பாடு. அதைத் தமிழ் சினிமா உடும்பெனப் பற்றிக் கொண்டுவிட்டது. கடந்த பத்தாண்டுகளாக, பட இயக்கம் மட்டுமே கற்றுக்கொண்ட பல இயக்குநர்களும் திரைக்கதை எழுதத் தெரியாதவர்களும் தமிழில் திரைக்கதைகளை எழுதும் பணியைக் கைப்பற்றித் தம்மோடு சேர்த்து தமிழ்சினிமாவைச் சீரழிவுப் பாதைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். அது குறித்த துளி விசனமும் அன்றி அப்படியே பின்பற்றி இளைய தலைமுறைக் கூட்டமும் கைவந்த வண்ணம் எழுதிய திரைக்கதைகளோடு நீண்ட வரிசையில் நிற்கிறது. சிலர் கண்மூடித்தனமான துணிவில் எழுதிய சில படங்களின் விபத்துரீதியான வெற்றி இந்தத் தைரியத்தை அவர்களுக்குள் திணித்திருக்கிறது. அந்த சிலர் எழுதித் தோல்வியைத் தழுவிய படங்களைக் கேள்விக்குள்ளாக்கவேண்டிய விமர்சகர்களும் இங்கே குறைவு அல்லது இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை.

ஒரு திரைப்படத்தின் ரிதம் (Rhythm) திரைக்கதையிலேயே இருக்கும். இசையைப் போல சினிமாவும் காலம் எனும் வெளியில் லயிக்கும் ஒரு கலை. நீங்கள் இசை ஞானமும் கொண்டவரா? அது திரைக்கதை எழுதுவதற்கும் அதன் வடிவத்திற்கும் காட்சிகளின் தாளகதிக்கும் உதவியுள்ளதா?

திரைக்கதை எழுதுபவர் இசை ஞானமும் பெற்றிருப்பின் அது ஒரு வரம். எனக்கும் அந்த வரத்தைக் கொஞ்சம் கிள்ளித் தந்திருக்கிறது என் இளம்பிராய வாழ்க்கை. நான் திரைத்துறைக்கு வரும் முன்னமே முறைப்படி சாஸ்திரிய சங்கீதம் கற்றிருந்தேன். பாடுவதே என் முதல் கலை. அதற்குப் பின்புதான் மற்ற அனைத்தும் வருகின்றன. இசையறிதல் என்பது நாம் மேவும் கலையில் மட்டுமல்ல, நாம் வாழும் அனுபவங்களின் இரத்த நாளங்களிலும் ஊடுறுவிக் கலப்பது. மென்மையான தாலாட்டில் எப்போதும் நம்மை வைத்திருப்பது. நாம் பேசும் பேச்சிலாகட்டும், எழுதும் கவிதையிலாகட்டும், படங்களை விமர்சிக்கும் முறையிலாகட்டும், திரைக்கதை எழுதுவதன் நுட்பத்திலாகட்டும், இசை என்பது நம் பயணத்தில் உடன் தொடரும் அழகிய ஆறு போல. எனது கலை உள்ளிட்ட வாழ்வு சார்ந்த எதிர்பாராத இறக்கங்களில்கூட மனம் ஒருமித்த அன்புக் காதலியாய் உடன் நிற்கிறது இந்த இசையறிதல்.

சத்யஜித் ரே, மணி கௌல், ஜான் ஆப்ரஹாம் ஆகிய திரைமேதைகளை ஓர் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் இசையின் தேவையை நன்கு உணர்ந்த திரை விற்பன்னர்கள். மூவரும் அணுகும் இசை தனித்த கலை அர்த்தத்தையும் காலம் அழுந்திய நினைவெழுச்சியையும் காண்சூழலின் அரசியல் கட்டுமானங்களையும் வெவ்வேறு குணங்களில் கொண்டது. ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாதது. கடல் போன்று விரிந்த இசை ஒவ்வொரு கலைஞருக்கும் காட்டும் நிறம் வேறு, தரும் மணம் வேறு.

ஒரு தமிழ்ச் சிறுகதை, குறுநாவல் அல்லது நாவலைத் திரைக்கதை ஆக்கும் எண்ணம் தோன்றியுள்ளதா? எந்தப் படைப்பு? ஏன்?

தமிழ் இலக்கியத்தின் தொடர் வாசிப்பாளன் என்கிற முறையில், நான் கடந்து வந்த சிறுகதை, குறுநாவல், நாவல் என அனைத்துப் பிரிவுகளும் புனைவுக் கதையமைவிற்கு மட்டுமே பெரும்பாலும் நியாயம் செய்பவையாகத் தோன்றுகிறது. அதை அப்படியே ஒரு திரைக்கதையாக நீங்கள் மாற்றிப் படம்பிடித்துவிட முடியாது. அவற்றின் சில அம்சங்களைத் தேர்ந்தெடுக்கலாம், சில சம்பவங்களைத் தேர்ந்தெடுக்கலாம் எனும்படியே அவற்றின் உள்ளோட்டம் துணைபுரிய இயலும்.

எனினும், இதிலும் விதிவிலக்கான படைப்புகளும் உண்டு. நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’, பெருமாள் முருகனின் ‘ஏறுவெயில்’, கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ ஆகிய நாவல்களை வாசித்தபோது, அவற்றைச் சிற்சில மாற்றங்களோடு திரைக்கதைகளாக எழுதி நல்ல திரைப்படங்களாக எடுக்கமுடியும் என்று தோன்றியிருக்கிறது. மலையாளத்தில் இந்த நாவல்கள் எழுதப்பட்டிருந்தால் எப்பொழுதோ படங்களாக வெளிவந்து மக்களின் ஒருமித்த வரவேற்பைப் பெற்றிருக்கும். தமிழுக்கு நேர்ந்த தலைவிதி, சிந்திக்கத்தக்க நல்ல கதை முயற்சிகள் இங்கே எளிதில் பலிதமாவதில்லை. வங்காள, மராத்திய, கேரளாவைப் போல, திரையை மனசாட்சியுடன் அணுகும் நல்ல படைப்பாளர்கள் இங்கே அரிதாக இருப்பதும் இந்த நிலைக்கு ஒரு துர்காரணம்.

கடல் போன்று விரிந்த இசை ஒவ்வொரு கலைஞருக்கும் காட்டும் நிறம் வேறு, தரும் மணம் வேறு.

இலக்கியத்தை சினிமாவாக எடுக்கும்போது அது ஒரு போதும் இலக்கியப் படைப்பை மிஞ்சிவிட முடியாது என ஒரு கருத்து நிலவுகிறது. உங்கள் கருத்து என்ன?

அப்படிச் சொல்லமுடியாது. நாவல்களை அவற்றிற்கு இணையாகவும் ஒருபடி மேலாகவும்கூட உலகெங்கும் உள்ள பல இயக்குநர்கள் திறம்படக் கையாண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கியூபத் திரைமேதை தாமஸ் குத்தேரஸ் அலியாவின் (Tomás Gutiérrez Alea) ‘குறைவளர்ச்சி குறித்த நினைவுகள்’ (Memories of Underdevelopment) எட்முண்டோ டெஸ்னோஸ் (Edmundo Desnoes) என்ற எழுத்தாளரின் அதே தலைப்பிலமைந்த நாவலை அடியொற்றியது. ஆனால் டெஸ்னோஸ் ஆத்திரமுறும் வண்ணம் அலியா அந்த நாவலைத் தனது திரை நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிப் படமாக்கியிருந்தார். படத்தின் முதற்காட்சி வரை டெஸ்னோஸ் அலியாவை மன்னிக்கவில்லை. ‘தனக்கு இயக்குநர் துரோகம் செய்துவிட்டார்’ என்றே நினைத்தார். ஆனால் படம் பார்த்த பிறகு, கியூபப் பார்வையாளர்கள் அளித்த வரவேற்பிற்கும் பிறகு அவரது நிலைப்பாடு மாறியது. தன்னுடைய நாவலை அலியாவின் திரைப்படத்தில் உள்ளவாறு மறுமாற்றம் செய்து புத்தகமாக வெளியிட்டார். ஒரு நாவலின் மெருகேற்றம் அதனை அடியொற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தின்வழி நிகழ்ந்தது என்பது மறுக்கவியலாத வரலாறு. இதேபோன்ற விதிவிலக்குகள் நிறையவே உலக சினிமாவில் நடந்தேறியிருக்கின்றன. உங்களுக்குக் கண்முன்னால் உள்ள ஒரு பிரபலமான உதாரணம், ‘தி காட் ஃபாதர்’ (The Godfather) திரைப்படம். முதலில் நாவலை வாசியுங்கள், பின்பு திரைப்படத்தைப் பாருங்கள். இரண்டில் எது சிறந்த படைப்பு என்பதைத் தெளிவாக உணர்வீர்கள்.

சினிமா பல கலைகளின் சங்கமம் எனும்போது அது குறித்து எழுதுபவர்களுக்குப் பிற கலைகளின் பரிச்சயம் அவசியம் என்று நினைக்கிறீர்களா? சினிமா பார்ப்பவர்களுக்கும் ஒரு இரசனை உருவாகுவதற்குப் பிற கலை பரிச்சயம் உதவக்கூடுமா?

இலக்கியம், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளின் உச்ச வடிவமே சினிமா. மற்ற கலைகளை உள்ளடக்கிய அது ‘ஏழாம் கலை’ எனப் போற்றப்படுகிறது. எனவே, சினிமா பார்வையாளர்களுக்கு மற்ற கலைகளின் பரிச்சயமிருப்பின் ஒரு நல்ல திரைப்படத்தில் உலவும் உள்ளார்ந்த தடங்களைச் சிந்தைப்பூர்வமாக உணர்ந்துகொள்ள உதவும்படியாக இருக்கும். இரஷ்யத் திரைமேதையான ஆந்த்ரே தார்கோவிஸ்கியின் (Andrei Tarkovsky) திரைப்படங்களிலுள்ள ஓவிய உறைவு, ஈரானியத் திரைமேதை அப்பாஸ் கியாரோஸ்டமியின் (Abbas Kiarostami) படங்களிலுள்ள கவிதாபூர்வ அனுபவம், இந்தியத் திரைமேதை மணி கௌலின் (Mani Kaul) திரைப்படங்களிலுள்ள இசை நுணுக்கம் என நாம் உணர்வதற்குப் பல கலைகளோடும் நிச்சயம் பரிச்சயம் கொண்டிருக்கவேண்டும். இரசனை மெருகேறும் பார்வையாளரே ஒரு கட்டத்தில் விமர்சகர் ஆவதால், திரைப்படம் குறித்த தெளிந்த பார்வையை இன்னும் ஆழமாக எழுத்தில் விதைக்க இந்தப் பரிச்சயம் கைகொடுக்கும்.

சினிமாவை அலசி ஆராய்வதற்கு வீடியோ கட்டுரை (video essay) எனும் வடிவம் பிரபலமாக உள்ளது. Every Frame a Painting போன்ற Youtube சேனல்கள் இதற்கு உதாரணம். ஒரு விமர்சகராக வீடியோ கட்டுரைகள் உருவாக்க நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? சினிமாவின் மொழியிலேயே இருப்பதனால் சினிமா இரசனையை வளர்க்க எழுத்தைவிட உகந்த வடிவம் வீடியோ கட்டுரை என நினைக்கிறீர்களா?

கையால் எழுதி காகிதத்தில் உறையச் செய்வதே காலத்தில் நிலைத்திருக்கும். அதோடு இதழிலோ, புத்தகத்திலோ வாசிக்கும் ஒரு வகைப்பட்ட நுகரின்பத்தை மற்றெந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியும் வழங்குவதில்லை. நானும் நிறைய காணொளிகளைக் கண்டிருக்கிறேன். அவை அபிப்ராயம் சொல்லும் ஆரம்ப அல்லது மேலோட்ட நடைமுறையைக் கடைபிடித்து நுண்பார்வையற்ற வெளிப்பாடுகளைப் பார்வையாளருடன் பகிர்கின்றன. கடல் போல விரிந்திருக்கும் அந்தப் பரப்பில், ஆங்காங்கு சிறந்த விமர்சகர்கள் மற்றும் திரை நிபுணர்களின் உரையாடல்களைப் பார்க்கும், கேட்கும் ஆர்வம் எழுந்தால்கூட அந்தக் காணொளியின் உரைத்தொடர்ச்சி போதுமான பொறுமையைக் கோருவதை நாம் மறுக்கமுடியாது. எழுத்தில் கண்கள் இன்மையை அடைந்து எண்ணம் விழிப்பிற்குள்ளாகி வாசிப்பில் ஒரு நீரோட்டம் ஆற்றொழுங்கில் செல்வதைப் போல, காணொளி காணும்போது நம்முள் நிகழ்வதில்லை. காண்பது ஒரு திரைப்படம் எனில் பிரச்சினையில்லை. விமர்சனம் என்று வருகிறபோது அது அச்சிற்கே உரிய ஆசுவாசமான மொழி என்பதே என் கருத்து.

இலக்கியம், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளின் உச்ச வடிவமே சினிமா.

கருத்து அல்லது உள்ளடக்கத்துக்காக மட்டுமே ஒரு திரைப்படம் பேசப்படும்போது, அதன் அழகியல் சார்ந்த குறைபாடுகளை முன்னிறுத்தி ஒரு விமர்சகர் பேசுவது அவசியம் என நினைக்கிறீர்களா? ஏன்?

அழகியல் என்பதை ‘உள்முகமான வடிவ நேர்த்தி’ என்று புரிந்துகொள்கிறேன். ஒரு கருத்தையோ அல்லது உள்ளடக்க முக்கியத்துவத்திற்கோ மட்டும் ஒரு திரைப்படம் பேசப்பட்டால் அது முழுமையடைந்த படைப்பாகிவிடாது. அந்தக் கருத்தை நான் பிறரிடமிருந்தோ, புத்தகத்திலிருந்தோ அறிந்துகொள்ள முடியும். கருத்தை அல்லது உள்ளடக்கத்தைத் திரைப்படமாக வடிவ நேர்த்தியில் கொணர்வதே அந்தப் படைப்பைத் தன்னிறைவு பெறச்செய்யும். இதன் காரணமாகத்தான், ‘திரைக்கதையை நேர்த்தியாக எழுதுதல்’ என்பது திரைப்படச் செயல்பாட்டில் இன்றியமையாத கடமையாக முன்வைக்கப்படுகிறது. நல்ல திரைக்கதை வடிவமே எந்தவொரு கருத்தையும் அதன் அடியாழத்துடன் பார்வையாளரிடம் கொண்டுசெல்ல உந்துதலாய் இருக்கும். வெறுமனே கருத்தையும் கதையம்சத்தையும் முன்வைக்கும் படங்கள் திறன் போதாமையில் விளைந்தவையே. அப்படி ஏற்றுக்கொண்டால் தமிழில் வெளிவந்த 80 சதவீதப் படங்கள் ஏதோவொரு சமூக அக்கறைப்பட்ட கருத்தைப் பேசியே இருக்கின்றன. அதற்காக, அவற்றை நல்ல சினிமா பட்டியலில் நாம் சேர்த்துவிட முடியுமா?

நீங்களே ஒரு திரைக்கதை எழுதி அதை இயக்கும் பணியில் இருப்பதாகச் சொன்னீர்கள். Netflix போன்ற streaming platforms பெருகிவரும் இக்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க நினைப்பவருக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய சவால் என்ன?

நான் தற்சார்புத் திரை இயக்கத்தை (Independent Cinema) சேர்ந்தவன். அதுவே சுதந்திரமான சிந்தனையாளருக்கான வழி. கதைநோக்கத்தையும் அதன் திரைவெளிப்பாட்டையும் தீர்மானிப்பவர் ஒருவராக இருக்கும் பட்சத்தில், அந்தப் படைப்பின் முழுமையை அடைய யாதொரு தடையும் இருக்காது. மனதில் திரண்ட கவிதையை அப்படியே எழுத்தில் பதிவது போலக் கலை நிறைவுறும் செயல் அது. அது நல்ல கவிதையாவதும் ஆகாததும் படைப்பாளரின் அகவிழிப்பு சார்ந்தது. எப்படியாயினும், தூயப் படைப்புச் செயல் அங்கே நிகழ்வது போதுமானது. அதுபோலவே, தனக்கே உரிய வடிவத்தையும் முழுமையையும் ஒரு திரைப்படம் பெறும்போதுதான் தனது கலையடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும். நல்ல இயக்குநர் அந்த அடையாளத்தை அடைதல் மட்டுமே தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்.

‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘அமேசான் பிரைம்’ உள்ளிட்ட இணையத் திரையரங்குகள் (OTT) வருவதற்கு முன்னமிருந்தே, தயாரிப்பு என்னும் தனிப்பட்ட முதலாளித்துவ முதலீட்டு அமைப்பிலிருந்தே நாம் திரைப்படங்களை (அது கலைப்படைப்பாயினும்) உருவாக்கும் கட்டமைப்பைப் பெற்றிருக்கிறோம். இந்தத் தயாரிப்பு முறையே, பார்வையாளரது (தேக்கமடைந்த) இரசனையைக் காயப்படுத்திவிடாமல் மென்மையாக வருடி மகிழ்வடையச் செய்து இலாபம் சார்ந்த வர்த்தக முனைப்பை முதன்மைப்படுத்துவது. அதன் வடிவ வளர்ச்சியான இணையத் திரைக்களங்களின் வருகையும் இத்தகைய செயலியக்கத்தை ஆதாரமாகக் கொண்டதே. ஆனால் முன்னைவிட வாய்ப்புகளும் அதைவிட படைப்பாளர்க் கூட்டமும் பெருகியிருக்கிறது. ஆளாளுக்கு ஒரு கதையை எழுதிப் போதிய திறமில்லாமல் படம் எடுக்க ஒரு கூட்டம் தனி வரிசையில் நிற்பதும் கண்ணுக்குத் தெரிகிறது.

இணையத் தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் பெறவேண்டிய தருணம் இது என்று எண்ணுகிறேன். கலையும் வர்த்தகமும் இணையான சமத்தில் வைத்து எழுதப்படும் திரைக்கதைகளை அவர்கள் தேர்ந்தெடுத்தால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என இருபக்கமும் சேதாரம் நிகழாது தவிர்க்கலாம். அதற்கென, திரைக்கதையைத் தேர்ந்தெடுக்க ஓர் அறிவாளர் குழுவைத் தேர்ந்தெடுத்து தம் நிறுவனத்தில் பணியமர்த்தலாம். ஒரு திரைக்கதையாளர், ஒரு எழுத்தாளர், ஒரு திரைவிமர்சகர் என அந்தக் குழு அமைவது நலம் பயக்கும். சுதந்திரமாகக் கருத்துகளைப் பகிர்ந்து முடிவெடுக்கும் இணையதிகாரம் மூன்று தரப்பினருக்கும் வழங்கப்படுவது மிகவும் அவசியம். இவர்களது மதிப்பீட்டுப் பார்வையிலிருந்து இறுதித் தீர்ப்பை நிறுவனத்தார் வழங்கலாம். அவ்விதம் அங்கீகரிக்கப்படும் ஒரு படைப்பு தன் இலக்கில் வெற்றியடையாமல் போகாது. திரை சார்ந்த அழுத்தமான பார்வை இல்லாதவர்கள் கதைகளைத் தேர்ந்தெடுத்தால் அது பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும். இணையத் திரையரங்குகளில் ஒருமுறைகூடக் காணச் சகியாத பல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் (Series) வருகின்றன. இந்தத் தேர்ந்தெடுப்பின் பின்னிருக்கும் அலட்சியமும் அறியாமையும் நல்ல படைப்புகளை இனம் காணவிடாமல் செய்துவிடுகின்றன. நல்ல படைப்பாளர்களும் காணாமலாகிவிடுகின்றனர். திரைப்படம் எடுக்க நினைப்பவருக்கு இருக்கும் அதே சவால்தான் அவர் முதலீட்டை எதிர்விழையும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் உள்ளது. திரையறிவு பெற்ற ஓர் அறிவார்ந்த குழு நடுவில் இயங்கினால் நல்லன கிட்டும், கெட்டன விலகும். இணையத் திரையரங்குகளின் எதிர்காலம் திடப்படும்.

சினிமா, இலக்கியம் மற்றும் விமர்சனம் சார்ந்து உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ஒரு நல்ல சினிமா உருவாக வேண்டுமானால், அதற்கு இலக்கியச் செழுமையும் விமர்சனப் பின்புலமும் பக்கபலமாக அமையவேண்டும். தமிழில் பல நண்பர்கள் இந்த நோக்கத்தில் உழைத்துவருவதை நான் மகிழ்ச்சியுடன் காண்கிறேன். ஊர் சேர்ந்து தேர் இழுப்பதுபோல, என் பக்கமிருந்தும் ஒரு கைகோர்ப்பாக ‘செவ்வகம்’ திரை இயக்கம். இந்த இயக்கம், திரைப்படத்திற்கான இதழ் வெளியீடு, திரைப்படம் சார்ந்த பதிப்பகம், திரைப்பட இரசனை மேம்பாடு, நல்ல திரைக்கதை எழுதுதல், திறன்மிக்க திரைப்பட இயக்கம் எனப் பல திட்டங்களைக் கொண்டது. திரை சார்ந்த நல்ல வாசகருக்கும் பார்வையாளருக்கும் படைப்பாளருக்கும் உரையாடலை உற்சாகப்படுத்தும் காற்றோட்டம் கொண்ட திண்ணையாக ‘செவ்வகம்’ செயல்பட விரும்புகிறது. ‘கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் ஒளியடர்ந்த வரிகள் தரும் தன்னம்பிக்கை, கடலாகும் கனவு பொதிந்த ஊற்றாக என் திரைப்பயணத்தில் உடன் வருகிறது.


இதழ் 14 பிற படைப்புகள்

2 thoughts on “நேர்காணல்: விஸ்வாமித்திரன் சிவகுமார்”

  1. படித்துவிட்டேன் மிக முக்கியமாக ஒரு வரவுச் சித்திரம் உங்களைப் பற்றி உணரமுடிந்தது. உலகின் உன்னைக் கலைஞன் சார்லிசாப்ளினினுடைய சர்வாதிகாரிக் குறித்த ஆழமானப் பார்வை சிறப்பாக இருந்தது.இசை உங்களுக்கு தொரிந்திருப்பது இன்னும் சிறந்த காட்சி பிம்பங்களைத் தமிழ் (உலகத்) திரையில் படைப்பீர்கள் என்பதை உணரமுடிந்து. யமுனா ராஜேந்திரன் கட்டுரையை நானும் சிறுவயதில் படித்திருக்கிறேன் அதன் ஆழம் இன்னும் நெஞ்சிலிருக்கிறது. பிரசன்னா விதனாகவுடைய உங்கள் திரைப் பயணத்தின் நீண்ட அனுபவம் எனக்கும் புதிய திறப்புகளைத் தந்தது.நன்றி வாழ்த்துகளும் தோழர்

  2. ☯️திரைப்படம் குறித்த பார்வையும் ரசணையும் விஸ்வாமித்திரன் அவர்களின் வாழ்வு பயணத்தின் வழியே மிக கவனமாக உருவாக்கிவரும் செயல்பாடுகள் என புரிகிறது. இதற்கு உறுதுணையாக இசையும் தத்துவ படிப்பும் இயக்குனர் பிரசன்ன விதானகேவின் திரைப்படங்களில் பங்கேற்பும் துணைபுரிகிறது என்பதை அறிய மகிழ்ச்சி. என் அருகில் இருக்கும் கலைஞனின் ஆன்மாவை உணரவைத்த உரையாடல்.வாழ்துக்கள் அரு. 🌺
    .

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்