‘நீச்சல் குளம்’ குறுநாவலின் முந்தைய பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.
Life happens only in intersections – தொடர்கிறது
எனது தண்டனை விவரங்கள் பிணையத்தில் பதிவேற்றப்பட்டதை உறுதி செய்த இயந்திரம் ‘நீங்கள் போகலாம்’ என்றது. எனக்குப் பின்னிருந்த வரிசை சற்று முன் நகரவும், மீண்டும் அந்த வரிசையின் கடைசியில் நிற்க விரும்பினேன்.
இயந்திரத்தின் விசாரணைக்கு உட்படுவதற்காக அல்ல, வரிசையில் நிற்பவர்கள் ஒவ்வொருவரின் குற்றக் கதைகளைக் கேட்பதற்கு.
கண்ணாடியில் அலுப்பூட்டும் தோற்றத்தில் என்னைப் போலவே தோன்றும், ஒரு பெண்ணை அடிப்பதைப் போன்ற சாதாரணக் குற்றங்களைச் செய்தவர்கள் அல்ல.
வாடகைக்கு எடுக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட எந்தப் பெண்ணையாவது திருடியவர்கள், பெண்களின் அங்கங்களைத் தனித்தனியாக வெட்டியவர்கள், விதவிதமான வழிகளில் கொல்ல முயன்றவர்கள்.
நான் அவர்களின் கதை கேட்க விரும்பியதெல்லாம், இம்மாதிரியான அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாகும் குற்றங்களை அவர்கள் எதன் பொருட்டு செய்தார்கள் என்பதை அறிய மட்டுமே.
ஒப்பீட்டிற்காக.
குற்றங்களின் ஒப்பீடல்ல. குற்ற அனுபங்களின் ஒப்பீடு.
வாடகைக்கு எடுக்கப்படும் பெண்களை, ஒரு சேதாரமும் இன்றித் திருப்பிக் கொடுத்தால் கிடைக்கக் கூடிய தள்ளுபடியை மனதில் வைத்து அல்ல.
எளிய குற்றங்களின் கிளர்ச்சியே எனக்கு இன்னும் வடிந்திருக்கவில்லை அல்லது பயங்கரக் குற்றங்களுக்கான உந்துதல் இன்னும் தொடங்கியிருக்கவில்லை.
அந்தப் பெண்கள், வன்முறையால் மட்டுமே கிளர்ச்சி தரக் கூடிய அந்தப் பெண்கள் அவர்களது வலியால் மட்டுமே பிறழா ஒழுங்கில் நிகழும் கலவியை கவ்விப் பிடிப்பவர்கள் அந்தப் பெண்கள் தீயில் கருகிய மரங்கள் நிரம்பியிருக்கும் அன்னா கவனின் காட்டில் (அப்படியொரு பெயரை GrtDetற்குப் பிறகு யாரோ வைத்தார்கள்) ஒவ்வொரு மரக்கிளையிலும் தூக்கிடப்பட்டு, தசை உருகித் தொங்கும் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகளைப் பார்க்கும் அனுபவத்தை அளிக்கிறார்கள்.
நிரந்தரமாகத் தொங்கும் வெண்ணிற எலும்புக் கூடுகளின் பின்னணித் திரையாக உறைந்திருக்கும் கறுத்த காடே, உடைந்து கிடக்கும் எலும்புகளின் வழியாக எழுப்பும் ஓசையை எப்போதும் நிறுத்தாதே…..அதுவே நகைப்புக்குரிய வகையில் அசையும் எலும்புக் கூடுகள் ஆடும் ஒழுங்கற்ற நடனத்தின் இசையாகவே இருக்கிறது.
எலும்பே குழல். காற்றில் மறைந்திருக்கும் உருவற்ற ஒரு கலைஞன், தான் நகரும் திசையெங்கும் நிலத்தில் கிடக்கும் எலும்பைக் கையில் எடுத்து, குறைகாண முடியாத வகையில் வாசிக்கும் மரணச் சங்கீதத்தின் ஒரே கருவி.
வலியால் அலறும் அந்தப் பெண்கள் தோற்றுவிக்கும் பயங்கரத்தின் உளக் கிளர்ச்சி நிலை. வலி நிரம்பிய பரபரப்பு நிமிடங்களில் உடல் எட்டும் உச்சபட்ச வேகத்தில் உடலும், உடலோடு சேர்த்து இந்த உலகும் வெடித்துச் சிதறும்.
உலகு வெடிப்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை அது எஜாகுலேசன் தருணத்தைப் போன்றிருக்கலாம்.
விரைப்பைகளின் ஆழத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் எரிமலைக் குழம்பில் அழியும் காலமே காணாமல் போய்த் திரும்ப வருகிறது நிறையவே தளர்ந்து, ஓய்வாக.
நான் இவ்வாறு கற்பனை மட்டுமே செய்கிறேன். எல்லா இன்பங்களும் கற்பனையில் மட்டுமே சாத்தியமென்கிற காலத்தில், மெய்யனுபவங்களுக்கும், கற்பனைக்குமான இடைவெளியில் எழும் அடைபட்ட நிலையின் சுவர்களில் மோதியே உடையும் மண்டைகளில் என்னுடையதும் ஒன்று.
அறை புதியதென்றும், பழையதென்றும் கண்டுபிடிக்க முடியாத வெண்ணிறத்தில் இருந்தது. விசாரணைக்கு வந்திருந்த அனைவரும் ஒழுங்கான வரிசையில் காத்திருந்தார்கள்.
குற்றவாளிகளைத் தவிர வேறு மனிதர்கள் இல்லாத விசாரணை அறையில், எதன் காரணமாகவோ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
நான் பேச விரும்பினாலும், என்னிடம் யாராவது பேசுவார்கள் என என்னால் ஊகிக்க முடியவில்லை.
விசாரணை இயந்திரம் எல்லோருக்கும் ஒரே அளவிலான நேரத்தையே எடுத்தது. ஒரு சிலர் முதல் பேச்சிலேயே தண்டனை என்னவென்று அறிவிக்கச் சொல்லிக் கேட்டாலும், இயந்திரம் அதன் கேள்விகளின் வரிசையை மாற்றவில்லை.
இயந்திரத்தின் குரலுக்கு, அதுவும் பெண்ணின் குரலுக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து அதன் முகத்தில் குத்துவிட வேண்டுமென்று அவர்களில் ஒருவன் சொன்னான். கலவியல்ல, வன்முறையே இன்பத்திற்கான ஒரே வாய்ப்பு என்றால், அதற்கும் மற்றொரு உடல் தேவையல்லவா?
ஆதித்யா அடுத்த விசாரணை அறையிலிருந்து வெளியே வந்தான்.
இசைத் திருடர்களுக்கான விசாரணை அறை.
ஓவியம்: பானு
‘நீச்சல் குளம்’ குறுநாவலின் பிற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…