கட்டுரை

கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

11 நிமிட வாசிப்பு

சென்ற கட்டுரையில் நான் கொடுத்திருந்த நிகழ்ச்சியின் காலத்தையும் இடத்தையும் காட்டும் விதமான புகைப்படத்தை வெளியிட்டிருந்த அரூ ஆசிரியர் குழுவிற்கு நன்றி. அது வெளிப்படுத்தும் பிறிதொன்றுக்காகவும் சேர்த்தே அந்தப் புகைப்படக்காரனுக்கும் நம் பாராட்டுக்கள். உலகத்திலேயே மிகப் பெரியதான அந்த புத்தர்சிலை மிகப் பெரிய ஆசையாலும் பெருமையாலும் உருவாக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய வெறுப்பாலும் பகைமையாலும் தகர்க்கப்பட்டது. இரண்டுமே எண்ணங்களால் வெளிப்பட்டவையே. இரண்டுமே அகற்றப்பட்டது போலிருந்த வெறுமையான அந்த இடத்தின் முன்னிருந்த விரிந்த திடல் ஒன்றில் குழந்தைகள் – மனிதர்களில் சிலர் – கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்… நான் சொல்லவேண்டியதை இங்கே விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

காலம்காலமான நமது போர்களையும், சச்சரவுகளையும், துயர்களையும் அறிந்துகொள்ளாதவரை, எந்த மதத்தாலும் இயக்கத்தாலும் நாம் இந்த உலகில் விரிக்கநினைக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்கவியலாது என்பதை நாம் இன்னும் எப்படி அறிந்துகொள்ளாது இருக்கிறோம்? உண்மையான மதத்தையும் இயக்கத்தையும் நாம் கண்டடைந்தாகவேண்டும் என்று நமக்குத் தோன்றவில்லையா?

விளையாட நேரமில்லை. வாழ்க்கை சிறியது. வேலையிருக்கிறது நிரம்ப, என்று அங்கிருந்தும் ஒரு சிறுவன் – மனிதன் – விலகிவந்து நிற்கலாம் அல்லவா?

கடந்த மார்ச் மாதம் ஒருநாள் பெங்களுருவில் நடந்த நிகழ்வை முன்வைத்து நான் எழுதிய ஒரு சிறுஅறிக்கைக் குறிப்பு ஒன்றை மிக முக்கியமான என் நண்பர்களுக்கு அனுப்பி அதை அனைவரும் பார்க்கும்படி இணையத்தில் பதிவு செய்யும்படிக் கேட்டிருந்தேன். அவர்கள் என்மீது கொண்டுள்ள அன்பாலும் அக்கறையாலும் ஒருவகையான அச்சத்தில் அதைப் பதிவுசெய்ய மறுத்துவிட்டனர். ஆனால் அதை இந்தக் கட்டுரையில் வெளியிடுவதன்மூலம் ஒரு மேன்மையான புரிதலையும் அன்பையும் விரித்துவிடலாம் என்றே நம்புகிறேன்.

அந்தக் குறிப்பு:

“இன்று கர்நாடகாவில் வேலைநிறுத்தம்.

கல்விக் கூடங்களில் எல்லா மாணவர்களும் போலவே இஸ்லாமியப் பெண்களும் சீருடைதான் அணிய வேண்டும் என்று அவர்கள் ஹிஜாப் அணிவதற்குத் தடைவிதித்துள்ளது பிஜேபி அரசு. தடையை எதிர்த்துதான் இன்று கர்நாடகாவில் வேலை நிறுத்தம். பிஜேபியின் இந்தக் கருத்தாக்க நடைமுறையை நாம் சந்தேகிப்பதற்கோ ஆதரிப்பதற்கோ அப்பால் நாம் அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஒன்று உண்டு. எந்த அடையாளங்களுமே தவறு என்பதுதான் அது. அதன்படி நாம் அவர்கள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யலாம். அத்தோடு வீட்டுக்கு வெளியே எந்த மனிதர்களானாலும் அவர்கள் தங்கள் அடையாளங்களைக் குறிக்கும் சிலுவை அணிதல், பூணூல் அணிதல், திருநீறு அணிதல் போன்ற எந்த அடையாளங்களையும் அணியாதிருக்க சட்டமும் சரி, உளரீதியான முன்னேற்றத்திற்கான முயற்சிகளையும் சரி, மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதனின் உண்மையான மதம் வெளிப்பட்டு மனிதன் மனிதனாக வாழ முடியும்.”

தேவதேவன்.
17.03.2022.

இது நமக்கு மிகக் கடினமானது என்பதை நான் அறிவேன். காலம்காலமாக அச்சத்தாலும் அறியாமையாலும் நாம் கைவிடாது சுமந்துகொண்டே வருகிற, நம் எண்ணங்களைக் களைந்துகொள்வதற்கு நாம் முற்றுமுழுமையாக இப்போது கண்டடைந்துள்ளது. இதுவரைக்கும் இருந்ததுபோன்ற பிறிதொரு கருத்தாக்கம்தான் இதுவும் என்று எண்ணாத ஓர் ஆற்றல் கைவரப்பெற்றவர்களாக இருக்கவேண்டும். அது இவ்வுலகத்துயர்கள் மீது நாமேதான் ஏற்றிவைத்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள்மீது நமக்குள்ள அக்கறையையும், தீர்த்தே ஆகவேண்டுமெனும் தீராத வேட்கையையும் பொறுத்துள்ளது. இது ஒரு மனிதன் – ஒவ்வொரு மனிதனும் – தானாகவேதான் கண்டடைந்தாக வேண்டிய ஒன்று. ஆகவேதான் இது நமக்கு மிகக் கடினமான ஒன்று என்று சொன்னேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்தாளனுக்கு இது மிகமிக எளிதானது என்றும் சொல்கிறேன். மின்னற் பொழுதே தூரம்!

நாம் செல்வம் எனவும் பற்றுக்கோடெனவும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பொழுதும் கைவிடாது ஒரு பெருநஷ்டத்திற்கு அஞ்சுவதுபோல் சுமந்துகொண்டிருக்கும் அச்சுமைகளையெல்லாம் ஒரு ‘பேரிழப்’பிற்கு அஞ்சுவதுபோலவே நாம் உதறித் தள்ளிவிடும்போதுதான் – தள்ளப்பட்டுவிடும்போதுதான் என்பதே சரியான வரி – தம்தம் கடினமானதும் ஆபத்தானதுமான, எல்லாத் துயர்களுக்கும் போர்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமான தங்கள் திண்மைகளையெல்லாம் இழந்து, தங்கள் சாராம்சமான ஒன்றை அது வழங்குவதை நாம் காண்கிறோம். நம் அடையாளங்கள் உருவமும் பெயருமற்ற நிலையில் ஆழமும் பேரொளியும் சுடர்விடவே செய்யும். அப்போது அடையாளம் என்பது மனிதனால் பிரிவுபடுத்தப்படும் ஆபத்தான ஒரு விஷமாக அமையாது பொதுமையும் முழுமையும் கொண்டுவிட்ட புனிதமான அமுதமேயாகிவிடும். நம் அகத்தை வந்து பிணித்துக்கொள்ளாமல் நாம் காணவேண்டிய ஓர் வரலாறாக மட்டுமே அவைகள் அந்தந்த இடத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். நிச்சயமாக நாம் அல்ல அது. நம்முடையது என நாம் தொட்டால்தான் அது நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.

அது எப்படி அய்யா, எண்ணங்களில்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியும் என்றே பேர்பெற்ற பெரியபெரிய அறிஞர்களும் என்னைக் கேட்டிருக்கிறார்கள். நானும் விளக்கியிருக்கிறேன். எண்ணங்களில்லாமல் ஆளுமைப் படிமங்களில்லாமல் எப்படி நம் வாழ்வு நடக்கும்? என்பது அவர்கள் வியப்பு. கேள்வி. அப்புறம் முடியாது எனும் தங்கள் தீர்மானத்திற்குத் திடமாக வந்து நின்றுவிடுகிறார்கள். இடையேயுள்ள ஓர் அச்சம்தான் அவர்களது இந்த முடிவிற்குக் காரணம் என்பது தெளிவு. இல்லையா?

இவைகள் எல்லாம் இங்கே சுட்டிக்காட்டப்படுகையில், பெருங்கவிகள், சென் புனிதக் கவிஞர்கள், கவிதைகள் நமக்கு நினைவுக்கு வரலாம். அனைவருமே தங்கள் அகத்திலும் புறத்திலும் கண்ட ஒளியால் ஓர் ஒளிவிளக்கையும், உலகையும் படைத்திருக்கிறார்களா, படைக்கப் பாடுபட்டிருக்கிறார்களா என்பது என் சந்தேகம். படைத்திருந்தால் அவர்கள் அறுதியிட்டுக் கூற வேண்டியவைகளும் வெளிப்பட வேண்டியவைகளும் மனிதர்களிடையே நிகழ்ந்திருக்கும், அல்லவா? இதுவே முதன்மையாக நடந்திருக்கவேண்டும். அல்லாத வகையில் – ஒரு கவிதை சொல்வது போலும் – அது அரைக்கிணறுதாண்டுவதுதான். ‘மகத்தான’ எந்தக் கவிதைகளும் சிலைகளும் உலகை மாற்றப்போவதில்லை; மாறாக சிதைவுக்குள்ளேயே புகுந்துபுகுந்து போரையும் துயரையும் வளர்த்துக்கொண்டேயிருக்கும். (முந்திய பத்தி ஒன்றில் – முதல் பத்தியில்தான் – விளக்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டு கட்டுரையாதலால் சற்று விளக்கமாகவும்தான் இப்போது சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.

எண்ணங்களில்லாமல் ஆளுமைப் படிமங்களில்லாமல் எப்படி நம் வாழ்வு நடக்கும்? என்பதே நம் வியப்பும் கேள்வியும், அச்சத்தின் காரணமான நமது தவறுகளும் பின்னடைதல்களும் என்று சொன்னேன். விளக்குகிறேன்.

எனக்கு ஜெயராமன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். அவரை நான் இன்று சந்திக்கப் போகிறேன். பாருங்கள், இப்போது நான் அவரைச் சந்திக்கிறேன், ஒரு கூட்டத்தில். இதைச் சாத்தியப்படுத்தியிருப்பது எது? புகைப்படம்? நேரிலேயே எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்த நண்பர்தாம் என்பதால் நான் நன்கு அறிந்த அவர் உருவம்?

ஆனால் அன்பர்களே இப்போது எனது இக்கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். அந்த உருவம்தான் அவரா? இன்னும் வேறுவேறு ஒரு உருவத்திலிருந்தால் அவர் என் நண்பர் இல்லையா? ஜெயராமன் இல்லையா? இதே போலவேதான் பெயரைப் பற்றியும் நாம் கேள்விகேட்டுக்கொள்ளலாம்.

பெயரின், உருவத்தின் முக்கியத்துவமில்லா ஓர் எளிய முக்கியத்துவத்தை இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இன்னொன்று, ஜெயராமன் நாடறிந்த ஒரு படைப்பாளியும் சமூகச் செயல்பாட்டாளருமான ஓர் ஆளுமை. இங்கே அவர் பேச்சையும் உரையாடலையும் கேட்க வந்திருக்கிறோம். கேட்க. அன்பர்களே இது நமது கவனம் சம்பந்தப்பட்டது அல்லவா? நாம் நல்ல வாசகர்களும் நேயர்களுமானவர்கள். அத்தகையவர்கள் சகஇதயர்களே அல்லவா? அவர் பேச்சை நன்கு உற்றுக்கவனிக்கையில் அவர் யார்? நாம் யார்? முக்கியமாக நமது கவனிப்புக்கான கருவி எது? அதில் அவரது ஆளுமையின் பங்கிருந்தால் அது அவ்வளவு நல்ல கவனிப்பு அல்லவே? அவரும் தான் அடைந்த ஆளுமை மற்றும் புகழிலிருந்து பேசுவாரானால் அதுவும் அவ்வளவு நல்ல பேச்சு அல்லவே?

ஆனால் ஒரு பேச்சாளர் தன் ஆளுமையிலிருந்தே பெரும்பாலானவற்றையும் பேச முடியும். ஏனென்றால் முன்னறிவுகளால் திரண்டதே பேச்சுக்கலை. அதில் அவரது சாதனைகள் போன்றவைகள்கூடத் தன்னகங்காரம்போல் தோன்ற வெளிவந்துவிடலாம். ஆனால் நல்ல பேச்சாளர் எது முதன்மையானது என்பதையும் நன்கு அறிந்துகொண்டே சிலிர்ப்புடன் தன்னை உதறியபடியே பேச அறிவார். பேச்சைத் தொடர அறிவார். நிகழ்கணங்களையும் ஒளிரச் செய்பவராய் உண்மைகள் கூறி ஒளி இயற்றிவிடும் நல்ல மனிதரேயாகிவிடுவார்.

அதற்காகத்தான் கூட்டம் முடிந்து வெளியே வருகையில் அல்லது உரையாடல் முடிந்து நாம் விடைபெறுகையில் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஓர் இனிமையை நுகர்கிறோம். இங்கே ஆளுமையின் முக்கியத்துவமே அற்ற மிகப்பெரிய முக்கியத்துவத்தையும் ஆபத்தும் வேதனைகளும் அவலங்களும் இயற்றப்பட்டுவிடாத அதன் எளிய முக்கியத்துவத்தையும் நன்றாகவே விளக்கிவிட்டேன் என்றே நம்புகிறேன்.

0

நான் என்ற பிரக்ஞையிலிருந்து தொடங்கி – நாம் செல்ல வேண்டிய திசையிலிருந்தும் விலகி நாம் சென்றுகொண்டிருக்கும் எதிர்த்திசைதான் சாதி என்றும், மதம் என்றும், நாடு என்றும், இனம் என்றும், கொள்கை என்றும் விரிந்துகிடக்கும் நம் அடையாளங்களே இங்கே விஷப் பயிர்களை விளைவிக்கும் மிகப்பெரிய களமாகவும் மாறிவிட்டிருக்கின்றன என்பதை இப்போது நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பெருங்கவிஞர்களிலும் பெரும்படைப்பாளர்களிலும் சிலரைத் தவிர ஒரு நாட்டின் பெருஞ்செல்வமென இருக்கும் அனைத்துப் பெருமைகளாலும் பவிஷூக்களாலும் உலகில் போர்களும் துயர்களுமே விளைந்திருக்கின்றன என்பது கண்கூடான ஒரு வரலாறும் உண்மையும் இல்லையா? இனி அது தொடராது, தொடரக்கூடாது என்பதற்கான எந்த ஒரு முன்னெடுப்பையும் அறிவையும் நாம் பெற்றிருக்கவில்லை. மெய்யியல் ரீதியிலும்கூட – நிகழும் அறிவியல் வளர்ச்சிக்கு இணையான – உலகளாவிய ஒரு பரவலான செயற்பாட்டை – இன்னும் இங்கே நாம் விரித்திருக்கவில்லை.

இயற்கையின் கருணையால் (தனிப் பெருங்கருணை) நாம் கண்டுகொண்ட கவிதையின் மதத்தையும் கடவுளின் ராஜ்ஜியத்தையும் நம் இடையறாத பார்வைகளாலும் அப்பார்வைகளிலிருந்தே பிறக்கும் செயல்களாலும்தான் நடத்தமுடியும் என்பதை நாம் அறியவேண்டும். அதற்குத் தேவையான ஆற்றல், குப்பைகளையெல்லாம் களைந்து நிற்கும் நம் அகத்தூய்மையிலிருந்தே பிறப்பதாகும். இதுவரையான அறிவுகளிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் சடங்குகளிலிருந்தும் அல்ல.

ஒருவர் நம் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஒரு கவிதை எனவும், கவிதைப்படிமம் எனவும் கருதுவாரானால் அவருக்கு மிகத் தெளிவாக நாம் சுட்டிக்காட்ட விரும்புவது ஒன்று உண்டு. மனிதனை மனிதனாக்கும் ஓர் உயிராற்றலை அளிக்காத கவிதைகளும் கொண்டாட்டங்களும் மனிதர்களை மக்கு மடையர்களாகவும் எதிர்த்திசையில் சிதறிவிட்ட வெறியர்களாகவும் முழுமையற்ற போதையாளர்களாகவும் ஆக்கியிருப்பதுதானே கண்கூடு? விவேகமான எந்த ஒன்றை மதமும் சடங்குகளும் சொல்லும்? விவேகமான ஒன்று மதம் ஆகவேண்டிய அவசியமே வேண்டாமல் நடக்கக்கூடியது அல்லவா? இதை ஒருவர் புரிந்துகொள்ளும் நிலையில்தான் ‘கவிதையின் மதம்’ ‘கடவுளின் ராஜ்ஜியம்’ என்ற நம் சொற்களையும் சம்பிரதாயமான அதன் வடிவுடன் மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்.

என் அழகுப்பொருட் கண்ணாடி அலமாரியிலிருந்து சடாரென்று ஒரு கவின்மிகு குவளையை எடுத்துவந்து உங்கள் முகத்தின் முன்னே நீட்டி, இதைப் பருகு, கடித்துத் தின்னு என்றால் அது எத்துணை பெரிய கொடுமை! எந்தப் பொருளும் இல்லாத ஒரு வெற்றுக்குவளை! அதில் நாம் பருகவேண்டியதென்றும் உணர வேண்டியதென்றும் அறியவேண்டியதென்றும் ஒன்று இருக்குமானால் அது அதிலுள்ள இன்மை மட்டுமே அல்லவா? இதைச் சொல்லிவிட்டவர்களும், அமைக்க முடியாது என்று விட்டுவிட்டவர்களையும் காரணத்தையும் நாம் அறிந்துகொண்ட நிலையிலிருந்துதான் நாம் இங்கே கவிதையின் மதத்தைத் தொடர்கிறோம். கண்டடைந்துவிட்டோம். அது செயல்களைக் கண்ணுற்றபடியே நகர்கிறது. இதுவரையிலுமிருந்த தன் அகத்திலிருந்த அனைத்து எண்ணங்களையும் பற்றுக்களையுமே களைந்து தூய வெறுமையான கோப்பையிலிருந்தே கண்ணுற்றபடி நகர்கிறது. இந்த உலக வாழ்வுக்குத் தேவையான ஒரு கட்டடத்தையும் அது தனது எண்ணங்களற்ற இயற்கையான செயலூக்கத்திலிருந்தே அமைத்துக்கொண்டு அதன் மேற்பார்வையின் கீழே செயல்பட்டுக்கொள்கிறது. அது ஒரு முடிவிலிருந்தே எப்போதும் துவங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் காண்கிறோம் – அல்லவா?

‘பெருநகர்’ என்று இவ்விடம் நினைவுக்கு வருகிற கவிதை ஒன்றைக் கட்டுரையின் முடிவில் இணைக்கச் சொல்கிறேன். அந்தப் பெருநகரில் பல மொழிகளும், பல மதங்களும், அதற்கான வழிபாட்டுக் கோயில்தலங்களும், சாதிகளும், கொள்கைகளும், கட்சிகளும் உள்ளன.

ஒழுங்கும் சட்டமும் கொண்ட ஒரு குறியீடு போன்ற காவலினால் ஆன ஓர் அழகுஅமைதியுடன் வாழ்கிறது அது. குழந்தைகள் மட்டுமே இன்னும் அறிந்திராத ஓர் உண்மையாய் அந்நகரில் ஓர் அமைதியின்மை, சச்சரவு, குழப்பம் இருக்கிறது. எப்போதாவது ஒரு பெரும்துயரமும் வேதனையும் கிளர்த்தும் ஒரு போர்த் தொந்தரவு வருமானால் அது எதிலிருந்து வந்ததாக இருக்கக்கூடும்? யோசியுங்கள். வளரவளர குழந்தையையும் தொற்றிக்கொண்டுவிடுகிற – இந்த பூமியில் இன்று எல்லா மனிதர்களையுமே தொற்றிக்கொண்டிருக்கிற அமைதியின்மை, தனிமை, துக்கம், நிச்சயமின்மை, அச்சம் எல்லாம் நாம் அறிந்ததுதானே? இவைகளிலிருந்தெல்லாம் விடுதலைபெற்ற ஒரு மானுடவாழ்க்கை கடவுளின் ராஜ்ஜியம் சாத்தியமில்லை என்று யார் சொன்னார்கள்? கவிதையின் மதம் அதை நிகழ்த்திவிடக்கூடியதல்லவா?

ஒரு கவிதையில் தன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் கண்படும் இடத்தில் எல்லா மதத்தினரின் கடவுள்படத்தையும் மாட்டிவைத்திருக்கிற தந்தை தன் வீட்டுப் பூஜையறையில் ஒரு மதத்தின் கடவுள்படம் மட்டுமே மாட்டியிருக்கிறதைப் பார்த்து, பூஜை முடித்துவரும் தந்தையின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி குழந்தை கேட்கிறது: “ஏனப்பா, நம் கடையில் இருப்பதுபோலவே இங்கே இல்லை; அல்லது இங்கே இருப்பது போல அங்கே இல்லை.” என்று.

மண்டிக்கிடக்கும் எத்தனை எத்தனையோ சிறியவிஷயங்களில் இருந்து மட்டுமே மிகப்பெரிய துயரங்கள் எல்லாமே வந்து மறைந்து நிறைந்து கிடக்கின்றன. இதை அறியாதவரை நமக்கு விடுதலை இல்லை. ஓவ்வொரு சிறுசிறு செயல்களின் மூலமும் செய்யாமைகளின் மூலமுமே உலகைப் பேரழிவுக்குள்ளாக்கும் எத்தனை எத்தனை பெரியபெரிய கொலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம் நாம்? முக்கியமாக ஒரு சின்ன கண்டுகொள்ளாமை, கண்முன்னால் இருப்பது கண்ணில்பட்டபின்னும் நாம் செய்யும் ஒரு சின்ன முகந்திருப்பல்! மாறாக நம் துயர்களுக்கெல்லாம் மாற்றாக நாம் பற்றிக்கொண்டிருப்பவைகளெல்லாம் என்ன? உற்றுநோக்குங்கள் கண்டுபிடியுங்கள். அறிதலில் நடக்கும் அந்தப் பார்வையில் உலகம் உருளும்போதுதான் அது மனிதர்கள் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்திருக்கும்.

உண்மையை விட்டு விலகிய திசையில் – அல்ல, அல்ல, எதிர்த்திசையில் நாம் சென்றுகொண்டிருக்கிற வாழ்வை நாம் உற்றுப் பார்ப்போமானால் நாளும் நாம் கண்டடைவதைப் புரிந்துகொள்வதற்கும் மீள்வதற்கும் நாம் தத்துவங்களையும் தத்துவவாதிகளையும் ஆசாரியர்களையும், எந்த முன்னோடிகளையும், மூத்தோர்களையும் நாட வேண்டியதே இருக்காது. மாறாக சகஇதயர்களாய்மட்டுமே நாம் மனிதர்களைக் கண்டுகொள்ளக்கூடிய பாதையிலே அவர்களும் இருப்பதை அறிவோம். அதற்கு முதன்மைமிக்கதாகத் தேவைப்படுகிற ஒன்று தன்னை அறிதல் என்பதுதான்.

சுடரேற்றாத தீக்குச்சி உரசலைப்போல் எழுந்துஎழுந்து அணைந்துவிடும் எத்தனையோ கவிதைகளை, கவிஞர்களை, நாம் கண்டிருப்போம் ஒவ்வொரு மனிதனும் ஒரு கார்த்திகை விளக்காகி, சுடர்ந்துகொண்டு கடவுளின் ராஜ்ஜியத்தைப் படைத்துவிடும் கவிதையின் மதத்தைத்தான் நாம் கண்டுகொள்ளவில்லை. எரிந்து எரிந்து அணைந்துவிடும் ஒரு ஒளியையே ஒரு திறப்பு ஏற்படுத்தியாயிற்று என்ற பெருமையில் ஆழ்ந்துவிடுகிறோம். உள்நுழைந்த பின் உலவ வேண்டிய பெருங்களத்தை நாம் அடையாதிருப்பதையும் அடையவேண்டிய நிலையையும் நாம் அவதானிப்பதில்லை.

இதுதான் நமது துக்கம் எனப்படுகிறதில்லையா?

நாம் அடைத்துக்கொண்ட கதவைத் தட்டுகிற துக்கத்தின் ஒலியை நாம் கேட்கத் தவறுகிறோம். கேட்கும்போது செவியை அடைத்துக்கொள்கிறோம். சுகஜீவனம் போல் ஒரு வாழ்வு கிடைத்தால் உடனே அதை அடைத்துக்கொண்டு அதை மட்டுமே காப்பாற்றும்வகையில் மேலும்மேலும் குழப்பத்தையும் போரையும் துயரையுமே வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதுதான் நம் வாசலுக்கு வந்து கதவைத் தட்டுகிறது என்பதையே அறியாதவர்களாய்.

குழந்தைகளின் களியாட்டங்ளைக் கவனியுங்கள். எல்லோரும் இவ்வாறே இன்புற்றிருக்க விழைவதுவே மானுட லட்சியம். ஆனால் துன்பம் நேர்கையில், அது தனது மானுடப் பொறுப்புணர்வை நோக்கித் திரும்புவதுதானே இயற்கையாக இருக்கவேண்டும்? தடைக்கல்லாக இருப்பது எது? நம் தன்மய்யம் ஒன்றே அல்லவா? இதை அறிந்திராதவரை நம் கலைகளாலும் இலக்கியங்களாலும் ஏது பயனும் இல்லை அல்லவா? நான் என்னும் பிடியிலிருந்துதானே நமது அனைத்துக் கடவுள்களும் சாத்தான்களும் ஆட்டம்போடுகின்றன. மாறாக, ‘நான் இல்லை’ எனும் காலமற்றதும் இடமற்றதும் பொருளற்றதுமான ஓர் இன்மைநிலையில்தானே, அன்பும், அழகும், உண்மையும், மெய்யான வாழ்வும் ஒளிர்கின்றன? இயற்கையாக இது தோன்றும் போதெல்லாம்தானே அதனை ஒரு கருணை என்று கண்டுகளிக்கிறோம்? எவ்வளவோ உயர்தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் கண்டடைந்துவிட்ட நாம் இதனையும் கண்டடைந்துவிடமுடியாதா என்ன?

இங்கே ஓரிடத்தில் எதிர்த்திசை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் கவனமாகக் கண்டுகொள்ள வேண்டும். சொற்களை உதறிவிடுங்கள். எத்திசைகளிலும் அவை அறிந்துகொள்ளப்பட்டு மறக்கப்படுகையில்தான் இருக்கும் பெருவெளியையே உணர்ந்தவர்களாய், கண்டுகொண்டவர்களாய் நாம் இங்கே உரையாடிக்கொண்டிருக்கிறோம். எதிர்த்திசையின் எதிர்த்திசையல்ல பெருவெளி. எத்திசையானாலும் பெருவெளிக்குள்தான் அது இருக்கிறது என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய நம் அறியாமை.

நாம் செல்வங்களெனச் சேர்த்துவைத்துக்கொண்டிருக்கும் அறிவுகள் எதையுமே இழந்துவிடுவோமோ எனும் அச்சத்திற்கு இடம்கொடாது இன்றைய அறிவியல் அவற்றையெல்லாமே – நாம் வேண்டுமளவு – தன் கையில் எடுத்துக்கொண்டு காத்துக்கொள்ளத் தயாராயிருக்கிறது. நமது பார்வை ஒன்றை மட்டுமே அது விழைகிறது. எத்தகைய தனிப்பெருங்கருணை ஒன்றின் இயக்கம் இது என நம்மைக் கண்ததும்ப வைக்கும் காட்சியல்லவா இது!

தனது ஆற்றல்களையும் திறமைகளையும் நன்கு அறிந்திருக்கும் இன்றைய இயந்திரம் எத்தகைய பெரிய படைப்புகளாலும் அறிவுகளாலும் உயர்ந்த ஆளுமைகளை வியப்பதில்லை. மாறாக அதன் மாண்பினையும் மானுட நோக்கையுமே கண்டு ஆனந்திக்குமாறு சகஇதயனாய்மட்டுமே உணரும் சமன்நிலையையே ஒவ்வொருவரும் அடையும்படி அது உயிர்த்துநிற்கிறது. அதற்கான இடத்தில் அதற்கான பெருமை அதற்குண்டு என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை.

ஒரு தப்புதலாகவோ, உண்மையாகவோ, தந்திரமாகவோ(மனம்தான் எத்தகைய புரட்டுக்காரப் பேர்வழி என்பது நாம் அறிந்ததுதானே?) இதற்கு அப்பாலான விஷயங்களில் அது தன் மூக்கை நுழைப்பது என்பது ஒரு உப்பு பொம்மை கடல் ஆழத்தைக் காணமுற்படுவது போன்றதுதான் என்றாலும் நாம் தடுக்கவில்லை, முதன்மையானது எது என்பதுதான் நம் அக்கறை இல்லையா?

மென்னுணர்வுகளும் தீவிரமுமற்று பொழுதுபோக்குகளில் திளைத்துக்கொண்டிருக்கும் ‘வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும்’ மனிதனும் அச்சத்தினால் தாங்கள் பற்றிக்கொண்டிருக்கும் ‘செல்வங்களை’ விட்டுவிட்டு வரத் தயங்குகிறான். வந்துசேர்ந்துவிடுகிற இந்த இடமே அழியாத நிறைவாழ்வையும் பெருங்களிப்பையும் பேரழகையும் கொண்டுள்ளது என்பதையே அறியாதவனாயும், அதுவே இயற்கையின் தனிப்பெருங்கருணை ஒன்றால் ஒரு மாதிரிக் காட்சிபோல் காலமற்ற தருணங்களில் தனக்குக் காட்சிகொடுக்கிறது என்பதையே அறியாதவனாய்!

முதிர்ச்சியினாலோ, முதுமையினாலோ, மிகப்பெரிய கடமை உந்தலினாலோ நாம் இதையேதான் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டேயிருக்கிறோம் என்று தோன்றுகிறது இல்லையா?

பருவகாலங்களுடனும் மரணம்-வாழ்வு என்றும், கணந்தோறும் தோன்றும் புத்துயிர்ப்புடனும் மாறிக்கொண்டேயிருக்கும் இயற்கையின்முன் வியந்து தாழ்ந்து தன் வழிபாட்டையும் கற்றுக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு என்றைக்கு மனிதன் சிலைகளையும் கோயில்களையும் கோபுரங்களையும் சடங்குகளையும் கற்றுக்கொண்டானோ, அன்றிலிருந்துதானே வந்திருக்க வேண்டும் இந்த வீழ்ச்சி? ஆனால் எதையுமே ஒரு மனிதன் தானாகக் கண்டு தெளியாதவரை எந்த அறிவுரைகளினாலும், கருத்துகள், கொள்கைகளினாலும் உலகம் மாறப்போவதில்லை; மாறியதில்லை.

இயற்கையை நோக்கித் திரும்புதல் என்ற ஓர் அறிவுக்கொள்கையும் தோன்றித்தானே மறைந்திருக்கிறது நம்மிடம். ஏன் தோன்றுகிறது? ஏன் மறைகிறது? கேள்விகள்தாம் நாம் ஆராய வேண்டியது. பதில்கள் தேடி நாம் அறிஞர்கள் மற்றும் பெருமக்களைத் தேடுவதும், அவர்கள் சொற்படி நடப்பதும், நாம் கேள்விகள் கேட்காமலிருப்பதும் ஒன்றுதான். உணர்ச்சியற்ற, உய்வதற்கான ஆர்வமற்ற, மந்தத்தனக்கார அற்ப மானுடர்களே நாம் என்பதுதான் அது. மேலும் ஆற்றலுடன் ஆழந்து தேடினால் அக்கேள்விக்குள்தான் பதில்களாக இருக்கும் மெய்மையை நாம் கண்டடைந்துவிடலாம். அறிதலுக்கான ஆற்றலின் பின்புலம் நம் உயிர்வேகம் தானின்றி, புறவுலகக் கட்டுப்பாடுகளோ அறிஞர்களோ அல்லர்.

ஒரு பெருநகருக்கு வெளியே ஓர் அழகிய – பல ஆயிரம்ஆயிரம் ஆண்டுகள் வயதுடைய குண்டு குண்டுகளான, பல்வேறு வடிவும் பெரும்பெரும் உருவும் கொண்ட பாறைகள் அமர்ந்திருக்கும், மலை. நல்ல உயரமும், சரிவுகொண்டதானாலும் பெரியபெரிய தளங்களும் கொண்ட மலை. அங்கே செல்வதற்கும் அங்கே சென்று காண்பதற்கும்(களிப்பதற்கும்?) அந்த மலையைச் செதுக்கி தங்கள் நகர மய்யத்திலிருப்பது போன்றே பல கோயில்களையும் தளங்களையும் கட்டி, மக்கள் சென்றுவருவதற்கான மழைக்கவசக் கூரைகள் கொண்ட மிக அகலமான படிக்கட்டுகள் அமைத்தும், ஒரு பக்கம் இருசக்கர வண்டிகளும், கார்களும் கூட மலை உச்சித்தளத்தை அடைந்துவிடுமாறு மலைச்சரிவைச் ‘செப்பனிட்டும்’ அவ்வளவு உயரத்திலிருக்கும் பெரிய, சிறிய நீர்நிலைகள், குட்டைகள், மரங்கள், புற்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் மனிதர்கள் தங்கள் ‘அழகுணர்வையும் நேசத்தையும்’ ‘மறக்காமல் வெளிப்படுத்தியிருக்கின்ற கோலங்களாய் நெகிழிப் பைகள், பாட்டில்கள் எனப் பலப்பல மனிதக் குப்பைகள் கிடப்பதைக் கவனித்திருப்பீர்கள். அங்கங்கே வயிற்றுக்காகப் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், வந்துபோகும் மனிதர்களை முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையுடன் பார்த்தபடி அழுக்கும் அசுத்தமுமான அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

மீண்டும் மக்கள் நெருக்கம்மிக்கப் பெருநகர்க் கடைவீதிக்கு வருகிறோம். எவ்வளவு மக்கள்! தங்கள் பரபரப்புடன்! அசமந்தத்துடன்! இன்னும் கண்டிராத குழந்தைமை அழகுடன்! தங்கள் அனைவருடையதுமான தேவைகள் ஒன்றுதான் என்பதையறியாதவர்களாய், எத்தனை எத்தனை கருத்துகள் அடையாளங்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாய், நீங்காத தன்மய்யங்களுடைய தாங்கள்தாம் இவ்வுலகை இவ்வாறு குழப்பங்களும், துயரும், போரும் அச்சமும் அறமின்மையும், பொறுப்பின்மையுமுடைதாய்ப் படைத்திருக்கிறோம் என்பதையே அறியாதவர்களாய் – உடுத்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்!

0

பெருநகர்

அண்ட சராசரங்கள்
அனைத்தையும் ஆள்பவராயிருப்பினும்
கடவுளின் சொந்த ராஜ்யமல்லவா,
சொந்த வீடல்லவா,
இந்த பூமி?
பைம்புனல்
பசுந்தருச் சோலைகளின் தணுப்பு
அவரது அண்மை.

ஒரு பெருநகரம்
அவரது அண்மையை மட்டும் உதறாதிருப்பின்
எத்தனை மொழிபேசும்
எத்தனை இனத்தவராயினும் என்ன,
அது இசைந்து வாழ்கிறது.

அவர் இருக்கும் இடத்தில் மதங்களில்லை
இனங்களில்லை ஜாதிகளில்லை
ஏற்றத்தாழ்வுகளில்லை
வறுமை இல்லை
சண்டை சச்சரவுகளில்லை
போர்கள் இல்லை.
போர்களில்லாத சண்டை சச்சரவுகளில்லாத
வறுமையில்லாத ஏற்றத்தாழ்வுகளில்லாத
ஜாதிகளில்லாத
இனங்களில்லாத மதங்களில்லாத இடத்தில்
அவர் இருக்கிறார்.

அத்தனை இலட்சம் மக்களை
நெருக்கி அணைத்துக்கொண்டிருக்கும்
அந்தக் கற்பனைப் பெருநகர்
ஒரு சிறு கிரீச்சிடலுமின்றி
இறையாட்சியின் நிறைவாழ்வில்
திளைத்துக் கொண்டிருக்கிறது என்றால்
அன்பர்களே, அதன் காரணம்
சீலமும் ஒழுக்கமும் மாத்திரமே அல்லவா?

காதல்கொண்ட ஒரு மனிதனின்

காதல்கொண்ட ஒரு மனிதனின்
காலடிச்சுவடுகள் போலே
பூமியெங்கும் ஓர் நடமாட்டம் முடித்தவனாய்
அவன் அங்கு வந்து நின்றான்.

தேவதைகளின் விசித்திர மணிமுடியோ என
தரையைத் தொட வரும்
நீண்ட கருங்கூந்தல் ஒளிர
முழுமையின் ஒத்திசைவுகொண்ட
புனிதமான பேரழகுடன் ஒரு பெண்மணி
அந்த மேடையில் அமர்ந்திருந்தார்

புத்துலகைப் படைத்துவிட்ட நிறைவில்
ஓய்வு கொண்டமர்ந்த பாதங்களைச்
சற்றே ஓர் இருக்கை உதவியுடன்
தேவமலர்களாய்க் கனலச் செய்திருந்தது
அவர் நடையைக் நன்கறிந்த பூமி.

எழுந்துநின்று அவர் பேசத் தொடங்கியபோதே
அரங்குள்ள அனைவருமே
ஆன்று அமர்ந்துவிட்டனர்.
அவர் எழுந்துவிட்டிருந்த நாற்காலி
மீண்டும் தன் வெற்றிடத்தை அடைந்திருந்தது.

அவர் வேறு எதனைத்தான்
பேசத் தொடங்குவார்?

இளநீர் வணிகன்

ஊர்வெளி நடைபாதையில்
ஓர் இளநீர்க் கடை
நல்ல வியாபாரம்
குவிந்துகிடக்கும் இளநீர்களை
ஒவ்வொன்றாய் எடுத்து
ஒவ்வொருவருக்குமாய்ச் சீவி உடைத்துப்
பருகக் கொடுத்துவிட்டு
ஓரமாய்க் குவித்திருக்கிறான்.

அவன் அறிவான்,
பற்றுவிடாமல்
குவிந்துகிடக்கும் இந்தக் குப்பைகளால்தான்
உலகம் இருண்டு
வலி முணகிக்கொண்டிருக்கிறது என்பதை.


நன்றி: சுடலைமுத்து
ஓவியம்: பானு

மேலும் படிக்க

இதழ் 14 பிற படைப்புகள்

Share
Published by
தேவதேவன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago