இதழ் 14: அறிவியல் புனைவுக்கு அப்பால்

இதழ் 14: அறிவியல் புனைவுக்கு அப்பால்

2 நிமிட வாசிப்பு

அரூ என்றாலே அறிவியல் புனைவு மட்டும்தான் என்கிற பிம்பம் இருப்பதை, அவ்வப்போது சிலருடன் உரையாடும்போது உணர முடிகிறது. அப்படியல்ல. அனைத்துக் கலைகளுக்குமான களமாக இருக்கவேண்டும் என்பதுதான் தொடக்கம் முதலே அரூவின் நோக்கம்.

ஓவியம், காமிக்ஸ், கிராஃபிக் நாவல்கள் குறித்து டிராட்ஸ்கி மருதுவுடனான உரையாடல்கள், நாடகம் குறித்து ஆனந்தகண்ணனுடனான உரையாடல், கவிதை குறித்து தேவதேவன் மற்றும் வேணு வேட்ராயன் எழுதிவரும் தொடர்கள், கணேஷ் பாபுவின் உலக இலக்கியக் கட்டுரைகள், சினிமா குறித்து பிரதீப் பாலுவின் கட்டுரைகள், க்வீ லி சுவி, வரதராஜன் ராஜூ, சஞ்சனா வரைந்து வரும் வரைகதைத் தொடர்கள் என இத்திசையில் சில முயற்சிகளும் எடுத்துவந்துள்ளோம். கல்குதிரையில் வெளியான நாடகக் கலைஞர் முருகபூபதியுடனான உரையாடலை அரூவில் மறுபிரசுரம் செய்யும் வாய்ப்பும் கிட்டியது.

புனைவில் மட்டும் அறிவியல் மற்றும் மிகுபுனைவின் மீது கவனக்குவிப்பை வைத்துக்கொண்டு, பிற கலைகளையும் நாடியறியவே அரூ எத்தனிக்கிறது. அனைத்துக் கலைகளுக்கும் இடையேயான தொடர்புகளும் பாலங்களும் வலுப்பெறுவதே அரூவின் நோக்கம்.

அந்தப் பாதையில் அடுத்த அடியாக, இவ்விதழில் சினிமா எனும் கலை குறித்து நான்கு விரிவான நேர்காணல்களை வெளியிடுகிறோம். கவிஞர்-ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர்-ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் – திரை விமர்சகர் விஸ்வாமித்திரன் சிவகுமார் என்ற இந்த நான்கு ஆளுமைகளுமே சினிமா, இலக்கியம் மட்டுமன்றி பிற கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். சினிமாவை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுகுகின்றன இந்த உரையாடல்கள்.

இவை தவிரவும், இவ்விதழில் கவிஞர்கள் தேவதேவன் மற்றும் வே.நி. சூர்யாவின் கவிதைகளும், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதும் அறிவியல் புனைவு குறுநாவல் தொடரின் அடுத்த பாகமும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், வழக்கம்போல் ஓவியர் டிராட்ஸ்கி மருது மற்றும் க்வீ லீ சுவியின் ஓவியத் தொடர்களும், கவிஞர் வேணு வேட்ராயனின் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத் தொடரும், கணேஷ்பாபுவின் ’திரைகடலுக்கு அப்பால்’ கட்டுரைத் தொடரும், தேவதேவனின் ’கவிதையின் மதம்’ கட்டுரைத் தொடரும் இவ்விதழில் வெளியாகியுள்ளன.

இதழில் வெளியாகியிருக்கும் படைப்புகளைக் குறித்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

டிராகன்களுடன் சேர்ந்து பயணிப்போம்,
அன்புடன்,
அரூ நண்பர்கள்


புகைப்படம்: 2001 A Space Odyssey

இதழ் 14 உள்ளடக்கம்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்