சித்தார்த்தா - திருலோக சீதாராம் - கணேஷ் பாபு கட்டுரை

திரைக்கடலுக்கு அப்பால் 5: சித்தார்த்தா

11 நிமிட வாசிப்பு

நவீன உலக இலக்கியத்தில் தத்துவம், மெய்யியல் போன்றவற்றை இலக்கியப் படைப்பில் விரிவாகப் பதிவுசெய்த எழுத்தாளர்கள் மிகவும் சொற்பமே. ஆனாலும் ஒருவகையில் நாம் மிகச்சிறந்த செவ்வியல் படைப்புகள் என்று கொண்டாடும் பிரதிகள் யாவுமே தத்துவம் மற்றும் மெய்யியல் ஆகியவற்றின் சாரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாங்கிநிற்பவைதாம். இது எப்போதுமே எனக்கு வியப்பூட்டுவது. தத்துவப் பயிற்சி அதிகம் இல்லாத எழுத்தாளர்களின் ஆக்கங்களிலும் தத்துவச் சாரம் எப்படி அவர்களையும் அறியாமல் இடம்பெற்றுவிடுகிறது! இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல் பிரதியின் காலங்கடந்த தன்மைக்கும் அது ஒரு காரணமாகவும் அமைந்துவிடுகிறது. நேரடியாகத் தத்துவத்தைப் பேசாவிட்டாலும் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை ஒரு தத்துவ நாவலாகவே வாசிக்கலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலையும் தத்துவ நாவலாக வாசிக்கலாம். எந்த வாசல் வழியாகத் தத்துவம் ஓர் இலக்கியப் பிரதிக்குள் நுழைகிறது? இதற்கான பதில் மிக எளிமையானது, வாழ்வைத் தீவிரமாகப் பேசினால் அங்கே தத்துவம் நுழையும். வாழ்வின் அலைக்கழிப்புகளும் தத்தளிப்புகளும் இலக்கியப் படைப்புகளில் தீவிரமாகச் சொல்லப்படும்போது தத்துவம் நுழைந்துவிடுகிறது. “நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம்” என்று டி.எஸ்.எலியட் சொல்வதை இங்கே நினைவுகூரலாம். இங்கே மற்றொரு வினாவும் எழுகிறது, தத்துவத்தை நான் அறிந்துகொள்ள ஏன் இலக்கியத்தை வாசிக்கவேண்டும், நேரடியாகவே தத்துவவாதிகளின் நூல்களைப் பயிலலாமே? பயிலலாம்தான், ஆனால் தத்துவவாதியின் நூலில் அனைத்தும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கும். இலக்கியவாதி தத்துவத்தைப் பேசும்போது ஒரு கோட்பாடாகவோ கொள்கையாகவோ அதைப் பேசாமல், அவன் வாழ்வின் சிக்கலினூடாக, எரியும் பிரச்சனைகளினூடாக, இருளிலும் ஒளியிலும் அலைக்கழிக்கப்பட்டும், மயங்கியும் தயங்கியும் தத்துவத்தை வந்தடைகிறான். தெளிவினால் அல்ல, குழப்பங்களின் ஊடாகத் தத்துவத்தை அடைகிறான் இலக்கியவாதி. ஆகையால், இலக்கிய வாசகனும் இயல்பாகவே இவ்வழியிலேயே பயணிக்கிறான்.

மெய்யியல் நாவல்களை, மதத்தோடு இணைந்த நாவல்கள், மதத்தை விட்டகன்ற நாவல்கள் என்று இருவகைப்படுத்தலாம். செல்மா லாகர்லாவ்வின் நாவல்கள் முதல் வகைக்கும், நிகாஸ் கசந்தசாகீஸின் ஜோர்பா தி கிரீக் போன்ற நாவல்கள் இரண்டாம் வகைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஆனாலும், மதத்தை விட்டு வெளியே சென்று மெய்யியலைப் பேசினாலும் எப்படியோ மதம் அங்கே நுழைந்துவிடுகிறது. மதத்தை முற்றாக வெளியேற்றிவிட்டு மெய்யியலை ஏன் பேசமுடியவில்லை என்பது விவாதத்திற்குரிய விஷயம்தான்.

ஹெர்மன் ஹெஸ்ஸேவின் “சித்தார்த்தா” நாவலை முதற்பார்வைக்கு மேற்சொன்ன இரண்டாம் வகையில் வைக்கலாம் என்று தோன்றக்கூடும். ஆனாலும், இது முற்றிலுமாக மதத்தை வெளியேற்றிய நாவலும் அல்ல. இதில் பௌத்த மதச் சிந்தனைகளும் சுருக்கமான அளவிலேனும் இடம்பெறவே செய்கின்றன. கதைநாயகனின் பெயரே புத்தரின் மற்றொரு பெயர்தான். வைதீகர்களும், சமணர்களும் இந்த நாவலில் இடம்பெறுகிறார்கள். ஆகையால், இந்த நாவல் முதல் வகை, இரண்டாம் வகை, இரண்டும் சேர்ந்தே கலவையாக உருப்பெற்றிருக்கிறது.

சித்தார்த்தனும் புத்தரும்

சித்தார்த்தன் என்ற பெயரிலேயே “அர்த்தத்தை அடைந்தவன்” என்ற பொருள் இருக்கிறது. ஏன் இந்த நாவலுக்கு “சித்தார்த்தா” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது? கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன், ஆனாலும் இந்த நாவல் புத்தரின் வாழ்வைப் பற்றிப் பேசவில்லை. புத்தர் ஒரு கதாபாத்திரமாகவே இந்த நாவலில் இடம்பெறுகிறார். நிஜ புத்தருக்கும் நாவலின் கதைநாயகன் சித்தார்த்தனுக்கும் தொடர்பில்லை. நாவலின் ஒரு இடத்தில் இருவரும் சந்தித்துக்கொள்வதைத் தவிர. எனில் ஏன் இந்தத் தலைப்பு? நாவலாசிரியர் ஹெர்மன் ஹெஸ்ஸே இந்த நாவலில் ஒரு இணைப் புத்தரை (Parallel Buddha) உருவகிக்கிறார். புத்தரின் போதனைகளைப் பின்பற்றாமல் அவரது வழியைத் தன்னையறியாமல் பின்பற்றுவதினூடாக ஞானத்தை அடையும் ஒருவனாகக் கதைநாயகன் சித்தார்த்தன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

புத்தரைச் சந்திக்க வேண்டும் என்றுதான் சமணரிடமிருந்து பிரிந்து வருகிறான் சித்தார்த்தன். ஜேதவனத்தில் புத்தரைச் சந்தித்து அவரது போதனைகளையும் கேட்கிறான். ஆனாலும் அவனுக்குப் போதனைகளில் நாட்டமில்லை. அவனது நண்பனான கோவிந்தன் புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்சுவாகிவிடுகிறான். ஆனால், சித்தார்த்தனின் வழி அதுவல்ல. போதனைகளைப் பின்பற்றிப் புத்த சங்கத்தின் துறவிகளின் கூட்டத்தில் தானும் ஒரு துறவியாக எஞ்சிவிட விரும்பாமல், தனக்கான தேடலைத் தொடர்கிறான் சித்தார்த்தன். போதனைகளின் வழி ஞானத்தை அடைய முடியாது என்று தீர்க்கமாக நம்பும் சித்தார்த்தன் அதைப் புத்தரிடமே சொல்லவும் செய்கிறான். அவனுக்கு நேரப்போவதை முன்னுணரும் புத்தர் “Beware of too much Wisdom” என்று எச்சரிக்கிறார்.

சுயமாக ஞானத்தேடலில் ஈடுபடுவது என்ற முடிவெடுக்கும் சித்தார்த்தன் தன் வழியில் தொடர்ந்து செல்கிறான். மேலோட்டமாகப் பார்த்தால், சித்தார்த்தன் புத்தரோடு முரண்படுவது போலத் தோன்றும். உண்மையில், புத்த சங்கத்தில் இருந்த துறவிகளைக் காட்டிலும், சித்தார்த்தன் ஒருவனே புத்தனைப் பின்பற்றுகிறான். ஆசிரியற்ற பாதையில் பயணித்தவர் புத்தர். சித்தார்த்தனும் அவ்வழியே பயணிப்பவன்தான். இந்த ஒரு புள்ளியில்தான் சித்தார்த்தனைப் புத்தரோடு சம்பந்தப்படுத்தலாம். புத்தர் போதி மரத்தினடியில் ஞானமடைகிறார், சித்தார்த்தன் நதிக்கரையில் ஞானமடைகிறான்.

கோவிந்தனும் சித்தார்த்தனும்

நாவலின் துவக்கத்தில் கோவிந்தன் சித்தார்த்தனின் நிழலையொத்த நெருங்கிய நண்பனாக இருக்கிறான். சித்தார்த்தன் மிக இளமையிலேயே தனக்கான வழி என்ன என்பதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவுடையவனாக இருக்கிறான். கோவிந்தனோ சித்தார்த்தனின் வழியே தன் வழி என்று தீர்க்கமாக நம்பி, நண்பனையே நல்லாசிரியனாகக் கருதி, அவனைப் பின்தொடர்கிறான். எவரையுமே பின்பற்ற விரும்பாத சித்தார்த்தனுக்கு நேரெதிராக எவரையேனும் பின்பற்றுவதையே விரும்பும் கோவிந்தன் நண்பனாவது ஓர் இனிய முரண்.

ஆன்மிகப் பாதையில், நம்பிக்கை அல்லது பக்தியின் வழி மற்றும் ஞானத் தேடலின் வழி என்று இருவழிகள் இருப்பதை நாமறிவோம். பக்தியின் வழி எளிமையானது, அது முற்றிலும் நம்பிக்கையின் பாற்பட்டது. ஒரு தெய்வத்தையோ, குருவையோ ஆழ்மனம் திடமாக நம்பிவிட்டால், ஒரு பக்தனோ சீடனோ தேர்ந்தெடுக்கும் வழி முதல் வழிதான். அது ஆபத்தில்லாததும்கூட. இரண்டாம் வழியான ஞானத் தேடலின் வழி மிகக் கடுமையானது. அந்த வழியெங்கும் நிரம்பியிருப்பது முட்களும் கற்களும்தான். அதைத் தாண்டித்தான் ஞானத்தை அடைய முடிகிறது. தேடலின் வழி என்பது கொந்தளிப்புகளும், அலைக்கழிப்புகளும், சித்தப் பிரமைகளும், பிறழ்வுகளும், இருளும், மயக்கங்களும் நிரம்பியது. அந்த வழியைப் பின்பற்றுபவர்களில் மிக மிகச் சிலரே தம் இலக்கை அடைகின்றனர். எஞ்சியவர்கள், பாதி வழியில் நின்றும், திரும்ப வழியில்லாமல் வாழ்க்கை முழுக்க அந்தப் பாதையிலேயே சென்றும் இலக்கை அடைய முடியாமலும் இருக்கின்றனர். ஆனாலும், இரண்டாம் பாதையில் சென்று இலக்கை அடைந்த சிலர்தான் முதல் பாதையினருக்கு குருவாக இருக்கிறார்கள். கோவிந்தனின் வழி முதல் வழி. சித்தார்த்தனோ இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தவன்.

ஆன்மிகத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், குருவன்றி ஆன்மிகப் பாதையில் முன்னேற்றம் சாத்தியமல்ல. குரு இல்லையேல், ஒரு சாதகன், பல திசைகளை நோக்கி இழுபட்டும் மிதிபட்டும் தன் ஆற்றலை இழக்க நேரிடும். சாதகனது ஆற்றலை ஒரு திசைநோக்கிக் குவிக்கச் செய்வது குருவால் மட்டுமே இயலும். எனில், குருவற்ற புத்தருக்கு அது எப்படி சாத்தியமானது? இந்திய மரபில், குரு என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதரல்ல, குரு என்பவர் ஒரு கருத்துருவம் என்ற பார்வையும் இருக்கிறது. குரு என்பவர் கருத்துருவம் என்று கொண்டால், புத்தரின் குரு என்பவை அவரது அல்லல்களும் அவற்றிலிருந்து அவர் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்ளச் செய்த யத்தனங்களும்தான் என்றும் கருத இடமுண்டு.

சித்தார்த்தனும் அவ்வழியையே தேர்ந்தெடுக்கிறான். கோவிந்தனோ குரு என்பவர் ஸ்தூலமானவர் என்ற நம்பிக்கையுடையவன். ஆகையால், அவனுக்குப் புறவயமாக ஒரு குருவும் அவரது போதனைகளும் தேவைப்படுகின்றன. ஆனாலும், வாழ்வின் இறுதிவரை அவனால் முக்தி அல்லது ஞானம் என்ற இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில், நண்பனான சித்தார்த்தன் மூலமாகவே அவனுக்கு ஞானம் கிட்டுகிறது.

ஜேதவனத்தில் சித்தார்த்தனைப் பிரிந்தபிறகு, கோவிந்தன் இரண்டு முறை சித்தார்த்தனைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பில், உலக வாழ்க்கையின் சக்கரத்தில் மிதிபட்டுச் சிதிலமாகியிருக்கிறான் சித்தார்த்தன். இரண்டாம் சந்திப்பில், சித்தார்த்தன் ஞானமடைந்திருக்கிறான். இரண்டு சந்திப்புகளிலும், கோவிந்தனுக்கு சித்தார்த்தனை அடையாளம் தெரியவில்லை. சித்தார்த்தன்தான் அவனைப் பெயர் சொல்லி அழைக்கிறான்.

போதனைகளைப் பின்பற்றி நியமங்களில் ஆழ்ந்துவிட்ட கோவிந்தனை சித்தார்த்தனே விடுவிக்கிறான். ஞானம் என்பது புதிதாக அடையப்படவேண்டியதல்ல, அது முன்னரே நம்மிடம் இருப்பதுதான். நாம் கற்கவேண்டியதெல்லாம் நம்முள் உறைந்திருக்கும் அந்த ஞானத்தை எப்படி எழுப்புவது என்பதுதான் என்பதை ஒரு கல்லின் உவமையைக் காட்டி சித்தார்த்தன் கோவிந்தனுக்கு விளக்குகிறான். கோவிந்தன் போன்றவர்களுக்குச் சொற்களின் துணை தேவைப்படுகிறது, சித்தார்த்தன் போன்றவர்களுக்கு அது தேவையில்லை, அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் செயலே. அதனால்தான், சித்தார்த்தன் புத்தரை விட்டுத் துணிந்து விலகுகிறான். உங்களின் போதனை எனக்குத் தேவையில்லை. நீங்கள் எப்படி ஞானம் அடைந்தீர்கள் என்று சொல்லுங்கள், அதைச் சொல்ல முடியாத உங்கள் போதனைகளின் மேல் எனக்கு நாட்டமில்லை என்கிறான். இந்த நாவலின் திருப்பம் நிகழ்வது இங்குதான். ஞானம் என்பதைக் கற்றுக் கொடுக்க இயலாது. ஒவ்வொருவரும் அவரவர் முயற்சியினால், அவரவர் வழிகளினால் சென்றடையக்கூடியது அது என்பதே இந்நாவலின் மையச்செய்திகளில் ஒன்று. ஆகையால், சித்தார்த்தனும் கோவிந்தனுக்கு இறுதியில், சொற்களால் அல்ல, செயலின் மூலமாக ஞானப்பாதையைக் காட்டுகிறான். தன் நெற்றியில் கோவிந்தனை முத்தமிடச் செய்வதின் மூலமாக அவனுக்கு ஞானத்தைப் புலப்படுத்துகிறான். விவேகானந்தரின் சரிதத்தில், ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. ஒரு எல்லைக்கு மேல் ராமகிருஷ்ண பரமஹம்ஸரால், சொற்களின் மூலமாக விவேகானந்தருக்கு இறையனுபவத்தை விளக்க முடியவில்லை. இறுதியில், தன் கரங்களால் விவேகானந்தரைத் தொடுகிறார். இத்தருணத்தில், கோவிந்தன் சித்தார்த்தன் மூலம் பெறும் இதே அனுபவத்தை விவேகானந்தரும் பெறுகிறார்.

வாசுதேவன்

இக்கோணத்தில் பார்க்கையில், வாசுதேவனின் பாத்திரப்படைப்பும் முக்கியமானதாகிறது. வாசுதேவன் சித்தார்த்தனுக்கு எதையும் போதிக்கவில்லை. நதியைத் தான் உற்றுக்கவனிப்பது போல சித்தார்த்தனையும் கவனிக்க வைக்கிறான். ஒரு சக மாணவனைப் போல அவன் தான் கற்றுக்கொள்ளும் பாணியை சித்தார்த்தனுக்கு அறிமுகப்படுத்துகிறான். சித்தார்த்தனுக்குச் சில தெளிவை அளிக்கிறான். சித்தார்த்தனுக்கு உதவுகிறான். மைந்தர் பாசத்தில் சிக்குண்டு திணறும் சித்தார்த்தனுக்கு சில ஆலோசனைகள் வழங்குகிறான். “ஓம்” என்ற முழுமையோசையைத் தன்னைப் போலவே சித்தார்த்தனும் அந்த நதியோட்டத்தில் கேட்டுவிட்டான் என்று உறுதிப்படுத்திக்கொண்டபின்னர், வாசுதேவன் இயல்பாக சித்தார்த்தனைப் பிரிந்து அடர்வனத்துக்குள் சென்றுவிடுகிறான். வாசுதேவன் தான் ஒரு குருவாக அல்லாமல், குருத்தன்மை கொண்ட மூத்த மாணவனாக சித்தார்த்தனுக்குத் தெளிவை அளித்துவிட்டுப் பிரிந்துவிடுகிறான்.

வாசுதேவன் சித்தார்த்தனுக்கு குருவல்ல, சக மாணவன்தான் என்ற இந்தக் கோணமும் விவாதத்திற்கு உரியதே. வாசுதேவன் சித்தார்த்தனின் குருவே என்று விவாதிக்கும் ஒரு தரப்பும் உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆன்மிகப் பயணத்தில் வியக்கவைக்கும் ஒரு அம்சம் என்னவென்றால், சீடன் குருவைத் தேடிப் போவதில்லை. அது ஒரு புறவயமான தோற்றம்தான். உண்மையில், சீடன் தயாரானதும் குரு அவனிடம் வந்தமைகிறார். சீடன் தயாராகாதவரையில், குரு அருகில் இருந்தாலும் அவரது தரிசனம் சீடனுக்கு அமைவதில்லை. பரமஹம்ஸ யோகானந்தரின் Autobiography of a Yogi (தமிழில்: ஒரு யோகியின் சுயசரிதம்) நூலில், யோகானந்தர் எத்தனையோ தூரங்கள் பயணித்து குருவைத் தேடுவார், ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து தனக்கு குரு என்றொருவர் கிட்டமாட்டார் என்று முடிவு செய்யும் தருணத்தில், அவரது குருவான யுக்தேஷ்வர் கிரி அவரைத் தேடி வருவார். யுக்தேஷ்வர் கிரியின் வசிப்பிடம் யோகானந்தரின் ஊரிலிருந்து சில மைல்கள் அருகில்தான் இருக்கும். குருவைத் தேடி இமயமலை வரை அலைந்த யோகானந்தர் தன் ஊருக்கு அருகிலேயே தன்னுடைய குரு இருந்தும் அவரைத் தெரிந்துகொள்ள இயலாமல் போனதே என்று வருந்துவார். ஒவ்வொருவரும் தன்னுடைய குருவைச் சந்திக்கும் தருணம் என்பது அவரவர் வாழ்வின் திருப்புமுனை. குருவைச் சந்திப்பதற்கு முன், குருவைச் சந்தித்தப் பின் என்று வாழ்வை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளும் அளவிற்கு குருவின் தரிசனம் வாழ்வில் ஒளியூட்டும். அதேசமயம், சீடன் தயாராகாதவரை குருவின் தரிசனமும் கிட்டுவதில்லை. சித்தார்த்தனுக்கும் அவ்வாறுதான் அமைகிறது. வாசுதேவனை முன்னரே சந்தித்து உரையாடினாலும், நாவலின் இறுதியில், சம்சார வாழ்விலிருந்து வெறுத்துப் போய்த் தனிமையை நாடும்போதுதான் சித்தார்த்தனுக்கு வாசுதேவனின் மெய்யான தோற்றம் புலப்படுகிறது. அவன் வெறும் படகோட்டியல்ல, ஆன்ம சாதகன், தனக்கு வழிகாட்டியாக அமையக்கூடியவன் என்று சித்தார்த்தன் அறிந்துகொள்கிறான்.

இதிலுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் சுவாரஸ்யமானவை. ஹெர்மன் ஹெஸ்ஸே கீழைத் தத்துவங்களைக் கற்றவர், குறிப்பாக இந்தியத் தத்துவங்கள், உபநிடதங்கள், கீதை போன்றவற்றையும், பௌத்தச் சிந்தனைகளையும் கற்றவர். கீதையை விரும்பி வாசித்தவர் என்பதால், கீதாசிரியனின் பெயரையே படகோட்டிக்கு இடுகிறார். தேரோட்டியின் பெயரைப் படகோட்டிக்கு இடுகிறார். அர்ச்சுனனுக்கு நண்பனின் இடத்தில் இருந்து கீதையைச் சொன்ன வாசுதேவனைப் போல நண்பனின் இடத்தில் இருந்து சித்தார்த்தனுக்கு வழிகாட்டுகிறான் இந்த வாசுதேவன்.

சம்சாரம்

“நான்” என்பதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற முனைப்பில்தான் வைதீக சமயத்தின் வேள்விகள் போன்ற சடங்குகளில் இருந்தும், சமணர்களிடம் இருந்தும் விலகி வருகிறான் சித்தார்த்தன். சமணர்களிடம் அவன் கற்ற சித்துவேலைகள் பலவும் “நான்” என்ற உணர்விலிருந்து தற்காலிகமாகத் தப்பிப்பதற்கு மட்டுமே உதவுகிறது. நிரந்தரமாக அல்ல. ஜேதவனத்தில் புத்தரிடம் விடைபெற்று வரும் வழியில் சித்தார்த்தனுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. நான் என்ற உணர்வில் இருந்து விடுபடுவதற்கு முன் “நான்” என்பது என்ன என்பதை அறிந்துகொள்ளவேண்டும். தன்னை அறிந்தபின்னர்தான் தன்னைக் கடக்க முடியும் என்ற உண்மையை உணர்கிறான். தன்னை அறியும் பயணத்தின் ஒரு பகுதியாக சம்சாரத்தை அறிந்துகொள்ள முயல்கிறான்.

கமலா என்ற தாசியிடம் அடைக்கலமாகிறான். அவளிடமிருந்து காதலையும் காமத்தையும் அறிந்துகொள்கிறான். அவளை அடைவதற்கு முன் தன் துறவுக் கோலத்தைக் களைந்து லௌகீக வாழ்விற்கு ஏற்ற தோரணையைப் புனைந்துகொள்கிறான். தன்னுடைய மூன்று தகுதிகளாக, “என்னால் சிந்திந்திருக்க முடியும், விழித்திருக்க முடியும், பசித்திருக்க முடியும்” என்கிறான். லௌகீக வாழ்விற்கு இத்தகுதிகள் போதாது என்பதால் கமலா, தன்னுடைய மற்றொரு அணுக்கனான வியாபாரி காமஸ்வாமியிடம் தொழில் கற்றுக்கொள்ள சித்தார்த்தனை அனுப்புகிறாள்.

“கமலா, காமஸ்வாமி” போன்ற பெயர்கள், பொருளையும், காமத்தையும் விழைவையும் சுட்டுபவை. சம்சார வாழ்விற்கேற்ற பெயர்கள். “கமலா” என்பது தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகளைக் குறிக்கிறது. காமக்கடவுளான மன்மதனின் மனைவி “ரதி” என்ற பொருளும் இப்பெயருக்கு உண்டு. “காமஸ்வாமி” என்பது மன்மதனைக் குறிப்பது. இவர்கள் இருவரிடம்தான் லௌகீகம் பயில்கிறான் சித்தார்த்தன்.

சம்சார வாழ்வை அறியும் எண்ணம் ஏற்பட்டவுடன் நகருக்குள் நுழையுமிடத்திலேயே ஒரு காம அனுபவம் சித்தார்த்தனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நகர் எல்லையில் உள்ள இளம் பெண்ணொருத்தி விடுத்த காம அழைப்புக்கிணங்கி அவள் முலைகளை முத்தமிடும்வரை செல்பவன் உடனே அவளை விட்டு விலகிவிடுகிறான். அவன் உள்ளிருக்கும் ஒரு குரல் அவனை எச்சரிக்கிறது. துறவுக் கோலத்தில் இருந்து காமத்தில் ஈடுபட அவனது அகம் சம்மதிக்கவில்லை. ஆகையால்தான், அடுத்து கமலாவை அணுவதற்கு முன்னர் துறவுக் கோலத்தை சித்தார்த்தன் களைந்துவிடுகிறான்.

துவக்கத்தில் சம்சார வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுபவன், காலவோட்டத்தில் அதில் மூழ்கிவிடுகிறான். தொழில், பணம், சூதாட்டம் என சம்சாரத்தில் மிதமிஞ்சி ஈடுபடுவதால், அவனுள் இருந்த அந்த எச்சரிக்கும் குரல் மெல்ல மறைந்துவிடுகிறது.

இரு கனவுகள்

சித்தார்த்தனின் மனமாற்றத்தை இரு கனவுகளின் மூலம் காட்டுகிறார் ஆசிரியர். சம்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன் ஒரு பெண்ணை முத்தமிடுவது போன்ற கனவு வருகிறது. அதன்பின் சம்சார வாழ்வில் புகுந்துவிடுகிறான். பல வருடங்களுக்குப் பின் மற்றொரு கனவு தோன்றுகிறது. இக்கனவில், கூட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பறவை, கூட்டுக்குள்ளேயே மரித்துவிடுகிறது. இக்கனவின் குறிப்பறிந்து அவன் சம்சாரத்தில் இருந்து விலகி மீண்டும் தனிமையின் பாதையில் சென்றுவிடுகிறான். இந்த இரு கனவுகளும் சித்தார்த்தனின் வாழ்வின் திருப்புமுனைகளை முன்னுணர்த்திவிடுகின்றன.

சம்சார வாழ்வில் இருந்து சித்தார்த்தன் பெற்றுக்கொண்டதென்ன? சம்சாரத்தில் மூழ்காமல் துறவு சாத்தியமில்லையா? சித்தார்த்தன் தன்னையறியும் பொருட்டு சம்சாரத்தில் ஈடுபடும் முடிவை எடுக்கிறான். சம்சாரத்தின் இயல்பு அது யாவரையும் தன்னில் இழுத்துக்கொள்கிறது. அதன் சுழியில் ஈடுபட்டு வெகு சிலரே வெளிவருகிறார்கள். இதன் பொருட்டே சம்சார வாழ்வை மாயை என்கிறார்கள் துறவிகள். இந்த மாயையில் சிக்கியவர்கள் வெளியேறுவது அரிது. சித்தார்த்தனையும் இந்த மாயை விட்டுவைக்கவில்லை. அவன் தனிமையின் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னரும், மகன் வடிவில் வந்து மாயை அவனுக்குத் தொடர்ந்து துன்பத்தையே அளிக்கிறது. இதே மாயை அவனைத் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டுகிறது. ஆனால், நதிக்கரையில் கேட்ட “ஓம்” என்ற ஓசையே அவனை அதிலிருந்து காப்பாற்றுகிறது.

சித்தார்த்தனால் சம்சாரத்தை விலக்கித் துறவில் ஈடுபட்டிருக்க முடியும், கோவிந்தனைப் போல. ஆனாலும் சம்சாரத்தில் ஈடுபடுவது என்ற முடிவை விரும்பியே எடுக்கிறான். துளி மிச்சமின்றி சம்சாரத்தை அறிந்து, அதன் வினைகளை அனுபவித்த பின்னர் தோன்றும் மீட்பு என்பது நிரந்தரமானது. அதன் பின் திரும்புதல் இல்லை. அதனாலேயே சித்தார்த்தன் சம்சாரத்தில் மூழ்கித் தன்னைத் துளி மிச்சமின்றி அறிந்துகொள்கிறான்.

மதங்களின் சுழி

இந்த நாவலில் மூன்று பெரும் மதங்கள் காட்டப்படுகின்றன. வைதீக மதம், சமண மதம் மற்றும் பௌத்தம். ஆனாலும், மதங்கள் பற்றிய தீவிரமான விசாரணை இந்த நாவலில் இல்லை. மெல்லிய விமர்சனங்களோடு அவை வெறும் காட்சிக் களங்களாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வைதீக மதம் என்பது சடங்குகள், வேள்விகள் போன்றவற்றிலேயே மையம் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. சித்தார்த்தனின் தந்தை போன்றவர்கள் அதில் எஞ்சிவிடுகிறார்கள். சமண மதமோ உடம்பை வருத்திக்கொண்டு ஞானம் பெறும் முயற்சியை ஊக்குவிப்பதாகக் காட்டப்படுகிறது. புத்தரிடம் செல்வதாக சித்தார்த்தனும் கோவிந்தனும் சமண ஆசிரியரிடம் தெரிவித்ததும் அவர் மிதமிஞ்சிய சினத்தால் அவர்கள் இருவரையும் ஏசுகிறார். முடிவில், பௌத்தமே அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மதமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதனாலேயே இந்த நாவல் குறுநாவலாக எஞ்சிவிட்டதோ என்றும் தோன்றுகிறது. இந்த மூன்று மதங்கள் மற்றும் இவற்றின் வழிமுறைகளைப் பற்றித் தீவிரமாக விவாதித்திருந்தால் இது ஒரு பெருநாவலாக மாறியிருக்கும். இந்த நாவல் பெரிதும் ஏற்கும் பௌத்த மதத்தின் கோட்பாடுகளையும் நாவல் பெரிதாகப் பேசவில்லை. சித்தார்த்தன் என்ற தனி மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமே காட்ட வேண்டுமென்று ஹெர்மன் ஹெஸ்ஸே நினைத்திருக்கலாம்.

நதி

இந்த நாவலில் நதியும் ஒரு அரூப கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது. இந்த நதியே வாசுதேவனுக்கும் சித்தார்த்தனுக்கும் ஞானம் வழங்குகிறது. இதே நதிக்கரையில் கமலா உயிர்துறப்பது ஒரு குறியீடாகவே தோன்றுகிறது. சம்சாரத்தின் சின்னமான கமலா ஞானத்தின் சின்னமான நதிக்கரையில் உயிர்துறக்கிறாள். இதே நதி காலத்தின் குறியீடாகவும் தோன்றுகிறது. அதே சமயம், சம்சாரத்தையும் துறவையும் பிரிக்கும் புள்ளியாகவும் உருக்கொள்கிறது. நதியின் இக்கரையில் சம்சார வாழ்வு புரையோடியிருக்கும் நகரம் இருக்கிறது. நதியின் அக்கரையிலோ துறவின் களமான அடர்கானகம் இருக்கிறது. இவ்விரண்டு புள்ளிகளுக்கும் இடையே அலைக்கழியும் மனிதர்களை ஒரு மௌன சாட்சி போலவே பார்த்துக்கொண்டிருக்கிறது நதி.

“நதிக்குக் கடந்தகாலமோ எதிர்காலமோ இல்லை, நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது” என்றொரு வரி நாவலில் இருக்கிறது. எல்லோரது முகங்களும் நதியில் தெரிகிறது. ஆனால், மந்திரங்களின் மந்திரங்களான “ஓம்” என்ற ஓசையையும் நதியே பிறப்பிக்கிறது. இத்தனை மயக்கங்கள் சூழ்ந்திருந்தாலும் ஞானம் என்பது மனிதனுக்குச் சாத்தியமே என்கிறது நதி. “ஓம்” என்ற இந்த ஓசையைக் கேட்பதற்காகவே அத்தனை காலமாக வாசுதேவனும் சித்தார்த்தனும் நதியை அவதானித்துக் கொண்டேயிருந்தார்களோ என்றும் தோன்றுகிறது.

தந்தையும் தனயர்களும்

தந்தையர்க்கும் தனயர்களுக்குமிடையேயான அழகிய முரண்கள் இந்நாவலிலும் இடம்பெறுகின்றன. சித்தார்த்தனின் தந்தை சித்தார்த்தனின் மீது பெரிய எதிர்ப்பார்ப்புகளை வைத்திருந்தார். அவருக்குப் பின் அவனே தன்னுடைய குலக்கொழுந்தாக இருப்பான் என்று நம்பிக்கொண்டிருக்கும் அவர் முன்னே சித்தார்த்தன் சென்று, சமணனாகிவிடுவதாகச் சொல்கிறான். அவனது பிடிவாதத்தைக் கண்ட அவர் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார். உன்னுடைய தேடலில் நீ வென்றால் திரும்பிவந்து எனக்குக் கற்பி. வெல்லாவிட்டாலும் திரும்பி வந்து நம் குலத்தில் இரு என்கிறார். எப்படியிருந்தாலும் அவன் திரும்பி வந்தேயாக வேண்டும் என்பதிலிருந்து தந்தையின் பாசம் தெரிகிறது.

அதற்குச் சற்றும் குறைந்ததில்லை தன் மகன் மீது சித்தார்த்தன் கொண்ட பாசம். “நீ என்னுடைய தந்தையல்ல. என் தாயிடம் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டவன் மட்டுமே” என்ற சுடுசொல்லைச் சொல்லிவிட்டு அவன் பிரிந்துசென்ற போதிலும் அவனைப் பின் தொடர்ந்து சென்று தேடிக் கொண்டிருக்கிறான் சித்தார்த்தன். இந்த இடத்தில் வாசுதேவனின் ஆலோசனையையும் மீறிச் செல்கிறான் சித்தார்த்தன்.

மைந்தர் துயர் என்பது ஒரு தந்தைக்கு ஏற்படக்கூடிய மாபெரும் துயர். அதிலிருந்து தன்னுடைய தந்தையைப் போலவே சித்தார்த்தனாலும் தப்ப முடியவில்லை.

ஆனால் தன் தாயிடம் சித்தார்த்தன் விடைபெறும் காட்சி நாவலில் இல்லை. தாயிடம் சித்தார்த்தன் விடைபெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு சுவாரஸ்யமான சிந்தனையாகத்தான் இருக்கும். ஆதி சங்கரர், பட்டினத்தார் போன்றவர்களுக்கே சவாலாக அமைந்த இடம் இதுதானே.

திருலோக சீதாராம்

திருலோக சீதாராமின் மொழிபெயர்ப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முழுமுற்றான தமிழ் நாவலை வாசிப்பது போலவே இருக்கிறது. இதுவே மொழிபெயர்ப்பாளனின் வெற்றி. இந்த அருமையான நாவலை மூல மொழியில் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் தன்னுடைய முன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். திருலோக சீதாராமைத் தெரியாத இலக்கிய வாசகர் இருக்க முடியாது. பாரதி பாடலை தன் ஆன்மாவில் சுமந்தலைந்தவர். அவரைப் போல பாரதியின் பாடலை இன்னொருவர் பாட முடியாது என்று பல அறிஞர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, அவர் காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்ற பெருங்குறையே மனதில் எஞ்சுகிறது. பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்களைக் கடைசி வரை நன்கு கவனித்துக் கொண்டவர் சீதாராம். திருலோக சீதாராமின் மடியில்தான் செல்லம்மாள் உயிர்விடுகிறார். தமிழறிஞர், கவிஞர், சிவாஜி என்ற சிறுபத்திரிகை ஆசிரியர், மிகச் சிறந்த இலக்கிய வாசகர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர். அவர் குறித்து மேலும் அறிந்து கொள்ள “திருலோகம் என்றொரு கவி ஆளுமை” என்ற இந்த ஆவணப் படத்தைப் பாருங்கள்.

ஹெர்மன் ஹெஸ்ஸேவைத் தனது உடன்பிறப்பாகவே எண்ணியிருக்கிறார் திருலோக சீதாராம். ஹெர்மன் ஹெஸ்ஸே இறந்த செய்தி கேட்டதும், அவருக்காக கிணற்றடியில் முழுக்குப் போட்டு துக்கம் காத்திருக்கிறார். இப்படிப்பட்ட வாசகன் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்க அவன் என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

இந்த நாவல் எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்துவிட்டன. எழுத்தாளரும், மொழிபெயர்த்தவரும், படைப்பும் என இம்மூன்றுமே மகத்தானதாக அமைவது அபூர்வம். அந்த அபூர்வக் கூட்டணியின் விளைகனியென இந்நாவல் காலங்களைக் கடந்து நிற்கும்.


திரைகடலுக்கு அப்பால் தொடர்: பிற கட்டுரைகள்

இதழ் 14 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்