வேணு வேட்ராயன் கட்டுரை: புகைப்படம் பானு

அறிவிலுமேறி அறிதல் – 9: வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்

2 நிமிட வாசிப்பு

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்.

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்.

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்துகொண்டே இரு.

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒருபோதும்.

— ரூமி

‘மீனுக்குத் தண்ணீர்
மிருகத்திற்குப் பிராண வாயு
மனித ஆத்மாவிற்கோ மனம்தான் வெளி’ என்கிறார் பிரமிள். இந்த மனவெளிப் பயணத்தின் பாதைக்கான சமிக்ஞைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது ஒரு கவிதை. கவிதை தன்னளவில் மெய்யறிதலே. கவிதையின் துடிப்புகளைக் கேட்பதும், அதன் சமிக்ஞையைப் பின்தொடர்வதும், அதன் அருகாமையை நழுவவிடாமல் இருப்பதும் நம்மை அறிதலின் பாதையில் தொடர்ந்து செலுத்திக்கொள்வதேயாகும்.

புகைப்படம்: பானு

நீயொரு
உண்மையான மனிதனெனில்
எல்லாவற்றையும் பணயம் வை
காதலுக்காக.

இயலவில்லை எனில்
சென்றுவிடு இங்கிருந்து.

அரைகுறை மனதிற்கு
அகண்டவெளி அகப்படாது.
பேரருளை நோக்கி
பயணிக்கத் தீர்மானித்த நீ,
சிறுமைபடர்ந்த விடுதிகளில்
நெடுங்காலம்
இளைப்பாறிவிடுவது ஏன்?

— ரூமி

*

உண்மையோடு, அனைத்தையும் பணயம் வைத்தலே பேரருளை நோக்கிய பயணத்திற்கான வழி. சிறுமைபடர்ந்த விடுதிகளில் நெடுங்காலம் இளைப்பாறிவிடுவதும் நேர்கிறது.

*

திரும்பத்திரும்ப
கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால்
தெளிவுறப்போவதில்லை
அப்புதிரின் சூட்சுமம்,
வியப்பூட்டும் பிரதேசங்களுக்கு
பயணிப்பதாலும்கூட.

உனது குழப்பம்
விலகப்போவதில்லை
எப்போதும்,
ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கேனும்
உனது கண்களையும்
தேடலையும்
சலனமற்றுக் காத்திருக்கச்
செய்தாலன்றி.

— ரூமி

*
தர்க்கங்களின் வழி அறிதலால் அப்புதிரின் சூட்சுமம் தெளிவுறப்போவதில்லை, சலனமற்று விழிப்புடன் காத்திருத்தலே வழி.

*

காதலின் வழி
நுட்பமான விவாதமல்ல.
பிரளயமே
அங்கு செல்வதற்கான
வாயில்.

தங்களது சுதந்திரத்தைப்
பெருவானில் வட்டமிட்டு
களிப்பெய்துகின்றன
பறவைகள்.
அவை எப்படிப்
பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன.
அவ்வீழ்தலில்
வழங்கப்படுகின்றன
சிறகுகள்.

— ரூமி

*
அனைத்தையும் பணயம் வைத்து, முழு விழிப்புடன் தர்க்கம் கடந்த வெளியில் வீழ்தலில் வழங்கப்படுகின்றன அறிதலில் களிப்பெய்துவதற்கான சிறகுகள்.
*

காதல் நாய்கள்

நடுநிசியில் ஒருவன்
இறைஞ்சிய வண்ணமிருந்தான்,
‘அல்லாஹ்! அல்லாஹ்!’
அப்போற்றுதலில்
அவனது உதடுகள்
கனிந்துபோயின.

அவநம்பிக்கைவாதி ஒருவன்
அப்போது கேட்டான்,
‘நீ இறைஞ்சுவதைக்
கேட்க நேரிட்டது.
அதற்கு எப்போதேனும்
பதில் கிடைத்ததா உனக்கு?’

இதைக் கேட்டவுடன்
அவனால் விடையளிக்க முடியவில்லை.
வழிபடுவதை விடுத்து
குழம்பியவாறு துயிலில் ஆழ்ந்தான்.

ஆன்மாக்களின் வழிகாட்டி
கீதிரை
அடர்ந்த பசும்காட்டில்
தான் காண்பது போல்
கனவு கண்டான்.

‘போற்றுவதை ஏன்
நிறுத்திவிட்டாய் நீ?’

‘ஏனெனில் பதிலேதும் கிடைக்கவில்லை எனக்கு’

‘நீ வெளிப்படுத்தும் இவ்வேட்கையே உனக்கு கிடைத்த பதில்!’

உன்னை மன்றாடச் செய்த துக்கமே
உன்னை இட்டுச்செல்லும்
சங்கமத்திற்கு.

தன்னைப் பேணிக்காப்பவனுக்காக
தவித்து முனகும்
நாயைக் கவனித்துள்ளாயா?
அந்த முனகலே
உயிர்ப்புள்ள இணைப்பாகும்.

எவரும் பெயரறியா
காதல் நாய்கள்
இருந்துவருகின்றன
இவ்வுலகில்.

அப்படியொன்றாக மாற
அர்ப்பணித்துவிடு
உனது வாழ்வை.

— ரூமி

*

வெளிப்படுத்தும் வேட்கையும்
மன்றாடச் செய்யும் துக்கமும்
உதவிகோரும் மாசற்ற துயரமும்
தவித்து முனகும் உயிர்ப்புள்ள இணைப்பும் ஆன்மாவிற்கான வழிகாட்டுதலே. சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்ட வெளி அது.

*

சரி தவறு என்பதற்கு
அப்பாற்பட்டதொரு
வெளி உண்டு.
அங்கு சந்திப்பேன்
உன்னை.

புல்வெளியின் மீது ஆன்மா
கவிந்திருக்கும்போது
எதையும் பேசவியலாதபடி
ததும்புகிறது இப்பிரபஞ்சம்.

மொழி
எண்ணம்
ஏன் ‘ஒருவருக்கொருவர்’
எனும் பதம் கூட
பொருளற்றுப் போகிறது
அங்கே.

— ரூமி

*


மேற்கோள்
ஐலாலுத்தின் ரூமி
‘தாகங்கொண்ட மீனொன்று’
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
தமிழில்: என். சத்தியமூர்த்தி


புகைப்படம்: பானு

வேணு வேட்ராயன் எழுதும் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத்தொடர்:

இதழ் 14 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்