“நச்சுப் பாம்புகளைவிட
– ஜெ. பிரான்சிஸ் கிருபா
கொடிய விஷம் கொண்டவை
குற்ற உணர்ச்சிகள்.
நச்சுப் பாம்புகள்
ஒருமுறை கொத்திவிட்டு
மறுவேலையைப் பார்க்கப்
போய் விடுகின்றன.
அதுவும்
அதன் வாலையோ தோலையோ
மிதிக்கும்போதுதான்
எப்போதாவது நடக்கிறது.
குற்ற உணர்ச்சிகள் அப்படியில்லை
அவை நம்மை
அம்மி கொத்துவதுபோல்
கொத்திக் கொண்டேயிருக்கின்றன,
செத்துத் தொலையும்வரை!”
குற்ற உணர்ச்சிகள் எதிர்மறையாகக் காணத் தக்கவையல்ல. அவைதாம் மனிதனை மனிதனாய் வைத்திருப்பவை. மனிதனுக்குச் சட்டத்தாலோ அல்லது இறைவனாலோகூடக் கிடைக்கப் பெறாத அந்தரங்கச் சுத்தியை வழங்கவல்லவை இந்தக் குற்ற உணர்ச்சிகள். சட்டத்தின் கண்களில் இருந்தும், இறைவனின் கண்களில் இருந்தும்கூடத் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் குற்ற உணர்ச்சிகளில் இருந்து மட்டும் ஒருவனால் வாழ்நாளுக்கும் தப்பிக்க இயலாது.
நம் அந்தரங்கத்தை எப்போதும் கண்காணித்துக்கொண்டேயிருக்கும் அந்த மாபெரும் ஆடியின் முன் ஒருபோதும் நம்மால் அச்சமின்றி அகம் பார்த்துக்கொள்ள இயல்வதில்லை. வாழ்வில் எப்போதாவது, எங்காவது நாம் ஆற்றிய மாபெரும் கீழ்மை, துரோகம், யாவும் நம் அகத்தில் உள்ள குற்ற உணர்ச்சியின் கிடங்குகளில் சேகரமாகியிருக்கின்றன. காலப்போக்கில் அவை பாம்புகளாக உருமாறி நம்மைக் கொத்திக்கொண்டேயிருக்கின்றன, செத்துத் தொலையும் வரை. இந்தப் பாம்புகளை மட்டும் நம்மால் ஒருபோதும் அடித்துக் கொல்ல முடியாது. அடித்துக் கொல்ல முடியாத பாம்பு என்பது எத்தனை உக்கிரமான படிமம்!
ஆனால், அவற்றை வெல்வதற்கு ஒரே ஒரு வழிமட்டுமே இருக்கிறது. மனசாட்சியின் சொல்லின்படி நடந்துகொண்டு நாம் செய்த பிழைகளைத் திருத்திக்கொண்டால் அவை மறைந்துவிடும். இதுதான் எளிய வழி. அதேசமயம் இதை விடவும் கடினமான வழியும் பிறிதொன்றில்லை. காரணம், நாம் அடைந்த அனைத்தையுமே அல்லது நாம் விரும்பும் மனிதர்கள் அனைவரையுமேகூட இந்த வழியில் செல்வதன் மூலம் இழக்க வேண்டி வரலாம். சமூகத்தால் கைவிடப்படலாம். ஏசப்படலாம். கைப்பொருளை இழக்க வேண்டிவரலாம். ஆனால், முடிவில் காத்திருப்பது மாபெரும் மனநிம்மதி. அது விலைமதிப்பற்றது. அதைக் காட்டிலும் விலை அதிகமான ஒன்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படித் தன்னிடமிருந்த அனைத்தையும் இழந்து மனநிம்மதியைப் பெற்றவர்தான் நெஹ்லூதவ். லியோ டால்ஸ்டாயின் “புத்துயிர்ப்பு” நாவலின் கதைநாயகன்.
இளமையில் அவர் செய்த ஒரு மாபெரும் தவறு, அவருடைய நடுவயதில் அவருக்கு முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அந்தத் தவறு அவருள் அதுவரை உறங்கியிருந்த குற்றவுணர்ச்சியெனும் பாம்புகளை எழுப்பி விட்டுவிடுகிறது. அதன்பின் அவர் தன்னுடைய உறக்கத்தினைத் தொலைத்துவிடுகிறார். தொடர்ந்து அவர் எவ்வாறு அந்தக் குற்றவுணர்வில் இருந்து தப்பித்தார். அவர் தனக்காகத் தேடிக்கொண்ட பிராயச்சித்தம் என்ன என்பதே புத்துயிர்ப்பு நாவலின் மையக்கரு.
புத்துயிர்ப்பு நாவலின் கதாபாத்திரங்கள் குறைவுதான் என்றாலும், இந்த நாவல் காட்டும் உலகம் விரிவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ருஷ்ய சமூகம் எப்படியிருந்தது, ஜார் மன்னனின் அரசாங்கம், நீதிமன்றங்கள், நீதிபதிகள், ராணுவ ஜெனரல்கள், ஆளுநர்கள், கனவான்களும் சீமாட்டிகளும் நிறைந்த பகட்டான உலகின் போலித்தனங்கள், நிலச்சுவாந்தாரர்களின் கட்டற்ற அதிகாரம், விவசாயிகளின் கைவிடப்பட்ட நிலை, குற்ற உலகம், சாமானியர்களின் அல்லல்கள் என ருஷ்ய சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாவலில் காட்டியிருக்கிறார் டால்ஸ்டாய்.
டால்ஸ்டாயின் எழுத்துமுறை என்பதே ஒரு சிறிய புள்ளியில் துவங்கி மெதுவாக அதை விரித்தெடுத்துக்கொண்டு போய் ஒரு மாபெரும் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்துவிடுவார். இந்த நாவலிலும் அதே பாணியை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். வசந்தத்தின் வருகையில் துவங்கி அதே வசந்தம் ஒரு மனிதனின் மனதில் மலர்வது வரையிலான ஒரு சித்திரத்தைப் புத்துயிர்ப்பு நாவல் அளிக்கிறது.
மனமாற்றத்தின் கதை
டால்ஸ்டாய் நாவல்களின் ஒரு பொதுவான பண்பு என்பது ஒரு மனிதனின் மனமாற்றத்தைப் படிப்படியாகச் சித்தரிப்பது. சற்றும் செயற்கையாகவோ மிகையாகவோ இல்லாமல், மிகவும் இயல்பான முறையில், ஒரு மனிதன் தன் மனதுடன் உரையாடியபடியே, தான் ஏன் இப்படி இருக்கிறோம், இந்தச் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது, தன்னை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என தீர்க்கமாகச் சிந்தித்து, தன் மனசாட்சி சொல்வதையொட்டி ஒரு மனிதன் மெல்ல மெல்ல தன்னை மாற்றிக்கொள்கிறான். அவரது எல்லா நாவல்களிலும் இந்தச் சித்திரம் தொடர்ந்து வந்தபடியிருக்கிறது. கதை நாயகன் அல்லது துணைக் கதாபாத்திரம், தன்னுடைய ஆடம்பர சொகுசு வாழ்க்கையையும், பிறரை வஞ்சித்துத் தாம் பெற்ற செல்வத்தையும், பொருளற்ற பகட்டான வாழ்க்கை முறையையும் ஒரு கட்டத்தில் வெறுக்கத் துவங்கி, மெல்ல மெல்ல தன்னுடைய வாழ்வின் சாராம்சத்தைக் கண்டுகொள்வது. ஆன்மிகமானதொரு மனமாற்றத்தின் சித்திரம் இது.
அன்னா கரீனினாவின் லெவின் கதாபாத்திரம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. போரும் வாழ்வும் நாவலில் பீயர். புத்துயிர்ப்பு நாவலில் நெஹ்லூதவ். இந்த மனமாற்றம் என்பது பொதுவாக இப்படி அமையும்:
போரும் அமைதியும் நாவலிலும், அன்னா கரீனினா நாவலிலும் இந்த மனமாற்றம் என்பது நாவலின் மூலக் கதையாக இல்லாமல் துணைக் கதையாக வந்திருக்கும். ஆனால், புத்துயிர்ப்பு நாவலில் மூலக் கதையே இந்த மனமாற்றத்தின் பின்னணியில்தான் புனையப்பட்டிருக்கிறது.
வாழ்வின் நடுவயதுவரை ஆடம்பரக் கேளிக்கைகள், நுகர்வுணர்ச்சிகளில் மூழ்கியிருந்த நெஹ்லூதவ், தான் ஒருகாலத்தில் காதலித்த கத்யூஷாவிற்கு நீதிமன்றம் அளித்த தவறான தீர்ப்பினால் மனம் வெறுத்து முதன்முதலில் தன்னைச் சுற்றியுள்ள உலகின் யதார்த்தத்தைப் பார்க்கிறார். தன்னைப் போன்ற கனவானின் செல்வம் என்பது எத்தனையோ விவசாயிகளின், சாமானியர்களின் உடலையும் உயிரையும் பிழிந்தெடுத்து அவர்களுக்கு வஞ்சமிழைத்ததின் வாயிலாக அடையப்பட்ட ஒன்று என்ற நிதர்சனம் அவருக்கு அப்போதுதான் புரிகிறது. அதேசமயம், சாமானியர்களால் புனிதமானதாகப் பார்க்கப்படும் மதம் மற்றும் நீதி போன்றவைகளின் மறுபக்கத்தையும் அவரால் பார்க்க முடிகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வும் சான்றாயர்கள் மற்றும் நீதிபதிகளின் அலட்சியத்தாலும் கவனக்குறைவினாலும் சூறையாடப்படுகிறது. கத்யூஷாவின் வழக்கில் கூட, சான்றாயர்கள் தீர விசாரிக்காமல் அவசரமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அவளுக்குக் கொலை செய்யும் நோக்கம் கிடையாது என்று அனைவரும் ஒத்துக்கொண்டாலும், அதைப் பேப்பரில் எழுத மறந்துவிடுகிறார்கள். நீதிபதிகளும் இதைக் கவனிக்கவில்லை. மூன்று நீதிபதிகளில் ஒருவர் மனைவியுடன் சண்டை போட்டு வந்ததால் மாலை உணவு கிடைக்காதே என்ற கவலை, இன்னொருவருக்குத் தன்னுடைய ஆசை நாயகியை விரைவில் சென்று பார்க்க வேண்டும், மற்றொரு நீதிபதியோ சொந்த அறிவில்லாமல் தன்முன் இருக்கும் காகிதத்தில் உள்ள எண் மூன்றால் வகுபட்டால் சாதகமாகத் தீர்ப்பு அளிப்பதாகவும் இல்லையெனில் பாதகமான தீர்ப்பு அளிப்பதாகவும் மனதிற்குள் முடிவெடுக்கிறார். விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் என்று சரிவர ஆராயாமல் கத்யூஷாவுக்கு நான்கு ஆண்டுகள் சைபீரியக் கடும் உடலுழைப்புத் தண்டனை தந்துவிடுகிறார்கள்.
இந்த நாவல் முழுக்க அன்றைய ருஷ்யாவின் அதிகார வர்க்கத்தின் அராஜகங்கள் நிரம்பியிருக்கின்றன. அலட்சியமும்கூட மாபெரும் அராஜகமே என்பதை நாவல் காட்டிச் செல்கிறது. குறிப்பாக, இத்தகைய அலட்சியமும் மனிதாபிமானமும் இல்லாத அதிகார வர்க்கத்தினரால் பந்தாடப்படும் அப்பாவி ஏழைகளின் கதைகள் நாவல் முழுக்கத் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. நீதிபதிகளின் சொந்தப் பிரச்சனைகளின் தாக்கத்தால் நீதி மறுக்கப்பட்ட கத்யூஷா, கடவுச்சீட்டு இல்லாத குற்றத்திற்காக மாதக்கணக்கில் சிறைவைக்கப்படும் கல்தச்சர்கள், வெயிலில் கைதிகளின் கால்களில் சங்கிலியிட்டு நடத்திச் செல்லுதல், உக்கிரமான வெயிலின் தாக்கத்தால் இறந்து போகும் கைதிகளைப் பிணவறையில் எறிந்துவிட்டு இயந்திரத்தனமாக ஆவணங்களைத் தயாரித்தல் என அதிகார வர்க்கத்தின் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கும் இந்த நாவலில் பதிவாகியுள்ளன.
அதிகாரிகளுக்கு இணையாகவே நிலம் வைத்திருக்கும் பிரபுக்களும் சீமாட்டிகளும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயக் கூலிகளை நடத்தும் விதம் அதிகாரிகளின் அராஜகத்தையும் மிஞ்சுகிறது. நிலத்தில் மாடு புகுந்ததற்காக நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தண்டனை தரப்படுகிறது, நிலத்தில் ஒரு மரத்தை வெட்டியதற்காக ஒரு விவசாயியை ஆறு மாதம் சிறையில் தள்ளுகிறார்கள். விளைவாக விவசாயிகள் அனைவருக்கும், நிலத்தின் சொந்தக்காரர்களான கனவான்களின் மீது தீராத வெறுப்பே மிஞ்சுகிறது. தனது நிலம் முழுவதையும் விவசாயிகளுக்கே தந்துவிடுவதாக நெஹ்லூதவ் விவசாயிகளிடம் அறிவிக்கும்போதுகூட ஒருவரும் அதை நம்பாமல், அதற்குப் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருக்கலாம் என்றுதான் சந்தேகிக்கிறார்கள்.
சாமானியர்களின் இறுதி நம்பிக்கையாக இருக்கும் மதமும்கூடக் அவர்களைக் கைவிடத்தான் செய்கிறது. மனிதர்களின் நிலையை மாற்ற முயலாமல், சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மதம் ஊறிக்கிடப்பதை டால்ஸ்டாய் சித்தரிக்கிறார். சிறைக்கூடங்களில் தங்க முலாம் பூசப்பட்ட சிலுவையுடன் ஆடம்பர உடையில் வரும் பாதிரியார் பெயரளவிற்குப் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகிறார். சிறைச்சாலையைப் பார்வையிட வரும் வெள்ளையர் ஒருவர், சுகாதாரமற்ற சிறைக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் இழிந்த நிலையைக் கண்டு வேதனைப்படாமல் அவர்களுக்கு பைபிள் புத்தகங்களை அளிக்கிறார். ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று போதனை செய்கிறார். அதைக் கேட்டு வெறியாகும் ஒரு கைதி, கன்னத்தில் அல்லாமல் வேறு எங்காவது அடித்தால், எதைத் திருப்பிக் காட்டுவதாம்? என்று நக்கலாகக் கேட்கிறான்.
இப்படி அதிகாரவர்க்கத்தாலும், செல்வந்தர்களாலும், மதத்தாலும் புறக்கணிக்கப்பட்ட சாமானியர்களின் வலியும் வேதனைகளும் முடிவில்லாதவை.
இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன நெஹ்லூதவ் படிப்படியாக மேற்சொன்ன மனமாற்றத்தின் பாதையில் செல்லத் துவங்குகிறார். கத்யூஷாவிற்குத் தான் இழைத்த குற்றத்துக்கு வருந்தும் அவர், அவளுக்கு விடுதலை பெற்றுத் தர அனைத்து முயற்சிகளையும் எடுத்து, அவள் செல்லுமிடத்துக்கெல்லாம் தானும் சென்று, முடிவில் அவளை மணந்து கொள்வதன் மூலம் தனக்கான மீட்சியைத் தேடிக்கொள்ளும் முடிவெடுக்கிறார். அந்த முடிவை எடுத்ததும் அவருக்கு உலகமே புதிதாகத் தெரிகிறது. தோட்டத்து ஜன்னல்வழியே தெரியும் நிலவொளியை ரசிக்கிறார்.
ஆனாலும், இந்த மனமாற்றம் அவருக்கு அவரது குடும்பத்திற்குள்ளும், நண்பர்களிடமும் வெறுப்பையே ஈட்டித் தருகிறது. அவரது உடன்பிறந்த சகோதரியும் அவரது கணவரும்கூட அவரை நிந்தனை செய்கிறார்கள். ஆனால், அவரது சொத்தைச் சகோதரி எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் அனுமதி தரும்போதுமட்டும் தன்னிடம் இளமையில் பாசமே உருவாக இருந்த சகோதரியின் சுயநல ரூபத்தைப் பார்க்கிறார்.
இந்த உலகமே எதிர்த்த போதிலும், அவர் உதவியைப் பெற்றுக்கொள்ள கத்யூஷாவே மறுத்தபோதும்கூட அவர் தன் மனச்சான்றின்படி தான் எடுத்த முடிவில் தீர்மானமாக நின்று கடைசி வரைப் போராடி வெல்கிறார். நாவலின் இறுதியில் நெஹ்லூதவ் விவிலியத்தின் வாசகங்களைத் தன் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களினூடாக, தனக்கு ஏற்பட்ட மனமாற்றத்தின் வெளிச்சத்தினூடாக வாசிக்கும்போது அந்த வாசகங்களின் மெய்யான பொருளையும் தரிசனத்தையும் அடைகிறார். நாவலின் இந்தப் பகுதி மிகுந்த படைப்பூக்கத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணிற்காக மனமாறுதல் அடைந்து நல்வழிக்குத் திரும்பிய அவர், அந்தப் பெண் முடிவில் தன்னை நிராகரித்துப் பிறிதொருவனிடம் சென்றுவிட்ட பின்பும்கூட, அதே மனமாற்றத்தை ஒட்டுமொத்த மானுடகுலத்திற்காக நீட்டித்துக்கொள்ளும் முடிவை எடுக்கிறார். இதுவே நாவலின் கவித்துவ உச்சமாகவும் நிலைகொள்கிறது.
கத்யூஷா
கத்யூஷாவின் கதை துயரம் மிகுந்தது. இளமையில் நெஹ்லூதாவினால் கற்பழிக்கப்படுகிறாள், அதனைத் தொடர்ந்து வாழ்க்கை முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறாள். பணிப்பெண்ணாக வேலை செய்யும் இடங்களில் எல்லாம் ஆண்களால் சீரழிக்கப்பட்டு, முடிவில் விபச்சார விடுதிக்கே சென்று விடுகிறாள். அவளுக்குப் பிறந்த குழந்தையும் இறந்துவிடுகிறது. நாவல் துவங்கும்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியாக வெகு காலத்திற்குப் பின் நெஹ்லூதவ்-இன் கண்ணில் படுகிறாள். தூயக் காதலில் துவங்கிய அவளது பயணம் வக்கிரமாகக் காமத்தில் முடிகிறது. அதன் பின் அவள் வாழ்வு கழிவது சிறைச்சாலையில்.
நெஹ்லூதவ் தனக்கு உதவ முன்வரும்போதெல்லாம் அவரைப் பணரீதியாகப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணாக இருப்பவள், ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ளதை அவரிடம் தெளிவாகச் சொல்லிவிடுகிறாள், “அப்போது என் உடலைப் பயன்படுத்திக்கொண்டு என்மூலம் இன்பானுபவம் பெற்றீர், இப்போது என் மூலம் விமோசனம் அடையப் பார்க்கிறீரா? அந்த விமோசனத்தை ஒருபோதும் உங்களுக்கு அளிக்க மாட்டேன்” என்கிறாள்.
இருந்தாலும், தன்னுடைய மனமாற்றத்தை இவை எதுவும் பாதிக்காது என்ற திடச்சிந்தையுடன் தொடர்ந்து அவளுக்கான உதவியைச் செய்துகொண்டே இருக்கும் நெஹ்லூதவ்வை மீண்டும் காதலிக்கத் துவங்குகிறாள். அவளது தண்டனையைக் குறைக்க மேலவை மறுத்துவிடுகிறது, மனம் தளராமல் மன்னருக்குக் கருணை மனு அளிக்கிறார், முடிவில் அவளுக்கு விடுதலையையும் பெற்றுத் தருகிறார். ஆனால், அந்நிலையில் மீண்டும் அவளது மனம் மாறிவிடுகிறது. வாழ்வில் கீழ்நிலையில் இருக்கும் தன்னை நெஹ்லூதவ் மணம் செய்து கொள்ளலாகாது என்ற முடிவில் தன்னுடன் சிறையிலிருக்கும் இன்னொருவனை மணந்துகொள்ள முடிவெடுக்கிறாள். இந்த இடத்தில் நெஹ்லூதவ்வை மிஞ்சிய மனமுதிர்ச்சியை அவள் வெளிப்படுத்துகிறாள்.
கைதிகள்
கைதிகளின் வாழ்க்கை, அவர்களது துயரங்கள் அனைத்தும் இந்த நாவலில் விரிவாகவே இடம்பெறுகிறது. கைதிகள் மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளும் சிறைச்சாலைகளில் பிறந்து அங்கேயே அவர்களுடன் வளர்கின்றன. அவைகளின் பால்யம் முழுக்க சிறையில் கழிகிறது. கைதியின் மனைவியும் அல்லது கைதியின் கணவனும்கூட அவர்களைப் பின் தொடர்ந்து சைபீரியாவுக்குச் செல்கிறார்கள். மேலும், காகிதத்தில் சரியானபடி குறிப்பிடவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான அப்பாவிகள் மாதக்கணக்கில் சிறைத்தண்டனையை அனுபவிக்கின்றனர்.
இந்நாவலில் டால்ஸ்டாய் எழுப்பும் வினாக்கள் முக்கியமானவை. அவற்றிற்கு இன்றளவும் ஒரு தீர்வு கிடைத்தபாடில்லை.
மனிதனின் சுபாவம்
மனிதர்களின் சுபாவங்களைக் குறித்தும், அவர்களை நல்லவர், கெட்டவர் என்று தரம்பிரிப்பதைப் பற்றியுமான முக்கியமான கருத்தை டால்ஸ்டாய் இந்த நாவலில் குறிப்பிடுகிறார். மனிதர்களில் முழு நல்லவரும், முழுமையான கெட்டவரும் இல்லை. ஒப்புநோக்க ஒரு மனிதன் தீயவனாக இருக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் நல்லவனாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதால் அவனை நல்லவன் எனலாம், அதே சமயம் அவனே கெட்டவனாக நடந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தால் அவனைக் கெட்டவன் எனலாம். இதை விடுத்து ஒருவரை முழு முற்றாக எப்போதும் நல்லவர் என்றும் எப்போதும் கெட்டவர் என்றும் வகை பிரிக்கலாகாது என்கிறார் டால்ஸ்டாய். “மனிதர்கள் நதிகளைப் போன்றவர்கள், எல்லா நதிகளிலும் ஓடுவது ஒன்றேதான். நீர்தான். ஆயினும், ஒவ்வொரு நதியும் இங்கே குறுகியும் அங்கே அகன்றும், இங்கே விரைவாகவும், அங்கே மெதுவாகவும்,இங்கே தெளிவாகவும், அங்கே கலங்கியும், இங்கே வெதுவெதுப்பாகவும், அங்கே குளிர்ந்தும் ஓடுகிறது. மனிதர்களும் இப்படித்தான். ஒவ்வொருவரும் மனிதனுக்குரிய எல்லாக் குணங்களையும் கரு வடிவில் தம்மிடம் கொண்டிருக்கிறார். ஒரு நேரம் ஒரு குணத்தையும் இன்னொரு நேரம் வேறொன்றையும் வெளிப்படுத்துகிறார். அவர் அவராகவே இருந்துகொண்டு அவரைப் போலல்லாத வேறொருவராகவும் அடிக்கடி மாற்றமடைந்து விடுகிறார்”. இது போன்ற அடிக்கோடிட்டு வாசிக்கவேண்டிய பல வரிகள் இந்நாவலில் இடம்பெறுகின்றன.
கவித்துவ தருணங்கள்
டால்ஸ்டாய் அவரது எழுத்தில் இரண்டு விதங்களாக வெளிப்படுபவர். கலைஞனாகவும் ஆசிரியனாகவும். கலைஞனாக வெளிப்படுகையில் மானுட உணர்வுச்சங்களில் பயணிக்கிறார். அப்போது நாம் காணும் டால்ஸ்டாய் வேறு. ஆனால், ஆசிரியனாக அவர் மாறும்போது ஒரு படி கீழிறங்கிவிடுகிறார். இலக்கியவாதிகளுக்கு டால்ஸ்டாயின் கலைஞன் என்ற முகம் பிடித்துப் போய்விடுகிறது. மற்றவர்களுக்கு, டால்ஸ்டாயின் இந்த ஆசிரியர் என்ற முகம் பிடித்துவிடுகிறது. குறிப்பாக, காந்தி போன்ற ஒழுக்கவாதிகள் டால்ஸ்டாயின் இந்த முகத்தைத்தான் அதிகமும் பின்பற்றினார்கள். இப்படி கவித்துவமும், கறார்க் குணமும் மாறிமாறி டால்ஸ்டாயின் எழுத்தில் வந்தபடியே இருக்கும். இந்த நாவலில் அவரது ஆசிரியர் என்ற முகமே பிரதானமாக இருந்தாலும், அவரது கலைத்தன்மையும் இடம்பெறாமல் இல்லை. குறிப்பாக, நாவலின் முதல் பத்தியிலேயே அவர் நாவலின் கருவை மறைமுகமாக உணர்த்திவிடுகிறார். “சரளைக் கற்களின் இடுக்குகளிலும் கதிரவனின் ஒளி துளிர்த்துக் கிளம்பியது” என்ற வரியில் நாவலின் கதையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
அதே போல நெஹ்லூதவ் கத்யூஷாவின் இளவயதுக் காதல் மிகுந்த கவித்துவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதிலும், கிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகையின்போது இருவரும் முத்தமிட்டுக்கொள்வது, வசந்தம் மலர்கையில் அவர்கள் காதல் மலர்வது, கைதிகள் வெயிலில் சாகும்காட்சியை யாரும் விளக்காமலே வண்டியில் போகும் ஒரு சிறுவன் புரிந்துகொண்டு கண்ணீர் விடுவது, இளமையில் பாசத்தின் இலக்கணமாக இருந்த நெஹ்லூதவ்-இன் சகோதரி, அவருடைய சொத்து தனக்கு வரும் என்று தெரிந்தவுடன் வெளிப்படுத்தும் வித்தியாசமான உடல்மொழி என டால்ஸ்டாய் என்ற கலைஞனின் தொடுகை நாவலின் சில இடங்களில் தென்படவே செய்கிறது. ஆனாலும் ஒப்புநோக்க ஆசிரியர் டால்ஸ்டாய்தான் இந்த நாவலில் ஆதிக்கம் செலுத்துகிறார்.
நாவலின் சாராம்சம் என்பது ஒருவனின் மனமாற்றம்தான். நன்மையின் பக்கம் ஒருவனை வற்புறுத்தித் திருப்பக்கூடிய நாவல் அல்ல இது. மாறாக, மனசாட்சியின்படி நம்மை வாழச் சொல்லும் நாவல். மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். ஆகையால், செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது. இலக்கிய வாசகன் என்பவன் முதலில் ஒரு மனிதன். ஆகையால், மனிதத்தன்மையை வலியுறுத்தும் இத்தகைய நாவல்கள் வாசிக்கத்தக்கவை. கூடுதலாக, நவீன இலக்கிய மொழியில் சொல்லப்பட்டிருப்பதற்காக அவசியம் வாசிக்கத்தக்க நாவலும்கூட. ஆன்மிகம் என்பது மதத்தைப் பின்பற்றுவதல்ல, மனசாட்சியைப் பின்பற்றுவது என்று சொல்லும் மகத்தான ஆக்கம் இது.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…