சாடொங் - கே.பாலமுருகன் - ஓவியர் ஜீவா

சாடோங்

11 நிமிட வாசிப்பு

மலாவி கடற்கரையில் மஞ்சு கம்பீரத்துடன் நின்றுகொண்டே இரு கைகளையும் விரித்து அனல் காற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள். மணல்துகல்களைக் கிளறியபடி வீசிய மூன்சுன் காற்று கரைக்கு மேல் இருந்த கடைகளுக்குத் தடுப்பாகக் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் விரிப்புகளை அசைத்துப் பார்த்தது.

நவம்பர் இறுதி என்பது மஞ்சு கிளாந்தானிற்குப் பயணம் செய்வதற்கான காலம். மறுப்பேதும் சொல்லாமல் அவளை அழைத்துச் செல்வதென்பது எங்களுக்குள் ஒப்பந்தம். என்னுடைய சில விளம்பரக் காணொளிகளில் நடிப்பதைத் தவிர மற்ற நேரங்களில் அவள் வீட்டிலேயே இருப்பாள். வருடம் ஒருமுறை கிளாந்தான் சென்றால் போதும் என்பதுதான் அவளுடைய கொள்கை. மெலாவி கடற்கரையில் அமர்ந்துகொண்டு நாளெல்லாம் கடலைப் பார்த்தபடியே இருப்பாள். அவளுக்கான தியானம் அது. மனத்தைச் சமன்படுத்துவதாகச் சொல்லிக்கொள்வாள். மஞ்சுவின் மந்திரப் பார்வையைக் கொண்டு என்ன கேட்டாலும் மனம் அப்படியே கிறங்கி ஒத்துக்கொள்ளும். நீலவிழியுடன் அவளுடைய கண்கள் ஒளிர்ந்து பிரகாசிக்கும். அதனுள் அப்படியே கிடக்கலாம் எனத் தோன்றும்.

“மஞ்சு, சாப்ட ஏதாவது வேணுமா?”

பதிலேதும் சொல்லாமல் கண்ணிமைக்காமல் கடலை வெறித்திருந்தாள். வளைந்து வான்நோக்கி எழுந்திருந்த தென்னை மரத்தின் தண்டில் வசதியாகச் சாய்ந்து நின்றிருந்தாள். குடும்பத்தை எதிர்த்து மஞ்சுவைத் திருமணம் செய்து அழைத்து வந்தது முதல் அவளிடம் பெரிதாகக் கோரிக்கைகள் இருந்ததில்லை. இன்னும் வளராத குழந்தை மனத்துடன் தெரிவாள். ஆரம்பத்தில் தினமும் அவளைப் பாராட்ட வேண்டுமென விரும்பினாள். வீட்டை அழகுபடுத்துவதிலும் சமைப்பதிலும் சிலசமயங்களில் எனது ஆவணப்பட வேலைகளிலும்கூட அவளது ஆதிக்கம் இருக்கும். அதனைப் பாராட்டி வரவேற்க மறுக்கும் கணங்களில் அது பெருஞ்சண்டையாக வெடித்துவிடும். குழந்தைகள் வேண்டாமெனக் கோரிக்கையை முதலில் முன்வைத்ததும் அவள்தான். குழந்தைகள் பாசத்தைப் பகிர்ந்து நமக்கான உறவின் பிடிப்பைத் தளர்த்திவிடுவார்கள் எனப் பல இரவுகள் வியாக்கியானம் செய்துள்ளாள். அப்பொழுதெல்லாம் என் மடியில் படுத்துக்கொண்டு அழுவாள். காரணம் கேட்டால் தெரியவில்லை என்பாள். அவளது அன்பு சில சமயங்களில் அதிகாரத்தின் உச்சாணியில் தொங்கிக் கொண்டிருக்கும்.

“இந்தக் கடல்தானே பெனாங்குலயும் இருக்கு?” என்று இவ்வளவு தூரம் வருவதற்கு ஏதேனும் காரணம் சொல்ல முனைந்தேன். கோபத்துடன் முறைத்தாள். மஞ்சு கொந்தளித்துக் கொண்டிருக்கும் கடற்கரையையும் அதனூடே வீசி அலையும் காற்றையும் முதல்முறை பார்ப்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவள் கண்கொண்டு என்னால் கடலைப் பார்க்கத் தோன்றவில்லை. வேறெதுவும் புதிதாகத் தோன்றாத கடலில் மஞ்சு எதைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் எனத் தெரியவில்லை.

“ஜெய், இந்தக் காத்தும் கடலும் சேரும்போது ஏற்படற கொந்தளிப்பு என்ன சொல்ல வருதுன்னு தெரியுமா?” எனக் கேட்டுவிட்டுக் காற்றில் அலையும் அவளது ஸ்கேர்ட்டை வலது கையால் பிடித்துக்கொண்டாள். மூன்சுன் பருவக் காற்று கோபத்துடன் வீசிக் கொண்டிருந்தது. மஞ்சு காற்றை எதிர்த்து நின்றாள். காற்றின் வலிமையை அவள் இரசிப்பது அவளது உடல் அசைவில் தெரிந்தது.

“இது மூன்சூன் சீசன்… இப்பத்தான கடல இவ்ள வேகத்தோட பார்க்க முடியும்… வேற என்ன தெரியுது? உன் கண்ணுக்கு ஏதும் பூதம் தெரியுதோ?”

அவள் புன்னகைத்தாள். அவளது அர்த்தத்தை என்னால் எட்ட முடியவில்லை என்பது அவளது மௌனத்தின் வழியே புரிந்துகொள்ள முடிந்தது. மஞ்சுவின் பின்புலம் எப்பொழுதும் இரகசியமானதுதான். கோலாலம்பூரில் ஒரு நடனக் குழுவில்தான் அவளைப் பார்த்தேன். நீலவண்ணத்தில் அவளுடைய ஆடை பளபளப்புடன் இருந்தது. மெர்டேக்கா மேடை நிகழ்ச்சியைப் பதிவு செய்யப் போயிருந்தபோது ஏற்பட்ட பழக்கம். உலகை விநோதமான கோணத்தில் பார்ப்பவள் என்பது முதல் பழக்கத்திலேயே அறிந்துகொண்டேன். எதற்கு நடனத்தைத் தேர்ந்தெடுத்தாய் என்று கேட்டபோது தரையிலிருந்து எகுறும்போதெல்லாம் ஒரு பறவையாகிவிடும் உணர்வை நடனம் மட்டுமே வழங்குகிறது என்றவளை எப்படிப் பிடிக்காமல் போகும்? கைகளை விரித்துக் காட்டி நடனம் தன்னை ஒவ்வொருமுறையும் விடுதலை செய்கிறது எனச் சொல்லிப் பரவசப்படும்போது அவளது கண்களில் என்னுடைய பரந்தவெளியையும் உணர்ந்தேன்.

சிறுவயதில் மூத்த அக்கா காஞ்சனா என் மீது செலுத்திய அடக்குவிதிகள் ஏராளம். இன்னுமும் உடலைச் சுற்றி ஏதோ முள்வேலி உரசுவதாக ஏற்படும் கற்பனையைத் தவிர்க்க இயலவில்லை. எல்லோரும் விளையாடும் நேரத்தில் நான் மட்டும் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருப்பேன். கம்பத்து ஆற்றில் குளித்ததில்லை; மாமரத்தில் ஏறி உட்கார்ந்தது இல்லை. என் உலகத்தை ஓர் அறைக்குள் மட்டுமே சுருக்கி வைத்திருந்தாள். மீறினால் நெகிழிக் கித்தாவில் அடிவிழும். துடித்தழுது கிடப்பதை அம்மா ஒன்றும் சொல்லாமல் உள்ளுக்குள்ளே திமிறுவார். என் விடுதலையை நான் மஞ்சுவின் நடனத்தில்தான் கண்டேன். என்னைச் சந்திக்கும்போதெல்லாம் எனக்குப் பிடித்த பாடலுக்கு நடனம் ஆடிக் காட்டுவாள். அது நடனமாகத் தெரிந்ததில்லை. எனக்குள் சுருங்கிக் கிடந்த ஒரு சிறுவனைக் கிளர்த்தும் சடங்காகத் தோன்றும். உள்ளுக்குள் துள்ளி எழுந்தேன். எனக்கான விசையை அவள் வைத்திருந்தாள்.

சிறுவயதிலேயே வேறொரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்தவள் என்பதோடு வீட்டு வேலைகள் செய்வதற்காக சில இடங்களுக்குச் சென்றுள்ளாள் என்பது மட்டும் தெரியும். பெற்றோர்கள் உயிருடன் இல்லை. மற்ற உறவினர்களையும் அவள் தேடிப் போனதில்லை. “சொந்தக்காரப் பையனுங்கள எதுக்கு நான் தேடணும்? நான் கஷ்டப்பட்டப்பெ ஒருத்தன் வரல… அப்புறம் எதுக்கு?” என அலுத்துக்கொள்வாள்.

அவளுடன் பேசி நான் வெற்றி பெற்றதில்லை என்பதால் அவள் முடிவில் தலையிட்டதும் இல்லை. பல நேரங்களில் அடர்ந்த மௌனத்தைப் பின்னிக்கொண்டிருக்கிறாள். அதனுள் அவள் கோர்க்கும் வார்த்தைகளின் மீது எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்து கேட்கவும் செய்தேன். தான் ஒரு நடனத்தின் இளவரசி என்று சொல்லிச் சிரிப்பாள். அது எகத்தாளமான சிரிப்பொலியாக மாறி வீட்டை அலங்கரிக்கும். அப்பொழுதெல்லாம் தன் முகத்தை வெகுநேரம் கண்ணாடியில் பார்ப்பாள். சொந்தமாகச் சிரித்தும் கொள்வாள்.

“ஏய், நீ வேலக்காரப் பொண்ணுதான… ஏதோ பெரிய டான்ஸர்ன்னு சொல்லி என்னை ஏமாத்திட்ட?” என்று நான் கேலி செய்யும்போது அவளுடைய கண்கள் உக்கிரமாக மாறும். நாக்கைக் கடித்துக் கண்களைப் பெரிதாக்குவாள். மீண்டும் தணிந்த குரலில் பேச சில மணி நேரங்கள் ஆகிவிடும்.

“அப்படிப் பாக்கதெம்மா… என் அக்கா மாதிரி இருக்க…” என்பேன்.

“எனக்கு 15 வயசு இருக்கும்போது வீட்டு வேலைக்கு தொஹொய் கம்பத்துல இருந்த அஸ்லிக்காரன் இழுத்துட்டுப் போனப்ப கடல் இதே மாதிரித்தான் கொந்தளிச்சிக்கிட்டு இருந்துச்சி தெரியுமா?…” என்று சொல்லிவிட்டுக் கண்கள் திறந்து அவள் செய்யும் தியானத்திற்குக் கேடில்லாதபடிப் புன்னகைத்தாள். அடிக்கும் காற்றுக்கு தாங்காது எனத் தெரிந்தும் ஒரு சடங்கு போல நான் கொண்டு வந்த கூடாரத்தை அமைக்கலாம் என காரிலிருந்து அதனை எடுத்துப் பிரிக்கத் துவங்கினேன். தென்னை மரத்தண்டோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றில் நிறைய வாவ் பட்டங்கள் விரிந்து கடலிலிருந்து வந்த காற்றை எதிர்த்தபடிக் காட்சியளித்தன.

“இதையே பத்துத் தடவ சொல்லிருப்ப… நானும்தான் சின்ன வயசுல அப்பாவொட மோட்டர் கடையில டயரு மாத்துவேன்… ஸ்பானர்லாம் எடுத்துக் கொடுப்பன்… வீட்டுல சட்டிப் பானையெல்லாம் கழுவுவேன்… அதுக்கென்ன இப்ப?” எனக் கடிந்துகொள்வது போல் பாவனை காட்டினேன். அவளுடைய சிறுவயது புராணம் கேட்டுச் சலித்தவை. அதையெல்லாம் கொட்டித் தீர்த்து அவள் கடக்க நினைப்பது எதுவென இன்னுமும் என்னால் ஊகிக்க இயன்றதில்லை.

“பெனாங்ல… ஒரு தாத்தா… அவருக்கு ஒடம்பு சரியில்ல… வீட்டு வேலைக்கும் அவர பார்த்துக்கவும் இளம் வயசு பொண்ணுத்தான் வேணும்னு ஆச… என்ன எங்கயோ பார்த்துட்டு நாந்தான் வேணும்னு ஒரு பெரிய போராட்டம் செஞ்சிட்டாரு… வேற வழியில்லாம நான்தான் இருந்து பார்த்துக்கிட்டன்… அப்பாவுக்குக் கடன அடைக்க நான்தான் பலிகடா… அவரு நல்லாய்ட்டா நீ வீட்டுக்குப் போலாம்னு சொல்லிட்டாங்க…”

மஞ்சு சொல்வது ஏதோ அபூர்வமான கதைக்கான தொடக்கம் போல ஒலித்தது. என்னால் அதனை முழுவதுமாக மனத்தில் ஏற்றிக்கொள்ள முடியவில்லை. அவள் எப்பொழுதும் வேண்டாத கதைகள் பேசுவாள் என ஓரளவில் ஊகித்திருந்தேன். தூரத்தில் வந்திருந்த சுற்றுப்பயணிகள் சிலர் கடற்கரையில் பாய்களை விரித்து அமர்ந்திருந்தனர். சிறுவர்கள் துரத்திப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். காற்று அவர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது.

“ஒரு இளவரசிய இப்படிச் செய்லாமா, ஜெய்?” என்றாள். காதோரம் அவளது நீளமான முடிக்கற்றைக் காற்றுடன் போராடிக் கொண்டிருந்தது.

“நீ என்ன சாடோங்னு நெனைப்பா?”

அந்தப் பெயரை உச்சரித்ததும் மஞ்சுவின் முகத்தில் திடீர் பொழிவு. கண்கள் பிரகாசித்தன. சிரித்த முகத்துடன் என்னைப் பார்த்தாள். அவளிடமிருந்த மௌனம் கலைந்து வார்த்தைகள் கொப்பளிக்கத் துவங்குவதற்கான சமிக்ஞையாய் உதடுகள் துள்ளின. நான் அவளது நடனத்தில் இலயித்தபோது எழுந்த பிரகாசத்தை இப்பொழுது அவளுடைய கண்களில் பார்க்க முடிந்தது.

“எனக்கே தெரியாது நான் சாடோங்னு… நீ இப்பச் சொன்னியே அதே மாதிரித்தான் அவரும் சொன்னாரு?” என்றாள். அவள் யாரை இப்பொழுது தன் கட்டுக் கதைக்குள் கொண்டு வருகிறாள் எனச் சந்தேகமாக இருந்தது.

“சின்ன வயசுல இங்க கெளாந்தான்ல அப்பாவோட மீன் பிடிக்கப் போனபோது உடம்பு சரியில்லாம போச்சு… அஸ்லி கம்பத்த சுத்தி உள்ள ஆத்துல அப்ப மீன் பிடிக்க நம்பாளுங்களுக்குத் தைரியம் இல்ல… எங்கப்பா மட்டும்தான் போவாரு… அப்படி ஒருமுறை அங்கப் போனப்பத்தான் எனக்கு ஒரு வாரமா காய்ச்சல்…. உடம்புக்கு ரொம்ப முடியாம போச்சி… எந்த மருந்தும் சரியாக்கல… அதுக்கப்பறம்தான்… மூனு இரவுல மைன் புத்திரி சடங்குக்குக் கூட்டியாந்து குணப்படுத்தனாங்க…”

மஞ்சு மனத்திலுள்ளத்தைச் சற்றும் பிசிறில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஜெய்… என்னோட பூர்வீகமே கெளாந்தாந்தான்… மனசு சரியில்லாதவங்க… பேய் பிடிச்சிட்டா… அவங்கள குணப்படுத்துற மலாய்ப் பூர்வீக சடங்குதான் மைன் புத்திரி… தொக் புத்திரி உடம்புல ஆவி வந்து உக்காந்து எல்லா உண்மையும் சொல்லும்… அதை தொக் மிண்டுக்தான் விசாரிச்சி சொல்லுவாரு ஜெய்… அன்னிக்கு தொக் புத்திரி உடம்புல வந்தது சாடோங் இளவரசி… ஜெய்… யாருக்குமே அப்படி நடந்தது இல்ல தெரியுமா?”

ஓவியம்: ஜீவா

மஞ்சு சொல்வதை என்னால் ஓரளவில் முன்பு படித்த சிலவற்றோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. கிளாந்தானில் தடை செய்யப்பட்ட ஒரு சடங்கு அது என்பது மட்டும் நினைவில் இருந்தது. ஆனால், அவளிடம் ஏதும் தெரிந்ததைப் போல நான் காட்டிக்கொள்ளவில்லை. அவளது புருவங்கள் ஒரு வில்லைப் போல நேர்த்தியாக வளைந்து காட்சியளித்தன. சீன இளவரசிகளுக்கு மட்டுமே அப்படிப்பட்ட புருவங்கள் இருப்பதாகத் தோன்றியது. வெளிர்ந்த முகம். கன்னங்கள் இரண்டும் இலேசாக உப்பியிருந்தன. முகத்தில் அதிகம் பவுடர் பூசிக்கொள்வாள். எப்பொழுதும் வெண்மையாக இருப்பது அவளுக்குப் பிடிக்கும்.

“ஜெய், ஓப்பன்னா சொல்றத்துன்னா நீ என்ன மதிக்கிறதே இல்ல… ஒன் படம், எடிட்டிங், இப்படித்தான் சுத்திக்கிட்டு இருக்க…?”

சற்றுமுன் சொன்னதிலிருந்து முற்றிலுமாக அறுத்துக்கொண்டு இப்பொழுது வேறு கதைக்கு வந்துவிட்டாள். மஞ்சுவிடம் நிறைய புகார்கள் இருந்தன. அவற்றை ஒரு துணி மூட்டையைப் போல பத்திரமாகக் கட்டி வைத்திருக்கிறாள். மெலாவிக்கு வரும் நாளில் மொத்தமாக அவிழ்த்துக் கொட்டுவாள். மலாய்ச் சிறுவர்கள் வாவ் பட்டத்தை மேலே ஏற்றிக் கொண்டிருந்தனர். என் கவனம் முழுவதும் அந்தப் பட்டத்திலேயே இருந்தது. அதனுள் தெரியும் ஓவியமும் வண்ணமும் ஈர்ப்பதற்குரியவை.

“அந்தப் பட்டத்த பாரு… எவ்ள கம்பீரமா அழகா மேல போகுது… அதுக்குப் பின்னால இருக்கற உழைப்புதான் காரணம்… அந்த மாதிரித்தான் மஞ்சு… இப்ப உழைக்கலன்னா உயரம் போகவே முடியாது…”

இதை நான் பலமுறை மஞ்சுவிடம் சொல்லிவிட்டேன். அவளைப் பொறுத்தவரை இவையாவும் வெறும் தப்பிப்பதற்கான காரணங்கள் மட்டுமே என அவள் நினைத்திருந்தாள். தன்முனைப்புப் பேச்சு அவளுக்குப் பிடிக்காது. அது உள்ளிருந்து வர வேண்டும் என்பாள். அவளுடைய கண்கள் அலைக் கொந்தளிப்பிலிருந்து அகலவில்லை.

“நான் அப்ப ஒரு பையன காதலிச்சன் தெரியுமா? எங்கக் கம்பத்துல இருந்தான். மீன் பிடிக்கறவன்… அவுங்க அப்பா சொந்தமா ஒரு ‘போட்’ வச்சிருந்தாரு… அவுங்க அம்மா அஸ்லி கம்பத்துல வளர்ந்தவங்க…”

மீண்டும் அவள் உருவாக்கி வைத்திருந்த ஒரு கற்பனைக் கதைக்குள் நுழைந்துவிட்டாளோ என்று அச்சமாக இருந்தது.

“சரி மஞ்சு… வா கொஞ்ச நேரம் இங்கப் பின்னால இளநீக் கடை பார்த்தன்… போய்ட்டு ரெண்டு காய் உடைச்சிக் குடிச்சிட்டு வருவோம்…” எனச் சொல்லி இருவரும் அவ்விடத்தை விட்டு நடந்தோம். அவள் கடலைப் பார்த்ததும் வேறு ஒருவளாக மாறுகிறாள் என்பதை இத்தனை தாமதமாக உணர்ந்துகொண்டதை நினைத்து நானே நொந்துகொண்டேன்.

பரப்பரப்பில்லாத சாலையைக் கடந்து இலேசான மேட்டில் இருந்த பலகைக் கடைக்குச் சென்றோம். வெளியே கூடையில் இளநீர் காய்களை அடுக்கி வைத்திருந்தார்கள்.

“நான் பெனாங்லேந்து திரும்பி வந்தப்ப… அவன தொஹொய் கம்பத்துல உள்ள அஸ்லி பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க… எனக்கு எவ்ள கோபம் வந்துச்சி தெரியுமா?” சட்டென அவளுக்கு மூச்சிரைத்தது. அதக்கி வைத்திருந்த வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன மஞ்சு? ஏதாச்சம் ‘மஸ்த்திக்கா’ புக்க படிச்சிட்டுக் கத உடறீயா? எஞ்சாய் பண்ணுவோம்… எளநீர் குடிச்சிட்டு ஈக்கான் பாக்கார் சாப்டலாம்… இந்தக் கவலைலாம் மறக்கறத்துக்குத்தான லீவுக்கு வந்துருக்கோம்…”

பொக் லோங் சாலையோரக் கடையில் கிடைக்கும் வறுக்கப்பட்ட மீனின் ருசி வயிற்றிலும் நாக்கிலும் நீந்தத் துவங்கியது.

“ஜெய், மைன் புத்திரி சொன்னன்ல… எனக்கு ஒன்னுமே தெரியாது… பேய் பிடிச்ச மாதிரி வீட்டுல கத்திகிட்டு இருந்தன்… 15 வயசுத்தான் இருக்கும்… அந்தச் சடங்குக்குத்தான் கூட்டிட்டுப் போனாங்க… தொக் மிண்டுக் என் முன்னால நின்னு என்னனவோ மந்திரம் சொன்னாரு… ஒரு கட்டம் என் கண்ணப் பார்த்து ‘சாடோங்ங்ங்’னு கத்தனாரு… அப்படியே என் உடம்புல ஏதோ வந்து நுழைஞ்ச மாதிரி கிர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு அதிர்வு… நிமிந்து நின்னு கத்தனும்னு தோனுச்சி… சாடோங் இளவரசிய பத்தி தெரியுமா? சியாம் அரசன் அவளுக்கு 15 வயசு இருக்கும்போதுதான் பிடிச்சிட்டுப் போனானாம்…என்ன அந்தக் கெழவன் வீட்டுக்குக் கொண்டு போனதும் அதே வயசுலத்தான்… இப்பத் தெரியுதா? போமோக் தொக் மிண்டுக்தான் அதுக்கப்பறம் என்கிட்ட சாடோங் பத்தி நெறைய சொன்னாரு…”

என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். அவளுடைய கண்கள் ஒளிர்ந்த விதத்தில் சந்தேகம் கூடியது. அது அவளுடைய கண்கள் அல்ல. அல்லது அவள் சிரமப்பட்டுத் தன்னைக் குழப்பிக்கொள்கிறாள் என்பது போல் தோன்றியதையும் தடுக்க இயலவில்லை. தேங்காயின் மீது பொத்தல் போட்டு அதில் ‘ஸ்ட்ரோ’வைச் செருகிக் கடைக்காரன் கொடுத்தான். தலையில் கட்டப்பட்டிருந்த துண்டு அவனுடைய கண்களை முழுவதுமாக மறைத்திருந்தது.

“அவரு சும்மா உன்னைப் பயமுறுத்த அப்படிச் சொல்லிருப்பாரு, மஞ்சு…”

அவளுடைய கவனத்தைத் தளர்த்தலாம் எனத் தோன்றியது. இறுக்கமான கைலி அணிந்திருந்த பெண் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள். வெளிர்நிறத்தில் இருந்தாள். அவளுடைய கண்களும் நீலவிழியுடன் தெரிந்தன. சட்டென மஞ்சுவைப் பார்ப்பது போலவே இருந்தது. நடந்து அவளைக் கடக்கும்போது என்னையே உற்றுப் பார்த்தாள். கண்களால் வசியம் செய்கிறாளோ எனக்கூடத் தோன்றியது. நீலவிழி அபூர்வமான ஈர்ப்பைக் கொடுக்கிறது.

“அப்படிப் பார்த்தா எல்லோருக்கும் சாடோங் இளவரசி வாழ்க்கையில நடந்த மாதிரியே நடந்திருக்காதுலே… மைன் புத்திரி சடங்குக்குப் போனவங்க எல்லோரும் என்னை மாதிரி சொல்லலையே…” என்றாள்.

ஒருவேளை அந்தச் சடங்கில் கலந்துகொண்ட ஒரே இந்திய பெண் மஞ்சு என்பதால் அவளுக்குள்ளே ஒரு மனவிகாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியதைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. மஞ்சு ஸ்கேர்ட்டைத் தூக்கிப் பிடித்து நடக்கும்போது அவளது கால்கள் வெளுத்து ஒல்லியாகத் தெரிந்தன. ஓர் ஒட்டகம் நடந்து போவது போல உணர்ந்தேன். ஒவ்வொரு அடியையும் நேர்த்தியாக எடுத்து வைத்தாள்.

பேசிக்கொண்டே நாங்கள் இருவரும் மீண்டும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். மஞ்சுவால் கடலைப் பார்க்காமல் தூரமாக இருக்க முடியவில்லை. அவசரப்படுத்திக் கடற்கரைக்குக் கொண்டு வந்தாள். அமர்ந்திருந்த மரத்துக்குப் பக்கத்தில் குப்புறக் கிடந்த பழைய படகின் மேற்பரப்பில் படுத்திருந்த வயதான மலாய்க்காரர் மஞ்சுவையே பார்த்துக் கொண்டிருந்தார். மஞ்சுவின் இறுக்கத்தை மாற்றிடப் பேச்சின் திசையை வேறு பக்கம் திருப்ப முயன்றேன்.

“ஏய், அந்தத் தாத்தா உன்ன சைட் அடிக்கறாரு… பார்த்துக்கோ…” என்றேன். காற்றில் அவளது கூந்தலின் அடர்த்தி கலைந்து பறந்து கொண்டிருந்தது.

“அவரு ‘போமோக் தொக் மிண்டுக்’…”

மஞ்சு அவ்வளவு நேர்த்தியுடன் சட்டெனப் பதில் சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது.

“உனக்கென்ன தூரத்து சொந்தமா அவரு?”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மஞ்சு என்னைக் கேலி செய்கிறாள் என்றே தோன்றியது.

தலையில் முண்டாசு போலத் துணியைக் கட்டியிருந்த அவருடைய கண்கள் இருண்டு உள்ளே கிடந்தன. முகச்சுருக்கங்களில் வியர்வைத் துளிகள் மின்னிக் கொண்டிருந்தன. வந்து மஞ்சுவின் முன்னே நின்று சலாம் வைப்பது போலச் செய்துவிட்டு “சாடோங்!!!” எனச் சொல்லிவிட்டு மீண்டும் எங்கோ நடக்கத் துவங்கினார்.

“என்ன மஞ்சு இது?”

“நம்ம இங்க வர்றப்பலாம் அவரு வந்துட்டுத்தான் போறாரு… உனக்குத்தான் இதெல்லாம் கவனிக்க நேரம் இல்லையே…” என்றவள் எழுந்து நின்று கடல் காற்றை உள்ளிழுத்தாள்.

“அவருத்தான் நான் சாடோங் இளவரசின்னு கண்டுபிடிச்சவரு… மைன் புத்திரி சடங்கு வாரத்துல மூனு தடவ நடக்கும்… சில பேரு குணமாய்டுவாங்க… சில பேரக் காப்பாத்தவே முடியாதுன்னு விட்டுருவாங்க… நம்பிக்கை உள்ளவங்களுக்குச் சமாதானம்… அப்படின்னு நெனைச்சித்தான் என்னயும் அப்பா கூட்டிட்டுப் போனாரு… புல்லாங்குழல் ஊதிகிட்டு கெண்டாங் அடிச்சாங்க பாரு… தல பாம்பு மாதிரி படம் எடுக்க ஆரம்பிச்சிருச்சி… என்னானே தெரில… அப்பாவும் ஆச்சரியமா பார்த்தாரு… அப்போ இந்த ‘போமோக்’ தான் கிட்ட வந்து ‘சாடோங்… நீ சாடோங்’ன்னு சொன்னாரு…”

சாடோங் என்கிற பெயர் மீண்டும் மஞ்சுவால் உச்சரிக்கப்பட்டது. சட்டெனக் கைப்பேசியில் சாடோங் என்கிற பெயரைத் தட்டினேன். கிளாந்தான் இளவரசி என்பதும் மஞ்சு சொன்னது போல் அவளுடைய வாழ்க்கைக் குறிப்புகளும் இருந்தன. 15 வயதில் சயாமிற்குப் பிடித்துச் செல்லப்படுகிறாள் சாடோங். அங்கிருந்தபோது சயாம் அரசனின் தீண்டலில் சிக்கிக்கொள்ளாமல் அறப்போராட்டம் செய்து மீள்கிறாள். சயாமிலிருந்து தான் நேசித்த ராஜா அப்துல்லாவைத் திருமணம் செய்துகொள்ளக் கிளாந்தான் வந்த அவளுக்கு ஏமாற்றம்தான். அவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட செய்தி அவளைச் சிதைத்துப் போட்டது. சயாம் அரசரிடம் போராடித் தன்னை மீட்டுக்கொண்டு வந்தது எண்ணி அவள் குறுகிப் போனாள். அவளுக்கு நிகழ்ந்த துரோகம் ஒரு கதறலாக ஒலித்தது. ராஜா அப்துல்லாவைத் தேடிக் கொன்றுவிட்டு அவளும் தலைமறைவாகிவிட்டாள் என்பது வரைத்தான் சாடோங் இளவரசியின் வரலாறு படிக்கக் கிடைத்தது.

“உன்னோட வட்சாப்ல… ம்ம்ம் அந்தப் பொண்ணு யாரு, ஜெய்?”

சாடோங் இளவரசியைப் பற்றியும் அது மஞ்சுவின் வாழ்க்கையோடு பல வகைகளில் ஒன்றியிருப்பதையும் நினைத்துத் திகைத்துப் போயிருக்கையில் சட்டென மஞ்சு அப்படிக் கேட்டதும் கைகள் நடுங்கின. தேவியைப் பற்றித்தான் மஞ்சு கண்டுபிடித்துவிட்டாள் என அறிந்துகொண்டேன்.

“அப்போ, நீ என்னோட ஹென்போன என் அனுமதி இல்லாம பார்த்துருக்க?”

மஞ்சு மேலேறிக் காற்றில் தடுமாறிக் கொண்டிருந்த வாவ் பட்டத்தைப் பார்த்தாள். “எனக்கு இது திரும்ப திரும்ப நடந்துகிட்டு இருக்கு, ஜெய்… இதுக்கு முடிவே இல்லயா? இப்படியே நான் ஏமாந்துகிட்டே இருக்கணுமா?”

மஞ்சுவிற்கு மூச்சிரைத்தது. என்ன பேசுவது எனத் தெரியாமல் எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இதற்குமுன் பலமுறை அவளிடம் தோற்றபோது ஏற்படும் சிறுமகிழ்வை இப்பொழுது என்னால் உணர முடியவில்லை.

“சரி, மஞ்சு. பேசிக்கலாம். தப்புத்தான். ஒனக்கு முன்ன அவளத்தான் என் வீட்டுல பாத்தாங்க… நாந்தான் அப்போ வேணாம்னு சொல்லிட்டன்… இவ்ள நாள் மனசுல வச்சிக்கிட்டு என்கிட்ட யேன் கேக்கல?” அவள் மீது குற்றத்தைத் திருப்பிவிட்டால் காட்டத்தைக் குறைக்கலாம் எனத் தோன்றியது.

“நான் அந்தக் கெழவன் வீட்டுக்கு வேலைக்குத்தான் போறேன்னு நெனைச்சன்… சின்ன வயசுல என்னா தெரியும்…? படிப்பும் ஏறலன்னு ஐஞ்சாம் வகுப்போட நிப்பாட்டிட்டாங்க… அவன் ஒடம்ப பிடிச்சிவிடு, கால அமுத்திவிடு… அது இதுன்னு எவ்ள துன்புறுத்தனான்னு தெரியுமா? கடைசியில துண்ட கட்டிக்கிட்டு வா குளிக்கலாம்னு சொன்னான்… வந்த கோபத்துல வயிறு எரிஞ்சி கத்தனன்… ஸ்ட்ரோக் அடிச்சி படுத்துட்டான்…”

அவள் கண்கள் உக்கிரமாக மாறின. அவளது குச்சிக் கால்கள் மணல்பரப்பில் அழுந்த மெல்லப் புதைந்திருந்தன.

“மஞ்சு… தேவ இல்லாத கதை பேசிக்கிட்டு இருக்காத… நான் செஞ்சது தப்புத்தான். ஒத்துக்கறன்… பேசி சமாதானம் ஆய்க்கலாம்…”

“இல்ல, ஜெய். நீ குணமாகனும்னா நான் மனசு வச்சாத்தான் முடியும்னு அவன்கிட்ட சொல்லிட்டன்… அந்தக் கெழட்டுப் பையனுக்குத் தெரியும்… என் கண்ண பார்த்துப் பயந்துட்டான்… ஓஸ்பித்தல்லேந்து வந்தோன நான்தான் பார்த்துக்கிட்டன்… கை நல்லானோன பேச்சும் கொஞ்சம் வந்துருச்சி… கையெடுத்துக் கும்பிட்டான்… பொம்பளைன்னா என்னானு நெனைச்சான்? மவன… சும்மா விடுவனா… அவனே வீட்டுக்கு அனுப்பி வெச்சான்…” எனச் சொல்லிவிட்டு கால்களை அகற்றி இரு கைகளையும் குவித்தபடி மஞ்சு நின்றாள். எனக்குத் தலை சுற்றுவது மாதிரி ஆகிவிட்டது. மேற்கொண்டு ஏதும் பேச முடியாமல் நின்றிருந்தேன்.

“சாடோங் ஒரு இளவரசி, ஜெய்… கலங்கம் இல்லாதவ… கடைசி வரைக்கும் ராஜா அப்துல்லாவுக்காக வைராக்கியமா நாடு வந்து சேர்ந்தா… அவளோடு அழகுக்கு ஆசைப்பட்டுக் கூட்டிட்டுப் போன சயாம் ராஜா அவளோட சக்திக்கு முன்னால நிக்க முடியாம அழிஞ்சி போனான்…”

மணலில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி நேராக ஓடிவந்து என் முகத்தில் மணலை விட்டெறிந்துவிட்டுச் சிரித்தாள். அவளுடைய கண்களின் பிரகாசம் ஆயிரம் சூரியனைப் போன்று ஒளிர்ந்தது. அவள் சிரிப்புச் சத்தம் மட்டுமே கேட்டது. சட்டெனக் கண்கள் கலங்கி அப்படியே ஒரு மயக்கமும் சூழ்ந்தது.

மீண்டும் எழும்போது கடற்கரை சூன்யத்துடன் காட்சியளித்தது. மஞ்சுவையும் அந்த மலாய்க் கிழவனையும் அங்குக் காணவில்லை. பழைய படகிருந்த இடத்தில் வெறும் மணல் பரப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. கடலின் தூரத்து மஞ்சள் விகாரமாக எழுந்து வானத்தில் பரவிக் கொண்டிருந்தது.


*ஈக்கான் பாக்கார் – வறுத்த மீன்
*கிளாந்தான் – மலேசியாவின் ஒரு மாநிலம்
*சாடோங் – கிளாந்தான் இளவரசி, பின்னர் இரண்டாம் பெண்ணரசியாக மகுடம் சூட்டப்பட்டவள் என்கிற நம்பிக்கை மலாய்ப் புராணக் கதைகளில் உண்டு.
*போமோக் – மந்திரவாதி
*மஸ்திக்கா – அமானுடக் கதைகள், மாயமந்திரச் சம்பவங்கள் குறித்த செய்திகளை உள்ளடக்கிய இதழ்
*கெண்டாங் – மலாய்ப் பண்பாட்டு இசைக் கருவி
*மைன் புத்திரி – கிளாந்தான் மாநிலத்தில் பூர்வீகமாகப் பின்பற்றப்படும் குணப்படுத்தும் சடங்கு
*வாவ் – பட்டம் (மலாய்ப் பூர்வீகம்)
*அஸ்லி – பூர்வக்குடி
*மூன்சுன் – பருவக்காற்று


ஓவியம்: ஜீவா

இதழ் 13 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்